Friday, April 27, 2018

அல்வா நகரத்து நாயகன் நெல்லையப்பர் ஆலய கும்பாபிஷேகம்

தாருகாவனத்து வாழுந் தாபர் முன்னோர் காலஞ் சேருமெய்த் 
 தருமந்தானே தெய்வமென்றிருந்தேன் கோனைக் கோரமாய்
 நிந்தை செய்த கொடியதோர் பாவந் தீர வாரமாய் தொழுது
 போற்றி மகிழ திருமூல லிங்கம்”
எனப்பாடல்பெற்ற தலம்,  சிவன் நடனமாடிய ஐந்து சபைகளில் தாமிரசமை எனப்போற்றப்படும் தலம், திருஞானசம்பந்தரால் தேவாரப்பாடல்பெற்ற தலம்,   அருணாசலகவிராயரால் வேணுவன புராணத்திலும், சொக்கநாத பிள்ளையால் காந்திமதியம்மை பதிகத்திலும் பாடல்பெற்ற தலம். 1500 ஆண்டுகால பழமையான தலம், நால்வகை வேதங்களும் தவமிருந்து  சிவப்பெருமானுக்கு நிழல்தரும் மூங்கில் மரங்களாக பிறப்பெடுத்த தலம், ஆயிரங்கால் மண்டபம், இசைத்தூண்கள் கொண்ட மணிமண்டபம், ஆசியாவின் மிகப்பெரிய கோவில்..ன்னு பல சிறப்புகளைக் கொண்டது திருநெல்வேலி காந்திமதி சமேத நெல்லயப்பர் ஆலயம். 
ராமக்கோன் என்பவர் தினமும் இப்போது நெல்லையப்பர் கோவிலிருக்கும் இடம் முன்பு மூங்கில் தோட்டமாய் இருந்தது. அந்த வழியாய் தினமும் மன்னருக்கு பால் கொண்டு வருவது வழக்கம். ஒருமுறை ராமர்கோன் காலில் அங்கிருந்த மூங்கில் செடி இடறி பால்குடம் கீழே விழுந்து பால் கசிய ஆரம்பித்தது. பால் முழுவதுமாய் சிந்துவதற்குள் அரண்மனைக்கு பாலை கொண்டு போய் சேர்பித்தார்.  தினமும் அவ்விடத்தில் பால் சிந்துவது வாடிக்கையானது. தினமும் வழக்கத்துக்கு மாறாக பால் குறைவது மன்னரின் காதுக்கு சென்றது. ராமர்கோனை கூப்பிட்டு மன்னர் விசாரித்தார். நடந்ததை ராமர்கோன் சொல்ல, மன்னர் அவருடன் புறப்பட்டு மூங்கில்வனத்துக்கு வந்தார். அங்கிருக்கும் மூங்கில்களை வெட்டச் சொன்னார். அப்படி வெட்டும்போது சுயம்புவாய் லிங்கமூர்த்தி வேனுவனநாதராக காட்சி தந்தார். இந்த மூர்த்தம் சிறிது சிறிதாய் பலமுறை வளர்ந்து மன்னருக்கு காட்சியளித்தார். அவருக்கு கோவில் எழுப்புவதாய் மன்னன் வேண்டிக்கொண்டு கட்டிய கோவிலே இன்றைய நெல்லையப்பர் கோவில். சன்னிதிக்கு பின்புறம் இன்றும் இத்தல விருட்சமாய் மூங்கில் நிற்பதை பார்க்கலாம். வேணுநாதர் காட்சியளிச்சார். அப்புறம் எப்படி நெல்லைநாதர்.....ன்னு நீங்க யோசிக்குறது புரியுது. அதுக்கொரு காரணம் இருக்கு. பார்க்கலாம். 

வேதபட்டர்ன்ற  சிவபக்தர், சிவன்மேல் அதிக பக்தி கொண்டவராக இருந்தார்.  தினமும் புதுநெல்லினை அரிசியாக்கி சிவனுக்கு நைவேத்தியம் செய்வது அவரின் வழக்கம்.  தன்மேல் அளவுகடந்த பக்தி வைத்திருக்கும் வேதபட்டரின் பக்தியை சோதிக்க சிவபெருமான் எண்ணினார். அதன் காரணமாக சிவபெருமான் வேதபட்டரை வறுமைக்குள்ளாக்கினார். அப்படியும் தன் கைங்கரியத்தை விடாமல், தினமும் வீடுவீடாக சென்று நெல் சேகரித்து தனது கைங்கரியத்தை நிறைவேற்றி வந்தார்.  அப்படி ஒருநாள் சேகரித்த நெல்லை கோவிலுக்கு எதிரில் காயப்போட்டு குளிக்கச் சென்றபோது, திடீரென்று மழை பெய்ய ஆரம்பித்தது. குளித்துக் கொண்டிருந்த வேதபட்டர் மழை தண்ணீரில்,  நெல் நனைந்து விடப்போகிறதென எண்ணி, சிவனை வேண்டிக்கொண்டே, நெல்லை நோக்கி ஓடினார். மழை வெள்ளத்தில் நெல் அடித்துச்செல்லாமல் இருக்க வேலிபோல் தண்ணீர் தேங்கி நின்றதுடன், நெல் காயவைத்த இடத்தில் மட்டும் வெயில் அடிப்பதைக்கண்டு திகைத்து நின்றார். இந்த அதிசயத்தை அரசரிடம் தெரிவிக்க ஓடினார். மன்னன் ராமபாண்டியனும் இந்த அதிசயத்தை காண வந்தார். நெல் நனையாமல் இருப்பதைக் கண்ட மன்னனும் வியப்புற்றார். உலகிற்காக மழை பெய்வித்து வேதபட்டரின் நெல் நனையாது காத்த இறைவனின் சிறப்பை உணர்ந்து மெய்சிலிர்த்தார். நெல்லுக்கு இறைவன் வேலியிட்டு காத்ததால் இறைவனின் திருநாமத்தை அன்று முதல் நெல்வேலிநாதர் என்றும், அதுவரை வேணுவனம் என்றிருந்த அப்பகுதியை நெல்வேலி என்றும் அழைக்க ஆரம்பித்தனர். 

கோவிலுக்குள் நுழைந்தவுடன் 10 அடி உயரத்திற்கு மேலாக ஒரு அழகான வெள்ளை நிற நந்தி நம்மை வரவேற்கும். அடுத்து, கொடிமரத்தை வலம்வந்து கோவிலின் உள்ளே இத்திருக்கோயில் தெற்குப் பிரகாரம், மேலப் பிரகாரம், வடக்குப் பிரகாரம், கீழப் பிரகாரம் என்ற அமைப்புடன் உள்ளது. மணி மண்டபத்தில் இருந்து மேற்குப் பக்கமாக நேராய் சென்றால் நெல்வேலிநாதரை வழிப்படலாம். பின்னர், வேணுவனநாதருக்கு வடப்புறமாக கிடந்தக்கோலத்தில் பெரிய உருவத்துடன் ரங்கநாதரின் தரிசனம் கிடைக்கும்.  மூலவரைக் காண்பதற்குமுன் சுமார் 9 அடி உயரம் உள்ள மிகப்பெரிய விநாயகரைத் தரிசிக்கலாம். மூலவரைச் சுற்றி 3 பிரகாரங்கள் உண்டு. முதல் பிரகாரத்தில் எல்லா சிவன் கோயில்களையும்போல  தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை ஆகியோரையும், மற்றும் சண்டிகேஸ்வரர், மகிஷாசுரமர்த்தினி, பைரவர் ஆகியோரை தரிசிக்கலாம். கோவிந்தப் பெருமாள் சந்நிதியும் சிவனுக்கு அருகிலேயே இருக்கும். நெல்லையப்பர்,  சப்த கன்னியர்கள், சப்த முனிவர்கள், அறுபத்து மூன்று நாயன்மார்களின் உற்சவ மூர்த்திகள், பொல்லாப் பிள்ளையார் ஆகியோரையும் தரிசிக்கலாம்.  மேலப் பிரகாரத்தில் தாமிர சபை அமைந்துள்ளது.
காந்திமதி அம்மன் ஆலயம்..

அம்மன் தலையில் வைரமணி முடி, இராக்குடியுடனும், முகத்தில் புல்லாக்கு மூக்குத்தியுடனும், நவமணி மாலை அணிந்தும், காலில் மணிச் சிலம்பும், வலக்கரம் உயர்த்திய நிலையிலும், இடக்கரம் தாழ்த்திய நிலையிலும், கிளியுடனும் காட்சி தரும் காந்திமதி அம்மனின் தோற்றம், கருணை வடிவம். அம்மன் கோயிலும், சுவாமி கோயிலும் ஆரம்பத்தில் முழுதுகண்ட இராமபாண்டியனாலும், பிற்காலத்தில் 7ம் நூற்றாண்டில் நின்றசீர்நெடுமாறனாலும் கட்டப்பட்டவை. கி.பி. 1647ம் ஆண்டின்பொழுதும், வடமலையப்ப பிள்ளையன் இரண்டு கோயிலையும் இணைக்க விரும்பிச் சங்கிலி மண்டபத்தை கட்டினார். இத்திருக்கோயிலில் சங்கிலி மண்டபம், வசந்த மண்டபம், சோமவார மண்டபம், ஊஞ்சல் மண்டபம் என பல்வேறு மண்டபங்கள் அமைந்துள்ளன. இந்த மண்டபங்கள் சிற்பக் கலையின் சின்னமாகத் திகழ்கின்றன.

ஈசன் பார்வதி தேவியின் திருமணம் இமயத்தில் நடைபெற்றபோது தேவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடியதால், வடப்புறம் தாழ்ந்து, தென்புறம் உயர்ந்தது. இதனைக் கண்ட சிவன், அகத்திய பெருமானை தென்பகுதிக்குச் செல்லுமாறு பணித்தார். அவ்வாறே அகத்தியர் தென்பால் வந்து திருக்குற்றாலம் அடைந்து,  பின் பொதிகை மலையை அடைந்து பூமியை சமன் படுத்தினார்.  திருநெல்வேலி வந்த அகத்தியருக்கு சிவபிரானும், பார்வதி தேவியும் மணக்கோலத்தில் காட்சி அளித்தனர். 
இராமபிரான், சீதையைத்தேடி இலங்கைக்குச் செல்லும்முன், அகத்தியரின் ஐந்தெழுத்து உபதேசம் பெற்று நெல்லையப்பரை வணங்கி பாசுபதாத்திரம் பெற்று போரில் இராவணனை வென்று சீதையுடன் அயோத்தி அடைந்தார்.

சுவேதகேது என்ற அரசன் இப்பகுதியை ஆண்டுவந்தான். நெல்லையப்பரின் தீவிர பக்தன்.,  வாரிசு இல்லாத நிலையில், அவனுக்கு இறுதிக்காலம் நெருங்கியது. எமன் வரும் நேரத்தில், அவன் நெல்லையப்பர் ஆலயத்தில் அமர்ந்து பூஜை செய்துக்கொண்டிருந்தான்.  அப்போது எமன் வந்து பாசக்கயிற்றை வீச,  அது அரசனோடு சேர்த்து சிவலிங்கத்தின்மீது விழுந்தது. இதனால் கோவம் கொண்ட சிவன் எமனை காலால் எட்டி உதைத்தார். பின்னர், மன்னர் விரும்பும்போது முக்தி அளிப்பதாய் வாக்களித்தார்.  இத்திருவிளையாடல் மூலம் ஈசன், இந்த நெல்லையில் இருப்பவர், வாழ்பவர், தனது மனத்தால் நினைப்பவர், இவ்வுலகில் பிறந்தோர், இறந்தோர் அனைவரும் முக்திபெறுவர் எனவும், இத்தலமே தென்கைலாயம் என்றும் சிவலோகம் என்றும் விளங்கும் என்று அருளினார் நெல்வேலிநாதர். மேலும், கருவூர் சித்தருக்கு அருள் செய்த திருவிளையாடல், நின்றசீர்நெடுமாறன் என்னும் அரசனுக்கு திருஞானசம்பந்தர் மூலமாக அருளிய திருவிளையாடல் என பல்வேறு திருவிளையாடல்களை ஆடியுள்ளார் இத்தலத்தில் உறையும் ஈசன்.
நம் தமிழ்திருநாட்டை பொறுத்தவரை கோவில்கள் வெறும் இறைவனின் பெருமையை எடுத்து சொல்லும் விதமா மட்டும் இருக்காது. சித்திர, சிற்பக்கலை, கலாச்சாரத்தினை எடுத்துச்சொல்லும் விதமாதான் இருக்கும் அந்தவகையில் இக்கோவில் தலைச்சிறந்த கலைப்பொக்கிஷங்களில் ஒன்று.   திருக்கோயில் கோபுரத்தை அடுத்த மேற்கூரையில் மரத்தால் ஆன ஆயிரக் கணக்கான சிற்பவேலைப்பாடுகள் காணக் கண்கொள்ளாக் காட்சி. தூண்கள்தோறும் சிற்பவேலைப்பாடுகள், ஒரு தோளில் கைக் குழந்தையை வைத்துக்கொண்டு, மறுபக்கம் தன் பெரியபிள்ளைக்கு சோறூட்டும் அன்புத்தாய், அன்பர்களுக்கு அருள் பாலிக்கும் ஆஞ்சநேயர், ஷாப்பிங்க் செல்லும் அக்கால கணவன் -மனைவியின் தோற்றம், ஐந்தறிவு ஜீவனின் தாய்ப்பாசம்.  குழந்தை கண்ணனைக் கொல்லவந்த அரக்கி கையில் குழந்தையுடன்,  வீரபத்திரர், கர்ணன், அர்ஜுனன், போன்றோரது சிற்பங்கள் அவற்றின் நுண்ணிய வேலைப்பாடுகள் என காண்போரின் மனதைக் கொள்ளை கொள்ளும். இங்கிருக்கும், சிற்பங்களின் ரத்த ஓட்டம் நம் கண்ணுக்கு தெரியும். சதை மடிப்புகள், கண்களின் ஜீவன்கள் என ஒவ்வொரு சிற்பமும் உயிரோட்டத்தோடு இருக்கும். 

ஊஞ்சல் மண்டபம்...
96 வாழ்வியல் தத்துவங்களை எடுத்து சொல்வதுபோல 96 தூண்களைக்கொண்டது இம்மண்டபம்.  அம்மன் கோயிலில் அமைந்துள்ள ஊஞ்சல் மண்டபத்தில் ஐப்பசி மாதம் காந்திமதி அம்மன் திருக்கல்யாணம் நடந்தேறியதும், மூன்று நாட்கள் ஊஞ்சல் விழா நடைபெறுவது வழக்கம். இந்த நாள்களில் தேவாரம், திருவாசகம், நான் மறைகள் ஓதுவதும், சமய சொற்பொழிவுகளும் நடைபெறும். ஆடிமாதம் அம்பாளுக்கு இம்மண்டபத்தில் வளைகாப்பு நடைப்பெறும். இந்த மண்டபத்தை 1635ம் வருடம் சேரகுளம் பிறவிப்பெருமாள் பிள்ளையன் கட்டியதாக சொல்லப்படுது.  இந்த ஊஞ்சல் மண்டபத்தின் வடக்குப் பக்கமாக பொற்றாமரைக் குளம் இருக்கு. இந்தக் குளத்தில் சிவனே நீர் வடிவமாய் உள்ளதாக ஐதீகம். பிரம்மன் தங்க மலரோடு வந்து எழுந்தருளியதாகவும் நம்பிக்கை.  இதன் காரணமாகவே பொற்றாமரைக் குளம்ன்னு பேர் உண்டானது.  
ஆயிரங்கால் மண்டபம்...
இக்கோவிலில் சிற்பங்கள் மட்டும் உயிர்ப்புடன் இல்லை. ஒரேமாதிரியான தோற்றத்தில் மிக நேர்த்தியாய் வடிவமைக்கப்பட்ட ஆயிரங்கால் மண்டபம். 520 அடி நீளமும், 63 அடி அகலமும் கொண்டது இம்மண்டபம். இந்த மண்டபத்தில்தான் ஐப்பசி மாசத்தில் திருக்கல்யாண உற்சவம் நடைப்பெறும்.  பங்குனி உத்திரம் அன்று மன்னருக்கு சுவாமி செங்கோல் கொடுக்கும் நிகழ்ச்சி நடைப்பெறும்.  ஆமை ஒன்று தன் முதுகில் இம்மண்டபத்தை தாங்குவது போன்று அமைக்கப்பட்டுள்ளது. மகாவிஷ்ணுவே இங்கு வந்து இறைவனை வழிப்படுவதாய் நம்பிக்கை. 
 சோமவார மண்டபம்.. 
சுவாமி சன்னிதியின்  வடக்கு பக்கம் சோமவார மண்டபம் இருக்கும்.  கார்த்திகை மாசத்தின் சோமவாரநாட்களில் பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகமும், நவராத்திரி நாட்களில் நடைப்பெறும் பூஜைகளும் இம்மண்டபத்தில்தான் நடைப்பெறும். 78 தூண்களை கொண்டது இம்மண்டபம். 

சங்கிலி மண்டபம்...
சுவாமி கோவிலையும், அம்மன் சன்னிதியையும் இணைப்பது போல இருப்பதால் இந்த மண்டபத்துக்கு சங்கிலி மண்டபம் என பேர் உண்டானது. 1647ம் ஆண்டு கட்டப்பட்டது இம்மண்டபம்.  காமவிகார குரங்கு, வாலி, சுக்ரீவன்,  புருஷாமிருகம், பீமன், அர்ச்சுனன், ஆகிய சிற்பங்கள் இம்மண்டபத்தில் உள்ளது. 

மணி மண்டபம்...
இந்த மண்டபத்தின் மையத்தில் பெரிய மணி ஒன்று தொங்குவதால் இம்மண்டபத்துக்கு இந்த பேர் உண்டானது. நின்றசீர்நெடுமாறனால் கட்டப்பட்டது இம்மண்டபம். சுற்றி சுற்றி பல தூண்கள் இருப்பதுபோல்  ஒரேக் கல்லினால் செதுக்கப்பட்ட  இசைத்தூண் இம்மண்டபத்தில் உள்ளது. எந்த ஒரு தூணை தொட்டாலும் எதாவது ஒரு ஸ்வரம் ஏற்படும். மரக்கட்டையில் மான்கொம்பினால் தட்டினால்  அற்புதமான ஒலி கிடைக்கும்.  மொத்தம் 48 சிறிய தூண்களை கொண்டது இம்மண்டபம். 

வசந்த மண்டபம்...
கோடைக்காலத்தில் வசந்தவிழா கொண்டாடப்படுவதற்காக கட்டப்பட்ட மண்டபம் இது.  இம்மண்டபத்தை சுற்றிலும் மரங்கள் அடர்ந்த சோலை உள்ளது.  1756ம் ஆண்டு திருவேங்கட கிருஷண முதலியாரால் இந்த வனம் உண்டாக்கப்பட்டது. 

பல்வேறு மன்னர்களால் பல்வேறு காலக்கட்டத்தில் இக்கோவில் விரிவாக்கப்பட்டு இன்று 14 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கு இக்கோவில். நெல்லையப்பருக்கும், காந்திமதி அம்மனுக்கும் திருமணம் செய்விக்கும்பொருட்டு, திருமால் திருநெல்வேலிக்கு வந்து தங்கியதால் இக்கோவிலில் தனிச்சன்னிதி கொண்டு அருள்பாலிக்கிறார்.  கோவிலில் இரண்டு ராஜக்கோபுரத்துடன் கூடிய, இரண்டு கருவறை உண்டு. ஒன்று நெல்லையப்பர் சன்னிதி. இன்னொன்று, நெல்லை கோவிந்தனுடையது. கோவிந்தன் மார்பில் சிவலிங்கம் இருப்பது இக்கோவிலின் சிறப்பு.   திருநெல்வேலியை சுற்றி, நவத்திருப்பதி தலங்கள் அமைந்துள்ளது.  

இக்கோவில்களில் மார்கழி மாதத்தில் அதிகாலை பூஜை இல்லை. அதுக்கு பதிலா கார்த்திகை மாதத்தில் அதிகாலையில் எல்லா சுவாமிகளுக்கும் பூஜை நடைப்பெறும். கார்த்திகை மாதத்து 30 நாளிலும் சுவாமி தங்கப்பல்லக்கில் வீதிஉலா வருவார். இக்கோவிலில் கந்தர்சஷ்டி விழா 15 நாட்கள் கொண்டாடப்படுது. கந்தர்சஷ்டி அன்று ஆறுமுகநாயினாருக்கு லட்சார்ச்சனை செய்யப்படும்.  இங்குள்ள துர்க்கை சிங்கம் மற்றும்மான் வாகனத்தில் தெற்கு நோக்கி இருப்பதால் எதிரிகளை அன்பால் அடக்குபவளாகிறாள். நவக்கிரக நாயகர்களில் ஒருவரான புதன், பொதுவாய் கிழக்கு பக்கம் பார்த்து இருப்பார். ஆனால்,  இங்கு வடக்கு பக்கம் பார்த்திருக்கிறார். மீனாட்சி அம்மன் கோவிலின் முக்குறுணி வினாயகரும்  வலது கையில் மோதகமும், இடது கையில் தந்தமுமாக இங்க இருக்கார். 


நெல்லையப்பருக்கு வேண்ட வளர்ந்தநாதர்,  மூங்கில் வேணுவனேஸ்வரர், வெய்முத்தீசர்ன்னு வேறு பேர்களும் உண்டு. இந்த லிங்கத்தின் மத்தியில் அம்பிகையின் உருவம் இருப்பதை அபிஷேகத்தின் போது காணலாம். சிவனுக்குள் சக்தி அடக்கமென்பதை இது உணர்த்தும். அதனால், இவருக்கு சக்திலிங்கம்ன்னு ஒரு பேர் உண்டு.  இது தவிர, மகாவிஷ்ணு பூஜித்த லிங்கம் ஒன்றும், மூலவர் சன்னதிக்கு முன்புள்ள பாதாளத்தில் திருமூல மகாலிங்கம் சன்னதியும் இருக்கிறது. பாதாள லிங்கத்தில் உள்ள சிவனையே ஆதிமூலவர் என்கின்றனர். இவருக்கு தான் முதல் பூஜை செய்யப்படுகிறது. இவருக்கு சாலி வாடீஸ்வரன், (சாலி என்பது நெல்லி), விருகி விடுதீஸ்வரன், ஸ்ரீதான மூர்த்தி போன்ற திருநாமங்கள் உள்ளன.  இவரே இக்கோயிலின் முதல் லிங்கம் எனக் கருதப்படுவதால், இவருக்குத் தான் முதல் பூஜை நடக்கிறது. இங்கு பஞ்ச தெட்சிணாமூர்த்திகளையும் தரிசிக்கலாம்.

திருநெல்வேலியில் ஓடும் தாமிரபரணியில் எப்போதும் நீர் வற்றுவதில்லை. இந்நதியை அகத்தியர் உண்டாக்கியது  என்றாலும், நதி செழிப்புடன் இருப்பதற்கு நெல்லையப்பரே மூலக்காரணம் என சொல்கிறார்கள். பொதுவா எல்லா கோவில்களிலும்  அபிஷேக தீர்த்தம் வடப்பகுதியில் விழும்படியாகத்தான் கோமுகி இருக்கும். ஆனால், இங்கு வருணனின் திசையான மேற்கில் கோமுகி இருக்கு. இந்த புனிதநீர், தன் திசையில் விழுவதால் மகிழும் வருணபகவான் எப்போதும் இப்பகுதியில் மழை பொழிவித்து, தண்ணீர் பஞ்சம் இல்லாத நிலையில் வைத்திருக்கிறார் என்பது ஐதீகம்.
என்ன திடீர்ன்னு திருநெல்வேலி பக்கம் காத்து வீசுதுன்னு அதும் ரெண்டாவது பதிவான்னு நினைக்குறவங்களுக்கு இரு பதில்கள்...
1. இன்னிக்கு நெல்லையப்பர் ஆலய குடமுழுக்கு விழா..
2. இந்த கோவிலுக்கு டூர் போய் வந்த நேரத்தில், நான் பிறந்திருக்கும் விசயம் கேள்விப்பட்டு என்னை பார்க்க வந்த என் அப்பாவின் நண்பர்  அம்பாளின் நினைவா எனக்கு காந்திமதின்னு  பேர் வச்சாராம்.  போனில் எப்ப பேசினாலும் இந்த விசயத்தை சொல்லுவார். அந்த விட்டக்குறை, தொட்டக்குறைக்குதான் இந்த பதிவு. ராஜிங்குறது பெட் நேம் மட்டுமில்ல. ஒரு பெட்டோட நேமும்.கூட இனி, வலைப்பூவிலும் அதேப்பெயரில் தொடரலாம்ன்னு ஐடியாவில் இருக்கேன். ஆலோசனை சொல்லுங்க சகோஸ். 
நன்றியுடன்,
ராஜி. 

14 comments:

  1. "Kaanthimathi", no wonder why your words attract.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ... ‘நன்மனம்’ பேர் நல்லா இருக்கு..

      வருகைக்கும் வாழ்த்துக்க்கும் நன்றி சகோ

      Delete
  2. அருமையான பதிவு............ நெல்லையப்பர் ஆலய வரலாறு அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி....படங்களும் அருமை.... நன்றி,தங்கச்சி......

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  3. அழகான கோவில். ஒரு முறை நேரில் சென்றதுண்டு.

    ReplyDelete
    Replies
    1. நானும் ஒருசில முறை சென்றதுண்டு. கடைசியாய் போனது 2010ல்..

      Delete
  4. சுவாரஸ்யமான விவரங்களுடனும் அழகிய படங்களுடனும் பத்திவைப் படிக்க வைத்தீர்கள். நான் இன்னும் இந்தக் கோவில் சென்றதில்லை. ஆசியாவிலேயே பெரிய கோவிலா? அப்போ ஸ்ரீரங்கம்? கும்பாபிஷேகம் பற்றிய தகவல்களை செய்தித்தாளில் நானும் படித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீரங்கம் கோவிலில் சேராது சகோ. அது கோபுரத்துக்கு மட்டும்தான்.

      Delete
  5. அல்வா நாயகர் அனைவரது வாழ்விலும் இனிப்பை வழங்கட்டும்.

    ReplyDelete
    Replies
    1. அதும் இருட்டுக்கடை அல்வாவா கொடுக்கட்டும்.

      Delete
  6. பல முறை தரிசித்ததுண்டு. பிராகாரங்கள் படமும் நந்தியின் படமும் ரொம்ப அழகாக இருக்கின்றன....நல்ல தகவல்கள்...அல்வா நகரத்து நாயகர் ஹா ஹா ஹா தலைப்பு ரசனை..

    இருவரின் கருத்தும்

    ReplyDelete
    Replies
    1. நானும் போனதுண்டு

      Delete
  7. மிகவும் அருமை பாராட்டுக்குரியது

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் நன்றி சகோ

      Delete