Monday, April 21, 2014

தெய்வம் மனுசன் ரூபத்துல வருமா!? - ஐஞ்சுவை அவியல்

ஏனுங்க மாமா! நம்ம பக்கத்து வீட்டு பார்வதி பாவமுங்க. சாப்ப்பாட்டுக்கே கஷ்டப்படுதுங்க. அந்த தெய்வம் அவ விசயத்துல கண் தொறக்கலயே.

இதப்பாரு புள்ள, சாமி நேருல வந்து உதவி செய்யாது.கடவுள் மறைமுகதான் செய்யும் அதை புரிஞ்சுக்கிட்டு நாமதான் அதை யூஸ் பண்ணிக்கனும்.

புரியலியே மாமா, சாமியாலதான் எல்லாமே முடியுமே, அவ கஷ்டத்தை ஒரு நொடியில மாத்த முடியாதா மாமா?!

இதப் பாரு புள்ள, எதுவுமே ஈசியா கிடைச்சுட்டா அதுக்கு மரியாதை கிடையாது. உன்னை மாதிரிதான் கீரனூர்ல இருந்த முத்து, கடவுள் நேருல வந்து சொன்னாதான் சாப்பிடுவேன்னு அடம் பண்ணிக்கிட்டு, எதிர்க்க சாப்பாடை வச்சுக்கிட்டு  உக்காந்துக்கிட்டான்.

மணி 9 ஆச்சு. ஏங்க சாப்பிட வாங்கன்னு அவன் பொண்டாட்டி போய் கூப்பிட்டா. ஏய், நான் என்னடி சொன்னேன்!!?? சாமி வந்து ஊட்டினாதான்  சாப்பிடுவேன்னு சொன்னேன்லன்னு சீறினான். எக்கேடோ கெட்டுப் போன்னு அவன் பொண்டாட்டி போய்ட்டா. மணி 12 ஆச்சு, டேய், சாமிக்கிட்டலாம் சவால் விடாத , ஒழுங்கா சாப்பிடுன்னு அவனை பெத்தவங்க சொன்னாங்க. சே! ஒரே ரோதனையா போச்சு, அட்வைசுலாம் பண்ணிக்கிட்டுன்னு சாப்பாட்டை எடுத்துக்கிட்டு பெட்ரூம்ல போய் உக்காந்துக்கிட்டான்.

சாயந்தரம், மணி 4 ஆச்சு. பசங்க ஸ்கூலிருந்து வந்து அப்பா சாப்பிடுப்பா. அம்மா செஞ்ச உப்புமா நல்லா இருக்குன்னு குழந்தை அவன் வாய்ல உப்புமா ஊட்ட போச்சு. சீ! போ அந்தாண்டன்னு சொல்லி சாப்பாட்டு மூட்டையைக் கட்டிக்கிட்டு யாருமில்லாத ஏரிக்கரையில போய் உக்காந்துக்கிட்டான். 

ராத்திரி 12 ஆச்சு. அந்த வழியா, கொள்ளையடிச்சுக்கிட்டு  டயர்டா  திருடனுங்க  வந்தானுங்க. அவனுங்களுக்கு செம பசி. சோத்து மூட்டையைப் பார்த்ததும் அவன்கிட்ட பிடுங்கிக்கிட்டு போய் சாப்பிட உக்காந்தாங்க.

அப்போ, டேய் கபாலி,  கொஞ்சம் பொறுமையா இரு. அவன் எதிர்க்க சோத்து மூட்டையை வச்சுக்கிட்டு உக்காந்துக்கிட்டு இருக்கான், ஒரு வேளை நம்மைப் பிடிக்க இந்த நாட்டு ராசா இந்த சாப்பாட்டுல வெசத்தை வெச்சு இருந்தா, நம்ம கதி என்ன ஆகும்!?ன்னு சொல்லி, முத்துவை சாப்பிட வற்புறுத்தினாங்க. அவன் மாட்டேன்னு சொல்லி அடம்பிடிச்சான்.

இதுல ஏதோ சூது இருக்குன்னு முடிவுக்கு வந்த திருடனுங்க முத்துவை அடிச்சு, உதைச்சு சாப்பாட்டை அவன் வாய்ல திணிச்சு சாப்பிட வச்சாங்களாம். முத்துவோட பொண்டாட்டி, பெத்தவங்க, பையன் ரூபத்துல வந்து  சாமி சொல்லிச்சு. அப்பவே அவன் கேட்டிருந்தா முத்து உடம்பு புண்ணாகியிருக்காது.

அதுப்போலதான்  பார்வதி கதைதான். பத்தாவது படிச்சிருக்குறவ எதாவது கைத்தொழில் கத்துக்கிட்டு, கவர்ன்மெண்டுல லோன் வாங்கி பொழச்சுக்காம சாமி நேருல வரும்னு காத்துக்கிட்டு இருந்தால் எப்படி புள்ள? திருவள்ளுவரும் திருக்குறள்ல முயற்சி தன் மெய்வருத்த தெய்வம் கூலி தரும்ன்னு சொல்லியிருக்கார்.

நீங்க சொன்னது சரிதானுங்க மாமோய். நானும் பார்வதிக்கிட்ட நல்லவிதமா எடுத்து சொல்றேனுங்க.
                                   


                                           

அப்புறம் மாமா, என் செல்போன்ல ஒரு மெசேஜ் வந்திருக்கு. படிச்சதும் சிரிச்சுட்டேன் மாமா

அப்படியா, எனக்கும் சொல்லு புள்ள,

ஆங்கிலம் ஒரு அற்புதமான மொழி. அதை நான் பேசாத வரை...,

 வீட்டை சுத்தப்படுத்துவதற்காகவே பண்டிகைகளைக் கண்டுபிடித்துள்ளான் தமிழன்.

வெயில் காலத்திற்கும், பனி காலத்திற்கும் ரெண்டே ரெண்டு வித்தியாசம்தான். எப்படா குளிக்க போறோம்ன்னு நினைச்சா வெயில் காலம். ஏண்டா குளிக்க போறோம்ன்னு நினைச்சா அது பனி காலம்ன்னு மெசேஜ் வந்துச்சு மாமா.

ஹா ஹா நல்லா இருக்குடி.

                                 
                

நான் உன்கிட்ட ஒரு கணக்கு சொல்றேன். தெரியுதான்னு பார்க்கலாம் புள்ள.  

ஹா ஹா மாமா, நம்ம தெருலயே  பால்கணக்கு, வரட்டி கணக்குலாம் வெவரமா நாந்தான் போடுவேனாக்கும்.

அப்பிடியா, யோசிச்சு சொல்லுடி என் செல்லக்குட்டி, ஒருநாள் தன் வூட்டுக்காரனோட  சண்டைப் போட்டுட்டு,  கோபத்தோட  வூட்டை வுட்டு கிளம்புன ராமசாமி பொண்டாட்டி,  தினமும் ஒரு காதம் (10 மைல்) வீதம் நடந்து போறா. ஏழு நாட்களுக்குப் பிறகு அவ வூட்டுக்காரன் அவளைத் தொடர்ந்து, புறப்பட்டு நாளொன்றுக்கு ஒன்றரை காதம் வீதம் நடந்து போறான். அவ்விருவரும் எப்போ மீட் பண்ணுவாங்க ?  இருவரும் நடந்த தூரம் எவ்வளவு ?

ஐ கண்டுபிடிச்சுட்டேன் மாமா! 
இருடி,  ஓட்டு போடுற மாதிரி அவசரப்படாதே! நல்லா யோசிச்சு நிதானமா பதிவோட முடிவுல பதில் சொல்லு. 
சரிங்க மாமா, 
              
               

என் ஃப்ரெண்ட் ராஜியோட சின்ன பொண்ணு இனியா இருக்குல்ல.

ஆமா, அவளுக்கென்ன!?

அவளுக்கொண்ணுமில்ல மாமா. நான் ஒருதரம் அவ வீட்டுக்கு போயிருந்தேன். அப்போ அவ, சின்ன பொண்ணு இனியாக்கு 5 இல்ல 6 வயசிருக்கும். அப்போதான் இந்த ஓட்ஸ்லாம் நமக்கு அறிமுகமான டைம். ஓட்ஸ்லாம் சர்க்கரை நோயாளிக மட்டும்தான் சாப்பிடனும்ன்னு பரவலா ஒரு பேச்சு. வீட்டுல பேசி இருப்பாங்க போல. அதை இனியா கேட்டிருக்கு.

நான் போயிருக்கும்போது ராஜி, காலைல டிஃபனுக்காக ஓட்ஸ் பொங்கல் செஞ்சிருந்தா. அப்போ ராஜியோட பாட்டி, இனியாக்கிட்ட கொஞ்சம் பொங்கல் கொடுத்து, மாடிக்குப் போய் காக்காவுக்கு வெச்சுட்டு வான்னு சொன்னாங்க. இனியாவும் அப்படியே செஞ்சா. ஆனா, அப்புறம் பாட்டியை பார்த்து ஒரு கேள்வியை கேட்டா. நாங்க  எல்லாரும் சிரிச்சுட்டோம்.

அப்படி என்னதான்டி கேட்டா உன் ஃப்ரெண்டோட பொண்ணு!?

ஏன் பாட்டி உனக்குதான் சுகர் அதனால ஓட்ஸ் சாப்புடுறே. காக்காக்கும் சுகரா? அதனால அதுக்கும் ஓட்ஸ் பொங்கல் வைக்குறியான்னு கேட்டா.

ஹா! ஹா! இனியா  அவ அம்மா போல இல்லாம ரொம்ப சுட்டி. 

             
அப்புறம். நம்ம மரத்துல முருங்கக்காய் நிறைய காய்ச்சிருக்கு மாமா. என்ன பண்ணலாம்!?

அக்கம் பக்கத்துல இருக்குறவங்களுக்கு குடுத்தது போக, மிச்சத்தை அப்படியே ஃபிரிட்ஜ்ல வெக்காம, காயோட தோள் எடுத்து சின்ன சின்னதா வெட்டி, பிளாஸ்டிக் கவர்ல போட்டு ஃப்ரிட்ஜ்ல வெச்சா ஒரு வாரம் வரைக்கும் கெடாது.  முருங்கை விதையைக் கூட்டு செய்து சாப்பிடலாம். இது மூளைக்கு நல்ல பலத்தை தரும். முருங்கைக்காய் சாம்பார் எல்லோருக்கும் பிடிக்கும். இதை அடிக்கடி செஞ்சு சாப்பிட்டா ருசியோடு வயித்துப் புண், கண் நோய், மலச்சிக்கல்லாம் போக்கும்.தலைவலி, வாய்புண், ரத்த சீதபேதிக்கும் முருங்கைக்காய் கைக்கண்ட மருந்து.  கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக் காய் கை கண்ட மருந்து.

இப்பதான் முருங்கை சீசனாச்சே! அதனால, முத்தின முருங்கைகளை தூக்கி எறிஞ்சுடாம சூப் வச்சு குழந்தைகளுக்கு கொடு. முருங்கைகள சின்ன, சின்னதா வெட்டி உப்பு போட்டு லேசா வேக வச்சு, தண்ணி வடிச்சு அந்த முருங்கைக்காய்களை வெயிலில் நல்லா காய வச்சு மிக்சில போட்டு பொடிப் பண்ணி வச்சுக்கிட்டா சாம்பார் கொதிச்சு இறக்கும்போது ஒரு டீஸ்பூன் முருங்கைத் தூளைப் போட்டு இறக்கினா சாம்பார் வாசமாவும், ருசியாவும் இருக்கும்.

சரிங்க மாமா. அப்படியே செய்யுறேன். உங்கக்கூட ரொம்ப நேரம் பேசிட்டு இருந்துட்டேன். துணி துவைக்கனும், வீட்டை கூட்டனும் வேலை நிறைய இருக்கு. நான் வாரேன் மாமோய். 

20 comments:

  1. கடவுள் ஊட்டிவிட்ட கதை. குறுஞ்செய்திகள். குறும்பான இனியா, முருங்கைக்காய் மகிமைன்னு எல்லாமே ரசனைக்கு உத்தரவாதம். சூப்பர்மா.

    ReplyDelete
    Replies
    1. தங்கையின் பதிவை ரசித்தமைக்கு நன்றி அண்ணா!

      Delete
  2. ஐஞ்சுவை மிக சுவையாக இருந்தது. முருங்ககாயை கைவிரல் நீட்டதிற்கு வெட்டி ப்ளாஸ்டிக் ஷிப் லாக் பேக்கில் போட்டு Freezer ல் போட்டு வைத்தால் மாதக் கணக்கில் வைத்து வேண்டிய போது சமைச்சு சாப்பிடலாம், நாங்கள் இங்கு உபயோகிப்பது கேரளாவில் இருந்து கவர் பண்ணி வரும் முருங்ககாயைதான் உபயோக்கிறோம். சாம்பார் மிக அருமையாக வரும்

    ReplyDelete
    Replies
    1. இந்த ஐடியாவும் இனி உபயோகிச்சுப் பார்க்குறேன். டிப்ஸ்க்கு நன்றிங்கோ!

      Delete
  3. கதை, முருங்கைக்காய் குறிப்பு இனியாவின் அறிவுக் கேள்வி அனைத்தும் அருமை..நன்றி ராஜி. இரண்டு நாள் முன்னாடிதான் அப்பா முருங்கைக்காய் நிறைய குடுத்துட்டுப் போனாங்க...நீங்க சொன்னதெல்லாம் செஞ்சுர வேண்டியதுதான்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி கிரேஸ்

      Delete
  4. //இனியா அவ அம்மா போல இல்லாம ரொம்ப சுட்டி. //

    உண்மைகளை படிக்கும் போது கிடைக்கிற திருப்தியே தனிதான்.. இல்ல அக்கா.. ;-)

    ReplyDelete
    Replies
    1. அதுலயும் ராஜி அக்கா பத்தின உண்மைன்னா இன்னும் ரொம்பவே திருப்தி. அப்படித்தானே ஆவி!!

      Delete
  5. பயனுள்ள முருங்கைக்காய் தகவல்களுடன் மெசேஜ்களும் மிகவும் பிடித்தது...

    // நல்லா யோசிச்சு நிதானமா பதிவோட முடிவுல பதில் சொல்லு.
    சரிங்க மாமா... //

    எங்கே...?

    இதோ விடை :

    இருவரும் "மீட்" பண்ணும் நாள் = 14 வது நாள்
    இருவரும் நடந்த தூரம் = 21 காதங்கள் அல்லது 210 மைல்

    ReplyDelete
    Replies
    1. டிடி அண்ணாவைத் தவிர யாருமே விடையை யோசிக்கலைப் போல!!

      Delete
    2. ரெண்டு பெரும் எதிரெதிர் திசையில் போய் பாக்கவே இல்லை.
      இப்டி நெனச்சு நான் அதுக்கப்புறம் கணக்குப் போடலை.. :)

      Delete
  6. அவியல் எப்போதுமே எனக்குப் பிடிக்கும்!

    ReplyDelete
    Replies
    1. அவியல் உடம்புக்கும் ஒண்ணும் பண்ணாது ஐயா.

      Delete
  7. கதையெல்லாம் நல்லா இருக்கு சகோ.
    பணி காலத்துக்கும், வெயில் காலத்துக்கும் வித்தியாசம் சூப்பர்.
    அப்புறம் நான் கணக்குல கொஞ்சம் வீக்.

    ReplyDelete
    Replies
    1. வேணுமின்னா தனபாலன் அண்ணாக்கிட்ட எல்லோரும் டியூசன் போகலாமா!?

      Delete
  8. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    www.Nikandu.com
    நிகண்டு.காம்

    ReplyDelete
  9. இன்றைய ஐஞ்சுவை அவியல் மிகப்பிரமாதம்! இனியாவின் அந்த குறும்பு ரசிக்க வைத்தது! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!

      Delete
  10. நல்ல அவியல். கடவுள் கதை மிக நன்று. முருங்கைக்காய் குறிப்பு நல்லது...

    ஆமா ஒரு டவுட்: “காயோட தோள் எடுத்து” அப்படின்னு எழுதி இருக்கே.. முருங்கைக்காய்கு தோள் எங்கே இருக்கும்னு சொல்லிட்டீங்கன்னா உடைச்சு எடுத்துடுவோம் :)

    சுவையான அவியல் பகிர்ந்ததற்கு நன்றி.

    ReplyDelete
  11. அண்ணிக்க்கிட்ட கேளுங்கண்ணா! முருங்கைக்காய்க்கு தோல் எங்க இருக்கு!? தோள் எப்படி உரிக்குறதுன்னு சொல்லித்தருவாங்க.

    ReplyDelete