Tuesday, February 04, 2020

காயம் ஆற்றும் அவரைக்காய்+துவரம்பருப்பு பொரியல் -கிச்சன் கார்னர்

அவரைக்காய் வீட்டில் காய்த்து தொங்குது. பிஞ்சு அவரைக்காய்க்கு புண்களை ஆற்றும் சக்தி இருக்குன்னு அம்மாக்கிட்ட யாரோ சொன்னாலும் சொன்னாங்க.  இட்லி சாம்பார்ல அவரைக்காய், பொரியலாய், அவியலாய், கூட்டாய்,சூப்பாய்..... அவரைக்காய் பல ரூபமெடுக்குது.  அட! நைட் குருமாவிலும் அவரைக்காய்ன்னா அம்மாவோட அக்கறையை!! என்ன சொல்ல?!. நல்லவேளையா காபில அவரைக்காயை கலந்து கொடுக்காம விட்டுச்சேன்னு சந்தோசப்பட்டுக்க வேண்டியதுதான். 

புண்களை ஆற்றும் திறன்கொண்ட அவரைக்காய் பொரியல் செய்யுறது எப்படின்னு பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்..
பிஞ்சு அவரைக்காய்-1/4 கிலோ
பெரிய வெங்காயம்- 1
பூண்டு பற்கள்
காய்ந்த மிளகாய்- காரத்திற்கேற்ப
துவரம்பருப்பு-1/2 ஆழாக்கு
தேங்காய் துருவல் - கொஞ்சம்
கடுகு
கடலைப்பருப்பு’
உளுத்தம்பருப்பு
எண்ணெய்
உப்பு

அவரைக்காயை கழுவி பொடியா நறுக்கிக்கனும்,, துவரம்பருப்பை அதிகம் குழையாம வேக வச்சு எடுத்துக்கனும்..

அடுப்பில் வாணலியை வச்சு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடிக்க விடனும். அடுத்து கடலைப்பருப்பு+உளுத்தம்பருப்பு போட்டு சிவக்க விடனும்.
காரத்திற்கேற்ப காய்ந்த மிளகாயை கிள்ளி போட்டு சிவக்க விடனும்..
பூண்டு பற்களை போட்டு வதக்கனும். பூண்டை நசுக்கி போட்டால் நல்லது.
வெங்காயம் போட்டு வதக்கனும்..
கறிவேப்பிலை கொத்தமல்லி போடனும்..
பொடியா நறுக்கின அவரைக்காயை கொட்டி வதக்கனும்..
தேவையான அளவு உப்பு சேர்த்து, தேவையான அளவுக்கு தண்ணி சேர்த்து வேக விடனும்..
காய் வெந்த, தண்ணி சுண்டினதும் வெந்த துவரம்பருப்பை சேர்த்துக்கனும்
தேங்காய் துருவல் சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கிடனும்,...
சுவையான அவரைக்காய் பொரியல் ரெடி..
செஞ்சு சாப்பிட்டு பார்த்து சொல்லுங்க..

நன்றியுடன்,
ராஜி

Monday, February 03, 2020

பொண்ணுங்க புருசனை எப்படிலாம் கூப்ப்பிடுவாங்க?! - ஐஞ்சுவை அவியல்

என்ன புள்ள!! நான் வீட்டுக்கு வருவதுக்கூட தெரியாம போன்ல யார்கிட்ட அரட்டை அடிச்சுக்கிட்டு இருக்கே?!
அரட்டைலாம் அடிக்கல. ராஜிக்கு உடம்புக்கு முடியலியே! அவளைதான் விசாரிச்சுக்கிட்டு இருந்தேன்.

உன் பிரண்டுக்கு இப்ப கால் எப்படி இருக்காம்?1
குணமாகிட்டே வர்றா. ஆனாலும் பழையபடி நடக்க இன்னும் 1 மாசத்துக்கு ஆகுமாம். அவ கால் எலும்பு முறிவுக்காக ஹாஸ்பிட்டல் போகும்போது, அங்க 45 நாட்களே ஆன பெண்குழந்தையை சிகிச்சைக்காக கொண்டு வந்திருக்காங்க. குழந்தைக்கு தடுப்பூசி போட போகும்போது,  குழந்தையின் தாயும், தகப்பனும் குழந்தையோடு டூவீலர்ல  போய் இருக்காங்க. ஹாஸ்பிட்டலில் இருந்து  வரும்போது தாயின் கையிலிருந்து  குழந்தை நழுவி விழுந்திட்டிருக்கு. குழந்தையின் கால் உடஞ்சு போச்சுதாம். குழந்தையி பிடிக்கப்போன அம்மாவும் கீழ விழுந்து முகத்துல அடிபட்டு பல்லுலாம் கொட்டி போயிருக்கு.

குழந்தையை   இப்படி அஜாக்கிரதையாகவா கொண்டு போவாங்க?! ஒருவேளை  குழந்தையோட அம்மா தூங்கிடுச்சோ! 


அதுலாம் இல்ல மாமா! இப்ப குழந்தைகளுக்குன்னு ஒரு பேக் மாதிரி  ஸ்லீப்பிங் பேக் வந்திருக்கே! அதுல வச்சு கொண்டு போய் இருக்காங்க.அதிலிருந்து நழுவி  கீழ விழுந்திருக்கு. இந்தமாதிரி பேக்ல இருந்து விழுந்த குழந்தை இறந்தே போச்சுன்னு கேள்விப்பட்டிருக்கேன். ஆனா, இப்பதான் அனுபவப்பூர்வமா பார்த்தேன்.

குளிர்பிரதேச நாடுகளில் குழந்தைகளை குளிரிலிருந்து காப்பாத்த இந்த மாதிரி பைகளை தச்சு குழந்தைகளை இதில் வச்சுப்பாங்க புள்ள. ஆனா, உஷ்ணப்பிரதேசமான நம்மூருக்கு இது தேவையான்னு நம்மாட்கள் யோசிப்பதே இல்ல. இதனால் குழந்தைக்கு உடல் சூடு, சருமக்கோளாறு என பலவித பிரச்சனைகள் வருவதோடு இதுமாதிரியான விபத்துகளும் நடக்கும்ன்னு இனியாவது நம்ம பொண்ணுங்க யோசிக்கனும்.

ஆமா மாமா! ராஜியோட பையனும் இதேதான் அந்தம்மாக்கிட்ட சொல்லிட்டு வந்திருக்கான். ஆண்டி! நான் பிசியோதெரபி டாக்டர்ங்குற முறையில் என் கண்ணீல் படும்போது இந்தமாதிரியான பேக்கை தவிர்க்க சொல்வேன். இனிமே எனக்காக இந்த பேக்கை பயன்படுத்தாதீங்க.ன்னு சொல்லி குழந்தைக்கு தேவையான  பயிற்சிகளை சொல்லிக்கொடுத்து  பயந்துபோய் இருந்த பெத்தவங்களுக்கு ஆறுதலும் சொல்லி வந்திருக்கான். 

ம்ம் நல்ல விசயம்தான் செஞ்சிருக்கான். இதேமாதிரிதான் தேவையில்லாத இன்னொரு விசயத்தை நம்ப பொண்ணுங்க செய்யுது. 

அது என்ன மாமா!?

அழகா இருக்க புருவம் திருத்துறேன்னு பார்லர் போய் த்ரெட்டிங்க்ன்னு செஞ்சு தங்களோட ஆயுளை குறைச்சுக்குறாங்கன்னு..

ஐயோ! இதென்ன மாமா புது கதையா இருக்கு?!

கதைலாம் இல்ல.  புருவமுடிகள்தான் பிராணன் இயங்கும் இடங்கள்ன்னு வைத்திய சாஸ்திரங்கள் சொல்லுது.  மூப்படைஞ்சு இறப்பு நெருங்கும்போது  புருவமுடிகளை தொடும்போதே கையோடு வந்திடும்.  இந்த புருவ முடிகளைத் திருத்துகின்றபோது , கண்ணைச் சுற்றியுள்ள நட்சத்திர காலம், காம பூரி வர்மம், திலர்த வர்மம் , பொட்டு வர்மம் (அல்)சுடரொளியின் காலம்), மின் வெட்டி வர்மம் (முன்வெட்டி வர்மம் அல்லது விழி பிதுங்கி வர்மம்), மந்திரக் காலம், அடக்க வர்மம், நேம வர்மம், பட்சிவர்மம், கண்ணாடி வர்மம் (மூக்கிறாணி வர்மம்), பால வர்மம், சூண்டிகை வர்மம், கொண்ட வர்மம் போன்ற கண்ணைச் சுற்றி உள்ள வர்மங்களில் பாதிப்புகள் உண்டாகும். இந்த புருவ முடிகளை திருத்துகின்ற பார்லர் பெண்களுக்கு இந்த வர்ம புள்ளிகளைப்பத்தி தெரிய வாய்ப்பில்லை.


விசயம் தெரியாம புருவங்களை திருத்துறதால பெண்களின் பிராண சக்தி குறையும். குறைவான பிராண சக்தியால் அவங்க ஆயுள் குறைவதோடு, பிராண சக்தி குறைவான பிள்ளைகளை பெறுகின்றனர். வர்மப்புள்ளிகளை சரிவர தெரிஞ்சுக்காம அதை கையாளும்போது அந்தந்த வர்மங்களில் நிலைக்கொண்டிருக்கும் மின்காந்த சக்தியை சிதைக்கப்படுகிறது. மேலும் உடலின் முக்கிய சக்திப்பாதைகள் அனைத்தும் கண்களுக்கு அருகில் ஓடுகின்றது அதுலலாம் கைவைக்குறது நமக்கு நாமே கொள்ளி வைக்குறதுக்கு சமம். சுத்தமான விளக்கெண்ணெயை தொட்டு கண்புருவங்களில் வச்சு வந்தாலே புருவம் அடர்த்தியா வளரும். அழகும் கூடும். அத்தோடு, பிராணன் சக்தியும் வீணாகமல் தேக நலனும், மன ஆரோக்கியமுள்ள குழந்தைகளை பெற்று சமுதாயத்திற்கும் நல்லது செய்யலாம்.

இதை நம்ப பொண்ணுங்க புரிஞ்சு நடந்துக்கிட்டா சரிதான் மாமா. ஆனா, ஐந்தறிவு ஜீவன்களுக்கு இருக்கும் அறிவுகூட நமக்கு இல்லன்னுதான் சொல்லனும். இந்த ஐந்தறிவு ஜீவனுக்கு பாசமும், அறிவையும் பாருங்களேன்.

ஐந்தறிவு ஜீவனுக்கு இருக்கும் பாசம் ஆச்சரியப்படத்தான் வைக்குது புள்ள. சரி, பொம்பளைக தன்னோட புருசனை எப்படிலாம் கூப்பிடுவாங்கன்னு தெரியுமா புள்ள?!

ம்ம்ம்  ஆதிகாலம்ன்னா பிராணநாதா! சுவாமி! இடைப்பட்ட காலம்ன்னா அத்தான், மாமா. ஒரு பத்து வருசத்துக்குள்ளன்னா பேபி, ஹனி, மாம்ஸ்,மாமு.. இப்பன்னா பேர் சொல்லி கூப்பிடுதுங்க. இன்னும் சிலதுங்க டேய்ன்னுலாம் வூட்டுக்காரரை கூப்பிடுதுக மாமா.

அத்தான்னு ஏன் பொண்ணுங்க கூப்பிடுறாங்கன்னு தெரியுமா?!

ம்ம் தெரியுமே! தமிழ் உயிரெழுத்தின் முதல் எழுத்தான “அ”.ன்னு தொடங்கி,  மெய்யெழுத்தின் கடைசியான“ன்”ன்னும் முடியுற மாதிரி அத்தான்”ன்னு கூப்பிடுவாங்க. அதாவது என் உயிரும் நீதான், என் மெய்(உடலும்) நீதான்னு சொல்லாம சொல்லத்தான் அத்தான்னு கூப்பிட்டாங்க.  உயிரிலும், மெய்(உடலிலும்) கலந்த உறவு நீங்கன்ற அர்த்தத்துலதான் அத்தான்னு சொன்னாங்க.

அவங்க சொன்னதுலாம் இருக்கட்டும். என் கேள்விக்கு பதில் சொல்லுங்க..
முகம் பார்த்து வளரும்..
முடிவில்லாமல் தொடரும்..
அது என்னன்னு சொல்லு மாமா..

நன்றியுடன்,
ராஜி.

Sunday, February 02, 2020

வேறெதும் தேவையில்லை நீ மட்டும் போதும் - பாட்டு புத்தகம்

உனக்காக எதுவும் செய்வேன், எதுவும் விட்டுக்கொடுப்பேன்னு சொல்வானு/ளுங்க. ஆனா, அப்படி ஒன்னும் இருக்க தேவையில்ல. எதுக்காவும் விட்டுக்கொடுக்காம இருந்தாலே போதும்.  அதுமாதிரியான ஒரு உணர்வுதான் இந்த பாட்டு. இப்பத்திய பாட்டுங்க கேக்குற மாதிரி இல்லன்னாலும் இந்த பாட்டு கேக்குற மாதிரி இருக்கும். கேட்டதும் பிடிச்ச பாட்டு.. நீங்களும் கேட்டு பாருங்க..



வேறெதுவும் தேவை இல்லை
நீ மட்டும் போதும்!!
கண்ணில் வைத்து காத்திருப்பேன்..
என்னவானாலும்....
உன் எதிரில் நான் இருக்கும்
ஒவ்வொரு நாளும்..
உச்சி முதல் பாதம் வரை
வீசுது வாசம்...
தினமும் ஆயிரம் முறை
பார்த்து முடித்தாலும்
இன்னும் பார்த்திட சொல்லி
பாழும் மனம் ஏங்கும்..

தாரமே! தாரமே! வா!!
வாழ்வின் வாசமே வாசமே நீதானே!!?
தாரமே! தாரமே! வா!!
எந்தன் சுவாசமே சுவாசமே நீ
உயிரே வா!!
மேலும் கீழும் ஆடும் உந்தன்
மாய கண்ணாலே..
மாறுவேடம் போடுது என்
நாட்கள் தன்னாலே...
ஆயுள் ரேகை முழுவதுமாய்
தேயும் முன்னாலே..
ஆளும்வரை வாழ்ந்திடலாம்
காதலின் உள்ளே..

இந்த உலகம் தூளாய்
உடைந்து போனாலும்
அதன் ஒரு துகளில்
உன்னை கரை சேர்ப்பேன்
தாரமே! தாரமே! வா!!...

நீ நீங்கிடும் நேரம்
காற்றும் பெரும்பாரம்..
உன் கைத்தொடும் நேரம்
தீ மீதிலும் ஈரம்..
நீ நடக்கும் பொழுது
நிழல் தரையில் படாது
உன் நிழலை எனது உடல்
நழுவ விடாது..

பேரழகின் மேலே ஒரு
துரும்பும் தொடாது..
பிஞ்சு முகம் ஒரு நொடியும்
வாடக்கூடாது..
உன்னை பார்த்திருப்பேன்
விழிகள் மூடாது..
உன்னை தாண்டி எதுவும்
தெரியக்கூடாது..
தாரமே தாரமே வா


பாட்டு உங்களுக்கும் பிடிச்சிருக்குதானே?!
படம்: கடாரம் கொண்டான்
இசை:ஜிப்ரான்
நடிகர்கள்; அபி ஹாசன், அக்‌ஷராஹாசன்
பாடியவர்:சித் ஸ்ரீராம்


நன்றியுடன்,
ராஜி

Saturday, February 01, 2020

இப்படி ஒரு கணவன் அமைய கொடுத்து வச்சிருக்கனும்!!- சுட்ட பழம்

எப்படிலாம் யோசிக்குறானுங்க!!??
மேட் இன் சைனான்னு வாயப்பொளந்ததுலாம் ஒருகாலம்...
என்னையப்போல 10வது எட்டு தரம் எழுதி பாஸ் பண்ணி இருப்பாரோ!?

பாவம் நம்ப புள்ளிங்கோ..
இப்படி ஒரு கணவன் அமைய அந்த பொண்ணு கொடுத்து வச்சிருக்கனும். ஏன்னா, அப்பாதான் தன் தோள்மேல் ஏற்றி வச்சி உலகத்தை காட்டுவார்ன்னு சொல்வாங்க.
எனக்கும் ஒரு குக்கர் பார்சேஏஏஏஏஏஏஏஏல்..

வாட்ஸ் அப் வந்ததிலிருந்து எதுமே புதுசா இல்ல. எல்லாமே ஓல்ட்... அப்புறம் எப்படி கல்லா கட்டுறதாம்!!

நன்றியுடன், 
ராஜி

Friday, January 31, 2020

சாக்லேட் மாலை அணியும் முருகன் - புண்ணியம் தேடி.....

ஒவ்வொரு கோவிலுக்கு பின்னாடியும் ஒரு கதை இருக்கும்.  அந்த கதையினை ஒட்டி ஒவ்வொரு நேர்த்திக்கடன் உண்டு. நெல்லினை துலாபாரமிட்டு கொடுக்கும் கோவில்கள் உண்டு, உருவத்தினை சிலைவடித்து நேர்த்திக்கடன் செலுத்தும்ம் கோவில், புகைப்படத்தினை நேர்த்திக்கடனாய் செலுத்தும் கோவில், தலையில் தேங்காய் உடைப்பது முதற்கொண்டு கொதிக்கும் எண்ணெயில் வேகும் வடையினை வெறும் கையினால் எடுக்கும் சம்பவமும் சில கோவில்களில் உண்டு. அந்த வரிசையில், குழந்தைகளுக்கு பிடித்தமான மஞ்ச் சாக்லேட்டினை நேர்த்திக்கடனாய் செலுத்துவதும், அதையே பிரசாதமாய் பெறுவதுமாய் ஒரு கோவில் கேரள மாநிலத்தில் ஆலப்புழாவில் இருக்கு. அந்த கோவில் பத்திதான் இன்று பார்க்கப்போறோம்.


யாவர்க்குமாம் இறைவர்க்கொரு பச்சிலை’ என்றார் திருமூலர். மரம், செடி, கொடிகள், மூலிகைகள் அரிதாகிப்போன காலக்கட்டமிது. அதனால், கடவுளும் அப்டேட்டாகி நாம் அன்போடு நைவேத்தியம் செய்வதை பெரிய மனதோடு ஏற்கிறார். எச்சில் பட்ட நாவல்பழத்தை ராமனும், வேடுவன் ருசிபார்த்த இறைச்சியை ஏற்றுக்கொண்ட சிவனையும்போல, இன்றைய நவநாகரீக உலகத்தில் மன்ச் சாக்லேட்டையும் பிரசாதமாய் ஏற்றுக்கொள்கிறார் முருகப்பெருமான். என்னாது?! மன்ச் சாக்லேட்டையா?! ரீல் விடாதம்மான்னு உங்க மைண்ட் வாய்சை ஐ கேட்ச்.

நான் சொன்னா, நம்ப மாட்டீங்க. கேரள மாநிலம், ஆலப்புழாவில் இருக்கும் செம்மோத் ஸ்ரீசுப்ரம்ணய ஸ்வாமி திருக்கோவிலுக்கு  ஒரு எட்டு போய் பார்த்தீங்கன்னா நான் சொல்றது உண்மைன்னு தெரியும்.  முருகன் பாலகனாய் இங்கு காட்சி தருகிறார். இந்தக்கால பாலகர்களுக்கு மன்ச் சாக்லேட்ன்னா ரொம்ப இஷ்டம்ன்னு நான் சொல்லித்தான் தெரியனுமா?! நம்ப பிள்ளைகளைப்போல முருகனுக்கும் மன்ச் சாக்லேட்டை பிடிச்சு போக ரெண்டு மூணு கதை சொல்றாங்க.


எட்டாண்டுகளுக்கு முன்னாடி இந்த பாலமுருகன் கோவில் பகுதியில்  விளையாடிக்கொண்டிருந்த ஒரு முஸ்லீம் குடும்பத்து ஆண் குழந்தை  முருகன் கோவிலுக்குள் போய், கோவில் மணியின் கயிற்றை பிடித்து அடிச்சிருக்கு. இதைப்பார்த்து பதறிப்போன அக்குழந்தையோட பெத்தவங்க   பதறிப்போய் அக்குழந்தையை கண்டிச்சு தங்கள் வீட்டுக்கு அழைச்சுக்கிட்டு போய்ட்டாங்க.  அன்னிக்கு ராத்திரி அந்த குழந்தைக்கு கடுமையான காய்ச்சல். காய்ச்சல் வேகத்தில் குழந்தை முருகா! முருகா!ன்னு முணகி இருக்கு. ரெண்டு, மூணு நாளாகியும் காய்ச்சல் அடங்கல. முணகலும் நிக்கலை.  என்ன செய்றதுன்னு தெரியாம திகைக்கும்போது, விசயம் கேள்விப்பட்டு பாலமுருகன் கோவில் பூசாரி அந்த முஸ்லீம் தம்பதி வீட்டுக்கு போய், எண்ணெயும், பூக்களும் பரிகாரமாய்  பாலமுருகனுக்கு  கொடுத்தால், குழந்தை குணமாகும்ன்னு பரிகாரம் சொன்னார்.

ஒரு முஸ்லீம் , எப்படி இந்து கோவிலுக்கு போறதுன்னு அவங்க தயங்கி நிற்க, பூசாரி அவங்களை ஒருவாறு தேத்தி கோவிலுக்கு கூட்டிப்போய் பரிகாரம் செய்தனர். பெத்தவங்க பரிகாரம் செய்த வேளையில் , கோவில் கருவறைக்கு சென்ற குழந்தை தனது கையில் இருந்த ‘மன்ச்’ சாக்லேட்டை பாலமுருகன் சிலாரூபத்துமுன்  நீட்டியது. குழந்தையின் கையிலிருந்த சாக்லேட் காணாமல் போனது. கூடவே குழந்தையின் காய்ச்சலும் காணாமல் போனது. இந்த விசயம் ஊடகங்களின் வாயிலாக பரவத் தொடங்கிய பின்னர் ஆலப்புழா மாவட்டம் தவிர, கேரள மாநிலம் மட்டுமின்றி, வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் ‘மன்ச்’ சாக்லேட்களுடன் வந்து பாலமுருகனின் அருளை பெற்று செல்கின்றனர். இங்குவரும் பக்தர்கள் மற்றும் குழந்தைகளும் மகிழ்ச்சியுடன் மன்ச் சாக்லேட்களையே பிரசாதமாக வாங்கியும் போறாங்க.  சாக்லேட் கொடுக்கும் கோவில்ன்றதால் குழந்தைகள் இந்த கோவிலுக்கு ஆர்வமா வருதுங்க.

ஒரு கோவில்ன்னு இருந்தால் அக்கோவில் பத்தி பல கதைகள் இருக்கும். இக்கோவிலும் அதுக்கு விதிவிலக்கல்ல.  இக்கோவில் பத்திய இரண்டாவது கதை.. சில வருசங்களுக்கு முன்னாடி இந்தக் கோவிலுக்கு தன் அம்மாவோட வந்த ஏதோவொரு சின்னக்கொழந்த, முருகனோட சிலைக்கு முன்னால இருந்த படியில மஞ்ச் சாக்லேட்ட வெச்சிட்டு பிரகாரத்த சுத்திட்டு வந்து பாத்தப்போ வெச்சிட்டுப் போன சாக்லேட்டு காணாமபோயிருந்துச்சாம்! உடனே முருன்தான் குழந்தைகிட்டருந்து சாக்லேட்ட எடுத்திருப்பாப்லனு சொல்லி, அன்னைல இருந்து அதே மஞ்ச் சாக்லேட்டையே காணிக்கையாட்டம் கொண்டாந்து கொட்ட ஆரம்பிச்சிருக்காக பக்தர்கள்! (ஒருவேளை உள்ள உட்கார்ந்திருந்த பூசாரியோ அல்லது கோவிலுக்கு வந்தயாரோ ஒருத்தங்கக்கூட அந்த சாக்லேட்டை எடுத்திருக்கலாம்!! ) எது எப்டியோ முருகனையும் இந்த காலத்துக்கு தகுந்தமாதிரி ட்ரெண்டியாகிட்டார். 


அடுத்த கதை... பரிட்சைக்கு படிக்காத என்னையமாதிரி ஒரு குழந்தை!! பரிட்சையில் பாசாகிட்டால் கையிலிருக்கும் சாக்லேட்டையே நேர்த்திக்கடனாய் செலுத்துறதா வேண்டிக்க, அதேமாதிரி பரிட்சையிலும் பாசாகிட, உடனே மன்ச் சாக்லேட்டை கொண்டு வந்து முருகனுக்கு செலுத்த, முருகனும் அதை அன்புடன் ஏற்றுக்கொள்ளவே அன்றிலிருந்து பாலமுருகன் மன்ச் முருகனாய் மாறிப்போனார்.  அன்றிலிருந்து பரிட்சை வேளைகளில் கைகளில் ‘மன்ச்’ சாக்லேட்களுடன் வந்து வேண்டுதல் செய்யும் மாணவ-மாணவியர்களை இங்க பார்க்கலாம். குழந்தை வரம் வேண்டி, உடல் நலம், மன நலம் சீர்ப்பட இப்படி குழந்தை சம்பந்தமான அனைத்து வேண்டுதலுக்கும் இங்கு மன்ச் சாக்லேட்தான். நம்ம ஊரு எலுமிச்சை மாலை மாதிரி 9, 11, 21,51, 101 எண்ணிக்கையிலான மன்ச் சாக்லேட் மாலைகள் கடைகளில் தொங்குறதை இங்க பார்க்கலாம். துலாபாரம் செலுத்துதல்கூட மன்ச் சாக்லேட்டினை கொண்டுதான். அதனால்தான் இங்க மலைப்போல மன்ச் சாக்லேட் குவிஞ்சிருக்கு.
நம்ம ஊரு கோவில்களில் நேர்த்திக்கடனை செலுத்த வேப்பிலை ஆடை, தீச்சட்டி, காவடிலாம் கோவில் அருகே கிடைப்பதுப்போல் மன்ச் சாக்லேட் மாலை கோவில் பக்கத்துலயே கிடைக்குது. இந்தக்கோவில் 300 ஆண்டுக்கால பழமையானது. ஆனா, 8 வருசமாதான் பிரசித்தமடைஞ்சிருக்கு.  
ட்ரெண்டியாகிப்போன முருகனை பார்க்க இப்ப ட்ரெண்டுக்கு தகுந்த மாதிரி கூகுள் மேப் உதவியோடு போகலாம்.. ஆலப்புழா புறநகர் பகுதியில் இக்கோவில் இருக்கு. அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலுக்கு தென்பகுதியில் இருப்பதால், இக்கோவிலுக்கு தெக்கன்பழனின்னு செல்லப்பெயரும் உண்டு. 


இக்கோவிலை அனூப் செம்மோத் அவர்களும், அவர்தம் குடும்பத்தினரும் நிர்வகித்து வருகின்றனர். இக்கோவிலுக்கு சாதி, மத வேறுபாடின்றி எல்லாரும் வர்றாங்க.  ஒரு "மன்ச்" சாக்லேட் மனிதனின் ஜாதி, மத உணர்வுகளை துடைத்தெறிந்து... ஒன்றாக ஆக்கி இருக்கிறதே... அதுவே நல்ல விஷயம் தான்...!! இதற்காக அந்த முருகனுக்கு எத்தனை மன்ச் வேண்டுமானாலும் கொடுக்கலாம். கடவுளர்களின் உணவைக்கூட காலமும், மனிதனும்தான் நிர்ணயிப்பான் போல!!

படங்கள் கூகுள்ல சுட்டது...

நன்றியுடன்,
ராஜி.