Friday, June 21, 2013

சித்தர்கள் சமாதி - புண்ணியம் தேடி ஒரு பயணம்..,

புண்ணியம் தேடி போகும் பயணத்தில் இன்னிக்கு நாம பார்க்க படிக்க போறது.., பன்ருட்டியிலிருந்து ஒண்றரை கிலோ மீட்டர் தூரத்துல இருக்குற "சிவப்பிரகாச ஜீவ சமாதியை”.., என்னடா! வெள்ளிக்கிழமை அதுமா ராஜி சமாதிக்குலாம் கூட்டிப்போறாளேன்னு ஜெர்க் ஆக வேணாம்.., என்ன விசேசம்ன்னு படிச்சு தெரிஞ்சுக்கோங்க சகோ’ஸ்...,
                                                                



சிவப்பிரகாச சுவாமிகள் காஞ்சிப்புரத்தில் பிறந்தவராம். அவருடைய காலம் 17ம் நூற்றாண்டை சேர்ந்ததாம்.., அவர் வாழ்ந்தது 32 ஆண்டுகள் மட்டுமே.., ஆனா, அந்த முப்பத்திரண்டு வயத்துக்குள்ள முப்பத்திரண்டு தெய்வீகத் தத்துவங்களை செந்தமிழில் எழுதினாராம்..., அதனாலயே இந்த சிறப்பு.., சின்ன வயசிலேயே அப்பாவை இழந்துட்ட சிவப்பிரகாச சுவாமிகள் தனது தம்பி தங்கையுடன் “திருவண்ணாமலைக்கு வந்துவிட்டாராம், பிறகு அவரது தந்தையின் குருவான “குருதேவை” சந்தித்து அவருடன் தங்கி, கல்வி கற்றாராம்..,

திருவண்ணாமலை கிரிவலத்தி பெருமையை தன் உள்ளுணர்வால் உணர்ந்து புறப்பட்டாராம். ஒவ்வொரு முறை வலம் வரும்போதும் அருனாச்சலேஸ்வரர் மேல் பாடல் பாடி அன்றைய தினமே 100 பாடல்கள் இயற்றினாராம் ...,
                                

அதற்கு ”சோண சைலமாலை”ன்னு பெயரிட்டாராம். சுவாமிகள் மேலும் ஆழ்ந்த கல்வி பயில வேண்டும் என்ற ஆசையினால், தமது சகோதர்களுடன் தென்னகம் நோக்கி சென்று.., திருச்சிக்கருகில் உள்ள “பெரம்பலூரில்” இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்து திருநெல்வேலி வந்து தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள சிந்துபூத்துறைக்கு வந்து சேர்ந்தாராம்,,ம்

குருநாதரிடம்  சொல்லி விடை பெற்று தமது சகோதரர்களுடன் “துறைமங்கலம்” வந்து, பின்னர் அங்கிருந்து, “வாலி காண்டபுர”த்தின்  வடமேற்கு திசையிலுள்ள திருவெங்கையிலே சில காலம் தங்கி சிவபூஜை செய்து வந்தாராம்.  வள்ளல் அண்ணாமலை ரெட்டியார் கட்டி தந்த மடத்தில் தங்கியிருந்தவாறே “திருவெங்கைக் கோவை, திருவெங்கைக் கலபகம், திருவெங்கையுலா, திருவெங்க அலங்காரம் என்னும் நான்கு நூல்களை எழுதினாராம். பின்னர் தமது சகோதரர்களுக்கு திருமணம் செய்து வைத்து அண்ணாமலை ரெட்டியாருடன் தனது புனித பயணத்தை தொடங்கினாராம்...,

சிதம்பரத்திற்கு திருக்காட்டுப்பள்ளிக்கு வந்து சிவப்பெருமானை தரிசனம் செய்து சில காலம் தங்கியிருந்துட்டு பிறகு காஞ்சிப்புரம் புறப்பட்டு போனாரம். பின்னர் புதுவை வந்து அங்கிருந்து பிரம்மபுரம் வந்து சேர்ந்தாராம்.. காலம் வேகமாக சென்றது.. 

பிரம்மபுரத்திலிருந்து புறப்பட்டு புதுவை வந்து சிவதலங்களை வணங்கி விட்டு, நல்லாத்தூர் வந்து சேர்ந்தார். அது ஒரு சிற்றூர். எங்கு பார்த்தாலும் நுணா மரங்களும் கள்ளிக்காடுகளுமாக இருந்தது. அவ்வூரில் ஒரு சிவன் கோவிலும் இருந்தது.., அக்கோவிலின் முன்னே உள்ள நுணா மரத்தின் கீழே அமர்ந்து தன் தவத்தை மேற்கொண்டாராம்.

பல ஆண்டுகள் ஆழ்ந்த தவத்தில் ஈடுப்பட்டிருந்தார். தவம் முடிந்து தவசித்தி பெற்றாற். சுவாமிகளின் பூஜைகள் பலிக்கத் தொடங்கின. அவருக்கு முப்பத்திரண்டு வயது வந்தது.., தாம் சிவமாகும் காலம் நெருங்குவதை உணர்ந்து “புரட்டாசி மாதம் - பௌர்ணமி திதியில் ஐக்கியமானார் என்கின்றனர்..,


எங்கு சுவாமிகள் சித்தி அடைந்தாரோ அங்கேயே சுவாமிகளை சமாதி வைப்பதற்காக அங்குள்ள  நுணா மரம் வெட்டப்பட்டது.., அந்த நுணா மரத்தின் கீழ்தான் சுவாமிகள் தவம் செய்வது வழக்கம். வெட்டப்பட்ட நுணா மரத்தை அங்குள்ள ஒரு வீட்டில் கொண்டு போய் போட்டார்கள். அப்படி போட்ட மறுகணமே பச்சை நுணா மரம் எரிந்து சாம்பலாகியது.., அதுமட்டுமில்லாமல் அவ்வீட்டில் இருந்த மற்ற பொருட்களுக்கு தீ பரவவுமில்லை.., அதனால் எந்த விபத்தும் நடக்கவும் இல்லை.

மேலும், இதை மூவர் சமாதி என்றும் சொல்வர்.., 3 சித்தர்கள் ஜிவ சமாதியான் இடம் இது..,

 இவர் ”சீர்மன்   குமாரசுவாமி தம்புரான்”. சிவப்பிரகாச சுவாமிகளுடைய சிஷயர்” என்று சொல்கிறார்கள்..,

இவர் ”சடை சுவாமிகள்” ன்னு சொல்லப்பட்டாராம்.., இவருடைய சமாதியும் இங்க இருக்கு..,

இவர் ஸ்ரீகுண்டலி பரதேசி சுவாமிகள்.., இவர் ”சீர்மன்னு குமாரசுவாமி” தம்பிரானுடைய சிஷ்யன் என்று சொல்றாங்க...,

மேலும் ஆலயத்துக்குள்ள நிறைய மகான்களின் சிலைகள் இருக்கு...,

ஸ்ரீசுக பிரம்ம ரிஷி..,

ஸ்ரீகாகபுஜண்டர் தன் பத்தினியுடன்..,

  திலகவதி அம்மையாரும்.., அவர் அருகில் திருநாவுக்கரசருக்கும்..,

மேலும் நாங்க போகும்போது நிறைய பேர் படிச்சுக்கிட்டு இருந்தாங்க..., அவங்களை கேட்டபோது TNPCCதேர்வுகளில் நிறைய பேர் இங்க வந்து உக்காந்து படிச்சுட்டு போய் பரிட்சை எழுதி அரசு உயர் பதவிகளில் இருக்காங்களாம்.., அதனால.., இங்கு படிச்சா வெற்றி நிச்சயம்ன்னு படிக்கிறாங்களாம்..,
                                                           
மாணவர்களும், சிலர் படிப்பதை பார்த்தோம்.., பகல் நேரங்களில் வயதானவர்களும் வெட்டியாய் கொஞ்ச நேரம் படுத்டிருக்காங்க.., இந்த கோவில வழிப்பட உகந்த நேரம் மாலை நேரமே!!

 
 
இந்த சமாதி.., இங்கிருந்து படித்து அரசின் உயர் பதவிக்கு சென்றவர்களின் நிதி உதவியுடன் இப்போ ரொம்ப அழகா பராமரிக்கப்பட்டு வருது..,
  


கோவிலின் வெளிப்புறம் ஒரு சின்ன கோவிலும், குதிரை சிலையும் இருக்கு. வெளியூர் போறவங்க தான் நினைச்ச காரியம் ஈடேற கற்பூரம் ஏற்றி கும்பிட்டு போறதை பார்க்க முடிஞ்சுது..,

அடுத்த வாரம் வேறொரு கோவில் பற்றி பேசலாம்.., இப்போ வர்ட்ட்ட்ட்ட்ட்டா?!

Thursday, June 20, 2013

கணவனிடம் மனைவிக்கு பிடிக்காத விஷயங்கள் சில...,

           

*வீட்டை சுத்தமா வச்சுக்க தெரியாது.., பெண்கள் அப்போதான் வீட்டை துடைச்சிட்டுக்கிட்டு  இருப்பாங்க..., பின்னாடியே, ஈரக்காலோடு போய் அழுக்கு பண்ணுவாங்க... 

2. எடுத்த பொருளை எடுத்த இடத்துல வைக்க மாட்டாங்க..,  டைனிங் டேபிள் மேல சீப்பு..,   சோஃபால சாக்ஸ்.., கட்டில்ல ஈரத்துண்டுன்னு போட்டு படுத்துவாங்க..

  * டெய்லி  ஷேவ் பண்ணாம  இருப்பாங்க. வாரக்கணக்குல கூட ஷேவ் பண்ணாத ஆளுங்க கூட உண்டு.., அதைச் செய்றக்கு சோம்பேறித்தனம் அந்த சோம்பேறித்தனத்துக்கு அழகு, ஸ்டைல்ன்னு அயிரம் சப்பைக்கட்டு கட்டுவாங்க...,

* வெளில போய்ட்டு வந்ததும் கை, கால், முகம் கழுவாம  டி.வி பார்த்துக்கிட்டு, நின்னுக்கிட்டு  பொழுதை ஓட்டுவாங்க.. அப்படியே பிள்ளைங்களையும் தொட்டு பேசுவாங்க..,

. * லீவ் கிடைச்சா போதும் ரூமுக்குள்ளாற போய் லாக் பண்ணிக்கிட்டு தூங்க ஆரம்பிச்சுடுவாங்க.., வெளில கூட்டி போகனும், வீட்டை க்ளீன் பண்ண ஹெல்ப் பண்ணனும்ன்னு தோணாது.., கொஞ்சம் ஹெல்ப்க்கு வாங்களேன்ன்னு கூப்பிட்டா இன்னிக்கு ஒரு நாள்தான் எனக்கு ரெஸ்ட் கிடைக்குது.., நான் தூங்குனா உனக்கு பொறுக்காதேன்னு கத்துவாங்க..,

  * என்ன மாயமோ! மந்திரமோ எல்லா ஆம்பிளைங்களுக்கும் கிரிக்கெட் பிடிக்கும்.. சீரியல்ல முக்கியமான சீன் போகும்போதுதான் ரிமோட்டை பிடுங்குவாங்க.., அதுமட்டுமில்லாம நல்லா சமைச்சோ, இல்ல ட்ரெஸ் பண்ணியோ வந்து நின்னாலும் கண்ணுக்கே தெரியாது

  * இப்போலாம் ரொம்ப பேர் ஃபேஸ்புக்குலயும், கம்ப்யூட்டர் கேம்ஸ்லயும் நேரம் போக்குறாங்க.., .அது தப்பில்ல.., அதுக்காக பொழுதன்னிக்கும் அதே வேலையா இருந்தா எப்படி?! பசங்க படிக்கும் நேரம் கூட பக்கத்துல உக்காரதில்லை..,

 * பெண்களும் புத்தகம் படிப்பாங்க.., எப்போன்னா எல்லா வேலையும் முடிச்சுட்டு ரிலாக்சா உக்காந்து படிப்பாங்க. ஆனா, சாப்புடுற டைம்ல வெளில போற டைம்ல படிப்பாங்க.., இல்லாட்டி சமைச்சதை எந்த கருத்தும் சொல்லாம புத்தகம் படிச்சுக்கிட்டே சாப்பிடுவாங்க..,

* அவங்க வீட்டு விசேஷத்துக்கு மட்டும் 2 நாளைக்கு  லீவே கிடைக்கும்.., ஆனா, நம்ம வீட்டு விசேஷத்துக்கு மட்டும் 2 மணிநேரம்  பர்மிஷன் கூட கிடைக்காது .., ஏம்மா! நீ போய்ட்டு வந்திடேன்.., எனக்கு ஆடிட்டிங், மீட்டிங்குன்னு சாக்கு சொல்லுவாங்க.

*  வீட்டுல என்ன இருக்கு ஏது இருக்குன்னு தெரியாமயே.. வீட்டுக்கு வந்தவங்க எதிர்க்கவே டீ போட்டு கொண்டு வா.., டிஃபன் எடுத்து வைன்னு அதிகாரம் பண்ணுவாங்க.., அதுலயும் அவங்க வீட்டு ஆளுங்கன்னா இன்னும் சவுண்ட் ஜாஸ்தியா இருக்கும்...., எதோ இருக்குறதை சமைச்சு வச்சு பரிமாறும்போது எனக்கு இனொரு பஜ்ஜி கொடேன், இன்னும் கொஞ்சம் கேசரி கொடேன்னு கேட்டு இம்சிப்பாங்க..,

* சவுண்ட் விட்டுக்கிட்டே சாப்பிடுவாங்க..,ஆஃபீஸ் விட்டு வந்ததும் சட்டை ஃபேண்டை துவைக்க போடாம அதை இன்னொரு நாளைக்கு போட்டு போக ஆங்கர்ல மாட்டி வைப்பாங்க.., ஏன் இப்படி பண்ணுரீங்கன்னு கேட்டா சோப், தண்ணி, அயர்ன் பண்ண கரண்ட் பில் வேஸ்ட், உனக்கு வேலை மிச்சம்ன்னு சப்பை கட்டு கட்டுவாங்க..,

* கடைக்கு போனதும் முதல்ல கண்ணுக்கு படுற பொருளையே எடுத்துக்குவாங்க.., இன்னும் பார்க்கலாம்ன்னு எண்ணமே வராது.., ஏன் இப்படி பண்ணுறீங்கன்னு கேட்டா இந்த கலர்ல உனக்கு ஒரு புடவை எடுக்கனும்ன்னு ஆசைப்பட்டேன்.., முந்தி டிசைன் சூப்பர் அப்படி இப்படின்னு கதை விடுவாங்க...,

* வெளில எங்காவது போகும்போது அவஙக ஃப்ரெண்ட்சை பார்த்தா நாம இருக்குறதை கூட மறந்து கதை பேசுவாங்க.., ஆனா, நாம நின்னு ரெண்டு வார்த்தை பேசினதும், ஒரு நாளைக்கு வீட்டுக்கு வாயேன்மா.., இப்போ பஸ்சுக்கு டைமாச்சுன்னு எதாவது சாக்கு சொல்லி நம்மளை விரட்டுவாங்க..,

* 30 வருசத்துக்கு முன் ஒரு தலையா காதலிச்ச முன்னாள் காதலி வீட்டு நாய்க்குட்டி பர்தே டே தேதி நினைவிருக்கும்.., ஆனா, பொண்டாட்டி பொறந்த நாள் மறந்து போகும்..,

* பத்து பொருட்களை வாங்கி வர கடைக்கு அனுப்பினா அதுல 4 பொருளை மறந்துட்டு.., கழிச்சு கட்டுனது.., மீந்ததுலாம் வாங்கி வருவாங்க.., இவங்களுக்குன்னே கடைக்காரன் எடுத்து வச்சிருப்பானோ! ஏன் இப்படி காய் வாங்கி வந்திருக்கீங்க? நல்லதா பார்த்து பொறுக்கி போட்டு வாங்கி வரப்படாதான்னு கேட்டா! அப்புறம் அவன் அந்த காய்லாம் வச்சுண்டு என்ன பண்ணுவான்னு கேப்பாய்ங்க...,

ஸ்ஸ்ஸ்ஸ் அப்ப்ப்ப்ப்ப்பா! இப்போதைக்கு இது போதும்.., கைலாம் வலிக்குது.., அடுத்த பாகத்துல மிச்சத்தை சொல்றேன்..,

மனைவிக்கிட்ட பிடிக்காத விசயங்களை தெரிஞ்சுக்கனுமா?!  இங்க போய் பார்த்துக்கோங்க.., நான் போய் ரெஸ்ட் எடுக்குறேன்.., வர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ட்டா?!
               





Wednesday, June 19, 2013

ஒரு முறை விமான நிலையத்துக்கு வாங்களேன்!!


தனதும், தன் குடும்பத்தார் வாழ்வு சிறக்க இரவென்றும்.., பகலென்றும்.., பாராமல் கண்டம் விட்டு கண்டம்,  நாடு விட்டு நாடு பறக்கும் "விமான பணிப்பெண்களின் ”கனவுகளையும்”...,

ஊரார் மெச்ச பேருக்கு பின்னால் பி.ஈ என்ற ஈரெழுத்தை வாங்க, அடமானம் வைத்த காட்டையும், வீட்டையும் மீட்கவும், அக்கா திருமணத்திற்கு வாங்கிய கடனை அடைக்கவும், அன்பு காதலியை பிரிந்து, அரபு பாலைவனத்தில் வேர்வை சிந்த பயணிக்கும் "இளைஞனின் ”கடமையையும்”.....,

ஒரு மாதமாக சாக்லேட், ஐஸ், குலதெய்வ கோயில், உறவினர் வீடு, இரவில் தூங்கும் முன் கதை, உப்பு மூட்டை என அசத்திய அப்பா, இப்போ போனால் திரும்ப வர குறைந்தது இரண்டு வருடமாகும் என்பதை உணராமல், விமான நிலையத்தின் பிரமிப்பில் ஆயிரம் கேள்வி கேட்கும் குட்டி பெண்ணின் ”சுட்டித்தனத்தையும்”...,

கட்டிய மஞ்சள் தாலி கயிற்றின் வாசம் மாறாமலும், அவனிட்ட முத்தத்தின் ஈரம் காயமலிருக்கும்போதே வழியனுப்பும் மனைவியின் "மோகத்தையும்"...

காதலென்னும் கவிதையை கட்டிலில் படித்து, அதற்கு மனைவி அளித்த பரிசான... மழலையை, கண்டு உச்சி முகர ஓடோடி வரும் தந்தையின் “ஆர்வத்தையும்”...,

இருவது வருடம் பாலூட்டி, சீராட்டி வளர்த்து, அவள் விருப்பப்படி மணமுடித்து, ஆயிரம் ஆசை கனவுகளை தாங்கி செல்லும், யு.எஸ் மாப்பிள்ளையையும், மகளையும் ஊறுகாயும் , இட்லிப்பொடியும் தந்து வழியனுப்பும்  பெற்றோரின் ”அக்கறையையும்"...

உலக அரங்கில் நாட்டின் பெருமையை நிலைநாட்ட செல்லும் விளையாட்டு வீரனின் ”வீரத்தையும்”..,  ஆயுர்வேதத்தையும், சித்த மருத்துவத்தையும் நம்பாமல் வெளிநாடு சென்று சிகிச்சை பெற செல்லும் நோயாளியின் “அறியாமையையும்”...,

வீட்டில் இருக்கும் பெரிசு, நண்டு, சிண்டு நட்டுவாக்களி தொந்தரவின்றி தேனை ருசித்து, நிலவை ரசிக்க ஊட்டி, கொடைக்கானல், காஷ்மீர் செல்லும் புதுமண தம்பதியினரின் ”காதலையும்”..,

பரம்பரையிலே முதல் ஆளாய் பட்டம் வாங்கி, வெளிநாட்டில் வேலை செய்ய போகும் தன் மகனை(ளை), சாராயம் குடிக்காதே, வெள்ளி பீடி புடிக்காதேன்னு அட்வைஸ் சொல்லி, கடல் கடந்து போகும் தோஷம் தீர இடுப்பிலும், கையிலும் தாயத்து கட்டி, புளிசோறும் ஊறுகாயும் கட்டிக்கிட்டு, வேனில் வந்திருக்கும் கிராமத்து மனிதர்களின் ”அப்பாவித்தனத்தையும்”... 

என்னமோ ஏர்போர்ட் வர்றவங்கலாம் டாட்டா, அம்பானி வாரிசுன்னு நினைச்சு 20ரூபாய் மதிப்புள்ள பழரசத்தை 120ரூபாய்க்கும், 10ருபாய் மதிப்புள்ள சமோசாவை 60க்கும் விற்கும் கடையும்.., 6 கிமீ தூரத்தை பயணிக்க 450 ரூபாய் கேட்கும் டாக்சிக்காரங்களின் ”நினைப்பையும்”..,

அருமைப் பெருமையாய் வளர்த்து.., நல்ல கல்வி தந்து.., வசதியான பெண் பார்த்து முடித்து.., என் பையன் ***** நாட்டுல வேலை செய்யுறானாக்கும்.., இது என் பையன் வாங்கித்தந்ததுன்னு.., தள்ளாத முதுமையில் மகன்(ள்) பெருமை பேசி.. மடிந்த பெற்றோரின் இறுதி சடங்கை செய்ய, இரண்டு நாள் கழித்து  ஓடோடி வரும் மகனி(ளி)ன் “கண்ணீரையும்”...,

பருப்பில்லை, எண்ணெயில்லை, உங்களுக்கு பொறுப்பில்லை என்று நச்சரித்து அனுப்பும் மனைவியின் டென்சனை புறந்தள்ளி, ஆசை , காதல், பொறுப்பு, காதல், அக்கறை, கண்ணீர் தாங்கிய கனவுகள் ஈடேற அவர்களை, பெற்ற  தாய் போல பாதுகாப்போடு சேருமிடம் சேர்ப்பிக்கும் விமான ஓட்டியின் ”பொறுப்பையும்”.., 

அனைத்து உணர்ச்சிகளையும் ஒரு சேர  ஒரே இடத்தில் காணவேண்டுமா??

                    ”ஒருமுறை வாருங்கள் விமான நிலையத்திற்கு”!!.....,



என் மகள் தூயாவை பார்க்க பெங்களுரு ஏர்போர்ட் போய் இருந்தேன். அங்க இருக்கும்போது எத்தனை விதமான மனிதர்கள்?! அழுகை, கோவம், ஆனந்தம், கண்ணீர்ன்னு பலதரப்பட்ட மனிதர்களை சந்திக்க நேர்ந்தது..,  அதான் மனசுக்கு தோணுணதை எழுதிட்டேன்..,

Tuesday, June 18, 2013

சின்ன புள்ளையா இருக்கும்போது இப்படித்தான் இருந்தேன்!!??

                                       


1. பென்சில் சீவி வர்ற தூளை, சாதம் வடிச்ச தண்ணில போட்டு நைட் ஃபுல்லா வெச்சா மறுநாள் ரப்பரா மாறி இருக்கும்ன்னு நம்புனேன்..,

2. Iceland ஐ இஸ்லேண்ட் ன்னு படிப்பேன்.., (இப்பவும் சில வார்த்தைகளில் இந்த தடுமாற்றம் உண்டு..,)

3. வெத்தலை, பாக்கு போட்டா படிப்பு வராதுன்னு நினைச்சுப்பேன்..,(ம்க்கும் இல்லாட்டி மட்டும் எல்லாத்துலயும் நூத்துக்கு நூறு எடுத்திடுவியாக்கும்ன்னு ஃப்ரெண்ட் சொன்னது நினைவிருக்கு..,)

3.விடுமுறைல   கொடிக்காப்புளி விதையை சுரண்டி பரிட்சை ரிசல்ட் தெரிஞ்சுக்கிட்டேன்..,(நம்ம ரிசல்ட் எழுதுன நமக்குதானே தெரியும்!!!)

4. கணக்கு வாத்தியார் ஆஸ்துமா குணமாக பெரிய ஊசியா போடுறதுக்காகவே டாக்டருக்கு படிக்கனும்ன்னு நினைச்சுப்பேன்.., (பின்னே கணக்கு தப்பா போட்டா நறுக்குன்னு கொட்டுனா இப்படித்தான் நினைக்கனும்..,)

5.ரோட்டுல பொணத்தை தூக்கிக்கிட்டு போனா, தலைமுடி பிடிச்சுப்பேன். (இல்லாட்டி நைட்டுல செத்தவங்க ஆவியா வந்து பிடிச்சுப்பாங்களாம்!!)

6.  தூங்குறப்போ சுத்துற ஃபேன் கழண்டு தலைமேல விழுதுட்டா என்ன பண்றதுன்னு கேக்குற  தம்பிக்கிட்ட.., இல்லடா, அது சுத்தி, சுத்தி தூர போய் விழும்டா உதாரணத்துக்கு பந்து பாரு.., அது அப்படித்தானே விழுதுன்னு புத்தி சொல்லுவேன். 

7. ஒரே ஒரு அண்டங்காக்கையை பார்த்தா ஞாபக மறதி வந்துடும்ன்னு சொன்னதை நம்பி அடுத்த அண்டங்காக்கையை தேடி ஓடி இருக்கேன்..,

8. கிரீம் பிஸ்கட் நடுவுல இருக்குற க்ரீமை மட்டும் சாப்பிட்டுட்டு, பிஸ்கட்டை ஒட்ட வச்சு வீட்டுல திட்டு வாங்குவேன்..,

9. சித்தி விநாயகர் போல, பெரியம்மா விநாயகர் இல்லியான்னு கேட்டு பூசாரிக்கிட்ட திட்டு வாங்கி இருக்கேன்..,

10.உள்ளே பூட்டி இருக்குற வீட்டுல காலிங்க் பெல் அடிச்சுட்டு ஓடி வந்துடுவேன்.., 

 11. லாரிக்குப் பின்னாடி  TATA ன்னு  இருந்தா , நமக்கு டாட்டா சொல்றாங்கன்னு நினைச்சு.., நானும் டாட்டான்னு கத்திச் சொல்லிக்கிட்டே கைக்காட்டுவேன்..,

12. டாக்டர் சிரிச்சு பேசிக்கிட்டே.., ஊசி போட்டா வலிக்காதுன்னு நம்புனேன் (நர்ஸ்கிட்டயா?ன்னு கமெண்ட்ல கும்மாதீங்க சகோஸ்)

13  ஒவ்வொருத்தர் வீட்டுல இருந்தும் ஒவ்வொரு பொருள் கொண்டுவந்து கல்லு வச்சு அடுப்பு மூட்டி  கூட்டாஞ்சோறு ஆக்கி சாப்பிடுவோம். அடிப்பிடிச்ச வாசனை இருந்தாலும் ருசியா இருக்கும்...,

14. தண்டவாளத்துல பழைய அலுமினிய 10 பைசா, 20 பைசாவை வச்சு.., அது மேல ரயில் ஏறி இறங்குனா அது காந்தமா மாறும்ன்னு நினைச்சு காசை வேஸ்ட் பண்ணி இருக்கேன்..,

15. சூட்டுக்கொட்டையை நல்லா தேய்ச்சு பக்கத்துல இருக்குறா பசங்க கை, இல்ல தொடைல வச்சு ரசிச்சு இருக்கேன்.,

ஏற்கனவே இதுப்போல மொக்கையை பதிவா போட்டிருக்கேன். அதை படிக்க  இங்கயும்...., போங்க.. அடுத்ததை படிக்க அங்கயும்..,  போங்க..., 

 
 
 
 


Monday, June 17, 2013

ராவணனின் பத்து தலைக்கான காரணம் -ஐஞ்சுவை அவியல்


  ஏ புள்ள! மணி பத்தாச்சு.., டிவி பொட்டியை போடு.., ராமாயணம் போட்டிருப்பாங்க பார்க்கலாம்..,

என்ன மாமா திடீர்ன்னு இதெல்லாம் பார்க்க ஆரம்பிச்சுட்டீரு? சரி, அந்த புராணத்துல ராவணனுக்கு ஏன் பத்து தலை வந்துச்சுன்னு தெரியுமா?

அது, கடவுளோட திருவிளையாடல்.., அதுமில்லாம கோவம், காமம், பொய்ன்னு எதாவது பத்து கெட்ட பழக்கத்தை பத்து தலையாக்கி அதை கடவுள் அழிக்குறதா கதை வரும்ன்னு நினைக்குறேன் சரியா புள்ள?!

அதான் இல்ல மாமா! அந்த காலத்துல விச்ரவசு மகரிஷின்னு ஒரு சாமியார் இருந்தாரு. அவரோட பையந்தான்  குபேரன்..

(ஏழுமலையான் கல்யாணத்துக்கு கடன் குடுத்தாரே அவர்தானே?

ஆமா மாமா!இவன், பிரம்மாவுக்கு கொள்ளுப்பேரன். தனது தாத்தா பிரம்மாவை நினைச்சு  தவமிருந்து சகல செல்வங்களையும் பெற்றான். அதுல முக்கியமானது நவரத்தினங்களால் ஆன புஷ்பக விமானம். அதுல  நினைச்ச இடத்துக்குப் பறந்து போய், செல்வத்தைக் கொண்டு வந்து குவிச்சு. உலகிலேயே பெரும் பணக்காரனான். 

சுமாலின்ற அசுரன் இதைக் கவனிச்சான்.  தனக்கும் குபேரனைப் போல ஒரு பையன்  இருந்தா, உலகையே கட்டி ஆளலாம்ன்னு கணக்குப் போட்டான். தன் மகள் கைகனிக்கிட்ட, மகளே! அசுரர் குலம் தழைக்க, நீ விச்ரவசு முனிவரை கல்யாணம் கட்டிக்கிட்டு சீக்கிரம் குழ்ந்தைப் பெத்துக்கோ அந்தக் குழந்தை மூலம் நம்ம வம்சம்  சாகாவரம் பெற்று, உலகையே ஆட்டிப்படைகனும்ன்னு சொன்னான். கைகனியும் சம்மதிச்சு..,காட்டிலிருந்த விச்ரவசு முனிவரை போய் பார்த்தா..,

ரொம்ப அழகான   அவளை பார்த்ததும் அவர் மயங்கிட்டாரு.  தன்னை  கல்யாணம்  செய்யும்படி அவளே கேட்டதால அவரும்  சம்மதிசாரு. அந்த நேரமே தன்னோடு உறவு  கொள்ளும்படி அவ கேட்டுக்கிட்டா.  அதுக்கு, அந்த சாமியாரு.., கைகனி! இது அந்திக் கருக்கல் நேரம். இந்நேரத்தில் யார் உறவு கொள்கிறார்களோ, அவர்களுக்கு விகாரமானதாகவும், குறையுள்ளதாகவும் குழந்தை பிறக்கும், அதனால, ராத்திரி வரை பொறுன்னு சாமியார் சொன்னாரு.

எங்கே சாமியாரு மனம் மாறிடுவாரோ! அப்பாவோட வாக்கை காப்பாத்த முடியாம போய்டுமோன்னு பயந்து.., இப்பவே குழந்தை வேணும்ன்னு அடம்பிடிச்சா. அந்த சாமியாரும் வேற வழியில்லாம   உறவு கொள்ளவே, அவ கர்ப்பமானா.  பேறு காலம் வந்துச்சு.., ஆண்குழந்தை பொறந்துச்சு. ஆனா,  பத்து தலைகள், இருபது கைகள், பயங்கர விழிகள் கொண்ட ஒழுங்கற்ற  வடிவத்துல பிறந்தது. குழந்தையை பார்த்து அம்மாவே பயந்துட்டா. சாமியார் பேச்சைக் கேட்காம போனதுக்காக  மன்னிப்பு கேட்டா. அவரது தவ வலிமையைப் பயன்படுத்தி குழந்தைக்கு  ஒற்றைத்தலை வேணும்ன்னு  கேட்டா கைகனி! அது நடக்காத காரியம். ஆனா, என் தவ வலிமையினால, அழகற்ற இவனை அழகாக மாத்துறேன். இவனது பத்து முகங்களும் அழகா இருக்கும். ஆனால், தலைகளை குறைக்க முடியாது. இவன் வஜ்ரம் பாய்ந்த உடல்,கைகளுடன் பலவானாக இருப்பான்னு சொன்னார்..,

பத்துமுகம் கொண்ட அவனுக்கு தசமுகன்ன்னு பேர் வெச்சார். . தசம் ன்னா பத்து. தசமுகன், ஒருமுறை கைலாயம் போனான். தன்னால, எதையும் சாதிக்க முடியும்ன்ற எண்ணத்துல கைலாய மலையை தூக்கிப் பார்க்க ஆசைப்பட்டு மலையை தூக்கும்போது..,  சிவன் தன் கால் கட்டை விரலால், மலையை அழுத்த அவனது பத்து கைகளும் மலைக்கு அடியில் மாட்டிக்கிச்சு. . அவன் வலி தாங்காம ஓன்னு கதறி அழுதான். அந்த அலறல் உலகம் முச்சூடும் கேட்டுச்சு. அப்போ அங்க வந்த வாகீச முனிவர், தசமுகா! சிவனைப் பணிந்து பாடு. அவர் உன்னை  மன்னிப்பார்ன்னு சொன்னார்.  தசமுகனும் சிவனுக்குப் பிடித்த சாமகானப் பாடல்களைப் பாடினான். 

அதுகேட்டு மகிழ்ந்த சிவன் அவனை விடுவித்து.., தசமுகா! நீ வலி தாங்காமல் உலகமே நடுங்க அழுததால் ராவணன் என அழைக்கப்படுவாய். அந்தப்பெயரே உனக்கு நிலைக்கும். நீ புகழ் பெற்று நீண்ட காலம் வாழ்வாய், என்று ஆசிர்வதித்தார். ராவணன் என்ற சொல்லுக்கு ”விடாமல் அழுபவன்”ன்னு அர்த்தம் . ராவணன் இலங்கைக்கு அரசனா ரொம்ப நாள் நல்ல பேரோட  ஆட்சி செய்தான்.,  விருப்பமில்லாத பொண்ணை அதும் அடுத்தவன் பொண்டாட்டியை தொட்ட பாவம்தான் அவனை கெட்டவனாக்கியது..,

ம் ம் ம் தன் பொண்டாட்டினாலும் பிரச்சனை.., அடுத்தவன் பொண்டாட்டினாலும் பிரச்சனை.., ஆக மொத்தம் பொண்டாட்டின்னாலே ஆம்பிளைங்களுக்கு பிரச்ச்னைதான் புள்ள..,

என்ன மாமா! பேச்சு ஒரு மாதிரியா போகுது..,

அதொன்னுமில்ல புள்ள!  என் ஃபோனுக்கு ஒரு மெசேஜ் வந்திருக்கு..,

பெண்: டாக்டர்!  ஒருத்தருக்கு ஹார்ட் அட்டாக் வந்தா என்ன முதலுதவி பண்ணனும்..,
டாக்டர்: குட்.., இப்படிதான்மா எல்லாத்தையும் தெரிஞ்சுக்கனும்.., 
பெண்: நீங்க வேற! பட்டுசேலை வாங்கி வந்திருக்கேன். அந்த பில்லை என் வீட்டுக்காரர்க்கிட்ட காட்டனும்..,அதான் கேட்டேன்..,

ம்க்கும்.., எப்ப பாரு பொண்டாட்டிங்களை குறை சொல்லி சிரிக்குறதே பொழப்பா போச்சு உங்களுக்குலாம்..,

ம் ம் ம் ராஜி வீட்டுக்கு போய் இருந்தியே! எப்படி இருக்கா உன் ஃப்ரெண்ட்? பசங்கலாம் எப்படி இருக்காங்க? அப்பு எப்படி இருக்கான்?

எல்லாரும் நல்லா இருக்காங்க மாமா.., அப்பு இந்த வருசம் 9 வது வகுப்பு போறான்.., 

அப்படியா! அம்புட்டு பெரிய ஆளாகிட்டானா?! இப்போதான் நடந்தது போல இருக்கு..,  அப்புக்கு ஒரு மூணு இல்ல நாலு வயசிருக்கும்.., காது வலின்னு அழுதுட்டு இருந்தான்.., அப்போ,  ராஜி அவனை எவ்வளவோ சமாதான படுத்தி பார்த்தா., முடியலை.., அப்பு அழுதிக்கிட்டே இருந்தான்.

அப்போ ராஜியோட அம்மா,  ஒரு கிண்ணத்துல எண்ணெய் கொண்டு வந்து அவன் காதுல ஊத்துனாங்க,, ஒரு ரெண்டு நிமிசம் போய் இருக்கும்.., இன்னும் பெருசா கத்த ஆரம்பிச்சான்.., ஏன்னு கேட்டதுக்கு.., பாட்டி, இப்போ என் காதுல திரி போட்டு விளக்கேத்த போறாங்கன்னு அழுதான்.., எனக்கு ஒண்ணும் புரியாம கேட்டதுக்கு.., பாட்டி டெய்லியும் சாமி படத்துக்கு முன்னாடி ஒரு விளக்குல எண்ணெய் ஊத்தி, திரி போட்டு விளக்கேத்துவாங்க.., இப்போ என் காதுல எண்ணேய் ஊத்தி இருக்காங்க.., இனி திரி போட்டு விளக்கேத்துவாங்கன்னு அழுதான்..,

அப்படி புரியாம அழுத புள்ள இன்னிக்கு 9வது வகுப்பு போறானா? பலே! பலே!

ஆமா  மாமா! நல்லாதான் வளார்ந்திருக்கான்.., என்கிட்ட ஒரு விடுகதைக்கு விடை கேட்டான்.., நான் ரொம்ப நேரம் முழிச்சிக்கிட்டு இருந்தேன். அப்புறம் அவனேதான் சொன்னான்..,
                                       
நீதான் எல்லாத்துக்கும் முழிச்சுக்கிட்டு நிப்பியே! சரி, சரி  முறைக்காத என்ன கேட்டான் சொல்லு.., என்னால முடியுதான்னு பார்க்குறேன்..,

ஓடும் சங்கிலி,
 ஒதுங்கும் சங்கிலி,
 பள்ளத்தப் பாத்தா பதுங்கும் சங்கிலி 
அது என்ன சங்கிலி?
இதான் கேட்டான் மாமா!

ம் ம் ம் இரு யோசிச்சு சொல்றேன்.

கடைக்கு போகனும் மாமா! சீக்கிரம் சொல்லுங்க..,

சொல்றேன் இரு.., கடைக்கு போகும்போது என்னென்ன கவனிக்கனும்ன்னு தெரியுமா?

பை, பணம் எடுத்துக்கிட்டு, வீட்டு கதவை பூட்டிட்டு போனா போதாதா?!

           
அது மட்டும் போதாது.., வீட்டுலயே என்னென்ன பொருள் வாங்கனும்ன்னு லிஸ்ட் போட்டு எடுத்து போய்ட்டா அவசியமான பொருளை மறக்கவும் முடியாது.., அவசியமற்ற பொருளை வாங்கவும் முடியாது..,

ஹெல்மெட் கொண்டு போகக் கூடாது.., வண்டிலயோ இல்ல பாதுகாப்பான இடத்துல வச்சிட்டு போகனும் இல்லாட்டி வாங்க வேண்டிய பொருளை எடுத்து பார்த்து வாங்குறது சிரமம்..,

ட்ரெஸ் வாங்கும்போது, இப்போ இருக்குற அளவுக்கே வாங்கனும்.., டயட்ல இருக்கேன் இன்னும் சில நாள்ல மெலிஞ்சுடுவேன் இல்ல குண்டடிச்சுடுவேன்னு.., அப்புறம் அது உடம்புக்கு சேராம   காசை வேஸ்ட் பண்ண வேணாம்.

கூட்டம் அதிகமில்லாத கடையா பார்த்து போகனும்.., குழந்தைகளுக்கான பொருட்களை வாங்கலைன்னா அவங்களை கூட்டி போக வேணாம்.., வீட்டுலயோ இல்ல ஸ்கூல் விட்டு வர்றதுக்குள்ள ஷாப்பிங் முடிச்சுட்டு வந்துடனும்..,அவங்க வந்தா உடம்புக்கு ஒத்துக்காத நொறுக்கு தீனிகளை கேப்பாங்க.., பொம்மை, ஐஸ்ன்னு கேட்டு அடம்பிடிச்சு வாங்கி தேவை இல்லாம காசு செலவாகும்..,

வயசு பசங்க தனியா ஷாப்பிங் போறேன்னு சொன்னா  தனியா போக விடாம பெரியவங்க யாராவது கூட போகலாம்.., அவங்களுக்கு பணத்தோட அருமை தெரியாது.., அதனால வேண்டாத பொருளை அவங்க வாங்காம தவிர்க்கலாம்..,  வாங்க வேண்டிய அளவுக்கு கட்டை பையோ இல்ல மஞ்சப்பையோ அசிங்கம்  பாக்காம எடுத்து போனா கொஞ்சம் பிளாஸ்டிக் கவர்ங்க குப்பைக்கு போறது குறையும். எதோ நம்மால முடிஞ்ச அளவு பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கலாமே!

ம்ம் சரி மாமா! வாங்க கிளாம்பலாம்..., இப்பவே போய் வாங்கிட்டு சின்ன மண்டையன் இஸ்கோலுல இருந்து வர்றதுக்குள்ளே வந்துடலாம்..,

ம்ம்ம் நீ கடைக்குள்ளாற போனா எப்போ வருவியோ தெரியாது. அதனால, எதாவது சாப்பிட்டு வரேன். இல்லாட்டி பசி மயக்கத்துல அங்க வந்து எரிச்சல் பட்டு தேவை இல்லாத பொருளை வாஙகவோ இல்ல தேவையான பொருளை வாங்கமயோ வரப்போறேன்..

சரி மாமா! வாங்க உப்புமா கிண்டி தரேன்..,

நீ செஞ்சிக்கிட்டே இரு..  அதுக்குள்ள ராஜி ஒரு லிங்க் அனுப்பி இருக்கா பார்த்துட்டு வரேன்..

என்னது மாமா?!

தந்தையர் தினம் பத்தி அவளுக்கு முதல்யே தெரியாதாம்.., தெரிஞ்சிருந்தா எதாவது கிறுக்கி இருப்பாளாம். அதனால, போன வருசம் அவ அப்பா ரிட்டைய்ர்மெண்ட்க்கு போட்ட போஸ்ட்டை பார்க்க சொல்லி எனக்கு அனுப்பி இருக்கா. அதான் பார்த்துட்டு வரேன். நீயும் இங்க போய் படிச்சு பாரு..,