Thursday, April 25, 2019

ஷாப்பிங் போக வயர் கூடை பின்னலாமா?!... - கைவண்ணம்

 ஒரு ரோல்ல போட்ட சின்ன கூடை. கோவில், பால் வாங்க கொண்டு போக உதவும்....
 அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் இன்னிக்கும் வயர் பேக்கில்தான் மதிய சாப்பாடு கொண்டு போகுதுங்க. தனியார் பள்ளி குழந்தைகள்தான் டப்பர்வேர், கேன்வாஸ் பேக்ன்னு இருக்குதுங்க.  தெரிஞ்சவங்க தன் குழந்தைக்கு சாப்பாடு கொடுத்தனுப்ப பின்னி தர சொன்னாங்க. 

 பிளாஸ்டிக் ஒழிப்புன்னு இன்னிக்குதான் சட்டம் வந்து எல்லாரும் வயர் பைக்கு மாறிக்கிட்டிருக்காங்க. ஆனா.  எங்க வீட்டில் எப்பவுமே வயர் பைதான் கொண்டு போவோம். வெளிய போக கிளம்பினதும் வயர் பையைதான் கை தேடும். உழவர் சந்தைக்கு போகும்போது நான் கொண்டு போகும் கூடையை பார்த்துட்டு ஒரு பாட்டி இந்த கூடை எங்க கிடைக்கும்?! எவ்வளவுன்னு கேட்டாங்க.  பாட்டி! நானே பின்னினதுன்னு சொன்னேன்.  காய்களை கொண்டுவர உன் கையில் இருப்பதைவிட கொஞ்சம் பெருசா ஒரு கூடை வேணும்.  பின்னி தர்றியாம்மான்னு கேட்டாங்க.  

 
சரி  பாட்டி, என் கையில் இருப்பது ரெண்டு ரோல் வயரில் பின்னினது. உனக்கு 3 ரோலில் பின்னிவரவா?! மத்தவங்களுக்கு 300ரூபா கொடுப்பேன். நீ 275 ரூபா கொடுன்னு சொன்னேன். சரின்னு சொல்லிட்டுது. தினசரி காய்கறிகள் கொண்டு போறதால சீக்கிரம் கூடை அழுக்காகிடும். அதனால்  டார்க் கலர்ல கூடை போட்டேன். 

ஒரு  எட்டு அடி  நீளத்துக்கு 30 துண்டுகள் வெட்டிக்கிட்டு,  ரன்னிங்க் வயர் கொண்டு நார்மல் முடிச்சு போட்டுக்கிட்டு வரனும்.   காய்கறிகள் வைக்க அடி அகலமா இருக்கனும்ன்னு 13 வரிசை போட்டுக்கிட்டேன். 

 25 வரிசை உயரம் போட்டுக்கிட்டேன்.  
 அதிகமா எடை சுமக்கனும்ன்னா கைப்பிடி மெல்லிசா இருந்தால் கைகள் எரியும். அதனால், கனமான கைப்பிடிக்காக உள்ளுக்குள் 5 வயர் வச்சு முறுக்கு கைப்பிடி போட்டேன். 

வயர் கூடை ரெடி. பாட்டிக்கிட்ட கொண்டு போய் கொடுத்தேன்.  அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம் கூடுதலா  நாலு சுண்டைக்காய் போட்டு அனுப்பிச்சுது... 

நன்றியுடன்,
ராஜி

Wednesday, April 24, 2019

பாவப்பட்ட அகலிகை - வெளிச்சத்தின் பின்னே!

இறைவனின் ஒவ்வொரு படைப்பிற்கும் அர்த்தம் உண்டு. அது நல்லவர்களோ தீயவர்களோ, புல்லோ பூண்டோ, புழுவோ பூச்சியோ ஆக எதுவாய் இருந்தால் அந்த உயிர் படைக்கப்பட்டதற்கும் , அதன் வாழ்வியல் சம்பந்தத்திற்கும் ஏதோ ஒரு அர்த்தம் இருக்கும்.  அசுரர்கள் படைப்பு, மனிதன் எப்படி வாழக்கூடாதென மக்களுக்கு உணர்த்த மகான்களின் படைப்பு மனிதன் எப்படி வாழவேண்டுமென்பதை உணர்த்த, பசு, காளை, குதிரைகள் அடுத்தவருக்கு உதவ, உழைப்பின் எடுத்துக்காட்டாய் இருக்கின்றது. நாய் நன்றியின் அடையாளம், நரி தந்திரத்தின் அடையாளம், காக்கை பகிர்ந்துன்பதின் அடையாளம்...  அதேப்போல் புராண மாந்தர்களின் படைப்பிலும் ஒவ்வொரு அர்த்தமுண்டு.   ஆனால், அகலிகையின் படைப்பிற்கு என்ன அர்த்தம்ன்னுதான் எனக்கு விளங்கவில்லை. 


கற்புக்கரசி யார்ன்னு கேட்டால் சீதா, கண்ணகி, நளாயினி, அகலிகை, அனுசுயான்னு சட்டுன்னு சொல்லிடுவாங்க.  கற்புக்கரசின்ற வார்த்தையை தவிர அகலிகை அனுபவித்தது ஏதுமில்லை. இறைவன் படைப்பினிலே பாவப்பட்ட ஜென்மம்ன்னா அது அகலிகைதான். சுவாரசியமும் சர்ச்சைக்குரிய பாத்திரமும்ன்றதாலயே அவள் பெயர் இன்றும் நிலைத்திருக்கிறது... அகலிகை பத்தி சொல்லும்போதெல்லாம் ராமன் கால் பட்டதால் பெண்ணானவள்ன்னு சொல்லி ராமனின் பெருமையை சொல்ல அகலிகை பயன்பட்டாளே தவிர அவளை மனுஷியாகக்கூட மதிக்க மறந்துவிட்டோம்.  அகலிகையின் கதை பல கேள்விகளை நமக்கு முன் எடுத்து வைக்கின்றது. அகலிகை படைப்பும் அவள் வாழ்வும் வினோதம்! அதனால், அவள் பெற்ற தாழ்வும், இறுதியில் மீள்வும் அந்த மீள்வு கொடுத்த புகழும் மேலும் வினோதம்.
Ahalya, the wife of the seer Gautama, seated on a plinth with a back, on a terrace with a building behind her. A covered doorway is also shown. She wears lavish textiles and jewellery and holds a flower in her right hand. In front of the plinth is a vase with flowers in. Company School, 18th century, Patna.

அமுதம் வேண்டி பாற்கடலை கடையும்போது அமுதம் வெளிப்பட்டது. அதை பங்கிட மோகினி ரூபத்தில் விஷ்ணு பகவான் தோன்றினார். அவளது அழகில் அனைவரும் மயங்கினர். அந்த அழகினை கண்ட பிரம்மனுக்கு, இந்த அழகு அனைத்தும் அசுர வதம் முடிந்ததும் மறைந்துவிடும். அதனால் அழிவில்லாத அழகை உலகுக்கு கொடுக்க வேண்டுமென எண்ணம் உண்டானது. அதனால் மிக அழகான பெண்ணொருத்தியை படைத்து அவளுக்கு அஹல்யா என பெயரிட்டார். அழகு தமிழில் அவளது பெயர் அகல்யா, அகலிகைன்னு பெயர் உண்டானது. அகல்யான்ற வார்த்தைக்கு அழகின்மை இல்லாதவள்ன்னு அர்த்தம். அதாவது சிறு குறைக்கூட அவளது அழகில் சொல்லமுடியாது என்பதே இதன் பொருள்.  அமுதத்தோடு அகலிகை தோன்றியவள்ன்னும் ஒரு  கதை உண்டு. 

மிக அழகாய் இருந்த அந்த அகலிகையை பாதுகாக்க வேண்டி, முற்றும் துறந்த முனிவரான கௌதமரிடம் கொடுத்து வளர்க்க சொன்னார். கௌதமர் சப்தரிஷிகளில் ஒருவர். தவத்தில் மிகப் பெருமை வாய்ந்தவர். அவர் உயரிய பண்புகளை உடையவர். பிரம்மா, இந்த அழகைத்திரட்டிய பெண்ணை காக்க புலன்களை அடக்கிய முனிவரே சிறந்தவர் என்று கருதினான்  அழகுடன், சிறந்த குணவதியாய் அகலிகை வளர்ந்து வந்தாள். திருமணப்பருவம் வந்ததும் அவளை திரும்ப பிரம்மனிடமே ஒப்படைத்தார் கௌதமர். பிரம்மலோகத்த்திலிருந்த  அவளது அழகு ஈரேழு உலகுக்கும் பரவியது, அவள்மீது தேவர்கள் , உட்பட இந்திரன் அவளை மணக்க விரும்பினர்.  ஒப்பற்ற அழகியும், குணவதியான பெண்ணை மணப்பவன் லேசுப்பட்டவனாய் இருக்கக்கூடாதுன்னு எண்ணிய பிரம்மன்,  உங்களில் யார் முன்னும்பின்னும் முகங்கொண்ட பசுவைக் கண்டு, அதை மும்முறை வலம் வந்து வணங்கி, முதலில் என்னிடம் வந்து தக்க ஆதாரத்துடன் கூறுகிறீர்களோ, அவரே இந்த அகலிகைக்கு மாலைசூட்டத் தகுதியானவர்!'' என்றார்.  அவளை அடைவதற்காக இந்திரன் உள்ளிட்ட அனைவரும்  உலகை சுற்றி முன்னும்பின்னுமாய் முகம் கொண்ட பசுவை தேடி கிளம்பினர்.  (இந்திரன் அழகில் அகலிகை மயங்கி அவரை மணக்க ஆசைப்பட்டதாகவும் சில ராமாயணத்தில் சொல்லப்படுகிறது).

எல்லாரும் உலகை வலம் வர ஆரம்பிக்கும்போது கௌதமர் நந்தவனத்தில் இருந்த பசு ஒன்று கன்று ஈன பிரசவ வலியால் துடிக்க ஆரம்பித்தது. அதற்கு பிரசவம் பார்க்க ஆரம்பித்தார் கௌதமர் .   பசு கன்றினை பிரசவிக்க ஆரம்பித்தது. பசுவின் முன்னும் பின்னுமாய் முகம் கொண்ட பசுவினை கௌதமர் கண்டார்.  கன்றினை ஈன்ற பசுவினை மூன்று முறை வலம்வந்து வணங்கினார்.  பிரம்மன் நிபந்தனைப்படி அவர் அறியாமலே கௌதமர் நடந்துக்கொண்டார்.  அதனால், பிரம்மன் சபையில் அறிவித்தபடி அகலிகையை கௌதமருக்கு திருமணம் செய்வித்தார். இந்திரனோ உலகை முழுக்க தேடியும் அப்படிப்பட்ட பசு கிடைக்கததால் சோர்ந்து போய் பிரம்மலோகம் வந்து சேர்ந்து, நடந்ததை அறிந்து அவமானத்தால் முகம் சிவந்தான். (உலகை மும்முறை வலம் வந்தால் பெண்ணை தருவதாய் பிரம்மன் சொல்ல, எல்லாரும் உலகை சுற்றி வர கிளம்ப, கௌதமர் பசுவுக்கு பிரசவம் பார்க்கிறார். கர்ப்பமடைந்த பசு ஈரேழு உலகுக்கும் சமம்ன்னு வேதம் சொல்லுது. அதன்படி மூவுலகை வலம் வந்ததாய் அர்த்தமாகிறது.) இன்னொரு கதையில் கௌதமரும் சுயம்வரத்தில் ஈடுபட்டதாய் சொல்றாங்க.

இன்னொரு கதைப்படி கௌதமர் நல்ல முறையில் அகல்யாவை வளர்த்து, பத்திரமாய் திரும்ப ஒப்படைத்ததால், அதற்குப் பரிசாக பிரம்மன் அகல்யாவை அவருக்கே மணமுடித்து வைத்ததாகன் சொல்லப்படுது. இதனால் இந்திரன் ஏமாந்துப் போகிறான். ஆசைப்பட்ட அகல்யா கிடைக்காத சோகம் ஒரு புறம், போட்டியில் தோற்ற அவமானம் ஒரு புறம் என்று இரு துக்கங்களை சுமந்து இந்திரலோகம் திரும்புகிறான் இந்திரன். இந்த இடத்தில் முக்கியமாய் சொல்லவேண்டிய விசயம் ஒன்று உண்டு. அது என்னன்னா,   கௌதம முனிவர் அகலிகையைவிட அதிக வயது மூத்தவர் என்பதும், கௌதமர் பிரம்மச்சரிய விரதத்தை மேற்கொண்டவர் என....  
antique Ravi Varma illustration Hindu mythology Ahalya portrait digital download
பிரம்மச்சரிய விரதத்தை  கடைப்பிடித்ததால் அகலிகையுடன் கௌதமர்  உடல் சேர்க்கையில் ஈடுபடுவதில்லை.  கணவருக்கு பணிவிடை செய்வதிலேயே அகலிகை பொழுதை கழித்தாள்.  கௌதமரின் வியர்வை பட்டு அகலிகை கர்ப்பம் தரிக்கிறாள். அவள் சதானந்தன் என்ற ஆண்பிள்ளையை பெற்றெடுக்கிறாள். கௌதமர் பூஜையில் இருக்க, அகலிகை அவருக்கு பணிவிடையில் மூழ்கி கிடந்தாள். ஆனாலும் அவ்வப்போது காம உணர்ச்சி அகலிகைக்கு எழும். கௌதமரின் விரதத்தினை கண்டு அமைதியாய் இருந்துவிடுவாள்.  இப்படியே நாட்கள் நீண்டது..
Image result for அகல்யா

ஒருநாள் கோழி கூவியது. பிரம்ம முகூர்த்தத்தில் முனிவர்கள் குளிக்கவேண்டுமென்பது விதி.   கௌதமர் நீராட அருகிலிருக்கும் நதிக்கரைக்கு செல்கிறார். சிறிது நேரத்தில் வாசல் கதவு தட்டும் சத்தம் கேட்டு அகலிகை, கதவை திறந்து, என்ன சுவாமி?! எதாவது மறந்துவிட்டீர்களா?! என விசாரித்தாள். எதையும் மறக்கவில்லை அகலிகா! ஆகாயத்தினை பார். இப்பொழுதுதான் மூன்றாவது ஜாமம் ஆரம்பித்திருக்கின்றது. வா! சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்கலாமென கௌதமர் அழைக்க, அகலிகை பக்கம் சென்று அமர்கிறாள்.    பேச்சு திசை மாறி கௌதமர், அகலிகையுடன் உடல்சேர்க்கையில் ஈடுபட்டார். இதென்ன புது வழக்கம்?! அதுவும் அதிகாலையில்!! போகும் வழியில் பறவைகள், மிருகங்களின் புணர்ச்சியில் இருப்பதை கண்ட மனுசன் மூடு ஏறி வந்துட்டாரோ என மனம் சிந்தித்தாலும், கணவன் சொல்லுக்கு மறுபேச்சு பேசுவது அழகல்ல என எண்ணி, கௌதமருக்கு உடன்பட்டாள். அவளது நீண்ட நாள் ஆசை நிறைவேறி உடலும், உள்ளமும் திருப்தியுற்ற மயக்கம் தெளியாமல் கௌதமரின் அணைப்பில் தன்னை மறந்த நிலையில் அகலிகை இருந்தாள். (இந்திரன் என உணர்ந்தே அகலிகை அமைதியாய் இருந்ததாகவும் ஒருசில ராமாயணத்தில் உண்டு)

அகலிகை! கதவை திற ! என்ற குரல் கேட்டு அகலிகை திடுக்கிட்டு வாரி சுருட்டிக்கொண்டு எழுந்தாள்.  கதவை திறந்து பார்த்தால் வாசலில் ஒரு கௌதமரும், உள்ளே ஒரு கௌதமரும் இருப்பதைக்கண்டு விக்கித்து நின்றாள்.  இந்திரன் வேண்டுகோளுக்கேற்ப சந்திரன்  சேவலாய் மாறி கூவியதும் நீராட சென்ற கௌதமர் கொஞ்ச தூரம் சென்றதுதான் இன்னும் பொழுது விடியவில்லை என்பதை உணர்ந்து,  ஏதோ தவறு நடக்க இருக்கிறது என எண்ணி, அவசர அவசரமாக தன் இல்லம் வந்தார் கௌதமர். அங்கு அகலிகையுடன், தன் உருவத்தில் இன்னொருவர் இருப்பதையும் கண்டு நடந்ததை ஞானத்தால் உணர்ந்து கடுங்கோபங்கொண்டு, ஆண்மை தினவெடுத்து எந்த யோனிக்கு ஆசைப்பட்டு அகலிகையுடன் கூடினாயோ,  ஆண்மையற்று அலியாக மாறி,உடலெங்கும் யோனியாய் மாறு என இந்திரனையும், இந்திரனுக்கு உதவிய சந்திரன் உடல் தேய்ந்து பொலிவிழக்கவும் சாபமிட்டார்.  

உனக்கு நான் என்ன குறை வைத்தேன்? எத்தனை மந்திரங்கள் கற்றுக்கொடுத்தேன்? கடைசியில் நீ என்ன செய்துவிட்டாய்! பிரம்மனின் புதல்வியான நீயா ஈரேழு உலகங்களும் போற்றும் கற்புக்கரசி? இனிமேல் அப்படிக் கிடையாது. அற்ப உணர்வுகளுக்குப் பலியாகும் சிற்றின்பக்காரியான நீ, எனக்கு மனைவியாக இருக்கத் தகுதியில்லாதவள். என கடுஞ்சொல் வீசினார் கௌதமர். சுவாமி! என்னை தங்களுக்கு தெரியாதா?! தங்கள் உருக்கொண்டு வந்ததால், தாங்கள்தான் என எண்ணி உடன்பட்டுவிட்டேன் என்று கதறினாள் அகலிகை.  பார்க்கும்  பொருளில் எல்லாம் என் உரு காணும் அளவுக்கு என்மீது பிரேமை கொண்டிருந்தால், எனக்கும் மற்றவனுக்கும் வித்தியாசம் தெரியாதா?!  காமப்பிடியில் மனம் இழந்தாய், மதி இழந்தாய்,  அறுதி இட்டு பிரித்து அரிய விழையவில்லை.. உன் மனமும் அதை நாடியது.. இதுவுமொரு குற்றமே.. ஆகையால் கணவன் யார்?! மாற்றான் யார் என உணராத நீ  எதையும் உணராத கல்லாய் மாறக்கடவது என சாபமிட்டார். 

இந்திரன், சந்திரன், அகலிகை பாவ விமோசனம் வேண்டி நிற்க, உடல் முழுக்க யோனிக்கு பதிலாய் கண்களாய் மாறவும், சந்திரன் சிவனை வேண்டி சாப விமோசனம் பெறவும், ஆயிரம் ஆண்டுகாலம் கழித்து மனிதர்குல மாணிக்கமாய் வரும் ராமரின் கால் தூசு பட்டு (கால் இல்லை.. கால் தூசு பட்டு எனத்தான் சாப விமோசனம் தந்தார். பொண்டாட்டியை அடுத்தவர் தீண்டாம பார்த்துக்கிறாராம்) பெண்ணாய் மாறுவாய் என சாப விமோசனம் தந்தார்.   கோபத்தில் சபித்ததால் கௌதமரின் தவ வலிமை குறைந்தது. அவரும் தவம் செய்ய கிளம்பிவிட்டார்.

தெரிந்தே தவறு செய்த இந்திரன் சுசீந்தரத்தில் வந்து சிவனை வழிபட்டு   தனது சாபத்திலிருந்து விமோசனம் பெற்றான். அவ்வாறே சந்திரனும் சாப விமோசனம் பெற்றான். அவர்கள் இருவரும் தேவர்கள். யாகத்தின் பலனை அளிக்கும் இடத்தில் இருப்பவர்கள். அதனால் சாபத்திலிருந்து தப்பித்தனரோ!! ஆனால் அகலிகையோ சாதாரண மானுடப்பெண். ஆதனால் ஆயிரம் ஆண்டுகள் கல்லாய் கிடந்தாள்.  
Image may contain: 4 people, people standing and outdoor

காலம் உருண்டோடியது. ராமன் அந்த பக்கம் வந்தான். அவனது கால் தூசு பட்டது. மீண்டும் உருக்கொண்டாள். பழைய உருவம் மட்டுமல்லாது, பழைய கற்போடு திரும்பினாள். கௌதமரோடு ராமன் அவளை சேர்பித்துவிட்டு அவ்விடம் அகன்றார். அவளும் அவர் பின்னே நடந்தாள்.. ஆனால்  அவள் மனதில் பல கேள்விகள் அலைமோதியது... உலகிலே ஒப்பற்ற அழகியாய் பிறந்தேன்.. குணத்திலும் சிறிதும் பழுதில்லாமல் வளர்ந்தேன். பார்ப்பவர்கள் அனைவரும் மனையாளாய் ஏற்கும்படி இருந்தாலும், வயதில் மூத்தவரும் பிரம்மச்சரிய கணவனுக்கு தன்னை மணமுடித்தது ஏன்?! மணம் முடித்தபின்னும் தன்னோட ஆசாபாசங்களை கௌதமர் உணர்ந்து நடக்காதது ஏன்?! தன் பழி உணர்ச்சியையும், காமத்தையும் தீர்த்துக்கொள்ள  இந்திரன் கௌதமர் உருக்கொண்டு வந்தது ஏன்?! சகல மந்திரமும் கற்றுன் தேர்ந்திருந்தும் வந்தது கணவன் அல்ல என்பதை உணரமுடியாமல் காமம் என்னை ஆட்கொண்டது ஏன்?! காமத்தின் பிடியில் சிக்கியது என் தவறா?!  கூவியது பொய்ச்சேவல் என்பதை முற்றும் உணர்ந்த முனிவரும், சிறந்த தவசியுமான கௌதமரால் உணரமுடியாத போது தன்னால் எப்படி போலி கௌதமரை உணரமுடியும்?! கொடுத்த சாபத்தினை இந்திரனுக்கு தளர்த்த முன்வந்த கௌதமர் தனக்கு இரங்காதது ஏன்?! அப்படியெனில் ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதியா?! தேவர்கள் அறிந்தே எது செய்தாலும் தவறில்லையா?! தெரியாமல் தவறு செய்த மானுடப்பெண்மீது மட்டும் தவறு சொல்வது எப்படி?!  

கைதவறி விழுந்தால் உடைப்பட கற்பு ஒன்றும் மண் சட்டியில்லையே! என பலவாறாய் எண்ணியபடி கௌதமரின் பின்னே மீண்டும் தவ வாழ்க்கைக்கு சென்றாள். அவளின் தவ வலிமையின் பொருட்டு, ராமர்-சீதா திருமணத்தை அகலிகையின் மகனான சதானந்தன் நடத்தி வைக்கும் பாக்கியம் பெற்றாள். ஆனாலும் அவளது கேள்விகளுக்கு இன்றுவரை பதில் இல்லை. உங்களுக்கு தெரிஞ்சா அகலிகையின் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்களேன். 

வெளிச்சத்தின் பின்னே தொடரும்...
நன்றியுடன்,
ராஜி

Tuesday, April 23, 2019

குழம்பு வடகம் செய்வது எப்படி?! - கிச்சன் கார்னர்

கோடைக்காலம் தொடங்கிட்டாலே வெயில்,   வியர்வை, பிள்ளைகளின் லீவுன்னு பல இம்சைங்க வெசனப்பட்டுக்கிட்டு இருப்பேன் நான், ஆனா என் அம்மாவோ வத்தல், வடாம், வடக, ஊறுகாய் வத்தல் போடுறதுலயும், புளி வாங்கி உடைச்சு சுத்தம் செய்து சேமிச்சு வைக்குறதுலயும் பிசியாகிடும்.  இந்த வருசத்துக்கான வத்தல், வடகம்லாம் போட்டு எடுத்து வச்சாச்சு. 

தாளிப்பு வடகம்  செய்வது எப்படின்னு பார்க்கலாமா?!

தேவையான பொருட்கள்...
வெங்காயம் - 1கி
பூண்டு - 1/4 கி
உ.பருப்பு - 1/4கி
கடுகு - 1/4கி
கடலை பருப்பு - 100 கி
வெந்தயம் - 50கிராம்
மஞ்சப்பொடி 
கறிவேப்பிலை
விளக்கெண்ணெய்

சின்ன வெங்காயம் அல்லது பெரிய வெங்காயம் இதுல எது வேணும்ன்னாலும் எடுத்துக்கலாம். எங்க ஊரில் சின்ன வெங்காயம் அதிக விலைன்றதால பெரிய வெங்காயத்தில்தான் செய்வோம். வெங்காயத்தை சுத்தம் செய்து ரொம்ப சின்னதா வெட்டிக்கனும். சாப்பரோ இல்ல ஃபுட் பிராசரோ இருந்தா அதுலயும் வெட்டிக்கலாம். ஒன்னுப்போல வெங்காயம் வெட்டுப்படும்.  பூண்டை மிக்சில போட்டு ஒரு சுத்து சுத்திக்கனும்.  முழு  உளுத்தம்பருப்பா இருந்தால் ஊற வச்சு ஒன்னு ரெண்டா அரைச்சு சேர்த்துக்கலாம். உடைச்ச உளுத்தம்பருப்பா இருந்தால் அப்படியே சேர்த்துக்கலாம், 



வெட்டி வச்ச வெங்காயம், நசுக்கிய பூண்டு, ஊற வச்ச உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, வெந்தயம், கடுகு, சுத்தம் செய்த கறிவேப்பிலை, மஞ்சப்பொடி, உப்பு சேர்த்து நல்லா கலந்து மூடி வைக்கனும். 


மறுநாள் காலையில் சுத்தமான காட்டன் துணியை விரித்து கொஞ்சம் வடகத்தை பரப்பி..
அதன்மீது பிள்ளையார் பிடிச்சு வைக்கனும்..
அதன்முன் வெற்றிலை பாக்கு வைத்து, கறிவேப்பிலை ஒருவாரம் தாக்குபிடிக்கும்.  வெங்காயம் பூண்டு ஓரிரு மாசம் தாக்குப்பிடிக்கும்.  பருப்புகள் ஆறு மாசம் வரை தாக்கு பிடிக்கும். அதுக்கு மேல போனலால் வெங்காய்ம் பூண்டு அழுகிடும், பருப்புகள் வண்டு வச்சிடும். ஆனா இதையெல்லாம் சேர்த்து வடகமா உன்னை நம்பி பிடிச்சு வைக்கிறேன். இது வருசக்கணக்கில் தாக்கு பிடிக்கனும். இதை சாப்பிடும் யாருக்கும் எந்த உடல் உபாதையும் வரக்கூடாதுன்னு வேண்டிக்கிட்டு...
வெங்காயம், பூண்டு, பருப்பு கலவையில் உப்பு போட்டிருப்பதால் அதில் நீர் விட்டிருக்கும். அதை மொத்தமா பிழிஞ்சுடாம வடகம் பிடிச்சு வைக்கனும். 
மாலையில் எடுத்து வைக்கும்போது அழுத்தி பிடிச்சு வைக்கனும் பிள்ளையாரா பிடிச்சு வச்ச கலவையையும் உருண்டையா பிடிச்சு வைக்கனும்
இரண்டாவது நாள் மாலையில் கைகளில் கொஞ்சம் விளக்கெண்ணெயை குழைச்சுக்கிட்டு  காய்ந்த வடகத்தினை நல்லா அழுத்தி உருண்டை பிடிக்கனும். காலையில் காய வைக்கும்போது அழுத்தினால் உருண்டை உடைஞ்சுடும். அதனால் மாலையில் எடுத்துவைக்கும்போது அழுத்தி பிடிச்சு வைக்கனும்... 
இப்படியே நாலு இல்ல ஐந்து நாள் வெயிலில் நல்லா காய வச்சு எடுத்து வச்சால் இரண்டு வருசம்கூட வடகம் நல்லா இருக்கும். ஆறு மாசத்துக்கொரு முறை மீண்டும் வெயிலில் எடுத்து வச்சா பூச்சி பிடிக்காது..  வடகம் பிடிக்குற அன்னிக்கு வீட்டு விலக்காகி இருந்தால்  பாட்டி யாரையும் தொட விடாது. கேட்டா சாப்பாடு தெய்வ அம்சம்ன்னு சொல்லும். 

கீரைக்குழம்பு, காரக்குழம்பு, சாம்பார், மீன்குழம்புக்குலாம் வடகம் போட்டு தாளிக்கலாம். எங்காவது டூர் போய்ட்டு ஊர் சுத்தி ஹோட்டல் சாப்பாட்டினால்  நாக்குலாம்  மரத்து போயி வீட்டுக்கு வரும்போது து. பருப்பு+ காய்ந்த மிளகாய்+ பூண்டு+தக்காளி சேர்த்து வேக வச்சு உப்பு, புளி சேர்த்து கடைஞ்சு, அடுப்பில் பாத்திரத்தை வச்சு எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும் வடகம் போட்டு பொரிஞ்சதும் கடைஞ்ச சாம்பாரை ஊத்தி சூடு படுத்தி சாப்பிட்டா நாக்குக்கு உயிர் வந்திடும்.  பருப்பு ரொம்ப குழைஞ்சுடக்கூடாது. அதான் இதில் முக்கியம்.  நான்லாம் குழம்புக்கு வடகம் தாளிக்கும்போது தனியா கொஞ்சம் எடுத்து வச்சி சாப்பிடுவேன். 

உங்க வீட்டு செய்முறையை நீங்க சொல்லுங்க... 

நன்றியுடன்,
ராஜி

Monday, April 22, 2019

மனிதம் உயிர்த்தெழுவது எப்போது? - ஐஞ்சுவை அவியல்


மாமா! போன வாரம் உடல் தானம் பத்தி பேசினோமில்ல! இன்னிக்கு கண் தானம் பத்தி உனக்கு தெரிஞ்சதை சொல்லேன்...
இந்தியா முழுக்க பிறவிக்குறைப்பாடு, விபத்துகளினால் பார்வை இழந்தவர்களை தவிர்த்து, நோய், சத்தான உணவின்றி,  கருவிழி புண்ணினால், பாதிப்பினால் வருசத்துக்கு ஒரு லட்சத்து இருபதாயிரம் இருக்காங்க. வருசத்துக்கு 20,000 பேர் இதுல கூடிக்கிட்டே  வர்றாங்க (இது 2013ல எடுத்த கணக்கெடுப்பு).  கருவிழியால் பாதிக்கப்பட்டவங்க திரும்ப பார்வையைப்பெற மாற்று கருவிழி பொருத்துவதுதான் ஒரே வழி.  அரசு மற்றும் லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப் மாதிரியான சமூக அமைப்புகள்மூலம் 50,000 முதல் 55,000 வரை மட்டுமே கண்கள் தானமா கிடைக்குது. இது  கருவிழி தேவையில் பாதியளவுகூட கிடையாது.  இதுக்கு காரணம் மக்கள்கிட்ட கண் தானம் பத்தி சரியான விழிப்புணர்வு இல்லன்றதுதான்.  மண்ணோடு மண்ணாய் மக்கி போற கண்ணை தானம் பண்ணினால் 2 பேருக்கு திரும்ப பார்வை கிடைக்கும்ன்னு தெரியாம வீணடிக்கிறோம். 
கண் தானம்ன்னா கண்ணை தோண்டி எடுத்துப்பாங்களா மாமா?!
I'm a independent musician and I compose many different styles of music ... ALL MUSIC COMPOSED BY (CHANNEL OWNER ZULQARNAIN )

ம்ஹூம்.   கண்ணின் மையப்பகுதியில்  கறுப்பாகத் தெரியும் கண்ணாடி போன்ற ஒளி ஊடுருவக் கூடிய கண்ணின் மேல் படலமே கருவிழின்னு சொல்லப்படுது. மெல்லிசான ஒரு சவ்வு மாதிரிதான் இருக்கும். அதை மட்டுமே எடுத்துப்பாங்க.  அதை  கருவிழி பாதிப்பால் பார்வையிழந்தவர்களுக்குக் கருவிழி மாற்று அறுவைசிகிச்சை (Corneal Transplantation) மூலம் பார்வையைத் திரும்பக் கொடுப்பாங்க. இந்த கருவிழியை மட்டுமே அடுத்தவங்களுக்கு வைப்பாங்க. 

யார்யாரெல்லாம் கண் தானம் செய்யலாம் மாமா?! நான் கண்ணாடி போட்டிருக்கேனே! நான் செய்ய முடியுமா?!


ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தை முதற்கொண்டு  யாரும் கண் தானம் செய்யலாம். வயதுவரம்பு கிடையாது. நாம செத்தப்பிறகுதான் கருவிழி எடுத்துக்குறதால நமக்கு எந்த பாதிப்பும் கிடையாது.  கண்களைத் தானம் செய்ய விருப்பப்பட்டால் நாம உயிரோட இருக்கும்போதே கண் தானம் செய்ய விருப்பம்ன்னு பதிஞ்சு வைக்கலாம். நாம செத்தப்பிறகு நமது கண்களை தானம் செய்யும் பொறுப்பை நம்ம சொந்தக்காரங்கக்கிட்ட சொல்லி வைக்கனும் அவ்வளவே! எழுதி வைக்காம இறந்தவங்க கண்களும் நெருங்கிய உறவுக்காரங்க விருப்பப்பட்டா கொடுக்கலாம், சர்க்கரை நோய், ரத்தகொதிப்பு, இதய நோய் , கண்களில் நரம்பு பாதிப்பு (Optic nerve disease), விழித்திரை பாதிப்பு (Retinal disease), கண்புரை அறுவை சிகிச்சை (Cataract surgery) செய்துகொண்டவர்களும்,  உன்னை மாதிரி கிட்டப்பார்வை, தூரப்பார்வை கண்ணாடி அணிந்திருப்பவர்களும் கண் தானம் செய்யலாம்.

ஆனா, எப்படி இறந்தாங்கன்னு தெரியாதவங்க, கண்ணில் கிருமி பாதிப்பு இருக்கவுங்க, நாய்க்கடி, விசம் குடிச்சு செத்தவங்க, டெட்டனஸ், எய்ட்ஸ், சிபிலிஸ் நோய், மஞ்சக்காமாலை, கேன்சர், ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் இருக்கவுங்க மட்டும் கண் தானம் செய்யமுடியாது.  இதுக்குதான் கருவிழியை எடுக்கும்போதே கொஞ்சூண்டு ரத்தமாதிரியை எடுத்துக்கிட்டு போவாங்க. அதை வச்சு மேல இருக்கும் நோய்கள் எதாவது இருக்கான்னு தெரிஞ்சுக்கிட்டுதான் அந்த கருவிழியை அடுத்தவங்களுக்கு வைப்பாங்க. இல்லன்னா, அந்த கருவிழியை அழிச்சுடுவாங்க. 
.
ஒருத்தர் இறந்த 6 மணி நேரத்துக்குள் கருவிழியை எடுத்து மருத்துவ பாதுகாப்புல  வைக்கனும்.  6 மணி நேரத்தை தாண்டிட்டா அந்த கருவிழி பயன்படுத்த நிலைக்கு போய்டும்.   கண் தானம் செய்யனும்ன்னு முடிவாகிட்டா இறந்தவர்களின் கண் திறந்திருக்காம இமைகளை மூடி இருக்கும்படி பார்த்துக்கனும்.  சுத்தமான பஞ்சினை தண்ணில நனைச்சு கண்களின்மீது போட்டு வைக்கனும்.  இறந்த உடலை வைத்திருக்கும் இடத்தில்  பேன் ஓடக்கூடாது. இறந்தவரின் தலையை அரையடி உயரத்துக்கு உயர்த்தி வைக்கனும்.  உடனே அருகிலிருக்கும் அரசு மருத்துவமனைக்கோ அல்லது சமூக சேவை அமைப்பிற்கோ தகவல் சொன்னால் அவங்க வந்து கருவிழியை நம்ம வீட்டிலயே வந்து  எடுத்துப்பாங்க.  கருவிழியை எடுக்க 15 டூ 30 நிமிசந்தான் ஆகும்.  அதன்பிறகு  நம்ம சடங்கு செய்ய எந்த தடையுமில்ல.  நம்மை கண்ணை கொண்டு போக ஆப்ரேஷன் செய்ய வரும் டாக்டர் அரசு அங்கீகரம் பெற்றவரா இருக்கனும். அது முக்கியம். இல்லன்னா அந்த கருவிழி செல்லாது. 

இப்படி எடுக்கப்பட்ட கருவிழியை  கண் தான மையம் (Eye donation centre) இல்லன்னா கண் வங்கியில் (Eye Bank) நோய்கிருமி பாதிக்காத மாதிரி ஒரு ரூமில் பாதுகாத்து வைப்பாங்க. கண்களின் கருவிழியை மட்டும் தனியாகப் பிரித்தெடுத்து, பாதுகாக்கக் கூடிய திரவத்தில் வைத்து பத்திரப்படுத்துவாங்க.  இப்படி பாதுக்காக்கப்பட்ட கருவிழியை ஒரு வருடம்வரை கண் வங்கியில் பாதுகாத்து வைக்க முடியும்.  இப்படி தானமாய் பெற்ற கருவிழியில் இருக்கும்  கண்ணின் வெளிப்புற வெண்படலம் (sclera) மட்டுமே இன்னொருத்தருக்கு பொருத்துவாங்க. கருவிழியால் ஏற்படும் பார்வையிழப்பை மட்டுமே கருவிழி மாற்று அறுவைசிகிச்சையால் சரிசெய்ய இயலும். மிச்ச பாகங்கள்லாம்  கண் சம்பந்தமான படிப்பு, ஆராய்ச்சிகளுக்கு எடுத்துப்பாங்க. இந்த மாதிரி மாற்று கருவிழி பொருத்தியவர்களில் 90% பேருக்கு திரும்ப பார்வை கிடைக்கும்.  ஒருத்தர் கண் தானம் செய்தால் இருவருக்கு பார்வை கிடைக்கும். 
Striking Eye Donation Ads Show Children Who Are Unable To Imagine - DesignTAXI.com

யாருக்காவது கண்களை தானம் செய்யனும்ன்னு ஆசை இருந்தால் பக்கத்திலிருக்கும் அரசு, அல்லது அரசு உதவி பெறும் கண் வங்கியில் பதிவு செய்துக்கலாம், இப்படி பதிஞ்ச விவரத்தினை தன்னோட குடும்ப உறுப்பினர்கள்கிட்ட சொல்லனும். ஏன்னா இறந்தவரின் கணவன்/மனைவி, மகன்/மகள், இரு சாட்சிகள் ஒத்துக்கிட்டால் மட்டுமே நம்ம கண்ணை கொண்டு போவாங்க.  விபத்து, நோய் காரணமா திடீர்ன்னு இறந்துட்டா உடனே பக்கத்திலிருக்கும் அரசு மருத்துவமனைக்கு சொல்லிட்டா போதும்.  போலீசுக்கு 100, ஆம்புலன்சுக்கு 108 மாதிரி  கண் தானம் செய்ய 104ஐ கூப்பிடலாம். தெளிவான முகவரியை சொன்னால் அவங்களே உடனே எல்லா ஏற்பாடும் பண்ணிடுவாங்க. 

உனக்கு மட்டும் எப்படி மாமா இதுலாம் தெரியுது. 

ம்ம்ம் எனக்கு சொல்லிக்கொடுத்த டீச்சர்லாம்  நல்லா சொல்லிக்கொடுத்தாங்க. அதனால என்னால படிக்க முடியுது. படிச்சு நாலும் தெரிஞ்சுக்க முடியுது. 

அப்படி நல்லா சொல்லிக்கொடுக்காத டீச்சருங்களை வஞ்ச புகழ்ச்சியா வாழ்த்தி ஒருத்தர் வச்ச பேனர்தான் இப்ப வைரலா சுத்துது மாமா. 
No photo description available.
ம்ம் நானும் பார்த்தேன். படிச்ச நமக்கு இல்லாத அறிவை ஆண்டவன் ஐந்தறிவு ஜீவன் எப்படி அறிவுப்பூர்வமா நடந்துக்குதுங்க.  ஒரு யானை கால்வாய்ல விழுந்துட்டுது. அதிலிருந்து எப்படி மீண்டு வருதுன்னு இந்த வீடியோவில் பாரு. 

யானை மீண்டு வந்தது தன்னோட முயற்சியிலும், மக்களின் உதவியாலும்தான். நீ சொல்ற சாமியால இல்ல. அப்படி சாமியாலதான்னு சொன்னா இலங்கையில நேத்து தன்னை கும்பிட வந்து தன் இடத்தில் கொல்லப்பட்ட மக்களை ஏன் கடவுள் காப்பாத்தலை?! அதுபத்திய பதிவுகள் சில பேஸ்புக்லயும், ட்விட்டர்லயும் படிச்சதை சொல்றேன்.


சிலுவையில் அறைந்த ஏசு உயிர்த்தெழுந்தது போதும்!!
இனி மனிதம் உயிர்த்தெழட்டும்!!
-------------------------------
கட்டக்கடைசியாய் இலங்கையும், துறையூர் நிகழ்ச்சியும் ஒன்றே ஒன்றுதான் நமக்கு உணர்த்துது..என்றாவது தன்னை காக்கும் என்று எண்ணியே பல்லாயிரம் வருடமாக கடவுளை மனித இனம் காத்து வருகிறது!
------------------------------------------------

 தன்னை மட்டுமே கடவுள் காப்பாத்திக்கொண்டார்..’
----------------------
ம்க்கும் எல்லாத்துக்குமே இப்படியே எகனைமொகனையாய் சொல்லிக்கிட்டே இரு........................ 

நன்றியுடன்,
ராஜி



Sunday, April 21, 2019

காத்திருக்கவுங்க திரும்ப வந்தால் என்னாகும்?! - பாட்டு புத்தகம்

நம்ம ஊரு காதலுக்கும் ஆத்தங்கரைக்கும்  பத்து பொருத்தமும் பக்காவா பொருந்தி போய் இருக்கு போல!  மிருகங்களோடு மிருகங்களாய்  வாழ்ந்து வந்த மனிதன்  காடு மேடு, மலையெல்லாம் சுற்றி வந்த மனிதன் ஒருகட்டத்தில் ஆத்தங்கரையோரம் தங்க ஆரம்பித்தபின்னரே  உணர்வுகளை புரிஞ்சுக்கிட்டு காதல், காமம், கோபம், பழி, குடும்பம்ன்னு  வாழ ஆரம்பித்து கிராமம், நகரமென நகர்ந்து இன்றைய அறிவியல் யுகத்துக்கு வந்து நிற்கிறான்.  

என்னதான் வாழ்க்கையை எளிதாக்கும் அறிவியல் சாதனங்களோடு  வாழ்ந்துக்கொண்டிருந்தாலும் மனசு கிராமத்து சுத்தமான காற்று, ஆற்றங்கரை, அருவி, கரையோர மரங்கள். மரத்தடி கயித்து கட்டில், மாந்தோப்பு, நாவல்/இலந்தை மரம்ன்னு இப்படியேதான் சுத்துது. சின்ன வயசில் ஆத்தங்கரைக்கு துணி துவைக்க அம்மா, பக்கத்து வீட்டு அக்கா, பாட்டி, மாமிகளோடு போகும்போது நீச்சல் கத்து தரேன்னு பக்கத்து வீட்டு அண்ணா துண்டெடுத்துக்கிட்டு வருவார். நடக்கையிலே சினிமா கதை, அது இதுன்னு பேசிட்டு வருவார். இதுலாம் எதுக்கு சொல்றார்ன்னு அப்ப புரியல. ஒரு வயசுக்கு அப்புறம் இதுலாம் புரிய வந்துச்சு.  அண்ணன் நமக்கு கதை சொல்லல. கூடவரும் அக்காக்கு ரூட் விட்டிருக்கார்ன்னு..  இப்படி பல காதல் ஆத்தங்கரையோரம்தான் வளர்ந்திருக்கு. 

கிராமத்துல மட்டுமில்ல, ஆத்துமேட்டுல ஒரு பாட்டு கேக்குது...  ஆத்தங்கரை மரமே ... ஏய்! ஆத்தா! ஆத்தோரமா வாரியான்னு சினிமாக்களும் ஆத்தங்கரைதான் லவ் பண்ண சிறந்த இடம்ன்னு சொல்லாம சொல்லுது.   

அட, சினிமாவுலயும், கிராமத்துலயும் மட்டுமில்லீங்க.  
கருங்கால் வேம்பின் ஒள் பூ யாணர்
என்னை இன்றியும் கழிவதுகொல்லோ
ஆற்றய லெழுந்த வெண்கோட்டதவத்
”தெழுகுளிறு மிதித்த ஒருப்ழம் போலக்
குழையக் கொடியார் நாவே
காதலர் அகலக் கல்லென்றவ்வே. 
- குறுந்தொகைப்பாடல்
கரிய நிறத்தையுடைய வேப்பமரத்தின் காம்புகளில் அழகிய மலர்களின் புதுவரவானது, அதை அனுபவிக்க என்னுடைய தலைவன் இங்கில்லாததால் பயனில்லாமல்  போகுமோ?.தலைவன் என்னைவிட்டுப் பிரிந்து சென்றதைக் குறித்துத் தவறாக இந்த ஊரில் உள்ள மகளிரின் நாக்குகள் அலர் பேசுகின்றனர். அது, ஏழு நண்டுகள் சேர்ந்து உண்ண நினைத்துக் குழையச் செய்த, ஆற்றங்கரையில் முளைத்து வளர்ந்திருக்கும் வெள்ளிய கொம்புகளையுடைய அத்திமரத்தின் ஒரு பழத்தைப் போல நான் வருத்தப்படும்படி கல் என்ற ஒலியைத்தரும்படி இருக்கிறது. என சங்ககால பாடலும் ஆத்தங்கரைக்கும் காதலுக்குமான ஒற்றுமையை எடுத்து சொல்லுது. 

காதல் பிரிவு பொறுமை கொள்ளாது. அலைகடல்போல் மனசு கொந்தளிச்சுக்கிட்டே இருக்கும். சம்பந்தப்பட்டவங்க வரும்வரைக்கும் இயற்கையா நடக்கும் சின்ன சின்ன எதிர்மறையான விசயத்துக்கும்கூட அவங்கதான் காரணம்ன்னு  மனசு  கோபம் கொள்ளும் . தான் இப்படி இருக்க அவங்கதான் காரணம்ன்னு கொலைவெறி வரும்.  ஆனாலும் எப்பவாவது வருவாங்கன்னு காத்திருப்பாங்க. அப்படி வந்துட்டா, கோவமே கோவம் கொள்ளுமளவுக்கு கோவம்லாம் மறந்து ஆத்துமேட்டுல முத்தம் ஒன்னு கொடுத்தான்னு பாட்டு பாடிக்கிட்டே போகவேண்டியதுதான்....

பொன்னுமணி படத்துல வரும் எல்லா பாட்டுமே செம ஹிட். நெஞ்சுக்குள்ளே இன்னாரென.. பாட்டு பிடிக்காதவங்களே இருக்க மாட்டாங்க.  இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்.  இந்த பாட்டுல டான்ஸும், கார்த்திக்கின் முகபாவனையும் நல்லா இருக்கும். அக்னி நட்சத்திரம், மௌனராகம், வருசம் 16, கிழக்கு வாசல் மாதிரியான குறும்புத்தனமான நடிப்பை மட்டுமல்ல குணச்சித்திரமாகவும் நடிக்க தெரியும்ன்னு கார்த்திக் நிரூபித்த படமிது. ஹேய்ய்ய்ய் ஹூய்ய்ய்ன்னு துள்ளாம தன் ஸ்டைலிலிருந்து மாறி செமயா நடிச்சிருப்பார். இந்த பாட்டில் மட்டுமே கார்த்திக்கின் குறும்புத்தனம் தெரியும். மத்தபடி படம் முழுக்க முப்பது வயசுக்குண்டான குடும்பஸ்தன் மெச்சூரிட்டி  உருவத்திலும், நடிப்பிலும்  தெரியும். சௌந்தர்யா இந்த படத்துலதான் அறிமுகம். ரொம்ப அழகா இருந்த அவங்களை பெண்களுக்கும் பிடிச்சு போனது. அழகா இருக்குறது இல்லாம நல்லாவும் நடிச்சாங்க. திறமைசாலியான நடிகை. ஆனா, அற்பாயுசுல போய்ட்டாங்க. 

ஆத்து மேட்டுல
முத்தம் ஒன்னு கொடுத்தா
மொத்த கடன் தீராது காத்து
வாக்குல கண்ணடிச்சி கவுத்த
கெட்ட மனம் தேறாது...

 பட்டி தொட்டி
பக்கம் எல்லாம் லவ்வு
லவ்வு லவ் ஆச்சி கட்டி
வச்ச கட்ட வந்து இச்சி
இச்சி கிஸ் ஆச்சி

 அட ஆத்து மேட்டுல

வெட்டி கதையில
வேகம் கொறையல வீண்
பேச்சி ஏன் மானே தட்டி
கேட்டுக்க கிட்ட ஆளில்ல
நீ ஒன்னு தா மானே!

 கட்டாந்தரையில
கட்டில் இருக்குது காத்தாட
வா மாமா கட்டி புடிச்சிக்கோ
வட்டம் அடிச்சிக்கோ
கேப்பாரு யார் மாமா...

ஆத்துமேட்டுல...

 வெத்தலைய
போட்டு போட்டு முத்த
கரை நீ போட

 நித்தம் அத
பாத்து பாத்து பித்ததுல
நீ ஆட

 பட்டி தொட்டி
பக்கம் எல்லாம் லவ்வு
லவ்வு லவ் ஆச்சி
 கட்டி வச்ச
கட்ட வந்து இச்சி
இச்சி கிஸ் ஆச்சி
படம்: பொன்னுமணி
இசை: இளையராஜா
பாடியவர்கள்; எஸ்.பி.பி, எஸ்.ஜானகி
நடிகர்கள்: கார்த்திக், சௌந்தர்யா..

நன்றியுடன்,
ராஜி