Wednesday, July 12, 2017

அர்ஜுனன் தன் மகனால் கொல்லப்பட காரணம் - தெரிந்த கதை தெரியாத உண்மை பாகம் 2

அர்ஜுனன் தன் மகனால்தான் கொல்லப்பட்டான்ன்ற நம்பமுடியாத தகவலோடும், அந்த நிகழ்ச்சி நடக்க மூலக்காரணமான   அர்ஜுனன் மணிப்பூர் ராஜ்யத்தினுள் அஸ்வமேத யாக குதிரையுடன் நுழைவது பற்றி கடந்த தெரிந்த கதை தெரியாத உண்மை தொடரில்  பார்த்தோம். பார்க்கத்தவங்க இங்கே போய் பார்த்திட்டு வந்துடுங்க. 


மணிப்பூரை ஆண்டு கொண்டிருந்த மன்னனின் பெயர் பாப்புருவாகனன். இவன் மணிப்பூர் இளவரசி சித்திராங்கதைக்கும், அர்ஜுனனுக்கும் பிறந்த மகன்.  அர்ஜுனனுடைய வருகையை கேள்விப்பட்ட பாப்புருவாகனன், நகரத்தின் எல்லையில் தனது தந்தையான அர்ஜுனனை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகளை செய்தான். ஆனால், அவற்றை ஏற்க அர்ஜுனன் மறுத்துவிட்டான். மேலும் அவன், பாப்புருவாகனனுக்கு சவால் விட்டான். ஏ! பாப்புருவாகானா! நீ என் மகன். ஒரு நாட்டு எல்லைக்குள் அஸ்வமேத யாக குதிரை நுழைகிறதென்றால்  சத்திரிய தர்மப்படி அதை எதிர்க்கவேண்டும்.  நீ ஒரு பெரிய வீரன். முடிந்தால் இந்த யாக குதிரையை கட்டிப்போட்டு ,அது உன் ராஜ்ஜியத்தினுள் தங்கு தடையின்றி செல்வதை தடுத்து நிறுத்த முயற்சி செய்.  அதைவிட்டு கோழைகளை போல எதிரிகளை வரவேற்பது சத்திரிய தர்மம் அல்ல.  அப்படி செய்பவன் ஒரு நாளும் ஒரு நல்ல அரசனாக இருக்கமுடியாது. உனக்கு திறமை இருந்தால் என்னுடன் போருக்கு வந்து இந்த குதிரையை அடக்கு என பாப்புருவாகனனை போருக்கு அழைத்தான் .

மனம் தளர்ந்த பாப்புருவாகனன், அர்ஜுனன் பாரதப்போரில் தன் உறவுகளை எல்லாம் கொன்று தீர்த்தானே! அதுப்போல் ஒரு தந்தையுடன் போர் செய்வதா?! என மனசோர்வுற்று, அர்ஜுனனை வரவேற்க வந்த வழியோடு திரும்பினான். இங்கேதான் திடீர் திருப்பமாக உலூபி வருகிறாள். யாரிந்த உலூபின்னு பார்த்தோம்னா  அர்ஜுனனின் பல மனைவியரில் இந்த உலூபியும் ஒருவள். அர்ஜுனன்  12 ஆண்டு தீர்த்த யாத்திரையின் போது, கங்கை ஆற்றில் குளிக்கும் போது, நாகக்குலத்தில் பிறந்த  இடுப்பிற்கு மேல் மனித உடலும்; இடுப்பிற்கு கீழ் பாம்பு உடலும் கொண்ட நாகக்கன்னிகைதான் இந்த உலூபி. அர்ஜுனனை பார்க்கிறாள். இவளின் தந்தை நாகர்களின் அரசனாவார். இவர்கள் கங்கை  ஆற்றில் வாழ்ந்து வந்தார்கள்  உலூபி போர்க்கலையில் தேர்ந்தவள். அவள்மீது அர்ஜுனன்  மோகம் கொண்டு அவளோடு நாகலோகம் சென்று அங்கு, அவளை திருமணம் செய்துக்கொண்ட அர்ஜுனனுக்கு அரவான் என்னும் மகன் பிறக்கிறான். அதன் பின்னர்தான் அர்ஜுனனுக்கு மணிப்பூர்  இளவரசியுடன் திருமணம் நடந்த விசயம் கேள்விப்பட்டு சித்ராங்கதையின் மனவாட்டத்தை உலூபி புரிந்துக்கொண்டு சித்ராங்கதை இருக்கும் இடத்திற்கு அர்ஜுனனோடு செல்கிறாள்.

அதிலிருந்து சித்திராங்கதையின் மகன் பாப்புருவாகனின் வளர்ச்சியில் உலூபி பெரும்பாங்காற்றினாள்.  அர்ஜுனனுக்கும், பாப்புருவாகனனுக்கும்  நடந்த உரையாடலை கேள்விப்பட்ட உலூபி அர்ஜுனனுடன் பாப்புருவாகனனை  போர் புரிய உத்தரவிட்டாள். அப்படி உலூபி உத்தரவிட காரணம் உண்டு.   பீஷ்மர் குருஷேத்திர போரில் அர்ஜுனனால் கொல்லப்பட்டதால் பீஷ்மரது சகோதரர்களான வசுக்கள் இட்ட சாபத்திலிருந்து அர்ஜுனனை காப்பாற்றவே தந்தையையும், மகனையும் மோத சொன்னாள்.  நேராக பாப்புருவாகனனிடம் சென்ற உலூபி, மகனே! நான் உன் அம்மா. நீ சாதாரணமானவனில்லை. மகனே! உன் தந்தை பெரிய போர்வீரன். அவருடைய மகன் நீ. நீ ஏன் போர்க்களத்திலிருந்து கோழையை போல் பின்வாங்குகிறாய். அது உன் சத்திரிய குலத்துக்கே பெரிய இழுக்கு. செல்ல மகனே! நீ போய் அந்த அஸ்வதமேக யாகக்குதிரையினை பிடித்து, கட்டி இழுத்து வந்து, உன் தந்தையுடன் போரிட்டு அவரை வெற்றிக்கொள் எனக்கூறினாள். 
Mahabharatham - The Great Indian Epic...
பாப்புருவாகனன்,  உலூபியின் வார்த்தைகளால் உற்சாகமடைந்தான். தாயே! நீங்கள் சொல்வது மிகச்சரி  போர்க்களத்தில் எதிரி யாராக இருந்தாலும் எதிர்த்து போரிடுவதுதான் ஒரு சத்திரியனுக்கு அழகு. ஆனால், சொந்த தந்தையுடன் போரிடுவதுதான் கொஞ்சம் சங்கடமாக இருக்கின்றது. அதனால்தான், நான் அவரிடம் சண்டையிட விருப்பம் இல்லாமல் திரும்பினேன். அதே இடத்தில் வேறு யாராக இருந்தாலும் என்னுடைய அம்பிற்கு பதில் சொல்லாமல் விட்டிருக்க மாட்டேன் தாயே எனக்கூறினான். எப்படி இருந்தாலும் .என் தந்தையுடன் போர் புரிய தாயாகிய நீங்கள் அனுமதித்தாருங்கள். வேறு யாருடைய நீதிபோதனையும், அனுமதியும் எனக்கு தேவை இல்லை என வீராவேசமாக கூறினான்.   பாப்புருவாகனன் என் தாய் என்னை சண்டையிட சொல்கிறார். என் தந்தை என்னை சண்டையிட அழைக்கிறார், என் பெற்றோர்களின் இந்த வேண்டுக்கோளை நான் ஏற்கிறேன் என்று உலூபிக்கு மரியாதையை செலுத்திவிட்டு அர்ஜுனனின் படைகள் இருந்த இடத்தை நோக்கி முன்னேறினான்  பாப்புருவாகனன்.
Mahabharatham - The Great Indian Epic...
யாரும் எதிர்பார்க்காத வண்ணம் , பாப்புருவாகனன் அஸ்வமேத யாகக்குதிரையை பிடித்துக் கட்டினான். பிறகு, அர்ஜுனனுக்கு சவால்  விடும் வண்ணம் அவனை நோக்கி ஆவேசமாக முன்னேறினான். அர்ஜுனன்மீது அம்புமழையாய் பெய்வித்தான். அம்புகள் புறப்பட்டு அர்ஜுனனை நோக்கி சென்றன. அர்ஜுனன் தன்னை நோக்கி வந்த அத்தனை  அம்புகளையும் நடுவழியில் தடுத்து நிறுத்தி தாக்கி இரண்டாக உடைத்தான். ஆனாலும் பாப்புருவாகனன் சளைக்காமல் அம்புகளை ஏவிக்கொண்டு இருந்தான். ஒருக்கட்டத்தில் அர்ஜுனனால் அவைகளை சமாளிக்கமுடியாமல் திணறினாலும், தன்னுடைய மகனின் வில்வித்தையை கண்டு பெருமிதம் கொண்டான். இருந்தாலும் அர்ஜுனன் அவனுடைய திறமையை நிலைநாட்டும் பொருட்டு பாப்புருவாகனின் தேரில் இருந்த கொடியை தனக்கு சிவபரம்பொருள் கொடுத்த காண்டீபம் என்னும் வில்லின் உதவியுடன் அந்த தேர் கொடியினை உடைத்தான்.
பாப்புருவாகன னும் சளைக்காமல் போரிட்டான்.ஒருக்கட்டத்தில் அர்ஜுனன் தன்னுடைய மகனின் வில்வித்தையை கண்டு பொறாமைப்பட்டான். அதனால் எழுந்த பெருங்கோபத்தால் பாப்புருவாகன்மேல் மேலும்மேலும் அம்புகளை தொடுத்தான். இதனால் கோபமுற்ற  பாப்புருவாகன், அர்ஜுனனின் மார்பை நோக்கி குறிபார்த்து ஒரு அம்பை எய்தான். அந்த அம்பு அர்ஜுனனின் மார்பை துளைத்தது. அர்ஜுனன் தன்னுடைய வில்லோடு கீழே  நிலத்தில்   விழுந்தான். இதேப்போல், பாப்புருவாகனும் கீழே விழுந்தான். ஏனெனில், அர்ஜுனன் விட்ட அம்புகள் அவனுடைய உடலில் அவ்வளவு காயங்களை ஏற்படுத்தி இருந்தது. இருவரும் சுயநினைவுற்று கிடந்தனர்.  பாரதப்போரில் மிகப்பெரிய ஜாம்பவான்களை வீழ்த்திய மிகப்பெரிய வீரனான அர்ஜுனன்  தன் சொந்த மகனால் மார்பு துளைக்கப்பட்டு  எழமுடியாமல் இங்கே மண்ணில் வீழ்ந்து கிடந்தான். தந்தைக்கும், மகனுக்கும் இடையில் ஏற்பட்ட போரில் இரண்டுபேரும் வீழ்ந்து மரணத்தருவாயில் இருப்பதை தன்னுடைய ஞானத்தால் அறிந்த உலூபி உடனே அவ்விடம் விரைந்தாள். இதைக்கேள்விப்பட்ட சித்ராங்கதையும் அங்கே ஓடோடி வந்தாள்.
இரண்டுபேரும் காயமுற்று மண்ணில் வீழ்ந்து கிடப்பதை கண்ட சித்ராங்கதை,  உலூபியிடம் சென்று அவள் கையை பிடித்து , உலூபி வீழ்ந்து கிடக்கும் இருவரையும் பார். தன்  தந்தையுடன் போரிடமாட்டேன் என திரும்பிய பாப்புருவாகனனை போருக்கு தூண்டியவள் நீதானே!இப்பொழுது இருவரும் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறார்களே!நீ எல்லாம் ஒரு  பணிவான மனைவியா?!  தன் கணவனையே கொல்ல, தன் மகனயே  தூண்டி இருக்கிறாயே! உனக்கு நீதி, நியாயம் என்னவென்று தெரியுமா?! ,மிகப்பெரிய போர்வீரனுடன் அதுவும் சொந்த தந்தையுடன் ஏதுமறியாத இந்த இளைஞனை போரிட தூண்டியது எந்த விதத்தில் தர்மமாகும்?!அவனால் அர்ஜுனனை எதிர்த்து போராடமுடியுமா?!,இதில் யாருக்காவது ஏதாவது ஆனால் அதன் முழு பொறுப்பும் நீதான் ஏற்கவேண்டும். உலூபி நீதான் உனது சக்தியால் அவர்களை காப்பாற்றவேண்டும். அதேபோல் அர்ஜுனனை மீண்டும் உயிர்பிப்பதும் உனது கடமையாகும் என  உலூபியை பார்த்து கோபமுடன் பேசினாள் சித்ராங்கதை.
Mahabharatham - The Great Indian Epic...
சித்ராங்கதை வீழ்ந்து கிடக்கும் அர்ஜுனனின் கைகளை பிடித்துக்கொண்டு அழுது புலம்பினாள். அர்ஜுனா! நீங்கள் எவ்வளவு பெரிய போர்வீரர். போரில் எதிரிகளை விரட்டியடித்து நாட்டு மக்களையெல்லாம் காப்பாற்றினீரே! உங்கள் உயிரை உங்களால் காப்பாற்ற முடியாமல் வீழ்ந்து கிடக்கின்றீரே! பலவருட இடைவெளிக்குபின் இப்பொழுதுதான் உம்மை பார்க்கிறேன். அதுவும் இந்த நிலையிலா பார்க்கவேண்டும்?! எழுந்திருங்கள். உங்கள் யாககுதிரையை காப்பாற்றுங்கள். கண்ணை திறவுங்கள்.... யாகக்குதிரையை வழிநடத்துங்கள் என பலவாறாக அர்ஜுனனின் கையைப்பிடித்து அழுதுகொண்டிருந்த சித்ராங்கதை. அர்ஜுனன் இறந்துவிட்டான் என்பதை சித்ராங்கதை உணர்ந்துக்கொண்டாள். இனி அந்த மாபெரும் போர்வீரன் திரும்ப வருவானா?! என எண்ணி ,வேகமாக உலூபியிடம் சென்றாள். அவள் கையைப்பிடித்த சித்ராங்கதை நம் இருவருக்கும் அவர்தான் கணவன். அதுவும் அவருடைய சொந்தமகனான என் பிள்ளையை கொண்டே அவரை கொல்ல செய்தாய். நீதான் இதற்கு காரணம், நீதான் அவருடைய உயிரை திரும்ப கொண்டுவரவேண்டும் என உலூபியின் கைகளை பிடித்துக்கொண்டு அழுதாள் சித்ராங்கதை 
Mahabharatham - the great Indian epic...
உலூபியின் கைகளை பிடித்துக்கொண்டு அழுதாள் சித்ராங்கதை. இந்த சமயத்தில் பாப்புருவாகனனுக்கு மெல்ல நினைவு திரும்பியது. அங்கே தன்னுடைய தாய் சித்ராங்கதை அழுது புலம்புவதை பார்த்தான். அவளை பார்த்து, தாயே! எதற்கும் கலங்காத  தாங்கள் இன்று மிகவும் வருந்தி அழுவதை என்வாழ்நாளில் இதுவரை பார்த்ததே இல்லையே. நான் மிகப்பெரிய பாவி ஆகிவிட்டேனம்மா. என் சொந்த தந்தையை என் கைகளாலேயே கொன்றுவிட்டேனே! நான் செய்த இந்த பாவத்திற்கு பரிகாரமே இல்லையம்மா என் அழுது புலம்பினான்.  பின்னர் பாப்புருவாகனன், உலூபியிடம் ,தாயே நீங்கள் சொன்னதைக்கேட்டு தான் என் தந்தையுடன் போர் புரிந்தேன். இப்பொழுது அவர் இறந்து விட்டார் .  இப்பொழுது உங்களுக்கு  திருப்திதானே?! தந்தையை கொன்ற பழிபாவமும், மனஅழுத்தமும் என் வாழ்நாள் முழுவதும் தொடருமே! என்னுடைய மரணத்திற்கு அப்பால் கூட தந்தையை கொன்ற பாவத்திற்காக கொடிய நரகம்தான் எனக்கு கிடைக்கும் என பலவாறு அழுது புலம்பினான் பாப்புருவாகனன் .


அழுது புலம்பிய பாப்புருவாகனன் உடனே ஒரு முடிவெடுத்தான்.  தந்தை இல்லாமல் நான் இந்த உலகில் உயிர் வாழமாட்டேன்.  பெற்ற தந்தையை கொன்றேன் என்ற பழிச்சொல்லோடு, நான்  பிராயசித்தம் செய்யப்போறேன் எனக்கூறி வேகமாக எழுந்தான்.  அதுவரை இறுக்கமாகவே இருந்த உலூபிபாப்புருவாகனனையும், சித்ராங்கதையையையும் பார்த்து மெல்ல சிரித்தாள். பின் கண்களை மூடிவிட்டு ஒரு மந்திரத்தை சொல்ல ஆரம்பித்தாள். அப்பொழுது .ஒரு ஒளிவீசும் வைரக்கல் அவளுடைய கைகளில் தோன்றியது.   என் மகனே பாப்புருவாகனா! உனக்கு என்ன புத்தி பேதலித்து போய்விட்டதா?! அர்ஜுனன் யார் ?அவர் இந்திரனுடைய மகன் அவர் எப்படி இறப்பார்?! அவர் ஒரு பெரிய போர்வீரர். அவருடைய மகனான உனக்கும் அதே உற்சாகமும், தைரியமும் இருக்கிறதா என சோதித்து பார்க்கவே, உன் தந்தையுடன் நீ போரிடுமாறு உன்னை தூண்டினேன். நீ அவருடைய மகன் என்று நிரூபித்துவிட்டாய், உன் தந்தை இப்பொழுது ஆழ்ந்த தூக்கத்திலிருந்து எழுவதைப்போல்,இந்த வைரக்கல்லின் உதவியால் எழுவார். மகனே பாப்புருவாகனா! இந்த வைரக்கல்லை உன் தகப்பனின் இதயத்தில் வை. அது மீண்டும் துடிக்க ஆரம்பிக்குமென அந்த வைரக்கல்லை பாப்புருவாகனனிடம் கொடுத்தாள் . அவனும் அவ்வாறே செய்தான். அப்பொழுது உறக்கத்தில் இருந்து எழுவதைப்போல், அர்ஜுனன் உயிர்ப்பித்து எழுந்தான். உடனே,  தன்மகனை ஆர தழுவிக்கொண்டு அவனுடைய வீரத்தை பாராட்டினான். 
262df96bfaea3ab0a3618373db78410d.jpg (736×565)

தன் தந்தையை வணங்கிநின்ற  பாப்புருவாகனனிடம், அர்ஜுனன் ஏன் உன் முகத்தில் துக்கமும், சந்தோஷமும் காணப்படுகின்றது என கூறி, அங்கே சுற்றிப்பார்த்த அர்ஜுனன்  தன் அருகில் தன் மனைவியராக சித்ராங்கதையும், உலூபியையும் கண்டு ஆச்சரியப்பட்டான். உலுபியிடம் என்ன  நடந்தது,  நீ எப்படி பாதாள லோகத்திலிருந்து வந்தாய் எனக்கேட்டு அங்கு நடந்தது எதுவும் தெரியாமல் எல்லோரையும் பார்த்து ஆச்சர்யப்பட்டு நின்றான். உலூபி மெதுவாக பேச ஆரம்பித்தாள். என் பிரியமானவரே!இங்கே யாரும் எவ்வித தவறும் செய்யவில்லை. உங்கள் சொந்த மகனையே உங்களுக்கு எதிராக போரிடவும் நான் தூண்டிவிடவில்லை. ஒரு சாபத்திலிருந்து உங்களுக்கு விமோசனம் செய்வதற்காகவே நான் இங்கே வரவேண்டியதாயிற்று. அதனாலேயே உங்கள் மகன் தன் கையால் உங்களை கொன்று உங்களுக்கு புது வாழ்வு அளித்திருக்கிறான் எனக்கூறி அர்ஜுனனுக்கிருந்த சாபத்தை விளக்கினாள்.
Krishna bhishma pitamah during Mahabharat war


குருஷேத்திர யுத்தம் நடைபெற்ற பத்தாவது  நாள். பயங்கர போர் முழக்கம் கௌரவ சேனைகள் மகரவியூகத்தை வகுத்தனர். பாண்டவசேனைகள் ராஜாளி வியூகத்தை வகுத்து எதிர்கொள்ள ஆரம்பித்தனர். இங்குதான் மாயக்கண்ணன் தன சூழ்ச்சியை ஆரம்பித்தான். அப்பொழுது பீமனுக்கும் பீஷ்மருக்கும் கடுமையான யுத்தம் நடைபெற்றது. எல்லோருக்கும் தெரியும் யாராலும் வெல்லமுடியாத பீஷ்மரின் முன்பு பீமன் தோற்று ஓடுவது உறுதியென.  அப்பொழுது அர்ஜுனன்,பீஷ்மரை தாக்க வந்தான் அப்பொழுது  மாயக்கண்ணன் சதி செய்து, சிகண்டியை முன் நிறுத்தி பீஷ்மரின்மேல் அம்புமழை பொழிய வைத்தான். அந்தச்சமயத்தில் அஷ்ட வசுக்கள் கங்கையில் குளிக்கும் நேரத்தில், உலூபியும் அங்கே நீராடினாள். அப்பொழுது அஷ்ட வசுக்கள் தங்கள் தாயான கங்கையிடம் ஒரு வேண்டுக்கோளை வைத்தனர். தாயே! பீஷ்மர் உங்களுடைய மகன், எங்களில் ஒருவன். அவரை சிகண்டியின் மூலம் நிராயுதபாணியாக்கி சூழ்ச்சி செய்து  அம்பெய்து மரணப்படுக்கையில் தள்ளிவிட்டனர். அர்ஜுனன்தான்  அம்பெய்தி எங்களது சகோதரனின் உடலை துளைத்துவிட்டான். அவன் பெற்ற வெற்றி சூழ்ச்சியினால் வந்தது. நிராயுதபாணியை தாக்குவது ஒரு சத்திரினுக்கு அழகல்ல. ஆகையால், கோழைபோல் எங்களது சகோதரனை  கொன்ற  அர்ஜுனனை சபிக்க விரும்புகிறோம். அதற்கு  உங்களது அனுமதியை பெறவந்திருக்கிறோம் என வணங்கி நின்றனர் அஷ்ட வசுக்கள் . கங்கையும் அவ்வாறே சம்மதிக்க, கடுமையாய் தங்களை சபித்தனர். ஆனால், சாபம் என்னவென்று அறிய முடியவில்லை. 
BHISHMA PITAMAH'S FALL AND REST ON ARROW BED...


அந்த சமயத்தில் அங்கே குளித்து கொண்டிருந்த நான் அதைக்கேட்டேன். உடனே,  என் தந்தையிடம் சென்று, என்ன சாபமெனவும், இதற்கு சாபவிமோசனம் என்னவென்று வசுக்களிடம் கேட்டு சொல்லுமாறு வேண்டி நின்றேன். என் தந்தையும் அஷ்ட வசுக்களிடம் எவ்வளவோ மன்றாடியும் சாபத்தை சொல்லவில்லை. ஆனால், சாபவிமோசனத்தினை மட்டும் சொன்னார்கள்.  அர்ஜுனன் தன்னுடைய சொந்தபந்தங்களையேல்லாம் போரில் கொன்று குவித்ததுபோல தன்னுடைய சொந்த மகனால் போரில் கொள்ளப்படும்போது அவனுடைய சாபம் நீங்கும் எனக்கூறினர் அஷ்டவசுக்கள். என்ன செய்வதென நான் யோசித்துக்கொண்டிருந்தபோதுதான் நீங்கள் அஸ்வமேத யாக குதிரையுடன், பாப்புருவாகனனிடம் போருக்கு தயாரானீர்கள் அந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டேன் .,
DIFFERENT NARCISSUS | Tengkuputeh
பாப்புருவாகனனால் கொல்லப்பட்டபோது உங்கள் சாபமும் விலகியது. என்னுடைய நாகமணியின் உதவியுடன் இறந்த உங்களை உயிர்ப்பித்தேன். இதுதான் நடந்தது என சொன்னாள் உலூபி. இதையெல்லாம் கேட்ட அர்ஜுனன் மிகவும் சந்தோஷமடைந்தான். தன் மனைவிகளான சித்ராங்கதையையையும், உலூபியையும் பார்த்த சந்தோஷத்துடன்,  தன் மகனையும் கண்ட சந்தோஷத்தில் அவர்களுடன் அரசவைக்கு சென்று தன்னுடைய அஸ்வமேதயாக குதிரையுடன் பயணத்தை தொடர்ந்தான்..............

அஷ்ட வசுக்கள்;

தரன், துருவன், சோமன், அபன், அநிலன், அக்கினி, பிரத்தியூஷன், பிரபாசன் என எட்டுப்பேர்கள். இந்த எட்டுப்பேருக்கும் அஷ்டவசுக்கள் என்று பொதுப்பெயர். வசிஷ்டர் ஒரு முனிவர். காட்டில் தவம் செய்து கொண்டிருக்கிறார். அங்கு அவர் ஒரு பசுவை வளர்க்கிறார். அது தெய்வப்பசு. பார்க்க மிக அழகாக இருக்கும். அந்தப் பசுவுக்குப் பெயர் "ஓமப்பசு".


அந்த எட்டு தேவதைகளான "அஷ்டவசுக்களும்"  மேல் உலகத்திலிருந்து பூமிக்கு வருகின்றன. இங்கு வந்து இந்த ஓமப் பசுவை பார்த்து அதிசயித்து அதன் மேல் ஆசை வைக்கின்றன. அதில், அந்த எட்டு வசுக்களில் ஒரு வசு மட்டும், சிறு குழந்தையைப்போல, எனக்கு அந்த பசு வேண்டும் என்று கேட்கிறது. அது இல்லாமல் மேல் உலகம் வரமாட்டேன் என்று அடம்பிடிக்கிறது. எனவே அவர்கள் எல்லோரும் சேர்ந்து அந்த பசுவைப் பிடித்துக் கொண்டு மேல் உலகம் சென்றுவிடுகின்றனர். 

முனிவர் வருகிறார். பார்க்க்கிறார். பசுவைக் காணோம். ஞானதிருஷ்டியில் பார்க்கிறார். பசு மேல் உலகத்தில் இருக்கிறது. திருடிக் கொண்டு சென்றுள்ளார்கள். கோபம் முனிவருக்கு. என் பசுமீது ஆசைப்பட்ட அந்த எட்டு வசுக்களும் இந்த மண் உலகில் பிறந்து கஷ்டங்களை அனுபவிக்க வேண்டும் என்று சாபம். அந்த எட்டு வசுக்களுக்கும் இந்த சாபம் தெரிந்துவிட்டது. வந்து முனிவரிடம் மன்னிப்பு கேட்கின்றன. தண்டனை குறைக்கப் படுகிறது. எட்டு வசுக்களில் 7 வசுக்கள் இந்த பூமியில் பிறந்தவுடன் இறந்து மேல் உலகம் செல்லலாம். ஆனால், என் பசுமீது ஆசை கொண்ட அந்த எட்டாவது வசுமட்டும் இந்த மண் உலகில் பிறந்து மற்ற ஏழு வசுக்களின் காலத்தையும் கஷ்டத்தையும் சேர்த்து அனுபவிக்க வேண்டும் என்று தண்டனையை மாற்றி தீர்ப்பை எழுதிவிட்டார்.
கங்கை என்பவள் பெண். அவள் பாரத தேசத்தின் ராஜாவான சந்தனு மன்னனுக்கு மனைவியாகி இந்த எட்டு வசுக்களையும் பிள்ளைகளாக பெறுகிறாள். ஆனால், தன் கணவன் சந்தனு மன்னனிடம் ஒரு நிபந்தனை விதிக்கிறாள். அதன்படி அவளுக்கு பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் என்ன செய்யப் போகிறாள் என்று கணவன் (மன்னர்) கேட்க கூடாதாம். அதன்படி, அவள், ஒவ்வொரு குழந்தையையும் பிறந்தவுடன் கங்கை ஆற்றில் தூக்கி எறிகிறாள். கணவனுக்கு கோபம் வந்து, எட்டாவது குழந்தை பிறக்கும்போது தடுக்கிறான். அவள் அந்த குழந்தையுடன் ஆற்றில் மறைகிறாள். அந்த குழந்தையை மட்டும் ஆற்றில் எறியாமல் வளர்த்து பெரியவன் ஆனதும் கணவனிடம் ஒப்படைக்கிறாள். அந்த மகன்தான் மகாபாரதக் கதையில் மிக முக்கியமானவரான பீஷ்மர். அந்த சாபத்தால் தான் பீஷ்மர் பல தலைமுறைகளுடன் வாழ்ந்து அல்லல்பட்டார். 

மீண்டும் இதுப்போன்ற சுவாரசியமான மற்றொரு கதையுடன் தெரிந்த கதை, தெரியாத உண்மை பகுதியில் சந்திப்போம்.

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1466090
Native Indians Girl Art | ... art+native+american+girl.png#native%20american%20fantasy%20art
நன்றியுடன்,  
ராஜி 

12 comments:

  1. அறியாததை அறியத் தந்தமைக்கு நன்றி சகோ

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்கண்ணே

      Delete
  2. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  3. சுவாரஸ்யமான கதைகள்! என் சிறு வயதில் பாட்டியும் தாத்தாவும் எனக்குச் சொன்னதுண்டு.இராமாயணம், மகாபாரதம், பஞ்சதந்திரக்கதைகள் என்று அப்புறம் புத்தகம் வாயிலாகக் கல்லூரி படிக்கும் சமயத்தில் வாசித்திருக்கிறேன். மீண்டும் இங்கு வாசிக்கிறேன். தொகுத்துப் பொறுமையாக அடித்து இங்குப் பகிர்வதற்குப் பாராட்டுகள் ராஜி

    கீதா

    ReplyDelete
    Replies
    1. எல்லா புராணக்கதைகளிலும் நமக்கு தெரியாத கிளைக்கதைகள் இருக்குங்க கீதா. அதை பகிரும் சிறிய முயற்சியே இது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க கீதா

      Delete
  4. வாழ்வில் வாசிக்க வாசிக்க திகட்டாத காவியம் மகாபாரதம். இத்தனை பொறுமையாக தட்டச்சிட்டு பொருத்தமான படங்களுடன் பகிர்ந்திருக்கும்விதம் அருமை. வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. முதன்முறை வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சகோ.

      Delete
  5. கலக்கறீங்க. எவ்வளவு உழைப்பு! அப்படியே, ஒரு முறை, எஸ் எல் பைரப்பா எழுதிய பருவம் புத்தகத்தையும் ஒரு முறை வாசித்து விடுங்கள். மகா பாரதத்தை முற்றிலும் புதிய மாதிரி எழுதியிருக்கிறார்.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா படிக்குறேனுங்க சகோ

      Delete
  6. த.ம. வாக்குடன் வாழ்த்துகள் பகிர்வு அருமை

    ReplyDelete
  7. இதுவரை கேள்வி படாத அருமையான பதிவு நன்றி/சிவாண்ணா

    ReplyDelete