Showing posts with label தோழி. Show all posts
Showing posts with label தோழி. Show all posts

Wednesday, October 04, 2017

எனக்கொரு இடம் பிடித்து வை தோழி! - மௌனசாட்சிகள்


இதுவரைக்கும் மௌனச்சாட்சிகளில்  புகழ்பெற்ற  மன்னர்களின் கோட்டை கொத்தளங்கள், கல்லறைகள், புராண மாந்தர்களின் நினைவிடங்கள் முதற்கொண்டு வருங்காலத்தில் சென்னை நகரை மேலும் அழகாக்கும் மெட்ரோ ரயில் வரைப் பார்த்தோம். ஆனா, இன்னிக்கு பார்க்கப்போறது ஒரு அழகான நட்பின் முடிவை.....  சில தினங்களுக்கு முன்  மரணச்செய்தியை தாங்கி அலைப்பேசி அழைத்தது. ஒருகாலத்தில் உயிராய் இருந்த தோழியின் மரணச்செய்தி. காய்ச்சல் மற்றும் பண்டிகையின் காரணமா  தொலைதூர பயணம் வேண்டாம்ன்னு சொல்லி அப்பா அம்மா மட்டும் போய் வந்தாங்க.  உடம்பு நல்லானதும் விசாரிக்கலாம்ன்னு அவ வீட்டுக்கு போனோம்.  காஃபி கொண்டு கொடுத்தவளை பார்த்தபோது அச்சு அசலாய் என் தோழியை உரிச்சுக்கிட்டு வந்த அவள் மகளை காண நேர்ந்தது. பார்த்ததும் அதுவரை நாகரீகம் கருதி அடக்கி வச்சிருந்த அழுகை  பொங்கி வந்தது. ரெண்டு பெண் ஒரு பையன்னு அவளுக்கு இருந்தாலும் மூத்தது மட்டும் இவளைப்போல....
நான் பிறந்தபோது அப்பா அருப்புக்கோட்டை கமுதிக்கு பக்கத்திலிருக்கும் நீராவின்ற ஊர்லதான் வேலைப் பார்த்து வந்தார். அப்புறம் அங்கிருந்து மாற்றலாகி அரக்கோணம் பக்கத்தில் இருக்கும் “வளர்புரம்”ன்ற ஊருக்கு வந்தார். அந்த ஊருக்கு போகும்வரை எனக்கு தமிழ் பேச வராது. முதல்ல எதிர்வீட்டு கார்த்தி அறிமுகம். என்னைவிட அவன் 13 நாள் பெரியவன். பள்ளிக்கூடம் சேர்த்தபின் தெய்வநாயகி அறிமுகம். இவ என்னைவிட 6 மாசம் பெரியவ. எங்க போனாலும் சுத்தினாலும் ரெண்டு பேரும் ஒன்னாதான் இருப்போம். திங்குற பண்டங்கள் முதற்கொண்டு உடுத்திக்கும் துணி வரை இருவருக்கும் ஒரே ரசனை. அவளோடு பிறந்தவங்க 5 பேர் இருந்தாலும் எங்க வீட்டில்தான் இருப்பா. என் வீட்டில் அப்பா அம்மா இல்லன்னா அவங்க வீட்டில்தான் நானிருப்பேன்.   எட்டாவது வரை ஒன்னாதான் படிச்சோம். 
இது நாங்க படிச்ச ஆரம்ப பள்ளிக்கூடம். இங்கதான் 5 வரை படிச்சோம். அப்போலாம் பள்ளியில் சேர, ஒரே தகுதி..., தலைமீது வலது கைவைத்தால் இடதுகாது கைக்குப் படனும்ங்குறதுதான். எனக்கு முன்னாடியே அவ பள்ளிக்கூடத்துல சேர்ந்திருந்தா.  மொழி தெரியாததால யார்கூடவும் சேராம ஒத்தைக் குரங்காய் உக்காந்திருக்கும் என்னைக் கண்டு பள்ளியில் தெய்வநாயகிதான் முதன் முதலில் நட்புக்கரம் நீட்டியவள். அது முதல் அவன் இறப்பு வரை நாங்க திக் ஃப்ரெண்டஸ்.  அவ வீட்டுக்கு எதிர்க்கவேதான் எங்க ஸ்கூல். எங்க வீடு ரெண்டு தெரு தள்ளி. அப்பா கொண்டு வந்து விட்டு திரும்ப கூட்டி போவார். அதுவரை தெய்வநாயகிதான் எனக்கு எல்லாம்...  அவங்க வீட்டுல அவங்க வீட்டு பிள்ளைக எல்லாருக்கும் காலைல ஸ்கூல் போகும்போது பத்து பைசா கொடுப்பாங்க. ஒருமுறை எனக்கும் கொடுக்க அதை வாங்கி நானும் பண்டம் வாங்கி திங்க, அது அப்பாக்கு தெரிய வர.... இனி யார்கிட்டயாவது கைநீட்டி எதாவது வாங்குவியான்னு கேட்டு அப்பா சூடிழுக்க... அந்த வடு இன்னமும் கையில் இருக்கு... அன்னிக்கு வாங்குன சூடு இன்னிக்கு வரைக்கும் யார்க்கிட்டயும் எதும் கேட்கமாட்டேன். யார்க்கிட்டயும் கைநீட்டி எதும் வாங்க மாட்டேன். கடவுளிடம்கூட.... 
சில வருடங்கள் கழிச்சு அவங்களோட இன்னொரு வீட்டுக்கே குடிபோனோம். அதுக்கப்புறம் எங்க நட்பு இன்னமும் உறுதி பட்டுச்சு. எங்க பாட்டி வீட்டுக்க்கு வரும்போது அவளை கூட்டி வருவோம். எனக்கு வாங்குற மாதிரியே வளையல், பின்லாம் அவளுக்கும் எங்க வீட்டுல வாங்கி தருவாங்க. கணக்கு பார்க்குறதில்லை. அவ வாங்கிப்பா. ஆனா நான் வாங்கிக்க மாட்டேன்.   ஆறாம் வகுப்புக்கு ஒரு கிமீ தூரத்துல இருக்கும் இந்த உயர்நிலை  பள்ளில சேர்ந்தோம்.   ஒரு பக்கம் எலுமிச்சை தோப்பு, ஒரு பக்கம் தென்னையும், கொய்யாவும் சேர்ந்த தோப்பு.  25 காசு கொடுத்தா அணில் கடிச்ச கொய்யாக்களை கைநிறைய கொடுப்பாங்க. வாங்கி சாப்பிட்டுக்கிட்டே நடப்போம்.  
இப்பத்திய பள்ளி  போலலாம் கிடையாது அப்போ. தினமும் காலையில் தமிழ்தாய் வாழ்த்து, திருக்குறள் சொல்றது, கொடியேற்றுதலோடு வகுப்பு தொடங்கி, ஜனகன மண பாடி, கொடியிறக்கி பள்ளி முடியும். பிரேயர்போது பேசவோ, அசையவோ கூடாது. அப்படி எதாவது சேட்டை செஞ்சா வரலாறு ஆசிரியர் பிரம்புதான் பேசும். இன்னிக்கு வாரம் ஒரு முறைக்கூட இப்பத்திய பள்ளிகளில் கொடியேற்றமும், பிரேயரும் கிடையாது. நான் படிச்ச போதுதான் இந்த மேடையை கட்டுனாங்க. அப்போ என் உயரத்துக்கு இருந்துச்சு, இங்கதான் நாங்க சைக்கிள் பழகப் போயி இந்த மேடையில் இடிச்சு  முட்டிக்கால் பெயர்ந்துச்சு.  அன்னில இருந்து அவ சைக்கிள் பழகல. நான் கத்துக்கிட்டேன். அது வண்டியாச்சு. அவ கடைசிவரை சைக்கிள் ஓட்ட பழகவே இல்ல.
ஆறு, ஏழு, எட்டாவது என மூணு வருசம்  படிச்ச இடம். ஆஸ்பெட்டாஸ் கூரைக்கு கீழ் வகுப்பறைகள் இருக்கக் கூடாதுன்ற அரசாங்க ஆணைக்கேற்ப இந்த இடம் இப்போ வாகனங்கள் நிறுத்துமிடமாகிட்டிருக்கு. திடீர், திடீர்ன்னு அக்காக்களை வீட்டுக்கு அனுப்புவதன் மர்மம் புரியாம குழம்பி தவித்திருக்கேன். ஒருநாள் தெய்வாவையும் அப்படி அனுப்ப, அவளை வீட்டில் ஒதுக்கி உக்கார வைக்க அவளோடு நானும் உக்காருவேன்னு அடம்பிடிச்சு அழுது அம்மாக்கிட்ட அடிவாங்குனதுலாம் தனிக்கதை.  அவ சடங்குக்கு அவளோடு சேர்ந்து வளையல் போட்டுக்கிட்டேன். அதுக்கப்புறம்தான் அப்பா வச்ச சூடு நினைவுக்கு வர,  அப்பா அம்மாக்கு தெரியாம வளையலை கழட்ட போக வளையல் உடைஞ்சு குத்தி கிழிச்சு பெருசா காயம். அதை அம்மாக்கிட்ட எப்படியோ மறைச்சு.... அந்த தழும்புதான் என்னுடைய அடையாளமாய் அரசாங்கத்துக்கிட்ட இருக்கு. தழும்பை போலவே அவளோட நினைவும் நீங்காம இருக்கத்தான் அந்த காயம் அன்னிக்கு உண்டானது போல!
நாங்க படிச்சுக் குப்பைக் கொட்டிய இடமின்று நாங்க இல்லாமயே குப்பையாய் கிடக்கு. சொன்னா நம்புவீங்களான்னு தெரியாது . அவ என்னைவிட கொஞ்சம் படிப்புல மந்தம். நாடகம், நாட்டியம், விளையாட்டுன்னு எதுலயும் கலந்துக்க மாட்டா...  ரொம்ப அமைதி. இருக்கும் இடமே தெரியாது. அதிர்ந்து பேச மாட்டா.  அப்பவே சாமி பக்தி அதிகம். அவளும் நானும் கோவிலுக்கு போவோம். அவ விளக்கு போடுவா. நான் ஆலமரம், அரசமரத்தடியில் ஆடுவேன். 



அவ பெரியவ ஆனதும் மதிய நேரத்துல வீட்டுக்கு வர வேணாம்ன்னு சாப்பாடு கட்டி கொடுத்துடுவாங்க.  பள்ளில  இருந்து கொஞ்சம் தள்ளி இந்தப் பெருமாள் கோவில் இருக்கு. நான் பள்ளியில் சேரும்போது அப்போதான் கட்டிடங்கள்லாம் கட்டிக்கிட்டு இருந்தாங்க. அதனால, இங்கதான் வகுப்பு நடக்கும். இங்கதான் லஞ்ச் சாப்பிட வருவோம். கூடவே விளையாட்டும்..., இந்த இடம் இன்று இடிஞ்சு குட்டிச் சுவராய் இருக்கு.  இங்கதான் சாப்பிடுவோம். சாப்பிட்டு முடிச்சு அவ எதாவது எழுதுவா.. படிப்பா... நான் எப்பயும்போல ஆட்டம்தான்.
கோவில் பக்கத்துலயே குளம். அந்தா தெரியுது பாருங்க அந்தப் படிக்கட்டுகளில் அமர்ந்துதான் லஞ்ச் சாப்பிடுவோம். கூடவே அரட்டையும் நடக்கும். சிலுசிலுன்னு காத்து செமயா இருக்கும். கரைகளில் இருக்கும் நாலு வீடும் கோவில் குருக்களோடது. தெய்வாக்கிட்ட சொல்லி அனுப்புவாங்க. இந்த குட்டிசாத்தான் குளத்துல விழுந்துடபோகுதுன்னு... என்னை என் அம்மாவைப்போல பார்த்துப்பா.  தண்ணில இறங்குனாலே திட்டுவா. ஆனா, வீட்டுல சொல்ல மாட்டா. குளத்துக்கு பக்கத்திலிருக்கும் ஐயர் வீட்டுங்கள்ல போய் நான் விளையாடுவேன். என் பை, லஞ்ச் பாக்ஸ்லாம் எடுத்து வச்சு வர்றது அவ வேலை. 
நாங்க நாலு பேர், எங்களுக்கு பயம்ன்னா என்னன்னு தெரியாதுன்னு காக்க, காக்க” படத்துல சூர்யா சொல்வார். அதுப்போலதான் நாங்க நாலு பேரும். அந்த ஊர் முழுக்க எங்க காலடி படாத இடமே இருக்காது. அதனால ஊருக்குள்ள எங்களுக்கு பேரு அரட்டை கோஷ்டி.  இதுல ரெண்டு பேரு டீச்சர், ஒருத்தி நர்ஸ். வீணாப்போனது நான் மட்டும்தான் . எனக்கு இடது பக்கத்துல இருக்குறதுதான் தெய்வநாயகி.  லீவ் நாளில் மதியத்துல வள்ளலார் கோவிலுக்கு போய் கஞ்சி வாங்கி குடிப்போம்.  முள் வெட்டி வர்றது, வீட்டுக்கு தண்ணி எடுத்து வர்றதுன்னு பால்யத்தை அனுபவிச்சோம். எட்டாவது முடிச்சு ஒன்பதாவது போகும்போது அப்பாக்கு டிரான்ஸ்பர் வர திருத்தணிக்கு வந்திட்டோம். முதல்ல வாரா வாரம் ஞாயித்துகிழமைல சந்திப்போம். அதுக்கப்புறம், மாசம், வருசம்ன்னு நீண்டு... இன்னிக்கு இல்லாமயே போயிட்டா.

எங்க ரெண்டு பேத்துக்கும் ஒரே நேரத்துலதான் டாலர் செயின் செஞ்சாங்க. ஒரே டிசைன். என் கல்யாணத்தப்போ அவளுக்கு கண்பார்வைல பிரச்சனை வர கல்யாணத்துக்கு வரல. ஆனா, அவ கல்யாணத்தப்ப என் பெரிய பொண்ணு எட்டுமாசம் கையில்... எங்க ஊர் பக்கம்லாம் 2,4,6,8,10,12ன்னு இரட்டைப்படை மாசத்துல குழந்தை கையில் இருந்தாலோ அல்லது வயித்துல இருந்தாலோ வெளியூருக்கு அனுப்பமாட்டாங்க. அப்படியே அனுப்பிச்சாலும் நைட் தங்ககூடாதுன்னு சொல்வாங்க. அப்படியே என்னையும்  அனுப்பமாட்டேன்னு எங்க வீட்டில் சொல்ல... அழுது அடம்பிடிச்சு அவ கல்யாணத்துக்கு போனேன்.  என் கல்யாணத்தப்போ அவளுக்கு பண்ண ஆப்ரேஷனே இன்னிக்கு அவ உயிருக்கு உலை வச்சிட்டுது. கண்ணுல ஆப்ரேஷன் பண்ணி செயற்கை கண் வச்சதை புகுந்த வீட்டில் சொல்லாம விட, கல்யாணம் கழிச்சு கொஞ்ச நாள் கழிச்சு தெரிய வர அன்றிலிருந்து ஆரம்பிச்சது கொடுமை..  அந்த கொடுமை இன்னிக்கு அவ உசிரை எடுத்தபின் தான் ஓய்ஞ்சிருக்கு. என்ன நினைத்தாளோ! கிட்டத்தட்ட மூன்று வருடத்திற்குபின் என்னிடம் பேசினாயே! அதுதான் கடைசி உரையாடல்ன்னு கண்டுப்பிடிக்காத பாவியம்மா நான்! உணர்ந்திருந்தால் உன்னை வீட்டுக்கு வரவச்சிருப்பேனே! கடைசி நிமிடத்தில் என் நினைவு உனக்கு வந்ததே! அதை உன் அண்ணனிடம் சொல்லி இருந்தாலாவது உன்னை காப்பாத்தி இருக்கலாமோ! பண்ணிய பாவங்களில் இதுதானம்மா பெரிய பாவம்.  கொலையா?! தற்கொலையான்னு கண்டுப்பிடிக்க முடியாத மரணம் உனக்கு...

ஊஞ்சல் கட்டி விளையாடிய குளத்தங்கரை வேப்ப மரம், கழுதை வாலைப் பிடிக்கப்போய் உதை வாங்கி கால் ஒடிஞ்ச நாகாத்தம்மன் கோவில், குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு முறை நேரத்துக்கு ஒலிக்க விடும் பஞ்சாயத்து சங்கு. தண்ணி வற்றிய கிணத்தில் நீர் சொட்டி இறைச்சதுன்னு எத்தனையோ சொல்லிக்கிட்டு போகலாம் அந்த ஊரு நினைவுகளையும்..., எங்கள் நட்பினையும்.... 

தாயக்கட்டை விளையாடிய
எதிர்வீட்டு அக்கா...,
ஆண்பிள்ளைகளுக்கு சரிசமமாய்
விளையாட வெட்டிய
கோலிக்குண்டு  குழி...,

மீனென தவறாய் நினைத்து
பிடித்து வீட்டு கிணத்தில்
விட்ட தலைப்பிரட்டை..,
வாலில் பூச்சுற்றி,
நெற்றியில் பொட்டு வைத்து
பேர் வைத்த நாய்க்குட்டி..,

பனங்காய் வண்டி, சிங்கப்பூர்
போன ரயில் வண்டி...,
கெட்ட ஆட்டம் போட்ட திடீர் மழை..,
தேள்கடிக்கு உதவும் என பொறுக்கி
வைத்த ஆலங்கட்டி மழைக் கற்கள்..,

உலுக்கியெடுத்த நாவல் மரம்
கண்டும் காணாமல் விட்ட
கோடி வீட்டு அத்தை..,
குளத்தங்கரை தாமரை..., முதன் முதலாய்
ஊருக்குள் வந்த பேருந்து...,

வருடத்திற்கொருமுறை வரும் திருவிழா..,
பப்பரமிட்டாய், சாயம் பூசிய வேசதாரிகள்..,
களைக்கட்டும் தேர்தல்,
அரசியல் சண்டை.., தோத்தவனும்,
ஜெயித்தவனும் ஒரே திண்ணையில் சாராயக்குடி.

நல்லதோ, கெட்டதோ அன்றைய
இரவில் போடப்படும்
சரஸ்வதி சபதம், விதி,
சம்சாரம் அது மின்சாரம்.

விசம் குடிச்ச கதிர்வேல் அண்ணா,
கிணற்றில் விழுந்த ஜோதி மாமி,
பிரசவத்துக்கு துடிச்ச மாலதி அத்தை
பக்கவாதத்தில் துவண்ட கோபால் தாத்தா
என சுமந்த அப்பாவின் வண்டி...,

உனக்கும் எனக்குமாய் வாங்கிய டாலர் செயின்..
உன் அண்ணன் திருமணத்துக்கு
ஒரே மாதிரியாய் வாங்கிய சீர் புடவை என
அனைத்தும் மௌனமாய்  நம் நட்புக்கு சாட்சி சொல்லும் தோழி.
இறைவனின் பாதத்தில் இனியாவது அமைதியாய் துயில் கொள் தோழி..
இன்று நீ.. நாளை நான்....
உன்னருகில் இடம் பிடித்து வை...
வந்தபின் விட்ட பால்யத்தை தொடருவோம்!!!


# படங்கள் 2014 ஜூலைல என் தோழியோட அண்ணன் மகள் நிச்சயதார்த்தத்துக்கு எடுத்தது. கடைசியா அன்னிக்குதான் பார்த்தது...
தமிழ்மணம் ஓட்டுப்பட்டை
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1473635

என்றும் நட்புடன்
உன் தோழி
ராஜி. 

Wednesday, August 01, 2012

ஊடலுக்குப் பின் கூடல்


                                                 
'அம்மா'வின் இல்லத்திலிருந்தும் உள்ளத்திலிருந்தும்  உ.பி.ச விலகிய போது ஓர் அதிமுக தொண்டனின்  மனநிலையை இப்படி வடித்திருந்ததாக  நன்பரொருவர் மெயில் அனுப்பியிருந்தாங்க.  இப்போது திரை விலகி, நாடகம் முடிந்துவிட்ட நிலையில் அப்படியே பின்னவரைப் பார்த்து முன்னவர் பாடுவதாக  பாடலாசிரியர் நாஞ்சில் வேணு அவர்கள் எழுதியுள்ள பாடலொன்று.  "வாராயோ தோழி வாராயோ!" மெட்டில்...


வாராயோ தோழி வாராயோ
வழக்கம்போல் ஆள வாராயோ!
அதிகாரம் கையில் இருக்கிறவரைக்கும்
ஆதாயம் தேட வாராயோ?
வாராயோ தோழி வாராயோ
வழக்கம்போல் ஆள வாராயோ!


வழக்குண்டு இங்கு நூறு!- அதில்
வாய்தாவை வாங்கப் பாரு!
எதிர்க்கின்ற பேர்கள் யாரு?-இது
எதற்கும் தேறாத ஊரு!

தமிழ்நாட்டில் ஏது தகராறு!
தலையாட்டும் பொம்மை வரலாறு!


வாராயோ தோழி வாராயோ
வழக்கம்போல் ஆள வாராயோ!

அவர் செய்த ஊழல் பெரிதா-இல்லை
இவர் சேர்த்த செல்வம் பெரிதா

வழக்காடு மன்றம் புதிதா-அவர்
வாய்பூட்டும் வழிகள் அரிதா
மகத்தான கொள்கை பணம்தானே?
மடசாம்பிராணி ஜனம்தானே?

வாராயோ தோழி வாராயோ
வழக்கம்போல் ஆள வாராயோ!



பொதிமாடு போல தினமும்-சுமை
புலம்பாமல் தூக்கும் ஜனமும்
அரைக்கில்லை முண்டுத்துணியும்-என்றும்
அடிமாடு போலப் பணியும்
அவலங்கள் தீர எதுவுண்டு?
அரசாங்கம் தந்த மதுவுண்டு!


வாராயோ தோழி வாராயோ
வழக்கம்போல் ஆள வாராயோ!
டிஸ்கி: எனக்கு அரசியல் புரியாது அதனால பிடிக்காது. ஆனா, வலையில படிச்சதும் இந்த பாடல் பிடிச்சுட்டுது. அதனால இந்த பதிவு.

Thursday, June 28, 2012

பிரிவோம்..., சந்திப்போம்...,

ஆனந்தத்தின் உச்சியில் அமர்ந்து ஏகாந்திருந்த வேளையில் நன்பனின் தோழியாய் அறிமுகமானாய்...,
 
ஏதோ சில பொழுதுகளில் சந்தித்த போது ஒரு சில வார்த்தைகளில் கருத்துகளை பரிமாறி கொண்டோம்...,

என்னை வீழ்த்த நான்கு  திக்கிலுமிருந்து  அம்புகள் பறந்து வந்து தாக்கிய போது, என்னை காயத்திலிருந்து மருந்திட்டு  காப்பாற்றியவள் நீ....

சோக மேகம் மீண்டும் சூழாமல் என்னை தாயென தாங்கியவள் நீ அந்த நன்றியை என்றும் மறவேன்...,

என் கருத்துக்களை முகம் சுளிக்காமல் கேட்டு...,  நிறை குறைகளை எடுத்து சொல்லி பாராட்டி, என் தகுதிக்கும் மீறிய இடம் அளித்தவள் நீ...,

என் கிறுக்கல்களுக்கு காமதேனுவாய்  நினைத்து கூட பார்த்திராத  இடங்களிலிருந்து,  முகம் தெரியா பல உன்னத உறவுகளை எனக்கு பரிசளித்தாய்...,

மீண்டும் அதே போல் எட்டு திக்கிலிருந்தும் ஒரு தாக்குதல்...,


ஆறுதல் தேடி உன்னிடம் வரலாம் என்றால், என் விரக்தியினால் வரும் வார்த்தைகள் உன்னை காயப்படுத்தி நம் நட்பை உடைக்கலாம்..,

சோகத்திலும், கோபத்திலும் வார்த்தைகள் தடிக்கும் என்பது நான் கண்கூடாக கண்டது..., தேவையா அந்த விசப்பரிட்சை?! 

எனவே, சில காலம் பிரிந்திருப்போம்...,  கால ஓட்டத்தில் என் காயம் ஆறும்... அப்போது சந்திப்போம்...,

மீண்டும் சந்திக்கும் வரை விடை பெறுகிறேன்  என் பதிவுலக தோழியே!

Monday, February 13, 2012

ஐயோ சொக்கா! எனக்கே..., எனக்கா?! இந்த விருதும் எனக்கே எனக்கா!?


    
                                                    
                               
  சரக்கை அடிச்ச குரங்கோட  வாலுல பட்டாசை கட்டி கொளுத்தி, அது  ஓடும்போது , கொளவி கொட்டுனா எப்படி அலம்பல் பண்ணுமோ அதுப்போல அலம்பல் பண்றேன்னு எங்க பாட்டி என்னை அடிக்கடி திட்டும் (நீங்க குரங்குன்னு உங்க பாட்டிக்கும் தெரிஞ்சுடுச்சான்னு யாரும் கமெண்ட் போடக்கூடாது. போட்டீங்க, அப்புறம் மூஞ்சில பூரானை விட்டுடுவேனாக்கும்...,)

   புள்ளை படிக்க உதவுமேன்னு எங்க வீட்டு ரங்கமணி கம்ப்யூட்டரும் நெட் கனெக்சனும் வாங்கி குடுத்தாங்க. ஆனால், எனக்கு பொழுது போகாம இருக்கும்போது சும்மா கம்ப்யூட்டரை தூசு தட்டலாமேன்னு போனப்போ என்ன பட்டனுல என் கைப்பட்டுச்சோ தெரியலை.blogger.com ஓப்பன் ஆகிடுச்சு. என்ன இது புதுசா இருக்கேன்னு நோண்டிக்கிட்டு இருந்தேன். ஒரு லிங்க் அழுத்தினேன் படம் வந்துச்சு, அடுத்த லிங்க் அழுத்தினேன் எழுத்து சேர்ந்துச்சு, அடடான்னு ஆச்சர்யப்பட்டுக்கிட்டே ஒவ்வொரு  லிங்கா அழுத்தி பார்த்தால் ஒண்ணுல எழுத்து பெரிசாச்சு, இன்னொன்னுல  எழுத்துக்கு கலர் சேர்ந்துச்சு.
                                                 
      ஐ நல்லா இருக்கேன்னு  கீழ இருக்குற publish post ங்குற பட்டனை கிளிக் பண்ணால் என் பதிவு  பப்ளிஷ் ஆச்சு. நான் கிறுக்குனதையும்  மதிச்சு?! ஆதிரைங்குற புண்ணியவதி ஒரு கமெண்டை போட்டு தொலைச்சுட்டாங்க. அப்புறம் அங்கங்கு போய் சுட்டுக்கிட்டு வந்து என் பிளாக்குல பதிவா போட்டேன். இப்படியே பதிவு போட்டுக்கிட்டு இருந்தால் நம்ம கடைக்கு கூட்டம் வராது. அடுத்தவங்க கடைக்கும் போய் வந்தாதான் நம்ம கூட்டம் வரும்ன்னும், பிளாக்குல எந்த டைம்ல போட்டா கூட்டம் வரும்ன்னு சிபி சார் பிளாக்குல படிச்சேன். அவர் பதிவுல சொல்லியிருந்தபடியே நடந்துக்கிட்டதாலே ஏதோ என் கடைக்கும் கூட்டம் வர ஆரம்பிச்சது.

    சும்மா இல்லாம நாஞ்சில் மனோ அண்ணா நான் ரசித்த பதிவுன்னு அவார்டும், மின்னல் வரிகள் கணேஷ் அண்ணா   இளம்பதிவர்களுக்கான (நீங்க இளம் பதிவரான்னும் கேட்கப்படாது. எங்க வீட்டுல பூரான் நிறைய இருக்கு..)  Liebster விருதும் குடுத்துட்டங்களா?! பால்காரன் சண்டை போட்டதை பதிவா தேத்தலாமா? இல்ல கீரைக்கார பாட்டிக்கிட்ட டிப்ஸ் கேக்கலாமான்னு பார்க்குறதெல்லாம் பதிவா தேத்த யோசிச்சுக்கிட்டு  இருக்கேன்னு வீட்டுல திட்டுவாங்க.

       இப்போ எரியுற கொள்ளில எண்ணேய் ஊத்தி இன்னும் எரிய வைக்குற மாதிரி  தோழி சாகம்பரி அவர்களும், தம்பி தமிழ்வாசி பிரகாஷ் அவர்களும் THE VERSATILE BLOGGER AWARD என்னும் விருது கொடுத்துள்ளார். அவர்களுக்கு என் நன்றிகளை சொல்லும் அதே வேளையில் இன்னும் என்னென்னலாம் அக்கப்போர் பண்ண போறேனோ யாருக்கு தெரியும்?!
                            

        இந்த விருது ”Nitya's Knits Quoin" என்ற வலைப்பதிவில் எழுதி வரும் திருமதி நித்யகல்யாணி http://nityakalyani-kalmat.blogspot.in என்ற மற்றொரு ஆங்கிலப்பதிவர் அவர்களால் திருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்களுக்கு வழங்கப்பட்டு, பண்முகத் திறமையாளரான அவர், மதிப்பிற்குரிய ஐயா. வை.கோபாலகிருஷ்ணனுக்கு வழங்கியிருக்கிறார். VGK சாரிடம் இருந்து தோழி சாகம்பரிக்கு  வழங்கப்பட்டுள்ளது. தோழி சாகம்பரியிடமிருந்து எனக்கும், தம்பி பிரகாஷுக்கும் வழங்கப்பட்டது. தம்பி பிரகாஷ்  எனக்கு கொடுத்துள்ளார்.

     இந்த விருதை பெற்றவர் அவருக்குப் பிடித்த ஏழு விசயங்களை பட்டியலிட்டு, பண்முகத்திறமையாளராக விளங்கிவரும் ஐந்து  பதிவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதுதான் விருதை பெற்றுக் கொண்டதன் அடையாளமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த விருதை பெறப் போகும் நண்பர்கள் தங்களுடைய மனம் கவர்ந்த திறமையாளருக்கு இதனை தர வேண்டுகிறேன்.

பிடித்த விசயங்கள்:
1.என்  முத்தான மூன்று பிள்ளைகள்,
2. என் பிளாக்,
3. மெல்லிசை பாடல்கள்
4.நண்பர்கள்
5.சுபா, ராஜேஸ்குமார், பி.கே.பி, இந்திரா சௌந்திரராஜன், சாண்டில்யன் போன்றோர்  நாவல்கள், பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்ற புத்தகங்கள்

6. ரோஸ்மில்க், லஸ்ஸி
7. கடலலையில் கால் நனைத்தவாறு தனிமையில் இருப்பது

நான் ரசித்த ஐந்து வலைப்பூ எழுத்தாளருக்கு எனக்களித்த விருதை குடுக்கனுமாம்...,

1. தொழில் நுட்ப விஷயங்கள், பள்ளி மாணவர்களுக்கு தேவையான கேள்விகளை தொகுத்தும், நடிகர்களை தன் ரேஞ்சுக்கு உயர்த்தி?! கலாய்ச்சு பதிவு போடும் ராஜப்பாட்டை ராஜாவுக்கு....,

2. நாம் கேள்விப்பட்டே இராத கோவில்கள் பற்றிய அரிய தகவல்கள கண்ணை கவரும் படங்களுடன் பதிவிடும் ராஜராஜேஸ்வரி அம்மாவுக்கு...,
3. வயசுக்கு மீறி அமைச்சர்கள், சாதீ, கலைகள் காப்பது, என தன் கோபங்கள் கவிதையாய் கொட்டும் மாலதிக்கு....,
4. சிரிக்கவும், சில நேரம் அநீதிக்காகவும் பதிவும் நாஞ்சில் மனோ அண்ணாவுக்கும்...,
5.உலக வரலாற்றிலேயே கருப்பு கலர்ல இட்லி சுட்டும், பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்குறேன்னு டாகடருக்கே பைத்தியம் பிடிக்க வச்சதையும் சிரிக்க பதிவ்டும் அப்பாவி தங்கமணிக்கும் இந்த விருதை கொடுப்பதில் பெருமை கொள்கிறேன்.

டிஸ்கி:  இந்த விருதுகள் வழங்கும் நோக்கம் நாம் ரசிக்கும் நல்ல வலைப்பூக்களை மற்ற வலைப்பூக்கள் எழுத்தாளருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கமே தவிர வேறில்லை. இந்த விருதால் எனக்களித்தவர்களோ. நானோ, இல்லை நான் அளிக்கப்பட்டவர்களும் தங்கள் எழுத்துக்கு கிடைத்த அங்கீகாரத்தை தவிர வேறு எந்த விதமான லாபத்தையும் அடைய போவதில்ல.