Wednesday, May 29, 2019

ராமர் பாலம் உண்மையா?! பொய்யா?! - தெரிந்த கதை.. தெரியாத உண்மை

இன்று நமது தெரிந்த கதை தெரியாத உண்மையில்,இராமர் பாலம் பற்றிய சில உண்மைகளையும், ஆச்சர்யமூட்டும் தகவல்களையும் பார்க்கபோகிறோம்.   இராமர் பாலம் என்று ஒரு பாலம் இருந்ததா?இல்லையா? என பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்ற வேளையில் அது உண்மையா? பொய்யா?என நாம் இங்கே விவாதங்கள் செய்ய இந்தபதிவினை தொடரவில்லை. சில மரபுவழி   கதைகளையும், சில வரலாற்றுரீதியான உண்மைகளையும் அதற்கான ஆதாரங்களையும் மட்டும்தான் இங்க பார்க்க போகிறோம்.
 ராவணன் சீதையை தூக்கி சென்றதினால்தான்  இராமர் பாலம் தோன்ற காரணமாயிருந்தது. அதனால்தான் சீதையை மீட்க ராம, ராவண யுத்தம் தொடங்கியது. சீதாபிராட்டியை  ராவணன் தூக்கி செல்லும்போது ஜடாயு என்ற பறவை ராவணை வழிமறித்தது. ஜடாயுவுக்கு மட்டும் ஏன்? ராமன்மீது அவ்வளவு  பாசம்.  அந்த பாசத்தின் பின்னும்
ஒரு சிறிய கதை உண்டு கருடனை நம் எல்லோருக்கும் தெரியும். அந்த கருடனின் அண்ணன் அருணன்.இந்த அருணனுக்கு இரண்டு மகன்கள், மூத்தவன் சம்பாதி, இளையவன் ஜடாயு, ஒருமுறை சம்பாதிக்கும் ஜடாயுவுக்கும் இடையில் ஒரு போட்டி, இருவரில் யார் உயரப் பறப்பது என்று. ஜடாயு ஆர்வத்தில் சூரியனின் மிக அருகில் செல்ல, அவனைத் தடுத்து சம்பாதி தன் சிறகுகளை விரித்து தன் தமையனை காத்தான்.அப்போது, சூரிய வெப்பத்தால் சம்பாதியின்  சிறகுகள் கருகின. முடிவில் இராம நாமம் ஜெபித்து சம்பாதிக்கு சிறகுகள் மீண்டும் முளைக்கின்றன. ஆகையால்,இருவருக்கும் ராமன்மீது தீராத பக்தி உண்டு
இராவணன் சீதையை தூக்கி செல்லும்போது பராக்கிரமம்மிக்க ஜடாயு இராவணன்மேல் பாய்ந்து தாக்கினான் ராவணன், தன்னுடைய கொடிய வேலை ஜடாயுவின்மீது எறிந்தான் அந்த வேலினால் ஜடாயுவை ஒன்றும் செய்ய முடியவில்லை.மேலும் ஜடாயு இராவணனின் மார்பிலும் தோள்களிலும் தன் சிறகுகளால் ஓங்கி அடித்தான்.அதனால் வலிமை இழந்து கீழே விழுந்து மூர்ச்சையான இராவணன் தலை சாய்த்துக் கிடந்தான். ஜாடயுவை எந்த ஆயுத்தாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆகையால், சிவபெருமான் தனக்கு அளித்த சந்திரகாசம் என்னும் வாளினை கொண்டு ஜடாயுவை வெட்டி வீழ்த்தினான்.இந்த சந்திரகாசம் என்னும் வாளுக்கும்் ஒரு தனிக்கதை உண்டு.

 இராவணன் பலமுறை பலரிடம் தோற்றதினால் துவண்டு போயிருந்தான்.  வாலியிடம் ஒருமுறை நேருக்குநேர் யுத்தத்திலும் கார்த்தவீரியார்ஜுனன் என்பவனிடமும் தோற்று போனான்.மேலும் கைலாயத்தில் சென்று தன்னுடைய பராக்கிரமத்தை காட்டவே சிவபெருமானின் கால் கட்டைவிரலால் அழுந்தபட்டு மலையின் கீழ் நசுங்கி கிடந்தான்.அப்பொழுது, தன் உடம்பிலிருந்து எடுத்த நரம்பின் மூலம் வீணை செய்து அதன் மூலம் கானம் இசைத்து சிவனின் அருளை பெற்றான்.சிவன் அளித்த ஆயுதமே சந்திரகாசம், என்னும் வாள். இந்த சந்திரகாசமானது இந்திரனின் வஜ்ராயுதத்தை விடவும் பலம் பொருந்தியது இந்திரனின் வஜ்ராயுதம் மலைகளைப் பிளக்கும் வல்லமை கொண்டது அதனால் தான் ஜடாயு வீழ்ந்தபோது மலை வீழ்ந்த மாதிரி வீழ்ந்தான் எனவும் சொல்லப்படுவதுண்டு.
ஜடாயு கூறியதை வைத்து சீதா பிராட்டியை தூக்கி சென்ற இலங்கேஸ்வரனான இராவணனை வதம் செய்ய ஸ்ரீ ராமர் தலைமையில், ஹனுமன் அமைத்த பாலமே, இது என்று சொல்லும் இலங்கை வாழ் மக்கள், இதை ஹனுமன், பாலம் என்றும் சொல்வதுண்டு,இந்த இராமர் பாலத்தின் கட்டுமானத்தின் பின் உள்ள பல வியக்கத்தக்க விஷயங்களையும் அதிசயங்களையும் நாசா அண்மையில் தனது செயக்கைக்கோளை பயன்படுத்தி எடுத்த புகைப்படபடங்களை கொண்டு செய்த ஆராய்ச்சியின் மூலமாக தெளிவாக ஒரு செய்தியை வெளியிட்டது. இராமர் பாலம் உண்மைதான் இன்றைய காலகட்டத்தில் உள்ள உயர்தரமான பொறியியல் தொழில்நுட்பங்களை வைத்து கூட இப்படி ஒரு பாலத்தை கட்டமுடியாது,என கூறியது. மேலும் இராமர் பாலம் வெறும் மணல் திட்டுகள் அல்ல,மற்றும் இது வெறும் கற்களை தூக்கி வீசி கட்டியவாறு இல்லை. மேலும்,இந்த பாலம் கடல் அலைகளால் உருவாக்கப்படவில்லை இதன் முனைகள் உறுதியாக  மிக சரியாக திட்டமிட்டு கட்டிமுடிக்கப்பட்ட கட்டுமானம் என தெளிவாக தெரிகிறது என ஒரு அறிக்கயை வெளியிட்டது.
இராமர் பாலம் எனபது வரலாற்று தொன்மைமிக்க பாலம் என்பதற்கு மாற்று கருத்து  இல்லை. இந்தியாவை இலங்கையுடன் இணைக்கும் இந்த ராமர் பாலம் கடலுக்கடியில் இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி கடற்கரையிலிருந்து துவங்கி இலங்கை வரை இராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ளதை போலவே மிக சரியான இடத்தில் அமைந்திருகிறது.மேலும் திருமறைக்காடு என்னும் வேதாரண்ய கடற்கரையில் பல 'ஸ்ரீ ராமர் பாத ' சிறு கோவில்கள் இதற்கு சான்று. இதனால் இராமாயணம் சொல்வது உண்மைதான்..பாக் நீரிணைப்பில் உள்ள இப்பாலத்தின் மீது மணல் குவிந்துள்ளதால், சில இடங்களில் மட்டும் இப்பாலம் வெளிப்படுகிறது.இவற்றை திட்டு என்றும் குட்டித் தீவு என்றும் மீனவர்கள் அழைக்கின்றனர்.இப்பாலம், கோரல் ரீப் என்றழைக்கப்படும் பவளப்பாறைகளைக் கொண்டது. இப்பவளப்பாறை படுகையில் மீன்கள் மற்றும் கடல்வாழ் ஊயிரினங்கள் பல வசிக்கின்றன.இப்பாலத்தின் மீது இப்போதும் சிலர் நடந்து செல்கின்றனர்.கடலுக்கடியில் மூழ்கியுள்ள பாலத்தின் மீது நடந்து சென்றால் ,முழங்கால் ஆளவுக்கு மட்டும் கடல்நீர் உள்ளது. 5 கி.மீ. தூரம் வரை நடந்தே செல்லலாம் என சொல்லபடுகிறது. 1964 வரை தினசரி வழிபாடு அங்கு நடைபெற்று வந்துள்ளது.ராமர் பாலத்தில் தற்போது தீவுகளாய் விளங்கும் திட்டைகளில் வது திட்டை ராமர் திட்டை’ என்றே அழைக்கப்பட்டு அங்கு மக்கள் வசித்து வந்துள்ளனர்.இன்றும் பாலத்தை கடந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் ஸ்ரீராமர் பாலத்திற்கு நீராட்டல்” எனும் பூஜை செய்துதான் அதைக் கடந்து செல்லுகிறார்கள்.மேலும் படகுகள் கரையிலிருந்து நடுக்கடலுக்கு செல்ல இப்பாலத்தில் சில இடங்களில் உடைப்பை மீனவர்கள் ஏற்படுத்தியுள்ளனர். சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம்சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் என்று பாரதியார் இப்பாலத்தைப் பற்றி பாடியுள்ளார்.ராமேஸ்வரம் தீவைதமிழகத்துடன் தரை வழியில் இணைக்க பாம்பன் பாலம் கட்டியது கேமன் இந்தியா என்ற நிறுவனம்இந்த ராமர் பாலத்தை பயன்படுத்தி இலங்கைக்கு தரைவழிப் பாலம் அமைக்கலாம் என்று மத்திய அரசுக்கு ஏற்கெனவே ஆலோசனை வழங்கியிருந்தது. 
அகழ்வாராய்ச்சியாளர்களின் கூற்றின் படி, இராம சேது பாலம் கட்டிமுடிக்கப்பட்டு ஏறத்தாழ 17 லட்சம் ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம் என கூறப்படுகிறது.கி.பி .1480 வில் கடலில் ஏற்பட்ட ஒரு பிரளயத்தால்  இராம சேது பாலம் அழிந்துவிட்டதாக அறிவியல் கூற்றுகள் கூறுகின்றன. எனவே, 1480 முன்பு வரை இராம சேது பயன்பாட்டில் தான் இருந்திருகிறது. அதை மக்கள் நடப்பதற்கு உபயோகப்படுத்தியுள்ளனர்.இந்துக்காலக்கணக்குப்படி முதல் யுகமான திரேதாயுகத்தின் முடிவில் இராமாயணம் நடைபெற்றது. ராமாயணத்தின் இறுதிக்கட்டத்தில் தான் இந்த ராமர் பாலம் கட்டப்பட்டது. கி மு 1450 வாக்கில்  இலங்கையை ஆண்ட மன்னன் தினமும் குதிரைவீரர்களிடம் இராமேஸ்வரம் இராமநாதசுவாமிக்கு அபிஷேகம் செய்வதற்கு பால் கொடுத்து அனுப்பியுள்ளதாகவும் .அந்த குதிரைவீரர்கள் இந்த ராமர் பாலம் வழியாக இலங்கையிலிருந்து தினமும் இராமேஸ்வரத்திற்கு வந்து சென்றுள்ளதாகவும் சில கல்வெட்டு செய்திகள் கூறுகின்றன அதை சிலர் மரபுவழி செய்தியாகவும் சொல்வதுண்டு.
இந்த இராமர் பாலத்தின் முக்கிய அம்சமே மிதக்கும் கற்கள் பற்றிய செய்திகள்தான். இது நிலன் மற்றும் நளன் இவர்களின் கைங்கரியத்தால் தான் கற்கள் மிதக்கின்றன என சிலர் புராணங்களில் கூறியுள்ளனர். ஆனால், கடந்த முறை சுனாமியின் சீற்றத்தின் போது கடலில் சிலர் அந்த மிதக்கும் கற்களை கண்டதாகவும். அவை இன்னும் கூட இருப்பதாகவும் கூறுகின்றனர். செங்கல்பட்டு புதிய பஸ் நிலையத்திற்கு அருகே ஒரு ராமர் கோவில் இருந்தது அங்கே சுமார் 5 வருடங்களுக்கு முன்பு இதுபோல ராமர் பாலத்தில் இருந்து எடுத்து வந்த ஒருகல்லை காட்சிக்கு வைத்திருந்தனர் அங்கு வைத்திருந்த தண்ணீர் தொட்டியில் அந்த கற்கள் மிதந்ததை நான் பார்த்து இருக்கிறேன்.
இராம சேது பாலம் தனுஷ்கோடியின் பாம்பன் தீவில் தொடங்கி இலங்கையின் மன்னார் தீவு வரை நீள்கிறது. இந்த பகுத்தியில் கடல் மிகவும் ஆழமற்று காணப்படுகிறது. கிட்டதட்ட 1௦ மீட்டர் ஆழம் மட்டுமே உள்ளது இராம சேது பாலத்தினை வடிவமைக்க மிதக்கும் கற்களை பயன்படுத்தியுள்ளனர்.கிட்டத்தட்ட 30 கி.மீ நீளமும், 3 கி.மீ அகலமும் கொண்டது இந்த இராம சேது என கூறப்படுகிறது. இதை வெரும் ஐந்து நாட்களில் ஒரு கோடி வானரங்களின் உதவியோடு, நளன் என்ற தலைமை வானரத்தின் கட்டுமான திட்டத்தின் படி  கட்டிமுடிக்கப்பட்டது, என சொல்லபடுவதுண்டு.இராம சேது இதை பற்றிய குறிப்புகள் கதைகள் நம்முடைய இதிகாசங்களில் இருக்கின்றன. இராவணனின் ஒற்றன் ஷார்துலா என்பவன் அக்கரையில் முகாம் கொண்டிருக்கும் வானர சேனைகளை பார்த்து பயந்து, இராவணனுக்கு எச்சரிக்கை செய்தி ஒன்றை அனுப்பினான். உடனே இராவணன் வானரர்களால் தானே இராமனுக்கு பலம் என அறிந்து தன்னுடைய ராஜ தந்திரங்களை பிரயோகித்தான். சுகா என்ற தன்னுடைய பிரதிநிதியை, சுக்ரீவனிடம் அனுப்பி வாலிக்கும் தனக்கும் நல்ல நட்பு இருந்ததாகவும்,  தான் சுக்ரீவனை உடன் பிறவா சகோதரனாக மதிப்பதாகவும் சொல்லி, தூது அனுப்பினான். மேலும், சுக்ரீவன் இராமனை விட்டுவிட்டு தன் பக்கம் வருமாறும் அழைப்பு விடுத்த ஓலையை வானரர்களின் முகாமிற்கு எடுத்து சென்ற போது காவலர்களால் பிடிக்கப்பட்டு அவையின் முன்னே நிறுத்தபட்டான் சுகா. வானரர்கள் அவனை கொல்ல பாய்ந்தனர் .சுகா தன் உயிருக்குப் பயந்து அலறவே அதைகேட்டு வந்த இராமர் எதிரியின் பிரதிநிதியாக வந்திருப்பவரை துன்புறுத்துவது தவறு எனகூறி அவனை விடுவிக்க சொன்னார்.
சுகா இலங்கைக்கு திரும்ம்பி செல்ல ஆயத்தமான போது அவன் வானரர்களின் பலம் மற்றும் அவர்கள் பாலம் கட்ட எடுக்கும் முயற்சியையும் இராவணனிடம் தெரிவித்துவிட்டால் நம்முடைய பலம் மற்றும் பலவீனம் எதிரிக்கு தெரிந்து விடகூடும்m எனகருதி அவனை கைது செய்து காவலில் வைக்க ஆணையிட்டான் அங்கதான். வானரர்கள் பாலம் கட்டி முடித்து வெற்றிகரமாக கடலை கடந்து அக்கரைக்கு சென்ற பிறகு தான் சுகாவை விடுவித்தனர். இதை விட சுவராஷ்யமான கதை ஒன்று உண்டு பாலம் கட்டுமான பணிகள் தொடங்கியாகிவிட்டன. அபொழுது, கட்டுமான பணிசெய்யும் வானரங்களுக்கு தலைமை நளன் என்னும் வானரம். அவர் ஆஞ்சநேயர் கொடுக்கும் பாறைகளை வலக்கையில் தாங்கி வைத்திருப்பதால் அடுத்தடுத்து ஹனுமன் கொடுக்கும் பாறைகளை, இடக்கையால் வாங்கி பாலத்தில் சேர்த்தார் நளன், அதற்கு ஹனுமன், நான் கொடுக்கும் பாறைகளை அலட்சியமாக இடக்கையில் வாங்குகிறானே இந்த நளன், முதலமைச்சரான என்னை மதிக்கவில்லை, என்று எண்ணி தானே அணையில் பாறைகளை சேர்க்க தொடங்கினார். ஆனால், அந்த பாறைகள் அனைத்தும் கட்டுமானத்திற்குள் சேராமல் கடலில் மூழ்கி விட்டன. இதை தொலைவில் இருந்து பார்த்துகொண்டு இருந்தார் நம் இராமச்சந்திர மூர்த்தி, உடனே ஆஞ்சநேயரை பார்த்து ஆஞ்சநேயா தொழில் துறையில் பெரியவர் சிறியவர் என்று பார்க்க கூடாது, நீ மலைகளை நளன் மூலமாகவே அணையில் சேர்பாயாக" என்றார்.
இதை பார்த்து கொண்டிருந்த இளவல் இலட்சுமணர் இராமரைப் பார்த்து "அண்ணா நளன் கையால் சேர்க்கின்ற பாறைகள் நீரில் அமுந்தாமல் மிதக்கின்றன.ஹனுமான் சேர்க்கின்ற பாறைகள் நீரில் அழுந்தி விடுகின்றன. ஏன்?"என்று கேட்டார்.அதற்க்கு ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி தம்பி இலட்சுமணா, சூர்ய கிரகணம். நடக்கும் கிரகண காலத்தில் தெய்வத்தினை, குறித்து ஜபம் செய்தால் ஒன்றுக்கு ஆயிரமாகப் பலன் உண்டாகும்.அதைவிட தண்ணீரில் மூழ்கி மந்திர ஜபம் செய்தால் ஒன்றுக்கு லட்சமாகப் பலன் அதிகமாகும் அதனால் தான் மாதவேந்திரர் என்ற மகரிஷி,ஒருமுறை, ஒரு கானகத்தினுள் சூர்ய கிரகணம் அன்று நீரில் ழுழுகி தவம் செய்து கொண்டிருந்தார்.அபொழுது இந்த நளன் என்னும் வானரம் குட்டி குரங்காக இருந்தது. குரங்குகளுக்குச் சேட்டை செய்வது எனபது பிடித்தமான ஒன்று. அது நீரில் தவம் செய்து கொண்டிருந்த முனிவர் மீது கற்களை எறிந்து விளையாடி கொண்டிருந்தது முனிவர் தவத்தை விட்டு எழுந்து வந்து குரங்குகளை விரட்டி விட்டு மீண்டும் நீரில் முழுகி தவம் செய்தார்.
மாதவேந்திரர் பலமுறை அந்த குட்டி குரங்கை விரட்டியும் நளன் என்ற அந்த குட்டி குரங்கு கல்லை விட்டு எறிந்து கொண்டே தான் இருந்தது, ஜபம் செய்யும் பொழுது கோபம் கொண்டு சாபம் விட்டால் ஜபசக்தி குறைந்து விடும். அதனால் அம்முனிவர் குரங்குக்கு சாபம் கொடுக்காமல், "இக்குரங்கு எரியும் கற்கள் தண்ணீருக்குள் மூழுகாமல் மிதக்க கடவன" என்று கூறிக்கொண்டு தண்ணீருக்குள் நின்று கொண்டு ஜபம்செய்ய தொடங்கினார். குரங்கு தான் எறியும் கற்கள் முழுகாமல் மிதப்பதினால் விளையாட்டின் ஆர்வம் இல்லாமல், அங்கிருந்து சென்று விட்டது. அந்த ஜபத்தின் நன்மையால் தான், இந்த நளன் இடுகிற கற்கள் தண்ணீர்ல் அழுந்தாமல் மிதக்கின்றன என்றரர், ஸ்ரீ ராமர் .அதனால் நளன் மூலமாக தான் நாம் இந்த அணையை கட்ட வேண்டும் என ஸ்ரீ ராமச்சதிர மூர்த்தி லட்சுமணிடம் கூறினார். இவ்வாறாக வானரங்கள் இரவு பகலாக பணி செய்து ஐந்து நாட்களில் அணையை கட்டி முடித்தன.அந்த அணையின் அழகைக் கண்டு இராமர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அதற்கு பரிசாக நளனை கௌரவிக்கும் விதமாக வருணபகவான்  தனக்கு முன் கொடுத்த நவரத்தின மாலையை நளனுக்குப் பரிசாக வழங்கினார்.
இந்த இராம சேது பாலத்தை ஆதாம் பாலம் எனவும் சிலர் குறிப்பிடுகின்றனர். அதற்கு பல்வேறு கதைகள் சொல்லபடுகிறது. இலங்கையில் இறக்கி விடப்பட்ட உலகின் முதல் மனிதரான ஆதாம், இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு வர இப்பாலத்தைப் பயன்படுத்தியாகவும்,ஆதாம், ஏவாளுக்கு பிறந்த குழந்தைகளான, ஆபில், ஹாபில் ஆகிய இருவரில் ஓருவரின் சமாதி இராமேஸ்வரம் ரயில் நிலையம் அருகே உள்ளது எனவும்.ஒரு இஸ்லாமிய குடும்பத்தினரால் பராமரிக்கப்படும் ஹாபில் தர்ஹாவுக்கு செல்வோரிடம், ஆதம் பாலம் என்பது ஆதாம் நடந்த உலகின் முதற் பாலம் ஏன்று விவரிக்கின்றனர்.ஆகவே இப்பாலத்துக்கு ஆதம் பாலம் என பெயரிடப்பட்டதாவும் கதைகள் உண்டு. ஆனால், உண்மை என்னவென்று அடுத்துவரும் ஆராய்ச்சி கட்டுரைகள்  மூலமாக பார்க்கலாம். மேலும் இதிலும் சிறப்பு என்னவென்றால் புத்தர் இந்த பாலத்தின் மீது நடந்து சென்றதாகவும் வரலாறு உண்டு.
இந்த ராமர் பாலம் எவ்வாறு ஆதம் பாலம் என மாற்றி அழைக்கப்பட்டது என பார்ர்க்கலாம். உலக புகழ் பெற்ற இந்திய சரித்திர ஆராய்ச்சியாளர் டாக்டர் எஸ் கல்யாணராமன் இதுபற்றி தெளிவாக விளக்கியுள்ளார்.ஆங்கிலேயர் காலத்தில் எடுக்க பட்ட ஆய்வுகள், அறிக்கையாக சமர்பிக்கப்பட்டன. அதில் 1747 ல்  நெதர்லாந்த் நாட்டில் உள்ள ஒரு அறிக்கையில் தனுஷ்கோடிக்கு முன்னே ஒரு கோவில் இருந்ததாகவும் தெளிவாக இந்த இராமர் பாலத்தை, இராமர் பிரிட்ஜ் என்றே குரிபிடுகின்றனர். அவர்கர் (டச்சுகாரர்கள் )அந்த சமயத்தில் இந்தோனேஷியா தீவுகளையும் ஆக்கிரமித்து கொண்டு இருந்தார்கள்.
மேலும் 1788 ல் ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த ஜோசப் பார்க்ஸ் என்ற   தாவரவியல் ஆராய்ச்சியாளர் இராமர் கோவிலை பார்த்து, இராமர் கோவில் என்று எழுதி தனுஷ்கோடியையும் தலைமன்னாரையும் இணைக்க கூடிய அந்த பாலத்திற்கு இராமர் பாலம் என தெளிவாக விளக்கியுள்ளார்.அந்த வரைபடம் முகலாய சக்ரவர்த்திகளின் ஹிந்துஸ்தான் வரைபடங்கள் (Hindhusthaan  Map of Mohal Empaires ) என்ற நூலில் 5 X  6 அடி வரைபடமாக தஞ்சை சரஸ்வதி மகாலில் இன்னமும் இருக்கிறது.
இது பிரிடிஷ்காரர்கள் காலத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு அறிக்கை கி பி 1799 ல எடுக்கப்பட்டது அவற்றில் கூட இராமர் பிரிஜ் .இராமர் பிரிஜ் இ ராமர் பிரிஜ் என்றுதான் வரிக்கு வரி சொல்லப்பட்டு இருக்கிறது. இவ்வறிக்கை மேலும் சிங்கள தீவிற்கும் பாரதத்திற்கும் நடுவில் இருக்க கூடிய ஒரு பாலம் இதில் நடந்து கொண்டு இருக்கிறார்கள், இது நடை பாதை,இங்கு மக்களும் இதில் இருக்கும் திட்டுகளில் வாழ்கிறார்கள், என்று கூறுகிறது.ஆனால், அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கத்தால் முதல் புவியல் ஜெனரலாக நியமிக்கப்பட்ட ஜேம்ஸ் ரன்னல் என்னும் ஆங்கிலேயே அதிகாரி இந்த இராமர் பாலத்தை ஆடம் பிரிட்ஜ், என 1804 ம் ஆண்டு மாற்றி எழுதினார். அதிலிருந்து 1804 க்கு பிறகு வந்த வரைபடங்களில், இராமர் பாலம் ஆதாம் பாலமாக மாற்றி எழுதபட்டது.
இதைவிட வேறு நிறைய ஆதாரங்களும் வரைபடங்களும் இது இராம சேது என்று அழைக்கபட்டதிற்கு சாட்சிகளாக இருகின்றன நம்முடைய இதிகாசங்களில் சொல்லப்பட்ட கருத்துக்களை எடுத்.துக்கொண்டு சிக்காகோ பல்கலைகழகத்தில்( university of chicago)  ஸ்வார்ட்பெர்க்(Schwartzberg ) என்பவர் தெற்கு ஆசியா வரைபடங்கள் என கி.பி. 8 ம் நூற்றாண்டு முதல் 12 ம் நூற்றாண்டு வரை உள்ள நூற்றுக்கணக்கான வரைபடங்கள் தயாரித்துள்ளார். அதில் கூட அவர் சில குறிப்புகளை மேற்கோள் காட்டி, இந்த பாலத்தை சேது என குறிப்பிடுவதாக சொல்லி இருக்கிறார். இபொழுது அதை ஆதாம் பாலம் என்றும் குறிபிடுவார்கள் எனவும் தெளிவாக குறிபிட்டுள்ளார். இராமேஸ்வரத்திற்கும் மகாதீர்தத்திர்க்கும் நடுவிலே, இராமேஸ்வரத்தில் ஒரு சிவன் கோவில், மகா தீர்த்தத்தில் ஒரு சிவன் கோவில், இடையில் ஒரு சிவன்கோவில் உண்டு எனவும் குறிபிட்டுள்ளார். எப்படி இராமாயணத்தில் குறிபிடபட்டுள்ளதோ அதேபோல சிவன் கோவில் ஒருபக்கத்தில் இருக்கிறது. மறுபக்கத்திலும் சிவன்கோவில் இருக்கிறது.நடுவிலும் சிவன் கோவில் இருந்திருக்கவேண்டும் அதை ஆராயபடவெண்டும் எனவும் குறிபிட்டுள்ளார்.
அதேபோல அல்-பிருனி (Abū al-Rayhān Muhammad ibn Ahmad al-Bīrūn known as Al-Biruni )என்ற இஸ்லாம் அறிஞர், இவரது காலம் 4 அல்லது 5 செப்டம்பர் 973 முதல் 13 டிசம்பர் 1048 வரை, இவர் கூட இந்த இராமர் பாலத்தை பற்றி குறிபிடுகிறார். அதை சேது பந்து என குறிபிடுகிறார். இராமேஸ்வரத்திர்கும், அஹ்னா என்ற இடத்தையும் (ஸ்ரீலங்காவில் இருக்க கூடிய ஒரு கிராமத்தின் பெயர்) அதை இரமேஸ்வரத்தோடு இணைக்க கூடிய பாலத்தின் பெயர் சேதுபந்து என குறிபிடுகிறார். மேலே இருக்கும் வரைபடத்தை தெளிவாக பார்த்தல் இது புரியும்.
புராணங்களில் பண்ண்டிய மன்னர்களது காலங்களில், குமரி கண்டம் இருந்த போது, பாண்டிய நாட்டையும் சிங்கள நாட்டையும் இணைப்பது சேதுகா எனப்படும் இந்த ராம சேதுவாகும்.
நமது வேதங்களில் குரிபிடபட்டுள்ளதை போல ,தாமிரபரணி கபாடபுரத்தில் இருந்து ஸ்ரீ லங்காவுக்கு செல்லும் வழி இந்த இராமர் சேது வழியாக செல்லும் என குறிபிடப்பட்டுள்ளது.
அதேபோல 1903 ள் மெட்ராஸ் பிரசிடென்சி அட்மினிஸ்ட்ரேட்டிவ் அறிக்கையில் இதைபற்றி சொல்லி இருக்கிறார்கள்.ஆதாம் பாலம் என்று குறிபிடுவது இராமர் பாலம் என்றும் சொல்லபடுகிறது எனவும் 1480 வரையிலும் பாரத்தையும் சிங்களத்தையும் இணைத்து இது ஒரு பாலமாக இருந்தது அந்தபாலம் அபொழுது ஏற்பட்ட ஒரு கடல்சீற்றத்தினால் பாதிக்கப்பட்டு தண்ணீர் உள்ளே புகுந்து தனிதனி திட்டுகளாக மாறிவிட்டன என்றும்,அப்படி தண்ணீருக்குள் மூழ்கிய பாலமானது தண்ணீருக்கடியில் 4 அடியில் இருந்து 10 அடிவரை மூழ்கியது எனவும் சொல்லப்பட்டது..மேலும், 1744 ல அலெக்சாண்டர் ஹமில்டன் என்பவர் நான் சிங்கள நாட்டிற்கு இந்த பாலத்தின் வழியாக நடந்து சென்றேன் என்று எழுதி இருக்கிறார்.
நம் புராணங்களில் நம் இதிகாசங்களில் இராமர் பாலம் பற்றிய குறிப்புகள் நிறைய இடங்களில் சொல்லபடுகிறது. இராமாயணத்தில் வால்மீகி சொல்கிறார், மகாபாரதத்தில் வியாசர் சொல்லுகிறார், மேலும் இரண்டாம் புரவரசேனா என்னும் ராஜா (கி பி 550-600), அவர் சேது பந்தனம் என்ற காவியமே எழுதி இருக்கிறார்.அதேபோல தாமோதர சேனா சேதுபந்தன காவியம் என்று ஒன்றையும் எழுதி இருக்கிறார். எல்லா புராணங்களிலும் இந்த ராம சேது என்னும் இராமர் பாலம் ஸ்ரீராமனால் கட்டப்பட்டது அது ஒரு புண்ணியஸ்தலம் அங்கு சென்று நீராடினால் புண்ணியம் கிடைக்கும் என்றும் சொல்லப்பட்டு இருக்கிறது .

இதை விஞ்னான பூர்வமாக நிருபித்தும் உள்ளனர்.  டாக்டர் பத்ரிநாராயணன் என்பவர் ஒரு ஜியாலோஜிஸ்ட் தேசிய கடல் தொழில்நுட்ப கழகம்  சென்னை. (National Institute of Ocean Technology)அவர் 2007 மே 12 ம் தியதி நடந்த ஒரு கருத்தரங்கில் (seminar ) ஒரு ஆய்வு அறிக்கையை (Presentation)சமர்பித்தார். அவர்களுடைய குழு இராம சேதுவில் 10 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் மாதிரி வடிவங்களில் துளையிட்டுள்ளனர். அதன் மாதிரிகளை எடுத்து பார்த்தபோது அற்புதம்மான ஒரு உண்மை புலப்பட்டுள்ளது சமுதிரதிற்க்கு அடியில் மணல் திடல், அதற்குமேல் கற்கள், அதற்குமேல் மணல்திடல் ,அதற்குமேல் கற்கள், என்னமாதிரி கற்கள் என்றால் Coral rocks  பவள பாறைகள் கடலில் கிடைக்கும் சங்கு அவை கல்லாக மாறியிருக்கும்  அவை கடலில் மிதக்கும் ஆனாலும் எடைகளையும் தாங்கும் அந்தமாதிரியான கற்களை கொண்டு இதை நிர்மாணித்திருகிறார்கள்,என்று கண்டுபிடித்து ஆய்வு அறிக்கையை  தெளிவாக சமர்ப்பித்துள்ளனர்.
இந்த பாலம் திட்டமிடப்பட்டு  செய்யபட்டது  ,என்று அந்த ஆய்வின் மூலம் தெரியபடுதபட்டுள்ளது .இந்த அமைப்பில் பவளப்பாறைகள் இந்த இடத்தில இருக்க வாய்ப்புகள் இல்லை எனவும்,  பவளப்பாறைகள் இந்தமாதிரி, அமைப்பில் மாற வாய்ப்பு இல்லை எனவும்,அவை வெளியில் இருந்து கொண்டு வந்திருக்கவேண்டும் என்றும் இதற்கான ஆதாரம் இராமேஸ்வரத்திலும் சரி, மகா தீர்த்தத்திலும் சரி,  ஸ்ரீ லங்கா  பகுதிகளிலும் சரி, கற்களால் ஆன ஆயுதங்களை உபயோக படுத்தியதற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. அந்த ஆயுதங்களினால் பவளபாறைகள் செதுக்கபட்டிருக்க வேண்டும் எனவும் தெரிய வந்துள்ளது,என ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர் .

மார்ச் 2007 ல நம்முடைய அரசாங்கமும் இதைபற்றிய தெளிவான அறிக்கைகளை கொடுத்துள்ளது. பதிவின் நீளம் கருதி அந்த  படத்தை இடமுடியவில்லை. மேலும், சில கல்வெட்டுகளின் மூலம், கிருஷ்ண தேவராயர் 1508 ல் எழுதிய சாசனத்தில் என்னுடைய சாம்ராஜ்யம் இராமர் சேது அதாவது இராமர் பாலம் வரையிலும் இருந்கிறது .நான் மேருவிர்கும் சென்று வந்திருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.

சோழ மன்னர்களில் ஒருவரான பராந்தக சோழன் 1000 ம் வருடங்களுக்கு முன்னால் வேலாம்சேரி செப்பு  தகட்டில், அவர் சேது தீர்த்தத்திற்கு சென்றதும், துலாபாரம் கொடுத்ததையும் பொறித்துள்ளார். இதைதவிர ஆயிரகணக்கான நாணயங்கள் கிடைத்துள்ளன. இவற்றிற்கு சேது காசுகள் என்றும் ஆரிய சக்ரவர்த்தி காசுகள் என்றும் அழைக்கப்பட்டன. இதில் சேது என்று அழகாக தமிழில் எழுதபட்டு இருக்கிறது  இதற்க்கு மேலும் நிறைய ஆதராங்கள் இருகின்றன அவற்றை எல்லாம் இங்கே ஆதாரத்துடன் விளக்க ஆரம்பித்தால் பிறகு நம்முடைய பதிவு ஹனுமன் வால் போல் நீண்டு கொண்டுதான் செல்லும். இவ்வுவளவு, ஆதாரங்களையும் படிக்காமல் ஒருவர் இராமர் பாலம் ஒன்று இல்லவே இல்லை என்று சொன்னால் அவர்கள் வரலாற்றை படிக்கவில்லை வரலாற்றை புரிந்து கொள்ளவில்லை என்றுதான் அர்த்தம். மீண்டும் சுவாரஸ்யமான கதையுடன் அடுத்தவாரம் தெரிந்த கதை தெரியாத உண்மையில் பார்க்கலாம்..
மீள்பதிவு..
 நன்றியுடன்,
ராஜி

5 comments:

  1. ஆஹா..ஆராய்ச்சிக் கட்டுரை போல படங்களுடன் அதே சமயம் சுவாரஸ்யமாகவும் எழுதியவிதம் அற்புதம்.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. சுவாரஸ்யமான கட்டுரை. தெரிந்த பல விவரங்களுடன் சில தெரியாத விவரங்களும் இருந்தன. படித்தேன். ஒரு தலைவர் 'ராமன் என்ன என்ஜீனியரா' என்று கேட்டது நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete
  3. அறியாத பல செய்திகளுடன் அற்புதமானக் கட்டுரை
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  4. ஆய்வுக்கட்டுரையினைப் போன்று அதிகமான செய்திகளுடன் பதிவு அருமை. இதிலும் அரசியல் செய்கின்றார்களே என்பதை நினைக்கும்போது வேதனையே.

    ReplyDelete
  5. பல தகவல்களுடன் விரிந்த கட்டுரை.

    ReplyDelete