Wednesday, April 02, 2014

செஞ்சிக்கோட்டையில் இதுவரைப் பார்த்திடாத சில இடங்கள் -மௌன சாட்சிகள்

இந்த செஞ்சியை ஆண்ட மன்னர்களும், அந்நகரம் சந்தித்த போர்கள், ராஜாதேசிங்குவின் வீரமரணம் வரை பார்த்துக்கொண்டே இப்ப மலை உச்சிக்கு வந்துட்டோம்!!
வாங்க! இந்த படியேறித்தான் உச்சியில் இருக்கிற கோட்டைக்கு செல்ல முடியும். இந்தப் படிக்குப் பக்கத்திலேயே ஒரு சுழலும் பீரங்கி மேடை இருக்கு. இந்தக் கோட்டையில் அடுக்கடுக்கான பாதுக்கப்பு அரண்களும், சுழலும் பீரங்கி மேடையும், காவலர் கோபுரமும் நிறைய அமைக்கப்பட்டு இருக்கு. வாங்க! 

இந்தப் படிக்கட்டையும், கோட்டையையும் இணைப்பது படத்தில் தெரியும் இணைப்பு பாலம்தான்.  இந்தப் பாலத்தோட பேரு இழுமுனை பாலம்னு சொல்றாங்க. இந்த இழுமுனை பாலத்தின் மூலம்தான் இயற்கையான அமைப்பில் செங்குத்தான நிலையில் அமைந்த ராஜகிரி கோட்டைக்குள் செல்லமுடியுமாம். போர்க்காலங்களில் இந்த இழுவைபாலம் இழுக்கப்பட்டு கோட்டைக்கான தொடர்பு துண்டிக்கப்பட்டு எதிரிகள் நுழையாதவண்ணம் பாதுகாக்கப்படுமாம். இந்த பாலம் 20 அடி நீளமும் 6 அடி அகலமும் கொண்டதா இருக்கு.  இப்ப எந்தப் போர்களும் இல்லாத நிலையில் பார்வையாளர்கள் செல்வதற்காக கைப்பிடியுடன் கூடிய பலகைகளுடன் நிலையான பாலம் அமைச்சு இருக்காங்க.

இதுதான் படியேறி சென்றதும் வரும் நுழைவாயில்.  முழுவதும் கற்களால் கட்டப்பட்டு ரொம்ப பாதுகாப்பா இருக்கு. உட்பக்கம் இந்திய கட்டட கலை அமைப்பில் தூண்களுடன் அழகாக அமைந்து இருக்கு. இங்கேயும் ஒரு தானியக் களஞ்சியம் சுமார் 127 அடி உயரமும், 94 அடி அகலத்தில் பெரியாதாக அமைக்கப்பட்டு கோட்டையுனுள் இருப்பவர்களுக்கு உணவு தட்டுப்பாடு இல்லாத அமைப்பில் கட்டப்பட்டு இருக்கு.
  
இங்க தெரிவது ஒரு கருவூலம். பக்கத்தில் ஒரு மண்டபமும் இருக்கு. இதற்கு பக்கத்தில் அழிவுற்ற நிலையில் சில மண்டபங்களும், கோவில்கள் போன்ற அமைப்புடைய சிதைந்த நிலையில் இருக்கும் கட்டிடங்களும் இருக்கு .

 அடுத்து ஒரு கல்லினால்  ஆன பெரிய மண்டபம் இருக்கு. அதன் உள்பக்கம் பெரிய தூண்களுடன் ரொம்ப உறுதியா கட்டப்பட்டு இருக்கு. அதன் நுழைவாயில் இருபக்கமும் குறுகலான அமைப்புடன் இருக்கு. அதைப்பத்தின விவரங்கள் தெரியவில்லை. கலைஅரங்கமோ இல்ல தர்பர்மண்டபமோ இல்ல வேற எதற்காகப் பயன்படுத்தப்பட்டதுன்னு  தெரியலை.

இந்தக் கோட்டை மலை உச்சியில் சுமார் 800 அடி உயரத்தில் இருக்கு இந்த அரங்கநாதர் ஆலயம். இது நாயக்கர் காலத்துக் கட்டிட அமைப்பை சர்ந்ததுன்னு சொல்றாங்க. அவர்களது கட்டிட கலைதான் அடிப்பக்கம் கல்தூண்களும், மேல்பக்கம் செங்கற்களால் கட்டப்பட்ட அமைப்பு கொண்டது.  இந்த அரங்கநாதர் கோவில் கருவறையினுள் சிலை இல்லாமல் வெறுமனே கட்டிடம் மாத்திரம் தான் இருக்கு.  எல்லாம் சிதைந்து காணப்படுகிறது. அந்தக்காலத்தில் செஞ்சியை ஆண்ட மன்னர்கள் இந்த அரங்கநாதரை வணங்கியதாகக் கூறப்படுகிறது. சுற்றிலும் சிறிய தேவதைகளுக்கான மண்டபங்களும் இருக்கு. அவைலாம்கூட சிதைந்த நிலையில் இருக்கு.

அரங்கநாதர் சன்னதிக்கு நேர் எதிரே இருப்பது மணிக்கூண்டு. இதன் அடிப்பகுதி சதுரமாகவும், மேற்பகுதி வட்டமாகவும் முற்றிலும் கருங்கற்களால் கட்டப்பட்ட கட்டிடமாகும்.  இந்த மணிக்கூண்டின் உச்சியில் ஒரு பெரிய வெண்கல மணி தொங்கவிடப்பட்டு இருந்ததாம். அதிலிருந்து வரும் ஓசை பக்கத்து கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் மணி அறிவிப்பு ஒலியாக செயல்பட்டதாம். இங்கிருந்த மணியை பிரஞ்சுகாரர்கள் புதுச்சேரிக்கு கொண்டு சென்று விட்டனராம். செஞ்சிக் கோட்டையை சிதைத்ததில் பிரஞ்சுக்காரர்களும் முக்கிய பங்கு வகித்துள்ளனர். மேலும், இங்க ஒரு பீரங்கி மண்டபமும் வேறு சில சிதைந்த மண்டபங்களும் நிறைய இருக்கு. எல்லவற்றையும் பார்த்துக்கொண்டே நாம உச்சி கோட்டையிலிருந்து கீழே இறங்கலாம். ஏன்னா 4 மணிக்குள் இங்கிருந்து திரும்பி கீழே சென்றுவிடவேண்டும்.  

படி இறங்கி கீழே வரும் வழியில் நிறைய காவல் கோபுரங்கள் இருக்கு. அதைத்தாண்டி பால அரங்கநாதர் கோவிலுக்கு பக்கத்தில் ஒரு சிறிய படிக்கட்டு தெரிந்தது. நாம தான் டிஸ்கவரி சேனல் அடிக்கடி பார்க்கிறோமே!! அதனால அதுல இறங்கி பார்க்கலாம்னு முடிவு பண்ணி கீழே இறங்க ஒரு ஆவல் வந்துட்டது. ஒரு எச்சரிக்கை தனியாக யாரும் இதனுள் இறங்கி செல்லவேண்டாம். சரி, வாங்க! நாம கூட்டமா போகலாம்!!

அதோ தெரிகிற படிக்கட்டு வழியா இறங்கி போகலாம்...., இந்த இடத்தில் நீரோட்டம் இருக்கிறது போலும்.  சின்ன குகையும் இருக்கு. உள்ளே பார்த்தோம்னா ஏசி போட்டதுப் போல இருக்கு. ஆனா, விஷ ஜந்துக்கள் கூட இருக்கலாம். இதுல ஒண்ணுமே இல்ல. வாங்க மேலே ஏறி போய்டலாம் ஒருவேளை இதுபற்றின வரலாற்று குறிப்புகள் கூட இருக்கலாம். நமக்குதான் தெரிஞ்சுக்க வாய்ப்பில்லை. இந்த இடத்தை கூட இங்கே வரவங்க விட்டு வைக்கல. அதையும் அசுத்தம் பண்ணி வச்சு இருக்காங்க அபிஷ்டுகள்.

ஒரு வழியா மலை மேலே இருக்கிற ராஜகிரி கோட்டையிலிருந்து கீழே இறங்கி வந்துவிட்டோம். நாம மலையேற போகும் போது பார்க்காம விடுபட்ட சில இடங்களை இப்ப பார்க்கபோறோம்.  இது குதிரைலாயம் இது கல்யானமஹாலுக்கு பக்கத்தில இருக்கு அதிலிருந்து நாம நேரே போனா முற்றிலும் அழிஞ்ச நிலையில் இருப்பது வேணுகோபால் சன்னதி.

இதுதான் முற்றிலுமாக சிதைந்து பாழடைந்த வேணுகோபால் சன்னதி. இந்தக் கோவிலின் சிலைகள் எல்லாம் முற்றிலுமாக சிதைந்து இருக்கு. இந்தக் கோவிலின் தெற்குப் பக்க பிரம்மாண்டமான நுழைவாயிலைப் பார்க்கும் போது இது எவ்வளவு பெரியக் கோவிலாக இருந்திருக்கும் என நம்மால கற்பனை பண்ணி பார்த்துத் தெரிஞ்சுக்கமுடியும்.  கோவிலினுள் உடைந்த சிலைகளை எடுத்து வைத்துள்ளனர். இந்தத் தெற்குப் புற நுழைவாயில் வழியாக கோட்டையின் தெற்கு பக்கம் போய்டலாம். இந்த வாசல் எப்பொழுதும் மூடியே வைத்து இருக்கிறாங்க. இந்த வாசலை திருச்சிராப்பள்ளி வாசல் என்றும் அழைக்கப்படுகிறது.  

நாம இப்ப கோட்டையை விட்டு வெளியே வந்துவிட்டோம். இப்போ ராஜா தேசிங்கு உடல் எரியூட்டப்பட்ட மேடையை பார்க்கப் போலாம். வாங்க!!அதுக்கு முன்னாடி இங்கே ஒரு மசூதி இருக்கு. இது ஜும்மா மசூதி போல அமைந்து இருக்குறதா சொல்றாங்க. ஆற்காடு நவாப் சததுல்லாகான் ஆட்சிப் பொறுப்பை தேசிங்குராஜனிடம் இருந்து பறித்தவுடன் செட்டிக்குளம் ஆஞ்சேநேயர் கோவிலுக்கு செல்லும் வழியில் சுண்ணாம்பு கலவை கொண்டு செங்கற்களால் ஆன ஒரு மசூதியை கட்டி இருக்கிறார்.  அழகிய பூவேலைப்பாடுகளுடன் செய்யப்பட்ட இந்த மசூதி பாழடைந்து இருக்கு. இதையடுத்து ஒரு சதுர வடிவ வழிபடும் தர்காவும் கட்டப்பட்டுள்ளது. இந்த தர்காவின் எதிரே இறந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டு நிறைய சமாதிகள் இருக்கு. அதில் ஒரு சிறிய குழந்தையின் சமாதிபோல ஒன்று இருக்கு. ஆன இந்த சாம்திகளெல்லாம் யாருடையவை என தெரியவில்லை. சுத்திலும் சமாதிகளாய் இருக்கவே கொஞ்சம் பயமா இருக்கு. அதனால இந்த இடத்தைவிட்டு செல்லலாம்.. 
    
இப்ப நாமப் பார்க்கப் போறது இந்தக் கோட்டையின் மிகவும் சிறப்பு வாய்ந்த பகுதி செட்டிக்குளத்தின் கரையில் வடக்கு பக்கம் அமைந்து இருக்கும் இந்த மேடைதான் தேசிங்குராஜன் உடல் எரியூட்ட பட்ட இடம். தேசிங்கு ராஜாவின் வரலாறு தெரியாதவங்க இங்க போய் படிச்சுப் பார்த்துட்டு வாங்க. இந்த இடத்தை இப்பொழுது கற்களால் ஆன மேடைக்கொண்டு புனரமைத்து இருக்கிறாங்க. மேலும், இந்த இடத்தில்தான் ராஜாதேசிங்குவின் மனைவி ராணிபாய் உயிருடன் உடன்கட்டை ஏறிய இடம் என்றும் சொல்லப்படுகிறது. 17 நூற்றாண்டில் இந்த இடம் ஆள், சேனை, அம்பாரிகளாக இருந்திருக்கும் இன்று எல்லா இடமும் கவனிப்பாரறற்று அமைதியாக இருக்கிறது.

அடுத்து நாமப் பார்க்கப் போறது ஏழு கன்னிமார் கோவில். செஞ்சிக்கு இந்த பெயர் வர முக்கிய காரணமா இருந்தது இந்த ஏழு கன்னிமார் கோவில் என சொல்லப்படுகிறது. இதை முதல் பதிவில் விளக்கமாக பார்த்துவிட்டோம். பார்க்கதவங்க இங்க போய் பார்த்து விட்டு வாங்க ...

இந்தக் கோவில் தெற்கு புற வாசலுக்கு பக்கத்தில் இருக்கிறது. இதில் சிறிய சிறிய ஏழு கோவில்கள் இருக்கின்றன. இவையெல்லாம் அடிப்பாகம் கல்லினாலும், மேல்பாகம் செங்கற்கள்லாலும் கட்டப்பட்டு இருக்கிறது.  எல்லாமே சிதைந்த நிலையில் இருக்கின்றது. இங்கே நடுகல் போல கல்லினால் ஆன ஒரு தூண் நடப்பட்டு இருக்கு. அதன் வரலாற்று பின்னணி நமக்கு தெரியவில்லை.
  
அடுத்துப் பார்க்கப் போறது செட்டிக்குளம். இது ராஜாதேசிங்கு தகனம் செய்யப்பட்ட இடத்தில் இருக்கிறது. மேலும், இது வழியாகத்தான் சர்க்கரை குளத்திற்கு செல்ல முடியும். இந்த வழியாக சென்றால் அனுமன் கோவிலுக்கும் செல்லலாம். இந்த குளம் மராட்டியர் ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்டதாகவும், பின்னர் ராமசெட்டி என்பவர் இந்தக் குளத்திற்கு அழகிய படிக்கட்டுகளும், கருங்கர்க்களால் ஆன படிக்கட்டுகளும், தண்ணீர் வெளியேற சிறப்பான கட்டமைப்புகளுடன் கிழக்கு பக்கம் மதகுகளும் கொண்ட அமைப்பில் சிறப்பாக கட்டினாராம்.  அதனால அவருடையப் பெயரைக் கொண்டே செட்டிகுளம்னு அழைக்கப்படுவதாக சொல்கிறாங்க. இங்க ஒரு கோவிலும் இருக்கு. இப்பவும் இங்கிருக்கிற மக்களால் இந்த குளம் பயன்பாட்டில் இருக்கு ..

அனுமன் கோவிலுக்கு போற வழியில வலப்பக்கம் இருக்கு இந்த குளம். இது இயற்கை அமைப்பு கொண்டதாக அமைக்கபட்டதுன்னு சொல்கிறாங்க பள்ளமான இடத்தில அமைந்துள்ள இந்த குளம் மலைமேல் இருந்து வரும் தண்ணீரை சேமித்துக் கொள்வதற்காகவே கட்டப்பட்டதுன்னு சொல்றாங்க கோட்டையினுள் படிக்கிற பிள்ளைகளும், கல்லூரிக்கு செல்லாமல் ஜோடியாகவும் காதல்ங்கிற பெயரில் ஜோடி ஜோடியாக இருந்ததை பார்த்து வெறுத்துப் போய் இருந்த நமக்கு இப்பொழுது இந்த சர்க்கரைகுளத்து கரையில் "காதாலாய் கசிந்துருகி"ங்கிற பாடல்வரிகளுக்கு ஏற்ப அமைதியா நம்மை சட்டை செய்யாம இருக்கிற ஒரு ஜோடி குரங்கு அதன் பக்கத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் கூடவே ஒரு நம் மூதாதையர் அவங்களையெல்லாம் தொந்திரவு பண்ணாம நாம இந்த குளத்துக்கரையில இருக்கிற ஆஞ்சேநேயர் கோவிலுக்கு செல்லலாம் .

அதுக்கு முன்னாடி இங்கே சர்க்கரை குளத்தின் அந்தப்பக்கக் கரையில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு மேற்புறம் ஒரு உருண்டை வடிவில் கிணறு போன்ற அமைப்பில் தெரிவது தான் மரணகிணறு. அதன் ஒரு பகுதி பாறை இடிந்து பக்கத்திலேயே விழுந்து இருக்கு. இந்த கிணறு பற்றி சொல்லனும்னா இயற்கையில் அமைந்த இந்த பாறையில் கிணறு அமைத்துள்ளனர். இதன் வெளிப்புற சுற்றளவு சுமார் 30 மீட்டரும், உள்புற சுற்றளவு சுமார் 12 மீட்டர் முழுவதும் செங்கற்களால் கட்டப்பட்ட இந்தக்கிணறு வட்டவடிவில் யாரும்  ஏறிப்பார்க்கமுடியாத அமைப்பிலும், உட்பகுதி வெற்றிடமாகவும், ஆழமானதாகவும் அமைக்கப்பட்டு இருக்கு. அந்தக் காலத்தில் பெரிய தவறுகளை செய்பவர்கள் இந்தக் கிணற்றில் தள்ளப்பட்டு விடுவார்களாம். அதன்பிறகு அவர்கள் மேலே ஏறிவரமுடியாமலும்,  பசி, வெயில், சூடு, தாகத்திலும் இறந்து விடுவார்கள் என சொல்லப்படுகிறது ..கேட்கவே பயங்கரமா இருக்குல்ல!!

இதுதான் ஆஞ்சேநேயர் கோவில். இங்க நிறைய குரங்குகள் இருக்கு. இந்த இடம் இரண்டு கிணறுகளும் முடியும் இடத்தில அமைந்துள்ளது. அந்தக் கோவிலின் ஆஞ்சேநேயர் இயற்கையாக அமைந்த ஒருபாறையில் சுமார் 2 மீட்டர் அகலமும், சுமார் 3 மீட்டர் உயரத்திலும் செதுக்கப்பட்டுள்ளது.  இந்தக் கோவில் தூண்கள் கொண்ட மண்டபமாக இருந்திருக்கிறது. அது எல்லாம் போர்களில் முஸ்லிம் படைகளால் சிதைக்கபட்டிருக்கலாம். இல்ல இந்தக் கோவிலின் கற்கள் எல்லாம் பெயர்த்து வேறு இடங்களுக்கு கொண்டு சென்றிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். ஏன்னா இதன் பக்கத்தில் சில இடங்களில் உத்திரகற்கள் சிதைந்து பக்கத்தில் சிதறி காணபப்டுகின்றன. இப்பொழுது வெறும் தூண்கள் மட்டுமே இருக்கு. இந்த ஆஞ்சேநேயர் சக்தி உள்ளவர் என்றும், இங்க நிறையபேர் தினமும் வந்து வழிப்பட்டு செல்றாங்க. இப்பவும் இங்குள்ள மக்களால் இந்தக் கோவில் தினசரி பூஜை வழிபாடு செய்யப்படுகிற கோவிலாக இருக்கு.

இங்கத் தெரிவது ஒரு காளிக் கோவில். இந்த இடம் சர்க்கரைக் குளத்தின் வடக்குப் பக்கத்தில் இருக்கிறது. இங்க நிறைய குரங்குகள் இருக்கின்றன. இங்கயும் வழிபாடு நடப்பது போல் தெரிகிறது. இப்ப நாம கோட்டையினுள்ளும், வெளியேயும்ன்னு எல்லா இடங்களையும் பார்த்துவிட்டோம். இனி, நாம் போகிற வழியில் ஒரு சிவன் கோவிலும் அதை அடுத்துள்ள அம்மன் கோவிலையும் அடுத்தவார பதிவில் பார்க்கலாம்...,  

21 comments:

 1. நீங்கள் தொகுத்த தகவல்கள் அனைத்தும் மிகவும் பயனுள்ளவை இந்த செஞ்சி கோட்டைக்கு செல்பவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும் ..படங்கள் எல்லாம் கிறிஸ்டல் கிளியர் மிகவும் அர்மையான தொகுப்பு ..தொடருங்கள் ...

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கு நன்றி அமிர்தா...

   Delete
 2. செஞ்சிக்கோட்டை பற்றிய வண்ணப் படங்களுடன் நிறைய தகவல்கள். நீங்கள் எடுத்த புகைப்படங்கள் மற்றும் எழுதிய விளக்கங்களைத் தொகுத்து சுற்றுலா கையேடு நூல் ஒன்றை வெளியிடலாம். பாராட்டுக்கள் ( கொஞ்ச நாட்களாக என்னால் நீண்டநேரம் டைப் செய்ய இய்லாத சூழ்நிலை. பதிவுகளை வாசித்தல் மட்டுமே. எனவே நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்துள்ளேன். மன்னிக்கவும்)

  ReplyDelete
  Replies
  1. புத்தகமாக வெளியிட கொஞ்சம் கால அவகாசம் வேண்டும் ..உங்கள் வருகைக்கு நன்றி சகோ ..

   Delete
 3. அருமையான பகிர்வு. படங்களும், தகவல்களும் இந்த இடத்தை பார்க்கும் ஆவலை உண்டு பண்ணியது..

  ReplyDelete
  Replies
  1. உங்களால் இவ்வுளவு தூரம் வரமுடியாது என்பதால்தான் நான் பர்ர்த்து பார்த்து படங்கள் குறிப்புகள் எடுத்து இங்கே பதிவுகளாக இடுகிறேன் ஆனா கைடு பீஸ் கொடுத்திடனும் ...

   Delete
 4. படங்களைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் சகோதரி... சிறப்பான தகவல்கள் + விளக்கங்களுக்கு நன்றி...

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி அண்ணா ...

   Delete
 5. அருமையான கட்டுரை! படங்களும் பேசுகின்றன...

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஜனா இது கடந்த கால வரலாறை பேசும் படங்கள்

   Delete
 6. செஞ்சிக்கே சென்று பார்த்து வந்தது போல ஒர் நினைவு! அருமையான பகிர்வு! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 7. செஞ்சிக்கே சென்று பார்த்து வந்தது போல ஒர் நினைவு! அருமையான பகிர்வு! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பதிவை ரசித்து கருத்திட்டமைக்கும் நன்றி சகோ!

   Delete
 8. நேரிலேயே சென்று பார்த்திருந்தால் கூட இந்த அளவுக்கு நான் ரசித்திருக்கமாட்டேன். படங்களுடன் பதிவு அருமை.

  ReplyDelete
 9. வணக்கம் சகோதரி
  படத்தோடு பகிர்ந்து எங்களை செஞ்சிக்கு அழைத்துச் சென்றமைக்கு நன்றி. படத்தொகுப்புகள் மற்றும் உங்கள் குறிப்புகள் இரண்டும் பயனுள்ள தகவல்கள். பகிர்வுக்கு நன்றீங்க சகோதரி..

  ReplyDelete
 10. அழகான படங்கள். நானும் இங்கே (1984)போயிருக்கேன். இப்ப கொஞ்சம் கூட எதுவும் நினைவில் இல்லை. பொட்டவெயில் என்பார்களே? இந்தப் பகுதியில் சுற்றி வந்த போது அப்படித்தான் இருந்தது.

  ReplyDelete
 11. படங்கள் அனைத்தும் பளிச்.... அந்தப் பக்கம் வந்தா கூட்டிட்டுப் போவீங்க தானே?

  ReplyDelete
 12. எனது சொந்த ஊரான செஞ்சியில் உள்ள கோட்டையை பற்றி இப்படி விலாவாரியாக ஒருவர் இணையத்தில் எழுதியிருப்பதை படிக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி....

  ReplyDelete
 13. நல்ல பயணக் கட்டுரை. எத்தனை தகவல்கள்..... பாராட்டுகள்.

  ReplyDelete
 14. Yan Manam nazhdhu ponan endrum enendrum ungal podhu pani thodaratum,nandri

  ReplyDelete
 15. நான் இதுவரை செஞ்சிப்பக்கமே போனதில்லைப்பா.உங்கள் பயணத் தகவல்கள் , கட்டாயம் போகணும் என்ற ஆசையைத் துண்டிவிட்டுக்கிட்டு இருக்கு.

  படங்கள் அருமை ராஜி.

  தகவல்களுக்கு நன்றிப்பா.

  ReplyDelete