Wednesday, May 09, 2018

சிவகாசி பட்டாசுக்கு மட்டுமல்ல திருவிழாக்கும் ஃபேமஸ் - கயறுகுத்து திருவிழா

இருளை அள்ளி பூசிய நிறம், கருமேகமென பரந்து விரிந்த கூந்தல், கோரைப்பல், வெளித்தள்ளிய நாக்கு, ரத்தம் ருசித்த உதடுகள், கோபம் கொப்பளிக்கும் கண்கள், பல்வேறு கொலை ஆயுதங்களை தாங்கி இருக்கும் கைகள்..என பார்ப்போரை பயமுறுத்தும் கோலம்தான் காளிதேவியின் உருவம். இந்த உருவத்தை பார்க்கவே வேணாம். காளின்ற பேரை கேட்டாலே போதும்.  பயம் பற்றிக்கொள்ளும். ஆனா, காளிதேவி கேட்ட வரத்தை யோசிக்காமலேயே அருள்பவள். அன்னையென்பவள் கருணை மிகுந்தவள். பிள்ளைகளின்மேல் அளவுக்கடந்த பாசம் கொண்டவள். அதனாலாயே, அவளுக்கு பிள்ளைகளின் தவறு தெரியாது.  அந்த வீக்னெசை புரிஞ்சுக்கிட்டு அவள் கேட்டதை கேட்ட மாத்திரத்தில் கொடுக்குறாங்குறதுக்காக, அவளை பில்லி, சூனியம், வசியம் மாதிரியான கெட்ட காரியத்துக்கும் அவளை உபயோகிப்படுத்திக்குறாங்க. அதனாலாயே அவளை கண்டு பயந்து நம்மாளுங்களும் அவளை வழிப்படுறதையே விட்டுட்டாங்க.
காளிதேவியின் அவதாரம் நமக்கு பல உண்மைகளை உணர்த்துது. பெண் தன்னை காத்துக்கொண்டு, தன்னை சார்ந்தவங்களையும் காப்பாத்தனும்ன்ன்னும்ன்னும், தன் உரிமைக்காக பெண் போராடத் தயங்கக்கூடாது, எதுக்காகவும் கணவனை விட்டுத்தரக்கூடாதுன்னு உலகத்துக்கு உணர்த்தவே காளிதேவியின் அவதாரத்தை சிவன் நடத்தினார்.   வீரம் பொருந்திய பெண்ணை ஆண் மணக்கனும்ன்னும்,  பெண்கள் தங்கள் முடிவுகளை நல்லா யோசித்து தாங்களே எடுக்கனும், அதேநேரம், அதற்கான விளைவுகளுக்கும் அவர்களே பொறுப்பேற்கனும். என்னதான் எல்லாமும் தெரிஞ்சிருந்தாலும் கணவன் சொல்லை மனைவி மதிக்கனும் இல்லன்னா மிகப்பெரிய விளைவுகளை சந்திக்கனும்ன்னும் காளி அவதாரம் உலகுக்கு உணர்த்துது.
காளிதேவியின்  அவதாரத்தை பார்க்கலாம். படைப்புத்தொழிலில் தனக்கு உதவ பத்து பிள்ளைகளை பெற்றெடுத்தார் பிரம்மன். அவர்களில் தட்சனும் ஒருவன். சிவப்பெருமானை நோக்கி கடும்தவமிருந்து, உமாதேவியை மகளாய் பெற்று, அவள்மூலம் சிவப்பெருமானுக்கு மாமனாராகும் வரத்தினை பெற்றான். அந்த வரத்தின்படி இமயமலைச்சாரலில் காலிந்தி நதியில் வலம்புரி சங்கு ரூபத்தில் தவம் செய்துக்கொண்டிருந்த  உமாதேவியை கண்டெடுத்தார். சங்கினை கையிலெடுத்த மாத்திரத்தில் சங்கு வடிவம் நீங்கி அழகிய பெண் குழந்தை ரூபத்திற்கு மாறினாள் உமாதேவி. கண்ணின் மணியாய் உமாதேவிக்கு தாட்சாயணி என பெயர்சூட்டி தட்சன் வளர்த்து வந்தான். 
தனது தந்தையைபோலவே  ஆறு வயது முதலே  சிவப்பெருமானின்மேல் பக்தி கொண்டாள். திருமணப்பருவம் வந்ததும் தந்தையின் வரத்தினை அறிந்து சிவப்பெருமானை மணக்க வேண்டி, கடும் தவமிருந்து, சிவப்பெருமானிடம் தன்னை மணக்கும் வரம் வாங்கினாள்.  சிவப்பெருமான்  தனக்கு அளித்த வாக்குப்படி தனது மகள் தாட்சாயணியை மணக்கவேண்டி நாள்குறித்து சிவப்பெருமானுக்கு சொல்லி அனுப்பினான். சிவபெருமானும் வந்தார்.   தட்சன், கன்னிகாதான மந்திரங்களைக் கூறி அம்பிகையின் கரத்தை சிவபெருமானின் கரத்தில் வைத்து தத்தம் செய்தான். அடுத்த கணம் சிவபெருமான் திடீரென மறைந்தார். அதனால் கடுங்கோபம் கொண்ட தட்சன் சிவனை கொடிய வார்த்தைகளால் தூற்றினான். பின்னர்,  உமாதேவி முன்னிலும் கடுமையான தவம் புரிந்ததால் மனம் இளகிய சிவபெருமான் அவள் முன் தோன்றி அவளை தனது பக்கத்தில் அமர்த்திக் கொண்டு மறைந்தார்.
தனக்கு வாக்களித்திருந்தும், தான் தன் மகளை மணம் புரிந்து வைக்க தயாராயிருந்தும்,  தனக்கு தெரியாமல் தன் மகளை கவர்ந்து சென்று களவு மணம் புரிந்த காரணத்தால் சிவன்மேல் கோவம் கொண்டான். சிவனை பார்த்து என்ன ஏதுவென விசாரிக்க சென்ற தட்சனை, சிவபெருமானை கடும் சொற்களால் தட்சன் திட்டியதை கேள்விப்பட்ட பூதக்கணங்கள் தட்சனை உள்ளே செல்ல விடாமல் தடுத்தன. இதனால் ஆத்திரம் அதிகமாகி சிவனை பரம எதிரியாய் கருத ஆரம்பித்தான். தான் நடத்தும் மிகப்பெரிய வேள்விக்கு மகளையும், மருமகனையும் அழைக்காமல், முதல்கடவுளாம் சிவனுக்கு அவிர்பாகத்தை அளிக்காமல் யாகம் வளர்த்த திட்டமிட்டான். இதைக்கேள்விப்பட்ட அன்னை மிகுந்த கோபம்கொண்டு, தந்தைக்கு புத்தி சொல்ல, சிவனின் பேச்சைமீறி தட்சன் யாகம் நடத்தும் இடத்திற்கு சென்றாள். அங்கு தாட்சாயணியையும், சிவனையும் கடுமையாய் தட்சன் நிந்திக்க, அந்த கோவத்தில் யாகக்குண்டத்தில் வீழ்ந்து உயிரை விட்டாள் தாட்சாயணி.. 

இதைக்கேள்விப்பட்ட சிவன் கோவம்கொண்டு உமாதேவியின் உடலை எடுத்து வைத்துக்கொண்டு ருத்ர தாண்டவமாடினார். அவர் கோபத்திலிருந்து வீரபத்திரர் தோன்றினார். அம்பிகையின் அம்சமாக பத்ரகாளியை தோற்றுவித்தார். இருவரும் சேர்ந்து தட்சனின் யாகத்தை அழித்தனர். பின்னர், சிவனின் கட்டளைப்படி, வீரபத்திரரும், பத்ரகாளியும் மக்களை உய்விக்கும்பொருட்டு ஆங்காங்கு கோவில்கொண்டனர். அப்படி பத்ரகாளி கோவில் கொண்டதில் முதன்மையானது சிவகாசி.

விருதுநகர் மாவட்டத்திலிருக்கும் குட்டி ஜப்பான் என்றழைக்கப்படும் சிவகாசியில் எழுந்தருளியிருக்கும் பத்ரகாளியம்மன் ஆலயத்தின் கருவறையில் வீற்றிருக்கும் பத்திரகாளியம்மன் எட்டு திருக்கரங்களுடன் உடுக்கை, கட்கம், கபாலம், சூலம், ஹஸ்தம், நாகம், மணி, கிண்ணத்துடன் அருள்பாலிக்கிறாள். அன்னை கருவறையில் ஒய்யாரமாக தனது வலது திருபாதத்தை தூக்கி குத்துக்காலிட்டு, தனது இடது திருபாதத்தை அரக்கனின் தலைமேல் வைத்தவண்ணம் அமர்ந்த திருக்கோலத்தில் வீற்றிருக்கிறாள். சுத்துவட்டாரத்தில் வாழும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் குல தெய்வம் இவள். பத்ரம்-மங்களம், தன்னை நாடுவோற்கு மங்களம்தருவதால்இவள் பத்ரகாளியாகபூஜிக்கபடுகிறாள். 
தமிழகத்தில் காளிதேவி குடிக்கொண்டிருக்கும் கோவில்களில் மிகப்பெரிய ராஜக்கோபுரத்தை கொண்டது இக்கோவில். 110அடி உயரத்தில் இருக்கு இக்கோவில். அதேப்போல் தங்கத்தகட்டால் வேயப்பட்ட கருவறையை கொண்டுள்ளது. இந்த அன்னையை பௌர்ணமி, செவ்வாய், வெள்ளி, அமாவாசை முதலிய நாட்களில் அந்திசாயும் பொழுதில் வழிபடுவது நல்லது. அம்மனின் கருவறை தீபத்தில் நல்லெண்ணெய் சேர்த்து, 8 உதிரி எலுமிச்சை பழங்களை அவள் திருப்பாதத்தில்வைத்து வழிபட  வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். சிவகாசிவாழ் மக்கள் தங்கள் வியாபாரத்தில் கிடைக்கும் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட பங்கை, பத்திரகாளி அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தி வருகிறார்கள். தன லாபம் கிட்ட, எதிரிகள் தொல்லை அகல, சுபகாரியத் தடைகள் அகல செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் தொடர்ந்து 8 வாரங்கள் எலுமிச்சைபழ தீபம் ஏற்றி பத்திரகாளி அம்மனை வழிபட வேண்டும். குழந்தைகளின் பாலாரிஷ்ட நோய்களும், திருஷ்டி கோளாறுகளும் இவளை வழிபட நீங்குகிறதாம்.

இத்திருக்கோயில் ராஜக்கோபுரம் ஏழு நிலைகளுடன் கம்பீரமாக நம்மை வரவேற்கிறது. ஆலய வெளிப் பிராகாரத்தில் நாகராஜர், ஐயப்பன், அனுமன், லட்சுமி நாராயணர் சமேத அஷ்டலட்சுமி சந்நதிகள் உள்ளன. இத்தல விநாயகர் பஞ்சமுக விநாயகர். இவர் ஆலய வெளிச்சுற்று பிராகாரத்தில்தான் உள்ளார். இவரை சங்கட ஹர சதுர்த்தி நாட்களில் வழிபட்டு வரலாம். மேலும் தொடர்ந்து 8 சங்கடஹர சதுர்த்தியில் அறுகம்புல் சாத்தி வழிபட வினைகள் அறுபட்டு நம் சங்கடங்கள் யாவும் தீரும். அஷ்டலட்சுமி சந்நதியில் வெள்ளிக்கிழமை மற்றும் அட்சய திருதியை நாட்களில் பசுநெய் தீபமேற்றி, தாமரை, மரிக்கொழுந்து மாலை சூட்டி லட்சுமியின் துதியை பாராயணம் செய்து வந்தால், வறுமை அகலும்.  பைரவரை தேய்பிறை அஷ்டமி நாளில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் திரண்ட செல்வம் வந்து சேரும்.

இத்தல வீரபத்திரர், அனுமன் சந்நதியில் பௌர்ணமி நாளில் வெண்ணெய் சாத்தி, வெற்றிலை மாலை சூட்டி, நெய் தீபம் ஏற்றி வழிபட உடல் நோய்கள், மன நோய்கள் அகலும். இங்கு ஆலய உட்பிராகாரத்தில் கன்னி விநாயகர், பைரவர், வீரபத்திரர், மாடசுவாமி, வெயிலுகந்த அம்மன், இருளப்ப சுவாமி, கருப்ப சுவாமி, பேச்சியம்மன் சன்னிதிகள் இருக்கு. பத்திரகாளியம்மனின் சகோதரி பேச்சியம்மன். இந்த அம்மனுக்கு பஞ்சமி நாட்களில் நெய் தீபம் ஏற்றி, தொடர்ந்து 11 பஞ்சமி நாட்கள் சிவப்பரளி மலர்களால் அர்ச்சித்து வந்தால், சொல்வாக்கும், நல்ல செல்வாக்கும் கிடைக்கும். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், இத்தல அம்பாள் பத்திரகாளியம்மனிடம், தொட்டில் பிரார்த்தனை செய்து, அவளது கருவறை தீபத்தில் நல்லெண்ணெய் சேர்த்து வழிபட்டு வர உடனே குழந்தை பாக்கியம் கிட்டும் .
இத்தல ஆலயத்தின் உள்ளே பத்திரகாளி அம்மனின் எதிரே உள்ள நந்தவனத்துக்குள் ஆதி பத்திரகாளி பீடம் உள்ளது. முதன் முதலில் இத்தல பத்திரகாளி அம்மன் அமர்ந்த ஆதி பீடம் இதுவாகும். இந்த நந்தவனத்திற்குள் ஆண்களுக்கு மட்டுமே அனுமதி. பெண்களுக்கு அனுமதி இல்லையாம். உடல் உறுப்புகள் நலம் அடையும் பொருட்டு பத்திரகாளியம்மனிடம் வேண்டிக்கொண்ட பக்தர்கள், அவள் அருளால் நலம் பெற்றதும் மண், வெள்ளியினால் ஆன கை, கால் போன்ற உடல் உறுப்புகளையும் காணிக்கையாக செலுத்துகின்றனர். வீடு வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள், மண்ணில் செய்த வீடு போன்ற உருவத்தை இங்கு அம்பாளுக்கு சமர்ப்பிக்கிறார்கள். 

இங்கு பத்து நாள் நடைப்பெறும் சித்திரை பொங்கல் திருவிழா மிக விசேசமானது. கொடியேற்றத்துடன் தொடங்கும் இந்த விழா, பொங்கல் வைத்தல், அக்னி சட்டி சுமத்தல், முளைப்பாரி எடுத்தல்ன்னு களைக்கட்டி பத்தாம் நாளன்று  கயிறு குத்து திருவிழா,  தேரோட்டமென வெகு சிறப்பா முடியும்.. கயிறுகுத்து என்பது உடம்பில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி, முதுகில் வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கம் வரை உடலில் ஊசியால் குத்தப்பட்ட நூலோட் அன்னையை வழிபடுவதாகும். உடல் நோய், கண் திருஷ்டி அகல இந்த நேர்த்திக்கடன்.


ஜாதகரீதியாக செவ்வாய்  எந்த லக்னத்தை பார்த்தாலும் அந்த ஜாதகத்திற்குரிய குழந்தைகள் துறுதுறுவென இருப்பாங்க. இத்துடன் ராகு போன்ற கிரகங்கள் பார்த்தால், குழந்தைகளின் பிடிவாதம் பெருகும். பிள்ளைகளை நல்வழியில் கட்டுப்படுத்தவும், குறைந்த அறிவுத்திறன், மெதுவாக புரிந்து கொள்ளும் திறன் போன்ற பாதிப்பு உள்ள குழந்தைகளை இத்தலம் அழைத்து வந்து,  அமாவாசை, பஞ்சமி, பவுர்ணமி நாட்களில் பத்ரகாளிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் குறைகள் அகலும். இத்தல வெயிலுகந்த அம்மனுக்கு இளநீர், தயிர், பன்னீர் அபிஷேகம் செய்து வழிபட வெயிலின் தாக்குதலால் ஏற்படும் நோய்கள் அண்டாது. மேலும் வெயிலுகந்த அம்மனுக்கும், பத்திரகாளி அம்மனுக்கும் தொடர்ந்து 18 நாட்கள் இளநீர் அபிஷேகம் செய்து வழிபட்டால், கண்டிப்பாக மழைபொழியும் என்கிறார்கள்.


சிவகாசியை பொறுத்தவரை சித்திரையில்தான் தீபாவளி. இந்த பத்து நாள் திருவிழாவை வெகுவிமர்சையாக கொண்டாடி வருகின்றனர். சித்திரை பொங்கலின் பத்தாம் நாள் திருவிழாவான, கயறுகுத்து, தெப்பம், தேரோட்டம்ன்னு இன்னிக்குதான் விழாவின் ஹைலட்டே. சிவகாசியின் கொண்டாட்டத்தில் நாமும் பங்கெடுத்த மகிழ்ச்சியுடன் கிளம்பிக்குறேன்.


 ஓம் மஹாகாள்யை வித்மஹே 
ச்மசான வாஸின்யை தீமஹி
              தந்நோ கோர ப்ரசோதயாத்

தட்சன் யாகம் அழகு தமிழில் இங்கு ஒருத்தர் பகிர்ந்துள்ளார். படிச்சதும் பிடிச்சுட்டுது.. முடிஞ்சா ஒரு எட்டு பார்த்துட்டு வாங்க.
நன்றியுடன்,
ராஜி

14 comments:

 1. அழகிய படங்களுடன் விளக்கங்களும் அருமை சகோதரி...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

   Delete
 2. அடேங்கப்பா எம்பூட்டு விசயம் ???
  ஸூப்பர் சகோ

  ReplyDelete
  Replies
  1. எல்லாம் பத்திரிகையிலும், முகநூலிலும் படிச்ச விசயம்ண்ணே

   Delete
 3. படங்கள் அழகு
  பகிர்வும் அருமை
  நன்றி சகோதரியாரே

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

   Delete
 4. விரிவான தகவல்கள் கேள்விப்படாததும் கூட.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. இப்ப தெரிஞ்சுக்கிட்டீங்களே கீதாக்கா.

   Delete
 5. அரிய கோயிலைப் பற்றிய பதிவு. இக்கோயிலுக்குச் சென்றதில்லை. செல்லும் நாளுக்காகக் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. பதிவுக்காக படம் தேடும்போது கோவிலின் அழகும், திருவிழா கொண்டாடப்படும் விதமும் ரொம்பவே கவர்ந்திட்டுது. எனக்கும் இக்கோவிலுக்கு போகனும்ன்னு ஆசை வந்திட்டுதுப்பா.

   Delete

 6. //தட்சன் யாகம் அழகு தமிழில் இங்கு ஒருத்தர் பகிர்ந்துள்ளார். படிச்சதும் பிடிச்சுட்டுது.. முடிஞ்சா ஒரு எட்டு பார்த்துட்டு வாங்க.//மெய் சிலிர்த்தது நன்றி சகோதரியாரே

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகைக்கும் முதல் கருத்துக்கும் நன்றி சகோ

   Delete
  2. உங்கள் ப்ளாக்கின் பல வருட வாசகன்,முதல் முறையாக கருத்து பதிவிட்டேன்..... சகோதரி

   Delete