இறைவனின் ஒவ்வொரு படைப்பிற்கும் அர்த்தம் உண்டு. அது நல்லவர்களோ தீயவர்களோ, புல்லோ பூண்டோ, புழுவோ பூச்சியோ ஆக எதுவாய் இருந்தால் அந்த உயிர் படைக்கப்பட்டதற்கும் , அதன் வாழ்வியல் சம்பந்தத்திற்கும் ஏதோ ஒரு அர்த்தம் இருக்கும். அசுரர்கள் படைப்பு, மனிதன் எப்படி வாழக்கூடாதென மக்களுக்கு உணர்த்த மகான்களின் படைப்பு மனிதன் எப்படி வாழவேண்டுமென்பதை உணர்த்த, பசு, காளை, குதிரைகள் அடுத்தவருக்கு உதவ, உழைப்பின் எடுத்துக்காட்டாய் இருக்கின்றது. நாய் நன்றியின் அடையாளம், நரி தந்திரத்தின் அடையாளம், காக்கை பகிர்ந்துன்பதின் அடையாளம்... அதேப்போல் புராண மாந்தர்களின் படைப்பிலும் ஒவ்வொரு அர்த்தமுண்டு. ஆனால், அகலிகையின் படைப்பிற்கு என்ன அர்த்தம்ன்னுதான் எனக்கு விளங்கவில்லை.
கற்புக்கரசி யார்ன்னு கேட்டால் சீதா, கண்ணகி, நளாயினி, அகலிகை, அனுசுயான்னு சட்டுன்னு சொல்லிடுவாங்க. கற்புக்கரசின்ற வார்த்தையை தவிர அகலிகை அனுபவித்தது ஏதுமில்லை. இறைவன் படைப்பினிலே பாவப்பட்ட ஜென்மம்ன்னா அது அகலிகைதான். சுவாரசியமும் சர்ச்சைக்குரிய பாத்திரமும்ன்றதாலயே அவள் பெயர் இன்றும் நிலைத்திருக்கிறது... அகலிகை பத்தி சொல்லும்போதெல்லாம் ராமன் கால் பட்டதால் பெண்ணானவள்ன்னு சொல்லி ராமனின் பெருமையை சொல்ல அகலிகை பயன்பட்டாளே தவிர அவளை மனுஷியாகக்கூட மதிக்க மறந்துவிட்டோம். அகலிகையின் கதை பல கேள்விகளை நமக்கு முன் எடுத்து வைக்கின்றது. அகலிகை படைப்பும் அவள் வாழ்வும் வினோதம்! அதனால், அவள் பெற்ற தாழ்வும், இறுதியில் மீள்வும் அந்த மீள்வு கொடுத்த புகழும் மேலும் வினோதம்.
அமுதம் வேண்டி பாற்கடலை கடையும்போது அமுதம் வெளிப்பட்டது. அதை பங்கிட மோகினி ரூபத்தில் விஷ்ணு பகவான் தோன்றினார். அவளது அழகில் அனைவரும் மயங்கினர். அந்த அழகினை கண்ட பிரம்மனுக்கு, இந்த அழகு அனைத்தும் அசுர வதம் முடிந்ததும் மறைந்துவிடும். அதனால் அழிவில்லாத அழகை உலகுக்கு கொடுக்க வேண்டுமென எண்ணம் உண்டானது. அதனால் மிக அழகான பெண்ணொருத்தியை படைத்து அவளுக்கு அஹல்யா என பெயரிட்டார். அழகு தமிழில் அவளது பெயர் அகல்யா, அகலிகைன்னு பெயர் உண்டானது. அகல்யான்ற வார்த்தைக்கு அழகின்மை இல்லாதவள்ன்னு அர்த்தம். அதாவது சிறு குறைக்கூட அவளது அழகில் சொல்லமுடியாது என்பதே இதன் பொருள். அமுதத்தோடு அகலிகை தோன்றியவள்ன்னும் ஒரு கதை உண்டு.
மிக அழகாய் இருந்த அந்த அகலிகையை பாதுகாக்க வேண்டி, முற்றும் துறந்த முனிவரான கௌதமரிடம் கொடுத்து வளர்க்க சொன்னார். கௌதமர் சப்தரிஷிகளில் ஒருவர். தவத்தில் மிகப் பெருமை வாய்ந்தவர். அவர் உயரிய பண்புகளை உடையவர். பிரம்மா, இந்த அழகைத்திரட்டிய பெண்ணை காக்க புலன்களை அடக்கிய முனிவரே சிறந்தவர் என்று கருதினான் அழகுடன், சிறந்த குணவதியாய் அகலிகை வளர்ந்து வந்தாள். திருமணப்பருவம் வந்ததும் அவளை திரும்ப பிரம்மனிடமே ஒப்படைத்தார் கௌதமர். பிரம்மலோகத்த்திலிருந்த அவளது அழகு ஈரேழு உலகுக்கும் பரவியது, அவள்மீது தேவர்கள் , உட்பட இந்திரன் அவளை மணக்க விரும்பினர். ஒப்பற்ற அழகியும், குணவதியான பெண்ணை மணப்பவன் லேசுப்பட்டவனாய் இருக்கக்கூடாதுன்னு எண்ணிய பிரம்மன், உங்களில் யார் முன்னும்பின்னும் முகங்கொண்ட பசுவைக் கண்டு, அதை மும்முறை வலம் வந்து வணங்கி, முதலில் என்னிடம் வந்து தக்க ஆதாரத்துடன் கூறுகிறீர்களோ, அவரே இந்த அகலிகைக்கு மாலைசூட்டத் தகுதியானவர்!'' என்றார். அவளை அடைவதற்காக இந்திரன் உள்ளிட்ட அனைவரும் உலகை சுற்றி முன்னும்பின்னுமாய் முகம் கொண்ட பசுவை தேடி கிளம்பினர். (இந்திரன் அழகில் அகலிகை மயங்கி அவரை மணக்க ஆசைப்பட்டதாகவும் சில ராமாயணத்தில் சொல்லப்படுகிறது).
எல்லாரும் உலகை வலம் வர ஆரம்பிக்கும்போது கௌதமர் நந்தவனத்தில் இருந்த பசு ஒன்று கன்று ஈன பிரசவ வலியால் துடிக்க ஆரம்பித்தது. அதற்கு பிரசவம் பார்க்க ஆரம்பித்தார் கௌதமர் . பசு கன்றினை பிரசவிக்க ஆரம்பித்தது. பசுவின் முன்னும் பின்னுமாய் முகம் கொண்ட பசுவினை கௌதமர் கண்டார். கன்றினை ஈன்ற பசுவினை மூன்று முறை வலம்வந்து வணங்கினார். பிரம்மன் நிபந்தனைப்படி அவர் அறியாமலே கௌதமர் நடந்துக்கொண்டார். அதனால், பிரம்மன் சபையில் அறிவித்தபடி அகலிகையை கௌதமருக்கு திருமணம் செய்வித்தார். இந்திரனோ உலகை முழுக்க தேடியும் அப்படிப்பட்ட பசு கிடைக்கததால் சோர்ந்து போய் பிரம்மலோகம் வந்து சேர்ந்து, நடந்ததை அறிந்து அவமானத்தால் முகம் சிவந்தான். (உலகை மும்முறை வலம் வந்தால் பெண்ணை தருவதாய் பிரம்மன் சொல்ல, எல்லாரும் உலகை சுற்றி வர கிளம்ப, கௌதமர் பசுவுக்கு பிரசவம் பார்க்கிறார். கர்ப்பமடைந்த பசு ஈரேழு உலகுக்கும் சமம்ன்னு வேதம் சொல்லுது. அதன்படி மூவுலகை வலம் வந்ததாய் அர்த்தமாகிறது.) இன்னொரு கதையில் கௌதமரும் சுயம்வரத்தில் ஈடுபட்டதாய் சொல்றாங்க.
இன்னொரு கதைப்படி கௌதமர் நல்ல முறையில் அகல்யாவை வளர்த்து, பத்திரமாய் திரும்ப ஒப்படைத்ததால், அதற்குப் பரிசாக பிரம்மன் அகல்யாவை அவருக்கே மணமுடித்து வைத்ததாகன் சொல்லப்படுது. இதனால் இந்திரன் ஏமாந்துப் போகிறான். ஆசைப்பட்ட அகல்யா கிடைக்காத சோகம் ஒரு புறம், போட்டியில் தோற்ற அவமானம் ஒரு புறம் என்று இரு துக்கங்களை சுமந்து இந்திரலோகம் திரும்புகிறான் இந்திரன். இந்த இடத்தில் முக்கியமாய் சொல்லவேண்டிய விசயம் ஒன்று உண்டு. அது என்னன்னா, கௌதம முனிவர் அகலிகையைவிட அதிக வயது மூத்தவர் என்பதும், கௌதமர் பிரம்மச்சரிய விரதத்தை மேற்கொண்டவர் என....
பிரம்மச்சரிய விரதத்தை கடைப்பிடித்ததால் அகலிகையுடன் கௌதமர் உடல் சேர்க்கையில் ஈடுபடுவதில்லை. கணவருக்கு பணிவிடை செய்வதிலேயே அகலிகை பொழுதை கழித்தாள். கௌதமரின் வியர்வை பட்டு அகலிகை கர்ப்பம் தரிக்கிறாள். அவள் சதானந்தன் என்ற ஆண்பிள்ளையை பெற்றெடுக்கிறாள். கௌதமர் பூஜையில் இருக்க, அகலிகை அவருக்கு பணிவிடையில் மூழ்கி கிடந்தாள். ஆனாலும் அவ்வப்போது காம உணர்ச்சி அகலிகைக்கு எழும். கௌதமரின் விரதத்தினை கண்டு அமைதியாய் இருந்துவிடுவாள். இப்படியே நாட்கள் நீண்டது..
ஒருநாள் கோழி கூவியது. பிரம்ம முகூர்த்தத்தில் முனிவர்கள் குளிக்கவேண்டுமென்பது விதி. கௌதமர் நீராட அருகிலிருக்கும் நதிக்கரைக்கு செல்கிறார். சிறிது நேரத்தில் வாசல் கதவு தட்டும் சத்தம் கேட்டு அகலிகை, கதவை திறந்து, என்ன சுவாமி?! எதாவது மறந்துவிட்டீர்களா?! என விசாரித்தாள். எதையும் மறக்கவில்லை அகலிகா! ஆகாயத்தினை பார். இப்பொழுதுதான் மூன்றாவது ஜாமம் ஆரம்பித்திருக்கின்றது. வா! சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்கலாமென கௌதமர் அழைக்க, அகலிகை பக்கம் சென்று அமர்கிறாள். பேச்சு திசை மாறி கௌதமர், அகலிகையுடன் உடல்சேர்க்கையில் ஈடுபட்டார். இதென்ன புது வழக்கம்?! அதுவும் அதிகாலையில்!! போகும் வழியில் பறவைகள், மிருகங்களின் புணர்ச்சியில் இருப்பதை கண்ட மனுசன் மூடு ஏறி வந்துட்டாரோ என மனம் சிந்தித்தாலும், கணவன் சொல்லுக்கு மறுபேச்சு பேசுவது அழகல்ல என எண்ணி, கௌதமருக்கு உடன்பட்டாள். அவளது நீண்ட நாள் ஆசை நிறைவேறி உடலும், உள்ளமும் திருப்தியுற்ற மயக்கம் தெளியாமல் கௌதமரின் அணைப்பில் தன்னை மறந்த நிலையில் அகலிகை இருந்தாள். (இந்திரன் என உணர்ந்தே அகலிகை அமைதியாய் இருந்ததாகவும் ஒருசில ராமாயணத்தில் உண்டு)
அகலிகை! கதவை திற ! என்ற குரல் கேட்டு அகலிகை திடுக்கிட்டு வாரி சுருட்டிக்கொண்டு எழுந்தாள். கதவை திறந்து பார்த்தால் வாசலில் ஒரு கௌதமரும், உள்ளே ஒரு கௌதமரும் இருப்பதைக்கண்டு விக்கித்து நின்றாள். இந்திரன் வேண்டுகோளுக்கேற்ப சந்திரன் சேவலாய் மாறி கூவியதும் நீராட சென்ற கௌதமர் கொஞ்ச தூரம் சென்றதுதான் இன்னும் பொழுது விடியவில்லை என்பதை உணர்ந்து, ஏதோ தவறு நடக்க இருக்கிறது என எண்ணி, அவசர அவசரமாக தன் இல்லம் வந்தார் கௌதமர். அங்கு அகலிகையுடன், தன் உருவத்தில் இன்னொருவர் இருப்பதையும் கண்டு நடந்ததை ஞானத்தால் உணர்ந்து கடுங்கோபங்கொண்டு, ஆண்மை தினவெடுத்து எந்த யோனிக்கு ஆசைப்பட்டு அகலிகையுடன் கூடினாயோ, ஆண்மையற்று அலியாக மாறி,உடலெங்கும் யோனியாய் மாறு என இந்திரனையும், இந்திரனுக்கு உதவிய சந்திரன் உடல் தேய்ந்து பொலிவிழக்கவும் சாபமிட்டார்.
உனக்கு நான் என்ன குறை வைத்தேன்? எத்தனை மந்திரங்கள் கற்றுக்கொடுத்தேன்? கடைசியில் நீ என்ன செய்துவிட்டாய்! பிரம்மனின் புதல்வியான நீயா ஈரேழு உலகங்களும் போற்றும் கற்புக்கரசி? இனிமேல் அப்படிக் கிடையாது. அற்ப உணர்வுகளுக்குப் பலியாகும் சிற்றின்பக்காரியான நீ, எனக்கு மனைவியாக இருக்கத் தகுதியில்லாதவள். என கடுஞ்சொல் வீசினார் கௌதமர். சுவாமி! என்னை தங்களுக்கு தெரியாதா?! தங்கள் உருக்கொண்டு வந்ததால், தாங்கள்தான் என எண்ணி உடன்பட்டுவிட்டேன் என்று கதறினாள் அகலிகை. பார்க்கும் பொருளில் எல்லாம் என் உரு காணும் அளவுக்கு என்மீது பிரேமை கொண்டிருந்தால், எனக்கும் மற்றவனுக்கும் வித்தியாசம் தெரியாதா?! காமப்பிடியில் மனம் இழந்தாய், மதி இழந்தாய், அறுதி இட்டு பிரித்து அரிய விழையவில்லை.. உன் மனமும் அதை நாடியது.. இதுவுமொரு குற்றமே.. ஆகையால் கணவன் யார்?! மாற்றான் யார் என உணராத நீ எதையும் உணராத கல்லாய் மாறக்கடவது என சாபமிட்டார்.
இந்திரன், சந்திரன், அகலிகை பாவ விமோசனம் வேண்டி நிற்க, உடல் முழுக்க யோனிக்கு பதிலாய் கண்களாய் மாறவும், சந்திரன் சிவனை வேண்டி சாப விமோசனம் பெறவும், ஆயிரம் ஆண்டுகாலம் கழித்து மனிதர்குல மாணிக்கமாய் வரும் ராமரின் கால் தூசு பட்டு (கால் இல்லை.. கால் தூசு பட்டு எனத்தான் சாப விமோசனம் தந்தார். பொண்டாட்டியை அடுத்தவர் தீண்டாம பார்த்துக்கிறாராம்) பெண்ணாய் மாறுவாய் என சாப விமோசனம் தந்தார். கோபத்தில் சபித்ததால் கௌதமரின் தவ வலிமை குறைந்தது. அவரும் தவம் செய்ய கிளம்பிவிட்டார்.
தெரிந்தே தவறு செய்த இந்திரன் சுசீந்தரத்தில் வந்து சிவனை வழிபட்டு தனது சாபத்திலிருந்து விமோசனம் பெற்றான். அவ்வாறே சந்திரனும் சாப விமோசனம் பெற்றான். அவர்கள் இருவரும் தேவர்கள். யாகத்தின் பலனை அளிக்கும் இடத்தில் இருப்பவர்கள். அதனால் சாபத்திலிருந்து தப்பித்தனரோ!! ஆனால் அகலிகையோ சாதாரண மானுடப்பெண். ஆதனால் ஆயிரம் ஆண்டுகள் கல்லாய் கிடந்தாள்.
காலம் உருண்டோடியது. ராமன் அந்த பக்கம் வந்தான். அவனது கால் தூசு பட்டது. மீண்டும் உருக்கொண்டாள். பழைய உருவம் மட்டுமல்லாது, பழைய கற்போடு திரும்பினாள். கௌதமரோடு ராமன் அவளை சேர்பித்துவிட்டு அவ்விடம் அகன்றார். அவளும் அவர் பின்னே நடந்தாள்.. ஆனால் அவள் மனதில் பல கேள்விகள் அலைமோதியது... உலகிலே ஒப்பற்ற அழகியாய் பிறந்தேன்.. குணத்திலும் சிறிதும் பழுதில்லாமல் வளர்ந்தேன். பார்ப்பவர்கள் அனைவரும் மனையாளாய் ஏற்கும்படி இருந்தாலும், வயதில் மூத்தவரும் பிரம்மச்சரிய கணவனுக்கு தன்னை மணமுடித்தது ஏன்?! மணம் முடித்தபின்னும் தன்னோட ஆசாபாசங்களை கௌதமர் உணர்ந்து நடக்காதது ஏன்?! தன் பழி உணர்ச்சியையும், காமத்தையும் தீர்த்துக்கொள்ள இந்திரன் கௌதமர் உருக்கொண்டு வந்தது ஏன்?! சகல மந்திரமும் கற்றுன் தேர்ந்திருந்தும் வந்தது கணவன் அல்ல என்பதை உணரமுடியாமல் காமம் என்னை ஆட்கொண்டது ஏன்?! காமத்தின் பிடியில் சிக்கியது என் தவறா?! கூவியது பொய்ச்சேவல் என்பதை முற்றும் உணர்ந்த முனிவரும், சிறந்த தவசியுமான கௌதமரால் உணரமுடியாத போது தன்னால் எப்படி போலி கௌதமரை உணரமுடியும்?! கொடுத்த சாபத்தினை இந்திரனுக்கு தளர்த்த முன்வந்த கௌதமர் தனக்கு இரங்காதது ஏன்?! அப்படியெனில் ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதியா?! தேவர்கள் அறிந்தே எது செய்தாலும் தவறில்லையா?! தெரியாமல் தவறு செய்த மானுடப்பெண்மீது மட்டும் தவறு சொல்வது எப்படி?!
கைதவறி விழுந்தால் உடைப்பட கற்பு ஒன்றும் மண் சட்டியில்லையே! என பலவாறாய் எண்ணியபடி கௌதமரின் பின்னே மீண்டும் தவ வாழ்க்கைக்கு சென்றாள். அவளின் தவ வலிமையின் பொருட்டு, ராமர்-சீதா திருமணத்தை அகலிகையின் மகனான சதானந்தன் நடத்தி வைக்கும் பாக்கியம் பெற்றாள். ஆனாலும் அவளது கேள்விகளுக்கு இன்றுவரை பதில் இல்லை. உங்களுக்கு தெரிஞ்சா அகலிகையின் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்களேன்.
வெளிச்சத்தின் பின்னே தொடரும்...
நன்றியுடன்,
ராஜி
அகலிகை சார்பாய் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகள் நியாயமானவை.
ReplyDeleteபதில் சொல்வார்தான் யாருமில்லை
Deleteகூவியது பொய்ச்சேவல் என்பதை முற்றும் உணர்ந்த முனிவரும், சிறந்த தவசியுமான கௌதமரால் உணரமுடியாத போது தன்னால் எப்படி போலி கௌதமரை உணரமுடியும்?! கொடுத்த சாபத்தினை இந்திரனுக்கு தளர்த்த முன்வந்த கௌதமர் தனக்கு இரங்காதது ஏன்?! அப்படியெனில் ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதியா?! தேவர்கள் அறிந்தே எது செய்தாலும் தவறில்லையா?! தெரியாமல் தவறு செய்த மானுடப்பெண்மீது மட்டும் தவறு சொல்வது எப்படி?!
ReplyDeleteநியாயமானக் கேள்விகள்தான்
அகலிகையின் பிறப்பின் அர்த்தம் என்னவென்றே புரியலை. இதனால் சொல்ல வரும் கருத்தும் என்னன்னு புரியலைண்ணா
Deleteஇது ஒரு விதமான பெண்ணடிமைத்தனம்தான். பெண்ணுக்கு உணர்ச்சிகள் இருக்கக்கூடாதா...அவளென்ன கல்லா?!? ஒருவனின் கால் நடை அதிர்வு, அவன் ஸ்பரிசம், அவன் கழுத்து வியர்வை போன்றவைகள் ஒரு மனைவிக்குத்தெரிய வேண்டுமாம். புராணங்களில் இது போன்ற பிற்போக்கான கதைகள் நிறைய உண்டு.
ReplyDelete