Monday, July 02, 2018

ஒரே ஒரு ஊருக்குள்ள ஒரே ஒரு அம்மா அப்பாவாம், அவங்க ரெண்டு பேருக்கும் ஒரே நாளில் பொறந்த நாளாம்.....

பொதுவா பொண்ணுங்களுக்கு அப்பாவைதான் பிடிக்கும். எனக்கு என் அம்மாவைவிட அப்பாவைதான் ரொம்ப பிடிக்கும். அப்பா பலாப்பழம் போல.. பார்க்க கரடு முரடா இருந்தாலும் உள்ளுக்குள் பாசம் அதிகம். என் அப்பாவை சந்தோஷ் சும்பிரமணியம் படத்தில் வரும் பிரகாஷ்ராஜ் கேரக்டரும் என் அப்பாவும் ஒன்னு. கல்யாணம் கட்டிக்கொடுத்து 24வருசம் ஆனாலும் இன்னியவரைக்கும் எனக்கு தேவையானதை அப்பாதான் செய்யனும். சிலசமயம் இது கடுப்பை கிளப்பினாலும் அந்த பாசத்துக்கு அடங்கிதான் போவேன். 
என்னை ட்யூசன் கொண்டு போய் விட்டுட்டு எதிர்க்க கடையிலேயே உக்காந்திருந்து என்னைய வீட்டுக்கு கூட்டி வருவார். ஃப்ரெண்ட் யார் வீட்டுக்கும் போகக்கூடாது, ஃப்ரெண்ட்ஸ்கூட சினிமா கோவில் குளம்ன்னு போகக்கூடாது. ஆனா, வீட்டுக்கு ஃப்ரெண்ட்ஸ் வரலாம். பொழுதன்னிக்கும் புத்தகம் வச்சி படிச்சிட்டிருக்கனும். தூங்க எத்தனை மணி நேரமானாலும் காலை 6 மணிக்குள் எந்திரிச்சு 8 மணிக்குலாம் ரெடி ஆகிடனும். மெல்லிசான உடை உடுத்தக்கூடாது. மிடி, சுடின்னு போடலாம், ஆனா, லோ கட், தூக்கலான கை இருக்கக்கூடாது... இப்படி கண்டிஷன் நீளும். இதுலாம் கேக்கும்போது பத்திக்கிட்டு வரும். ஐயோடான்னு இருக்கும். 
அம்மா ரசகுல்லா போல! அத்தனை இனிமையானவங்க. அதுக்காக கண்ணே மணியேன்னு கொஞ்ச மாட்டாங்க. எந்த வேலையும் விடமாட்டாங்க. கல்யாணம் கட்டும் வரைக்கும் ஜடை பின்னி விட்டது என் அம்மாதான். அம்மா அத்தனை எளிமை. நகை, புடவைக்கு ஆசை கிடையாது. படிப்பறிவில்லன்னாலும் உலக நடப்பு அத்துபடி. யாராய் இருந்தாலும் அம்மா கேட்கும் முதல் கேள்வி சாப்பிட்டீங்களா?! அம்மாக்கு யாரும் பசியோடு இருக்கக்கூடாது. அவங்க கையால் சாப்பிட்டவங்க, இன்னொரு முறை சாப்பிட யோசிப்பாங்க. ஏன்னா போதும்ன்னு சொன்னாலும் திணற திணற சாப்பாடு போடுவாங்க. தட்டுல சாப்பாடு போட்டு சாப்பிட வச்சிட்டுதான் என்னையவே திட்டுவாங்க.  யாராவது கஷ்டம்ன்னு சொல்லி வருத்தப்பட்டா யோசிக்கவே மாட்டாய்ங்க. பணத்தை அள்ளி கொடுத்திடுவாங்க. ஞாபகசக்தி ஜாஸ்தி. அதனால எப்பவோ செஞ்ச சின்ன தப்பைகூட சொல்லி சொல்லி காட்டும் மனப்போக்கு.. அப்படி சொல்லும்போது பத்திக்கிட்டு வரும். 
கல்யாணத்துக்கு பேசும்போது அப்பாடா விடுதலை கிடைச்சா போதும்ன்னு நினைச்சுதான் சரின்னு சொன்னதே. காலங்கள் ஓடியது.. நானும் அம்மாவானேன். பிள்ளைகள் தலையெடுத்தபின்தான் தெரிஞ்சுது, அம்மா அப்பா என்னை அடக்கி வைக்கல. என்னை கண்ணின் மணிப்போல பார்த்துக்கிட்டாங்கன்னு..  எத்தனை பெரிய தப்பு பண்ணி இருந்தாலும் அம்மா அப்பாக்கிட்ட எனக்கு மன்னிப்பு உண்டு. உறவுகள், நட்புகள், கடவுளென அத்தனை பேரும் என்னை கைவிட்டபோதும் இதுவரை என்னை கைவிடாம பார்த்துக்கிடுறாங்க.  
சண்டை போட்டுக்கிட்டு எப்பயும் ஒருத்தருக்கொருத்தர் முறைச்சுக்கிட்டிருந்தாலும் ஒருத்தரை ஒருத்தர் விட்டு இருக்க மாட்டாய்ங்க.  அவங்களுக்குள் இழையோடும் காதலை நான் நிறைய முறை பார்த்திருக்கேன். என் அம்மா அப்பாவுக்குள் நிறைய ஒற்றுமை உண்டு. உதவின்னு  வந்துட்டா உடல் உழைப்பாகட்டும், பொருள் உதவியாகட்டும்  அடுத்தவங்களுக்கு தன்னால் ஆனதை செய்வாங்க. அப்பா அரசாங்க ஊழியரா இருந்தாலும் விவசாயம், நெசவு, வீடு கட்டும் வேலைன்னு  அத்தனையிலும் அத்துபடி. அம்மாவும் ஆல் இன் ஆல்தான். தேவைக்கு அதிகமாய் பென்சன் பணம் வந்தாலும் சோம்பி இருக்கக்கூடாதுன்னு நெசவு வேலை செய்றாங்க. 
சிக்கனம், உழைப்பு, எளிமை சோம்பல் இல்லாதது, அடுத்தவங்களுக்கு உதவுறதுன்னு, என்மேலயும், பசங்க மேலையும் கொள்ளை பிரியம்ன்னு இருவருக்குள் ஒரு புள்ளியில் இணைவாங்க. அம்மாக்கு பிடிச்ச மாதிரிதான் அப்பா உடுத்துவார். அப்பாக்கு பிடிக்காதுன்னு அம்மா பட்டுப்புடவையே கட்ட மாட்டாங்க.  இளஞ்சோடி, அன்றில் பறவைகள், ஆதர்ச தம்பதிகள்ன்னு நாங்க கிண்டல் அடிக்கும் என் அப்பா அம்மாக்குள் இன்னொரு ஒற்றுமை இருக்குன்னு இப்பதான் தெரிஞ்சுது.  
காசி, கேதார்நாத், ரிஷிகேஷ், ஸ்ரீரடி, ஆக்ரா, டெல்லின்னு அம்மா, அப்பா டூர் போய் வந்ததால், தன்னை கூட்டி போகலைன்னு சின்ன பொண்ணு மூஞ்சை தூக்கி வச்சிட்டு இருந்துச்சுது. சின்ன பேத்தின்னா என் அம்மாக்கு ரொம்ப பிரியம். அப்பாக்கு பெரியவளை பிடிக்கும். வைகாசி 20 எனக்கு பிறந்த நாள் வருது. அதனால் எங்காவது டூர் போகலாம்ன்னு சொல்லி  ஏற்பாடு ஆனது.   எப்ப ஆயா  உனக்கு பொறந்த நாள்ன்னு சின்னது அம்மாக்கிட்ட கேட்டுச்சு. எனக்கு என் பொறந்த நாள் தெரியாது. ஆனா, உங்க அப்பாவை பெத்த தாத்தா பாட்டி கல்யாணத்தன்னிக்கு நான் பொறந்தேன். அவங்க கல்யாண நாள் அவங்களுக்கே தெரியாதாம். அதனால் எனக்கும் என் பொறந்த நாள் தெரியாதுன்னு அம்மா சொல்லிட்டாங்க. 
கன்யாக்குமரி, மதுரை பக்கம் டூர் போகாத என் மாமனார் மாமியாரை இந்த வருசமாவது கூட்டி போகனும்ன்னு வீட்டில் பேசும்போது,  வைகாசி 20 எங்க கல்யாண நாள் வருது. இத்தனை நாள் எங்க கல்யாண நாள் என்னிக்குன்னு தெரியாது. ஆனா வீட்டை சுத்தம் பண்ணும்போது எங்க கல்யாண பத்திரிக்கை கிடைச்சதால இப்பதான் தெரியுது. அதனால திருப்பதிக்கு போகலாம்ன்னு  மாமனார் ஆசைப்பட்டார்.  
திருப்பதி போகும் வேலை ஜரூராய் நடக்க, அப்பா பொறந்த நாளுக்கு இருக்க முடியாதேன்னு ஒரு பக்கம் கவலை வந்தது. அப்பதான் ஒரு பொறி மண்டைக்குள் பறந்தது. மாமனார் மாமியார் கல்யாண நாள் தெரிஞ்சா என் பொறந்த நாள் தெரிஞ்சிடும்ன்னு அம்மா சொன்ன வார்த்தை நினைவுக்கு வந்தது.  மாமனார் மாமியார் கல்யாண நாள்தான் தெரிஞ்சுட்டுதே. வைகாசி 20தான் அம்மாக்கும் பிறந்த நாள் தெரிஞ்சுட்டுது. அட!  அப்பாக்கும் அம்மாக்கும் ஒரே நாளிலா பிறந்த நாள்ன்னு ஆச்சர்யம். 
மச்சான் மகளைதான் தன் மகனுக்கு கட்டிக்கனும்ன்னு ஒரே நோக்கத்திலிருந்த என் தாத்தா ஜாதகம் பார்க்காம என் அப்பாவைக்கூட கேக்காம  அப்பா வேணாம்ன்னு சொல்லியும் அம்மாவை அப்பாக்கு கல்யாணம் கட்டி வச்சார். ஜாதகம் பார்த்து பத்து பொருத்தம் பார்த்து  அமைஞ்சிருந்தாலும் ஒரே நாளில் பிறந்த நாள் எத்தனை ஜோடிகளுக்கு வரும்?! லட்சத்தில் ஒருத்தங்க இல்ல ரெண்டு பேர் இருப்பாங்களா?!

அப்பா அம்மா குணத்தையும், ஒற்றுமையையும் வச்சு  என் அம்மா அப்பா ரொம்ப ஸ்பெஷல்ன்னு இத்தனை நாள் நினைச்சிட்டு இருந்தேன்.  ஆனா, ஒரே நாளில் பிறந்த நாள் கொண்டாடும் விசயத்திலும் என் அப்பா அம்மா ஸ்பெஷல்தான்.. 

ஸ்பெஷலான அம்மா அப்பாக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். மறுபிறப்பில் நம்பிக்கை இல்லன்னாலும் ஒருவேளை மறுப்பிறப்பென ஒன்று  உண்டெனில், நீங்கள் இருவரும் இணையனும், உங்களுக்கே நான் நல்ல மகளாய் பிறந்து இந்த ஜென்மத்தில் செய்ய முடியாததைலாம் உங்களுக்கு நான் செய்யனும்.... உலகில் எத்தனையோ அதிசயம் நடக்குது. அதில் ஒரு அதிசயமாய் ரெண்டு பேரும், ஒரே நேரத்தில் நோய்ப்பட்டு, உடல் நொந்து அவஸ்தைபடாம  இறைவனடி சேரனும். அம்மா இல்லாம தன்னந்தனியாய் துணையின்றி இருக்கும் அப்பாவையோ, அப்பா இல்லாம வெளித்தோற்றத்தில் மாற்றம் கொண்டு ஒதுங்கி இருக்கும் அம்மாவையோ பார்க்கும் சக்தி எனக்கில்லை. கடவுள்ன்னு ஒன்றிருந்தால் இதை மட்டும் அருளட்டும். எனக்காக இதை நீங்களும் வேண்டிக்கோங்க சகோஸ். 
அப்பா அம்மாக்கு தெரியாம சர்ப்ரைஸ்ஸா பிறந்த நாள் அன்று ஒரு   கிஃப்ட்..


பிறந்தநாள் வைகாசி என்றாலும் ,இப்பொழுது ஆடிமாசம் பிறக்கப்போகிறது.தாமதாக இருந்தாலும் எனக்கே இப்பொழுதான் விஷயம் தெரிந்தது. அதற்காக ஒருவருஷம் காத்திருக்காமல் உடனே அப்பா ,அம்மாவுக்கு மரியாதையை சேய்ஞ்சுட்டேன். அவர்களின் ஆசியால் இன்றுவரை நான் எந்த குறையும் இல்லாமல் இருக்கிறேன் ,அப்படி ஸ்பெஷலான என் அம்மா அப்பாவை அவர்கள் பூரண ஆயுளுடன் நீடுடி வாழ நீங்களும் வாழ்த்துங்கள் .
நன்றியுடன்,
காந்திமதி.

16 comments:

  1. வாழ்த்த வயதிருக்குமா தெரியவில்லை.....வணங்குகிறேன்......முதல் முதலாக தம்பதிகளுக்கு ஒரே நாளில் பிறந்த தினம் வருவது யாருக்கும் கிட்டாப் பேறு......இது நாள் வரை நான் அறிந்ததில்லை.//ஒரே நாளில் மரணித்த தம்பதியர் நம்மூரில்......இப்ப தான் ஒரு ஆறு மாசமிருக்கும்.சிலரின் வாழ்வே அதிசயமும் ஆச்சட்ரியமுமானது தான்.......மீண்டும் வணக்கம்.

    ReplyDelete
    Replies
    1. குடும்ப உறவுகள் என்பது ,ஒற்றுமை என்னும் அன்பு சங்கிலியால் மட்டுமே உருகுலையாமல் இருக்கும் என்பதை புரிந்து கொண்டவர்கள் அப்பா அம்மா. ஒற்றுமையால்தான் ,அடுத்து வரும் தலையீமுறையினருக்கு ஒற்றுமையாக வாழ்வது என்பது ஒரு பாடமாக அமையும் ..உறவுகள் வலுப்படும் ,அதில் என் தாய் ,தந்தை முன்மாதிரியாக இருக்கின்றனர் .அது எனக்கு வருமா என்று தெரியவில்லை .அவர்களை பார்த்து படித்து கொண்டு இருக்கிறேன் .

      Delete
  2. கணவன் மனைவிக்கு இருவருக்கும் ஒரே நாளில் பிறந்த நாள் வருவது ஆச்சர்யம்தான். உங்கள் அப்பா அம்மாவுக்கு என் நமஸ்காரங்கள். பரிசைப் பார்த்ததும் என்ன ரீயாக்ஷன்? ன்ன சொன்னார்கள்?

    இருவருக்கும் எங்கள் அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. பரிசை பார்த்து அப்பா திட்டினாங்க. இருக்கும் துணிமணிலயே என் காலம் போகிடும். புதுசா துணி எதுக்குன்னு?!

      அதான் என் அப்பா

      Delete
  3. கமெண்ட் பெட்டிக்குள் க்ளிக் செய்ததும் ஏதோ மவுஸ் கோளாறு போல உடனே ஒரு விளம்பரப்பக்கத்துக்கு அழைத்துச் செல்கிறது. இரண்டு முறை இப்படி ஆகிவிட்டது. அப்புறம்தான் கமெண்ட் போடமுடிந்தது.

    ReplyDelete
    Replies
    1. அப்படியா?! என்ன கோளாறுன்னு தெரிலயே!

      Delete
  4. வாழ்த்துக்களும் வணக்கங்களும் அப்பா அம்மாவுக்கு உரித்தாகுக...

    ReplyDelete
    Replies
    1. சொல்லிட்டேன். வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிண்ணே

      Delete
  5. வணக்கம் ராஜி க்கா..

    எல்லா படங்களும் அழகோ அழகு..


    அப்பா அம்மா வுக்கு எனது வணக்கங்களும் ..எங்க அப்பா அம்மாவை பார்த்தது போல இருக்கு..

    ReplyDelete
    Replies
    1. போட்டோ எடுத்தால் ஆயுசு குறையும்ன்னு சொல்லி எங்க அம்மா படமெடுக்க விடமாட்டாங்க. இந்த மேமாதம் காசிக்கு டூர் போயிருந்தபோது படமெடுத்து பிள்ளைகளுக்கு அனுப்பினாங்க. அதனால்தான் பதிவு போட படம் கிடைத்தது.

      Delete
  6. உங்கள் அப்பா, அம்மாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.அன்பான மகளை பெற்ற அவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

    அன்பான பெற்றோர் உங்களுக்கு நீங்களும் கொடுத்து வைத்தவர்கள்.

    அன்பு வாழ்க! வாழ்க வளமுடன்.
    படங்கள் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. நான்தான்ம்மா கொடுத்து வைத்தவள். அவங்களுக்கு நிறைய சிரமத்தினை கொடுத்திருக்கேன் நான்

      Delete
  7. வாசிக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. உங்க கருத்தும் எனக்கு மகிழ்ச்சியை கொடுக்குதுண்ணே

      Delete