Wednesday, July 04, 2018

அமிர்தி காடும், உயிரியல் பூங்காவும்....

திருவண்ணாமலை மாவட்டம் முழுக்க நெசவுத்தொழிலும், விவசாயத்தொழிலும்தான் பிரதானம். இந்த தொழிலுக்கு ஆணும், பெண்ணும், குழந்தைன்னு குடும்பமே பாடுப்பட்டால்தான் இரு தொழிலும் சிறப்பா நடக்கும்.  அதேமாதிரி வேலூர்லயும் நெசவு, உழவு, பீடி சுத்துதல்ன்னு பொழுதன்னிக்கும் வேலை இருக்கும். பீச், கோட்டை, அருவி, மலைன்னு இந்த இரு மாவட்டங்களிலும் பெருசா பொழுது போக்குத்தலம்ன்னு எதும் இல்ல.  திருவண்ணாமலை மாவட்டத்துல ஜமுனாமரத்தூரும், வேலூர்ல ஏலகிரியும் மலைவாசஸ்தலமா இருந்தாலும். சரியான போக்குவரத்து, தங்கும் வசதி இல்லாததால் அங்கலாம் குடும்பத்தோடு போகமுடியாது.   ஏதோ ஏழைக்கேத்த எள்ளுருண்டைன்னு சொல்ற மாதிரி வறட்சி மாவட்டம்ன்னு பேர் எடுத்த இந்த இரண்டு மாவட்டத்துக்கும்ன்னு சேர்த்து வேலூர்ல அமிர்தி காடும், கொட்டாறும், அமிர்தி  வன இயல் பூங்காவும், சிறு உயிரியல் பூங்காவும் பொழுதுபோக்கு தலமா இருக்கு.

இயற்கை எழில் கொஞ்சும் ஜவ்வாதுமலை நால்புறமும் உயர்ந்து நிற்க, நடுவில் 5 ஹெக்டேர் நிலப்பரப்பில் அழகிய நந்தவனமாய் இந்த அமிர்திக்காடு இருக்கு.  சொற்ப எண்ணிக்கையில் ஆட்கள் வருவதால் அமைதியான சூழலில் செழித்து, வளர்ந்த மரங்களுடன் சுத்தமா இருக்கு.  
சரியான சாலைவசதி இல்லாததும் இங்க கூட்டம் வராததுக்கு காரணம்.  சொந்த வாகனத்துல வந்தாலும் வழி விசாரிச்சு விசாரிச்சுதான் போகனும். ஏன்னா இந்த பக்கம் கிளைப்பாதைகள் அதிகம்.   வேலூரில் இருந்து அமிர்திகாடு 30கிமீ தூரத்தில் இருக்கும். வேலூர்ல இருந்து டவுன்பஸ் போகும். இல்லன்னா ஆரணி, திருவண்ணாமலை, போளூர்ல இருந்து கண்ணமங்கலம், கனியம்பாடி  வரை வந்துட்டு அங்கிருந்து மினி பஸ்சுல இல்லன்னா ஷேர் ஆட்டோக்களில் போகலாம்.
ஊர் நெருங்க நெருங்க தூரத்துல காடு இருக்குறதை தென்றல் நம் காதுகளில் வந்து ரகசியமாய் சொல்லி செல்லும்.  காட்டின் ஆரம்பத்தில் செக்போஸ்ட் இருக்கு. பிளாஸ்டிக் பொருட்கள், சரக்குகள் இருந்தா பறிமுதல் பண்ணிடுறாங்க. நுழைவுக்கட்டணமா பெரியவங்களுக்கு 2 ரூபாயும், சின்னவங்களுக்கு 1 ரூபாயும்ன்னு வசூல் பண்றாங்க. 

இங்க வனத்துறை சார்பா சிறு உயிரியல் பூங்கா இருக்கு. மைசூர், வண்டலூர் உயிரியல் பூங்காவுலாம் பார்த்திருக்கேன். அதேமாதிரி இங்கயும், ஒட்டகம், யானை, புலி, சிங்கம், சிறுத்தை, சிம்பான்சி, கரடிலாம் இங்க இல்ல. 
அட ஆண்டவா! என்னை ஏன் இந்த மாதிரி கழிச்சடை பசங்களோடு கூட்டு சேர்த்தேன்னு ஒரு படத்துல வடிவேலு புலம்புவார். அதுமாதிரி இங்க இருக்க மிருகங்களும் தன் தலையெழுத்தை நொந்தபடி தனிமையில் இருக்குதுங்க.
 வாத்தை நாங்க பார்த்ததே இல்ல பாரு....ன்னு நீங்க சொல்லலாம். அதுக்கு பதில், இதுகதான் இங்க இருந்ததுங்க.  சோ அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்கப்பா.

வண்டலூர் ஜூவில் அந்தந்த உயிரினத்தை பத்தி அழகா போர்ட்ல போட்டிருப்பாங்க. அதனால் விவரம் தெரியும். ஆனா இங்க அப்படி எதும் குறிப்பு இல்லாததால் குத்துமதிப்பா இது வாத்து, இது நாரைன்னு சொல்லி மனசை தேத்திக்கனும்.

தனியே, தன்னந்தனியே, நான் காத்து காத்து கிடப்பேன்னு.. ரிதம் படத்துல வரும் பாட்டுக்கேற்ப சோலோவாய் திரியும் முதலை. முதலை சோம்பேறின்னு கேள்விப்பட்டிருக்கேன். ஆனா, இது 2 மணி நேரமா கண்ணை கூட அசைக்காம ஒரே பொசிசன்ல இருந்துச்சு. 

ஓநாய், கிட்ட நெருங்கி பார்க்க முடில. ஒரே கப்ப்ப்ப்ப்ப்பு... குளிச்சு எத்தனை காலமாச்சுதோ?!

சனி ஞாயிறுகளில் இங்க கூட்டம் பார்க்க முடியும். மத்த நாளில் இளைஞர்கள், காதலர்கள்தான் இருப்பாங்க. அவங்களைலாம் பார்த்து பார்த்து இந்த புறாக்களும் கெட்டு போயிட்டுதுங்க. நாங்க பார்க்கும்போதே வெக்கமில்லாம லவ்விக்கிட்டு இருந்துச்சுங்க.
தோழி வந்திருப்பதை கேள்விப்பட்டு என்னை பார்க்க ஓடி வந்த என் ஃப்ரெண்ட்.
தன் காதலை சுமந்துக்கிட்டு திரியும் பிச்சி பெண்போல தன் வீட்டை தானே சுமந்து செல்லும் நட்சத்திர ஆமை.
எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்ற வடிவேலு காமெடி இந்த நல்ல பாம்புக்குதான் பொருந்தும். பாவம் கூட்டில் அடைப்பட்டு சரியான ஆகாரம் இல்லாம நொந்து நூடுல்சாகி கிடக்குது. டேய்! என்னா ஆட்டம் ஆடி இருப்பே!?ன்னு மனசுக்குள் கேட்டுக்கிட்டேன்.
மனசுக்கு ஒரே ஆறுதல் அதிக எண்ணிக்கையில் மயில்கள் இருக்கு. வெள்ளை மயிலும் இருக்கு. 
நாங்க போன நேரம் மாலை நேரம் அழகா தோகை விரிக்க ஆரம்பிச்சது. ஆனா, எத்தனை நேரம் காத்திருந்தும் முழுசா தோகை விரிக்கல. மாமனை பார்த்து வெக்கமான்னு வடிவேலு கேக்குற மாதிரி மச்சினிச்சிய பார்த்து வெக்கமான்னு கேட்க தோணுச்சு. ஏன்னா, ஆண்மயில்தானே தோகை விரிக்கும். 

மயில்களுக்கு அடுத்தபடியா மான்கள் அதிக்கப்படியா இருக்கு. புள்ளிமான் மட்டுமே இருக்கு.

பிள்ளைகள் விளையாட ஊஞ்சல், சீசா பலகை, சறுக்கு மரம்லாம் இருக்கு. ஜோடி போடுவோமான்னு என் மச்சினர் மகள் கேட்க, அவள் சவாலை ஏத்துக்கிட்டு சீசா பலகையில் உக்காந்தா, அந்த பொண்ணு ஓவர் வெயிட்போல! அவள் பக்கம் தாழ்ந்து போச்சுது. இனி யாராவது என்னைய குண்டுன்னு சொல்வீக?!
மழைக்காலங்களில்போது மட்டுமே ஆர்ப்பரித்து கொட்டும் கொட்டாறு நீர்வீழ்ச்சி. நாங்க போனபோது ஆத்தில் தண்ணி இல்ல, புதைமணல் இருக்குறதால்  அருவிக்கிட்ட செல்ல அனுமதி இல்ல. இது எஃப்.பில சுட்ட படம்.

பூங்காவில் கிளிக்குன்னு தனி கூண்டிருக்கு.... 


மலைகளில் விளையும் தேன், தினை, சாமை மாதிரியான பொருட்களை விற்கும் சின்னதா ஒரு கடை இருக்கு. இங்க, சின்ன சின்னதான மரச்சாமான்களும் கிடைக்குது.
யானை, புலி, கரடின்னு இல்லாத குறைய போக்க வனவிலங்குகளை பத்தி எடுத்து சொல்லும் ஆடிட்டோரியம் இருக்கு.

ஹோட்டல் வசதி இல்ல. அதனால கையோடு சாப்பாடு கொண்டு வாங்க. இங்க ஒரு ஸ்னாக்ஸ் கடை இருக்கு. ஆனா ஊர்ப்பட்ட விலை.  சரியான பிளானிங்கோடு வரலாம், கூடவே சாப்பாடு கொண்டு வாங்க. குடும்பத்தோடு குறைஞ்ச செலவுல  பொழுதை கழிக்க தகுந்த இடம். விடுமுறை தவிர்த்து  மத்த நாட்களில் வரும்போது  கவனமா இருங்க. குடிமகன்கள் தொல்லை இருக்கும். எதிர்காலத்தில் யானைக்கான புத்துணர்வு முகாமாக மாறும் வாய்ப்புள்ள காடுகளில் இதுவும் ஒண்ணுன்னு இங்க இருக்கும் தகவல் பலகை சொல்லுது. 

நன்றியுடன்,
ராஜி10 comments:

 1. அருமை.........அப்பவே நினைச்சேன்,சொந்தக்காரங்கள பாக்கத் தான் போயிருப்பீங்கன்னு.......இப்படி ஏதாச்சும் இடங்களுக்குப் போய் வருவது நல்லது....படங்களுடன் பதிவு அருமை....

  ReplyDelete
  Replies
  1. ம்க்கும். என் சொந்தக்காரங்க உங்களுக்கும் சொந்தக்காரங்கதானே?!

   Delete
 2. ஓரளவு சுவாரஸ்யமான இடம்தான் போல... இது மாதிரி உவ்வாகட்டிக்கு ஒரு உயிரியல் பூங்கா தஞ்சையில் சிவகங்கைப் பூங்காவில் முன்பு இருந்தது. நான் சொல்வது 70களில். அது நினைவுக்கு வருகிறது.

  ReplyDelete
  Replies
  1. மொத்தமே பத்து மிருகங்கள்தான் இங்க இருக்கு. அதும் அன்றாடம் நம்ம வீட்டாண்டை பார்க்கும் ஜீவன்கள்தான். பட்டாம்பூச்சி பூங்கான்னு இப்ப ஒரு இடம் ரெடி பண்ணிக்கிட்டு இருக்காங்க.

   Delete
 3. நல்ல தகவல்கள் ராஜி க்கா..


  அந்த பக்கம் போனா நியாபகம் வச்சுகிறேன்...

  எல்லா படமும் சூப்பர் கா...அதற்க்கான கமெண்ட்ஸ் ரொம்ப சூப்பர்...


  ஆமை படம் நல்ல கிளிக்..

  ReplyDelete
  Replies
  1. எல்லாமே என் மகன் அவன் போன்ல எடுத்த படம்ப்பா. சரியான பிளான் இல்லாம வந்தால் ரொம்ப கஷ்டப்படனும்ப்பா. நினைவில் வச்சுக்கோங்க

   Delete
 4. துளசி: அழகான இடமாகத் தெரிகின்றது...தகவல்கள் அருமை.

  கீதா: நாங்கள் 10 வருடங்களுக்கு முன் சென்றிருக்கிறோம்...அமிர்தி காடு...அருவி அங்கிருந்து அப்படியே ஜமுனமருத்தூர் மலையில் ஏறும் காட்சி செமையா இருக்கும்...ரொம்ப ரொம்ப அருமையா இருக்கும்....மலையில் அங்கு பீமன்மடுவு ஃபால்ஸ் அது மூன்று படிகளாக வீழும். செம திரில்லிங்கா இருக்கும் மூன்றிற்கும் செல்லுவது. முதல் ஈசி. ரெண்டாவது கொஞ்சம் இறங்கிப் போகணும் கொஞ்சம் கேர்ஃபுல்லா போணும் மூன்றாவது இன்னும் கீழே போணும் ஆனா அங்க ஃபால்ஸ் விழுந்து குளமா இருக்கும் நல்லாருக்கும் விளையாடிக் குளிக்க...

  காவலூர் தொலைநோக்கி, அப்புறம் எல்லாம் பார்த்துட்டு அப்படியே ஆலங்காயத்துல இறங்கி வாணியம்பாடி வழியா சென்னை...ஒரு நாள் ட்ரிப் சூப்பரா இருக்கும். அமிர்தி போறதுக்கு முன்னாடி இடப்பக்கத்துல கொஞ்ச தூரம் போனா நரசிம்மர் கோயில்..சிங்கிரி கோயில்....குன்று மேல....ரிவர் க்ராஸ் பண்ணித்தான் நாங்க போனோம்..நிறைய தண்ணீர் இருந்தா கோயில் மூடிவிடுவார்கள். மலை மீது நல்ல ஜில்லென்று காற்று, க்ளைமேட். சூப்பரா இருந்துச்சு.

  படங்கள் எல்லாம் அருமை. ஆமை அழகு படம்!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. நீங்க சொல்லும் சிங்கிரி இப்ப நல்ல பிரபலமாகிட்டுது. சனிக்கிழமைகளில் கூட்டம் அள்ளுது. அந்த ஆற்றில் இப்பலாம் தண்ணி வருவது வெகு அபூர்வம் கீதாக்கா. சிங்கிரி கோவிலுக்கு பக்கத்துலதான் எங்க குலதெய்வம் கோவில் இருக்கு.


   அதேமாதிரி ஜமுனாமரத்தூர் பீமன் வீழ்ச்சியும் செம. அருவிலாம் மலைமேல ஏறிதான் போய் பார்த்திருக்கோம். முதல்முறையை இறக்கத்துல போய் நீர்வீழ்ச்சியை பார்த்தது இங்கதான். ஜூன் 17, 18ந்தேதிதான் அங்க கோடைவிழா நடந்துச்சு. தேன், பலா கிடைச்சாலும் அந்த ஊர் புளி நல்லா பட்டை பட்டையா, மிகுந்த சதைப்பற்றோடு இருக்கும். அதனால் அந்த ஊரு புளிக்கு போட்டி போடுவாங்க.

   Delete