Wednesday, May 30, 2018

கற்கை நன்றே, கற்கை நன்றே - உலகின் மிக ஆபத்தான பள்ளிக்கூடங்கள் .

பெரும்பாலும் நாமலாம் படிக்கும்போது சிலருக்கு ஸ்கூல் சொந்த ஊரிலேயே இருக்கும்.  ஆனா பலருக்கு  வீட்டுல இருந்து பலமைல் தூரம் வரைக்கும் நடந்து போனாதான் ஸ்கூல் வரும். இந்த  ஸ்கூல்களுக்குலாம் பெரும்பாலும் நடந்தே செல்வோம். எப்பவாவது அந்த பக்கமா போகும் மாட்டுவண்டி, சைக்கிள்ல தொத்திக்கிட்டு போன அனுபவமும் பலருக்குண்டு.  ஸ்கூலுக்கு போகும்போது ஆண் பெண்ன்னு பேதமில்லாம கும்பல்கும்பலா கதைபேசிக்கிட்டு நடந்து போவோம்.  இரட்டைச்சடை, நீலப்பாவாடை, வெள்ளை சட்டை, ஒன்பதாவதிலிருந்து வெள்ளை ஜாக்கெட், தாவணியுடன் பெண்களும்,  வெள்ளை சட்டை காக்கி ட்ரவுசர் பத்தாவதுக்கு மேலன்னா பேண்ட் இதான் ஆண்பிள்ளைக்கான யூனிபார்ம். போட்டுக்கிட்டு மஞ்சப்பை இல்லன்னா வயர்கூடையில் புத்தகத்தை வச்சிக்கிட்டு நெல்லிக்காய், கொய்யா, மாங்காய் பத்தைக்கு தொட்டுக்க மிளகாய் தூள், உப்பு சேர்த்து எடுத்துக்கிட்டு நடந்ததுலாம் இன்னமும் மனசை விட்டு அகலாத ஓவியம். 

அநேகமாக தமிழ்நாடு முழுக்க  அந்த காலக்கட்டங்களில் ஒரே சீருடடையாதான் இருந்தது.  பள்ளிக்கூடங்கள் என்னிக்கு வியாபார தலமாகி தனியார் கைக்கு  போனதோ அன்றிலிருந்து  அவங்களுக்கு வரும் கமிசன் காசுக்காக வருஷம் ஒரு யூனிபார்ம்,  வீட்டு முற்றத்துக்கே  வண்டி, சுமக்க முடியா புத்தகம், நோட்டு, மினியேச்சர், புராஜெக்ட் என  கல்வி இப்ப அமர்க்களப்படுகிறது.  பல இடங்களில் திணிக்கப்பட்ட புத்தகமுட்டைகளுடன் பள்ளிக்குழந்தைகளும் ஒரே ஆட்டோவில் சவாரி செய்வது கொடுமை. காலை இதில்லாம ஸ்கூல் பஸ், நைட்டி போட்ட அம்மாக்களுடனும், அலுவலக வேலைக்கிடையே வரும் அப்பான்னு ஸ்கூல் பில்ளைகள் இருக்கும் வீடு காலை நேரத்தில் அல்லோகலப்படுது. 
ஸ்கூல் பஸ் வசதி இல்லாத இடங்களிலும், குழந்தைகளை கொண்டு போய் விட்டுட்டு நேரத்துக்கு கூட்டி வரும் வசதி இல்லாத நடுத்தர குடும்பங்களில் உள்ளவர்கள்லாம்  ஆட்டோக்களை பேசி 7 இல்ல 8 குழந்தைகளை ஒரே ஆட்டோவில் அனுப்புவாங்க. இதை பார்த்தும் பாராததுமாய் அலட்சியமா கடந்து போய்டுறோம். ஆட்டோக்களின் சைடுல புத்தகப்பைகள் தொங்க, ஆட்டோக்களின் கம்பிகளில் உக்கார்ந்திருக்கும் குழந்தைகளின் பின்புறத்தை காணும்போது நமக்கு திக் திக்ன்னு இருக்கும். சிலநேரம் கோவமும் வரும். எல்லா ஆட்டோ ஓட்டுறவங்களும் நல்லவங்களாய் இருப்பதில்லை. சிறு குழந்தைகளின் அறியாமைய பயன்படுத்திக்கிட்ட சில ஆட்டோக்காரங்க குழந்தைகள்கிட்ட தப்பா நடந்துப்பாங்க. ஊரில் இதுமாதிரி எத்தனை விசயங்கள் நடக்குதென்பதுக்கு பத்திரிக்கை செய்திகளே சாட்சி . இதெல்லாம் பார்க்கும்போது நமது சின்னவயதில் இவ்வளவு ரிஸ்க் எடுத்ததில்லையே என கூட தோன்றும் ,
முன்னலாம் சிலர் தங்கள் குழந்தைகளை சைக்கிள் ரிக்சாவில் அனுப்புவாங்க.  அதுவும் கொடுமையான விஷயமே.  இப்பலாம் ரிக்சா இல்லாததால்  ஆட்டோவில் அனுப்புறாங்க. இதெல்லாம் பார்க்கும்போது இன்றைய தலைமுறையினர் கஷ்டப்படுவதாகவே நமக்கு தோணும். காரணம் காலையில் ஒரு குழந்தையை எழுப்பி பள்ளிக்கு அனுப்புவது என்றால் வீடே போர்க்களமாக இருக்கு.  காலையில் எழுப்புவதிலிருந்து அவர்களை தயார் செய்து, காலை சாப்பிட வைத்து, பேக் மற்றும் லன்ச் பேக் செய்து கொடுத்து ஸ்கூல் வேன், ஆட்டோவில் ஏற்றியோ, ஏற்றிவிடுவதற்குள் போதும் போதும் ஆகிடுது. ஆனா,  கல்வி செல்வத்துக்காக தினம் தினம் மரணதேவனை சந்தித்து ஸ்கூலுக்கு போகும் குழந்தைகள்  இந்த காலத்திலும் இருக்குன்னு சொன்னா நம்பமுடியுமா?! டிஜிட்டல் உலகம்ப்பா இதுன்னு நாம நினைப்போம் ஆனா அதான் உண்மை. ஆபத்தான பள்ளிகள் பத்தி இன்றைய பதிவில் பார்க்கலாம் .
நாம பார்க்கிற இந்த இடம் சைனாவிலுள்ள சிச்சுவான் (Sichuan ) மாநிலத்தில் உள்ள அதுலெர்(Atuler ) கிராமம்.  இவர்களை பள்ளிக்கு கொண்டு செல்லும் இந்த மரணப்பாதை  பீஜிங் இணையதளத்திலும், செய்தித்தாள்களிலும் வெளியானபிறகே உலகமெல்லாம் வைரலாக பரவியது. குழந்தைகள் அங்கே ஏறி செல்வதற்கும் இறங்கி வருவதற்கும், மூங்கில்களிலான ஏணிப்படிகள் போன்ற அமைப்பு இருக்கு.அதுலதான் ஏறி, இறங்குதுங்க. இதும்கூட வேட்டையாடுபவர்களால் அமைக்கப்பட்டது. அந்த பாதையைத்தான் பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்கள் பயன்படுத்துகிறார்கள்.  மழையிலும் வெயிலிலும் காய்ந்து, அதன் உறுதித்தன்மை   கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது என்கின்றனர் இங்கு சென்று பார்வையிட்டவர்கள். 
இந்த புகைப்படத்தை எடுத்தவர் சீனாவின் சென்-ஜீ சிறந்த புகைப்படைகளைஞரான இவர், உலக புகைப்பட கண்காட்சியில் இந்த படங்களை வெளியிட்டபோதுதான் அது உலக மக்களின் கவனத்தை ஈர்த்தது. பள்ளி செல்ல கிட்டத்தட்ட 800 அடி உயரமான மலையிலிருந்து கிழிறங்கி திரும்பவும் அதே 800 அடி உயரமான மலையில் ஏறி செல்லவேண்டும்.  இதற்கு தினமும் ஏறுவதற்கு ஒன்றரை மணி நேரமும் இறங்குவதற்கு ஒன்றரை மணிநேரமுமாக ,ஒருநாளைக்கு மொத்தம் மூன்று மணிநேரம்  செலவாகுது. அதுமில்லாம குழந்தைங்க சோர்வு அடைஞ்சிடுதுங்க. ஆனாலும், கல்வியின் அவசியம் கருதி பெற்றோர்களும் எதுவும் செய்யமுடியாத நிலையில் இருக்கிறார்கள்.  இதில் கொடுமை என்னவென்றால் 6 வயது குழந்தை கூட புத்தக பையை சுமந்து கொண்டு மலையேறி செல்வதுதான். 
மனிதாபிமானம் உள்ள சிலரின் தூண்டுதல்களால் ,லிப்ட் வசதி செய்து கொடுக்க முன்வந்தாலும், விவசாயம் மலையில் விளையும் பொருட்களை நம்பி மட்டுமே வாழ்க்கையை நடத்தி வரும் இவர்களுக்கு அந்த லிப்டக்கான மின் கட்டணம் செலுத்தக்கூட வசதி இல்லை. அவர்களுடைய ஒருநாள் சராசரி செலவு 1 டாலருக்கு குறைவாகவே உள்ளது. இப்பொழுது தனிமைப்படுத்தப்பட்ட இந்த கிராமத்தினரின் மரண முனை பயணம் ஊடகங்கள் மூலம் வைரலானபிறகுதான் சில அரசு அதிகாரிகள் உதவ முன்வந்ததாக சொல்கின்றனர் இந்த கிராமவாசிகள் . 
இதை வெளிச்சத்துக்கு கொண்டுவந்த சென் -ஜீ தன்னுடைய அனுபவத்தை கூறும்போது , முதன் முதலாக எனது வாழ்க்கையில் 6 வயதிலிருந்து 15 வயது வரையிலான குழந்தைகள் செங்குத்தான மலைப்பாதைகளில் எந்தவித பிடிமானமுமின்றி எனக்கு முன்னே ஏறி செல்வதைப்பார்த்து என் மூச்சே நின்றுவிடும் போல இருந்தது. கிராமப்புறங்களின் வேதனைமிக்க யதார்த்தங்களை பார்த்து நெஞ்சம் கலங்கியது. தன்னுடைய புகைப்படங்கள் அவர்களுடைய வாழ்க்கையை மாற்ற உதவும் என நம்பி அந்த மலையேறி சுமார் மூன்று நாட்கள் அவர்களுடன் இருந்ததாகவும், மலைப்பாதையினை இறங்கும்போதும்,  ஏறும்போதும் 100% கவனமாக இருக்கவேண்டும். ஒரு நொடி கவனக்குறைவினால்கூட அதள பாதாளம் நம்மை வரவேற்கும். சில இடங்களில் என்னுடைய நெஞ்சே வெடித்துவிடும்போல் இருந்தது.  அவ்வளவு குறுகலான எந்தவித பிடிமானமும் இல்லாமல் இருந்தது எங்களுடைய குழுவில் சிலர் இதில் ஏற மறுத்துவிட்டனர். சிலருக்கு இந்த பாதையை பார்த்து கண்ணீரே வந்துவிட்டது என்று கார்டியன் பத்திரிகையில்  இந்த பாதையை பத்தி விவரிக்கின்றார் .
மலையுச்சியில் 72 குடும்பங்கள் வாழ்கின்றன. அவர்களுக்கும் ஒரு தலைவர் இருக்கிறார். அவர்பெயர் அபி ஜிடி (Api Jiti),நல்ல மிளகு வால்நட் மற்றும் சில பருப்புவகைகளையும் கிராம்பு முதலியவற்றையும் இங்கே விளைவிக்கின்றனர். மலை பாதையில் செல்லுவது பற்றி அவர் குறிப்பிடுகையில்  உத்தேசமா ஒரு 7 பேருக்கு மேல பிடி தவறி கீழ விழுந்து இறந்துள்ளார்கள்.   பலர் காயமடைந்துள்ளனர்.  நான்கூட ஒருமுறை ஒரு பள்ளத்தாக்கில் விழுந்து காயத்துடன் உயிர்பிழைத்துவிட்டேன் என சாதாரணமா சொல்றார் அந்த கிராம தலைவர். 100 ஆண்டுகள் பழமையான அந்த மர ஏணியில் பிடித்தளர்ந்தால் மரணம் நிச்சயம். இப்பொழுது படிப்பின் அவசியம் கருதி நாங்கள் எங்கள் பிள்ளைகளை கட்டாயமாக பள்ளிக்கூடத்திற்கு அனுப்பவேண்டியதாக உள்ளது. எங்களுக்கு வேறுவழி தெரியவில்லை என்று செய்தியாளர்களிடம் கூறினார் அந்த கிராம தலைவர் .
இப்ப, அரசு நிர்வாகம் இவர்களுக்கு இரும்பு ஏணிகள் அமைத்து கொடுக்க முன்வந்துள்ளது. உலக வல்லரசு நாடுகளில் சீனாவும் ஒன்றாக விளங்கினாலும் 68 கோடி மக்கள் இன்னமும் வறுமைக்கோட்டுக்கு கீழேயே வாழ்கின்றனர். அதேசமயம் பல கிராமங்களில் இன்னமும் அடிப்படை வசதிகள் கூட இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. ஒரு நாட்டுமக்களின் வளர்ச்சியில் பூரணத்துவம் அடையாமல் ஒரு நாடு வல்லரசாக இருக்கிறது என்று கூறினால் உண்மையில் வல்லரசு என்பதன் அர்த்தமே அர்த்தமற்றதாகிடும். இந்த கிராமவாசிகளின் இப்பொழுதைய கோரிக்கை 100 வருட பழமையான இந்த மூங்கில் ஏணிகளுக்கு பதிலாக ஒரு புதிய ஏணியை அரசு செய்து கொடுத்தால் எங்களது பிள்ளைகள் நிம்மதியாக பள்ளிக்கு சென்றுவருவார்கள் என நம்புகிறோம் என்கிறார்  இப்பகுதி வாசி.

கற்கை நன்றே! கற்கை நன்றே! பிச்சை புகினும் கற்கை நன்றே’ன்ற ஔவ்வை வாக்கு இங்க மலை ஏறினாலும் கற்கை நன்றேன்னு மாத்தி பாடனும்போல!
நன்றியுடன்,
ராஜி

12 comments:

 1. இதைப் பார்க்கும்போது நமது நிலைமை எவ்வளவோ மேல். இந்தபிள்ளைகளுக்காக அரசு அவர்கள் இருப்பிடம் அருகே பள்ளி வசதி கொடுக்கலாமே.

  ReplyDelete
  Replies
  1. அவர்களின் வாழ்வாதாரமே மலைகளின் மேல் விளையும் ,மிளகு ,கிராம்பு,வால்நட் போன்றவைகள்.அரசு அவர்களுக்கு லிப்ட் வசதி செய்து கொடுத்தாலும் ,அதைபராமரிக்கும் அளவுக்கு அந்த கிராமத்தில் வருவாய் இல்லை ,ஆகையால் அவைகளின் நிலைமையை கருத்தில் கொண்டு இரும்பு ஏணிகளை அமைத்து கொடுக்கும் பணிகளை செய்து கொடுக்க சம்மதித்துள்ளது என்பது கூடுதலான தகவல் ....

   Delete
 2. இதைவிட கொடுமை எதுவுமில்லை எனத் தோன்றுகிறது...

  ReplyDelete
  Replies
  1. இப்பொழுது வீட்டின் வாசலுக்கே வந்து வேனில் குழந்தைகளை ஏற்றி கொண்டு செல்கிறார்கள் ,நாம் எல்லாம் 3 கிமீ நடந்தே படித்தோமே என வருந்தியது உண்டு ..இப்படி அந்தரத்தில் தொங்கி படித்திருக்க நேர்ந்தால் நான் பள்ளிக்கே சென்றிக்க மாட்டேன் அண்ணா ...

   Delete
 3. வல்லரசு என்பதற்கான வரையறையை மாற்ற வேண்டிய நேரம்தான். கொடுமையா இருக்கு. என் பிள்ளைகள் இந்தச் சூழ்நிலையில் சென்றுவர அனுமதிக்கவே மாட்டேன். இடத்தை மாற்றிக்கொண்டு விடுவேன். முதுகுத் தண்டு சில்லிடுகிறது. அரசாங்கம் கூட ஏணிதான் ஏற்பாடு செய்து தரமுடியும் என்பது வேதனை.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சகோ ...அவர்களின் வாழ்வாதாரம் ,அந்த மலையையே சார்ந்து தலைமுறைகளாக இருக்கின்றது .உண்மையில் எல்லா வல்லரசுகளுக்கு பின்னால் மறைக்கப்பட்ட பல கதைகள் இருக்கிறது .அவைகளெல்லாம் பார்க்கும் போது, அரசியல்வியாதிகள் இல்லையென்றால் நமது இந்தியா சொர்க்க பூமி ,அவர்களின் சுயலாபத்திற்க்காக மட்டுமே சில இடங்களில் கலவர பூமியாக மாறி இருக்கின்றது.

   Delete
 4. அப்பப்பா. குழந்தைகள் படும் பாட்டினைப் பார்க்கும்போது வேதனையாக இருந்தது. நான் தினமும் வாசிக்கும் கார்டியன் இதழிலிருந்து புகைப்படத்துடன் மேற்கோள். ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. கார்டியன் பத்திரிகை போன்ற சில தரமான இதழ்களை இப்பொழுது படித்து வருகிறேன் .விரைவில் நிறைய தகவல்களை பகிர்ந்து கொள்வேன்.உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிப்பா ..

   Delete
 5. எவ்வளவு கொடுமையாக இருக்கிறது.
  ஒலிம்பிக்குக்காக மில்லியன் கணக்கில் செலவு செய்யும் சைனா இந்த மலை உச்சியிலேயே பள்ளி அமைத்து கொடுக்கலாமே...

  ReplyDelete
  Replies
  1. அமைத்து கொடுத்திருக்கலாம் சகோ ,எல்ல நாடுகளிலும் அரசியல் சுயலாபத்திற்க்காகத்தான் செயல்படுகிறது போலும் ...அந்த மக்களும் தலைமுறை ,தலைமுறையாக சூழ்நிலைக்கு ஏற்ப வாழபழகி கொள்கிறார்கள் போல ...

   Delete
 6. சைனா வல்லரசு என்று எதை வைத்துச் சொல்லுகிறது என்று தெரியவில்லை. பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது ஒவ்வொரு நாளும் பெற்றோர் பிள்ளைகள் வீட்டிற்கு நலமுடன் வந்து சேர வேண்டுமே என்று கவலைப்படவே நேரம் சரியாக இருக்கும் போல இருக்கு. அடிப்படைக் கல்விக்குச் செய்யாத அரசு வேறு எதற்குச் செலவழித்து என்னத்தை அச்சீவ் செய்தாலும் முன்னேற்றமிக்க நாடு என்று சொல்ல முடியும்? அவர்கள் இடத்திலேயே பள்ளி அமைத்துக் கொடுக்கலாமே...என்னவோ போங்க...நாமெல்லாம் சுகமா இருக்கோம்னு தெரியுது!!

  நல்ல தகவல் சகோ / ராஜி

  ReplyDelete
  Replies
  1. வல்லரசு என்பதை வச்சு தீர்மானிக்கும் அளவு எதுன்னு தெரிலயே சகோ. ஆயுதங்கள் வைத்திருப்பதா?! இல்ல பொருளாதாரத்துல முன்னேறி இருப்பதா?! கல்வியா?!ன்னு புரில..

   ஆனா கல்வி, மருத்துவம், பாதுகாப்பு இதுலாம் கிடைச்சு மக்கள் பாதுகாப்பா இருந்தா அந்த நாடுதான் வல்லரசுன்னு அறிவிக்கனும்.

   உலகில் எந்த மூலையிலும் நிம்மதி கிடைக்காது துளசியண்ணா/ கீதாக்கா

   Delete