Wednesday, July 05, 2017

மிகப்பெரிய மதக்கலவரம் வெடிக்க காரணமாயிருந்த பாறை - மௌனச்சாட்சிகள்

ஒரு பாறை  ஒரு மனிதனுக்கு எப்படிலாம் பயன் கொடுக்கும்.  கொஞ்ச நேரம் உக்காந்து ரிலாக்ஸ் பண்ண உதவும். இல்லன்னா எதாவது காய வைக்க... கோவில் கட்ட, இல்லன்னா சாமி சிலை செய்யமுடியும், வீடு கட்ட, கோவில் கட்டன்னு உதவும். ஒரு பாறை ஒரு மதக்கலவரத்தையே உண்டு பண்ண பார்த்ததுன்னும் அப்படி ஒரு நிகழ்வு நிகழாமல் தடுக்கப்பட்டு  தினம் தினம் ஆயிரக்கணக்கானோர் பார்த்து ரசித்துப்போகும் சிறந்த சுற்றுலா தலமா மாறிப்போன அந்த பாறையின் கதையை உங்களுக்கு தெரியுமா?!  
கன்னியாக்குமரிக்குன்னு பல சிறப்புகள் உண்டு.  பாரதத்தாயின் பொற்பாதம், நித்தியக்கன்னியான பகவதி அம்மன் கோவில், முக்கடல் சங்கமிக்கும் இடம், சூரிய அஸ்தமனம் ஆகும் இடம், உலகப்பொதுமறையாம் திருக்குறளை எழுதிய  திருவள்ளுவருக்கு 133 அடில சிலை, காந்தி நினைவு மண்டபம்ன்னு இந்த ஊர்ல எத்தனையோ இடங்கள் இருந்தாலும் அதுல  மிக முக்கியமானது வங்கத்து சிங்கம்  விவேகானந்தர் கரையிலிருந்து நீந்தி கடலுக்குள் சென்று மூன்று நாட்கள் அன்ன ஆகாரமின்றி  அமர்ந்து தியானம் செய்த ஸ்ரீபாதபாறை என்றும் அழைக்கப்படும்  விவேகானந்தர் பாறையும் ஒன்று.  
சதாசர்வக்காலமும் பகவதி அம்மனின் புகழினை சொல்லி ஆர்பரித்துக்கொண்டிருக்கும் நீலக்கடலில் இருந்தாலும் மிக அமைதியாகவும், சாந்தமாகவும் இருக்கும் இம்மண்டபம். இம்மண்டபம் எந்த கட்டிடக்கலையினைப்போலில்லாமல்  இந்தியநாட்டின் ஒட்டு மொத்த கட்டிடக்கலவையாய் இருந்து தேசத்தின் ஒன்றுப்பட்ட தன்மையை உணர்த்துது. இன்று சகலரும் வந்து செல்லும் இம்மண்டபம் ஒருகாலத்தில் மிகப்பெரிய மதக்கலவரம் ஏற்படக்கூடிய இடமாய் இருந்ததுன்னு சொன்னா நம்புவீங்களா?! இன்றைக்கு ஒற்றுமைக்கும், தூய்மைக்கும்,  அடையாளமாய் இருக்கும் இந்த இடத்தின் பூர்வீக கதையை பார்ப்போம். 
இன்னைக்கு விவேகானந்தர் பாறைன்னு சொன்னாலும் இப்பாறையோட பேரு ஸ்ரீபாதப்பாறைன்னு பேரு.  பகவதி அம்மன் சிவனை மணக்க வேண்டி இப்பாறையில்தான் தவமிருந்ததாய் சொல்லப்படுது. அப்படி பாறையில் வீற்றிருந்த அம்மனின் பாதச்சுவடு இங்குள்ளது. இப்பாதச்சுவட்டை இன்றைக்கும் இப்பாறையில் பார்க்கலாம்.
விவேகானந்தர் பற்றி சுருக்கமாய்.... 
பின்னாளில் சுவாமி விவேகானந்தர் என அழைக்கப்பட்ட  நரேந்திரநாத் தத்தா  1863 ஜனவரி 12ம் நாள் கல்கத்தாவில் விஸ்வநாத் தத்தாவுக்கும், புவனேஸ்வரிக்கும் முதல் மகனாய்  வங்கதேசத்தில் பிறந்தார்.   சின்ன வயசிலிருந்தே ஞாபகசக்தி கொண்டிருந்தார். கூடவே சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். இசையும், இசை வாத்தியங்களும் பயின்றார். இள வயது முதலே தியானம் பழகினார். கூடவே பகுத்தறிவாளராகவும் திகழ்ந்தார்.
பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் 1879ம் ஆண்டு கொல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் (Presidency College) படித்தார்.  ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் (Scottish Church College) தத்துவத்தை படித்தார். அங்கே மேல்நாட்டு தத்துவங்கள், மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாறு முதலியவற்றை படித்தறிந்தார். இச்சமயத்தில் அவர் மனதில் இறை உண்மைகளைப் பற்றி பல கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்தது.  பெரும்பான்மையினர் கடவுளை வழிப்பட்டாலும் உலகின் வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்துள்ளதும் அவருக்கு முரண்பாடாக தோன்றியது. இதுப்பற்றி பல பெரியோர்களிடம் விவாதித்தும் சந்தேகம் தீராமல் அக்காலகட்டத்தில் பிரபலமாயிருந்த பிரம்ம சமாஜத்தில் உறுப்பினரானார். ஆனாலும் இம்முயற்சிகள் யாவும் அவர் கேள்விகளுக்கு தகுந்த விடையளிக்க முடியவில்லை. 
ஸ்ரீ ராமக்கிருஷ்ண பரமஹம்சரை கேள்விப்பட்டு  இறை உண்மைகளை உணர அவரின் சீடராய் 1881ல் சேர்ந்தார்.  ஆரம்பத்தில் பரமஹம்சரின் கருத்துக்களோடு விவேகானந்தரால் ஒத்துப்போகமுடியவில்லை. இறைவழிபாட்டையும் உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. இராமகிருஷ்ணரின் போதனைகள், உருவ வழிபாடு, அல்லது அருவ வழிபாடு என்று ஒரே தனி வழியினை போதிக்காமல், இரண்டு வழிகளிலும் இருக்கும் உண்மையை உணர்த்துவதாக இருந்தன. இராமகிருஷ்ணரின் ஈடுபாட்டால், விவேகானந்தரால், பக்தி மார்க்கம், மற்றும் ஞான மார்க்கம், இரண்டின் அவசியத்தினையும் புரிந்து கொள்ள முடிந்தது.

1886-ம் ஆண்டு ராமகிருஷ்ணர் இறந்தபின் விவேகானந்தரும் ராமகிருஷ்ணரின் மற்ற முதன்மை சீடர்களும் துறவிகளாயினர். பின்னர் நான்கு ஆண்டுகள் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் சுற்றினார் விவேகானந்தர். தன்னுடைய இந்த பயணங்கள் மூலம் இந்தியாவிலுள்ள அனைத்து பகுதிகளின் கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை நிலை போன்றவற்றை அனுபவித்து அறிந்தார் விவேகானந்தர். அச்சமயத்தில் இந்திய மக்களின் வாழ்க்கை நிலை மிகவும் கீழானதாக இருந்தது. மேலும், அது இந்தியர் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டிருந்த காலமாகும். தன் பயண முடிவில் 24 டிசம்பர் 1892-ல் கன்னியாகுமரி சென்ற விவேகானந்தர் அங்கே கடல் நடுவில் அமைந்த ஒரு பாறை மீது மூன்று நாட்கள் தியானம் செய்தார். அந்த மூன்று நாட்கள் இந்தியாவின் கடந்த காலம், நிகழ்காலம், மற்றும் எதிர்காலம் குறித்து தியானம் செய்ததாக பின்னர் அவர் குறிப்பிட்டுள்ளார். 

கன்னியாகுமரியில் இருந்து சென்னை வந்த விவேகானந்தரிடம், அமெரிக்காவின் 1893-ம் ஆண்டு உலக சமய மாநாட்டில் இந்து மதம் சார்பாக கலந்து கொள்ளுமாறு சென்னை நகர இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அதை ஏற்றுக்கொண்ட விவேகானந்தர் அமெரிக்கா பயணமானார். சிகாகோவின் உலகச் சமய மாநாட்டில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளுக்கு அந்நாட்டில் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும் சில ஆண்டுகள் மேலைநாடுகளில் தங்கி பல சொற்பொழிவுகள் ஆற்றி வேதாந்த கருத்துக்களை அவர்களிடம் அறிமுகப்படுத்தினார். நியூயார்க், மற்றும் லண்டன் நகரங்களில் வேதாந்த மையங்களை நிறுவினார்.
1897 ஆம் ஆண்டு இந்தியா திரும்பியவுடன் கொழும்பு முதல் கல்கத்தா வரை அவர் ஆற்றிய பேச்சுக்கள், அப்போது கீழ்நிலையில் இருந்த இந்தியரை விழிப்புறச் செய்வதாகவும், இளைஞர்கள் தம்முள் இருந்த ஆற்றல்களை உணரும்படிச் செய்வதாகவும் அமைந்ததாக கருதப்படுகிறது. பின்னர் கல்கத்தாவில் இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடத்தை நிறுவினார் விவேகானந்தர். ஜனவரி 1899 முதல் டிசம்பர் 1900 வரை இரண்டாம் முறையாக மேல்நாட்டு பயணம் மேற்கொண்டார். 1902-ம் ஆண்டு ஜூலை 4-ம் நாள், தனது 39-ம் வயதில் பேலூரில் விவேகானந்தர் காலமானார். இன்று அவர் நிறுவிய ராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடம் உலகம் முழுவதும் கிளைகள் பரவி செயல்பட்டு வருகிறது. விவேகானந்தர் கன்னியாகுமரியில் தவம் செய்த தினத்தை சங்கல்ப தினம் என்று உலகெங்கும் டிசம்பர் 25 அனுசரிக்கப்படுது. 
1963ம் வருடம் விவேகானந்தரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு அவரை சிறப்பிக்கும் பொருட்டு அவருக்கு ஒரு மணிமண்டபம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதற்காக எத்தனையோ இடங்கள் மொன்மொழியப்பட்டது.  மணிமண்டபத்தோடு கரையிலிருந்து பாறை வரை பாலமும் கட்ட முடிவாகி தமிழகமே பெருமைப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில்  கன்னியாக்குமரி வாழ் மீனவர்களால் முட்டுக்கட்டை விழுந்தது. மீன்பிடிக்கும் நேரத்தில் உணவு உண்ணவும், ஓய்வெடுக்கவும், வலைகளை உலர்த்தவும், படகுகளை பழுதுபார்க்க, மீன்கள் பரிமாற்றம் என பலவிதங்களில் இப்பாறை தங்களுக்கு உதவுது. தியானம் செய்வதென்பது இயல்பான ஒன்று. ஆனால், இது எங்கள் வாழ்வாதாரம். அதனால் அப்பாறை எங்களுக்கே சொந்தம் என மீனவர்கள் வாதிட்டினர். இதுமட்டுமின்றி சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன் புனித சேவியர் என்பவர் வந்து இப்பாறையில் தவம் செய்தார். எனவும் அதனால்தான் இப்பாறையில் ‘குரூஸ்’ என்ற விழா நடைப்பெறுது. அதனால், இப்பாறை கிறித்துவர்களுக்கு சொந்தமென இன்னொரு பக்கம் பேச்சு எழுந்தது. இந்துக்களுக்கானது என சொந்தம் கொண்டாட இருக்கவே இருக்கு பகவதியம்மனின் காலடித்தடம். 
மீனவர்களில் பெரும்பான்மையினர் கிறித்துவர் என்பதால் இப்பிரச்சனை சூடுப்பிடிக்க தொடங்கியது. விவேகானந்தரை சாமியாராக்கி குளிர் காய்ந்தனர் சிலர். விஷமிகளால் இரவோடு இரவாக இப்பாறையில் மிகப்பெரிய சிலுவையொன்று நடப்பட்டது. கண்டன ஆர்பாட்டம், மறியல், போராட்டம்ன்னு பிரச்சனை பெரிதாகி தமிழக அரசின் காதுக்கு இச்செய்தி சென்றது. பாறை யாருக்கு சொந்தமென  விசாரிக்க சொல்லி விசாரணை கமிசன் வைக்கப்பட்டது. விசாரணை கமிசனின் முடிவில் பாறைக்கும் கிறித்துவர்களுக்கும் கிஞ்சித்தும் சம்பந்தமில்லையென தீர்ப்பாகி சிலுவை அகற்றப்பட்டது.  400 ஆண்டுகளுக்கு முன் புனித சேவியரால் இங்கு சிலுவை நடப்பட்டது. அது காலப்போக்கில் அழிந்துப்போனது, அதனால்தான் நாங்கள் சிலுவையை நட்டோம். அதை எப்படி அகற்றலாமென கூறியதோடு புனித சேவியருக்கு நினைவு மண்டபம் கட்டவேண்டுமெனவும் கோரிக்கை வைத்தனர்.  சேட்டன்கள் தூபாம் போட பிரச்சனை விஸ்வரூபமெடுத்தது. எந்த பக்கம் முடிவெடுத்தாலும் மதக்கலவரம் வெடிக்குமென எண்ணிய அப்போதைய முதல்வரான பக்தவச்சலம் பாறையில் எதையும் கட்டவேண்டாம். பாறை இப்படியே இருக்கட்டுமென கூறி மணிமண்டப திட்டத்தை கிடப்பில் போட்டார்.
ஆனாலும், அவரின் மனதில் அப்பாறை விவேகானந்தருக்கு சொந்தமானதென எண்ணம் இருந்தாலும் மாநிலத்தின் அமைதிக்காக அமைதியாய் இருந்தார். இப்பிரச்சனை அப்போதைய ஆர். எஸ். எஸ்  தலைவர் கோல்வால்கார்க்கு காதுக்கு சென்றது. இப்பிரச்சனையை ஆராய ஏக்நாத் ரானடேவை அனுப்பினார். வெளியூர்காரர் இப்பிரச்சனையை எப்படி கையாள்வார் என அனைவரும் திகைத்திருந்த வேளையில் ரானடே பிரச்சனையின் வேரினையும், அதை தடுப்பவர்கள் யார்யாரென ஆராய்ந்து தெளிந்தார். இப்பிரச்சனைக்கு இருவர் மட்டுமே தடைக்கல் என உணர்ந்தார். ஒன்று தமிழக முதல்வர்  பக்தவச்சலம். ரெண்டாவது அன்றைய மத்திய கலாச்சார அமைச்சர் ஹுமாயும் கபீர். என்ன செய்யலாம்ன்னு ரானடே யோசித்தார். கபீர் கல்கத்தாகாரரென ரானடேக்கு தெரிய வந்தது. நேராய் கல்கத்தா சென்று பத்திரைகையாளரை சந்தித்து, பிரச்சனை இன்னதென விளக்கி, வங்கத்து சிங்கத்துக்கு  தமிழ்மண்ணில் மணிமண்டபம் கட்டுவதில் உங்களுக்கு ஆட்சேபனை உள்ளதா என விசாரித்தார். இல்லையென அங்கிருந்தோர் சொல்ல ஆனா உங்க கபீருக்கு இது பிடிக்கவில்லையென முட்டுக்கட்டை போடுகிறார் என பத்தவைத்துவிட்டு சென்னை புறப்பட்டுவிட்டார். ரானடே சென்னை வந்து சேர்வதற்குள்  கபீர் தன்னுடைய ஆட்சேபணையை விலக்கிக்கொண்டார். 

ஆனால், பக்தவச்சலத்திடம் இப்பாட்சா பலிக்கவில்லை. தமிழகத்தின் அமைதியை முன்னிட்டு விவேகானந்தருக்கு மணிமண்டபம் கட்டுவதில் தயக்கம் காட்டினார். உடனே ரானடே நடுநிலையாளர்களை திரட்டி ஒரு குழுவை உண்டாக்கினார்.  சாமியார்கள் தியானித்த இடம், போன இடம், வாழ்ந்த இடம்ன்னு நினைவுமண்டபம் கட்ட முடிவெடுத்தால் தமிழகத்தில் ஒரு வீடுகூட மிச்சமிருக்காது எனக்கூறி திமுக தலைவர் அண்ணாதுரை மற்றும் சில கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் இக்குழுவிலிருந்து ஒதுங்கிக்கொண்டனர். ஆனாலும் மனம் தளராத ரானடே நடுநிலையாளர்களின் துணையோடு கிறித்துவர்களையும், அதிருப்தியாளர்களையும் சமாதானப்படுத்தி விவேகானந்தருக்கு மணிமண்டபம் கட்ட முடிவானது. இந்திய அனைத்து பகுதி மக்களின் நன்கொடையால் மணிமண்டபம் கனஜோராக எழுந்தது. அப்போதைய குடியரசு தலைவர் வி.வி.கிரியால் மக்களின் பார்வைக்காக அர்ப்பணிக்கப்பட்டது.

இம்மண்டபம் 1962 ல கட்ட ஆரம்பிச்சு 1972ல நிறைவடைந்தது.  நீலம் மற்றும் சிவப்பு நிற கிரானைட் கற்களால் கட்டப்பட்டது இம்மண்டபம். கடலுக்கு நடுவில் ஒரு பாறை திட்டின் மேல், கடல் மட்டத்தில் இருந்து 17 மீட்டர் உயரத்தில், சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த நினைவு மண்டபம் இரண்டு பாறைகளுக்கு மேல் கரையிலிருந்து 500 மீட்டர் தொலைவில் இருக்கிறது. நினைவு மண்டபத்தினுள்ளே இருக்கும் விவேகானந்தரின் சிலையை பயணிகள் கண்டு ரசிக்கலாம். இங்க  ஸ்ரீபாத மண்டபம் மற்றும் விவேகானந்தர் மண்டபம் என ரெண்டு மண்டபமிருக்கு. குமரி அம்மனின் பாதச்சுவடிருக்கும் ஸ்ரீபாத மண்டபம் ஸ்ரீபாத பாறையின் மேல் உள்ளது. இது கன்னியாகுமரி கடவுள் அருளிய புனித ஸ்தலமாக கருதப்படுகிறது.  
 அதன் எதிரே விவேகானந்தர் நின்ற நிலையில் இருக்கும் வெண்கல சிலையினை கொண்ட சபா மண்டபம்,    முன் நுழைவாயில் மற்றும் முக மண்டபம், தியான மண்டபமென மொத்தம் நான்கு அறைகளை கொண்டது. தியான மண்டபத்தில் சுற்றுலாப் பயணிகள் அமர்ந்து தியானம் செய்யலாம். 
இப்பாறைக்கு சென்றுவர தமிழ்நாடு சுற்றுலா துறையால் பூம்புகார் படகுத்துறை ஒன்று சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கென கட்டணமும் வசூலிக்கப்படுது. இப்பாறைக்கு அருகிலேதான் ஐயன் திருவள்ளுவருக்கு 133 அடியில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதுப்பற்றி வேறொரு பதிவில் பார்ப்போம்...

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1465448
Sunrise, Kanyakumari... Thiruvalluvar, Vivekananda Rock Memorial, India
நன்றியுடன்,
ராஜி. 

21 comments:

 1. அரிய வரலாறு அறிந்தேன் நன்றி சகோ
  வள்ளுவரின் வரலாறு அறிய ஆவலுடன்....

  ReplyDelete
  Replies
  1. பதிவை ரசித்தமைக்கு நன்றிண்ணே. வள்ளுவருக்கு கன்னியாக்குமரில சிலை வைக்க காரணமிருக்குண்ணே. அந்த காரணத்தை அந்த பதிவில் பார்க்கலாம்.

   Delete
 2. குமரி விவேகானந்தர்பாறை அறிவாதவர் யாருமில்லை,அழிந்திருந்த இந்து மதத்தினை மீட்டெடுத்தவர் ஆதிசங்கரர் என்றால், அதற்கு அழியா புகழை கொடுத்தவர் சுவாமி விவேகானந்தர்

  ReplyDelete
  Replies
  1. சரியா சொன்னீங்க அமிர்தா. சன்னியாசியா இருந்தாலும் போலியான சடங்குகளை எதிர்த்தவர். நாலு கை, ஆறு தலை கொண்டது மட்டும் கடவுள் இல்லை. எது இறைன்னு தெளிவா சொன்னவர்.

   Delete
 3. கலவரம் வெடிக்க காரணம்ன்னு எழுதி இருக்கிறீங்க ,ஆனா எல்லாம் சில மத கிருமிகள் செய்யுறவேலை,காசுக்காக சில கிருஸ்தவ வெறியர்கள் குமரி கடலில் இருக்கும் விவேகாநந்தர் பாறையில் புனித சவேரியார் தியானம் செய்தார் என்று அதன் உரிமையை நிலைநாட்ட முயன்றனர் (ஆவணங்களின் படி அப் பாறை கன்னியாக்குமரி கோவிலுக்கு சொந்தமானது). இரு முறை விவேகாநந்தர் நூற்றாண்டு கலவெட்டுகளை அகற்றிவிட்டு சிலுவைகளைக் அதன் மேல் நட்டனர். இந்துக்கள் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிலுவைகளை அகற்றினர். இதனால் கிறித்தவர்கள் விவேகானந்தர் பாறைக்கு செல்லும் போக்குவரத்தை தடை செய்தனர்

  ReplyDelete
  Replies
  1. என்னை எதுலயாவது கோர்த்துவிடலாம்ன்னு நினைக்குறீங்களா சகோதரி?! அடிச்சாக்கூடா ஏன்னு கேட்க ஆளில்லம்மா தாயி. நான்லாம் சாதாரண ஆளு அதை நினைவில் வச்சுக்கோங்க. எந்த சேர்ந்தவங்களா இருந்தாலும் உண்மையாய் இறையை உணர்ந்தவங்க அடுத்த உயிரை ஒருபோதும் துன்பத்துக்குள்ளாக்க மாட்டாங்க. கடவுளின் பேர் சொல்லி பக்குவமில்லாத மனிதர்களால்தான் மதக்கலவரம் நடக்குது. பணம், பதவிக்கும் ஆசைப்பட்டு இந்த மாதிரி நடந்துக்குறவங்கதான் உண்டு. இது புரியாம அன்றாடங்காய்ச்சிகள் அவங்க பேச்சை கேட்டு பொங்குறாங்க. முருகர் கோவில்ல போய் நின்னு ஏசுவேன்னு கும்பிட்டாலும் தப்பில்ல. மசூதில போய் நின்னு சிவனேன்னு கூப்பிட்டாலும் தப்பில்ல.

   Delete
 4. மண்டைக்கட்டில் நடந்தது ,கலாச்சார விழா ,மதம் மாற்றப்பட்ட கிறிஸ்துவ இப்பொழுதைய தலைமுறையினர் .அந்த சமயத்தில் ,இருந்த தங்களது மூதாட்டிகள் ,கொண்டாடும் விழாவான ,கடலம்மைக்கு காணிக்கை செலுத்தும் விழா ,அவர்கள் பாரம்பரியமாக ,மண்டைக்காட்டு அம்மனுக்கு செய்வார்கள் .மதம் மாறிய சில பாதிரியார்கள் ,இதை பலமுறை தடுத்தாலும் ,தங்களது பாரம்பரிய சடங்கை அந்த பகுதி கிறிஸ்துவ வயதான பெண்மணிகள் நிறுத்தவில்லை .இதனால் வளரும் சமுதாயமும் இதை பின்பற்றி விடகூடாது என ,திட்டம் போட்டு ,அங்கே,பகவதி அம்மையை ,தரிசிக்க பெரும்பாலும் கேரளா பெண்களே வருவார்கள் ,கடலில் குளித்து செல்லும் அவர்களை ,சில்மிஷம் செய்ததும் .அந்த பெண்மணி கோவிலில் வந்து சொல்ல ,கோவிலின் பக்கம் இருந்த கிராமத்தினர் ,அந்த விஷமிகளை ,அடிக்க அது மத கலவரமாக மாறியது .கடைசியில் கடற்கரை மக்கள் சோற்றுக்கு கூட மன்டைக்காட்டை தாண்டிவர முடியாத அளவு சண்டை வலுத்தது .அப்பொழுது எம் பி யாக இருந்த டென்னிஸ் என்னும் மதவெறியார் ,இதை பெரியதாக கதைக்காட்டினார் பின் அப்பொழுதைய முதல்வர் எம் ஜி ஆர் ,நேரிட்டு வந்து ஆய்வு செய்து பாதுகாப்பை பலப்படுத்தினார் .இதெல்லாம் யாரும் அறியாதது ..

  ReplyDelete
  Replies
  1. இதுமாதிரியான நிகழ்வு எங்கயும் நடக்குறதுதான். எல்லா மதமும் கடவுள் இருக்கார்ன்னு சொல்லுது. எல்லா மதமும் நல்லதைதான் சொல்லுது. சொல்லும் வார்த்தைகள்தான் வேற வேற.

   மனிதர்களுக்குள்ளேயே பேதம் பார்க்கக்கூடாதுன்னு சொல்லுற நாமதான் என் கடவுள் உசத்தின்னு சண்டை போடுறோம்.

   Delete
  2. அமிர்தா நாகர்கோயில்/கன்யாகுமரி யைச் சேர்ந்தவரோ?!!

   நானும் என்பதால்தான்....அங்கு நடந்தவற்றைச் சொல்லுகிறீர்களே...

   கீதா

   Delete
 5. தகவல்கள் அருமை சகோதரி...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

   Delete
 6. தகவல்களை முழுமையாகவும் கோர்வையாகவும் தெளிவாகவும் தந்திருக்கிறீர்கள்.

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா

   Delete
 7. கன்னியா குமரி தியான மண்டபம் பார்த்து இருக்கிறேன், பதிவும் போட்டு இருக்கிறேன். அழகான இடம்.
  செய்திகள் அறிந்து கொண்டேன்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்கப்பா. பார்க்கவே கொள்ளை அழகு. அமைதியான இடம்... மனசுக்கு புத்துணர்ச்சி தரக்கூடிய இடம்.

   Delete
 8. தகவல் பகிர்வுக்கு நன்றி. இரண்டு முறை இங்கே சென்றதுண்டு.

  ReplyDelete
 9. நான் அங்கு படித்ததால் இந்த இடத்திற்குப் பல முறை சென்றிருக்கிறேன். அருமையான இடம். மண்டைக்காட்டிலும் அப்போதெல்லாம் கலவரம் நடக்கும். இப்போது தெரியவில்லை..

  கீதா: நான் பிறந்து படித்து வளர்ந்த ஊராச்சே! இருந்தாலும் நான் எழுதாத எழுத நினைக்காத தகவல்களை நீங்க கொடுத்துட்டீங்க ராஜி!! அருமை...அருமையான இடம். ரம்மியமான இடமும். எத்தனை முறை சென்றிருக்கிறேன்... இப்போதெல்லாம் அங்கு அவ்வளவு குழப்பங்கள் இல்லை என்று நினைக்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. மனோ அண்ணாவோடு பழகி பழகி நாஞ்சில் நாட்டை பிடிச்சு போச்சு. அவரோடு பேசும்போதுலாம் ஊரை பத்தி சொல்லும்போது கற்பனைல விரியும். அந்த ஸ்லாங்க், சாப்பாடு, ஊர் அமைப்புன்னு... என்னை சுத்தி பார்க்க கூட்டி போக சொல்லி இருக்கேன். கொஞ்ச நாள் வந்து தங்கனும். கன்னியாக்குமரி பத்தி நீங்களே அறியாத தகவல்கள் பதிவுகளில் வரும்ங்க கீதா.

   Delete
 10. இதுவரை நான் அறிந்திராத செய்தி. வியப்போடு வாசித்தேன். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. இனியும் வியக்குமளவுக்கு பதிவுகள் வரும்ப்பா. தொடர்ந்து வாசிங்கப்பா

   Delete