ஏனுங்க மாமா! நம்ம பக்கத்து வீட்டு பார்வதி பாவமுங்க. சாப்ப்பாட்டுக்கே கஷ்டப்படுதுங்க. அந்த தெய்வம் அவ விசயத்துல கண் தொறக்கலயே.
இதப்பாரு புள்ள, சாமி நேருல வந்து உதவி செய்யாது.கடவுள் மறைமுகதான் செய்யும் அதை புரிஞ்சுக்கிட்டு நாமதான் அதை யூஸ் பண்ணிக்கனும்.
புரியலியே மாமா, சாமியாலதான் எல்லாமே முடியுமே, அவ கஷ்டத்தை ஒரு நொடியில மாத்த முடியாதா மாமா?!
இதப் பாரு புள்ள, எதுவுமே ஈசியா கிடைச்சுட்டா அதுக்கு மரியாதை கிடையாது. உன்னை மாதிரிதான் கீரனூர்ல இருந்த முத்து, கடவுள் நேருல வந்து சொன்னாதான் சாப்பிடுவேன்னு அடம் பண்ணிக்கிட்டு, எதிர்க்க சாப்பாடை வச்சுக்கிட்டு உக்காந்துக்கிட்டான்.
மணி 9 ஆச்சு. ஏங்க சாப்பிட வாங்கன்னு அவன் பொண்டாட்டி போய் கூப்பிட்டா. ஏய், நான் என்னடி சொன்னேன்!!?? சாமி வந்து ஊட்டினாதான் சாப்பிடுவேன்னு சொன்னேன்லன்னு சீறினான். எக்கேடோ கெட்டுப் போன்னு அவன் பொண்டாட்டி போய்ட்டா. மணி 12 ஆச்சு, டேய், சாமிக்கிட்டலாம் சவால் விடாத , ஒழுங்கா சாப்பிடுன்னு அவனை பெத்தவங்க சொன்னாங்க. சே! ஒரே ரோதனையா போச்சு, அட்வைசுலாம் பண்ணிக்கிட்டுன்னு சாப்பாட்டை எடுத்துக்கிட்டு பெட்ரூம்ல போய் உக்காந்துக்கிட்டான்.
சாயந்தரம், மணி 4 ஆச்சு. பசங்க ஸ்கூலிருந்து வந்து அப்பா சாப்பிடுப்பா. அம்மா செஞ்ச உப்புமா நல்லா இருக்குன்னு குழந்தை அவன் வாய்ல உப்புமா ஊட்ட போச்சு. சீ! போ அந்தாண்டன்னு சொல்லி சாப்பாட்டு மூட்டையைக் கட்டிக்கிட்டு யாருமில்லாத ஏரிக்கரையில போய் உக்காந்துக்கிட்டான்.
ராத்திரி 12 ஆச்சு. அந்த வழியா, கொள்ளையடிச்சுக்கிட்டு டயர்டா திருடனுங்க வந்தானுங்க. அவனுங்களுக்கு செம பசி. சோத்து மூட்டையைப் பார்த்ததும் அவன்கிட்ட பிடுங்கிக்கிட்டு போய் சாப்பிட உக்காந்தாங்க.
அப்போ, டேய் கபாலி, கொஞ்சம் பொறுமையா இரு. அவன் எதிர்க்க சோத்து மூட்டையை வச்சுக்கிட்டு உக்காந்துக்கிட்டு இருக்கான், ஒரு வேளை நம்மைப் பிடிக்க இந்த நாட்டு ராசா இந்த சாப்பாட்டுல வெசத்தை வெச்சு இருந்தா, நம்ம கதி என்ன ஆகும்!?ன்னு சொல்லி, முத்துவை சாப்பிட வற்புறுத்தினாங்க. அவன் மாட்டேன்னு சொல்லி அடம்பிடிச்சான்.
இதுல ஏதோ சூது இருக்குன்னு முடிவுக்கு வந்த திருடனுங்க முத்துவை அடிச்சு, உதைச்சு சாப்பாட்டை அவன் வாய்ல திணிச்சு சாப்பிட வச்சாங்களாம். முத்துவோட பொண்டாட்டி, பெத்தவங்க, பையன் ரூபத்துல வந்து சாமி சொல்லிச்சு. அப்பவே அவன் கேட்டிருந்தா முத்து உடம்பு புண்ணாகியிருக்காது.
அதுப்போலதான் பார்வதி கதைதான். பத்தாவது படிச்சிருக்குறவ எதாவது கைத்தொழில் கத்துக்கிட்டு, கவர்ன்மெண்டுல லோன் வாங்கி பொழச்சுக்காம சாமி நேருல வரும்னு காத்துக்கிட்டு இருந்தால் எப்படி புள்ள? திருவள்ளுவரும் திருக்குறள்ல முயற்சி தன் மெய்வருத்த தெய்வம் கூலி தரும்ன்னு சொல்லியிருக்கார்.
நீங்க சொன்னது சரிதானுங்க மாமோய். நானும் பார்வதிக்கிட்ட நல்லவிதமா எடுத்து சொல்றேனுங்க.
அப்புறம் மாமா, என் செல்போன்ல ஒரு மெசேஜ் வந்திருக்கு. படிச்சதும் சிரிச்சுட்டேன் மாமா
அப்படியா, எனக்கும் சொல்லு புள்ள,
ஆங்கிலம் ஒரு அற்புதமான மொழி. அதை நான் பேசாத வரை...,
வீட்டை சுத்தப்படுத்துவதற்காகவே பண்டிகைகளைக் கண்டுபிடித்துள்ளான் தமிழன்.
வெயில் காலத்திற்கும், பனி காலத்திற்கும் ரெண்டே ரெண்டு வித்தியாசம்தான். எப்படா குளிக்க போறோம்ன்னு நினைச்சா வெயில் காலம். ஏண்டா குளிக்க போறோம்ன்னு நினைச்சா அது பனி காலம்ன்னு மெசேஜ் வந்துச்சு மாமா.
ஹா ஹா நல்லா இருக்குடி.
நான் உன்கிட்ட ஒரு கணக்கு சொல்றேன். தெரியுதான்னு பார்க்கலாம் புள்ள.
ஹா ஹா மாமா, நம்ம தெருலயே பால்கணக்கு, வரட்டி கணக்குலாம் வெவரமா நாந்தான் போடுவேனாக்கும்.
அப்பிடியா, யோசிச்சு சொல்லுடி என் செல்லக்குட்டி, ஒருநாள் தன் வூட்டுக்காரனோட சண்டைப் போட்டுட்டு, கோபத்தோட வூட்டை வுட்டு கிளம்புன ராமசாமி பொண்டாட்டி, தினமும் ஒரு காதம் (10 மைல்) வீதம் நடந்து போறா. ஏழு நாட்களுக்குப் பிறகு அவ வூட்டுக்காரன் அவளைத் தொடர்ந்து, புறப்பட்டு நாளொன்றுக்கு ஒன்றரை காதம் வீதம் நடந்து போறான். அவ்விருவரும் எப்போ மீட் பண்ணுவாங்க ? இருவரும் நடந்த தூரம் எவ்வளவு ?
ஐ கண்டுபிடிச்சுட்டேன் மாமா!
இருடி, ஓட்டு போடுற மாதிரி அவசரப்படாதே! நல்லா யோசிச்சு நிதானமா பதிவோட முடிவுல பதில் சொல்லு.
சரிங்க மாமா,
என் ஃப்ரெண்ட் ராஜியோட சின்ன பொண்ணு இனியா இருக்குல்ல.
ஆமா, அவளுக்கென்ன!?
அவளுக்கொண்ணுமில்ல மாமா. நான் ஒருதரம் அவ வீட்டுக்கு போயிருந்தேன். அப்போ அவ, சின்ன பொண்ணு இனியாக்கு 5 இல்ல 6 வயசிருக்கும். அப்போதான் இந்த ஓட்ஸ்லாம் நமக்கு அறிமுகமான டைம். ஓட்ஸ்லாம் சர்க்கரை நோயாளிக மட்டும்தான் சாப்பிடனும்ன்னு பரவலா ஒரு பேச்சு. வீட்டுல பேசி இருப்பாங்க போல. அதை இனியா கேட்டிருக்கு.
நான் போயிருக்கும்போது ராஜி, காலைல டிஃபனுக்காக ஓட்ஸ் பொங்கல் செஞ்சிருந்தா. அப்போ ராஜியோட பாட்டி, இனியாக்கிட்ட கொஞ்சம் பொங்கல் கொடுத்து, மாடிக்குப் போய் காக்காவுக்கு வெச்சுட்டு வான்னு சொன்னாங்க. இனியாவும் அப்படியே செஞ்சா. ஆனா, அப்புறம் பாட்டியை பார்த்து ஒரு கேள்வியை கேட்டா. நாங்க எல்லாரும் சிரிச்சுட்டோம்.
அப்படி என்னதான்டி கேட்டா உன் ஃப்ரெண்டோட பொண்ணு!?
ஏன் பாட்டி உனக்குதான் சுகர் அதனால ஓட்ஸ் சாப்புடுறே. காக்காக்கும் சுகரா? அதனால அதுக்கும் ஓட்ஸ் பொங்கல் வைக்குறியான்னு கேட்டா.
ஹா! ஹா! இனியா அவ அம்மா போல இல்லாம ரொம்ப சுட்டி.
அப்புறம். நம்ம மரத்துல முருங்கக்காய் நிறைய காய்ச்சிருக்கு மாமா. என்ன பண்ணலாம்!?
அக்கம் பக்கத்துல இருக்குறவங்களுக்கு குடுத்தது போக, மிச்சத்தை அப்படியே ஃபிரிட்ஜ்ல வெக்காம, காயோட தோள் எடுத்து சின்ன சின்னதா வெட்டி, பிளாஸ்டிக் கவர்ல போட்டு ஃப்ரிட்ஜ்ல வெச்சா ஒரு வாரம் வரைக்கும் கெடாது. முருங்கை விதையைக் கூட்டு செய்து சாப்பிடலாம். இது மூளைக்கு நல்ல பலத்தை தரும். முருங்கைக்காய் சாம்பார் எல்லோருக்கும் பிடிக்கும். இதை அடிக்கடி செஞ்சு சாப்பிட்டா ருசியோடு வயித்துப் புண், கண் நோய், மலச்சிக்கல்லாம் போக்கும்.தலைவலி, வாய்புண், ரத்த சீதபேதிக்கும் முருங்கைக்காய் கைக்கண்ட மருந்து. கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக் காய் கை கண்ட மருந்து.
இப்பதான் முருங்கை சீசனாச்சே! அதனால, முத்தின முருங்கைகளை தூக்கி எறிஞ்சுடாம சூப் வச்சு குழந்தைகளுக்கு கொடு. முருங்கைகள சின்ன, சின்னதா வெட்டி உப்பு போட்டு லேசா வேக வச்சு, தண்ணி வடிச்சு அந்த முருங்கைக்காய்களை வெயிலில் நல்லா காய வச்சு மிக்சில போட்டு பொடிப் பண்ணி வச்சுக்கிட்டா சாம்பார் கொதிச்சு இறக்கும்போது ஒரு டீஸ்பூன் முருங்கைத் தூளைப் போட்டு இறக்கினா சாம்பார் வாசமாவும், ருசியாவும் இருக்கும்.
சரிங்க மாமா. அப்படியே செய்யுறேன். உங்கக்கூட ரொம்ப நேரம் பேசிட்டு இருந்துட்டேன். துணி துவைக்கனும், வீட்டை கூட்டனும் வேலை நிறைய இருக்கு. நான் வாரேன் மாமோய்.







