Wednesday, October 04, 2017

எனக்கொரு இடம் பிடித்து வை தோழி! - மௌனசாட்சிகள்


இதுவரைக்கும் மௌனச்சாட்சிகளில்  புகழ்பெற்ற  மன்னர்களின் கோட்டை கொத்தளங்கள், கல்லறைகள், புராண மாந்தர்களின் நினைவிடங்கள் முதற்கொண்டு வருங்காலத்தில் சென்னை நகரை மேலும் அழகாக்கும் மெட்ரோ ரயில் வரைப் பார்த்தோம். ஆனா, இன்னிக்கு பார்க்கப்போறது ஒரு அழகான நட்பின் முடிவை.....  சில தினங்களுக்கு முன்  மரணச்செய்தியை தாங்கி அலைப்பேசி அழைத்தது. ஒருகாலத்தில் உயிராய் இருந்த தோழியின் மரணச்செய்தி. காய்ச்சல் மற்றும் பண்டிகையின் காரணமா  தொலைதூர பயணம் வேண்டாம்ன்னு சொல்லி அப்பா அம்மா மட்டும் போய் வந்தாங்க.  உடம்பு நல்லானதும் விசாரிக்கலாம்ன்னு அவ வீட்டுக்கு போனோம்.  காஃபி கொண்டு கொடுத்தவளை பார்த்தபோது அச்சு அசலாய் என் தோழியை உரிச்சுக்கிட்டு வந்த அவள் மகளை காண நேர்ந்தது. பார்த்ததும் அதுவரை நாகரீகம் கருதி அடக்கி வச்சிருந்த அழுகை  பொங்கி வந்தது. ரெண்டு பெண் ஒரு பையன்னு அவளுக்கு இருந்தாலும் மூத்தது மட்டும் இவளைப்போல....
நான் பிறந்தபோது அப்பா அருப்புக்கோட்டை கமுதிக்கு பக்கத்திலிருக்கும் நீராவின்ற ஊர்லதான் வேலைப் பார்த்து வந்தார். அப்புறம் அங்கிருந்து மாற்றலாகி அரக்கோணம் பக்கத்தில் இருக்கும் “வளர்புரம்”ன்ற ஊருக்கு வந்தார். அந்த ஊருக்கு போகும்வரை எனக்கு தமிழ் பேச வராது. முதல்ல எதிர்வீட்டு கார்த்தி அறிமுகம். என்னைவிட அவன் 13 நாள் பெரியவன். பள்ளிக்கூடம் சேர்த்தபின் தெய்வநாயகி அறிமுகம். இவ என்னைவிட 6 மாசம் பெரியவ. எங்க போனாலும் சுத்தினாலும் ரெண்டு பேரும் ஒன்னாதான் இருப்போம். திங்குற பண்டங்கள் முதற்கொண்டு உடுத்திக்கும் துணி வரை இருவருக்கும் ஒரே ரசனை. அவளோடு பிறந்தவங்க 5 பேர் இருந்தாலும் எங்க வீட்டில்தான் இருப்பா. என் வீட்டில் அப்பா அம்மா இல்லன்னா அவங்க வீட்டில்தான் நானிருப்பேன்.   எட்டாவது வரை ஒன்னாதான் படிச்சோம். 
இது நாங்க படிச்ச ஆரம்ப பள்ளிக்கூடம். இங்கதான் 5 வரை படிச்சோம். அப்போலாம் பள்ளியில் சேர, ஒரே தகுதி..., தலைமீது வலது கைவைத்தால் இடதுகாது கைக்குப் படனும்ங்குறதுதான். எனக்கு முன்னாடியே அவ பள்ளிக்கூடத்துல சேர்ந்திருந்தா.  மொழி தெரியாததால யார்கூடவும் சேராம ஒத்தைக் குரங்காய் உக்காந்திருக்கும் என்னைக் கண்டு பள்ளியில் தெய்வநாயகிதான் முதன் முதலில் நட்புக்கரம் நீட்டியவள். அது முதல் அவன் இறப்பு வரை நாங்க திக் ஃப்ரெண்டஸ்.  அவ வீட்டுக்கு எதிர்க்கவேதான் எங்க ஸ்கூல். எங்க வீடு ரெண்டு தெரு தள்ளி. அப்பா கொண்டு வந்து விட்டு திரும்ப கூட்டி போவார். அதுவரை தெய்வநாயகிதான் எனக்கு எல்லாம்...  அவங்க வீட்டுல அவங்க வீட்டு பிள்ளைக எல்லாருக்கும் காலைல ஸ்கூல் போகும்போது பத்து பைசா கொடுப்பாங்க. ஒருமுறை எனக்கும் கொடுக்க அதை வாங்கி நானும் பண்டம் வாங்கி திங்க, அது அப்பாக்கு தெரிய வர.... இனி யார்கிட்டயாவது கைநீட்டி எதாவது வாங்குவியான்னு கேட்டு அப்பா சூடிழுக்க... அந்த வடு இன்னமும் கையில் இருக்கு... அன்னிக்கு வாங்குன சூடு இன்னிக்கு வரைக்கும் யார்க்கிட்டயும் எதும் கேட்கமாட்டேன். யார்க்கிட்டயும் கைநீட்டி எதும் வாங்க மாட்டேன். கடவுளிடம்கூட.... 
சில வருடங்கள் கழிச்சு அவங்களோட இன்னொரு வீட்டுக்கே குடிபோனோம். அதுக்கப்புறம் எங்க நட்பு இன்னமும் உறுதி பட்டுச்சு. எங்க பாட்டி வீட்டுக்க்கு வரும்போது அவளை கூட்டி வருவோம். எனக்கு வாங்குற மாதிரியே வளையல், பின்லாம் அவளுக்கும் எங்க வீட்டுல வாங்கி தருவாங்க. கணக்கு பார்க்குறதில்லை. அவ வாங்கிப்பா. ஆனா நான் வாங்கிக்க மாட்டேன்.   ஆறாம் வகுப்புக்கு ஒரு கிமீ தூரத்துல இருக்கும் இந்த உயர்நிலை  பள்ளில சேர்ந்தோம்.   ஒரு பக்கம் எலுமிச்சை தோப்பு, ஒரு பக்கம் தென்னையும், கொய்யாவும் சேர்ந்த தோப்பு.  25 காசு கொடுத்தா அணில் கடிச்ச கொய்யாக்களை கைநிறைய கொடுப்பாங்க. வாங்கி சாப்பிட்டுக்கிட்டே நடப்போம்.  
இப்பத்திய பள்ளி  போலலாம் கிடையாது அப்போ. தினமும் காலையில் தமிழ்தாய் வாழ்த்து, திருக்குறள் சொல்றது, கொடியேற்றுதலோடு வகுப்பு தொடங்கி, ஜனகன மண பாடி, கொடியிறக்கி பள்ளி முடியும். பிரேயர்போது பேசவோ, அசையவோ கூடாது. அப்படி எதாவது சேட்டை செஞ்சா வரலாறு ஆசிரியர் பிரம்புதான் பேசும். இன்னிக்கு வாரம் ஒரு முறைக்கூட இப்பத்திய பள்ளிகளில் கொடியேற்றமும், பிரேயரும் கிடையாது. நான் படிச்ச போதுதான் இந்த மேடையை கட்டுனாங்க. அப்போ என் உயரத்துக்கு இருந்துச்சு, இங்கதான் நாங்க சைக்கிள் பழகப் போயி இந்த மேடையில் இடிச்சு  முட்டிக்கால் பெயர்ந்துச்சு.  அன்னில இருந்து அவ சைக்கிள் பழகல. நான் கத்துக்கிட்டேன். அது வண்டியாச்சு. அவ கடைசிவரை சைக்கிள் ஓட்ட பழகவே இல்ல.
ஆறு, ஏழு, எட்டாவது என மூணு வருசம்  படிச்ச இடம். ஆஸ்பெட்டாஸ் கூரைக்கு கீழ் வகுப்பறைகள் இருக்கக் கூடாதுன்ற அரசாங்க ஆணைக்கேற்ப இந்த இடம் இப்போ வாகனங்கள் நிறுத்துமிடமாகிட்டிருக்கு. திடீர், திடீர்ன்னு அக்காக்களை வீட்டுக்கு அனுப்புவதன் மர்மம் புரியாம குழம்பி தவித்திருக்கேன். ஒருநாள் தெய்வாவையும் அப்படி அனுப்ப, அவளை வீட்டில் ஒதுக்கி உக்கார வைக்க அவளோடு நானும் உக்காருவேன்னு அடம்பிடிச்சு அழுது அம்மாக்கிட்ட அடிவாங்குனதுலாம் தனிக்கதை.  அவ சடங்குக்கு அவளோடு சேர்ந்து வளையல் போட்டுக்கிட்டேன். அதுக்கப்புறம்தான் அப்பா வச்ச சூடு நினைவுக்கு வர,  அப்பா அம்மாக்கு தெரியாம வளையலை கழட்ட போக வளையல் உடைஞ்சு குத்தி கிழிச்சு பெருசா காயம். அதை அம்மாக்கிட்ட எப்படியோ மறைச்சு.... அந்த தழும்புதான் என்னுடைய அடையாளமாய் அரசாங்கத்துக்கிட்ட இருக்கு. தழும்பை போலவே அவளோட நினைவும் நீங்காம இருக்கத்தான் அந்த காயம் அன்னிக்கு உண்டானது போல!
நாங்க படிச்சுக் குப்பைக் கொட்டிய இடமின்று நாங்க இல்லாமயே குப்பையாய் கிடக்கு. சொன்னா நம்புவீங்களான்னு தெரியாது . அவ என்னைவிட கொஞ்சம் படிப்புல மந்தம். நாடகம், நாட்டியம், விளையாட்டுன்னு எதுலயும் கலந்துக்க மாட்டா...  ரொம்ப அமைதி. இருக்கும் இடமே தெரியாது. அதிர்ந்து பேச மாட்டா.  அப்பவே சாமி பக்தி அதிகம். அவளும் நானும் கோவிலுக்கு போவோம். அவ விளக்கு போடுவா. நான் ஆலமரம், அரசமரத்தடியில் ஆடுவேன். 



அவ பெரியவ ஆனதும் மதிய நேரத்துல வீட்டுக்கு வர வேணாம்ன்னு சாப்பாடு கட்டி கொடுத்துடுவாங்க.  பள்ளில  இருந்து கொஞ்சம் தள்ளி இந்தப் பெருமாள் கோவில் இருக்கு. நான் பள்ளியில் சேரும்போது அப்போதான் கட்டிடங்கள்லாம் கட்டிக்கிட்டு இருந்தாங்க. அதனால, இங்கதான் வகுப்பு நடக்கும். இங்கதான் லஞ்ச் சாப்பிட வருவோம். கூடவே விளையாட்டும்..., இந்த இடம் இன்று இடிஞ்சு குட்டிச் சுவராய் இருக்கு.  இங்கதான் சாப்பிடுவோம். சாப்பிட்டு முடிச்சு அவ எதாவது எழுதுவா.. படிப்பா... நான் எப்பயும்போல ஆட்டம்தான்.
கோவில் பக்கத்துலயே குளம். அந்தா தெரியுது பாருங்க அந்தப் படிக்கட்டுகளில் அமர்ந்துதான் லஞ்ச் சாப்பிடுவோம். கூடவே அரட்டையும் நடக்கும். சிலுசிலுன்னு காத்து செமயா இருக்கும். கரைகளில் இருக்கும் நாலு வீடும் கோவில் குருக்களோடது. தெய்வாக்கிட்ட சொல்லி அனுப்புவாங்க. இந்த குட்டிசாத்தான் குளத்துல விழுந்துடபோகுதுன்னு... என்னை என் அம்மாவைப்போல பார்த்துப்பா.  தண்ணில இறங்குனாலே திட்டுவா. ஆனா, வீட்டுல சொல்ல மாட்டா. குளத்துக்கு பக்கத்திலிருக்கும் ஐயர் வீட்டுங்கள்ல போய் நான் விளையாடுவேன். என் பை, லஞ்ச் பாக்ஸ்லாம் எடுத்து வச்சு வர்றது அவ வேலை. 
நாங்க நாலு பேர், எங்களுக்கு பயம்ன்னா என்னன்னு தெரியாதுன்னு காக்க, காக்க” படத்துல சூர்யா சொல்வார். அதுப்போலதான் நாங்க நாலு பேரும். அந்த ஊர் முழுக்க எங்க காலடி படாத இடமே இருக்காது. அதனால ஊருக்குள்ள எங்களுக்கு பேரு அரட்டை கோஷ்டி.  இதுல ரெண்டு பேரு டீச்சர், ஒருத்தி நர்ஸ். வீணாப்போனது நான் மட்டும்தான் . எனக்கு இடது பக்கத்துல இருக்குறதுதான் தெய்வநாயகி.  லீவ் நாளில் மதியத்துல வள்ளலார் கோவிலுக்கு போய் கஞ்சி வாங்கி குடிப்போம்.  முள் வெட்டி வர்றது, வீட்டுக்கு தண்ணி எடுத்து வர்றதுன்னு பால்யத்தை அனுபவிச்சோம். எட்டாவது முடிச்சு ஒன்பதாவது போகும்போது அப்பாக்கு டிரான்ஸ்பர் வர திருத்தணிக்கு வந்திட்டோம். முதல்ல வாரா வாரம் ஞாயித்துகிழமைல சந்திப்போம். அதுக்கப்புறம், மாசம், வருசம்ன்னு நீண்டு... இன்னிக்கு இல்லாமயே போயிட்டா.

எங்க ரெண்டு பேத்துக்கும் ஒரே நேரத்துலதான் டாலர் செயின் செஞ்சாங்க. ஒரே டிசைன். என் கல்யாணத்தப்போ அவளுக்கு கண்பார்வைல பிரச்சனை வர கல்யாணத்துக்கு வரல. ஆனா, அவ கல்யாணத்தப்ப என் பெரிய பொண்ணு எட்டுமாசம் கையில்... எங்க ஊர் பக்கம்லாம் 2,4,6,8,10,12ன்னு இரட்டைப்படை மாசத்துல குழந்தை கையில் இருந்தாலோ அல்லது வயித்துல இருந்தாலோ வெளியூருக்கு அனுப்பமாட்டாங்க. அப்படியே அனுப்பிச்சாலும் நைட் தங்ககூடாதுன்னு சொல்வாங்க. அப்படியே என்னையும்  அனுப்பமாட்டேன்னு எங்க வீட்டில் சொல்ல... அழுது அடம்பிடிச்சு அவ கல்யாணத்துக்கு போனேன்.  என் கல்யாணத்தப்போ அவளுக்கு பண்ண ஆப்ரேஷனே இன்னிக்கு அவ உயிருக்கு உலை வச்சிட்டுது. கண்ணுல ஆப்ரேஷன் பண்ணி செயற்கை கண் வச்சதை புகுந்த வீட்டில் சொல்லாம விட, கல்யாணம் கழிச்சு கொஞ்ச நாள் கழிச்சு தெரிய வர அன்றிலிருந்து ஆரம்பிச்சது கொடுமை..  அந்த கொடுமை இன்னிக்கு அவ உசிரை எடுத்தபின் தான் ஓய்ஞ்சிருக்கு. என்ன நினைத்தாளோ! கிட்டத்தட்ட மூன்று வருடத்திற்குபின் என்னிடம் பேசினாயே! அதுதான் கடைசி உரையாடல்ன்னு கண்டுப்பிடிக்காத பாவியம்மா நான்! உணர்ந்திருந்தால் உன்னை வீட்டுக்கு வரவச்சிருப்பேனே! கடைசி நிமிடத்தில் என் நினைவு உனக்கு வந்ததே! அதை உன் அண்ணனிடம் சொல்லி இருந்தாலாவது உன்னை காப்பாத்தி இருக்கலாமோ! பண்ணிய பாவங்களில் இதுதானம்மா பெரிய பாவம்.  கொலையா?! தற்கொலையான்னு கண்டுப்பிடிக்க முடியாத மரணம் உனக்கு...

ஊஞ்சல் கட்டி விளையாடிய குளத்தங்கரை வேப்ப மரம், கழுதை வாலைப் பிடிக்கப்போய் உதை வாங்கி கால் ஒடிஞ்ச நாகாத்தம்மன் கோவில், குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு முறை நேரத்துக்கு ஒலிக்க விடும் பஞ்சாயத்து சங்கு. தண்ணி வற்றிய கிணத்தில் நீர் சொட்டி இறைச்சதுன்னு எத்தனையோ சொல்லிக்கிட்டு போகலாம் அந்த ஊரு நினைவுகளையும்..., எங்கள் நட்பினையும்.... 

தாயக்கட்டை விளையாடிய
எதிர்வீட்டு அக்கா...,
ஆண்பிள்ளைகளுக்கு சரிசமமாய்
விளையாட வெட்டிய
கோலிக்குண்டு  குழி...,

மீனென தவறாய் நினைத்து
பிடித்து வீட்டு கிணத்தில்
விட்ட தலைப்பிரட்டை..,
வாலில் பூச்சுற்றி,
நெற்றியில் பொட்டு வைத்து
பேர் வைத்த நாய்க்குட்டி..,

பனங்காய் வண்டி, சிங்கப்பூர்
போன ரயில் வண்டி...,
கெட்ட ஆட்டம் போட்ட திடீர் மழை..,
தேள்கடிக்கு உதவும் என பொறுக்கி
வைத்த ஆலங்கட்டி மழைக் கற்கள்..,

உலுக்கியெடுத்த நாவல் மரம்
கண்டும் காணாமல் விட்ட
கோடி வீட்டு அத்தை..,
குளத்தங்கரை தாமரை..., முதன் முதலாய்
ஊருக்குள் வந்த பேருந்து...,

வருடத்திற்கொருமுறை வரும் திருவிழா..,
பப்பரமிட்டாய், சாயம் பூசிய வேசதாரிகள்..,
களைக்கட்டும் தேர்தல்,
அரசியல் சண்டை.., தோத்தவனும்,
ஜெயித்தவனும் ஒரே திண்ணையில் சாராயக்குடி.

நல்லதோ, கெட்டதோ அன்றைய
இரவில் போடப்படும்
சரஸ்வதி சபதம், விதி,
சம்சாரம் அது மின்சாரம்.

விசம் குடிச்ச கதிர்வேல் அண்ணா,
கிணற்றில் விழுந்த ஜோதி மாமி,
பிரசவத்துக்கு துடிச்ச மாலதி அத்தை
பக்கவாதத்தில் துவண்ட கோபால் தாத்தா
என சுமந்த அப்பாவின் வண்டி...,

உனக்கும் எனக்குமாய் வாங்கிய டாலர் செயின்..
உன் அண்ணன் திருமணத்துக்கு
ஒரே மாதிரியாய் வாங்கிய சீர் புடவை என
அனைத்தும் மௌனமாய்  நம் நட்புக்கு சாட்சி சொல்லும் தோழி.
இறைவனின் பாதத்தில் இனியாவது அமைதியாய் துயில் கொள் தோழி..
இன்று நீ.. நாளை நான்....
உன்னருகில் இடம் பிடித்து வை...
வந்தபின் விட்ட பால்யத்தை தொடருவோம்!!!


# படங்கள் 2014 ஜூலைல என் தோழியோட அண்ணன் மகள் நிச்சயதார்த்தத்துக்கு எடுத்தது. கடைசியா அன்னிக்குதான் பார்த்தது...
தமிழ்மணம் ஓட்டுப்பட்டை
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1473635

என்றும் நட்புடன்
உன் தோழி
ராஜி. 

28 comments:

  1. தோழிக்கு அஞ்சலி செய்யும் இந்த பதிவின்மூலம் , உங்களின் நட்பின் ஆழத்தை உணர முடிகிறது:(

    ReplyDelete
    Replies
    1. பெண் நட்பு நீண்ட நாட்கள் உயிர் வாழாது

      Delete
  2. நட்பின் நெருக்கம் புரிகிறது. எங்கள் ஆறுதல்கள்.

    ReplyDelete
    Replies
    1. முதல் பெண் நட்பு. இதுல என்ன கொடுமைன்னா எனக்கு நினைவு தெரிஞ்சு இரண்டு நட்பு ஆணில் ஒன்னு பெண்ணில் ஒன்னு. ஆனா, ரெண்டுமே இப்ப இல்ல.

      Delete
  3. உணர்ச்சிகரமான நீண்ட பதிவு. எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் தோழியின் ஆன்மா அமைதி பெறட்டும். இறந்தவர்களின் அருமை அவர்கள் உயிரோடு இருக்கும்போது தெரிவதில்லை.

    ReplyDelete
    Replies
    1. மூணு பிள்ளைகள்ண்ணே. அமைதியா இருப்பா. அதிர்ந்துகூட நடக்க மாட்டா... கொலையா தற்கொலையான்னு தெரில. அதிகாலையில் நடந்ததுன்னு சொல்றாங்க, பிறந்த வீட்டாளுங்க வருவதற்குள் முகம் முழுக்க மஞ்சளை அளவுக்கு அதிகமாய் பூசி வச்சிருக்காங்க,

      Delete
  4. மனம் கனக்கிறது சகோ

    ReplyDelete
    Replies
    1. மனசு பிசையுதுண்ணே. அதிக தொடர்பில்லைன்னாலும் அடிக்கடி அவளை பத்தி தெரிஞ்சுப்பேன். இனி அதுமில்ல

      Delete
  5. முதலில் குழந்தைப் பருவத்து நினைவுகளான பள்ளிப் படங்கள் பார்த்தே மனம் கனத்து விட்டது, இப்போ உங்கள் தோழியின் கதை படிச்சு மனம் இடிஞ்சே போய் விட்டது... மிகவும் கஸ்டம்தான்..

    ஒரு விதத்தில் தோழியின் பெற்றோர்தானே இதுக்கு காரணம்.. திருமணம் என்பது சிம்பிள் இல்லையே... அதில் ஒளிவுமறைவு இருப்பின் வாழ்க்கை பாழ்தான்... இது மிகப்பெரிய விசயத்தை மறைத்திருக்கிறார்கள் அது பெரிய தப்புத்தான்... இருப்பினும்..

    தனியே பிரிந்து வாழ்ந்திருக்கலாமே.. தொழிலும் கைவசம் இருக்கும்போது ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தா.. மன உழைச்சல் அதிகமாகியிருக்கலாம்... எல்லாம் முடிஞ்சு போச்சு இனி என்ன சொல்வது... எல்லாம் விதி:(.

    ReplyDelete
    Replies
    1. பிரிஞ்சு வாழும் அளவுக்கு அவ தைரியசாலி இல்ல. அப்படியே தைரியமிருந்தாலும்கூட பொண்ணுங்க இருக்காங்க, மானம் மரியாதைன்னு ஆயிரம் முட்டுக்கட்டை மிடில் கிளாஸ்ல இருக்கு ஆதிரா

      Delete
  6. மனதை உருகியது எனக்கும் பழைய பல நினைவுகளையும் கிளறியது பள்ளியில் இருந்து தொடர்ந்துவரும் நட்பு எப்போதும் அபூர்வம் மனதை விட்டு நீங்காது உங்களை கஷ்ட படுத்திக்காதிங்க விதியின் முன் நாம் பொம்மைகள்

    ReplyDelete
    Replies
    1. அதிக தொடர்பில்லை. ஆனா அவ அண்ணன் எங்க அப்பா வீட்டுக்கு அடிக்கடி வருவார், ரெண்டு நாளைக்கொரு முறை போன் பண்ணுவாரு. அதனால அவளை பத்தி எல்லாமே தெரியும்

      Delete
  7. நட்பு கவிதை மனதை வருடியது

    ReplyDelete
    Replies
    1. அத்தனை அனுபவிச்சிருக்கோம் நாங்க

      Delete
  8. Replies
    1. புரிதலுக்கு நன்றிண்ணே

      Delete
  9. நட்பின் ஆழம் ! அன்பு என்று மனதை நெகிழ்த்திய பதிவு. தோழிக்கு எங்கள் அஞ்சலிகள்!

    ReplyDelete
  10. உளத்தை உலுக்கிய உண்மை வரலாறு மகளே! த ம 9

    ReplyDelete
    Replies
    1. நட்பை இழந்து தனியாய் தவிக்குறேன்ப்பா

      Delete
  11. நெகிழ்வான பதிவு

    ReplyDelete
  12. சில நிகழ்வுகள் எதிர்பாராத முடிவைக் கொடுக்கின்றன

    ReplyDelete
    Replies
    1. ஆமாப்பா. ஆனா இப்படி நிகழ்ந்திருக்க வேண்டாம்

      Delete
  13. சிறிய கட்டுரை வடிவில் மிகப் பெரிய சோக காவியம்!

    ReplyDelete
    Replies
    1. ஆனா, இப்படி எழுதும் சூழல் வாய்ச்சிருக்க வேணாம்

      Delete
  14. நட்புக்கு அஞ்சலி.............

    ReplyDelete
    Replies
    1. ஆறுதலுக்கு நன்றிண்ணே

      Delete