Monday, July 02, 2018

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் - ஐஞ்சுவை அவியல்


இந்தா புள்ள! உனக்கு பிடிச்ச ரசகுல்லா... உனக்கு பிடிக்குமேன்னு நல்ல ஒசத்தியான கடையில் வாங்கி வந்திருக்கேன்.

எந்த கடையில் வாங்குனாலும், நல்லா இருக்குன்னு நாம சொன்னாலும், கொல்கத்தா ரசகுல்லாவுக்கு ஈடாகுமா?!  குழந்தைகள்ல இருந்து பெரியவங்க வரை விரும்பி உண்ணும் இனிப்புகளில் ஒன்றான ரசகுல்லா யாருக்கு சொந்தம்ன்னு மேற்கு வங்காளத்துக்கும்,  ஒடிசாக்கும் இடையே போட்டி நிலவி வந்தது. இந்த ரசகுல்லா கடந்த 1868ம் ஆண்டுதான் முதன்முதலா மேற்கு வங்காளத்தில்  கொல்கத்தாவில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. கொல்கத்தா நகரின் வடக்கு பகுதியை சேர்ந்தவரான நொபின் சந்திர தாஸ் என்பவர்தான் ரசகுல்லாவை அறிமுகப்படுத்தினார். பாலில் தயாரிக்கப்படும், வெள்ளை நிறத்தில் பஞ்சு போன்ற மென்மையான இந்த ரசகுல்லாவை நொபினின் வாரிசுகள் இன்றும் வடக்கு கொல்கத்தா நகரில் கடையில் விற்பனை செய்றாங்க. ஒடிசாவின் பூரி நகரில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ஜெகன்னாதர் கோயிலில் இறைவனுக்கு தினமும் ரசகுல்லா படைக்கப்படுது.  அதனால் ரசகுல்லா தங்களது மாநிலத்திற்கு சொந்தம்ன்னு  ஒடிசா ரசகுல்லாவுக்கு உரிமை கோரி ரசகுல்லாவிற்கான புவிசார் குறியீடு தங்களுக்கே கொடுக்கனும்ன்னு மேற்கு வங்காளத்துடன் போட்டி போட்டது.  2015ல இருந்து பிரச்னை தொடர்ந்து வந்த நிலையில் யாருக்கு புவிசார் குறியீடு சான்றிதழ் வழங்குவது என குழப்பம் நீண்டது. மேற்கு வங்காளத்தில்  2011ல மம்தா பானர்ஜி அரசு பொறுப்பேற்றபின் ரசகுல்லா, சீதாபோக் மற்றும் மிஹிதனா என மூன்று இனிப்புகளுக்கு புவிசார் குறியீடு சான்றிதழ் பெறுவதற்கு முயற்சிகள் எடுத்தார்.  தொடர் முயற்சியின் பலனாய் மேற்கு வங்காளத்திற்கு ரசகுல்லா உள்பட மூன்று இனிப்புகளுக்கு புவிசார் குறியீடு சான்றிதழ் வழங்கப்பட்டது. 
என்னதான் திருநெல்வேலி அல்வா, மணப்பாறை முறுக்கு, திருச்செந்தூர் அச்சுவெல்லம், கோவில்பட்டி வேர்கடலை உருண்டை,  ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவான்னு அந்தந்த நேட்டிவிட்டி பலகாரம் நம்மூர்ல செஞ்சாலும் அந்த ருசி வருவதில்லையே ஏன்?! மாமா

பலகாரத்தின் ருசி வெறும் மளிகை சாமானில் மட்டுமில்ல. சமைக்க பயன்படும் தண்ணி, சுற்றுச்சூழல் இதுலாம்தான் காரணம். அதுமில்லாம,பாரம்பரியமா சமைக்குறவங்களுக்குதான் எந்த பொருளை எப்ப?! எப்படி எந்த பதத்தில் சேர்க்கனும்ன்னு தெரியும். அதான் பலகாரத்தின் ருசிக்கு காரணம். 

எல்லாம் சரி, புவிசார் குறியீடுன்னா என்ன மாமா?!

புவிசார் குறியீடுன்ற வார்த்தைக்கு  Geographical indicationன்னு இங்கிலீஷ்ல சொல்வாங்க. அதை சுருக்கமா, GI  ஒரு குறிப்பிட்ட இடத்தையோ, நாட்டையோ சார்ந்த தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்குன்னு கொடுக்கப்படும் குறியீடு இது. குறிப்பிட்ட உற்பத்தி பொருள் முறையாக பாரம்பரிய ரீதியில் தயாரிக்கப்பட்டதற்கும், தரத்தை காப்பதற்குமான சான்றாகக்கூட இதை எடுத்துக்கலாம். இதனால போலியான தயாரிப்புகள் உருவாவதை தடுக்க முடியும். விஞ்ஞான வளர்ச்சியில் எல்லா ஊர்களிலும் எல்லாத்தையும் தயாரிக்கமுடியும். ஆனா, ஒவ்வோரு ஊருக்குன்னு ஒரு ஷ்பெஷல் இருக்கும்ல அதை வேற எங்கயும் தயாரிக்கமுடியாது. தயாரிக்க கூடாது. இந்த குறியீடு இருந்தால் போலிகளின் வரவை தடுக்கலாம்.  உற்பத்தியாளர்களுக்கு நல்ல விலை கிடைக்கும், இந்த குறியீடு இருந்தால் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும்போது, விலையை நாமளே நிர்ணயிக்க முடியும்.

புவிசார் குறியீடுன்னா என்னன்னு தெரிஞ்சுக்கிட்டேன். சனிக்கிழமை பதிவுல  நம்ப   பாலசுப்ரமணியன் அப்பா  கன்னா, பின்னா, மன்னா, தென்னான்னு என்னவோ கன்னா, பின்னான்னு எழுதி இருந்தார். அது என்னது மாமா?! 

அதுவா?! குலோத்துங்க சோழன்   தமிழார்வம் கொண்டவன், சிறந்த கொடையாளி.  ரொம்ப வறுமையில் வாழ்ந்து வந்த விறகுவெட்டி ஒருவனின் மனைவி, எத்தனை நாளைக்குதான் நாம இப்படி வறுமையில் இருக்குறது?! அதனால,  அரசனை புகழ்ந்து பாடி பரிசு வாங்கி வாங்கன்னு டார்ச்சர் பண்ணா.   படிப்பு வாசனை இல்லாத அவன், என்ன எழுதுறதுன்னு தெரியாம முழி பிதுங்கி காட்டு வழியா போய்க்கிட்டு இருந்தான். அப்ப காக்கா, கா.. கா..ன்னு கத்துச்சு.. உடனே அதையே  "காவெனக் கரைவதும்" அப்படின்னு எழுதிகிட்டான்.. இன்னும் கொஞ்சம் தூரம் போனா ஒரு குயிலு. கூன்னு கூவிகிட்டு இருந்ததா அதைக் கேட்டதும் "கூவெனக் கூவுவதும்" ன்னு எழுதிக் கிட்டான். அப்படியே கால் போன போக்கில போனா,  அங்க பெருமாள் கோயில் இருந்தது, அங்க பிரசாதத்துக்கு ஒரு பெருச்சாளி வந்தது.. அந்தக் கோயில் பூசாரி அடங்கொப்பன் கோயில் பெருச்சாளின்னு ஒரு கல்லைத் தூக்கிப் போட "உங்கப்பன் கோவில் பெருச்சாளி"ன்னு எழுதிகிட்டான். அப்புறம் அந்த ஊரில் இருந்த தன்னோட நண்பனைப் போய்ப் பார்த்தான். அந்த நண்பன்கிட்ட தன் கதையைச் சொல்ல "கன்னா பின்னா தென்னா மன்னா" ன்னு எதையாவது எழுதிகிட்டுப் போ அப்படின்னு அவன் நக்கலாச் சொன்னான்.. அதையும் எழுதிகிட்டு அவன் வீட்டுக்கு வரும்பொழுது அரசவையில் இருக்கும்  புலவர்  ஒருத்தர் வந்தார். அவர்கிட்ட மூணுவரியையும் காட்டி இப்படி ஒரு கவிதை எழுதி இருக்கேன்னு சொன்னான். அவர் பார்த்துட்டு இரண்டாமடியில் இன்னொரு வார்த்தை வேணும் "தான" அப்படின்னு சேர்த்துக்கோ.. அப்புறம் நாலடி இருக்கணும் அதனால சோழரங்கப் பெருமானே அப்படின்னு எழுதிக்கோன்னு சொல்லிட்டு போயிட்டார்.

காவெனக் கரவதும் கூவெனக் கூவுவதும் 
உங்கப்பன் கோவில் பெருச்சாளி - தானக்
கன்னா பின்னா தென்னா மன்னா
சோழரங்கப் பெருமானே!ன்னு பாடினான். 
அவன்  பாடி முடிச்சதும், அரசவையில் ஏளன சிரிப்பு எழுந்தது. மன்னனும் கூடவே சேர்ந்து சிரிச்சான். விறகு வெட்டி வீட்டுக்கு போன புலவர், அமைதின்னு சொல்லி, அரசவையை பார்த்து , விறகுவெட்டி பாடிய பாடலின் அர்த்தம் புரியாம சிரிக்காதீங்கன்னு சொல்லி,  அந்த பாடலுக்கு விளக்கம் சொன்னார். 
காவெனக் கரைவதும் எங்களை  நீங்கள்தான் காப்பற்ற (ஆள) வேண்டும் என்று மக்கள் அழைப்பதும், கூவெனக் கூவுவதும் அதை மறுக்கக் கூடாது ஒப்புக்கொள்வதாகக் கூறுங்கள் கூறுங்கள் எனக் மக்கள் ஆர்பாட்டம் செய்வதும், உங்கப்பன் கோ வில் பெரு சாளி - அதாவது உன் தந்தையாகிய, பெரிய அரசன் வில் வித்தையில் பெரிய சிங்கம் போன்ற வீரமுள்ளவரைப் பார்த்து, அதாவது மக்கள் மிகப்பெரிய வில்வீரனான உன் தந்தையை வேண்டி, தங்களை ஆண்டு வாழவைக்க வேண்டும் என விருப்பத்துடன் ஆட்சியில் அமர்த்தினர். 

தானக் கன்னா - தானத்தில் மிகச்சிறந்த கர்ணனே,
பின்னா - அவனுக்குப் பின் பிறந்த நீதி வழுவாத தர்மனே,
தென்னா - தென்னாட்டை ஆளுபவனே,
மன்னா - எங்கள் மன்னனே
சோழரங்கப்பெருமானே - இவ்வளவும் சொல்லி இப்பாடல் சோழ மன்னனுக்கு எழுதப்பட்ட பாடல் எனபதையும் சொல்லி இருக்கிறார் எனச் சொல்ல எல்லாரும் மறுப்பேச்சு பேசாமல் அந்த பாடலை சிறந்த பாடலென கூற, மன்னனும் பரிசுகளை அள்ளிக்கொடுத்தார். 
விறகு வெட்டியின்  கிறுக்கலுக்கும்கூட சிறந்த அர்த்தம் சொல்லி பரிசுகளை பெற்றுத்தந்தவர் தமிழ்புலவராம் கம்பர்தான்.  கம்பன் வீட்டு கட்டுத்தறியே பாட்டு பாடும்போது, விறகு வெட்டி பாட்டுக்கா அர்த்தம் கொடுக்க வைக்க முடியாது?!

போதும் பதிவு ரொம்ப நீண்டு போரடிச்சுடும். இத்தோடு பேச்சை நிறுத்திக்கலாம் புள்ள.

என்கிட்ட பேச்சை நிறுத்திக்குறதுன்னா உனக்கு வெல்லமாச்சுதே!
இப்படியே போய்க்கிட்டு இருந்தா கடைசி காலத்துல நம்ம நிலைமை இப்படிதான் ஆகப்போகுது பார்த்துக்க... 

என் ஃப்ரெண்ட் ராஜி இருக்காளே! அவ பொண்ணு க.பிரியங்கா,  ஹலோ எஃப்.எம் வேலூர் கிளையில் ஆர்.ஜேவா செலக்ட் ஆகி இருக்கா. நேத்து (1/7/2018)ல இருந்து வேலூர்ல ஹலோ எஃப்.எம் தனது ஒலிப்பரப்பை துவக்கி இருக்கு

91.5 அலைவரிசையில் காலை 7 முதல் 8 மணிவரை, சில்லுன்னு ஒரு காலை. நிகழ்ச்சியும், மதியம் 2 முதல் 4மணி வரை, மேட்னி மெலோடீஸ்ன்னும் நிகழ்ச்சியை என்ற பொண்ணு நேரலை நிகழ்ச்சியை வழங்குறாங்க.. வேலூர் சுத்து வட்டாரத்தில் 50கிமீ கேட்கும்.
 நிகழ்ச்சியில் கலந்துக்க நினைக்குறவங்க  0416 - 660 66 66. இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க.  வாய்ப்பு கிடைக்குறவங்க நிகழ்ச்சியை கேட்டுட்டு, நிறை குறைகளை சொல்லுங்க. 
வாழ்த்துங்கள் வளரட்டும்.
நன்றியுடன்,
ராஜி

6 comments:

 1. குழந்தைக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள்...கா பாப்பாவுக்கு...

  எங்க வீட்டில் எப்பவும் இந்த fm தான் ஓடுது....

  எல்லா செய்திகளும் மிக அருமை

  ReplyDelete
  Replies
  1. அப்படியா! மிக நல்லது சனு...

   வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிப்பா

   Delete