Friday, May 18, 2018

கொலுசுக்கு ஆசைப்பட்ட லலிதாம்பிகை - அறிவோம் ஆலயம்


பொதுவா வீடுகளில் காலையிலும், மாலையிலும் விளக்கேத்தி வழிபடும் நேரத்தில் சொல்லப்படும் துதிகளில் லலிதா சகஸ்ரநாமமும் ஒன்னு. ஸ்ரீ மாத்ரே நமஹ’ என ஆரம்பிக்கும் இந்த அம்பிகை துதி, மற்றெல்லா துதிகளையும்விட  அபாரமான கவித்துவமும், சொல்லழகும், ஓசை நயமும் கொண்டது. சாக்த நெறியின் தத்துவங்கள் பெரும் வீச்சோடும், காம்பீர்யத்தோடும் இதில் முன்வைக்கப் படுகின்றன. வேதாந்த தத்துவ உண்மைகளை மந்திரம், யந்திரம், தந்திரம் ஆகிய நுட்பமான குறியீடுகளாக வெளிப்படுத்துவது சாக்த உபாசனை. பிரம்ம வித்தை என்று வேதாந்தம் கூறும் உண்மைகளையே சக்தி உபாசகர்கள் ஸ்ரீவித்யை என்று அழைக்கிறார்கள். இந்தக் குறியீடுகளை சூனியத்தில் மிதக்க விடாமல் அவற்றுக்கு அழகும்,முழுமையும் அளிக்கும் விதமாகவும் லலிதா சகஸ்ரநாமம் அமைந்துள்ளது.
லலிதா சகஸ்ரநாமம் அழகு தமிழில்...
லலிதா சகஸ்ரநாமத்தின் சிறப்பே, ஒருமுறை சொல்லப்பட்ட அம்பிகையின் நாமம் இன்னொரு முறை சொல்லப்பட்டிருக்காது. இதில் மட்டும்தான் அம்பிகையின் அழகு, தோற்றம், வரலாறு, அவளை வழிபடவேண்டிய முறை, யந்திரம், மந்திர பரிவார தேவதைகளின் நிலை, வழிபடால் கிடைக்கும் பலன்கள் என அனைத்தும் வாக்தேவதைகளால் சொல்லப்பட்டிருப்பதால் இது நால்வகை வேதத்துக்கு ஒப்பானதாகும். 
பண்டாசுரனின் தொல்லை அதிகரிக்கவே அதை தாங்கமுடியாத தேவாதி தேவர்கள் யாகம் வளர்த்தி அம்பாளை வேண்டினர். அம்பிகை எதும் பதிலளிக்காமல் போகவே தங்கள் உயிரை யாகக்குண்டத்தில் அர்ப்பணிக்க தயாராகினர். அப்பொழுது ஞானமாகி குண்டத்திலிருந்து ஆதிசக்தியானவள் ஸ்ரீலலிதாவாக தோன்றினாள். லலிதாம்பிகை லட்சுமி, சரஸ்வதி, பார்வதி என மும்பெருந்தேவிகளும் இணைந்த அம்சம்.   பண்டாசுரனுடன் போரிட்டு அவனை அழித்து தேவர்களை காத்தாள். அசுர வதம் முடிந்தும் உக்கிரமாய் இருந்த அன்னையை சாந்திப்படுத்தும் பொறுப்பு சிவனிடம் வந்து சேர்ந்தது. உலக நலன் வேண்டி உக்கிரம் குறைய, அன்னையை, மனோன்மணின்ற  பெயருடன்  ஸ்ரீபுரவாசினியாக பூலோகம் சென்று தவம் செய்ய பணித்தார். அன்னையும் இத்தலம் வந்து தவமிருந்து தன் உக்கிரம் குறைந்தாள். 
உக்கிரம் குறைந்த அன்னை, தன் அழகிய முகத்திலிருந்து  வஸினி, காமேஸ்வரி, அருணா, விமலா,ஜெயினீ, மோதினீ, சர்வேஸ்வரீ, கௌலினி என்ற எட்டு ‘வசின்யாதி வாக் தேவதைகளை உண்டாக்கி, 1008 தனது திருநாமங்களால் வர்ணிக்கும்படி கட்டளை இட்டாள்.   ஸ்ரீ மாத்ரே எனத் தொடங்கும் லலிதா சகஸ்ரநாமம் உண்டானது. இதை அன்னை, ஞானக்கடவுளாம்  ஹயக்கீரிவருக்கு அன்னை கொடுத்தருளினார்.  சக்திகளுக்குள் ஸ்ரீலலிதா போல் வேறெந்த சக்தியும் இல்லைன்னு  சொல்வாங்க. மந்திரங்களில், வித்யையைப்போல், நகரங்களில் ஸ்ரீபுரம் போல், வித்யை உபாசகர்களில்  சிவனைப்போல், சகஸ்ரநாமங்களில் லலிதா சகஸ்ரநாமம் என மேன்மையானவைகளை பட்டியலிட்டிருக்காங்க.  இந்த ஸ்லோகம் பாராயணம், ஹோமம், அர்ச்சனை போன்ற முறைகளில் வழிபடப்படுகிறது.

நமது முதுகுத்தண்டின் அடியில், கிண்ணம் போன்ற அமைப்பு உள்ளது. இதுதான் 'மூலாதாரம்'. நாம் மனதை ஒருநிலைப்படுத்தி, சகஸ்ரநாமம் சொல்லும்பொழுது, நாபிக்கடியில் இருக்கும் சக்தியை, மந்திரத்தின் அழுத்தம் தூண்டிவிடுகிறது. தூண்டப்பட்ட சக்தியானது, மேலெழும்பி, சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞ்யை, பிறகு சகஸ்ராரம் என்கிற கடைசி நிலையை வந்தடைகிறது. சகஸ்ராரம் என்னும் சிகரத்தில்தான் சிவன் இருப்பதாகக் கூறப்படுகிறது. சகஸ்ராரத்தில், அதாவது சிகரத்தில், கவிழ்ந்த நிலையில் உள்ள கிண்ணத்தில் அமிர்தம் இருக்கு. கீழிருந்து எழும்பிய சக்தி, சிகரத்தில் உள்ள சிவனோடு சேரும்போது, கவிழ்ந்த நிலையில் உள்ள கிண்ணத்திலிருந்து, அமிர்தம் கொட்டுவதாக அறியப்படுகிறது. அப்பொழுது, அவள் சிவசக்தி ஸ்வரூபிணியாகவே நமக்குக் காட்சி கொடுப்பாள் என்று கூறப்படுகிறது.
கங்கை முதலிய புண்ணிய நதிகளில்  மூழ்கிய பலன் கிடைக்கும். காசியில் கோடி லிங்கப் பிரதிஷ்டை செய்த பலன், சூரிய, சந்திர கிரகண  காலத்தில் கங்கைக் கரையில் அசுவமேத யாகம் செய்த பலன்,  பஞ்சக்காலங்களில்  கிணறு வெட்டுதல், தவறாது அன்னதானம் செய்ததன் பலன், இவை எல்லாவற்றையும்விட மிகுந்தப் புண்ணியமானது அர்த்தம் உணர்ந்து, சரியான உச்சரிப்போடு லலிதா சகஸ்ரநாமப் பாராயணம் செய்வது. அவத்தை நீக்கும். 
பௌர்ணமியன்று சந்திர பிம்பத்தில் தேவியை தியானம் செய்து வழிபட்டு இதனைப் படித்துவர  நோய்கள் நீங்கும். தீய சக்திகளின் உபாதைகள் விலகும். இதனைப் பாராயணம் செய்யும் பக்தனின் நாவில் சரஸ்வதி தேவி நர்த்தனம் ஆடுவாள். எதிரிகளை பேசமுடியாது வாக்ஸ்தம்பம் செய்து விடுவாள். அரசனே எதிர்த்தாலும் அன்னையின் பக்தனிடம் தோல்வி அடைவான். இதனைப் பாராயணம் செய்பவன் பார்வை பட்டாலே தோஷங்கள் விலகிவிடும். பூர்வ ஜென்ம புண்யத்தால் மட்டுமே இதனைப் பாராயணம் செய்யும் வாய்ப்பு கிட்டும். லலிதா சகஸ்ரநாமத்தில் இன்னொரு சிறப்பு இதைப் பாராயணம் செய்யும்போது நமது சமயத்தின் அனைத்து கடவுளையும் வழிபட்ட புண்ணியம் நமக்கு சேரும். எனவே லலிதா சகஸ்ரநாமத்தின் பொருள் அறிந்து பாராயணம் செய்ய முயலுங்கள், எதை அடைய விரும்புகிறீர்களோ அது தானாய் வந்து சேரும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த லலிதா சகஸ்ரநாமம் உருவான ஊர்தான் திருமீயச்சூர். திருமியச்சூரில் குடிக்கொண்டிருக்கும்  மேகநாத சுவாமி, சகலபுவனேஸ்வரர்  ஆலய அமைப்பு, வரலாற்றை பார்த்தோம்.  இன்னிக்கு, லலிதா சகஸ்ரநாமத்தை அருளிய லலிதாம்பிகை கோவில் பத்தி பார்க்கலாம். பொதுவா, எல்லா கோவில்களிலும், ஆண்பால் தெய்வத்தை வணங்கிய பிறகே பெண்பால் தெய்வத்தை வணங்குதல் முறை., மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் மாதிரி வெகுசில கோவில்களில் மட்டுமே இந்த நியதி மாறுபடும். அந்த வெகுசில கோவில்களில் திருமீயச்சூர் லலிதாம்பிகை கோவிலும் ஒன்று. 
ராஜகோபுரத்தை கடந்தால், நமக்கு வலப்பக்கத்தில்  வெளிப் பிரகாரத்தில் தெற்கு நோக்கி இருக்கும் தனிச்சன்னிதியினுள் வலது காலை மடித்து வைத்த நிலையில் அமர்ந்திருக்கும் லலிதாம்பிகையை தரிசிக்கலாம். இவளுக்கு சௌந்தரநாயகி, சாந்தநாயகின்ற வேறு பேர்கள் உண்டு. அபய, வரத ஹஸ்த முத்திரையுடன், வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டு   இவள் ஸ்ரீசக்ர பீடத்தில் ராஜசிம்மாசனத்தில் அமர்ந்து  அருளாட்சி செய்கிறாள்.  இதுப்போல மடித்து வைத்தை காலோடு அமர்ந்த கோலத்தில் இறைவியை காண்பது அரிதினும் அரிது.  அவள் அமர்ந்திருக்கும் கருவறை ஒரு ராஜ தர்பாரை நமக்கு நினைவூட்டும். 
லலிதாம்பிகையிடம்  உபதேசம் பெற்றவர் ஹயக்கீரிவர். ஸ்ரீஹயக்ரீவர் அகத்தியருக்கு லலிதா சஹஸ்ரநாமம் உபதேசம் செய்யும் வேளையில், ஸ்ரீலலிதாம்பிகையை தரிசிக்க சிறந்த இடம் எது என அகத்தியர் வினவினார். 'அருணனும், சூரியனும் வழிபட்ட திருமீயச்சூர் சென்று, அங்கு லலிதா சஹஸ்ரநாம ஸ்தோத்திரம் சொன்னால் மிகுந்த பலன் கிடைக்குமென  ஸ்ரீஹயக்ரீவர் கூறிளினார். அவ்வாறே அகத்தியரும், தன் மனைவி லோபமுத்ராவுடன்   இத்தலம் வந்து லலிதா சஹஸ்ரநாமம் ஜபித்து, அர்ச்சனை செய்து அன்னையின் தரிசனம் பெற்றார். அகத்தியர் பெருமானும் இத்தலத்தில் அன்னையை ஆராதித்து அழகிய செந்தமிழில் ஸ்ரீலலிதா நவரத்தின மாலையைப் பாடியுள்ளார். பௌர்ணமி தினத்தன்று ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம், ஸ்ரீலலிதா நவரத்தின மாலை என இவற்றை மனமுருக பாட அன்னையின் அருள் கிடைக்கப் பெறலாம்.
முத்து, வைரம், வைடூரியம், கோமேதகம், மரகதம், பவளம், புஷ்பராகம், மாணிக்கம், நீலமென்ற நவரத்தினங்களை அம்பிகையாய் நினைத்து அவளை வர்ணித்து அழகு தமிழில்  பாடப்பட்டதே  லலிதா நவரத்ண மாலையாகும்.  
ஆபரணங்கள் பல அணிந்திருந்தும், அன்னைக்கு கொலுசு அணியாததால் பெரும் மனக்குறை ஏற்பட்டது போலும். தன் மனக்குறையை தீர்த்துக்கொள்ள, பெங்களூரை சேர்ந்த பக்தை ஒருவரின் கனவில் தோன்றிய அன்னை,  ”தான் எல்லாவிதமான அணிகலன்களையும் அணிந்துள்ளதாகவும், கொலுசு மட்டும் அணியவில்லை, அதனை தனக்கு அணிவிக்குமாறு கூறி மறைந்திருக்கிறார். வைணவப்பெண்ணான அந்த அம்மாள், சைவக்கடவுள் தன் கனவில் வந்ததால் குழப்பமும், ஆனந்த அதிர்ச்சியும் அடைந்த அந்த அம்மாள், தனது குழப்பம் தீர,  எல்லா ஊர் அம்மன் படங்களையும் வரவைத்து ஆராய்ந்து இருக்கிறார்
தன் கனவினில் வந்தவள் திருமீயச்சூரில் ஆட்சி செய்யும் லலிதாம்பிகை என்பதை அறிந்து, அழகான கொலுசொன்றை செய்துக்கொண்டு  திருமீயச்சூர் வந்து அங்கிருந்த கோவில் நிர்வாகிகளிடம் தனது கனவினை கூறி கொலுசை கொடுத்தார். பால், பழம் என பலவித அபிஷேகங்களால் கொலுசினை மாட்டும் துளை அடைத்துவிட்டிருந்த காரணத்தால், பூசாரி, கொலுசினை அம்மன் பாதத்தில் அணிவிக்க முடியாது, எனக்கூறி பக்தையினை சந்தேகித்தனர். பக்தையும் விடாப்பிடியாய் தன் கருத்தை முன்வைக்க, அம்மனின் கால்களை பரிசோதிப்பதென முடிவானது. 

ஆராய்ச்சியின் முடிவில் அம்மன் பாதத்தில் கொலுசிட வசதியாய் துவாரம் இருந்ததைக் கண்டு அனைவரும் ஆச்சர்யத்தில் மூழ்கினர். இதன் பின்னரே அன்னையின் திருவிளையாடலை புரிந்துக்கொண்டு அம்பாளுக்கு கொலுசு அணிந்து மகிழ்ந்தனர். தான் பிறந்த பலனையும் அடைந்ததாக கொலுசிட்ட பெண்ணும் மகிழ்ந்தார். அன்றிலிருந்து இங்கிருக்கும் அம்பிகைக்கு நேர்த்திகடனாய் கொலுசு அணிவிப்பது வழக்கமானது. 
இக்கோவிலில் இக்கோவிலில் விஜயதசமியன்று, லலிதாம்பிகைக்கு எதிரில் பெரிய வாழை இலையில் சர்க்கரை பொங்கல், தயிர்சாதம், புளிசாதம் படையலாய் படைக்கப்படும்,  15 அடி நீளம், 4அடி அகலம், 1 1/2அடி ஆழத்தில் இருக்குமாறு தயார் செய்யப்படும் இந்த படையலின் நடுவே, பள்ளம் பறித்து இரண்டு டின் நெய் குளம்போல்  கொட்டப்படும்.  அம்மனுக்கு அபிஷேகம் முடிந்து திரை விலக்கப்படும்போது அம்மனின் உருவம் நெய் குளத்தில் தெரியும், இதைக்காண மக்கள் திரண்டு வருவர்.  லலிதாம்பிகை கோவிலின் தலவிருட்சம் வில்வம், தீர்த்தம் சூர்யபுஷ்கரணியாகும்.   இத்திருக்கோவில் திருவாரூர் மாவட்டத்திலிருக்கும் நன்னிலம் அருகே இருக்கும் பேரளத்திலிருந்து 2கிமீ தூரத்திலிருக்கு. காலை 7 மணி முதல் 12.30 வரையும், மாலை 4.30முதல் இரவு 8.30 வரை திறந்திருக்கும். 
எவர் எத்தினமூம் இசைவாய் லலிதா
நவரத்னமாலை நவின்றிடுவார்
அற்புதசக்தி எல்லாம் அடைவர்
சிவரத்தினமாய் திகழ்வரே!!
நன்றியுடன்,
ராஜி(காந்திமதி)

12 comments:

 1. சுவாரஸ்யமான,
  வெள்ளிக்கிழமைக்கேற்ற,
  வழக்கம்போல விவரமான
  பதிவு.

  ReplyDelete
  Replies
  1. வெள்ளிக்கிழமை என்றால் பக்திமணம் நமது தளத்தில் வீசவேண்டும் . சகோதர்கள் அனைவருக்கும் நலம் பெருகவேண்டும் ...

   Delete
 2. அருமை.அற்புத அம்பிகை தரிசனம்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி..அம்மனின் அருள் அனைவருக்கும் பூரணமாக செல்லவேண்டும் ...

   Delete
 3. அருமை .நன்றி

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் ,கருத்துக்களுக்கும் நன்றி ..

   Delete
 4. பிரமிப்பாக இருக்கிறது தகவல் களஞ்சியம்.

  ReplyDelete
  Replies
  1. பிரமாண்டம் தொடரும் ...

   Delete
 5. அண்மையில்கூட இக்கோயிலுக்குச் சென்றுவந்தோம். அருமையான கோயில். அம்மனைப் பற்றி அரிய செய்திகள். கோஷ்ட சிற்பமாக அம்மையப்பன் நின்ற கோலத்தில் மிகவும் அழகாக இருப்பர். இக்கோயிலில் பார்க்கவேண்டிய முக்கிய சிற்பங்களில் இது முக்கியமானது. என் தளத்தில் இதனைப் பற்றி எழுதியுள்ளேன்.

  ReplyDelete
  Replies
  1. ஷேத்ரபுராணேஸ்வரர் பத்திதானே?! அவரை பத்தி போன வெள்ளிக்கிழமையே சொல்லியாச்சுப்பா. நீங்க பார்க்கலைன்னு நினைக்குறேன். சில கோவில்கள் மனசுக்கு அமைதியை கொடுக்கும். திரும்ப திரும்ப போகனும்ன்னு ஆசை வரும். இனி ஒருமுறை போக ஆசைப்படும் கோவில் இந்த திருமீயச்சூர் லலிதாம்பிகை கோவில்ப்பா.

   http://rajiyinkanavugal.blogspot.com/2018/05/blog-post_11.html

   Delete