Saturday, June 15, 2013

தங்கத் தூண்டில் - பாட்டி சொன்ன கதை



வாங்க பேராண்டிகளா! பள்ளிக்கூடத்துக்கு போய் வந்துட்டீங்களா?! முகம், கை காலெல்லாம், கழுவி பலகாரம் சாப்பிட்டீங்களா!?

நான் செச்சேன் பாத்தி.., இதோ நம்ம சீனுதான் கை, காலெல்லாம் கழுவாம அப்பதியே சாப்புத்தான்.

சீனு.., நிஜமா?

அதில்ல பாட்டி.., பசிச்சுது அதான்.., இன்னிக்கு மட்டும்தான்...,

தப்பு.., இன்னிக்குன்னு விட்டா அப்புறம் அதே பழக்கத்துக்கு வந்துடும். அதனால இனி வெளில எங்காவது போய்ட்டு வந்தா கை, கால், முகம் கழுவிட்டுதான் மத்த வேலை பாக்கனும்..,

அவன் தர்த்தி ஃபெல்லோ பாத்தி.., நீ கதை சொல்லு..,

ம் ம் ம் அப்படிலாம் சொல்ல கூடாது ப்ரீத்தி.., அவனும் சமர்த்துதான்.., சொன்னா புரிஞ்சு செய்வான்.., செய்வேதானே சீனு?!

செய்வேன் பாட்டி,, நீங்க கதை சொல்லுங்க..,

சரி.., ஒரு ஊருல வசந்த், சுந்தர்ன்னு அண்ணன், தம்பிகள் இருந்தாங்க.., அவங்க ரெண்டு பேரும் மீன் பிடிச்சு வாழ்க்கை நடத்துனாங்க. ஒரு நாள் மதியம் அவங்க சாப்பிட்டுக்கிட்டு இருக்கும்போது    பிச்சைக்காரன் ஒருத்தன் அங்கே வந்தான். எலும்பும் தோலுமாக இருந்த அவனைப் பார்க்கவே பரிதாபமாக இருந்துச்சாம்..,

பாத்தி பிச்சைக்காரன்ன்னா பெக்கர்தானே! 

ஆமா ப்ரீத்தி.., 

அவங்க ஏன் அப்படி கிழிஞ்ச ட்ரெஸ் போட்டு, அழுக்கா இருக்காங்க?

அது வயசானவங்கன்னா பிள்ளைங்ககிட்ட சண்டை போட்டு வந்திருப்பாங்க. சிலரை வீட்டை விட்டு அவங்க பசங்க துரத்தி இருப்பாங்க.., சின்ன பசங்களா இருந்தா அம்மா, அப்பாவை தொலைச்சுட்டு இருப்பாங்க.., சிலர் உழைக்க சோம்பேறி தனம் பட்டு இப்படி ஆகிடுவாங்க..,

சரி பாத்தி..,

அந்த பெக்கர்.., அவங்ககிட்ட சாப்பிட்டு நாலு நாளாச்சு. பசிக்குது.., எதாவது தாங்கன்னு கேட்டான்., வசந்துக்கு அவனை பாத்ததும் பாவமாகிடுச்சு.., கொஞ்சம் சாப்பாட்டை எடுத்து தந்தான்.., இதை பார்த்த சுந்தர்.., அண்ணா! இதுப்போல சோம்பேறிங்ககிட்ட இரக்கம் காட்டக் கூடாது, அதனால சாப்பாடு குடுக்காதேன்னு தடுத்தான்.

பேட் பாய் அந்த சுந்தர்.., குடுக்குற சாப்பாட்டை வேணாம்ன்னு சொல்லலாமா?! 

ம் ம் ம் அதை கேக்காம வசந்த சாப்பாட்டை குடுத்தான். அடுத்த நாளும் அதே போல சாப்பிடுற நேரத்துல வந்து அந்த பெக்கர் நின்னான். திரும்பவும் பிச்சைக்கு வந்து நின்னுட்டானேன்னு கோவம் வந்திடுச்சு சுந்தருக்கு..,

ஐயையோ! அப்புறம் என்ன ஆச்சு பாத்தி?!

ஒண்ணும் ஆகலை...  டேய்! சோம்பேறி பையா!! அடுத்த முறை உன்னை இங்க பார்த்தா தொலைச்சுடுவேன் தொலைச்சுன்னு  கத்தினான் சுந்தர்.  மூணாவது  நாளும் பிச்சை கேட்டு அங்க வந்தான் அந்த பெக்கர். வந்த கோபத்துல சுந்தர் அங்கிருந்த தூண்டில் ஒன்றை எடுத்துக்கிட்டு  அவனைத் தரதரன்னு  இழுத்துக்கிட்டு ஏரிக்கரைக்கு வந்தான்.

இப்படி பிச்சை எடுக்குறியே! இதெல்லாம் ஒரு பிழைப்பா?! உனக்கு மீன் பிடிக்க கத்து தரேன்.., இந்த தூண்டிலை வச்சு பொழைச்சுக்கோன்னு சொல்லி.., மீன் பிடிக்குறது எப்படின்னு கத்துக் கொடுத்திட்டு போய்ட்டான்.

அப்புறம் என்ன ஆச்சு பாத்தி?

ரொமப் நாள் ஆச்சு, அந்த பெக்கர் வரவே இல்ல.., அவனை மறந்தும் போய்ட்டாங்க வசந்தும், சுந்தரும்.., ஒரு நாள் ஹாய்யா டிவி பார்த்துக்கிட்டு இருந்தப்போ.., ஒரு அழகான குதிரை வண்டில  ஒருத்தர் வந்தார்.., அவர் கையில தங்கத்தால் செஞ்ச  தூண்டில் ஒண்ணு இருந்துச்சு.   வசந்த்தும், சுந்தரும் அவரைப் பார்த்தாங்க.. தங்கத் தூண்டிலை சுந்தரிடம் குடுத்தாரு வந்தவரு. குடுத்துட்டு . “”என் கிஃப்டா இதை வச்சுக்கோங்கன்னு சொன்னார்.

தன் வீட்டுக்கு வந்த பிச்சைக்காரன்தான் அவன்னு வசந்த்துக்கு தெரிஞ்சுது அவனுக்கு சரியான கோவம். “”நீ சாகப் பிழைக்க இருந்தப்போ இங்க வந்து சாப்பாடு கேட்டே..,. உனக்கு சாப்பாடு குடுத்து காப்பாத்தியது நான். எனக்குத்தான் இந்தத் தங்கத் தூண்டிலை தரனும். எனக்குத் தா!” ன்னு கத்தினான். ஆனால், அவரோ, “”இது உங்க தம்பிக்குத்தான் சேரனும்!”ன்னு சொன்னார்.  இதை வசந்த் ஒத்துக்கவே இல்ல. வழக்கை கோர்டுக்கு  கொண்டு போனான் வசந்த். நடந்ததை எல்லாம் விசாரிச்சார் ஜட்ஜ்.

வசந்தை பார்த்து ,  “”நீ இவருக்கு சாப்பாடு குடுத்து உயிரை காப்பாத்தியது  உண்மைதான். நீ செய்த அந்த ஹெல்ப் இவரோட லைஃப்ல  எந்த மாற்றத்தையும்குடுக்கலை. ஆனா, உன் தம்பியோ இவர் வாழ்வதற்கு வழி காட்டினார். அதைப் பயன்படுத்தி இவர் பெரிய பணக்காரராயிட்டார். நிலையான உதவி செய்த சுந்தருக்கு இவர் தூண்டிலை கிஃப்டா குடுத்தது சரிதான் . இந்தத் தங்கத் தூண்டில் சுந்தருக்கேசேரனும் இதுவே என் தீர்ப்பு!”ன்னு சொன்னார்.

கதை நல்லா இருக்கா?! இதனால என்ன தெரிஞ்சுக்கிட்டீங்க குட்டீஸ்..,

நம்ம செய்யுற ஹெல்ப் அப்போதைக்கு அவங்க கஷ்டத்தை சரி செஞ்சா மட்டும் போதாத.., எப்பவும் அவங்களுக்கு கஷ்டமே வராம இருக்குற மாதிரி ஒரு ஹெல்ப் பண்ணனும்ன்னு புரிஞ்சுக்கிட்டோம் பாட்டி..,

ம் ம் ம் ரொம்ப சரி.., சரி கண்ணுங்களா! ரொம்ப நேரம் கதை பேசி உக்காந்துட்டோம்.., போய் கொஞ்ச நேரம் விளையாடிட்டு.., ஹோம் வொர்க் பண்ணுங்கோ! அடுத்த சனிக்கிழமை வேற ஒரு கதை சொல்றேன்..,

சரி பாத்தி! நாங்க கிளம்புறோம்..,

 


Friday, June 14, 2013

திருமாணிக்குழி - புண்ணியம் தேடி ஒரு பயணம்..,

வீட்டுலயே இருக்குறதுன்னா பெண்களுக்கு கொஞ்சம் போர்தான்.., வாய் திறந்து சொல்லாவிட்டாலும்..., சமையல், வீடு துடைக்குறது..,துணி துவைக்குறதுல இருந்து சில மணி நேரம் விடுதலையாகி வெளிய போய் ரிலாக்சா இருந்து வரனும்ன்னு தோணும்.., சிலருக்கு பீச், சிலருக்கு ஃப்ரெண்ட்ஸ் வீடு.., சிலருக்கு சினிமா, சிலருக்கு கோவில்ன்னு..,                                          
அதும் இந்த விடுமுறையில பசங்களை வீட்டில் வச்சுக்கிட்டு.., எங்க வீட்டு வாண்டுகளையே சமாளிக்க முடியாது.., இதுல மச்சினர், மூத்தார் பிள்ளைங்களும்.., மனசுக்கு சந்தோசமா இருந்தாலும்.., வீட்டு வேலைகள் சில நேரம் எரிச்சல் தந்ததால எல்லாரும் எங்கிட்டாவது போகலாம்ன்னு சொன்னதால.., எல்லாரும் கிளம்பிட்டோம்.., கோவில்,குளம்ன்னு..., அதையெல்லாம் இனி ஒவ்வொண்ணா பதிவா போடப் போறேன்..  ஏன் சகோஸ் ஜெர்க்காகுறீங்க? வாரம் ஒண்ணுதான்..., சரி இந்த வாரம் கடலூர் மாவட்டத்துல இருக்குறா “திருமாணிக்குழி”ன்ற ஊருல இருக்குற திருத்தலம் பத்தி பார்ப்போம்...,                  
இறைவர்திருப்பெயர்             : வாமனபுரீஸ்வரர், உதவிநாயகர், 
                               மாணிக்கவரதர்.
இறைவியார்திருப்பெயர்     : அம்புஜாட்சி, உதவிநாயகி, மாணிக்கவல்லி.
தலமரம்                                         : கொன்றை.
தீர்த்தம்                                          : சுவேததீர்த்தம், கெடிலநதி.
வழிபட்டோர்                              : திருமால்.
தேவாரப்பாடல்கள்                : சம்பந்தர் -                                  
திருஞானசம்பந்தசுவாமிகள் அருளிச்செய்த தேவாரத்திருப்பதிகம் 824 பாடலில் இக்கோவில் இடம்பெற்றிருக்குதாம்..,
பொன்னியல்பொருப்பரையன்மங்கையொருபங்கர்புனல்தங்குசடைமேல்
வன்னியொடுமத்தமலர்வைத்தவிறல்வித்தகர்மகிழ்ந்துறைவிடங்
கன்னியிளவாளைகுதிகொள்ளவிளவள்ளைபடர்அள்ளல்வயல்வாய்
மன்னியிளமேதிகள்படிந்துமனைசேருதவிமாணிகுழியே.

இந்த கோவிலோட தல வரலாறு பற்றி கோவில் குருக்கள் சொன்னது.., 
இந்தத்தலம் தேவாரப்பாடல்களில் "உதவிமாணிக்குழி" என்று குறிக்கப்படுகிறது .இதனால் 'உதவி ' என்பது ஊர்ப்பெயராக இருந்து, காலப்போக்கில் 'மாணிகுழி' என்னும் கோயில் பெயரே ஊருக்கும் பெயராகி இருக்கலாம். வடநாட்டு வணிகன் ”அத்ரி” என்பவன் இப்பகுதியில் வந்து கொண்டிருந்தபோது திருடர்கள் கொள்ளையடிக்க முற்பட, இறைவன் அவ்வணிகனைத் திருடர்களிடமிருந்து காத்து உதவிபுரிந்தார்; இதனால் இத்தலம் 'உதவி ' என்றும்.., இறைவன் 'உதவிநாயகர்.., ' இறைவி 'உதவிநாயகி ' என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

இதற்கு சான்றாக கல்வெட்டிலும் இத்தலம் 'உதவி ' என்றே குறிக்கப்பெறுகின்றது. திருமால் பிரம்மசாரியாக வந்து மாவலிபால் மூன்றடி மண் கேட்டு அவனையழித்த பழி தீர ...,இங்கு, வந்து வழிபட்டதால் இக்கோயில் 'மாணிகுழி ' என்றும் பெயர்பெற்றது. (மாணி - பிரம்மசாரி)பெரியபுராணத்தில்..,சுந்தரர் கெடிலநதியில் நீராடித் திருமாணிகுழியைத் தரிசித்ததாக குறிப்பிருந்தும்.., அப்பெருமான் பாடிய பதிகம் எதுவும் கிடைக்கவில்லை.

நடராச சபையிலுள்ள நடராசர் திருமேனியில் பஞ்சாட்சரம் பொறிக்கப்பட்டுள்ளது என்கின்றனர்; அதைப்பார்க்கும்போது அவ்வடிவமாகத் தெரியவில்லை; குறுக்கும் நெடுக்குமாகச் சிறுகோடுகளாக ஏதோ ஒருவித அமைப்புள்ளது. .
சுவாமி எப்போதும் இறைவியுடன் இருப்பதாக மரபாதலின், மூலவர் சந்நிதியில் எப்போதும் திரைப்போடப்பட்டுள்ளது.( இத்திரையின்மேற்புறத்தில் ஏகாதசருத்திரர்களில் ஒருவராகிய பீமருத்திரர் உருவம்எழுதப்பட்டுள்ளது.)

மகாவிஷ்ணு மாணியாக - பிரம்மசாரியாக வழிபடுவதற்குக் காவலாக பீமருத்திரர் உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த கோவிலின் சிறப்புகள்:

சோழர்காலக் கட்டமைப்புடையது இக்கோயில். இத்தலத்திற்கு வாமனபுரி, இந்திரலோகம்,  பீமசங்கரக்ஷேத்திரம் என்பன வேறு பெயர்களாம் 
மூலவர் தரிசனத்திற்கு செல்லும் வாயிலில் வாமனாவதார வரலாறு சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன.ஆலய வழிபாட்டில் அர்ச்சனை, தீபாராதனை, பூசை  முதலியன முதலில் பீமருத்திரருக்கே நடைபெற்று, பின்னர் சுவாமிக்கு நடக்குமாம்..,

இறைவன் எப்போதும் இறைவியுடன் இருப்பதாகச் சொல்லப்படுவதால், இத்தலத்தில் அர்த்தசாம பள்ளியறை வழிபாடு என்பது தனியே கிடையாது.

இத்தலத்தில் கார்த்திகையில் (பரணியில் அல்லாமல்) திருவண்ணாமலையில் நடைபெறுவது போல ரோகிணியில் தீபதரிசனம்  நடைபெறுகின்றது.

அருணகிரிநாதரின் திருப்புகழ் இத்தலத்திற்கு உள்ளது. சோழ, பாண்டிய, விஜயநகர மன்னர்கள் காலத்திய கல்வெட்டுக்களில் இறைவன்பெயர், 'உதவிநாயகர் ', 'உதவிமாணிகுழிமகாதேவர் ' என்று குறிக்கப்படுட்டுள்ளது. 
இக்கோவில்.., திருப்பாதிரிப்புலியூர் பேருந்துநிலையத்திலிருந்து, திருவகீந்திபுரம் வழியாகப் பானூர், பண்ருட்டி செல்லும் பாதையில் திருவகீந்திபுரம் சென்று, அடுத்து, 'சுந்தரர்பாடி' என்னுமிடத்திற்கு அருகில் சாத்தாங்குப்பம் என்னும் வழிகாட்டி காட்டும் வழியில் சென்று.., கெடிலநதிப் பாலத்தைக் கடந்து சிறிது தூரம் சென்றால் சாலையோரத்திலேயேகெடிலநதியின் தென்கரையில் கேபர்மலைத் தொடரின் அடிவாரத்தில் உள்ள இத்தலத்தை அடையலாம். கடலூர் - குமணங்குளம் நகரப்பேருந்து திருமாணிக்குழி வழியாகச்செல்கிறது.

இந்த ஸ்தலமானது மூர்த்தி ,தீர்த்தம்,வனம் ,கிரி ,நதி ,சங்கமம் ,ஆரண்யம் ,பதிகம் முதலியவைகளால் பிரசித்தி பெற்ற திவ்ய ஸ்தலம் ஆகும் 

இந்த ஸ்தல விநாயகர் பெயர் செல்வவினாயகர் மூஷிகனை சம்காரம் செய்து பக்தர்களுக்கு அனுகிரகதை செய்யச்சொல்லிஆணை இடுகிறார். ஆகையால், மற்ற திருஸ்தலங்களை போல அல்லாமல் இங்கே இருக்கும் மூஷிக வாகனம் பக்தர்களை நோக்கி இருக்கும் அது இவ்வாலயத்தின் சிறப்பு   சென்னை போன்ற பெருநகரங்களில்தான் லவ் பண்றாவங்க தொல்லைன்னா இங்கயும்.., நமக்கு அரேஞ்ச்டு மேரேஜ்.., அதான் இந்த பொசுங்கல்..,


இவ்வாலயத்தில் இருக்கும் 4 தூண்களும்  4 வேதங்கள்,  6சாஸ்திரங்கள் மனித வாழ்வுக்கு முக்கியம் என்பதால், 6 கால் சாஸ்திர மணபமாகவும்.., அதன் தெற்கு பிரகாரத்தில் 28 தூண்கள்.., 28 ஆக மண்டபத்தையும் குறிக்கிறது  என்பது வரலாறாம்.
அகத்திய முனிவர் சிவப்பெருமானை தரிசனம் செய்ய வரும்போது காட்சி தராமல் திரை மூடிய நிலையில் இருந்ததால் அவர் கோபித்துக் கொண்டு மலை அடிவாரத்தில் சிவலிங்கத்தை தோற்றுவித்து வழிப்பட்டார். அதுவே அகத்தியர் சுயம்பு லிங்கம் இக்கோவிலிருந்து 1 கிமீ தூரத்தில் மலை அடிவாரத்தில் இருக்கு. அதை படமெடுக்க அனுமதியில்லை.

மனிதனாக பிறந்து புண்ணியம் அடைய  ஒருமுறையேனும் தரிசிக்க வேண்டிய ஆலயம் என்னும் வாக்கிற்கு இணங்க இக்கோவிலை ஒருமுறை சென்று தரிசித்திட்டு வாங்களேன் சகோ’ஸ்..,

சோழர் கால கட்டமைப்பு உடைய கோவில் இதுன்னு சொல்றாங்க...,

இவ்வாலயம்,  72 ஆயிரம், வருடங்களுக்கு முன்னே வாமனன் தரிசிக்க வரும்போது சிவ ப்பெருமான் ஆகாயத்திற்கும் பூமிக்கும் காட்சி கொடுக்கிறார்.., ஆகையால், வாமனன் சிவப்பெருமானை ஆத்மார்த்தமாக பூஜை செய்ய வேண்டும் என் குழிக்குள் சென்று அமர்ந்து பூஜைச் செய்ததால் திருமாணிக்குழி என்றும் அழைக்கப்படுவதாகவும் வரலாறு..,




அம்பிகையின் சன்னிதியில் முதலாம் குலோத்துங்க சோழன் முடி சூட்டி கொண்டாராம்..,அதன் அடையாளாமாய் 4 சிம்மத்தை வைத்திருக்கிறார். இதற்கு ஆதாரமாய், குலோத்துங்கன் வெட்டிய கல்வெட்டு ஒன்று இச்சன்னிதியில் உள்ளது..,

63 நாயன்மார்களுக்கும் சன்னிதியில் முக்கிய இடம்...,  

அட்வைஸ் நம்பர் 1: கோவில் வாசலில் சின்ன பெட்டிக்கடை கூட கிடையாது.., அதனால, கற்பூரம், தேங்காய், பழம், பூ லாம் போகும்போதே வாங்கி கொண்டு போறது நல்லது..,

அட்வைஸ் நம்பர் 2 : பிள்ளை, குட்டிகளை கூட்டி போகும்போது சாப்பிட, குடிக்கன்னு எதாவது கைவசம் கொண்டு போங்க. இல்லாட்டி, பசங்க நை நை ன்னு படுத்தி எடுப்பாங்க..,

அட்வைஸ் நம்பர் 3: கோவில் சுத்தி மரம், செடின்னு அதிகம் இல்லாததால் நட்ட நடு மத்தியானத்துல போய் வெயில்ல வேகாதீங்க.. காலையில இல்ல மாலையில போறது நல்லது..,

அட்வைஸ் நம்பர் 4 : ராஜி சொன்னதே வேத வாக்குன்னு எடுத்துக்கிட்டு பட்டுன்னு கிளாம்பிடாதீங்க.., அந்த இடத்துக்கு பக்கத்தில இருப்பவர்களிடம் விசாரித்து போய் வாங்க.. அடுத்த வாரம் வேற ஒரு கோவில் பத்தி சொல்றேன்.., வர்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டா?!

Thursday, June 13, 2013

அதிசயங்களே அசந்து போகும் உலக அதிசயங்கள் சில..,

1.  இரண்டு பெண்கள் அருகருகில் இருந்தும் பேசாமல் இருப்பது...,

2. கணவன் பேசும் போது மறு பேச்சு பேசாமல் முழுவதையும் காது கொடுத்து கேட்கும் பெண்கள் இருப்பது...,


3. காதலனுக்கு செலவு வைக்காமல் தனது பில்களையெல்லாம் தானே செலுத்தும் காதலி இருப்பது...,


4. மேக்கப் போடாமல் வீட்டிற்கு வெளியே போகும் பெண்கள் இருப்பது...,


5. உன்னை மட்டும் காதலிக்கிறேன் என்று ஒரே ஒரு பெண்ணிடம் சொல்லும் ஆண்கள் இருப்பது...,


6. பேஸ்புக்கில் பெண்கள் சொல்லும் மொக்கைகளுக்கு ஒரு லைக்ஸும் விழாமல் இருப்பது..,


7. பேஸ்புக்கில் ஆண்கள் சொல்லும் நல்ல கருத்துகளுக்கு சில லைக்ஸாவது கிடைத்து இருப்பது...,


8. தமிழ் நலனுக்காக உண்மையாக பாடு படும் ஒரு தலைவர் இருப்பது...,


9. இங்கிலிஷில் பேசி பீலா விடாத தமிழ் கல்லூரிப் பெண்கள் இருப்பது...,


10. கல்யாணம் ஆகி குழந்தை பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகும் கணவனை குறை சொல்லாமல் நேசிக்கும் பெண்கள் இருப்பது..,


11. செய்திகளை திரிக்காமல் வெளியிடும் பத்திரிக்கைகள் வருவது..,


12 . விகடன் குழும பத்திரிக்கைகளில் சினிமா நடிகைகளின் கவர்ச்சி படங்கள் வராமல் இருப்பது...,


13. ஜெயலலிதா அவர்களின் காலில் விழுந்து வணங்காத அமைச்சர்கள் இருப்பது...,


14. கலைஞர் அறிக்கைகள் விடாமல் இருப்பது...,


15. சட்டசபையில் ஜெயலலிதாவும் கலைஞரும் எதிர் எதிராக அமர்ந்து தமிழ் மக்கள் நலனுக்காக ஆரோக்கிய மாக விவாவதிப்பது...,


16. கமலஹாசன் ஆங்கில படங்களை தழுவாமல் இப்போது படங்கள் எடுப்பது..,


17. ரஜினிகாந்த வருடத்திற்கு ஒரு முறையாவது வாய்ஸ் கொடுக்காமல் இருப்பது...,


18. தீபாவளி , பொங்கல் , புத்தாண்டு தினங்களில் டிவிகளில் சாலமன் பாப்பையா பட்டிமன்றம் இல்லாமல் இருப்பது...,


19. தன் பொண்டாட்டியை விட அடுத்தவன் பொண்டாட்டி நல்லவளாக இருப்பாள் என்றுநம்பும் ஆண்கள்..


20. பேஸ்புக்குல இருந்து சுட்டு .., பதிவர்கள் படிக்க..பகிர்ந்த ராஜியும் கூட..., அதிசயமே அசந்து போகும் அதிசயம்...,


நோ! நோ! பேச்சு பேச்சாதான் இருக்கனும்.. கல்லெல்லாம் தேடப்படாது.., வர்ட்ட்ட்ட்ட்டா!?                                             
 

Wednesday, June 12, 2013

12 ராசிக்காரர்களுக்கும்.., இன்றைய ”மின்சார ராசிப்பலன்”.. ஆனால், இது சென்னை வாசிகளுக்கு பொருந்தாது..


 (பெட்ரோல் விலை தாறுமாறா ஏறிக்கிட்டு போனா.., கார்லாம் இப்படிதான் யூஸ் ஆகும் போல!!)

 (டேய் உன் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லியா?!)

 (12 ராசிக்காரர்களுக்கும்.., இன்றைய  ”மின்சார ராசிப்பலன்”.. ஆனால், இது சென்னை வாசிகளுக்கு பொருந்தாது..)

 (முன் யோசனை முத்தண்ணாதான்...,)

 (கடைல கொசுறு வாங்குற பழக்கம் உன்னை விட்டு இன்னும் போகலியாடா?!)

 (இந்த சூட்சுமத்தை நமக்கும் சொல்லித் தந்தா நல்லா இருக்குமே!)

 (1908ன் பெட்டிக்கடை.., அப்போதைய மெகா மார்ட், வால்மார்ட்,  நீல்கிரீஸ்போல சூப்பர் மார்க்கெட்)

 (சீனா ஒலிம்பிக் தங்க பதக்கத்தின் பின் உள்ள சோகம்..)

 (மட்டமான சரக்கை குடிச்சிருக்குமோ!?_

(அட, இந்த ஐடியா நல்லா இருக்கே! இனி, இதுப்போல நாமும் டிரை பண்ணனும்..,)

Tuesday, June 11, 2013

இதுதான் காதலென்பதா?!

   
என் தனிமையின்
போதெல்லாம்-நம்
இதழ் வருடிய வார்த்தைகளையே
அசைப்போடுகிறதே இதுதான் காதலா?

மற்றவர்கள் கேலியில் நீ
அகப்பட்டுக் கொண்டால்-என்
அகம் வதைப்படுகிறதே அதுதான் காதலா?

இமைகளின் இயக்கம்
நிறுத்தி-நீ
உலவும் இடங்களில்
உனையே தேடல்
கொள்கிறதே விழிகள்
இதுதான் காதலா?

அருகினில் நீ இல்லாதபோதும்
உன்னுடன் உறவாடி மகிழ்கின்றேனே
இதுதான் காதலா?

எனக்காக நீ தந்தவைத் தவிர்த்து
சுவாசக் காற்று உட்பட-நீ
வருடிய அனைத்தையும் சேகரிக்கின்றேனே
இதுதான் காதலா?

யார் கேட்டும் இல்லை என்ற  ஒன்றை
நீ கேட்க நினைக்கும்போதே
 கொடுக்கத் தோன்றுகிறதே
அதுதான் காதலா?

பிரிவுகள் நேரும்போது
ஏதோவோர் உணர்வு- நம்
விழிகளில் நீர் நிரப்பிச்  செல்கிறதே
அதுதான் காதலா?

ஊரே நம்முறவை
காதலென்றபோது
நீ மட்டும் மறுக்கிறாயே
நாங்கள் நண்பர்களென்று.....,

எது காதல் தெரியவில்லை
இந்நிகழ்வுகள் அனைத்தும்
நட்பிலும் சாத்தியமென்பதால்...,