Saturday, October 07, 2017

நமக்குலாம் இப்படி ஒரு ஹஸ்பண்ட் ஏன் அமையல?! கேபிள் கலாட்டா


நிக்க, நடக்க, உக்கார, எழ... என எல்லாத்துக்கும் முருகனைதான் கூப்பிடுவேன். எந்த கடவுள் கோவிலுக்கு போனாலும் முதல்ல, அப்பனே! முருகா! ஞானப்பண்டிதா! சன்முகான்னு சொல்லி அதுக்கப்புறம் சுயநினைவுக்கு வந்து அந்த கோவில்ல இருக்கும் சாமி பேரை சொல்லி கும்பிடுமளவுக்கு முருக பக்தை..., விஜய் டிவில தமிழ்கடவுள் முருகன் விரைவில்..ன்னு விளம்பரம் வந்ததும் ஆகா, நம்ப முருகன் பத்திய கதைன்னு ஆசையா ரெண்டு நாள் உக்காந்து பார்த்தேன். ஆனா, மனசு இந்த தொடரில் ஒட்டவே இல்ல. கந்தன் கருணை மாதிரியான பழைய புராண படங்களை பார்த்தபோது இருந்த ஈர்ப்பு இந்த தொடரில் இல்ல. காரணம் என்னன்னு தெரில. இந்த நிகழ்ச்சி தினமும் இரவு 9 மணி முதல் 9.30 வரை ஒளிப்பரப்பாகுது.


இதுக்கு போட்டியா சன் டிவில வினாயகர் தொடர் ஒளிப்பரப்பாக போகுதாம். வரும் திங்கள் முதல் மாலை 7 மணி முதல் 7.30 வரை ஒளிப்பரப்பாக போகுது. இனி எல்லா சேனலும் மாரியம்மா, கெங்கையம்மா, பெருமாள்ன்னு தொடர் ஆரம்பிப்பாங்க. ஏன்னா பாம்புகளை மையமா வச்சு சீரியல் ட்ரெண்ட் முடிஞ்சு இப்ப பேய் ட்ரெண்ட் சீரியல் எல்லா சேனலிலும் ஓடிக்கிட்டிருக்கு . அடுத்து சாமி ட்ரெண்ட் ஆரம்பிப்பானுங்க.
தினமும் இரவு 8.30க்கு சரவணன் மீனாட்சி ஒளிப்பரப்பகும். எங்கூட்டுல நண்டு சிண்டுக உக்காந்து பார்க்கும். எனக்கு எரிச்சலா இருக்கு. சீரியல்ல வில்லிக்கு பேய் பிடிச்சுட்டுது. அது ஹீரோயினை கொல்லப்பாக்குது. ஆனா, ஹீரோயினோட  ஹீரோ பேயை எதுத்து நிக்குறார். என்ன ஆனாலும் சரி, நான் மீனாட்சியை காப்பாத்துவேன், அவளை விட்டுத்தரமாட்டேன்னு சொல்லி பேயை எதிர்த்து நிக்குறாரு. இதுக்காகவே இந்த சீரியல் பிடிச்சு போய் இப்ப பார்க்க ஆரம்பிச்சுட்டேன். நம்மாளுங்களா இருந்தா இந்நேரத்துக்கு தெறிச்சு ஓடிப்போவாங்க. இல்லன்னா நம்பளை பிடிச்சு பேய்க்கிட்ட கொடுப்பாங்க. எத்தனை ஜென்மம் ஆனாலும் நமக்குலாம் இப்படி ஒரு ஆள் அமையாது :-(
ஆரம்பத்துல நல்லா இருந்த தெய்வ மகள் இப்ப போரடிக்க ஆரம்பிக்குது.  சீரியல்ல லாஜிக் பார்க்க கூடாதுங்குறது ஓகே. அதுக்காக ஒரு ஹையர் போலீஸ் ஆஃபீசரை கொலை பண்ணுவாங்களாம். ஆனா, அதை கண்டுப்பிடிக்க முடியாதாம். படுத்த படுக்கையா இருந்திக்கிட்டே எத்தனை எத்தனை கொலை, சதி?! இதுலாம் டூ இல்ல ட்வெண்டி மச். கதையை எப்படி கொண்டு போறதுன்னு தெரிலன்னா முடிச்சு தொலைங்கடா பக்கி பயலுகளா!!

மதியுகம் சேனல்ல காலை 7 மணிக்கு ஆலயம் அறிவோம்ன்ற நிகழ்ச்சி, சின்ன சின்ன ஆலயங்கள் முதற்கொண்டு பெரிய பெரிய ஆலயங்கள் வரை தல வரலாற்றோடு கோவிலை கட்டியவர், இப்போதைக்கு அந்த கோவிலில் தேவைப்படும் வசதி, கோவிலை நிர்வகிப்பவர், அங்கு நடக்கும் பூஜை, விழாக்களோடு ஆலயம் பத்தின புதுப்புது தகவல்களை சொல்றாங்க.
பெப்பர்ஸ் டிவில திருமதி. ராஜராஜேஸ்வரின்ற மனநல மருத்துவர் உறவுகளுக்குள் விழும் சிக்கல்கள், மன அழுத்தம், நோய் பற்றிய பயம், பரிட்சை காய்ச்சல் மாதிரியான சிக்கல்களுக்கு அழகா, விளக்கமா, எளிமையா தீர்த்து வைக்குறார். இந்த நிகழ்ச்சி காலை 8.30க்கு ஒளிப்பரப்பாகுது.
 காஜல் வந்து ஒரு கடையில் புடவை வாங்க சொல்றார், அண்ணாச்சி தன்னோட கடையில் துணி எடுக்க சொல்றாரு.  ஒரு குட்டி பொண்ணு வந்து ட்ரெஸ்மாடல்களை சொல்லி ஆசைக்காட்து. ஃப்ரிட்ஜ், வாஷிங்க்மெஷின், மொபைல், வண்டின்னு ஆஃபர் கொடுத்து ஆளுக்காள் தங்க கடைக்கு கூப்பிடுறாங்க. செலவு பண்ண சொல்லித்தர பக்கிங்க சம்பாதிக்க ஒரு வழிய காட்டலாம். ஒரு பொருள் விற்க விளம்பரம் அவசியம்தான்., ஆனா, அதுக்காக இப்படிலாம் இம்சிக்கக்கூடாது.

கேபிள் கலாட்டா தொடரும்......

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1473939
நன்றியுடன்,
ராஜி

Friday, October 06, 2017

உருவாக்கியவரின் மறுபிறப்பால் ஐநூறு ஆண்டுகளுக்கு பிறகு வெளிவந்த லிங்கம்- புண்ணியம் தேடி

இந்த பரந்து விரிந்திருக்கும் பூவுலகில் இருக்கும் புண்ணிய தலங்கள் ஒன்னொன்னும் எந்த மதமா இருந்தாலும் தனக்குள் ஒரு அற்புதத்தை ஒளித்து வைத்திருக்கு. ராமர் பூஜித்தது, சிவனை சக்தி எரித்தது, முருகன் வதம் பண்ணியது, சுயம்புவாய் உண்டான இறைமூர்த்தம், மிகப்பெரிய கோவில், தங்கத்தால் இழைத்த கோவில், வருடத்திற்கொருமுறை, ஒருநாள் மட்டுமே திறக்கும் கோவில்ன்னு பலப்பல அதிசயங்களை கொண்ட கோவில்கள் பலதை நாம கேள்விப்பட்டிருப்போம். பார்த்திருப்போம்.. ஆனா, எங்க ஊர் பக்கத்துல இருக்கும் திமிரின்ற ஊர்ல இருக்கும் ஒரு கோவில் மிக வித்தியாசமானது.  இந்த கோவில் ரொம்ப புதுசு. அதிகப்பட்சமா 35 வயசுகூட இருக்காது. ஆனா, இங்குள்ள இறைவன் வயது சுமார் 500 ஆண்டுகளுக்கு முந்தையது... இதென்ன ராஜி பிரமாதம்!! வேற ஒரு இடத்திலிருந்து இங்க கொண்டு வந்து வச்சிருப்பாங்கன்னு நீங்க சொல்லலாம்.. ஆனா, இங்கிருக்கும் இறைமூர்த்தம் பாஷாணத்தால் ஆனது. இந்த இறைமூர்த்தம் யாரால் உருவாக்கப்பட்டதோ, அவராலாயே   மண்ணில் புதைக்கப்பட்டு, அவராலாயே ஐநூறு ஆண்டுகளுக்கு பிறகு வெளிவந்து இன்று தீராத வியாதிகளை தீர்த்து வைக்குது.. அட லூசு பக்கி உளருதுன்ற உங்க மைண்ட் வாய்சை நான் கேட்ச் பண்ணிட்டேன். என்னோடு வாங்க! கோவிலுக்கு போய்க்கிட்டே இக்கோவிலோட வரலாற்றை பார்ப்போம்....

சென்னை டூ ஆரணி வழில ஆரணிக்கு 15கிமீ முன்னாடி திமிரின்ற ஊர் இருக்கு. சென்னைல இருந்து ஆரணி வரும் பஸ்சுல வந்தா இங்க இறங்கிக்கலாம். இல்லன்னா வேலூர், வாலாஜாபாத் வரை ட்ரெயின்ல வந்திட்டும் அங்கிருந்து டவுன் பஸ் பிடிச்சும் வரலாம். ஆற்காடு, ஆரணில இருந்து டவுன் பஸ் இருக்கு இந்த ஊருக்கு. டவுனுமல்லாத கிராமமும் அல்லாத ரெண்டுக்கெட்டான் ஊர்.  பஸ் ஸ்டாப்ல இறங்கி ஒரு பர்லாங்க் தூரம் நடந்தா விஷ்ணு, சிவன், ஐயப்பன் ஆலயத்துக்கு பக்கத்துல  இக்கோவில் இருக்கு. மேற்சொன்ன மூன்று கோவில்களும் மிகசுத்தமா, அழகா, அமைதியா இருக்கு. இந்த சின்ன ஊர்ல இப்படி ஒரு கோவிலான்னு வியக்குற மாதிரி நவீன கால கட்டமைப்புல கோவில் இருக்கு.   தூரத்திலிருந்தே யோகத்திலிருக்கும்  சிவன் நமக்கு காட்சி தருவார். 

இதுதான் நான் சொன்ன நவபாஷான லிங்கம் இருக்கும் கோவில் நுழைவு இதுதான். வளைவிலேயே இறைவனும், இறைத்தொடர்புள்ள ராதாக்கிருஷ்ணன் ஐயாவோட சிலையும் நம்மை வரவேற்கும். இந்தக்கோவில் அதிகபட்சம் 2500 ச.அடில கட்டப்பட்டது. முழுக்க முழுக்க சிமெண்டால் உருவானது.  இங்க அருள்புரியும் இறைவனது பெயர் சோமநாத பாஷாண லிங்கேஸ்வரர். உருவத்தில் மிகச்சிறியவர் ஜஸ்ட் ஏழே அங்குலம்தான்.   ஒவ்வொரு அமாவாசைக்கும், பௌர்ணமிக்கும் இக்கோவிலில் வந்து தங்கள் நோய் தீர்த்து செல்பவர்கள் ஏராளம்.  என் அப்பா அம்மா ஒவ்வொரு அமாவாசைக்கும் போவாங்க. அன்னிக்கு அன்னதானம் நடக்கும். அவங்க வந்து இந்தக்கோவிலோட கதை சொல்லும்போது எனக்கும் சிரிப்புதான் வந்திச்சு.  மறுஜென்மமாவது புடலங்காயாவதுன்னு... ஆனா, கோவிலுக்கு போனப்பின் மனசுக்கு அமைதி உண்டாவதை உணர முடிஞ்சது. கோவிலில் கட்டுமானப்பணி நடந்துக்கிட்டிருந்தாலும் மிக சுத்தமா பராமரிக்கப்படுது. 


கோவிலுக்குள் நுழைந்ததும் நேரா கருவறைக்கு போகக்கூடாது. முதலில் பிரகாரத்தை சுத்தி, அங்கிருக்கும் தெய்வங்களை வணங்கியபின் கடைசியில் மூலவர் இருக்கும் கருவறைக்குள் செல்லனும். இதுக்கு காரணம் என்னன்னா, எங்க சுத்தினாலும் மகனே என்னிடம்தான் வந்தாகனும்ன்னு கடவுள் சொல்லாம சொல்லுறது ஒரு காரணம். இன்னொன்னு, வெளிஉலக விசயங்கள் நம் கவனத்தை ஈர்க்கும். கோவிலை வலம் வர, வலம் வர நம் மனது, வெளி உலகை மறந்து இறைவனிடம் ஐக்கியமாகும். மனசு இறைவனிடம் லயித்து அவனிடம் சரணாகதி அடையும்போது அவன் நமக்கு முக்தி, ஞானம் தருவான்.  இந்த இரண்டு காரணங்களுக்காகத்தான் முதலில் பிரகாரத்தை வலம் வந்து பின் இறைவனை கும்பிடனுமாம். அதனால, நாமும் முதல்ல பிரகாரத்தை வலம் வரலாம் வாங்க. முதலில்  நம்மை வரவேற்பவர் வினாயகர். அவருக்கொரு வணக்கத்தை சொல்லிட்டு மேற்கொண்டு கோவிலை வலம் வரலாம் வாங்க. 

வினாயகருக்கு பக்கத்துல சைவக்குறவர்கள்ன்னும், நால்வர்ன்னும் செல்லமா அழைக்கப்படுற அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர், சம்பந்தர் இருக்காங்க. அவர்களுக்கு ஒரு வணக்கம் போட்டுப்போம்.

ஆலமரமும் வேப்பமரமும் இணைந்த இடத்தில் எப்பயும் போல நாகர் சிலைகள். நாகராஜா! என்னை  காப்பாத்து. எனக்கு உன்னைவிட்டா வேறு துணை இல்ல.  எந்த கோவமா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம். பொட்டுன்னு போட்டு கணக்கை முடிச்சுப்புடாதன்னு சொல்லி வேண்டிப்போம்.


சதுரகிரி மலைக்கு ராதாக்கிருஷ்ணன் ஐயா போய் இருக்கும்போது அங்கு  சுயம்புவாய் கிடைத்த சிவன்.....

சப்த மாதர்கள் சிலைகள்... நான் போனபோது அருகிலிருக்கும் ஐயப்பன் கோவிலில் பூஜை. அதனால, கோவில் முழுக்க ஐயப்ப பக்தர்கள். அவர்களை நகர்ந்துக்க சொல்ல மனசு வரல. அதனால, அவங்களையும் சேர்த்து க்ளிக்.

தென்முக கடவுளாம் தட்சிணாமூர்த்தி.... குருவே சரணம்.... 


அண்ணன் வினாயகருக்கு அப்பாவோட கோவிலில் இடமிருக்கும்போது தானும் இருப்பேன் என வள்ளி, தெய்வானை சமேத முருகன்..

கலியுக பந்தம், பாசம், ஊர் உலகம்லாம் மிகக்கொடியதுன்னு உணர்த்தும் பயங்கர தோற்றம் கொண்ட துவார பாலகர்கள். பயப்படாம என்னை நினைச்சுக்கிட்டு  அவர்களை கடந்து வான்னு  துவார பாலகருக்கு  மேலிருந்து நமக்கு சொல்றார் கடவுள்.

. 

கருவறையில் நந்தியம்பெருமான் வீற்றிருக்கார். அவரை வணங்கிட்டு மூலவரை வணங்கும் முன் ஸ்தல வரலாற்றையும், ராதாக்கிருஷ்ணர் ஐயாவை பத்தியும் தெரிஞ்சுப்போம். வாங்க! மற்ற பக்தர்களுக்கு இடைஞ்சல் இல்லாம ஓரமா உக்காந்துப்போம்..


சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன் விஜயநகர பேரரசின் கீழ், திம்மிரெட்டி, பொம்மி ரெட்டின்ற குறுநில மன்னர்கள் வம்சாவளியினர் வேலூர் கோட்டையை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்தனர்.  இவர்களது வழித்தோன்றல்தான் சதாசிவராய மன்னர். இவர் ஆற்காட்டை அடுத்த திவாகராயர் எல்லைப் பகுதியில் பல நல்ல காரியங்களைச் செய்து சிறந்த முறையில் ஆட்சி செய்து வந்தார். நாடுன்னா நோய் நொடின்னு வரும்ல்ல. அதுமாதிரி ஒரு சமயம் இப்ப வரும் மர்மக்காய்ச்சல் மாதிரி தொத்துநோய் பரவி அந்தப் பகுதி மக்கள் அனைவரும் அவதிப்பட்டாங்க. இதை கண்டு வேதனையுற்ற சதாசிவராயர்,  நோயை விரட்டும் வழி குறித்து, அமைச்சரவையைக் கூட்டி ஆலோசனை நடத்தினார். அரண்மனை ராஜ வைத்தியரான கன்னிகா பரமேஸ்வரரிடம், மக்களின் நோயைப் போக்க ஏதாவது செய்யும்படி கேட்டுக்கொண்டார். 


மன்னனின் ஆணைப்படி ராஜவைத்தியரான கன்னிகா பரமேஸ்வரர், தன்வந்திரி முறையில் ஒரு லிங்கத்தை தயார் செய்ய முடிவு செய்தார். சந்திர பாஷாணம்ன்னு சொல்லப்படும்  திமிரி பாஷாணம் உள்பட 5 வகை பாஷாணங்களை பக்குவப்படுத்தி, தெய்வாம்சமும், மருத்துவ குணமும் இரண்டற கலந்திருக்கும் வகையில் சோமநாத ஈஸ்வர பாஷாண லிங்கத்தை வடிவமைத்தார். இந்த லிங்கத்தின் உயரம் வெறும் 7 அங்குலம் மட்டுமே!




கி.பி.1379–ம் ஆண்டு தைமாதம் திருவாதிரை நட்சத்திரத்தில், திமிரி நகரின் கோட்டையில் இந்த பாஷாணலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அப்போதைய சிருங்கேரி மடத்தின் 12–வது சங்கராச்சாரியார் வித்யாரண்ய சுவாமிகள் ஆசீர்வாதத்துடன்  பிரதிஷ்டை செய்யப்பட்டது இந்த லிங்கம்.   ஆகம முறைப்படியும், சித்த மருத்துவ முறைப்படியும் அமையப்பெற்ற இந்த பாஷாண லிங்கம், இப்பகுதியில்  நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அருள் வழங்கியது. திமிரி லிங்கம் பாஷாணத்தால் உருவாக்கப்பட்டதால், புகையும் தன்மை கொண்டது. எனவே லிங்கத்தை குளிர்விக்கும் வகையில் அதன் மீது எப்போதும் நீர் விழுமாறு செய்யப்பட்டது. அந்த அபிஷேக தீர்த்த நீரே, நோய் தீர்க்கும் பிரசாதமாக மாறியது. அதுவரை திவாகராயர் எல்லை என்று அழைக்கப்பட்ட இந்த பகுதி, திமிரி பாஷாண லிங்கத்தின் பெருமையால் ‘திமிரி’ என பெயர் மாற்றம் கொண்டது. தன்னுடைய மக்களின் நோய் குணமாவதைக் கண்ட மன்னன் சதாசிவராயர் பெருமகிழ்ச்சி அடைந்தார். பக்தி பரவசத்தில் மிதந்தார். 


ஆனால், சோதனைகள் மனிதர்களுக்கு மட்டுமே வருவதல்ல!  சில சமயங்களில் கடவுள்களுக்கும்கூட சோதனை ஏற்படுவதுண்டு. அந்தச் சோதனை இங்கிருக்கும் பாஷாண லிங்கத்துக்கு  படையெடுப்பின் வாயிலாக வந்தது. ஆற்காடு நவாப் படை எடுப்பின் போது வேலூர் கோட்டை பிடிபட்டது. திமிரி கோட்டை அவர்கள் கட்டுக்குள் வந்ததால், கோட்டை இடிக்கப்பட்டது. திமிரி பாஷாண லிங்கத்தை பாதுகாக்கும் பொருட்டு, வேதியியல் கலவையிலான கூர்ம வடிவ கூட்டுக்குள் வைத்தனர். அதன்பிறகு அந்த லிங்கத்தை, திமிரி சோமநாத ஈஸ்வரர் கோவிலின் அருகில் இருந்த குளத்தில் புதையச் செய்தனர். அவ்வாறு புதைக்கப்படும்போது ராஜ வைத்தியர் கன்னிகாபரமேஸ்வரர், உருவாக்கிய நானே உன்னை புதைக்கப்படவேண்டிய துர்பாக்கியம். என்றாவது , நானே உன்னை வெளிக்கொணறுவேன். அதுவரை எக்காரணம் கொண்டும் நீ வெளியில் வரக்கூடாது என கடவுளுக்கு கட்டளை இட்டார். 



500 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த வரலாற்றின் தொடர்ச்சி, கடந்த 1985–ம் ஆண்டு அடுத்த அத்தியாத்தை தொடங்கியது.  அப்போது திமிரியில் ஐயப்பன் கோவில் கட்டும் பணி நடைபெற்றது. ஒரு கட்டத்தில் அந்தப் பணி தடைபட்டது. ‘கோவில் நிர்மாணிக்கும் பணியில் ஏதேனும் தெய்வ குற்றம் நிகழ்ந்து விட்டதோ?’ என சந்தேகம் கொண்ட, திமிரி ஐயப்பன் நற்பணி மன்ற நிர்வாகி A.Sராதாகிருஷ்ணன் என்பவர் ஒரு நாடி ஜோதிடரை அணுகினார்.




அப்போது, திமிரி சோமநாத ஈஸ்வரர் ஆலய குளத்தில் புதைந்து போன பாஷாண லிங்கம்  பற்றிய அத்தனை  செய்தியும் தெரியவந்தது. மேலும்,  அந்த பாஷாணலிங்கம், சதாசிவராயர் மன்னரின் மறுப்பிறப்பான A.Sராதாகிருஷ்ணன் ஆகிய உன் முயற்சியால் குளத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டு மீண்டும் பிரதிஷ்டை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் பெருமுயற்சி மேற்கொண்டு, கோவில் குளத்தில் புதைத்ததாக கூறப்பட்ட பாஷாண லிங்கத்தை தேடினார். இறுதியில் 1985–ம் ஆண்டு ஜூன் மாதம் 14–ந் தேதி வெள்ளிக்கிழமை குளத்தில் இருந்து பாஷாணலிங்கம் கிடைத்தது.




இதையடுத்து அந்த பகுதியிலேயே திமிரி சோமநாத பாஷாண லிங்கேஸ்வரருக்கு ஆலயம் எழுப்பப்பட்டது. இந்தலிங்கம் தற்போது நீர் நிரப்பப்பட்ட கண்ணாடி தொட்டிக்குள் வைக்கப்பட்டு, பக்தர்களுக்கு காட்சி தருகிறது. பாஷாண லிங்கம் அமிழ்ந்திருக்கும் நீர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. பாஷாணலிங்கம் இருக்கும் இந்த நீரை அருந்துபவர்களுக்கு நோய்கள் தீர்வதாக நம்பப்படுகிறது.. இந்த சன்னிதியானது லிங்க வடிவிலேயே அமைக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு அருகில் பாஷாணலிங்கம் கிடைத்த சோமநாத ஈஸ்வரர் கோவில் குளத்தின் அருகில் பெரிய அளவில் யோக நிலையில் இருக்கும் சிவன் சிலை அமைக்கப்பட்டுள்ளது.



கோவிலுக்குள் முழுக்க முழுக்க ருத்திராட்சை கொண்டு உருவாக்கப்பட்ட விமானத்தின்கீழ் நடராஜரும்,. நவக்கிரகமும் அருள்பாலிக்கின்றனர்.   பாஷாண லிங்கம் கிடைத்த பெரிய குளத்தில், லிங்கம் கிடைத்த பகுதியை மட்டும் சிறிய குளம்போல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த சிறிய குளத்தில் இருந்து எடுக்கப்படும் நீரையே கோவில் கும்பாபிஷேகம் மற்றும் அபிஷேகத்திற்குப் பயன்படுத்த வேண்டும் எனவும். A.Sராதாகிருஷ்ணன் ஐயா மட்டுமே இங்கிருக்கும் பாஷாண லிங்கத்துக்கு அபிஷேகம் அவர்கள் மட்டுமே செய்ய வேண்டுமெனவும்  நாடி ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளதா சொல்றாங்க.




இதுதான், இக்கோவிலின் கதை.. மறுப்பிறப்பு உண்டா?! கட்டுக்கதைன்ற டாபிக்கை விடுத்து, ஒரு சாமியார், ஆன்மீகத்துல இருப்பவர்களுக்கு இருக்க வேண்டிய முதல் தகுதி அமைதி, சாந்தம், தெய்வீகக்களை, பிற உயிர்களை மதித்தல். எனக்கு தெரிஞ்சு இது அத்தனையும் இருப்பது ராதாக்கிருஷ்ணர் ஐயாவிடம்தான். அத்தனை பணிவு. நானும் என் மகனும் ரத்தினகிரி கோவிலுக்கு போய்ட்ட்டு இக்கோவிலுக்கு வந்தோம். ரத்தினகிரி கோவிலில் இருக்கும் பாலமுருகனடிமை சாமியார் தற்செயலாய் என்னருகில் நிற்க   பலப்பல வேண்டுதலோடு கால்தொட்டு வணங்கினேன். ஆனா, அவர் எந்த ரெஸ்பான்சும் பண்ணல. அங்கிருந்து வீட்டுக்கு வரும் வழியில் திமிரி கோவிலுக்கு போய்ட்டு அங்கிருக்கும் ராதாக்கிருஷ்ணர் ஐயாவை பார்த்து அவர் கால் தொட்டு வணங்கினேன். உடனே, எனக்கும், என் அருகிலிருந்த   என் மகனையும் அழைத்து விபூதி பூசி, என்ன படிக்குறேன்னு கேட்டு, நல்லா படி, 12வில் பாஸ் ஆவேன்னு சொல்லி ஆசி வழங்கினார். ஐயா இதுப்போல பிளாக் எழுதுறேன். அதனால, கோவிலையும் உங்களையும் படமெடுத்துக்குறேன்னு சொன்னதும் என்னோடும்,என் மகனோடும் தனித்தனியாய் படமெடுத்து கோவிலையும் படமெடுக்க அனுமதிச்சார். அந்த எளிமை, சாந்தம், எனக்கு பிடிச்சு போக இப்பலாம் அடிக்கடி போறேன். மதிய வேளையில் தன்னால் முடிஞ்சளவுக்கு கஞ்சி காய்ச்சி அங்கு வரும் பக்தர்களுக்கு கொடுக்கிறார்.


வாங்க! போய் சாமி தரிசனம் செஞ்சிட்டு அப்படியே  ராதாக்கிருஷ்ணர் ஐயா  தரும் தீர்த்தம் வாங்கி குடிச்சிட்டு போகலாம். வீட்டுக்கு இந்த தீர்த்தம் வாங்கிட்டு போகலாம்ன்னு நினைக்குறவங்களுக்கு பாட்டில்ல அடைச்சு 20 ரூபாயில் கொடுக்குறாங்க. அந்த தீர்த்தத்தை அப்படியே குடிக்க கூடாது. கொஞ்சம் விபூதியை ஒரு சங்கில் போட்டு அதில் அந்த தீர்த்தத்தை ஊத்தி குடிக்கனும். சங்கில்லாதவங்க பஞ்ச பாத்திரத்தில் இருக்கும்  ஸ்பூன்ல ஊத்திக்கலாம்.... வாய்ப்பு கிடைக்குறவங்க ஒருமுறை இந்த கோவிலுக்கு போய்வாங்க. நிச்சயம் மனசு அமைதி பெறுவதை கண்கூடாய் உணரலாம். மத்தபடி மறுஜென்மம்ங்குறதைலாம் நம்புறதும் நம்பாததும் அவரவர் விருப்பம்.


கோவிலுக்கு எதிரில் குள்ளமுனியாம் அகத்தியருக்கு ஒரு சிலை...  எல்லா சிவன்கோவில்களிலும் இருக்குற  மாதிரி  சண்டிகேஸ்வரர், அன்னப்பூர்ணி, காலபைரவரும் இங்க இருக்காங்க.  அகத்தியருக்கு இங்க என்ன வேலைன்னு நினக்கலாம்., இந்த லிங்கத்தை பத்தி பலவாறாய் விமர்சனம் எழுந்திச்சு..  போகர் செஞ்சது இரண்டே இரண்டு  நவபாஷாண சிலைகள்தான். ஒன்னு  பழனில இருக்கும் முருகன். இன்னொன்னு, நவபாஷாணம் செய்ய தனக்கு துணையாய் இருந்த புலிப்பாணி சித்தருக்கு பரிசளித்த மிகச்சிறிய முருகன் சிலை. பழனி மலைல இருக்கும் முருகன் சிலை. புலிப்பாணி சித்தருக்கு கொடுத்த சிறிய சிலை எங்கிருக்குன்னு இன்னைய வரைக்கும் தெரியாதுன்னு பலவித குறிப்புகளை எடுத்துக்காட்டி இந்த பாஷாண லிங்க பொய்ன்னு வாதிட்டாங்க. இங்கிருக்கும் பாஷாண சிலை பஞ்ச பாஷாண லிங்கம். பஞ்ச பாஷாண பத்தி அகத்தியர் குறிப்பெழுதி இருக்கார். அதை பார்த்துதான் கன்னிகாபரமேஸ்வரர் இந்த சிலையை உருவாக்கினாராம். அதனால அகத்தியருக்கு இங்கொரு சிலை.

தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி!


# சில படங்கள் கூகுள்ல சுட்டது. கோவில் படங்களும், ஐயாவின் படங்களும் என் மொபைல்ல சுட்டது..

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
நன்றியுடன்
ராஜி.

Thursday, October 05, 2017

பிக்பாஸ் வீட்டில் இவர்கள் இருந்தால்..... சின்னதொரு கற்பனை


எல்லா வசதியும் இருக்குற வீட்டுக்குள்   காலண்டர், கடிகாரம், தொலைத்தொடர்பு வசதியான டிவி, மொபைல், ரேடியோன்னு எதும் இல்லாம  ஒருத்தருக்கொருத்தர் அறிமுகமில்லாதவங்க 15 பேரை 100 நாள் தங்க வைக்குறதுதான் பிக்பாஸ் நிகழ்ச்சியின் கான்செப்ட்.

ஸ்டாலின், தமிழிசை,அன்புமணி, சீமான், டி.ஆர், வைகோ, , மோடி, தினகரன், எடபாடியார், பன்னீர் செல்வம், கேப்டன், ரஜினி, கமல், தர்மாக்கோல் ராஜு, இவங்களை மேய்க்குறது பிக்பாஸ் நானாக்கும்.... இவங்களை எல்லாம் ஒன்னா தங்க வச்சா எப்படி இருக்கும்ன்னு ஒரு சின்ன கற்பனை.. இது சும்மா ரசிக்க மட்டுமே! அரசியல் பதிவில்லை..

வெல்கம் ஹவுஸ் மேட்ஸ்....

தமிழிசை நமஸ்தே சொல்ல.. மற்றவர்கள் பதிலுக்கு வணக்கம் சொல்ல சீமான் மட்டும் வணக்கம் சொல்லாம இருக்கார்.

சீமான்! வணக்கம் சொன்னா பதிலுக்கு வணக்கம் சொல்லனும்...

ஆங்க்.. என்ன கேட்டீங்க பிக்பாஸ்..

வணக்கம் சொன்னேன். நீங்க பதிலுக்கு வணக்கம் சொல்லலியே! இது மேனர்ஸ் இல்லன்னு சொன்னேன்.

  சீமான்: மேனர்சை பத்தி தமிழனுக்கு வகுப்பெடுக்க நீ யார்?! பிக் பாஸ்ன்ற உன்னோட பேரை வச்சு உன் பூர்வீகம் என்ன, உன் மூத்தோர்கள் யார்ன்னு ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கேன்.

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆரம்பமே அக்கப்போரா?!...  சரி இந்த வாரம் நம்ப பிக்பாஸ் வீட்டுக்கு தலைவரை தேர்ந்தெடுக்கனும்... தலைவர் பதவிக்கு தகுந்த காரணத்தோடு நாமினேட் பண்ணுங்க.

ஸ்டாலின்: இந்தி போராட்டத்துல கலந்துக்கிட்டார்,  ஐந்து முறை முதல்வரா இருந்த என் தந்தையை தவிர யார் இதுக்கு தகுதியானவர்.

தம்பி! நீங்க கடைசி வரை செயல்தலைவராதான் இருக்கபோறீக பாருங்க. இங்க இருக்குற 15 பேர்ல ஒருத்தரைதான் சொல்லனும்.. அதைவிட்டு அப்பா, குப்பான்னுலாம் சொல்லக்கூடாது.

தமிழிசை: அருமை அண்ணன் ஸ்டாலின் அவர்களுக்கு சொந்தமா சிந்திக்கவே தெரியாது.  ஏன்னா,  அவர் படிச்சது ஸ்டேட்போர்ட்ல படிச்சவரு. சிபிஎஸ்சி பாடத்திட்டத்துல படிச்சிருந்தா அவருக்கு சொந்தமா யோசிக்க வரும். சொந்தமா யோசிக்க வைக்கும் பாடத்திட்டம்தான் சிபிஎஸ்சி பாடத்திட்டம். நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் திறக்க உள்ளது. அதில் சேர்ந்து அண்ணன் அவர்கள் சொந்தமா யோசிக்கும் திறனை வளர்த்துக்க வேண்டுமென வேண்டிக்கொள்கிறேன்.

இந்தாம்மா! நீ பாட்டுக்கு பொசுக்குன்னு சொல்லிட்டே. அவர் ஸ்கூல்ல சேர்ந்தா பசங்கலாம் மிரளாது...

அன்புமணி: நானும், மருத்துவர் ஐயாவும் எந்த நவோதயா பள்ளியில் படிச்சு டாக்டர் ஆனோம். எங்களுக்கு சொந்தமாய் சிந்திக்கும் திறனில்லையா?! புகைப்பிடித்தலுக்கு தமிழகத்துல தடையை கொண்டு வந்தது நாந்தான் தெரியுமா?!.  ஓவியாவுக்கும், பிந்து மாதவிக்கும் ஓட்டுப்போட நினைப்பிருக்கும் உங்களுக்கு இதுலாம் நினைவிலிருக்காது.

டி.ஆர். கரெக்டா சொன்னீங்க அன்புமணி. தமிழனுக்கு மறந்தது பழைய நினைவு. அவன் நம்புவது புனைவு...

ஐயா! ஐயா! நிகழ்ச்சி மொத்தமே ஒன்றரை மணிநேரம்தான்...

 டி.ஆர்: என் வாய்க்கு நீ போடலாம் பூட்டு, கட்டலாம் கைகளுக்கு கட்டு,

ஐயா! ஐயா! கோவப்படாதீங்க...

 டி.ஆர்: கோவந்தான்.... சிம்பு முகத்தில் காட்டுவது பலவித பாவந்தான்,    நீங்கலாம்...

பாவம்தான்... இல்லன்னா உங்கக்கிட்ட சிக்கி இருப்போமா?!

வை.கோ: தம்பி டி.ஆர் கோவப்படாதீக. சினம் சேர்ந்தாரை கொல்லும்ன்னு கலிங்கத்து பரணில படிச்சதில்லையா?! கிரேக்க வரலாற்றில்கூட சினத்தை பத்தி சொல்லி இருக்கு. கிரேக்க நாட்டின் தலைவன்...

ஐயா! முதல்ல பிக்பாஸ் வீட்டோட தலைவனை தேர்ந்தெடுங்க. அப்புறம் கிரேக்கத்துக்கு தலைவனை தேர்ந்தெடுக்கலாம்.

மோடி:  அமாரா பாரத்.

ஐயா! இது தமிழ் நிகழ்ச்சி. அதனால நீங்க தமிழ்லதான் பேசனும்.

மோடி: ம்ம்ம்ம் எனக்கு பலநாடுகளுக்கு சுற்றுப்பயணம் போக வேண்டி இருக்குறதால என்னால இந்த வீட்டுல தலைமை ஏத்துக்க முடியாது. ஆனா, என் யோசனையை சொல்லமுடியும் ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு, ஸ்வச் பாரத், கேஸ்லெஸ்ன்ற திட்டங்கள் மூலம் டிஜிட்டல்  இந்தியாவை உருவாக்கிய மாதிரி இந்த வீட்டையும் டிஜிட்டல் இந்தியாவாக்கலாம்ன்னு இருக்கேன். இனி சமையல் கட்டுக்கு போகனும்ன்னா ஆதார் கார்டு காட்டனும். படுக்க போகும் முன் ஒருமணி நேரம் யோகா செய்யனும்....   என்னை ட்விட்டர்ல ஃபாலோ பண்ணுறவங்களுக்கு எக்ஸ்ட்ரா மீல்ஸ்.

ஒருபய இங்க தங்க முடியாது போலயே!

தினகரன்: முப்பது வருடங்களுக்கு மேலா அம்மாவுக்கு தேவையானதை பார்த்து பார்த்து செஞ்சாங்க.   . ஒரு வீட்டு விசயம் வெளில போகக்கூடாது, அப்படி போனா, அந்த வீட்டு கௌரவம் போய்டும், அதனால, 75 நாட்கள்  அம்மாக்கு என்ன ஏதுன்னு வெளில கசியாம அப்போல்லோவுல வச்சு பார்த்துக்கிட்ட செஞ்ச சின்னம்மாவை தவிர இந்த வீட்டை நிர்வகிக்க யாருக்கு தகுதி இருக்குன்னு சொல்லுங்க பார்ப்போம்.

அவங்கதான் இப்ப ஜெயில்ல இருக்காங்களே!

 தினகரன்: என்னங்க இதுலாம்?! சின்னம்மாக்கு இதுலாம் தூசு. அதுலாம் நாங்க பார்த்துப்போம். அஷ்டாவதானி எங்க சின்னம்மா. அவங்க ஜெயில்ல இருந்துக்கிட்டே இந்த வீட்டையும் பார்த்துப்பாங்க.

எடப்பாடியார்: உங்க குடும்பத்தைதான் அம்மா ஒருமுறை தள்ளி வச்சாங்களே! அதை மறந்துட்டு பேசாதீக தினகரன்.

தினகரன்; அதான், மறுபடியும் சேர்த்துக்கிட்டாங்களே! அதுக்கு ஆதாரம் இருக்கு.

பன்னீர்செல்வம்; நான் தர்ம யுத்தம் செய்யப்போறேன்.  அம்மா சமாதிக்கு போய் அம்மாவோட ஆன்மாக்கிட்ட யார் இந்த வீட்டுக்கு தலைவராகலாம்ன்னு யோசனை கேட்டு வரேன்.

எடப்பாடியார்: இருங்க பன்னீர். இந்த வீட்டுக்கு தலைவர் போஸ்டே தேவையில்ல. நம்ம கட்சிக்கே பொதுச்செயலாளர் அம்மாவை தவிர வேற யாரும் பொதுச்செயலாளர் பதவில இருக்கப்படாதுன்னு சொல்லி முடிவெடுத்தபின் இந்த வீட்டுக்கு மட்டும் தலைவர் ஏன்?! தலைவர் இல்லாமலேயே அம்மா வழியில் நாம் இந்த குடும்பத்தை நடத்துவோம்.

கேப்டன்: இதுலாம் நல்லாவா இருக்கு மக்கழே! பிக்பாஸ் கிட்ட வாங்களேன்.

ம்ஹூம். நான் வரமாட்டேன்.

 கேப்டன்: அட அடிக்க மாட்டேன் கிட்டக்க வாங்க..

ம்ஹூம்.

கேப்டன்: த்தூ நீயெல்லாம் ஒரு பிக் பாஸ்...

ரஜினி சார் நீங்க தலைவரா இருங்களேன்.

ரஜினி: கண்ணா! அந்த ஆண்டவன் கட்டளையிடட்டும்...

 கடவுளுக்கு இதான் வேலை பாருங்க. இங்க நாந்தான் கடவுள். ஏன்னா நாந்தானே பிக்பாஸ்.

ரஜினி : போர் வரட்டும்...

யோவ் போர் வந்தா வீடு இருக்குமா இருக்காதான்னு தெரியாது.அதுமில்லாம போர் வந்தா வீட்டுக்குள் உக்காந்து என்ன பண்ண போறே?! அப்புறம் நீ எப்படி தலைவன் ஆவே?!

அதுவந்து....

 கமல்: என் நண்பர் சொல்ல வர்றது என்னன்னா போர் வரும்போது வரும். போர்ன்னா   போரில் துப்பாக்கி, குண்டு, பீரங்கி, துரோகம்லாம் இருக்கும். ஆனா சில போர் இருக்கு அதுல துரோகம் மட்டுமே இருக்கும். அதுக்கு பேர் வைக்கோப்போர்ன்னு நீங்க நினைச்சா அது அதனால் நான் சொல்ல வருவது என்னவென்றால்...

போதும் ஆண்டவரே!  என்னால முடியல. உங்க இம்சை பத்தாதுன்னு இந்த கொசுத்தொல்லை வேற! இது கடிச்சு டெங்கு வந்தா நான் போய் சேர வேண்டியதுதான்.

தெர்மாக்கோல் ராஜூ:  இந்த கொசுத்தொல்லை ஒழிக்க எனக்கு ஒரு யோசனை இருக்கு. அதாவது. எல்லா பயலும் வாரம்  முழுக்க எப்படியாவது  கொசுவை அடிச்சு அதுக்குன்னு வேலைக்கு அமர்த்தப்படும் ஆட்கள்கிட்ட அடிச்ச சாவடிச்ச கொசுவை கொண்டு வந்து கொடுக்கனும். இப்படி வாரத்துக்கு அம்பது, நூறு கொசுன்னு எல்லாரும் அடிச்சா ஒரே நாளில் கொசு ஒழிஞ்சிடும். அப்படியும் கொசு ஒழியலைன்னா பெரிய கொசுவலையா வாங்கி ஒவ்வொரு ஊருக்கும் போர்த்தி விட்டுடலாம்...


ஐய்ய்ய்ய்ய்யா சாமிகளா! என்னை ஆளை விடுங்க... நான் சரவணன் மீனாட்சி, கலக்க போவது யாரு, அது இது எது.. சூப்பர் சிங்கர் நடத்தியே என் சேனலை ஒப்பேத்திக்குறேன்.... மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கேப்.

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1473741
நன்றியுடன்,
ராஜி.

Wednesday, October 04, 2017

எனக்கொரு இடம் பிடித்து வை தோழி! - மௌனசாட்சிகள்


இதுவரைக்கும் மௌனச்சாட்சிகளில்  புகழ்பெற்ற  மன்னர்களின் கோட்டை கொத்தளங்கள், கல்லறைகள், புராண மாந்தர்களின் நினைவிடங்கள் முதற்கொண்டு வருங்காலத்தில் சென்னை நகரை மேலும் அழகாக்கும் மெட்ரோ ரயில் வரைப் பார்த்தோம். ஆனா, இன்னிக்கு பார்க்கப்போறது ஒரு அழகான நட்பின் முடிவை.....  சில தினங்களுக்கு முன்  மரணச்செய்தியை தாங்கி அலைப்பேசி அழைத்தது. ஒருகாலத்தில் உயிராய் இருந்த தோழியின் மரணச்செய்தி. காய்ச்சல் மற்றும் பண்டிகையின் காரணமா  தொலைதூர பயணம் வேண்டாம்ன்னு சொல்லி அப்பா அம்மா மட்டும் போய் வந்தாங்க.  உடம்பு நல்லானதும் விசாரிக்கலாம்ன்னு அவ வீட்டுக்கு போனோம்.  காஃபி கொண்டு கொடுத்தவளை பார்த்தபோது அச்சு அசலாய் என் தோழியை உரிச்சுக்கிட்டு வந்த அவள் மகளை காண நேர்ந்தது. பார்த்ததும் அதுவரை நாகரீகம் கருதி அடக்கி வச்சிருந்த அழுகை  பொங்கி வந்தது. ரெண்டு பெண் ஒரு பையன்னு அவளுக்கு இருந்தாலும் மூத்தது மட்டும் இவளைப்போல....
நான் பிறந்தபோது அப்பா அருப்புக்கோட்டை கமுதிக்கு பக்கத்திலிருக்கும் நீராவின்ற ஊர்லதான் வேலைப் பார்த்து வந்தார். அப்புறம் அங்கிருந்து மாற்றலாகி அரக்கோணம் பக்கத்தில் இருக்கும் “வளர்புரம்”ன்ற ஊருக்கு வந்தார். அந்த ஊருக்கு போகும்வரை எனக்கு தமிழ் பேச வராது. முதல்ல எதிர்வீட்டு கார்த்தி அறிமுகம். என்னைவிட அவன் 13 நாள் பெரியவன். பள்ளிக்கூடம் சேர்த்தபின் தெய்வநாயகி அறிமுகம். இவ என்னைவிட 6 மாசம் பெரியவ. எங்க போனாலும் சுத்தினாலும் ரெண்டு பேரும் ஒன்னாதான் இருப்போம். திங்குற பண்டங்கள் முதற்கொண்டு உடுத்திக்கும் துணி வரை இருவருக்கும் ஒரே ரசனை. அவளோடு பிறந்தவங்க 5 பேர் இருந்தாலும் எங்க வீட்டில்தான் இருப்பா. என் வீட்டில் அப்பா அம்மா இல்லன்னா அவங்க வீட்டில்தான் நானிருப்பேன்.   எட்டாவது வரை ஒன்னாதான் படிச்சோம். 
இது நாங்க படிச்ச ஆரம்ப பள்ளிக்கூடம். இங்கதான் 5 வரை படிச்சோம். அப்போலாம் பள்ளியில் சேர, ஒரே தகுதி..., தலைமீது வலது கைவைத்தால் இடதுகாது கைக்குப் படனும்ங்குறதுதான். எனக்கு முன்னாடியே அவ பள்ளிக்கூடத்துல சேர்ந்திருந்தா.  மொழி தெரியாததால யார்கூடவும் சேராம ஒத்தைக் குரங்காய் உக்காந்திருக்கும் என்னைக் கண்டு பள்ளியில் தெய்வநாயகிதான் முதன் முதலில் நட்புக்கரம் நீட்டியவள். அது முதல் அவன் இறப்பு வரை நாங்க திக் ஃப்ரெண்டஸ்.  அவ வீட்டுக்கு எதிர்க்கவேதான் எங்க ஸ்கூல். எங்க வீடு ரெண்டு தெரு தள்ளி. அப்பா கொண்டு வந்து விட்டு திரும்ப கூட்டி போவார். அதுவரை தெய்வநாயகிதான் எனக்கு எல்லாம்...  அவங்க வீட்டுல அவங்க வீட்டு பிள்ளைக எல்லாருக்கும் காலைல ஸ்கூல் போகும்போது பத்து பைசா கொடுப்பாங்க. ஒருமுறை எனக்கும் கொடுக்க அதை வாங்கி நானும் பண்டம் வாங்கி திங்க, அது அப்பாக்கு தெரிய வர.... இனி யார்கிட்டயாவது கைநீட்டி எதாவது வாங்குவியான்னு கேட்டு அப்பா சூடிழுக்க... அந்த வடு இன்னமும் கையில் இருக்கு... அன்னிக்கு வாங்குன சூடு இன்னிக்கு வரைக்கும் யார்க்கிட்டயும் எதும் கேட்கமாட்டேன். யார்க்கிட்டயும் கைநீட்டி எதும் வாங்க மாட்டேன். கடவுளிடம்கூட.... 
சில வருடங்கள் கழிச்சு அவங்களோட இன்னொரு வீட்டுக்கே குடிபோனோம். அதுக்கப்புறம் எங்க நட்பு இன்னமும் உறுதி பட்டுச்சு. எங்க பாட்டி வீட்டுக்க்கு வரும்போது அவளை கூட்டி வருவோம். எனக்கு வாங்குற மாதிரியே வளையல், பின்லாம் அவளுக்கும் எங்க வீட்டுல வாங்கி தருவாங்க. கணக்கு பார்க்குறதில்லை. அவ வாங்கிப்பா. ஆனா நான் வாங்கிக்க மாட்டேன்.   ஆறாம் வகுப்புக்கு ஒரு கிமீ தூரத்துல இருக்கும் இந்த உயர்நிலை  பள்ளில சேர்ந்தோம்.   ஒரு பக்கம் எலுமிச்சை தோப்பு, ஒரு பக்கம் தென்னையும், கொய்யாவும் சேர்ந்த தோப்பு.  25 காசு கொடுத்தா அணில் கடிச்ச கொய்யாக்களை கைநிறைய கொடுப்பாங்க. வாங்கி சாப்பிட்டுக்கிட்டே நடப்போம்.  
இப்பத்திய பள்ளி  போலலாம் கிடையாது அப்போ. தினமும் காலையில் தமிழ்தாய் வாழ்த்து, திருக்குறள் சொல்றது, கொடியேற்றுதலோடு வகுப்பு தொடங்கி, ஜனகன மண பாடி, கொடியிறக்கி பள்ளி முடியும். பிரேயர்போது பேசவோ, அசையவோ கூடாது. அப்படி எதாவது சேட்டை செஞ்சா வரலாறு ஆசிரியர் பிரம்புதான் பேசும். இன்னிக்கு வாரம் ஒரு முறைக்கூட இப்பத்திய பள்ளிகளில் கொடியேற்றமும், பிரேயரும் கிடையாது. நான் படிச்ச போதுதான் இந்த மேடையை கட்டுனாங்க. அப்போ என் உயரத்துக்கு இருந்துச்சு, இங்கதான் நாங்க சைக்கிள் பழகப் போயி இந்த மேடையில் இடிச்சு  முட்டிக்கால் பெயர்ந்துச்சு.  அன்னில இருந்து அவ சைக்கிள் பழகல. நான் கத்துக்கிட்டேன். அது வண்டியாச்சு. அவ கடைசிவரை சைக்கிள் ஓட்ட பழகவே இல்ல.
ஆறு, ஏழு, எட்டாவது என மூணு வருசம்  படிச்ச இடம். ஆஸ்பெட்டாஸ் கூரைக்கு கீழ் வகுப்பறைகள் இருக்கக் கூடாதுன்ற அரசாங்க ஆணைக்கேற்ப இந்த இடம் இப்போ வாகனங்கள் நிறுத்துமிடமாகிட்டிருக்கு. திடீர், திடீர்ன்னு அக்காக்களை வீட்டுக்கு அனுப்புவதன் மர்மம் புரியாம குழம்பி தவித்திருக்கேன். ஒருநாள் தெய்வாவையும் அப்படி அனுப்ப, அவளை வீட்டில் ஒதுக்கி உக்கார வைக்க அவளோடு நானும் உக்காருவேன்னு அடம்பிடிச்சு அழுது அம்மாக்கிட்ட அடிவாங்குனதுலாம் தனிக்கதை.  அவ சடங்குக்கு அவளோடு சேர்ந்து வளையல் போட்டுக்கிட்டேன். அதுக்கப்புறம்தான் அப்பா வச்ச சூடு நினைவுக்கு வர,  அப்பா அம்மாக்கு தெரியாம வளையலை கழட்ட போக வளையல் உடைஞ்சு குத்தி கிழிச்சு பெருசா காயம். அதை அம்மாக்கிட்ட எப்படியோ மறைச்சு.... அந்த தழும்புதான் என்னுடைய அடையாளமாய் அரசாங்கத்துக்கிட்ட இருக்கு. தழும்பை போலவே அவளோட நினைவும் நீங்காம இருக்கத்தான் அந்த காயம் அன்னிக்கு உண்டானது போல!
நாங்க படிச்சுக் குப்பைக் கொட்டிய இடமின்று நாங்க இல்லாமயே குப்பையாய் கிடக்கு. சொன்னா நம்புவீங்களான்னு தெரியாது . அவ என்னைவிட கொஞ்சம் படிப்புல மந்தம். நாடகம், நாட்டியம், விளையாட்டுன்னு எதுலயும் கலந்துக்க மாட்டா...  ரொம்ப அமைதி. இருக்கும் இடமே தெரியாது. அதிர்ந்து பேச மாட்டா.  அப்பவே சாமி பக்தி அதிகம். அவளும் நானும் கோவிலுக்கு போவோம். அவ விளக்கு போடுவா. நான் ஆலமரம், அரசமரத்தடியில் ஆடுவேன். 



அவ பெரியவ ஆனதும் மதிய நேரத்துல வீட்டுக்கு வர வேணாம்ன்னு சாப்பாடு கட்டி கொடுத்துடுவாங்க.  பள்ளில  இருந்து கொஞ்சம் தள்ளி இந்தப் பெருமாள் கோவில் இருக்கு. நான் பள்ளியில் சேரும்போது அப்போதான் கட்டிடங்கள்லாம் கட்டிக்கிட்டு இருந்தாங்க. அதனால, இங்கதான் வகுப்பு நடக்கும். இங்கதான் லஞ்ச் சாப்பிட வருவோம். கூடவே விளையாட்டும்..., இந்த இடம் இன்று இடிஞ்சு குட்டிச் சுவராய் இருக்கு.  இங்கதான் சாப்பிடுவோம். சாப்பிட்டு முடிச்சு அவ எதாவது எழுதுவா.. படிப்பா... நான் எப்பயும்போல ஆட்டம்தான்.
கோவில் பக்கத்துலயே குளம். அந்தா தெரியுது பாருங்க அந்தப் படிக்கட்டுகளில் அமர்ந்துதான் லஞ்ச் சாப்பிடுவோம். கூடவே அரட்டையும் நடக்கும். சிலுசிலுன்னு காத்து செமயா இருக்கும். கரைகளில் இருக்கும் நாலு வீடும் கோவில் குருக்களோடது. தெய்வாக்கிட்ட சொல்லி அனுப்புவாங்க. இந்த குட்டிசாத்தான் குளத்துல விழுந்துடபோகுதுன்னு... என்னை என் அம்மாவைப்போல பார்த்துப்பா.  தண்ணில இறங்குனாலே திட்டுவா. ஆனா, வீட்டுல சொல்ல மாட்டா. குளத்துக்கு பக்கத்திலிருக்கும் ஐயர் வீட்டுங்கள்ல போய் நான் விளையாடுவேன். என் பை, லஞ்ச் பாக்ஸ்லாம் எடுத்து வச்சு வர்றது அவ வேலை. 
நாங்க நாலு பேர், எங்களுக்கு பயம்ன்னா என்னன்னு தெரியாதுன்னு காக்க, காக்க” படத்துல சூர்யா சொல்வார். அதுப்போலதான் நாங்க நாலு பேரும். அந்த ஊர் முழுக்க எங்க காலடி படாத இடமே இருக்காது. அதனால ஊருக்குள்ள எங்களுக்கு பேரு அரட்டை கோஷ்டி.  இதுல ரெண்டு பேரு டீச்சர், ஒருத்தி நர்ஸ். வீணாப்போனது நான் மட்டும்தான் . எனக்கு இடது பக்கத்துல இருக்குறதுதான் தெய்வநாயகி.  லீவ் நாளில் மதியத்துல வள்ளலார் கோவிலுக்கு போய் கஞ்சி வாங்கி குடிப்போம்.  முள் வெட்டி வர்றது, வீட்டுக்கு தண்ணி எடுத்து வர்றதுன்னு பால்யத்தை அனுபவிச்சோம். எட்டாவது முடிச்சு ஒன்பதாவது போகும்போது அப்பாக்கு டிரான்ஸ்பர் வர திருத்தணிக்கு வந்திட்டோம். முதல்ல வாரா வாரம் ஞாயித்துகிழமைல சந்திப்போம். அதுக்கப்புறம், மாசம், வருசம்ன்னு நீண்டு... இன்னிக்கு இல்லாமயே போயிட்டா.

எங்க ரெண்டு பேத்துக்கும் ஒரே நேரத்துலதான் டாலர் செயின் செஞ்சாங்க. ஒரே டிசைன். என் கல்யாணத்தப்போ அவளுக்கு கண்பார்வைல பிரச்சனை வர கல்யாணத்துக்கு வரல. ஆனா, அவ கல்யாணத்தப்ப என் பெரிய பொண்ணு எட்டுமாசம் கையில்... எங்க ஊர் பக்கம்லாம் 2,4,6,8,10,12ன்னு இரட்டைப்படை மாசத்துல குழந்தை கையில் இருந்தாலோ அல்லது வயித்துல இருந்தாலோ வெளியூருக்கு அனுப்பமாட்டாங்க. அப்படியே அனுப்பிச்சாலும் நைட் தங்ககூடாதுன்னு சொல்வாங்க. அப்படியே என்னையும்  அனுப்பமாட்டேன்னு எங்க வீட்டில் சொல்ல... அழுது அடம்பிடிச்சு அவ கல்யாணத்துக்கு போனேன்.  என் கல்யாணத்தப்போ அவளுக்கு பண்ண ஆப்ரேஷனே இன்னிக்கு அவ உயிருக்கு உலை வச்சிட்டுது. கண்ணுல ஆப்ரேஷன் பண்ணி செயற்கை கண் வச்சதை புகுந்த வீட்டில் சொல்லாம விட, கல்யாணம் கழிச்சு கொஞ்ச நாள் கழிச்சு தெரிய வர அன்றிலிருந்து ஆரம்பிச்சது கொடுமை..  அந்த கொடுமை இன்னிக்கு அவ உசிரை எடுத்தபின் தான் ஓய்ஞ்சிருக்கு. என்ன நினைத்தாளோ! கிட்டத்தட்ட மூன்று வருடத்திற்குபின் என்னிடம் பேசினாயே! அதுதான் கடைசி உரையாடல்ன்னு கண்டுப்பிடிக்காத பாவியம்மா நான்! உணர்ந்திருந்தால் உன்னை வீட்டுக்கு வரவச்சிருப்பேனே! கடைசி நிமிடத்தில் என் நினைவு உனக்கு வந்ததே! அதை உன் அண்ணனிடம் சொல்லி இருந்தாலாவது உன்னை காப்பாத்தி இருக்கலாமோ! பண்ணிய பாவங்களில் இதுதானம்மா பெரிய பாவம்.  கொலையா?! தற்கொலையான்னு கண்டுப்பிடிக்க முடியாத மரணம் உனக்கு...

ஊஞ்சல் கட்டி விளையாடிய குளத்தங்கரை வேப்ப மரம், கழுதை வாலைப் பிடிக்கப்போய் உதை வாங்கி கால் ஒடிஞ்ச நாகாத்தம்மன் கோவில், குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு முறை நேரத்துக்கு ஒலிக்க விடும் பஞ்சாயத்து சங்கு. தண்ணி வற்றிய கிணத்தில் நீர் சொட்டி இறைச்சதுன்னு எத்தனையோ சொல்லிக்கிட்டு போகலாம் அந்த ஊரு நினைவுகளையும்..., எங்கள் நட்பினையும்.... 

தாயக்கட்டை விளையாடிய
எதிர்வீட்டு அக்கா...,
ஆண்பிள்ளைகளுக்கு சரிசமமாய்
விளையாட வெட்டிய
கோலிக்குண்டு  குழி...,

மீனென தவறாய் நினைத்து
பிடித்து வீட்டு கிணத்தில்
விட்ட தலைப்பிரட்டை..,
வாலில் பூச்சுற்றி,
நெற்றியில் பொட்டு வைத்து
பேர் வைத்த நாய்க்குட்டி..,

பனங்காய் வண்டி, சிங்கப்பூர்
போன ரயில் வண்டி...,
கெட்ட ஆட்டம் போட்ட திடீர் மழை..,
தேள்கடிக்கு உதவும் என பொறுக்கி
வைத்த ஆலங்கட்டி மழைக் கற்கள்..,

உலுக்கியெடுத்த நாவல் மரம்
கண்டும் காணாமல் விட்ட
கோடி வீட்டு அத்தை..,
குளத்தங்கரை தாமரை..., முதன் முதலாய்
ஊருக்குள் வந்த பேருந்து...,

வருடத்திற்கொருமுறை வரும் திருவிழா..,
பப்பரமிட்டாய், சாயம் பூசிய வேசதாரிகள்..,
களைக்கட்டும் தேர்தல்,
அரசியல் சண்டை.., தோத்தவனும்,
ஜெயித்தவனும் ஒரே திண்ணையில் சாராயக்குடி.

நல்லதோ, கெட்டதோ அன்றைய
இரவில் போடப்படும்
சரஸ்வதி சபதம், விதி,
சம்சாரம் அது மின்சாரம்.

விசம் குடிச்ச கதிர்வேல் அண்ணா,
கிணற்றில் விழுந்த ஜோதி மாமி,
பிரசவத்துக்கு துடிச்ச மாலதி அத்தை
பக்கவாதத்தில் துவண்ட கோபால் தாத்தா
என சுமந்த அப்பாவின் வண்டி...,

உனக்கும் எனக்குமாய் வாங்கிய டாலர் செயின்..
உன் அண்ணன் திருமணத்துக்கு
ஒரே மாதிரியாய் வாங்கிய சீர் புடவை என
அனைத்தும் மௌனமாய்  நம் நட்புக்கு சாட்சி சொல்லும் தோழி.
இறைவனின் பாதத்தில் இனியாவது அமைதியாய் துயில் கொள் தோழி..
இன்று நீ.. நாளை நான்....
உன்னருகில் இடம் பிடித்து வை...
வந்தபின் விட்ட பால்யத்தை தொடருவோம்!!!


# படங்கள் 2014 ஜூலைல என் தோழியோட அண்ணன் மகள் நிச்சயதார்த்தத்துக்கு எடுத்தது. கடைசியா அன்னிக்குதான் பார்த்தது...
தமிழ்மணம் ஓட்டுப்பட்டை
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1473635

என்றும் நட்புடன்
உன் தோழி
ராஜி. 

Tuesday, October 03, 2017

குழிப்பணியாரம் - கிச்சன் கார்னர்

மாலைல பசங்களுக்கு கொடுக்க நல்லதொரு டிஃபன்.  காரமும் இனிப்பும் செய்யலாம். எங்காவது ஊருக்கு போகும்போது செஞ்சு எடுத்துக்கிட்டு போகலாம். தொட்டுக்க எதும் தேவையில்ல. அப்படியே சாப்பிடலாம் (ஆனா, நான் மட்டும் என் பசங்களுக்கு வேர்க்கடலை சட்னி இல்லன்னா காரச்சட்னி செஞ்சு கொடுப்பேனாம்!! )

தேவையான பொருட்கள்....
அரிசி - ஒரு டம்ப்ளர்(டம்ப்ளர் விளிம்புக்குள் அரிசி இருக்கனும்)
உளுந்து -  அரிசிக்கு மேல உளுந்து வைக்கனும்.. கைல பிடிக்க கூடாது. ஆனா கோபுரமா நிக்கனும்
உப்பு
உளுந்தம்பருப்பு,
கடலைப்பருப்பு
காய்ந்த மிளகாய்
கறிவேப்பிலை
ஆப்பசோடா

அரிசி, உளுந்தை ரெண்டு மணிநேரத்துக்கு மேல ஊற வச்சு, உப்பு போட்டு நைசா அரைச்சுக்கனும்.  அரைச்ச மாவை ஆறு மணிநேரம் புளிக்க விடனும்


வாணலில எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு போட்டு சிவக்க விடனும்.

காரத்துக்கு காய்ஞ்ச மிளகாய் கிள்ளி போட்டுக்கனும்


பொடியா நறுக்கின வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கிக்கனும்...
புளிச்ச மாவுல வதக்குன வெங்காயம் சேர்த்து, ஆப்ப சோடாவும் சேர்த்து நல்லா கலக்கிக்கனும்..

குழிப்பணியார சட்டில எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும் மாவு ஊத்தி மூடி வச்சு ரெண்டு பக்கமும் சிவக்க விட்டு எடுக்கனும். சூடா இருக்கும்போதே இட்லிப்பொடி தூவி சாப்பிட்டாலும் நல்லா இருக்கும்.



மாவரைக்க என்னைப்போல சோம்பேறித்தனம் பட்டால்.. இருக்கவே இருக்கு இட்லி மாவு. நல்லா புளிச்சிருந்தா இப்படி செய்யலாம்...

இனிப்பு பணியாரத்துக்கும் இதே அளவு அரிசி உளுந்தும் போடனும். அரிசி அரைக்கும்போதே கொஞ்சம் உப்பு, வெல்லம் சேர்த்து அரைச்சுக்கனும்... ஆப்பசோடா தேவைப்பட்டா ஏலக்காய் பொடி சேர்த்து பணியாரம் சுடலாம்.... இப்பலாம் ஓட்ஸ், திணை, சாமை, குதிரைவாலின்னு விதம் விதமா பணியாரம் சுடுறாங்க. 

கேமரா உடைஞ்சிட்டதால... கடைசி படங்கள் கூகுள்ல சுட்டது...


தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
நன்றியுடன்,
ராஜி.