Friday, May 11, 2018

தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்த கூலி தருமென உணர்த்தும் தலம் - அறிவோம் ஆலயம்

கோவில்” இது வெறும் ஆண்டவன் உறையும் இடம் மட்டுமல்ல. தங்கள் கலைகளையும். வாழ்வியல் தத்துவங்களையும் பதிந்து வைக்கும் இடமாவும் நம் முன்னோர்கள் பயன்படுத்திக்கிட்டாங்க. அதுமாதிரி கலைப்பொக்கிஷங்களாய் இருக்கும் கோவில்கள் பல பூமியெங்கும் இருக்கு. அந்தமாதிரி கலைப்பொக்கிஷமாய் திகழும் கோவில்களில் திருவாரூர் மாவட்டத்திலிருக்கும் நன்னிலத்திற்கு பேரளத்திலிருந்து சுமார் இரண்டு கிமீ தூரத்திலிருக்கும் திருமியச்சூர் லலிதாம்பிகை சமேத மேகநாத சுவாமி திருக்கோவிலும் ஒன்று.  மயிலாடுதுறையிலிருந்து சுமார் 25 கிமீ தொலைவிலும், திருவாரூரிலிருந்து 22 கிமீ தொலைவிலும், காரைக்காலிருந்து சுமார் 20 கிமீ தொலைவிலும்,  கும்பகோணத்திலிருந்து காரைக்கால் செல்லும் பாதையில் இக்கோவில்  இருக்கு.  முக்கிய பாதையிலிருந்து பிரிந்து கிளைப்பாதையில் ஊருக்குள் பயணிக்கும்போதே பச்சை பசேல் வயல்வெளிகளும், வெடிக்க காத்திருக்கும் பருத்தி செடிகளும், குளுமையை தரும் தென்னந்தோப்புக்கு அப்பால் கோவில் கோபுரம் நம்மை வரவேற்கும். 

ராஜேந்திர சோழனாலும், செம்பியன்மாதேவியாலும் கட்டப்பட்ட இக்கோவில்  பழங்கால கோவிலொன்றையும், இளங்கால கோவிலும் ஒருசேர இருக்கு. ஐந்து நிலை ராஜகோபுரத்தை கடந்ததும், வலப்பக்கம் லலிதாம்பிகை என்னும் சாந்தநாயகி அம்மன் திருக்கோவில். எப்பயும்போல் இறைவனை தரிசிச்சபின் இறைவியை தரிசிக்கலாம்.  இங்கு வீற்றிருக்கும் இறைவனின் பெயர் அருள்மிகு லலிதாம்பிகை சமேத மேகநாத சுவாமி, மிஹிரா அருணேஸ்வரர், முயற்சிநாதர். முயற்சிநாதர்! பேரே நமக்கு பல கதைகளை சொல்லுதுல்ல!! என்ன கதைன்னு பார்க்கலாம். 
இரண்டாவது உள் கோபுரம் மூன்று நிலைகளை கொண்டது. இரண்டாவது கோபுரத்தின் வழியாய் இறைவனை தரிசிக்க செல்லும்போது நம்மை முதலில் வரவேற்பவர் ரதவினாயகர். மேகநாதசுவாமி சுயம்பு மூர்த்தமாய் உருவானவர். 

இங்கு வீற்றிருக்கும் மூலவரின்மேல்   ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் 21-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை  சூரியன் உதிக்கும் நேரத்தில் கதிரவனின் செங்கதிர்கள் ராஜகோபுரத்தின் வழியாய் வந்து மேகநாதசுவாமிமீது  விழுவது இத்திருக்கோயிலின் சிறப்பு.

உள்பிரகாரத்தில் நாகர், சேக்கிழார், சப்தகன்னியர்கள், எமன், இந்திரன் முதலோனவர்களால் பூஜித்த பஞ்சலிங்கங்கள் உள்ளது. மேகநாதசுவாமிக்கு  அவரவர் ஜென்ம நட்சத்திரத்தில் ஆயுள் ஹோமம், சஷ்டியப்த ஹோமம், சதாபிஷேகம் ஆகியவை செய்விக்கின்றனர். இங்கிருக்கும் கல்யாண சுந்தரேஸ்வரரை வணங்கினால் திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடி வரும்.  நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பிரண்டை சாதத்தை தாமரை இலையில் வைத்து சாப்பிட்டால் நோய் நீங்குமென்பது நம்பிக்கை. இத்தலத்தில் சூரிய வழிபாடான ரதசப்தமி வெகு விமர்சையாக கொண்டாடபடும். இந்த விரதமிருப்போருக்கு ஆரோக்கியம் கைகூடி வரும். 

எல்லா சிவன் கோவில்களிலும் காணப்படும் தெய்வ மூர்த்தங்கள்தான் இங்கயும் இருக்கு. ஆனா, சோழர்கால கலையை உலகுக்கு பறைசாற்றும் விதமா இக்கோவில் இருக்கு. தலவரலாற்றோடு கோவிலின் சிற்பத்தை பார்க்கலாம். சிவன்,விஷ்ணு, முருகன், அம்பிகை, லட்சுமின்னு எல்லா தெய்வங்கள் அமர்ந்திருக்கும் வாகனங்களை நமக்கு தெரியும். எல்லா தேவர்களுக்கும், நவக்கிரங்களுக்கும் தனி வாகனம் இருக்கு. அதன்படி சூரியனின் வாகனத்தை ஓட்டும் சாரதி அருணன் என்பது நம்மில் பலபேருக்கு தெரியாது. நமக்கு தெரியாத அருணன் கதையை இக்கோவிலில்தான் கேட்க முடியும்.
நான்கு முகம் கொண்ட சண்டிகேஸ்வரர். 
காசிப முனிவரின் மனைவிகளான கர்த்துரு, விநநைன்ற இரு மனைவிகளும் சிவபெருமானை மனதில் நினைத்து கடுந்தவம் புரிந்து பிள்ளை வரம் வேண்டினர். இவர்களது தவத்தின் பலனாக இறைவன் இவர்கள் முன்தோன்றி இருவருக்கும் ஒரு முட்டையை பரிசாகக் கொடுத்தார். இந்த முட்டையை ஒரு வருட காலம் பாதுகாத்து பூஜை செய்து வந்தால், ஒரு ஆண்டு கழித்து உலகமே போற்றும் வண்ணம் ஒரு மகன் பிறப்பான் எனக்கூறி மறைந்தார். வருடமொன்று கழிந்தது. விநதையின் முட்டையிலிருந்து பறவை ஒன்று வெளிவந்து பறந்து சென்று விஷ்ணுபகவானை சுமக்கும் கருட பகவானாகிப்போனது. இதைக்கண்ட கர்த்துரு பொறைமைக்கொண்டு தன்னிடமிருந்த முட்டையை உடைத்தாள்.
உடைத்த முட்டையிலிருந்து வளர்ச்சி குறைந்த நிலையில் தலைமுதல் இடுப்பு வரை மட்டுமே வளர்ந்த குழந்தை வெளிவந்தது. இதைக்கண்டு மனவேதனை அடைந்த கர்த்துரு சிவபெருமானிடம் மன்னிப்பு கேட்டு குழந்தைக்கு தக்க வழிச்செய்யுமாறு வேண்டினாள். சிவனும், அக்குழந்தைக்கு அருணன் என பெயர்சூட்டி சூரியபகவானின் ஏழு குதிரை கொண்ட தேரின் சாரதியாய் அருணனை நியமித்தார். கூடவே அருணனை சிறப்பிக்கும் விதமா, சூரியோதத்தை அருணோதயமெனவும் அழைக்கபடுமென அருளினார். அருணன் சிறந்த சிவபக்தனாய் வளர்ந்து வந்தான். 
அருணன் வளர்ந்தபின் சிவதரிசனம் வேண்டி, சிவனை  நோக்கி  கடுந்தவம் இருந்தான். உடல் குறைபாடு கொண்ட நீ எப்படி கைலாயம் செல்லமுடியுமென சூரியன் அருணனை கிண்டல் செய்தான். தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்ன்ற குறளுக்கேற்ப, அருணன் விடாமுயற்சியுடன் தவமிருந்தான். அவனின் முயற்சிக்கு மனமிரங்கிய சிவன் அருணனுக்கு காட்சியளித்து தன்னோடு கைலாயம் அழைத்து சென்றார். அருணனின் உடல்குறைப்பாட்டை குறை கூறிய குற்றத்திற்காக, சூரியன் தன் உடல்பொலிவை இழந்து, கருமை நிறம் கொள்ள வேண்டுமென சிவபெருமான் சூரியனை சபித்தார்.
சூரியபகவானுக்கு அளித்த சாபத்தினால் உலகமே இருண்டது. இதனை கண்ட அன்னை,  சூரியன் இன்றி உலகம் இயங்காதே என சிவனிடம் அன்னை கேட்க, அருணனின் தவத்தினால் உலகம் வெளிச்சம் பெரும் சிவபெருமான் கூறினார். தனது தவறினை உணர்ந்த கதிரவன் இறைவனிடம் மன்னித்தருள வேண்ட, ஈசன் சூரியனிடம் , ஏழு மாதங்கள்,  மேகமண்டலத்தில் எங்களை யானைமீது வைத்து பூஜித்து வா. அப்போதுதான் உனது பாவம் தீரும்'  என அருளினார். இதையடுத்து சூரியனார், மேகமண்டலத்தில் யானைமீது, சிவபார்வதியை வைத்து பூஜை செய்யத் துவங்கினார். ஆனால், ஏழு மாதங்கள் நிறைவுறுவதற்கு முன்பே,  சிவனாரிடம் சென்று, 'என்ன இது... இன்னும் சாப விமோசனம் தரவில்லையே?' எனக்கேட்க...  வெகுண்டாள் பார்வதி.  'உரிய ‍‌‌‍‌நேரம் வரும்வரை பொறுக்க மாட்டாயா?' என கடுங்கோவத்துடன் சூரியனாருக்குச் சாபமிட முற்படுகிறார்.
சிவன் பார்வதியை சமாதானப்படுத்தும் கோலம்,  ஒரே சிலையில் வலப்பக்கமிருந்து பார்த்தால் கோவத்துடனும், இடப்பக்கமிருந்த் பார்த்தால் சிரித்தமுகமுடனும் அன்னை காட்சியளிக்கும் ரூபம். 

பதறிப்போன சிவபெருமான், 'ஏற்கெனவே  நான் கொடுத்த சாபத்தால் கருநிறம்கொண்டான்  சூரியன். அதனால் பூமி தவித்தது.  இன்னொரு சாபம் கொடுத்து, இனியும் இந்த உலகம்  இருளில் தவிக்கும் சூழல்   வேண்டாம்.  தேவி, சாந்தமாக இரு!' என்று உமையவளை அமைதிப்படுத்தினார்.  பிறகு உரிய காலம் வந்ததும், சூரியனாருக்கு சாப விமோசனம் அளித்தார்.   அவரி தடுத்தாட்கொண்ட இறைவன், இவ்வுலகம் பிரகாசம் பெறவும், நீ சாந்தமடையவும் தவமிருப்பாயாக எனக்கூறி, உரிய காலம் வந்ததும், சூரிய பகவானுக்கு சாப விமோசனம் அளித்தார். சூரியனும் தனக்கிட்ட சாபத்திலிருந்து மீண்டு வந்ததினால் இத்திருத்தலம் மீயச்சூர் என்றானது.
சிவபார்வதியை யானைமீது வைத்து வழிபட்டதால் கருவறை விமானம் யானையின் பின்புறதோற்றத்தை நினைவுப்படுத்தும் கஜபிருஷ்ட வகையை சார்ந்தது.   சூரியனுக்கு சனி பகவானும், எமனும், அருணன், கருடன், வாலி, சுக்ரீவன் என ஆறு பேரின் அவதாரத் தலம் இது! ஆயுளை தீர்மாணிக்கும் எமனும், ஆயுள்காரகன் சனியும் பிறந்த தலமாதலால், இங்கு ஆயுஷ்ஹோமம், சஷ்டியப்த பூஜை, சதாபிஷேகம் செய்ய உகந்த இடம். எமனே, தன்னுடையை ஆயுளை விருத்தி  செய்வதற்காக தினசரி உச்சிக்காலத்தில், நூறாண்டுக்கொருமுறை தோன்றும் தெய்வீக சக்திவாய்ந்த 1008 சங்காபிஷேகம் செய்து எமலோகத்தின் தலவிருட்சமான பிரண்டையால் ஆன சாதத்தை நைவேத்தியம் செய்து இறைவனை வணங்குவதாய் ஐதீகம். 


இத்திருக்கோயிலின் பிரகாரத்தைச் சுற்றி வரும்போது ஒரு இடத்தில் நின்று காணும் போது ஐந்து கோபுரங்களின் தரிசனம் கண்களுக்கு விருந்து படைக்கின்றன. கோபுர தரிசனம் கோடி புண்ணியம் தரும். இங்கு ஐந்து கோபுரங்கள் ஒருசேர தரிசித்தால் கிடைக்கும் புண்ணியம் அளப்பரியதல்லவா?!
பிரகாரத்தை சுற்றி வருகையில் ஒரே இடத்தில் இருந்தவாறு மும்மூர்த்திகளையும் தரிசிப்பது கூடுதல் சிறப்பு. 
மகிஷாசுரனின் தலைமீது நின்றிருக்கும் ருத்ரதேவதையான துர்காதேவி சாந்தசொரூபியாய் இங்கு வீற்றிருக்கிறாள். ஆண்டாள், மதுரை மீனாட்சி அம்மனின் கைகளிலிருக்கும் கிளி இங்கு துர்க்கையின் கையில் இருக்கு, மேற்சொன்ன இருவரின் கைகளில் அலங்காரத்தில்தான் கிளி இருக்கும். சிலாரூபத்தில் கிளி இருக்காது. ஆனா, இங்கிருக்கும் துர்க்காதேவியின் சிலாரூபத்தின் இடது கையில் கிளி இருக்கு. 

எட்டு கைகளுடனும், கிளியுடனும் காட்சியளிக்கும் இவளுக்கு சுகபிரம்ம துர்க்கா தேவி எனப்பெயர்.  சுகப்பிரம்மம்ன்ற சொல்லுக்கு கிளின்னு பொருள்படும்.  நமது கோரிக்கைகளை துர்க்காதேவி, கிளியின் மூலமாக லலிதாதேவிக்கு  சொல்லி அனுப்புவதோடு அவ்வப்போது நினைவுப்படுத்தவும் செய்வாளாம். அதனால்தான் இத்திருக்கோலம். அதுமட்டுமில்லாம சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளைன்ற பழமொழியும் இங்கிருந்து வந்ததாம். மாலைவேளையில் துர்க்காதேவி சன்னிதியிலிருந்து லலிதாம்பிகை கோவிலுக்கு சென்று சிறிது நேரம் கழித்து திரும்புவதை  இன்றும் இக்கோவிலில் காணலாம். 

இக்கோவிலில் இரண்டு லிங்க மூர்த்தங்கள் உள்ளது. ராஜகோபுரத்துக்கு நேராய் இருக்கும் மேகநாத சுவாமியை திருஞானசம்பந்தரும்,  இன்னொரு லிங்கமான சகலபுவனேஸ்வரரை அப்பரும் பாடி இருக்காங்க. 

நவக்கிரக வழிபாடு தோன்றும் முன்னரே நாகர் வழிபாடு தொடங்கியதால் சகல தோஷங்களையும் போக்கும் தலம்.
கோவில் வரவு செலவு கணக்கினையும், கோவிலுக்கு வந்தோரின் கணக்கு, அவர்தம் கோரிக்கையினை சண்டிகேஸ்வரர் எடுத்துச்சொல்ல, அதற்கு செவிசாய்க்கும் விதமாய் லேசாய் சாய்ந்திருக்கும் லிங்கத்திருமேனி. 
இக்கோவிலின் தலவிருட்சம் வில்வமும், மந்தாரையும். காளி தீர்த்தமும் சூரிய புஷ்கரணியாகும். காலை 7 மணிமுதல் மதியம் 12.30 வரையும். மாலை 4.30 முதல் 8.30வரையும் கோவில் திறந்திருக்கும்..

திருமியச்சூர் கோவிலுக்கு வந்து லலிதாம்பிகையை தரிசிக்காம பதிவை முடிச்சா எப்படின்னு முணுமுணுக்காதீங்க. லலிதா சகஸ்ரநாமம் உருவான தலமாச்சே! மறப்பேனா?! லலிதாம்பிகை கோவிலையும், அவளே விரும்பி கேட்ட கொலுசின் கதையையும், லலிதா சகஸ்ரநாமம் உருவான கதையையும் அடுத்த வாரம் பார்ப்போம்..

நன்றியுடன்,’
ராஜி

8 comments:

 1. இனி நானும் இப்படி கோயில்களுக்கு கிளம்ப வேண்டியதுதான்.
  தகவல் நன்று

  ReplyDelete
  Replies
  1. வயசானால் கோவில் குளம்ன்னு கிளம்ப வேண்டியதுதான்ண்ணே.

   Delete
 2. Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

   Delete
 3. அருமை. நன்றி

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

   Delete
 4. நன்றிண்ணே

  ReplyDelete
 5. இக்கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்திருக்கிறேன்.எல்லாச் சந்நிதிகளிலும் வேண்டியிருக்கிறேன். மீண்டும் உங்கள் எழுத்தில் கோவிலை வலம் வந்த போது நான்
  என் மனைவியுடன் வலம்வந்த பேறு பெற்றேன். ஸ்ரீலலிதாம்பிகையையும்
  தரிசித்தேன். நன்றி.

  ReplyDelete