Wednesday, November 14, 2012

குழந்தைகளால் நிறைந்தது என் உலகம்...,


கடல், யானை, குரங்கு, ரயில், மயில், குழந்தைகள் இது அத்தனையும் பார்க்க பார்க்க சலிக்காது... அதனால சில தொல்லைகள் நாம் அனுபவிச்சு இருந்தாலும் கூட ன்னு என் அம்மா அடிக்கடி சொல்வாங்க.  அது நிஜம்தான் போல. என்னதான் பசங்க பண்றா லூட்டில “ச்ச்சே”ன்னு சலிச்சுக்கிட்டாலும் அவங்க இல்லாம என் வாழ்க்கை முற்று பெற்றிருக்குமான்னு இப்போ யோசிச்சா இல்லைன்னு பதில் கிடைக்கும்.

அதனால, இந்த குழந்தைகள் தினத்தில் நான் ரசித்த சில குட்டீஸ் படத்தை னீங்களும் ரசிக்க பதிவிடுறேன்...,







டிஸ்கி: எல்லா குட்டீசுக்கும் என் குழந்தைகள் தின வாழ்த்துக்கள்

Tuesday, November 13, 2012

தலை தீபாவளி


வந்து போனது தடாலடி தீபாவளி!!
புது தம்பதியினருக்கு இது தலை தீபாவளி...,
மாப்பிள்ளை முறுக்கில் புது மணமகனும்...,
தேவதையின் வரவாய் அந்த புது பெண்ணும்...,
அவள் தாய் வீட்டு அழைப்பை ஏற்று
செல்ல தயார் ஆகிறார்கள்.

அவளோ சிறகடித்து வானில் பறக்கிறாள்...,
தன் தாய் வீட்டிற்கு போவதற்கு!!
தாயின் அன்பும்...,  தந்தையின் பாசமும்...,
கிடைத்தது மணமாகும் முன்பு!!

இப்போதும் கிடைக்கிறது...,  ஆனால்,
பெற்றோரை பிரிந்து வேறு மாநிலத்தில்
வாழுகிறாள்!!  வாடுகிறாள்..., அவர்களின் பிரிவில்.
ஆனால், இன்றோ தீபாவளி கொண்டாட்டம்!!
அந்த, சந்தோஷத்தில் துயரை மறக்கிறாள்??!!

மாப்பிளையும் ,  புது பொண்ணும்...,
அவள் வீட்டை அடைந்தார்கள்.
இல்லை..., இல்லை..., சொர்க்க
வாசலையே அடைந்தார்கள்.

பெற்றோரும், அவள் தங்கையும்,
அவர்களை வரவேற்க அங்கு
ஆனந்த கொண்டாட்டம் ஆரவாரமாய்..,
ஆனந்த கண்ணீரில் நடக்கிறது!!

இனிப்பு பலகாரம் கொடுத்து...,
இன்பத்தை குடுத்தாள் தாய்!!
தங்க மோதிரத்தை பரிசளித்து
மாப்பிளையை கொஞ்சம் தூக்கலாக
கவனித்தார் பெண்ணின் தந்தை!!

மாப்பிளையும் ஆச்சிரியத்தில் மிதக்க??!!
அந்த மோதிரத்தை புது பெண்ணின்
அழகிய மெல்லிய விரலில்
மாப்பிளை மெல்ல மாட்டினார்.
இதை கண்டு, பெண்ணின் பெற்றோர்
புரிந்து கொண்டனர் தன் மகளின்
வாழ்க்கை சந்தோஷமாய் போகிறது என்று??!!

அவளும், அவரின் அந்த காதலில்
உருகினாள் அழகாய் அன்று!!
பெண்ணின் தங்கையோ அவர்கள்
இருவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்க
கை கடிகாரத்தை பரிசளித்தாள்!!
அவர்களுக்கு இன்னும் ஆச்சிரியம்!!
அதை, இருவரின் கையில் மாட்டிவிட்டாள் அவள்.

இருவரும், எழுந்து நின்று
சாமி அறைக்கு சென்று..., கடவுளிடம்
நன்றி சொன்னார்கள் இந்த நாளிற்கு!!
பின், பெண்ணின் பெற்றோரிடம்
இருவரும் சென்று பணிந்து
ஆசிர்வாதம் வாங்கினார்கள்.

அவளின், பெற்றோரும் அவர்களுக்கு
புது ஆடை பரிசளித்தார்கள் தம்பதியினருக்கு...,
தலை தீபாவளி என்பதால் கொஞ்சம்
கவனிப்பு தூக்கலாக இருந்தது
அன்றைய நாளின் தொடக்கம்...,

பின், காலை உணவு உண்ண தயாரானார்கள்
தாயின் கை பதத்தில் சாப்பிட்டு கொல்லை நாளானது!!!
அவளின் எதிர்பார்ப்பு இன்று பூர்த்தியாகபோகுது...,
மல்லிகை பூ இட்டிலியும்,  கார சட்டினியும்...,
கமகமக்கும் ஆட்டுக்கறி கூட்டும் பரிமாறப்பட்டது...,
தித்திப்பான மஞ்சள் நிற கேசரியுடன்.

காலை உணவு உண்டு கொஞ்சம்
அரட்டை அடித்து கொண்டு இருந்தார்கள்.
பின், பெண்ணோ தாயிடம் நலம் விசாரிக்க...,
தாயும் தடபுடலாய் மதிய உணவை தயார்
செய்துகொண்டே உரையாடினாள்  அவளிடம்.

இவள், உதவ வர தாய் தடுத்தாள்...,
போய் கணவரை கவனி என்று கூறி...,
தந்தையோ வாழை இலை வாங்க சென்றார்.
அரட்டை அடித்ததில் நேரம் சென்றது...,

”பட பட பட்டாசு” வைத்து நேரத்தை கழித்தார்கள்!!
பட்டாசு லக்ஷ்மி வெடி வெடித்து குருவி வெடிகள் போட்டு
மகிழ்ந்தனர் அனைவரும் ஆனந்தமாய்!!

விருந்து தயார் ஆனது, நாக்கில் எச்சி ஊருது...,
வாசனை மூக்கை துளைக்கிறது நன்றாய்!!
மிளகு ஆட்டுக்கறி வறுவல்... ,ஆட்டுக்கறி கூட்டு...,
கோழி கூட்டு....,, மிளகு போட்ட முட்டை வறுவல்...,
சத்தான ஈரல் கூட்டு..., ஆட்டுக்கறி குழம்பு...,
கோழி சூப்பு தக்காளியும், எண்ணெயும் மிதக்க..,

ஆரோக்கியமான புதினா துவையல்...,
மொறு மொறு அப்பளம்..., கலர் கலர் வடகம்...,
செமிக்க ரசமும்...,,  தயிரும்.., உளுந்த வடையும்...,
அப்பறம் இனிப்பு பலகாரமும்...,
இப்படி நிரம்பி வலிய மனமும் வேட்டையாடியது...,
 இந்த  படையலை!!

கொஞ்சம் மனம் விட்டு அனைவரும் பேசி...,
அரட்டையடித்து..., குட்டி தூக்கம் போட்டு..,
மாலை காபி குடித்து கிளம்ப தயார் ஆனார்கள்.
இப்போது,கொஞ்சம் அந்த பெண்ணிற்கு??!!

கண்ணீர் வந்தது..., ஆனால், இந்த நாள்
அவளுக்கு சந்தோஷத்தின் மணமாய்!!
இருந்தாதால்..., அவள் கண்ணீரை கட்டுபடுத்தி..,
சந்தோஷமாய் கிளம்பினாள்...,
புகுந்த  வீட்டை நோக்கி...,
பிறந்த வீட்டில் விடை பெற்று!!



டிஸ்கி: என் நாத்தனாருக்கு இது “தலை தீபாவளி”.  அதனால, தொபுக்கட்டீர்ன்னு இந்த கவிதை தோனுச்சு. கவிதைக்கு மேச்சா போட்டோ வேணும்ன்னு கூகுள்ல கேட்டா, அது, இந்த ஃபோட்டோ ஒண்ணுதான் தம்பதியாய் தீபாவளி கொண்டாடுற மாதிரி இருந்துச்சு. அதனால இந்த படத்தையே சுட்டுட்டேன்.

Monday, November 12, 2012

”டாமால்...., டுமீல்..., பட்டாசுக் கடை” - அறிமுகம்-பதிவர்கள் வெடி



வாங்க சார்! வாங்க என்ன வேணும்?!

பாட்டாசு கடைல பட்டாசு வாங்காம வேறென்னத்தை வாங்க வருவாங்க?! என் பொண்ணுக்கு இது தலை தீபாவளி, அதனால, எப்பவும் வர்ற வெடிலாம் இல்லாம புதுசா வெடிங்க எதாவது வந்திருக்கா?!


ஓ ஓ வந்திருக்கு சார்! “தமிழ் பதிவர்கள் வெடி” ன்னு புதுசா வந்திருக்கு. பார்க்குறீங்களா?!

அட! பேரே வித்தியாசமா இருக்கே! எதோ சாம்பிளுக்கு ஒரு வெடியை காட்டுப்பா...,

சார் இது தனித்தனியா தெரிஞ்ச்சலும், தனித்தனி  ஸ்பெஷாலிட்டி குணத்தோட இருந்தாலும்...,  ஒரு செட்டாத்தான் கிடைக்கும்.  தனியா இருக்கும்போது அமைதியா இருக்கும். ஆனா, ஒண்ணு சேர்ந்துட்டாலோ சும்மா கலக்கலா இருக்கும் சார்.

கேக்கவே நல்லா இருக்குதே! சரி, ஒரு பாக்ஸை எடுத்துக் கொடுப்பா! ஒவ்வொரு வெடிக்கும் என்ன ஸ்பெஷல்ன்னு கொஞ்சம்  சொல்லேன்!

சார்! இதுக்கு பேரு ”நாஞ்சில் மனோ”ன்னு பேரு..., எல்லா பட்டாசும் வெடிச்சா ஸ்டார் போலதானே  நெருப்பு பொறி பறக்கும். ஆனா, இந்த பட்டாசுல ஸ்டாருக்கு பதிலா அருவா, கத்தின்னு டெர்ரர் அயிட்டம்லாம் பறக்கும். உங்களுக்கு யார் கூடவாவது சண்டை இருந்தா அவங்க வீட்டு வாசல்ல கொளுத்துங்க. அத்தோட அவன் தீர்ந்தான்.

ஓ ஓ! இந்த பட்டாசென்ன குட்டியூண்டு கேப்ஸ்யூல் சைஸ்ல இருக்கு..,. இதுவா, இதுக்கு பேரு “மின்னல் வரிகள்”. இதோட ஸ்பெஷல் என்னன்னா, எல்லா பட்டாசோட ஸ்பெஷலையும் அதோட தன்மை மாறாம அப்படியே இந்த சின்ன பட்டாசுக்குள் இருக்கும். இந்த பட்டாசுலாம் சுஜாதா, பழைய குமுதம், விகடன் பேப்பர்ல செஞ்சதும் இதோட ஸ்பெஷல்.

ம் ம் ம் இதென்னப்பா கண்ணை பறிக்குற கலர்ல இருக்கு.


                                             

இதுக்கு பேரு “வீடு திரும்பல்” இதோட ஸ்பெஷல் என்னன்னா.., டார்க் கலர்லதான் வரும்.  ரெண்டாவது இதை, உங்க வீட்டு வாசல்ல  பத்த வச்சா, குளு மணாலி, சென்னைல இருக்குற ஓட்டல், புதுசா பார்க்குற மனுசங்க முன்னாடிதான் வெடிக்கும். ஆனா, இதை பத்த வைக்கும்போது டிவி ஆன் பண்ணி இருந்தா! இது வெடிக்கவே வெடிக்காது. டிவி முன்னாடி  போய் உக்காந்துக்கும்.

ஹா! ஹா! இப்படி ஒரு வெடியா? 

அட, இதை விட சூப்பரா இன்னொரு வெடி இருக்கு சார்!  இதுக்கு பேரு ”வசந்த மண்டபம்”ன்னு பேரு.., இது  பத்த வெச்சா, எப்பவும் போல டமால்.., டுமீல்ன்னு சத்தம் வராது. சுத்த தமிழ்ல கவிதை படிக்குற சத்தம்தான் கேட்க்கும். கவிதைக்கேத்த அழகான படங்கள் பட்டாசு வெடிச்சு வர்ற பேப்பர்ல இருக்கும்.


 ஓ ஓ இதென்ன பார்க்க ஃபாரீன் பட்டாசு போல இருக்கே! புது விதமா இருக்கே!

அதெல்லாம் ஒண்ணுமில்லை சார். இது நம்ம மதுரைல தயாரானதுதான்.  ”அவர்கள் உண்மைகள்”ன்னு ஆனா, அமெரிக்காவுல பத்த வெச்சாதான் இந்த பட்டாசு இங்க வெடிக்கும். அரசியல், பொண்டாட்டிக்கிட்ட வாங்குன அடி, பல்ப், நெட்டுல சுட்ட வீடியோ கிளிப்பிங்குன்னு செம வெரைட்டி காட்டும்.

அதுக்கடுத்து இந்த வெடிக்கு பேரு “கோவைநேரம்” . இதை உங்க வீட்டு வாசல்ல பத்த வெச்சா , ஹோட்டல்லதான் போய் வெடிக்கும். அந்த ஹோட்டல்ல கூட அம்மணிங்க நிறைய இருக்கனும்.., நான் வெஜ் ஹோட்டலா இருந்தா முக்கியத்துவம் தரும். சமயத்துல மலேசியா, இந்தோனிஷியான்னு வெளிநாட்டுகள்லலாம் போய் வெடிக்கும்..

அடுத்து இந்த பட்டாசு பேரு ”மயிலிறகு”    இதை பத்த வச்சா, யூனிஃபார்ம் போட்ட பொண்ணுங்களும், காஜல், சமந்தா போட்டோ எங்காவது இருந்தா அங்க போய் வெடிக்கும்..,

இதென்னப்பா ஒரே  வெடி ரெண்டு கெட்டப்புல இருக்கு?!

இதுக்கு பேரு “தூரிகையின் தூறல்” இந்த பட்டாசோட ஒரு பக்கம், அழகா மழுமழுன்னு இருக்கும். இன்னொரு பக்கம் மெல்லிசான பேப்பர்ல தாடி போல தொங்கும். அது மட்டுமில்லாம,  இதை பத்த வெச்சா ஃபேஸ்புக்குல முனகுனது, பெரியாரை பத்தி பேசுனதுலாம்  சவுண்டா வரும். எந்த பட்டாசுலயும் இல்லாத ஒரு ப்யன் இதுல இருக்கு. அது என்னன்னா, இந்த பட்டாசு தயாரிச்ச பேப்பர்லாம், டிஎன்பிஎஸ்சி பரிட்சை எழுதுறவங்க நோட்ஸ்ல இருந்து செஞ்சது.

அடடா! இப்படியும் இதுல ஒரு யூஸ் இருக்கா?! இதென்ன ஒரே பேப்பர்ல ரெண்டு பட்டாசு இருக்கு?!

இதுல பெருசா இருக்குற பட்டாசு பேரு “காணாமல் போன  கனவுகள்” இந்த பட்டாசுல ஸ்பெஷல்ன்னு ஒண்ணுமில்லைனாலும் சத்தம் மட்டும் பலமா இருக்கும். இந்த பட்டாசோடு மகள் பட்டாசுதான் இந்த சின்ன பட்டாசு . இதோட பேரு “தேவதையின் கனவுகள்” அதிகமா இது கிடைக்காது. ஆனா, அவங்கம்மா பட்டாசு ரொம்ப சத்தம் போட்டால் இது உடனே பதில் குடுத்து ஆஃப் பண்ணிடும். இந்த செட்டுலயே சின்ன பட்டாசு இது. அதனாலயே எல்லா பட்டாசுக்கும் இது செல்லமாக்கும்.

ஓ ஓ ஓ இதென்ன புதுசா இருக்கு?

இதுக்கு பேரு “கவிதை வீதி” இதுல என்ன ஸ்பெஷல்ன்னா நம்ம செல்போனுக்கு வந்த மேசேஜ்லாம் இந்த பேப்பர்ல இருக்கும். இதுவும், அரசியல், சினிமா, மொக்கைன்னு கலந்து கட்ட்டும். சில சமயம் கவிதையும் இந்த பேப்பர்ல இருக்கும்.

இதென்னங்க ஒரு வெடி கொஞ்சம் கெத்தா இருக்கு?!

இதுக்கு பேரு “தென்றல்”  இந்த பட்டாசுல இருக்குற பேப்பர்ல வெறும் கவிதையா இருக்கும். அந்த கவிதைலாம் தேத்தி புத்தகமா போட்டுட்டாங்களாம். அதான் இந்த கெத்து.. ”காணாமல் போன  கனவுகள்” பட்டாசு எப்படி வெடிக்குதோ! அதேப்போல சில சமயம் சத்தமா வெடிக்கும். எப்ப பாரு அந்த பட்டாசுக்கூட போட்டிக்கு போய்க்கிட்டே இருக்கும்.

இதென்னங்க, இந்த பட்டாசுல,  கம்ப்யூட்டர்ல வர்ற மாதிரி புரியாத இங்க்லீஷ்ல இருக்கு ?!

ஆமாங்க இந்த பட்டாசோட பேரு “தமிழ்வாசி” இந்த பட்டாசோட  பேப்பர், பெரும்பாலும் ஜாவா, C++nnu கம்ப்யூட்டர் சம்பந்தமான புத்தகத்துல இருந்ததா இருக்கும்.  இப்போ சமீபமா அதிகமா எங்கயும் கிடைக்குறதில்லை சார்.

ஐயோ இந்த பட்டாசு பார்க்கவே பயமா இருக்கு.., இதை மட்டும் எடுத்துடேன்.

சார், பார்க்கத்தான்,  இந்த பட்டாசு கரடு முரடா இருக்கும். ஆனா, அதிகம் சத்தமில்லாம ஆபத்தில்லாத பட்டாசு. முன்னலாம், சினிமா பாட்டு புஸ்தகம் வருமே!? அந்த புக் பேப்பர்ல இருந்து இது தயாரிச்சது. இங்க இருக்குற பட்டாசுகளிலேயே ”ISI"  முத்திரை வாங்குன பட்டாசு இது மட்டும்தான். இதுக்கு பேரு ”திண்டுக்கல் தனபாலன்”  இந்த பட்டாசு செம செம சுறுசுறுப்பு சார்.  மத்த வெடிங்க எப்படி வெடிக்குதுன்னு பார்த்து கருத்துலாம் சொல்லும். செம சினிசியரான பட்டாசு சார்.

அவ்வளவுதானா?! 

ஐயோ சார், இன்னும் இருக்கு, அதெல்லாம் சொல்லிட்டே இருந்தா அடுத்த தீபாவளி வந்துடும். நானும் வியாபாரத்தை பார்க்கனுமில்ல. அதனால வீட்டுக்கு போய்.., நீங்க ஒரு பட்டாசை பத்த வைங்க, அதுங்களே லிங்க் குடுத்து.., போய்க்கிட்டே இருக்கும். நீங்களே ஆஃப் பண்ணாத்தான் உண்டு. அவ்வளவு பட்டாசு இருக்குங்க சார்.

சரிப்பா.., ஒரு செட் “பதிவர் பட்டாசு” குடு. விலை எவ்வளவுப்பா?!

இது விலை மதிப்பில்லாதது சார். இதை விலை குடுத்தெல்லாம் வாங்க முடியாது.. உங்க பொண்ணு  தலை தீபாவளிக்கு என்னோட சீரா இருக்கட்டும் எடுத்து போங்க சார்.

                                           

வெடிகளை பஸ், ரயில்லலாம் எடுத்து போகாதீங்க. ராக்கட்டுகளை பாட்டில்லயும் குடிசைங்க இருக்குற இடத்துலயும்  வெச்சு வெடிக்காதீங்க...,  வெடிகளை பத்த வெச்சு தூக்கி போடாதீங்க.., கம்பி மத்தாப்பு, பென்சில், சாட்டை, சங்கு சக்கரம் கொளுத்தும்போது செருப்பு போட்டுக்கோங்க.., கம்பி மத்தாப்பு கொளுத்தி முடிச்சதும் தூக்கி போட்டுடாம, தண்ணில முக்கி கால் படாத இடத்துல போடுங்க. குழந்தைங்க பட்டாசு வெடிக்கும்போது.., பெரியவங்க யாராவது ஒருத்தர்  கூடவே இருங்க.., பெரிய ஊதுவத்தி வெச்சு வெடிகளை கொளுத்துங்க. 

நன்றிப்பா! பொண்ணும், மருமகனும் வந்திருப்பாங்க. நான் வரட்டுமா?!

விபத்தில்லாம தீபாவளியை எச்சரிக்கையா கொண்டாடி மகிழுங்க சார். இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சார்.

டிஸ்கி: ”தலைதீபாவளி”  கொண்டாடும்  புது மண தம்பதிகள் எல்லாருக்கும்..., ” தலைக்கு குளிச்சி”  தீபாவளி கொண்டாடும் மற்ற எல்லாருக்கும் “எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை” சொல்லிக்குறனுங்க.

Saturday, November 10, 2012

உன்னை, நான் நேசிக்க வைத்த “ஆயிரம் காரணங்களுள்” சில...,


                                   
 ஆசை மொழியானாலும், சண்டையானாலும் நான் சொல்ல வரும் கருத்துக்களை, என்னை முந்திக் கொண்டு அழகான வார்த்தைகளால் கூறிவிடுகிறாய்...., அந்த ”புரிதல்”

உன்னை நான் எதற்காகவும், எங்கும் விட்டுக் கொடுப்பதில்லை. அந்த என் உள்ளுணர்வு 

யாரையுமே கண்ணோடு கண் கொண்டு பார்த்துப் பேசும் என்னால் உன்பார்வையை எதிர்கொள்ள முடியாமல், என் பார்வையை விலக்கிக் கொள்ள வைக்கும் ஆயிரமாயிரம் வாட்ஸ் மின்சாரத்தை தேக்கி உள்ள உன் பார்வை .

என் உணர்வுகள் அனைத்தும் உன் தோளில் மட்டுமே இளைப்பாறவேண்டும்என்று எண்ணும் உன் கோரிக்கை.  

 ஆனால் நீ மட்டும் உன் உணர்வுகளை என்னிடம் பகிராமல் இருக்கும் உன் அகங்காரம்

 என் வாழ்க்கைத் துணைக்கான அத்துனை தேடல்களின் இடத்தையும்ஆக்கிரமித்த உரிமை.

 உன்னோடு நானும், என்னோடு நீயும் இருக்கும்போது நாமாகிப் போனோமேஅந்த பன்மை

உனக்கு எதெல்லாம் பிடிக்காது என்பதை சொல்லாமல் சொல்லும் உன் கோபம்

 தவறு என்மீது இல்லையென்றாலும்.., என்னை ஒரு வார்த்தை, பதில்கூட பேசவிடாமல் செய்துவிடும் உன்
திறமை.

நாமிருவரும் சந்திக்கையில் நாம் பேச இயலா சூழலில் இருந்தால், நமக்குமுன்நம் கண்கள் பேசிவிடும் அந்த
கண்களின் மொழி.

பொறாமைக்கோ , கர்வத்திற்கோ துளிகூட நம்மிடம் இடமில்லை. வேறென்னவேண்டும் வாழ்வில்.

 “டா” போட்டு யார் பேசினாலும் உனக்கு பிடிக்காது. ஆனால் நான் மட்டும்உன்னை நான் பார்த்த நாள் முதல் கொண்டு ”டா” போட்டு தான் பேசுகிறேன். எனக்குமட்டும் நீ அளித்த அந்த
விதிவிலக்கு

 யார் அதட்டலுக்கும் அசராத நான், உன் அதட்டலுக்கு மட்டும் அடைந்து விடும்
சரண்

 திரைப்படங்கள் நம்மிடம் தோற்றுப் போகும் நாம் பேசினால். நம் ஒரு நாள்சண்டையிலும், சமாதானத்திலும் ஒரு திரைப்படம் அளவிற்கு இருக்கும் வசனங்கள்

சோகங்களில் நான் சுருண்டு விழும்போதெல்லாம் ஆலம் விழுதாய்தாங்குவாய். துன்பங்கள் என்னுடையதென்றால், வலிகளை உன்னுடையதைமாற்றி கொள்ளும் நேசம்

 நம் ஐந்து விரல்களும் ஒன்றோடு ஒன்றாய் இருக்கையில் என் கோடிதுன்பங்களும் கால் தூசிதான். அந்த
வலி நிவாரணி

 சொன்னதையே நான் திரும்ப திரும்ப சொன்னாலும் , அலுக்காமல் கேட்கும்உன் பொறுமை

 இனி உன்னிடம் பேசவே மாட்டேன் என முடிவெடுத்து தொலைப்பேசியைவைத்த சிறிது நேரத்தில், மீண்டும் தொலைப்பேசியில் அழைத்து மாத்திப்பண்ணிட்டேன் என வழிகையில் , புரிந்துக் கொண்டு அமைதியாய் சிரிக்கும் ஒரு
குறுஞ்சிரிப்பு

 "
நீயும்" வேண்டும் என்று ஆரம்பித்து, " நீ" வேண்டும் என்று நீண்டு இப்போதுநீ மட்டுமே" வேண்டும் என்றில் வந்து நிற்கும் என் பாதை

 சரியோ? தவறோ? என் பாதைகள் தெரியவில்லை. வழித்துணையாய் நீஇருக்கிறாய் என்று நம்பும் என்
நம்பிக்கை

 என் பைத்தியக்காரத்தனம் அத்துனையும் உனக்கு பிடிக்கும், பின் எப்படிஉன்னை எனக்கு பிடிக்காமல் போகும். என் பைத்தியக்காரத்தனத்தை சகித்துக்கொள்ளும் உன் பொறுமை

 என் எந்த செயலையும் நீ கேலி செய்வதில்லை. அப்படியே என்னைஏற்றுக்கொண்ட
மனப்பாங்கு

 இறுக்கமாக விரல்களை பற்றிக் கொள்ளும்போது என் வலிகள் தெரிவதில்லை. எங்கே கற்றுக் கண்டாய் அந்த
வித்தையை

 அன்பு மட்டும் போதாது காதலுக்கு என்று சொல்லி என் மீது நீ வைத்த
நம்பிக்கை

 என்னை அழ வைப்பவன் நீ. என்னை சிரிக்க வைக்கவும் தெரிந்த
மாயாஜாலக்காரன்

என்னோடு கடைசி வரை நீ நிலைத்திருப்பாயா?! என்று எண்ணும் என் 
ஏக்கம்

 என் பாரங்கள் அத்துனையும் கரைத்துவிடும் உன் ஒற்றை சொல் ----------  காதல் என்பதற்கு என்ன அர்த்தமோ, அதைவிட அதிகமாகவே நீ தந்த அந்த கொடை.   

 என் ஆதி முதல் அந்தம் வரை உனக்கு அத்துப்படி.., ஆனால் உன்??!! அந்த புரியாத புதிர் .

எதன்பொருட்டோ பாராட்டவோ, திட்டவோ, இல்லை கருத்துஏதாவது தெரிவிப்பாய் என காத்திருக்க கிணற்றில் போட்ட கல்லாய் இருக்கும்
விட்டேற்றித்தனம்.

நான் உன்னிடம் நிபந்தனையிட , நமக்குள்ளே எந்த நிபந்தனையும் வேணாம்னு கூறி ...., உன் நிபந்தனையை என்மேல் திணிக்கும்
ஆளுமை

தெரிந்தோ, தெரியாமலோ என்மீது படிந்துவிட்ட உன்
சாயல்

எலியை பிடிக்கவும், தன் குட்டியை தூக்கவும் ஒரே பற்கள்தான் பயன்படுகிறதுபூனைக்கு. அதுப்போன்ற உன்
கரங்கள்.

 கடவுளும் நீயும் ஒன்று. ஏனெனில், இருவருமே எதிர்பார்ப்பவற்றை தராமல் ஏமாற்றும் ஏமாற்றுக்காரர்கள்.

 நாளை என்ன நடக்குமோ யாமறியேன். ஆனால் நடந்த, நடந்துக்கொண்டிருக்கும் இந்த நிமிடங்கள் மறக்க முடியாதவை. என்னோடு நீ இருந்ததால் மட்டும்

காதல் என்பது எவ்வளவு தூயமையானதோ அதைவிட அதிக தூய்மையை கண்டேன் நான் உன்னிடம்

 உன்னை பார்க்கும் ஒவ்வொரு முறையும் என் இதயத்துடிப்பின் துடிப்பு ஒன்று காணாமல் போய்விடுகிறது. திரு டா

 எவ்வளவு பாரங்கள் இருந்தாலும்
எல்லாம் தீர்ந்து இலகுவாகிறது மனது நீ அருகில் இருக்கையில் மட்டும்.

 மனத்திலும், உடலிலும் எத்தனை வலி இருந்தாலும் சாய்ந்த உடனே வலிகளை போக்கிவிடும் உன்
மடி

இந்த நிமிடமே நான் இறந்துகூட போவேன் சந்தோசமாய். ஏனெனில் என்மீதுஅன்பு செலுத்தும்
தேவனை கண்டுக் கொண்டேன், கண்டு கொண்டேன்.

வெகுநாட்கள் காணாமல் இருந்துவிட்டு பார்க்கும்போது பிணைத்துக்கொள்ளும் கைகளில் உள்ள
நெருக்கம்

 கண்டு விட்டு பிரியும்போது 'திரும்பி பார்க்கக் கூடாது" என எனக்கு நானேநூறு முறை சொல்லியும், சொல்பேச்சுக் கேளாமல் அடமாய் திரும்பிபார்க்கையில்..., எப்படியும் நான் திரும்பிப் பார்ப்பேன்..., கையசைக்கலாம் எனக்பார்த்திருக்கும் உன் காத்திருப்பு
 
 கிறுக்குத் தனமாக எதாவது செய்து விட்டு உன்னிடம் நான் வாங்கும்
குட்டு, வலிக்கும். ஆனா வலிக்காது

 என்னை பொறுத்தவரை வண்டி ஓட்டுவது ஒரு சிலருக்குதான் அழகு. அப்படிஓட்டுபவர்களில் நான் ரசித்தவர்கள் ஒரு சிலரே. அதிலும் உனக்கே
முதலிடம்.

44. என்ன தவறு நான் செய்தாலும் , உன்னிடம் எனக்கு கண்டிப்பாக உண்டு
மன்னிப்பு. 

உன்னிடம் ஏதாவது ஒரு கோரிக்கை வைத்து விட்டு, கண்டிப்பாய் எனக்காக இதை செய்வாய் என நம்பி இருக்கும் என் ஏமாளித்தனம்

 என் எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்யாவிட்டாலும்... கையை சுடும் என்றாலும் தீயை தொடும் பிள்ளைப் போல் மீண்டும் , மீண்டும் உன்னிடமே எதிர்நோக்கும் என் எதிபார்ப்பு

இந்த கேள்விக்கு இந்த பதில்தான் சொல்லுவே..., இப்படி பேசினால்இப்படி எதிர்கேள்வி கேட்பே னு நம்பி பேசினால் கண்டிப்பாய் அந்த கேள்வி பதிலை choice ல விட்டுவிடுவாய்.

அந்த choice களை இன்றுவரை தொடர்ந்து வரும் உன் சாகசம்.

 ஆனால் அந்த choice களை நீ தொடர்வதால் உன்னிடம் இன்னும்கூட சொல்லாமலே விட்ட ரகசியங்கள்
  நாம் அறிந்தோ அறியாமலோ நமக்குள் ஒன்றாய் அமைந்துவிட்ட ரசனைகள்.
 
 தொலைப்பேசியில் தான் பேசுவோம். முகம் காணாவிட்டாலும் என்உணர்வுகளை அப்படியே உள்ளது உள்ளபடி சொல்லும் உன்
கெட்டிகாரத்தனம்.
எனக்கு பிடிக்காது என அந்த டாபிக்கையே விலக்குவதாக்..., நடிக்கும் அந்த
நடிப்பு

  எனக்கு பிடிக்காத டாப்பிக்கை நீ தொடவே மாட்டேன் னு நம்பி இறுமாந்திருக்கையில், அதை தெரிந்தும் திடுமென்று அதைபத்தி பேசி என்னை நிலைகுலைய வைக்கும்அந்த திமிர் .

 யாரையும் நம்பாதே னு சொல்லி, உனக்கே தெரியாமல்.., உன்னை மட்டுமே நம்பணும்னு திணிக்கும் உன்
திணிப்பு.

 உன்னை மட்டுமே நான் கொண்டாடனும்னு நினைக்கும் உன்
ஆசை

ஆனால், அதுபோல் நீ நடக்காமல் என்னை அவமதிக்கும் உன்
செயல்
வேறெதற்கும் பிறக்காமல் உன்னை காதலிக்க மட்டுமே பிறந்த மாதிரி இருக்கும்என் வேட்கை

இளங்கதிர் புறப்படும் வரை நீண்ட தொலை பேசி உரையாடல்கள். விடிந்தப்பின்னும்..., முடியாமல் தொடர்ந்த..., குறுஞ்செய்திகள்..,
 
வேண்டாம் முடித்துக் கொள்வோம் என தினம் தினம் முற்றுப்புள்ளி வைத்து அதுவே இன்று தொடர்புள்ளியான அதிசயம்.

  சட்டென்று கோபப்படும் நான். நீ என்ன பிழைசெய்தாலும் உன்மீது எனக்கு இதுநாள் வரை வராத கோவம்.
 
கண் குவளைமலர், சிறப்பு தாமரைன்னு கவிஞர்கள் மலருடன் ஒப்பிடுவார்கள். அதுப் போல் உன்னை மலருடன ஒப்பிட சொன்னால் அனிச்சைமலருடன்தான் ஒப்பிடுவேன்.

அனிச்ச மலர் கூட முகர்ந்து பார்த்தால்தான் வாடும். ஆனால் மனதிற்குள் சிறிதாக, நான்  மருகினாலும் உன் முகம் வாடிவிடும். அப்படி என்றால் உன்னை எதனுடன் ஒப்பிடுவது என தெரியாமல் திணறும் என் மனது. 

  நான் சொல்றதெல்லாம் பொய்., ரீல் விடுறேன்னு தெரிஞ்சும் என்னைநம்பி உக்காந்து படிக்குறே பாரு அந்த வெகுளித்தனம்.


இப்படி பொது இடத்துல எழுதலாமான்னு என்மீது கோபப்பட்டுக்கொண்டே இதை சிரித்து  ரசிக்கும் உன் சிரிப்பு

Thursday, November 08, 2012

நான் சின்ன புள்ளையா இருக்கும்போது!!...

                                      

1. சத்துணவு சோறெல்லாம் நல்லா ருசியா இருக்கும்ன்னு நினைச்சுப்பேன்!!...,

2. நான் இருக்குற ஊருல மட்டும்தான் நிலா இருக்குன்னும்.., நான் எங்க போனாலும் கூடவே வருதுன்னும் நினைச்சுப்பேன்!!...,

3. டீச்சர்லாம் குடை வெச்சுக்கிட்டும்.., கண்ணாடி போட்டுக்கிட்டும் உர்ர்ர்ர்ருன்னு இருப்பாங்கன்னு நினைச்சுப்பேன்!!...,

4. அண்ணன், தங்கச்சிலாம் “பாசமலர்” படத்துல வர்றா மாதிரி அன்பா, இருப்பாங்கன்னும நினைச்சுப்பேன்!!..,

5. சினிமா பார்க்கும்போது. பெரிய பெரிய பூதம்லாம் தியேட்டரை தலையில தூக்கிகிட்டு போய் காட்டுதுங்க, படம் முடிஞ்சதும் மறுபதியும் இங்கயே கொண்டு வந்து விட்டுடுதுங்கன்னு நினைச்சுப்பேன்!!...,

6. பெரியவளானதும், நம்பியார், அசோகன், கிட்டியை எல்லாம் கொன்னுடனும் நினைச்சுப்பேன்!!...,

7.  ஆம்பிள்ளை போலீசெல்லாம் கெட்டவங்கன்னும், பொம்பளை போலீசெல்லாம் நல்லவங்கன்னும் நினைச்சுப்பேன்!!...,

8.  பெரியவளானதும் வைஜெயந்தி ஐபிஎஸ் போல பெரிய கான்ஸ்டபிள் ஆகி கெட்டவங்களைலாம் பறாந்து பறந்து அடிக்கனும்ன்னு  நினைச்சுப்பேன்..., (முக்கியமா எங்க ஸ்கூல் பியூனை.., அவந்தான் எங்க வூட்டு பக்கத்துல குடியிருந்துக்கிட்டு அங்க நடக்குறதை இங்கும்.., இங்க நடக்குறதை அங்கும் போட்டு குடுக்குறது!!...,

9. கொசுவை ஒழிக்க, தினமும் பத்து கொசு அடிச்சு கொண்டு வந்து காட்டனும்ன்னு அரசங்கமே சட்டம் போட்டு ஊருக்கு ஒரு ஆஃபீஸ் வெச்சு குறிச்சுக்கனும்ன்னு நினைச்சுப்பேன்!!...,

10. காலேஜ் படிச்சு ஒரு டிகிரி வாங்கிட்டாலே வேலை கிடைச்சு ஒரே ப்ப்ப்ப்ப்ப்பணக்காரங்களாயிடலாம்ன்னு நினைச்சுப்பேன்!!..,

11. சாமிலாம் பெரிய சைஸ் ஜல்லடைல ஊத்துற தண்ணிதான் “மழை”ன்னு நினைச்சுப்பேன்!!...,

 12. பெரியவளாகி கல்யாணம் கட்டிக்கிட்டு வூட்டுக்காரரையும்.., புகுந்த வூட்டினரையும் பத்திரமா பார்த்துக்கிட்டு நல்ல பொண்ணுன்னு பேரெடுக்கனும்ன்னு நினைச்சுப்பேன்!!...,

13.  எங்க ஊரு மணியக்காரருக்குதான் எல்லா ”பவரும்” இருக்கும்ன்னு நினைச்சுப்பேன்!!....,

14. எங்க ஊரு பூசாரிக்கிட்ட போய் மந்திரிச்சாலே எல்லா வியாதியும்.., சரியாகிடும்ன்னு நினைச்சுப்பேன்!!...,

15. எங்க பக்கத்து வீட்டு கார்த்தியண்ணாக்குதான் எல்லாமே தெரியும்ன்னு நினைச்சுப்பேன்!!...,

16. ஃபிளைட்  ஒரு குறிப்பிட்ட உயரத்துக்கு மேல போய் நின்னுக்கும்.., பூமி சுத்திக்கிட்டு வரும்போது எந்த நாட்டுல இறங்கனுமோ அப்போ இறங்கி கீழ வந்துடும்ன்னு நினைச்சுப்பேன்!!...,

17. கல்யாணம் கட்டிக்கிட்டா “அப்பா”வைத்தான் கட்டிக்கனும்ன்னு நினைச்சுப்பேன்!!...,

18. அடுப்புல குண்டானை வெச்சு, பருப்பு, காய், மிளகாய்த்தூள் போட்டு கொதிக்க வெச்சா அதான் சாம்பார்ன்னு நினைச்சுப்பேன்!!...,

19. உலகத்துலேயே ருசியான பலகாரம் “தேன் மிட்டாயும், கலர் அப்பளமும்”தான் நினைச்சுப்பேன்!!....,

20.மெட்ராஸ், பெங்களூர், கல்கத்தாலாம் வெளிநாட்டுல இருக்குன்னு நினைச்சுப்பேன்!!..,

                                                                                                                        (தொடரும்...., )

              

இந்த தீபாவளியை மகிழ்ச்சியா கொண்டாட.., புது விதமான ”பதிவர்கள் பெயர் தாங்கிய வெடிகள்” அறிமுகம்  நமது தளத்தில் திங்களன்று....,