Tuesday, July 24, 2018

அரைக்கீரை மசியல் - கிச்சன் கார்னர்

அரைக்கீரை, இது நமக்கு எளிதில் கிடைக்கக்கூடிய கீரை வகை. இது குறுஞ்செடி வகையை சார்ந்தது. இதை அறுத்தெடுத்தா மீண்டும் துளிர்க்கும் இயல்பு கொண்டது.  இதை சாப்பிட்டு வந்தால் ரத்தசோகை நீங்கும், உடல் வலியை சரி செய்யும், கூந்தல் சம்பந்தமான பிரச்சனைகளை சரி செய்யும் இந்த கீரை. குடல் புண் வராம தடுக்கும். ஆசனவாய், மலக்குடல் புற்றுநோயை தடுக்கும். பித்தத்தை சமன் செய்யும். அரைக்கீரை உடலுக்கு குளிர்ச்சி தரும். தோசை, கூட்டு, சூப், பொரியல், கடையல்ன்னு விதம்விதமா இந்த கீரையில் சமைக்கலாம்.  இக்கீரை நாட்டு மருத்துவத்தில் மூலிகையாவும் பயன்படுது. 

அரக்கீரை, அறுகீரை, அறைக்கீரை, கிள்ளுக்கீரை, அரைக்கீரைன்னு பலவாறு அழைக்கப்படும் இக்கீரை  செடியிலிருந்து கீரையைப் பலமுறை அறுவடை செய்து பயன்படுத்துவதால் அறுப்புக்கீரைனும் பெயருமுண்டு.  இக்கீரை, கிளைவிட்டு வளரக் கூடியது. செங்குத்தாக நிற்கும் தன்மை பெற்றது. இது தண்டுக் கீரை இனத்தைச் சார்ந்தது. ஆனா, தண்டுக்கீரை மாதிரி அதிக உயரம் வளராம 30 செ. மீ உயரம் வரை வளரக்கூடியது. இது ஓரடிக்குமேல் இது வளர்வதில்லை. இலைகளும் தண்டுகளும் மிகவும் சிறுத்தவை. சுமார் ஒரு வருடம் வரை பலன்தரும். இக்கீரை மேல்நிறம், பச்சை நிறமாகத் தோன்றும். அடிப்பாகம் மெல்லிய செந்நிறத்தோடு விளங்கும். இலையின் காம்புகளிலும் செந்நிறம் தோன்றும். இந்தக் கீரையும் இதன் விதையும் இரண்டுமே உணவாகப் பயன்படுது.

சோடியம், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி, பீட்டா கரோட்டின், நார்ச்சத்து லாம் நிறைய இருக்கு. இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேனி பொலிவுறும், ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்கும், ஞாபகசக்தி பெருகும், பிரசவிச்ச பெண்களுக்கு இக்கீரை உடனடி சத்து தரும்.  தாய்ப்பால் சுரக்க அரைக்கீரையுடன் நிறைய பூண்டு சேர்த்து பொரியலாய் சமைத்து கொடுப்பாங்க. கபத்தை உடைத்து வெளியேற்றும். வாத நோய் தணிக்கும்.


தேவையான பொருட்கள்
அரைக்கீரை
வெங்காயம்
தக்காளி
காய்ந்த மிளகாய்
பச்சைமிளகாய்
பூண்டு
உப்பு
புளி
வடகம் அல்லது கடுகு
எண்ணெய்

அரைக்கீரையை கழுவி சுத்தம் செய்து வச்சுக்கனும். வெங்காயம், தக்காளியை வெட்டிக்கனும், பூண்டு உரிச்சுக்கனும்.


அடுப்பில் பாத்திரம் வச்சு சூடானதும் ப.மிளகாய், காய்ந்த மிளகாயை போட்டுக்கனும்.. 
அடுத்து பூண்டை சேர்த்துக்கனும்...

அடுத்து வெங்காயம் சேர்த்துக்கனும்... நல்லா வதங்கனும்ன்னு அவசியமில்ல.. லேசா வதக்கினா போதும்.
தக்காளியை சேர்த்து லேசா வதக்கிக்கனும்..

அரைக்கீரையை சேர்த்து வதக்கிக்கனும், தேவையான அளவுக்கு தண்ணி ஊத்தி வேகவச்சுக்கனும்... சிலர் கீரையைக்கூட குக்கர்ல வைப்பாங்க, ஆனா நான் வைக்க மாட்டேன். 

கீரை நல்லா வெந்ததும் தேவையான அளவுக்கு புளி, உப்பு சேர்த்து அடுப்பை ஆஃப் பண்ணிடனும்.

வெந்த கீரையை மசிச்சுக்கனும். சிலர் மிக்சில லேசா ஒரு சுத்து சுத்திப்பாங்க.  ஆனா, நான் கல்சட்டிலதான் கடைஞ்சுப்பேன்.  கீரை நல்லா மசிஞ்சப்பின் வடகம் போட்டு தாளிச்சு, கீரையில் போட்டு மீண்டும் ஒரு சுத்து கடைஞ்சுக்கனும். வடகம் இல்லாதவங்க, எண்ணெயில் கடுகு போட்டு பொரிஞ்சதும் பூண்டை நசுக்கி, வெங்காயம் சேர்த்து நல்லா வதக்கியும் சேர்க்கலாம், காய்ந்த மிளகாயை தாளிப்பில் சேர்த்துக்கிட்டா வாசமா இருக்கும். இந்த கீரை கொஞ்சம் உஷ்ணத்தன்மை கொண்டதால, சாப்பிடும்போது கொஞ்சம் நெய் சேர்த்துக்கலாம். 


அம்மனுக்கு கூழ் வார்க்கும்போது இக்கீரை கடைசல் அவசியம் இருக்கும்.  சிலர் வெங்காயம், தக்காளி, கீரையை வதக்காமயே வெங்காயம், பூண்டு, தக்காளி, மிளகாய், கீரைலாம் தண்ணி சேர்த்து வேக விட்டும் செய்வாங்க. இப்படி வதக்கி செய்வதால் கீரையின் உஷ்ணத்தன்மை போகும். எண்ணெயைவிட நெய் சேர்த்துக்கிட்டா உடலுக்கு ரொம்ப நல்லது. தக்காளியை தாராளமா சேர்த்துக்கிட்டா ருசி தூக்கலா இருக்கும்.

நன்றியுடன்,
ராஜி

16 comments:

 1. வெங்காயம் , தக்காளி போடாம ..மத்தபடி இப்படி தான் செய்வோம் கா...

  ReplyDelete
  Replies
  1. அப்படியா?! தக்காளி விலை கூடுதலான நாட்களில் தக்காளியை குறைச்சுக்கிட்டு புளி அதிகமா சேர்த்துப்போம்.

   Delete
 2. எனக்கு கீரைவகைகள் பிடிக்கும்.

  ReplyDelete
  Replies
  1. கீரைவகைகளை சாப்பிடுவது உடலுக்கும் நல்லது

   Delete
 3. ஒரு பழைய திரைப்படத்தில் கேட்டுத் தெரிந்தது அரைக் கீரைவெட்ட வெட்ட வந்து பான் தருவது முளைக்கீரைஒரு தடவைதான் அரிந்து உபயோகிப்பது என் எஸ் கிருஷ்ணனின் ஒருபாட்டும் உண்டு

  ReplyDelete
  Replies
  1. அந்த பாட்டு எனக்கு தெரியாதுப்பா. என்ன பாட்டு, எந்த படத்தில்ன்னு சொல்லி இருக்கலாம்.

   Delete
 4. என்ன எங்கபார்த்தாலும் கீரை பற்றிய பதிவுகளாகவே இருக்கிறது

  ReplyDelete
  Replies
  1. கீரை நல்லதுண்ணே

   Delete
 5. கீரை நல்லது! - கறை நல்லது மாதிரியே இருக்கே! :)

  இங்கே கிடைப்பதில்லை. ஊருக்கு வரும்போது தான் சாப்பிடுவது.

  ReplyDelete
  Replies
  1. அந்த எஃபெக்ட்டுலதான் சொன்னேன்.

   அங்க பாலக் கீரை கிடைக்கும்ன்னு நினைக்குறேன்

   Delete
 6. இருப்பதிலேயே அரைக்கீரை தான் மிகவும் பிடிக்கும்...

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் பிடிக்கும்ண்ணே

   Delete
 7. சுவையான குறிப்புகள். நாங்கள் பசலைக்கீரையில் மட்டும் வெங்காயம் போடுவம். மற்ற கீரைகளில் பெரும்பாலும் வெங்காயம் தக்காளி சேர்ப்பதில்லை.

  ReplyDelete
  Replies
  1. எல்லா கீரையிலும் நாங்க வெங்காயத்தை சேர்ப்போம் சகோ...

   Delete
 8. சுவையான, பயனுள்ள குறிப்பு.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா

   Delete