Saturday, July 15, 2017

காமாட்சி கிங்மேக்கரான கதை....

நடிப்பு, இசை, கல்வி, நாடகம், தற்காப்புக்கலை.....ன்னு எந்தத்துறையில சாதிக்கனும்ன்னாலும் அது சம்பந்தப்பட்ட ஆளுங்கக்கிட்ட  கத்துக்குறோம். ஆனா, அரசியல் செய்ய வரும்போது மட்டும் யார்க்கிட்டயும் கத்துக்கமாட்டேங்குறோம். அரசியல்வாதி ஆகி மாட்டிக்காம எப்படி சம்பாதிக்கலாம்/?! எங்க வருமானம் வரும்ன்னு கத்துக்குறாங்களே தவிர, நல்லபடியா அரசியல் செய்ய யாருக் கத்துக்குறதில்ல.  அப்படி அரசியல் செய்ய கத்துக்கனும்ன்னா யார்க்கிட்ட கத்துக்கனும் தெரியுமா?! எல்லா தலைவர்கள்கிட்டயும் ஒவ்வொரு ஸ்பெஷல் இருக்கும். ஆனா, எல்லா ஸ்பெஷலும் சேர்ந்த ஒரு அரசியல்வாதி இருந்தார்ன்னா நம்பமாட்டீங்க. அப்படி ஒரு ஸ்பெஷலான அரசியல்வாதி நம்ம தமிழ்மண்ணுல இருந்தார்ன்னு சொன்னா இன்னும் ஆச்சர்யப்படுவீங்க.  அட, நிஜமாதாங்க சொல்றேன். சொன்னா நம்புங்க ப்ளீஸ்....  இன்னிக்கு யார்யாருக்கோ கல்வி வள்ளல்ன்னு பட்டம் கொடுக்குறாங்க. ஆனா அந்த பட்டத்துக்கு உரிய ஒரே ஆள் இவர்தானுங்க.. இப்ப நம்ப ஆரம்பிச்சு இருப்பீங்களே! இந்திய அரசியலையே ஆட்டி வைக்கும் நிலையில் ஒரு பச்சை தமிழன் இருந்தார்..., எளிமையின் சின்னம், படிக்காத மேதை, கர்மவீரர், கிங்மேக்கர்..... இப்பவாவாது நான் சொன்னதை நம்புறீங்களா?!  எந்த கட்சியா இருந்தாலும் தான் சார்ந்த கட்சித்தலைவர் ஆட்சிக்காலத்தை சொல்லாம இவர் ஆட்சிப்புரிந்த காலத்தை சொல்லி அவரை மாதிரி நாங்களும் ஆட்சி அமைப்போம்ன்னு சொல்லித்தான் இன்னிக்கும் ஓட்டு கேட்குறாங்கன்னா அவர் ஆட்சி எப்பேற்பட்டதா இருக்கும்?! இப்பவாவது நான் யாரைச்சொல்லுறேன்னு புரியுதுங்களா?! எஸ்.. அவரேதான்...  நான் சொல்லுறது நம்ம  காமராஜர் ஐயாவைத்தான்.



காமராஜர் ஐயாவோட  பிறந்த நாள் இன்று. அவரைப்பற்றி நமக்கு தெரிந்ததும், தெரியாததுமாய் சில தகவல்கள் இன்று பார்க்கலாம்.

இன்னிக்கு விருதுநகர்ன்னு சொல்லப்படுற விருதுப்பட்டில  1903 வது வருடம், ஜூலை 15ம் நாள் குமாரசாமி, சிவகாமி அம்மாவுக்கும்  மகனாக வியாபாரக்குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை தேங்காய் வியாபாரம் செய்து வந்தார்.  சிவகாமி அம்மாளுக்கு  மூத்தவர்கள் இருவர் சகோதரர்கள். மூத்த சகோதரர் கருப்பையா. இவர் துணிக்கடை வைத்திருந்தார்.  இளைய சகோதரர் காசிநாராயணன். இவர் திருவனந்தபுரத்தில் மரக்கடை வைத்திருந்தார்.  தங்கள் குலத்தெய்வமான காமாட்சியம்மாளின் பெயர்தான் காமராஜருக்கு முதன்முதலில் சூட்டிய பெயராகும்.  அவரது தாயார் ராஜா என அன்பாய் அழைப்பார். காமாட்சி+ராஜா=காமராஜர் என்றானது.  காமராஜருக்கு பின் பெண் குழந்தை பிறந்தது. அதற்கு நாகம்மா என்ற பேர் சூட்டினர். தங்கைமீது கொள்ளைப்பாசம் காமராஜருக்கு...



தனது பள்ளிப்பருவத்திலேயே விருதுப்பட்டியில் நடந்த பொதுக்கூட்டங்களுக்கு போனார். ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டுக்கொண்டிருந்த காலம்.  இளம் வயதில் பொதுக்கூட்டங்களில் கேட்ட எழுச்சி உரைகளே பிற்காலத்தில் சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட காரணமானது.  தந்தையோடு கல்விப்போம்.... என்ற முதுமொழிக்கேற்ப தனது  ஆறாவது வயதில் தந்தை குமாரசாமியின் மறைவுக்கு பின் காமாராஜரின் பள்ளிப்படிப்பு அஸ்தமித்தது. தாயின் நகைகளை விற்று சிலகாலம் பிழைப்பு ஓடியது.   தனது இரு மாமன் கடைகளிலும் மாறிமாறி சிலகாலம் வியாபாரத்தில் ஈடுபட்டார். ஆனாலும், அவர் கவனம் முழுக்க சுதந்திரபோராட்டத்திலேயே இருந்தது. வைக்கம் போராட்டத்திலும், உப்பு சத்தியாக்கிரகத்திலும் பங்கு பெற்றார்.



சத்தியமூர்த்தியின் தொண்டனாகி, கங்கிரஸ் பேரியக்கத்தின் உறுப்ப்பினராகி  முழுநேரமும் தேசப்பணியாற்ற தன்னை அர்ப்பணித்துக்கொண்டார்.   கள்ளுக்கடை மறியல், அந்நிய நாட்டு துணி எரிப்பு,  உப்பு சத்தியாகிரகம், கொடிப்போராட்டம்.. என அத்தனையிலும் பங்கேற்று சிறைச்சென்று தண்டனை அனுபவித்தார்.  தமிழ்நாட்டு காங்கிரசில் காமராஜருக்கென்று தனி இடம் உண்டானது.  1952 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் சாத்தூர் தொகுதியில் நின்று வெற்றியும் பெற்றார்.  சுமார் 12 ஆண்டுகாலம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்து அகில இந்திய அரசியலில் தமிழகத்துக்கென பெரும் செல்வாக்கை ஏற்படுத்தி தந்தார்.



முதலைமைச்சரான கதை...

1953 ஆம் ஆண்டு, ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வி திட்டத்தால், எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால், ராஜாஜியின் செல்வாக்கு குறைந்ததோடு மட்டுமல்லாமல், காங்கிரஸ் கட்சி உள்ளேயும் மதிப்புக் குறைந்தது. இதனால், ராஜாஜி அவர்கள் பதவியிலிருந்து விலகி, தன் இடத்திற்கு சி. சுப்பிரமணியத்தை முன்னிறுத்தினார். ஆனால், கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில், காமராஜர் பெருவாரியான வாக்குகளைப் பெற்றதால், 1953 ஆம் ஆண்டு தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். 




கல்விக்கண் திறத்தல்....

காமராஜர், தன்னுடைய அமைச்சரவையை மிகவும் வித்தியாசமாகவும் வியக்கும் படியும் அமைத்தார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட சி.சுப்பிரமணியத்தையும், அவரை முன்மொழிந்த எம். பக்தவத்சலத்தையும் அமைச்சராக்கினார். முதல்வரான பின்னர், தன்னுடைய முதல் பணியாக ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வித் திட்டத்தினை கைவிட்டு, அவரால் மூடப்பட்ட 6000 பள்ளிகளைத் திறந்தார். மேலும், 17000த்திற்கும் மேற்பட்ட பள்ளிகளைத் திறந்தோடு மட்டுமல்லாமல், பள்ளிக்குழந்தைகளுக்கு “இலவச மதிய உணவு திட்டத்தினை” ஏற்படுத்தி, ஏழை எளிய மக்களின் கல்வியில் முன்னேற்றத்தினை ஏற்படுத்தினார். இந்திய அரசியலில் தலைச்சிறந்த பணியாக கருதப்பட்ட இந்தத் திட்டம், உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகவும் அமைந்தது எனலாம். இதனால், ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் 7 சதவீதமாக இருந்த கல்விக் கற்போரின் எண்ணிக்கை, இவருடைய ஆட்சியில் 37 சதவீதமாக உயர்ந்தது.


தொழில்துறையின் வளர்ச்சிக்காக காமராஜர் மேற்கொண்ட திட்டங்கள்:
காமராஜர் கல்வித் துறையில் மட்டுமல்லாமல், தொழில்துறை, நீர்பாசனத் திட்டங்கள், மின் திட்டங்கள் போன்றவற்றிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தினார். தமிழகத்தில் தொழில் துறைகளை வளர்ப்பதை குறிக்கோளாகக் கொண்டு, பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தத் தொடங்கினார். ‘நெய்வேலி நிலக்கரித் திட்டம்’, ‘பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை’, ‘திருச்சி பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ்’, ‘கல்பாக்கம் அணு மின்நிலையம்’, ‘ஊட்டி கச்சா ஃபிலிம் தொழிற்சாலை’, ‘கிண்டி டெலிபிரிண்டர் தொழிற்சாலை’, ‘மேட்டூர் காகிதத் தொழிற்சாலை’, ‘சேலம் இரும்பு உருக்கு ஆலை’, ‘பாரத மிகு மின் நிறுவனம்’, ‘இரயில் பெட்டித் தொழிற்சாலை’, ‘நிலக்கரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை’ என மேலும் பல தொழிற்சாலைகள் காமராஜரால் உருவாக்கப்பட்டன. இதைத் தவிர, ‘மேட்டூர் கால்வாய்த்திட்டம்’, ‘பவானி திட்டம்’, ‘காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம்’, ‘மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருஷ்ணகிரி, ஆரணியாறு போன்ற நீர்பாசன திட்டங்களையும்’ ஏற்படுத்தினார். காமராஜர் ஆட்சியின் இறுதியில், தமிழகம் தொழில் வளத்தில் வடநாட்டு மாநிலங்களைப் பின்னுக்குத் தள்ளி, இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
கிங்க் மேக்கர்...
மூன்று முறை தமிழக முதலமைச்சராக தேர்தெடுக்கப்பட்ட காமராஜர் அவர்கள், பதவியை விட தேசப்பணியும், கட்சிப்பணியுமே முக்கியம் என கருதி “கே-ப்ளான்  (K-PLAN)” எனப்படும் “காமராஜர் திட்டத்தினை” கொண்டுவந்தார். அதன்படி, கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை, இளைஞர்களிடம் ஒப்படைத்துவிட்டு, கட்சிப்பணியாற்ற வேண்டும் என்பது இதன் நோக்கமாகும். அதன் பேரில் அக்டோபர் 2, 1963 ஆம் ஆண்டு தன்னுடைய முதலமைச்சர் பதவியைத் துறந்த காமராஜர் பொறுப்பினை பக்தவத்சலத்திடம் ஒப்படைத்துவிட்டு, தில்லிக்குச் சென்றார். பிறகு, அதே ஆண்டில் அக்டோபர் 9 ஆம் தேதி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார். இத்திட்டத்தினை நேரு போன்ற பெரும் தலைவர்கள் ஏற்றுக்கொண்டது மட்டுமல்லாமல், லால்பகதூர் சாஸ்திரி, மொரார்சி தேசாய் செகசீகன்ராம், எசு.கே. பட்டேல் போன்றோர் பதவியைத் துறந்து இளைஞர்களிடம் ஒப்படைத்தனர். இதனால், கட்சியினரிடமும், தொண்டர்களிடமும், மக்களிடமும் மரியாதைக்குரிய ஒருவராக மாறி, அனைவருக்கும் முன்மாதிரியாகவும் திகழ்ந்தார். 1964 ஆம் ஆண்டு, ஜவர்ஹலால் நேரு மரணமடைந்தவுடன், லால்பதூர் சாஸ்திரி அவர்களை இந்திய பிரதமராக முன்மொழிந்தார். பிறகு, 1966 ஆம் ஆண்டு லால்பதூர் சாஸ்திரியின் திடீர் மரணத்தைத் தழுவ, 48 வயது நிரம்பிய நேருவின் மகள் இந்திராகாந்தியை இந்தியாவின் அடுத்த பிரதம மந்திரியாக்கினார் காமராஜர். 

பொற்காலத்தின் முடிவு...
தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் சமூகத்தொண்டு செய்வதிலேயே அர்பணித்துக்கொண்ட காமராஜர் அவர்கள், 1975 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி தன்னுடைய 72 வது வயதில் காலமானார். அதற்கு அடுத்த ஆண்டு, இந்திய அரசின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா” விருது மத்திய அரசால் அவருக்கு வழங்கப்பட்டது. சமூகத் தொண்டையே பெரிதாக நினைத்து வாழ்ந்த அவர், கடைசிவரை திருமணம் செய்துகொள்ளாமலே வாழ்ந்தார். ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தபொழுதும் இறுதிவரை வாடகை வீட்டிலேயே வாழ்ந்து இருந்தார். அவருக்காக அவர் சேர்த்து வைத்த சொத்து சில கதர் வேட்டிகள், சட்டைகள், புத்தகங்கள் மற்றும் 150 ரூபாய் மட்டுமே.
காமராஜரை பற்றி சுவாரசியமான தகவல்கள்...
1. ஆரம்ப பள்ளிப்படிப்பைக்கூட முடிக்காத காமராஜர் சரளமாய் ஆங்கிலம் பேசுவார். 
2. காமராஜருக்கு நினைவாற்றல் அதிகம். ஒருவரை சந்தித்து எத்தனை வருடம் கழித்து சந்திக்கும்போதும் மிகச்சரியாய் அடையாளம் கண்டுக்கொள்வார். 
3. வெளிப்பயணங்கள், கூட்டங்களின்போது அனைவரும் சாப்பிட்டதை உறுதிப்படுத்திக்கொண்டப்பிறகே உணவருந்துவார்.  காமராஜர் தன் டிரைவர், உதவியாளர்களிடம் எப்போதும்அதிக அக்கறை காட்டுவார். குறிப்பாக அவர்கள் சாப்பிட்டுவிட்டார்களா என்று பார்த்து உறுதிபடுத்திக்கொள்வார்.
4. எந்த இடத்தில் பேசுகிறாரோ அந்த ஊரின் சிறப்புகள், அந்த ஊரில் பிறந்த தியாகிகளை பற்றி தெரிந்துக்கொண்டு பேசுவதை வழக்காமாய் கொண்டிருந்தார். அதனால், தமிழகத்தின் மூலை முடுக்கின் வரலாறு காமராஜருக்கு அத்துப்படி. தமிழ்நாட்டில் காமராஜரின் காலடித்தடம் படாதகிராமமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவர்எல்லா கிராமங்களுக்கும் சென்றுள்ளார்.இதனால்தான் தமிழ்நாட்டின் பூகோளம் அவருக்குஅத்துப்படியாக இருந்தது. காமராஜர் நாளிதழ்களை படிக்கும் போது எந்த ஊரில்என்ன பிரச்சினை உள்ளது என்பதை உன்னிப்பாக படிப்பார்.பிறகு அந்த ஊர்களுக்கு செல்ல நேரிடும் போது, அந்த பிரச்சினைபற்றி மக்களுடன் விவாதிப்பார்.
5. தனது ஆட்சிக்காலத்தில் உயர்கல்விக்காக ரூ. 175 கோடி செலவழித்தார். அந்தக்காலத்தில் இதுமிகப்பெரிய தொகையாகும். 
6. காமராஜரின் பாட்டியின் இறுதி சடங்கின்போது காமராஜர் தோளில் துண்டு போடப்பட்டது. அன்றிலிருந்து தோளில் துண்டு அணிவதை வழக்கமாக்கி கொண்டார். 
7. காமராஜருக்கு பூக்களால் ஆன மாலைகள் என்றாலே அலர்ஜி. அதனால் கழுத்தில் அணுவிக்கும் முன் கைகளில் மாலைகளை வாங்கிக்கொள்வார். அதனால், மாலைகளுக்கு பதிலாக கதர் துண்டுகளை பரிசளித்தார் மகிழ்ச்சி கொள்வார். ஏனெனில், கதர் துண்டுகளை பால மந்திர் என்ற ஆதரவற்றோர் இல்லத்துக்கு கொடுப்பதை வழக்கமாய் கொண்டிருந்தார்.  
8.  எல்லாரும் காமராஜர் என்று அழைத்துவந்த நிலையில் தந்தை பெரியார்தான் மேடைகள்தோறும்"காமராசர்'' என்று கூறி நல்ல தமிழில் அழைக்க வைத்தார். அதேப்போல காமராசருக்கு   "பச்சைத்தமிழன்'' என்ற பெயரைசூட்டியவர் ஈ.வெ.ரா.பெரியார்.
9. காமராசருக்கு ராமர்ன்னா கொள்ளைப்பிரியம். ஓய்வு நேரங்களில் ராமாயணம் படிப்பார். 
10. 9 ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருந்த காமராஜர்சட்டசபையில் 6 தடவைதான் நீண்ட பதில் உரையாற்றிஇருக்கிறார். அந்தளவுக்கு யாரும் கேள்வி எழுப்பாவண்ணம் ஆட்சிப்புரிந்தார். 
11. சட்டத்தை காரணம் காட்டி எந்த ஒரு மக்கள் நலதிட்டத்தையும் கிடப்பில் போட காமராஜர் அனுமதித்ததே இல்லை."மக்களுக்காகத்தான் சட்டமே தவிர சட்டத்துக்காக மக்கள்இல்லை'' என்று அவர் அடிக்கடி அதிகாரிகளிடம் கூறுவதுண்டு.
12. எனக்கு தெரிந்து இவரின் சட்டைப்பையில் பணம் வைத்திருந்ததில்லைன்னு நேரு புகழுமளவிற்கு காமராஜர் மணிபர்சோ பேனாவோ ஒரு போதும் வைத்துக்கொண்டதில்லை. ஏதாவது கோப்புகளில் கையெழுத்துபோட வேண்டும் எனறால், அருகில் இருக்கும் அதிகாரியிடம்பேனா வாங்கி கையெழுத்திடுவார். மதிய உணவின்போது குறிப்பிட்ட பீங்கான் தட்டில் சாப்பிடுவதை வழக்கமாகி கொண்டிருந்தார்.  கடைசிக்காலம் வரை அத்தட்டிலேதான் சாப்பிட்டு வந்தார்.  
13. காமராஜர் தினமும் இரண்டு அல்லது மூன்று தடவைகுளிப்பார். அவருக்கு பச்சைத் தண்ணீரில் குளிப்பது என்றால்மிகவும் பிடிக்கும். குளித்து முடித்ததும் சலவை செய்த சட்டையையேபோட்டுக் கொள்வார்.
14. வட இந்திய மக்கள் காமராஜரை `காலா காந்தி'என்று அன்போடு அழைத்தார்கள். `காலா காந்தி' என்றால்`கறுப்பு காந்தி' என்று அர்த்தம்.
15. சட்ட சபையில் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவு திட்டத்தைமுதல் முறையாக தமிழில் சமர்ப்பித்த பெருமைகாமராஜரையே சேரும்.
16. காமராஜர் இளம் வயதில் கொஞ்சக் காலம்இன்சூரன்ஸ் ஏஜெண்டாக இருந்தார். பின்பு அதை விட்டுவிட்டார்.
17. காமராஜர் புகழ் இந்தியா மட்டுமின்றிஉலகமெங்கும் பரவியது. அமெரிக்காவும்,ரஷியாவும் அவரைத் தங்கள் நாடுகளுக்கு அரசுவிருந்தாளியாக வர வேண்டும் என்று வேண்டுகோள்கள்விடுத்தன. காமராஜர் 1966-ம் ஆண்டு சோவியத் நாட்டுக்கு சென்றார். கிழக்கு ஜெர்மனி, ஹங்கேரி,செக்கோஸ்லேவாக்கியா, யூகோஸ்லோவாக்கிய, பல்கேரியா போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று வந்திருக்கிறார். 

18. தனுஷ்கோடி நாடார், முத்துசாமி ஆசாரி ஆகிய இருவரும்காமராஜரின் நண்பர்களாக அவர் வாழ்நாள்முழுவதும் இருந்தார்கள்.


19.  1953-ல் ஒரே கிளை நூலகம் மட்டும் இருந்தது. ஏழைமாணவர்கள் பொது அறிவு பெறுவதற்காக1961-ல் 454 கிளை நூலகங்கள் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பித்துவைத்தவர் பெருந்தலைவர் காமராஜர்.

20. காமராஜர் தனது ஆடைகளைத் தானே துவைத்துக்கொள்வார். பாரதி பக்தர் காமராஜர். எப்போதும்தன்னோடு பாரதியார் கவிதைகளை வைத்திருப்பார். காமராஜர் ரஷியப் பயணத்தின்போது மாஸ்கோ வரவேற்பில் காமராஜர், பாரதியின் ஆகாவென்றெழுந்து பார் யுகப் புரட்சி' என்ற பாடலைப்பாடி ரஷிய மக்களின் பாராட்டுக்களைப்பெற்றார்.

21. காமராஜர் ஆட்சியில் தமிழ்நாட்டில் சுமார் 33,000 ஏரி,குளங்களை சீர்படுத்த சுமார் ரூ.28 கோடி செலவிடப்பட்டது.

22. காமராஜரால் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக் கல்விமுதன் முதலாக திருச்செந்தூரில் ஆரம்பிக்கப்பட்டது.

23. பயிற்சி டாக்டர்களுக்கு முதன் முதலாக உதவித்தொகை வழங்கியது காமராஜர் ஆட்சியில்தான்.

24.. காமராஜர் என்றுமே பண்டிகை நாட்களைகொண்டாடியதும் இல்லை. அந்நாட்களில் ஊருக்குப்போவதுமில்லை.

25. . காமராஜருக்கு சாதம், சாம்பார், ரசம், தயிர், ஒருபொறியல் அல்லது கீரை இவ்வளவுதான்சாப்பாடு. காரமில்லாததாக இருக்க வேண்டும். இரவில்ஒரு கப் பால், இரண்டு இட்லி, காஞ்சீபுரம் இட்லி என்றால்விரும்பி சாப்பிடுவார்

26. காமராஜரின் முகபாவத்தில் இருந்து எளிதில் யாரும்எதையும் ஊகித்து விட முடியாது. எந்தவொருவேண்டுகோளுக்கும் `யோசிக்கலாம்', `ஆகட்டும் பார்க்கலாம்'என்று சிறுவார்த்தைதான் அவரிடம் இருந்து வெளிப்படும்.

27. காமராஜர் விருது நகரில் இருந்து சென்னைக்குகொண்டு வந்த ஒரே சொத்து ஒரு சிறிய இரும்புடிரங்குப் பெட்டிதான்.

28.. காமராஜரின் சகோதரி மகன் 62-ல் எம்.பி.பி.எஸ்.சீட் கேட்டு சிபாரிசு செய்யக் கூறினார். ஆனால் காமராஜர்`மார்க் இருந்தா சீட் கொடுக்கிறாங்க' என அனுப்பிவிட்டார். பிறகு அவர் 2 வருடம் கழித்தே எம்.பி.பி.எஸ்.-ல் சேர்ந்தார்.

29. . 1961-ம் வருடம் அக்டோபர் மாதம் 9-ந்தேதி காமராஜரின்உருவச் சிலையை நேரு திறந்து வைத்தார். இந்த விழாவில்காமராஜரும் கலந்து கொண்டார்.

30. பெருந்தலைவர் காமராஜர் எவரையும் மனம் நோகும்படிபேச மாட்டார். அரசியல் காழ்ப்புணர்ச்சி எதுவும்கருதாமல் நட்பு முறையுடன் மகிழ்ச்சியோடு பேசுவார். ஒருவேளை எதாவது கோவத்தில் திட்டிவிட்டாலும் ஈகோ பாராமல் தானே வந்து பேசுவார். 

31.  1947-ம் ஆண்டு அரசியல் சட்டத்தை தயாரித்த அரசியல்நிர்ணய சபையில் தலைவர் காமராஜர் அவர்களும் ஒருவர்.

32. காமராஜர் தீவிரமாக அரசியல் பங்கு பெறக்காரணமாக இருந்தவர்கள் சேலம் டாக்டர் வரதராஜுலுநாயுடு, திரு.வி.கல்யாணசுந்தரனார், சத்தியமூர்த்தி ஆகியமூவரும்தான். முதலமைச்சராய் பதவி ஏற்றதும் சத்தியமூர்த்தியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தபிந்தான் சட்டசபைக்கே சென்றார். 

33.  பெருந்தலைவர் காமராஜரின் கல்வி புரட்சியால்1954-ல் 18 லட்சம் சிறுவர்கள் மட்டுமே படித்துக்கொண்டிருந்த நிலை மாறி 1961-ல் 34 லட்சம்சிறுவர்கள் படிக்கும் நிலை ஏற்பட்டது.

34. 1960-ம் ஆண்டு முதல் 11-வது வகுப்புவரை ஏழைப் பிள்ளைகள்அனைவருக்கும் இலவசக் கல்வி அளிக்க உத்தரவு இட்டு அதைசெயல்படுத்தி காட்டி, இந்தியாவை தமிழ்நாட்டு பக்கம்திரும்பி பார்க்க வைத்தார்.

35.  கஷ்டப்பட்ட மாணவர்களுக்கும், நன்றாக படிக்கும்மாணவ-மாணவிகளுக்கும் இலவச ஸ்காலர்ஷிப்பணமும் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில்தான்ஏற்படுத்தப்பட்டது.

36. காமராஜர் ஆட்சியில்தான் 60 வயது முதியவர்களுக்கும்பென்ஷன் திட்டம் கொண்டு வரப்பட்டது.

37. காமராஜர் தனது ஆட்சியில் ஒவ்வொருபெரிய கிராமத்திலும் பிரசவ விடுதிகள், ஆஸ்பத்திரிகள்திறந்து வைத்து சாதனை படைத்தார்.

38. கேரளா மாநிலத்துடன் இணைக்கப்பட்டிருந்த நாகர்கோவில், செங்கோட்டை, சென்னையில் ஒரு பகுதியையும்தமிழ்நாட்டுடன் இணைத்த பெருமை காமராஜரையே சேரும்.

39. காமராஜரின் மறைவு கேட்டுப் பிரிட்டிஷ் அரசாங்கமே இரங்கல் செய்தி ஒன்றை பிரதமர் இந்திராகாந்திக்கு அனுப்பிவைத்திருந்தது. அதில் காமராஜரின் தியாகமும்,தேசத்தொண்டும், ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அவர் பாடுபட்டு வந்ததும் நினைவு கூறப்பட்டிருந்தது.

40. காமராஜர் ஆட்சி காலத்தில் மின்சாரம் வழங்குவதில்இந்தியாவிலேயே தமிழகமே முதலிடம் வகித்தது. விவசாயத்திற்கு மின்சாரத்தை பயன்படுத்துவதிலும் தமிழகமேமுதல் மாநிலமாக காமராஜர் ஆட்சியில் திகழ்ந்தது.

41. இந்திய மொழிகளிலேயே முதன் முதலாக தமிழ்மொழியில் கலைக் களஞ்சியம் காமராஜர் ஆட்சிகாலத்தில்தான் உருவாக்கப்பட்டது.

42. காமராஜர் கண்ணீர் விட்டது மூன்று சந்தர்ப்பங்களில்தான்.  காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்ட சேதி கேட்டபோது...  கட்சி விஷயங்களில் தனது வலக்கரமாக விளங்கியசெயலாளர் ஜி.ராஜகோபாலின் மறைவின் போது... ....நெருங்கிய நண்பர் தியாகி பாலன் மறைந்த போது....


43. காமராஜர் பொது கூட்டங்களில் பேசுவதற்காகஎதுவும் குறிப்புகள் எடுத்துக் கொள்வதில்லை. எதையும்நினைவில் வைத்து கொண்டு அவற்றை மிக எளிமையாகப்பேசுவார்.


44. பெருந்தலைவர்காமராஜரின் முதலாம்ஆண்டுநினைவு நாளன்று15.7.1976-ல் இந்திய அரசு 25காசு தபால்தலையைவெளியிட்டது.


45. தமிழ்நாடு சட்டப்பேரவையில் பெருந்தலைவர்காமராஜரின் திருவுருவப்படம்அப்போதைய குடியரசுதலைவர் என்.சஞ்சீவிரெட்டியால் 1977-ம் ஆண்டுதிறந்து வைக்கப்பட்டது.

46,  தன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால்,`கொஞ்ச.ம்நிறுத்துன்னேன்' என்று சட்டையைப் பிடித்துஇழுப்பார். அடுத்த கட்சியைமோசமாகப் பேசினால், `அதுக்காஇந்தக் கூட்டம்னேன்' என்றும் தடுப்பார். 

47 மாதம் 30 நாளும் கத்திரிக்காய் சாம்பார்வைத்தாலும் மனம்கோணாமல் சாப்பிடுவார்.என்றைக்காவது ஒரு முட்டை வைத்துச்சாப்பிட்டால் அது அவரைப்பொறுத்தவரை மாயா பஜார் விருந்து.

48.  சுற்றுப் பயணத்தின்போது தொண்டர்கள் அன்பளிப்புகொடுத்தால், `கஷ்டப்படுற தியாகிக்குக்கொடுங்க' என்று வாங்க மறுப்பார்.

49. சராசரிக்குடி மகனும் அவரை எந்த நேரத்திலும் சந்திக்கமுடியும். யார்வேண்டுமானாலும் அவரிடம் நேரில்சென்று விண்ணப் பங்களைக்கொடுக்க முடிந்தது.  ஆடம்பரம், புகழ்ச்சி, விளம்பரம் எல்லாம் அறவே பிடிக்காது. தான் செல்லும் காரில் சைரன் இருந்தாலும் , இன்னும் உயிரோடத்தானே இருக்கேன். அதுக்குள்ள ஏன் சங்கு ஊதுறீங்கன்னு கிண்டல் செய்வார். 

50. இரவு எத்தனை மணிக்கு படுக்க சென்றாலும் காலை ஏழு மணிக்குள் விழிப்பதை வழக்கமாக்கிக்கொண்டிருந்தார். எல்லாவற்றிலும் சிக்கனம் பார்க்கும் காமராசர் பேசுவதிலும் மிகச்சிக்கனம் பார்ப்பார். ஆகட்டும் பார்க்கலாம்ன்னு சொன்னால் அக்காரியம் முடிந்தமாதிரிதான்.  முடியாதென்றால் முகத்திற்கெதிராய் சொல்லிவிடுவார்... 

சிறந்த ஆட்சியாளராய் திகழ்ந்தார் நம் காமராசர்.  இதுமாதிரியான இன்னொரு அரசியல்வாதியை இப்பூமி பார்க்குமா?!

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை..
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1466449
நன்றியுடன்,
ராஜி.


16 comments:

  1. சிறப்பான தொகுப்பு சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்கண்ணே

      Delete
  2. அருமையான சிறப்பான தகவல்! அவர் புகழ் ஓங்குக!மகளே நன்றி!

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கும் வருகைக்கும் நன்றிப்பா

      Delete
  3. நானும் இவரைப்பற்றிய பதிவு வெளியிட்டு இருக்கிறேன் இருப்பினும் இது கூடுதல் தகவல்கள் அருமை சகோ
    அவர் கொண்டு வந்த கோதுமை உப்புமாவின் ருசி இன்னும் என்னுள் இனிக்கிறது
    த.ம.3

    ReplyDelete
    Replies
    1. உங்க பதிவை வந்து பார்க்குறேன்ண்ணே

      Delete
  4. arumai vaalthukal. puthiya thagaval arithu kondan.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சகோ

      Delete
  5. சிறந்த தலைவர் பற்றி சிறப்பான பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க மாதேவி

      Delete
  6. மக்களுக்காகவே வாழ்ந்த ஒரு ‘மா மனிதர்’ பற்றிய அற்புதமான தொகுப்புக் கட்டுரை.

    ReplyDelete
  7. இனி இப்படி ஒரு தலைவர் கிடைப்பாரா ?கனா தான் காண வேண்டும் :)

    ReplyDelete
  8. நிறைய விவரங்கள். நல்ல பதிவு. "பள்ளி சாலை தந்தவன் ஏழைத் தலைவனை தினமும் எண்ணுங்கள்" என்கிற பாடல்வரிகள் நினைவுக்கு வருகின்றன. அவர் கடைசியாய்ப் பேசிய வார்த்தை உதவியாளர் வைரவனிடம் "லைட்டை அணைச்சுட்டுப் போ" என்பதாகும். தம +1

    ReplyDelete
  9. நல்லதோர் தொகுப்பு.

    இப்படியான நல்ல மனிதர்கள் இன்று அரசியலில் இல்லவே இல்லை என்று சொல்லும் அளவுக்கு இருப்பதில் ஆதங்கம்....

    ReplyDelete
  10. நல்ல தொகுப்பு ராஜி.....கூடவே ஆதங்கமும்....நம்ம தமிழ் நாட்டின் நிலையை நினைத்து....

    கீதா

    ReplyDelete
  11. அரிய தலைவர் பற்றிய அரிய தொகுப்பு...அருமை !

    ReplyDelete