Friday, April 04, 2014

அருள்மிகு திருவழுதீஸ்வரர் திருக்கோவில், ஏர்வாடி - புண்ணியம்தேடி

புண்ணியம் தேடிப் பயணத்தில் நாம இன்னைக்குப் பார்க்கப்போறது ஒரு புராதானமான கோவில். அதை இப்ப புனரமைச்சுகிட்டு இருக்கிறாங்க. ஆனா இதுல ஒரு வேதனையான விஷயம் என்னன்னா இந்த திருக்கோவிலின் ஸ்தல வரலாறு இங்க யாருக்கும் தெரியாமல் போனதே!!  தெரிந்தவர்கள் இந்தப்பதிவில் தங்களது தகவல்களைத் தரலாம். அதை நான் சேர்த்துக்குறேன்.
இதுதான் நான் சொன்ன அந்தப் பழைமையான அருள்மிகு பெரியநாயகி அம்பாள் சமேத திருவழுதீஸ்வரர் திருக்கோவிலின் முகப்பு. இந்த இடம் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பக்கத்தில் உள்ள ஏர்வாடி. இதேப்போல் ராமநாதபுரம் மாவட்டத்திலும் ஒரு ஏர்வாடி இருக்கிறது(அதானே உன் சொந்த ஊர்ன்னு யாரும் கிண்டலடிக்க வேணாம்.) இந்த ஸ்தலம் புண்ணிய நதியாம் நம்பி ஆறு ஓடும் பாதையில் இருக்கு. இந்த திருஸ்தலத்தின் பழையப் பெயர் வீரரவிவர்ம சதுர்வேதமங்கலம். இது சுமார் 1600 வருடங்களுக்கு முற்பட்ட கோவில் என சொல்லபடுகிறது.
நுழைவாயில் மண்டபத்தைத் தாண்டி இருக்கும் உள்புறவாயில். இந்த ராஜக்கோபுரத்திற்கு அடித்தளம் அப்பொழுது இருந்த மன்னர்களால் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் படையெடுப்புகளாலோ இல்லை ஆட்சி மாற்றங்களாலோ என்னமோ  ராஜக்கோபுரம் மொட்டைக்கோபுரமாக முற்றுப்பெறாமல் இருக்கிறது. இந்த ஸ்தலத்தின் வரலாறு செவிவழிக்கதையாக நான் கேட்டவை...., சதுர்வேதம் எனப்படும் நான்கு வேதங்களை அடிப்படியாக கொண்ட கோவில் இது. மேலும் சதுர்வேதங்களையும்,  சாஸ்திரங்களையும், உபநிடங்களையும் ஓதும் அந்தணர்களுக்கு தானமாக வழங்கி, வழிபாடு நடந்து வந்தது எனவும் சொல்லப்படுகிறது.  
இது மிகவும் பழமையானக் கோவில் என்பதற்கு நிறைய சான்றுகள் இருந்தாலும் கோவிலின் நந்தி பீடத்திற்கு கொஞ்சம் மேற்கு பக்கத்தில் உத்திரத்தில் பாண்டிய மன்னர்களின் சின்னமான மீன்சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.  இங்கே இருக்கிற சின்னம் அவர்களுடைய நேரடி ஆட்சியின் கீழ் இருந்ததற்கான சான்று ஆகும். ஆகையால் இது பாண்டியமன்னர்களால் கட்டப்பட்டு இருக்கலாம். அல்லது புனரமைக்கப்பட்டும் இருக்கலாம். மேலும், இதன் காலம் 1500 வருடங்களுக்கு முந்தையது என சொல்லப்படுகிறது. இந்தக் கோவிலில் கும்பாபிஷேகம் நடைப்பெற்று சுமார் 350 வருடங்களுக்கு மேல் ஆகிறதாம். கோவிலில் திருவிழா முதலிய முக்கிய விஷஷேங்கள் நடந்து சுமார் 30 வருடங்களுக்கு மேல் ஆகிறதாம். இவ்வளவு பழமை வாய்ந்த கோவில் சிவனடியார்கள் மற்றும் தொண்டுள்ளம் படைத்த அன்பர்களால் நிச்சயம் கவனிக்கப்படவேண்டும்.  
இது திருக்கோவிலின் வெளிப்பிரகாரச் சுற்று. இந்தக் கோவிலின் விஷேசம் என்னன்னா எல்லா கோவில்களிலும் உற்சவர் விக்ரகம், மூலவர் விக்ரகத்தில் இருந்து வேறுபட்டு இருக்கும். ஆனா, இந்த திருக்கோவிலில்  மூலவர் விக்கிரகமும் உற்சவர் விக்கிரகமும் ஒரே மாதிரி இருப்பது ஒரு தனி சிறப்பு. மேலும் இந்தத் திருக்கோவிலின் பிரதான தெய்வம் அம்பாள்தானாம். இந்த ஊரில் உள்ள பலபேருக்கு அரூபமாகவும், சிலருக்கு நேரிலும்   காட்சி கொடுத்திருக்கிறதாம் இந்த அம்மன், இது மிகவும் சக்திவாய்ந்த அம்மனாம். 5 வருடங்களுக்கு முன்பு வரை 12 வயது பெண் ரூபத்தில் அன்பர்களுக்கு காட்சி கொடுத்திருகிறாளாம் இந்த ஸ்தலத்து அம்மன்.
மூலவர் சன்னதி போகும் வழியில் ஒரு பலிபீடமும். அதன் முன்னே கொடிமரமும். அதற்கு முன்னே நந்தியும் இருக்கிறது. இந்த ஸ்தலத்து சிறப்புகளில் ஒன்று கிழக்கில் இருந்து, மலையில் உற்பத்தியாகி, மேற்கு நோக்கி ஓடும் நம்பியாறு. இது மூலிகை சத்து கொண்டது. இந்த நம்பியாற்றில் தினம் நீராடி இறைவனை தொழுது வந்ததால் சிலருக்கு குஷ்டரோகம் போன்ற வியாதிகளெல்லாம் குணமாகியிருக்கிறதாம்.
இப்பொழுது இந்த திருக்கோவிலில் சீரமைப்பு பணிகள் நடந்து வருவதால் சிலைகள் எல்லாம் மூடி வச்சு இருக்கிறாங்க. மேலும், இது ஒரு பரிகார ஸ்தலம் ஆகும். குடும்பத்தில் அமைதி மகிழ்ச்சி, சீரான செல்வ நிலை, அன்பு நிலைத்திருக்க விளக்கு பூஜை செய்யப்படுகிறது. மேலும், இங்கே பௌர்ணமி தோறும் நடத்தப்படும் விளக்கு பூஜையினால் திருமணத்தடை நீங்கும். புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும் எனவும் நம்பப்படுகிறது. ஏன்னா, அங்கிருத்த ஒரு பெரியவர் சொன்னது இங்கே தொடர்ந்து விளக்கு பூஜையில் கலந்துக் கொண்ட மூன்று பெண்களுக்கு திருமணத்தடை நீங்கி நல்லப்படியாக திருமணம் நடைபெற்றதாம். சிலருக்குத் தடைகள் நீங்கி  புத்திரபாக்கியம் கிடைத்துள்ளதாம்.   
நந்தி பீடத்திற்கு இடப்பாகத்தில் ஒரு மேடை போன்ற அமைப்பு இருக்கு. இது கல்யாண விழாக்களுக்கும், உற்சவர் அலங்காரத்துடன் வீற்றிருக்கவும் பயன்படுத்துகின்றனர். அதில் இருபக்கமும் யாழி சிற்பத்தின் கலைவண்ணத்தில் பார்க்க அழாகாக இருக்கும் இந்த மேடையும் இப்ப புனரமைக்கப்பட்டு வருகிறது. மேலும் ஆடிப்பூரம் அன்று அம்பாளுக்கு வளைகாப்பு சாத்தப்படுகிறது. நவராத்திரி விழாக்களும், சிவராத்திரி பூஜைகளும் இங்கே சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
பிரதோஷகாலப் பூஜைகளும் சிறப்பாக இங்கே நடைப்பெறுகிறது. இங்கே உள்பிரகாரத்தில் கன்னி விநாயகரும், சூரியன், சந்திரன் மற்றும் காசி விஸ்வநாதர் சன்னதிகளும் இருக்கு. தென்முக கடவுளான தட்சிணாமூர்த்திக்கு குருப்பெயர்ச்சி அன்று விசேஷப் பூஜைகள் நடைப்பெறும்.  மேலும் ஒரு சிறப்பு என்னனா சனீஸ்வரனுக்கு தனிச் சன்னதி இருக்கு.  சனிப்ப்பெயர்ச்சி அன்றும் விசேஷ பூஜைகள் நடைப்பெறுகின்றன. சண்டிகேஸ்வரரும் இங்கே அருள் பாலிக்கிறார்.    
இந்த திருக்கோவிலின் தூண்கள் எல்லாம் பனைமரத்தினால் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த ஸ்தலத்து ஆவுடையார் கிழக்கு நோக்கிய திருக்கோலம். எல்லா சிவன் கோவில்களிலும் பெரும்பாலும் சுவாமி சன்னதி கிழக்கு நோக்கி இருந்தால், அம்பாள் சன்னதி தெற்கு நோக்கிய திருக்கோலமாக இருக்கும். ஆனால், இங்கே தாயாரும் சுவாமியும் ஒரேமாதிரி கிழக்கு நோக்கிய திருக்கோலத்தில் வீற்றிருகின்றனர்.  வேறு எந்த கோவில்களிலும் பார்க்க முடியாத ஒரு விசேஷ அமைப்பு.    
உள்பிரகாரத்தில் பைரவர் சுனவாகனத்துடன் அருள்பாலிக்கிறார். இங்கே தேய்பிறை அஷ்டமி நாட்களில் இவருக்கு விசேஷ பூஜைகள் நடத்தப்படுகின்றன. கடன்தொல்லை, வியாபார அபிவிருத்தி, சத்ருநாசம், சகலதோஷ நிவாரண பூஜைகளும் இங்கே நடத்தப்படுகிறது. சித்திரைவிஷு அன்று புஷ்பாஞ்சலி சாத்தப்படுகிறது. இந்த திருக்கோவிலின் ஸ்தல விருட்ஷம் என்னவென்று தெரியவில்லை  அதுபோல தெப்பக்குளமும் இருப்பதாகத் தெரியவில்லை.
இங்கே தூரத்தில் தெரிவது கோவிலின் காவல் தெய்வமாக வீற்றிருக்கும் பூத்தான் சன்னதி. இந்த பூத்தான் சிலை ஒரே மரத்திலான பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்ட திருவுருவம். இவர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என சொல்லப்படுகிறது. கோவிலின் வெளிப்பிரகாரச் சுற்றில் இவரது சன்னதி இருக்கு.
திருக்கோவிலின் வெளிப்புற சுற்றுகளெல்லாம் சிறிய சிறிய முட்களாக இருக்கிறது. பக்தர்கள் வலம் வரும்போது சிறிது சிரமப்படலாம். அதையெல்லாம் இப்ப ஒழுங்குப்படுத்திகிட்டு இருக்காங்க. 
இந்த திருக்கோவிலில் இரண்டு வினாயகமூர்த்திகள் இருக்கின்றன. உள்புறம் இருக்கிறவர் கன்னி விநாயகர். வெளிப்பக்கம் திருக்கோவிலின் நுழைவாயிலின் பக்கம் அருள்பாலிப்பவர் சக்தி விநாயகர்.
திருக்கோவிலின் வாகனங்கள் எல்லாம் உபயோகப்படுத்த முடியாத அளவு சிதிலமடைந்து இருக்கு. புதிய வாகனங்கள் செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
ஒரு வழியா திருக்கோவில் தரிசனத்தை முடித்துவிட்டு வெளிப்புற மண்டபத்தின் பக்கத்தில் இருக்கிறோம். இந்த திருக்கோவில் கொஞ்சம் கொஞ்சமா புனரமைக்கிற இந்த திருக்கோவிலின் பணிகளுக்கு இப்பொழுது நிதி உதவி தேவைப்படுகிறது. சிவனடியார்களும்,  தொண்டுள்ளம் கொண்ட அன்பர்கள் தங்களால் இயன்ற பொருள் உதவியை நேரடியாக சென்று பார்த்து விசாரித்து கொடுத்து உதவலாம். மேலும் விவரங்கள் தேவைபட்டுச்சுன்னா இந்த திருக்கோவிலின் அர்ச்சகர் சுந்தர் சிவம் (95850 45966) என்பரை தொடர்பு கொண்டு தெரிந்துக் கொள்ளலாம்.

மீண்டும் அடுத்த வாரம் வேற புண்ணிய தலத்திலிருந்து சந்திக்கலாம். நன்றி வணக்கம்.

16 comments:

  1. பழமையான ஒரு சிவாலயம் என்று படங்களை பார்க்கும் போதே தெரிந்து கொள்ள முடிகிறது! விரிவான பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ...

      Delete
  2. ஆம் அந்த இடங்களில் எல்லாம் முஸ்லிம் படைஎடுப்புகள் நடந்து நிறைய கோவில்கள் சிதைக்கப்பட்டு இருகின்றன அங்கெ உள்ள தர்கா கூட ஒரு முருகன் கோவில் என சொல்வார்கள் .இது அங்கே உள்ள மக்கள் சொல்ல கேட்டதுண்டு ..

    ReplyDelete
    Replies
    1. பழயகாலங்களில் நடந்த சம்பவங்கள் நமக்கு தெரியாது நாம் எல்லோரும் ஒற்றுமையாக மத நல்லிணக்கத்தோடு இருப்போம் ..

      Delete
  3. அழகான,படங்கள்,அருமையான பதிவுகள். தொடருங்கள் தங்கள் தெய்வத் தொண்டினை. திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புதூர் என்னுமிடத்தில் பாழடைந்த பழங்கோயில் ஒன்றை பஸ்ஸில் செல்லும் போது பார்க்க நேரிட்டது. அதனைப் பற்றியும் தாங்கள் ஆ
    ராயலாம்.

    ReplyDelete
    Replies
    1. விக்ரமசிங்கபுரம் தானே நிச்சயமாக பதிவிடலாம் நம் பதிவின் நோக்கமே எல்லோரும் திருகொவிலகளை வீட்டில் இருந்தே தரிசிக்கவேண்டும் ..வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ ..

      Delete
    2. விக்கிரமசிங்கபுரம் இல்லை. வி.கே.புதூர் சுரண்டை ஊரின் அருகில். ஆலயம் பாழ்பட்டுக்கிடப்பதை சில ஆண்டுகளுக்கு முன்னால் பார்த்திருக்கிறேன். இப்போது எப்படியோ.தெரியவில்லை. பகிர்வுக்கு நன்றி !

      Delete
    3. வாய்ப்பும் இறைவன் அருளும் இருந்தால் நமுடைய பதிவில் விரைவில் பதிவிடலாம் ..உங்கள் தகவலுக்கு நன்றி சகோ ...

      Delete
  4. நீங்களும் புண்ணியம் தேடி ஒவ்வொரு கோயிலா ஏறி இறங்குறீங்க
    நானோ இருந்த இடத்தில் இருந்து கொண்டு அதைத் தான் தேடுகிறேன்
    எனக்கும் கொஞ்சம் கிட்டுற புண்ணியத்தில 10% கொடுங்க தாயி
    ரொம்பப் புண்ணியமாப் போகும் :))அநேகமா புண்ணியம் கிட்டியிருக்க
    வேணும் பகிர்வுகளைப் பார்த்து எடுத்த முடிவு இது ,நான் சொல்வது
    சரி தானே ?...:))

    ReplyDelete
  5. திருவழுதீஸ்வரர் திருக்கோவில் புராதன சிறப்புக்கொண்டது என்பது அறிந்துகொண்டோம்.

    ReplyDelete
  6. உங்களின் பகிர்வுகளின் மூலம் எங்களுக்கும் புண்ணியம் கிடைக்கிறது சகோ... படங்களுடன் விளக்கம் வெகு ஜோர்...

    ReplyDelete
  7. நல்ல படங்கள். பெரும்பாலான கோவில்கள் இப்படி பலத்த சிதிலம் அடைந்து கிடப்பதைப் பார்க்கும்போது மனதில் வலி...

    ReplyDelete
  8. மிக்க நன்றி.

    ReplyDelete
  9. https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Periya_Nayagi

    ReplyDelete
  10. இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருக்கல்யாணம் நடக்கும்,பெரியநாயகி அம்மன் கோபித்துக்கொண்டு பெருமாள்கோவிலில் அதிகாலை வந்துவிடுவாள்,அன்று மாலை திருக்கல்யாணம் நடக்கும் மழையும் நன்கு பெய்யும்,இந்த கோவிலுக்கு நிறைய வயல்கள் சொத்துக்கள் உண்டே !!!


    ReplyDelete