Thursday, July 26, 2018

ஜெராக்ஸ் காப்பி - கைவண்ணம்

கிராஃப்ட், தையல் வேலை, கோலம்லாம்தான் கைவண்ணத்துல சேருமா என்ன?!  எழுதுறதும் கைவண்ணத்துலதான் சேரும்ன்ற நம்பிக்கை எனக்கு. அதான் முகநூலில்  பகிர்ந்ததுலாம்  இங்க பதிவாக்கி இருக்கேன்... மத்தபடி, உடம்புக்கு முடிலன்னு கிராஃப்ட் செய்யாமலாம் இல்ல. 

சில நாட்களுக்கு முன் ஒருவேலையா சி.எம்.சி  மருத்துவமனைக்கு போய் இருந்தேன். என்னாக்கூட என் பெரிய பொண்ணும் வந்திருந்தா.  எங்கக்கிட்ட வந்த ஒரு அம்மா, என் பொண்ணுக்கு டயாலிஸ் பண்ணி இருக்கு, வேற ஹாஸ்பிட்டல் போகனும்.ஒரு முன்னூறு ரூபா இருந்தா கொடுங்கம்மா, ஆட்டோக்கு ஆகும்ன்னு கேட்டாங்க. அந்தம்மாவை  பார்க்க பாவமா இருந்துச்சு. நாங்களும் கொடுத்து விட்டோம். 

சில நாட்கள் கழித்து மீண்டும் சி.எம்.சிக்கு போய் இருந்தேன். இந்தமுறை அப்பா கூட வந்திருந்தார்.  அதே இடம்.... அதே அம்மா... அதே டயலாக்... என் அப்பா, நூறு ரூபா கொடுக்க போனார்...

நான் அந்தம்மாக்கிட்ட, 

டயாலிஸ் பண்ணுன பொண்ணை  நீங்க ஏன்மா ஆட்டோவில்  தூக்கிட்டு போகனும்?! நாங்க கார்லதான் வந்திருக்கோம்(சும்மாதான் சொன்னேன்). பாப்பாவை அதுலயே வசதியா கூட்டிட்டு போய்டலாம்ன்னு சொன்னேன். அதுக்கு அந்தம்மா மாலைலதான் கூட்டி போவோம். இப்ப டயாலிஸ் நடந்திட்டிருக்கு.  அதுவரைக்கும் நீங்க இருப்பீங்களா?!ன்னு ஜகா வாங்கிச்சு.  இல்ல, எனக்கும் வேலை இருக்கு. நான் மாலை வரை இங்கதான் இருப்பேன்னு சொன்னேன். இருங்க என் வீட்டுக்காரரை கேட்டு வரேன்னு  சொல்லிட்டு போனவங்க... போனவங்கதான்.

 எப்படிலாம் ஏமாத்துதுங்க!!!! இனி யாராவது நிஜமாவே உதவி கேட்டால் செய்ய மனசு வருமா?! என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா!!!

கடை, ஸ்கூலுக்கு பிள்ளைகளை கூட்டி வர நைட்டி போட்டுக்கிட்டு போறப்பொண்ணுங்களை கிண்டல் பண்ணும் சமூகம்....
கடை, பேங்க், ஹாஸ்பிட்டல், ஸ்கூல், ஹோட்டல்ன்னு அரை டவுசர் போட்டுக்கிட்டு வரும் ஆண்களை ஒன்னும் சொல்றதில்லையே! அது ஏனுங்க?!
என்னவொரு ஆணாதிக்க சம்முவம்?!
குடிச்சா கசக்கும், விர்ர்ர்ர்ர்ன்னு இருக்கும் தெரிஞ்சுதானே குடிக்குறீங்க!! அப்புறம் எதுக்கு குடிச்சு முடிச்சதும் தலையை ஆட்டுக்கடா மாதிரி ஆட்டுறீங்க?!

உனக்கெப்படி இது தெரியும்ன்னு கேக்காதீங்கப்பு. செங்கல் சூளைக்கூ ஒரு வேலையா போய் இருந்தபோது அருகிலிருந்த டாஸ்மாக்கை, பொழுது போகாம ஒன் ஹவர் வாட்சிங்க்ல தெரிஞ்சுக்கிட்டது..
பெண் கணவனுக்கு அடங்கியவள், வீட்டுக்கு உழைப்பவள்ன்னு ஒரு சாராரும்... பெண் போகப்பொருள்ன்னும் ஒரு சாராரும்.. பெண் புனிதமானவள், சகலமும் அவளே, அவளை கொண்டாடனும், மதிக்கனும்ன்னு இன்னொரு சாராரும்... சொல்லிட்டு, கட்டக்கடைசியா அவளை மனுஷியா மட்டும் பார்க்கலைன்னு மட்டும் இன்னிய சமூக நிலவரம் சொல்லுது.
உன்னைக்காண வந்து
உன்னிடமும் சேராமல்
வந்த வழியும்
மறந்து அல்லாடிக்கொண்டிருக்கும்
மனதிடம் எப்படி சொல்வேன்?!
அங்கே அதற்கு இடமில்லையென!!!
................................
அன்புக்குரியர்வகள்
துரோகம் செஞ்சா
கோவிக்காதீங்க.

நம்ம அன்பே அவங்களை
ஒண்ணும் செய்யாதபோது

கோவம்தானா மாற்றத்தை 

உண்டு பண்ணிடபோகுது?!

..............................
தலைக்குமேல் தூக்கி வைத்து கொண்டாடவும் முடியாம...
தலைய சுத்தி வீசவும் முடியாதொரு உறவு எல்லோருக்குமே இருக்கும்தானே?!
..........................

அன்பை அள்ளி தந்துவிட்டு அனாதை போல் தவிக்கவிடும் அன்பை கண்டாலே
இப்போதெல்லா வெறுப்புதான்..
அள்ளித்தந்த அன்பெல்லாம்
அனாதைப்போல்
தவிக்க விடவா?! என...
..............................................
அன்று பார்த்த 
அதே இளமையோடு

ஆண்டுகள் பல கழிந்த

பின்னும்

கட்டுக்குலையாமல்
இருக்கின்றனர்!!!

நம்மை பிரிந்து சென்றவர்கள்
நம் நினைவினில்..

அடுத்த வாரம் அழகானதொரு கிராஃப்டோடு வர்றேன்.. இந்த வாரம் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.. ப்ளீஸ்.
நன்றியுடன்,
ராஜி

Wednesday, July 25, 2018

டைப் ரைட்டர் - மௌனச்சாட்சிகள்

கையில் பழுப்பு நிற பேப்பரை சுருளை எடுத்துக்கிட்டு பெண்களும், சைக்கிள் பாரில் அதே பழுப்பு நிற பேப்பர் சுருளை சொருகிக்கிட்டு ஆண்களும் வலம் வந்ததை  90களில் சர்வ சாதாரணமாய் பார்க்கக்கூடும். எங்கே போறீங்கன்னு கேட்டா டைப் ரைட்டிங்க் கிளாசுக்கு போறேன்னு கெத்தா சொல்வாங்க. அந்த காலக்கட்டத்தில் அரசாங்க வேலைக்கு போக ஆசைப்படுறவங்க  டைப் ரைட்டிங் கத்துக்குவாங்க.  தமிழ், ஆங்கிலம்ன்னு நம்மூரில் இருந்துச்சு. லோயர், ஹையர்ன்னு ரெண்டு பிரிவா கிளாஸ் எடுப்பாங்க. ஹையர் கிளாசில் ஷார்ட் ஹாண்டும் சேர்த்து படிச்சா வேலை கன்ஃபார்ம்ன்னு இருந்த நேரம் அது.  எப்படியாவது அரசு வேலைக்கு அனுப்பனும்ன்னு ஆசைப்பட்ட என் அப்பா என்னைய கொண்டு போய் டைப் ரைட்டிங்க் கிளாசில் சேர்த்து விட்டார். கிளாசில் பசங்க தொந்தரவு இருக்காதுன்னும்,  ரோட்டில் அதிக நடமாட்டம் இருக்காதுன்னும் காலை 6 டூ 7ன்னு கிளாஸ்.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்ன்னு சொல்வாங்க. அதுமாதிரி நம்ம அரட்டைக்கு அதுவே பலமாகி போனது. யாரும் பார்க்க மாட்டாங்கன்னு தைரியத்தில் அடிச்ச லூட்டிகள்.. எப்பவாவது அந்த வழியா போகும்போது கண்முன் வந்து போகும். அரட்டையோடு படிச்சாலும் லோயர் ஃபர்ஸ்ட் கிளாஸ் பாஸ். அதுக்கப்புறம் ஹையர்கிளாஸ் கொஞ்ச நாள் போனேன். அதுக்குள் கல்யாணம் ஆகிட்டுது. அன்னிக்கு, பசங்களோடு சேர்ந்து போட்டி போட்டு அடிச்ச ஸ்பீட், இன்னிக்கும் போன்லயும், கணினிலயும் கைக்கொடுக்குது.  டைப் ரைட்டருக்கு தட்டச்சு எந்திரம்ன்னு பேரு. ஒவ்வொரு எழுத்தா தட்டி தட்டி எழுத்துக்களை அச்சடிப்பதால் இதுக்கு தட்டச்சுன்னு பேரு உண்டானது. தட்டச்சு பயிற்சியில் ஷார்ட் ஹாண்ட்ன்னா சுருக்கெழுத்து பயிற்சின்னு பேரு.  சரளமா பேசிக்கிட்டு போறதை சட்டுன்னு குறிப்பெடுக்க புள்ளிகள், கோடுகள் மூலமா குறிப்பெடுத்துக்கிட்டு பின்பு விரிவா டைப் பண்ணி தரனும். பத்திரிக்கை துறையிலும் நிருபர்களுக்கு பெரும் உதவியா இருந்துச்சு, ஆஃபீசில் செக்கரட்டரி, பி.ஏன்னு இப்படி டைப் அடிச்சு தரவே ஒரு ஆள், இருப்பாங்க.  

2000த்தின் ஆரம்பக்காலக்கட்டத்து வரை  எல்லா அலுவலகங்களிலும் உள்ள நுழையும்போது நம்மை வரவேற்பது தட்டச்சு இயந்திரத்தின் சத்தமே. அப்புறம்தான் என்ன ஏதுன்னு மத்தவங்க கேட்பாங்க.  கம்ப்யூட்டர்கள் வர்றதுக்கு முன்பு தட்டச்சு இயந்திரம்தான் தகவல்களை எளிதாக காகிதத்தில் அச்சடிக்கவும், ஆவணங்களை பதிவு செய்யவும் பயன்பட்டது. தட்டச்சு இயந்திரத்தின் திரைகள் கிடையாது. விசைகளை அழுத்தினால் அது மை கொண்ட பெல்ட்டில் அழுத்தம் கொடுத்து, எழுத்தை காகிதத்தில் பதிக்கும். இதுவே அரசு ஆவணங்கள் முதல் தனிநபர் தகவல் பரிமாற்றத்திற்கும் பயன்பட்டது. இப்போது தட்டச்சு கருவிகள்லாம் எல்லா இடத்திலும் வெளிநடப்பு செய்தாகிட்டுது. 
தட்டச்சு இயந்திரத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்டோபர் லதாம் சோல்ஸ். இவர் விஸ்கான்சின் மாகாணத்தின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். தி கெனொசா டெலிகிராஃப் எனும் செய்தித்தாளையும் நடத்தி வந்தார். இன்றுவரை பயன்படுத்தப்படும் தட்டச்சு இயந்திரத்தை உருவாக்கியவர் அவர்தான். அவருக்கு முன்னதாகவே பலர் தட்டச்சு இயந்திரங்களை உருவாக்கினர். எனினும் வணிகரீதியாக வெற்றி அடைந்த தட்டச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் இவரே. ஒருநாள் அவரது நிறுவனத்தின் அச்சுக்கோப்புத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். அவர்கள் இல்லாமலேயே அச்சுக்கோப்புப் பணியைச் செய்வதற்காக ஒரு இயந்திரத்தைக் கண்டுபிடிக்க சோல்ஸ் முயன்றார்.
பிறகு, புத்தகங்களுக்கு எண்கள் பதிக்கும் ஒரு கருவியை அவரும் அவரது நண்பர் சாமுவேலும் சேர்ந்து 1866-ல் தயாரித்தனர். அவர்களோடு கார்லஸ் கிளிட்டன் எனும் ஒரு வழக்கறிஞரும் சேர்ந்துகொண்டார். முதலில் பியானோ போன்ற அமைப்பில் ஒரு இயந்திரம் தயாரிக்கப்பட்டது. அதைக்கொண்டு பெரும்பாலும் மரத்தாலான தட்டச்சு இயந்திரத்தை அவர்கள் தயாரித்தனர். 1868-ல் இதே நாளில் அதற்குக் காப்புரிமை கிடைத்தது. இந்த இயந்திரத்தில் சோல்ஸ் ஒரு ஒப்பந்தத்தைத் தட்டச்சு செய்தார். முதன்முதலில் தட்டச்சு செய்யப்பட்ட ஆவணம் அதுதான். ஜேம்ஸ் டென்மோர் என்பவர் அவர்களின் காப்புரிமையின் கால்வாசியை வாங்கிக்கொண்டார். தட்டச்சு இயந்திரத்தை மேலும் நவீனப்படுத்த டென்மோர் முயன்றபோது நால்வர் குழுவில் இரண்டு பேர் விலகிக்கொண்டனர். பின்னர், சோல்ஸ், டென்மோர் ஜோடி அந்தப் பணியைத் தொடர்ந்தது. கணினி, செல்போன்களில் பயன்படும் குவார்ட்டி கீபோர்டு எனப்படும் முறையையும் சோல்ஸ்தான் கண்டுபிடித்தார்.1890 பிப்ரவரி 17-ல் காசநோயால் சோல்ஸ் மரணமடைந்தார்.


தட்டச்சு  இயந்திரத்தின்  கருவியில் உள்ள விசைப்பலகைக்கு குவர்ட்டி (Qwerty) விசைப்பலகை என்ற பெயர் உண்டு , Qwerty என்ற எழுத்துகள் மேல் வரிசையில் வரிசையாக அமைந்திருப்பதைக்கொண்டு இந்த பெயர் ஏற்பட்டதுன்னு சொல்றாங்க. 1873-ல் குவர்ட்டி விசைப்பலகை அறிமுகமானது. எழுத்துகளை வேறுவேறு இடங்களில் அமைக்காமல் இந்த வரிசையில் அமைப்பது தட்டச்சு செய்ய சுலபமாக இருப்பதாக கருதி இந்த வரிசையில் எழுத்துகள் அமைப்பது பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இன்னிக்கு தட்டச்சு இயந்திரத்திலும்,  கணினியிலும் ஒரே மாதிரியில் விசைப்பலகை (கீபோர்டு) இருக்கு.  ஆனா, ஆரம்பக்காலக் கட்டத்தில் தட்டச்சு கருவிகளில் ஒவ்வொரு கருவியிலும், ஒரு எழுத்து வெவ்வேறு இடத்தில் அமைந்திருந்தது. இதனால் பொதுவான குவர்ட்டி விசைப்பலகையை ஏற்றுக்கொள்ளும் முன் தட்டச்சு தேர்வுகளோ, போட்டிகளோ நடைப்பெறலை.
ஆரம்ப காலத்தில் தட்டச்சுப் பலகையில், தட்டச்சு செய்பவர் காகிதத்தின் ஓரத்திற்கு வந்துவிட்டார் என்பதை தெரிவிக்க இறுதிப் பகுதியை நெருங்கும் முன்பு லேசான மணியோசை எழுப்பி எச்சரிக்கும் முறை இருந்துச்சு.  தட்டச்சு கருவிகளில் பொதுவாக காகிதங்களை கைகளால் சொருகி தட்டச்சு செய்யனும். அதேமாதிரி ஒரு பக்கம் முழுசா அடிச்சு முடிச்சப்புறம்  கைகளால்தான் பக்கத்தை மாத்தி வைக்கனும்.  தட்டச்சு செய்யும்போது தவறு நேர்ந்தால் கணினிகள்போல அழித்து, அடித்து திருத்த முடியாது. தட்டச்சு தவறுகளை அழிப்பதற்காக பிரத்தியேக அழிக்கும் ரப்பரும்,  எழுத்துக்களை பூசி மறைக்கும் வொயிட்னரும் இருந்தது.
தாமஸ்   எடிசன் 1870 ல் எலக்ட்ரானிக் தட்டச்சு எந்திரத்தை உருவாக்கி காப்புரிமம் பெற்றார். இதில் தூரத்தில் இருந்தபடி ரிமோட் மூலம் தட்டச்சு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. தட்டச்சு செய்வதில் இடது கையைப் பயன்படுத்தி மட்டுமே தட்டச்சு செய்யும் மிகப்பெரிய வார்த்தை stewardesses தட்டச்சுப் பலகையில் ஒரே வரிசையில் (மேல் வரிசையில்) உள்ள எழுத்துக்களை பயன்படுத்தி Typewriter என்ற வார்த்தையை அடிக்கிறோம் என்பது ஆச்சரியமான உண்மை. 
Skepticism (ஸ்கெப்டிசிஸ்ம்)ன்ற வார்த்தை தட்டச்சுப்பலகையில் ஒவ்வொரு எழுத்துக்கும் கைகளை மாற்றி மாற்றி தட்டச்சு செய்யக்கூடிய மிகப்பெரிய வார்த்தை. ஆக்ஸ்போர்டு அகராதியில் விசைப்பலகையின் பெயரை குறிக்கும் qwerty என்ற சொல் சேர்க்கப்பட்டது. 
மேல் வரிசையில்  உள்ள எழுத்துக்களை மட்டுமே பயன்படுத்தி தட்டச்சு செய்யக்கூடிய மிகப்பெரிய வார்த்தை rupturewort என்பதாகும். இது ஒரு மருத்துவ தாவரமாகும்.  பெரு நாட்டின் ஆங்கில பெயர் (PERU) மட்டுமே ஒரே வரிசையில் (மேல் வரிசை) அமைந்துள்ள எழுத்துக்களை கொண்டு தட்டச்சு செய்ய முடிந்த  நாட்டின் பெயராகும், அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான அலாஸ்கா (Alaska) என்ற பெயரை மத்திய வரிசையில் உள்ள எழுத்துகளை மட்டும் கொண்டு தட்டச்சு செய்ய முடியும்.
இன்று  கணினிகள் இருப்பதுபோல 1980-க்கு முன்பு படித்த, வசதி படைத்தவர்கள் வீட்டில் தட்டச்சு கருவிகள் இருந்ததாம். விஷயங்களை தட்டச்சு செய்து கொடுப்பது கவுரவமாக பார்க்கப்பட்ட காலம் உண்டு.  வேகமாக தட்டச்சு செய்பவர்களால் நிமிடத்திற்கு 100 வார்த்தைகளுக்கு மேல் தட்டச்சு செய்ய முடியும். நிமிடத்திற்கு 150 வார்த்தைகளுக்கு மேல் தட்டச்சு செய்து சாதனை செய்தவங்களும் இருக்காங்க.   46.30 வினாடிகளில் மூக்கைப் பயன்படுத்தி 103 எழுத்துகளை தட்டச்சு செய்தது கின்னஸ் உலக சாதனையாக பதிவாகி உள்ளது.
எழுத்தாளர் மார்க்டுவைன், தனது டாம் சாயர் 1876-ம் ஆண்டு தட்டச்சில் தட்டச்சு செய்து ஒரு நாவலை  உருவாக்கினார். இதுவே தட்டச்சில் தயாரான முதல் நாவலாகும்.  துருக்கியில் தட்டச்சு எந்திரங்களுக்கான அருங்காட்சியகம் உள்ளது. இது 2016-ம் ஆண்டு திறக்கப்பபட்டது. இணையதளங்களில் பழமையான தட்டச்சு எந்திரங்களை ஏலம் விடும் அமைப்புகள் பல உள்ளன.  குழந்தைகளுக்கென பிரத்தியேக தட்டச்சு கருவிகளும் இருந்தது. தற்போது தட்டச்சு கருவி வடிவில் விளையாட்டுப் பொருட்கள் கிடைக்குது.  கணினிகள் அதிகமா புழக்கத்திற்கு வந்துவிட்ட காரணத்தால் 1990களின் கடைசியில் தட்டச்சு கருவிகளின் பயன்பாடு குறைய ஆரம்பித்தது. ஒருசில பணிகளுக்காக மட்டும் தட்டச்சு கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது. வளர்ந்த மேலை நாடுகளில் கைதிகள் கணினி பயன்படுத்த அனுமதி இல்லையென்பதால் அவர்கள் தட்டச்சு கருவியை அதிகமாக பயன்படுத்துகின்றனர். 

மனிதனுக்கு எவ்வளவு வசதிகள் இருந்தாலும் போதாது. இன்னும் வேணும்ன்ற அந்த மனநிலையே, புதுசு புதுசா  கண்டுபிடிப்புகளுக்கு காரணமாகுது. இருப்பினும், அந்தந்த காலகட்டத்தில் நமக்குப் பேருதவியாய் இருந்த சில பொருட்கள், காலப்போக்கில் அதன் பயன்பாடு குறைந்து அந்த பொருட்கள் பரண்மேல் தன்னை பொக்கிஷமா நினைச்ச நாட்களை நினைச்சு அசைப்போட்டுக்கிட்டு தன்னந்தனியா இருக்கும். அதுக்கு அதன் நினைவுகளே, தன்னை அப்படி மதிச்சதுக்கான மௌனச்சாட்சிகள். 
நட்புடன்,
ராஜி

Tuesday, July 24, 2018

அரைக்கீரை மசியல் - கிச்சன் கார்னர்

அரைக்கீரை, இது நமக்கு எளிதில் கிடைக்கக்கூடிய கீரை வகை. இது குறுஞ்செடி வகையை சார்ந்தது. இதை அறுத்தெடுத்தா மீண்டும் துளிர்க்கும் இயல்பு கொண்டது.  இதை சாப்பிட்டு வந்தால் ரத்தசோகை நீங்கும், உடல் வலியை சரி செய்யும், கூந்தல் சம்பந்தமான பிரச்சனைகளை சரி செய்யும் இந்த கீரை. குடல் புண் வராம தடுக்கும். ஆசனவாய், மலக்குடல் புற்றுநோயை தடுக்கும். பித்தத்தை சமன் செய்யும். அரைக்கீரை உடலுக்கு குளிர்ச்சி தரும். தோசை, கூட்டு, சூப், பொரியல், கடையல்ன்னு விதம்விதமா இந்த கீரையில் சமைக்கலாம்.  இக்கீரை நாட்டு மருத்துவத்தில் மூலிகையாவும் பயன்படுது. 

அரக்கீரை, அறுகீரை, அறைக்கீரை, கிள்ளுக்கீரை, அரைக்கீரைன்னு பலவாறு அழைக்கப்படும் இக்கீரை  செடியிலிருந்து கீரையைப் பலமுறை அறுவடை செய்து பயன்படுத்துவதால் அறுப்புக்கீரைனும் பெயருமுண்டு.  இக்கீரை, கிளைவிட்டு வளரக் கூடியது. செங்குத்தாக நிற்கும் தன்மை பெற்றது. இது தண்டுக் கீரை இனத்தைச் சார்ந்தது. ஆனா, தண்டுக்கீரை மாதிரி அதிக உயரம் வளராம 30 செ. மீ உயரம் வரை வளரக்கூடியது. இது ஓரடிக்குமேல் இது வளர்வதில்லை. இலைகளும் தண்டுகளும் மிகவும் சிறுத்தவை. சுமார் ஒரு வருடம் வரை பலன்தரும். இக்கீரை மேல்நிறம், பச்சை நிறமாகத் தோன்றும். அடிப்பாகம் மெல்லிய செந்நிறத்தோடு விளங்கும். இலையின் காம்புகளிலும் செந்நிறம் தோன்றும். இந்தக் கீரையும் இதன் விதையும் இரண்டுமே உணவாகப் பயன்படுது.

சோடியம், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி, பீட்டா கரோட்டின், நார்ச்சத்து லாம் நிறைய இருக்கு. இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேனி பொலிவுறும், ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்கும், ஞாபகசக்தி பெருகும், பிரசவிச்ச பெண்களுக்கு இக்கீரை உடனடி சத்து தரும்.  தாய்ப்பால் சுரக்க அரைக்கீரையுடன் நிறைய பூண்டு சேர்த்து பொரியலாய் சமைத்து கொடுப்பாங்க. கபத்தை உடைத்து வெளியேற்றும். வாத நோய் தணிக்கும்.


தேவையான பொருட்கள்
அரைக்கீரை
வெங்காயம்
தக்காளி
காய்ந்த மிளகாய்
பச்சைமிளகாய்
பூண்டு
உப்பு
புளி
வடகம் அல்லது கடுகு
எண்ணெய்

அரைக்கீரையை கழுவி சுத்தம் செய்து வச்சுக்கனும். வெங்காயம், தக்காளியை வெட்டிக்கனும், பூண்டு உரிச்சுக்கனும்.


அடுப்பில் பாத்திரம் வச்சு சூடானதும் ப.மிளகாய், காய்ந்த மிளகாயை போட்டுக்கனும்.. 
அடுத்து பூண்டை சேர்த்துக்கனும்...

அடுத்து வெங்காயம் சேர்த்துக்கனும்... நல்லா வதங்கனும்ன்னு அவசியமில்ல.. லேசா வதக்கினா போதும்.
தக்காளியை சேர்த்து லேசா வதக்கிக்கனும்..

அரைக்கீரையை சேர்த்து வதக்கிக்கனும், தேவையான அளவுக்கு தண்ணி ஊத்தி வேகவச்சுக்கனும்... சிலர் கீரையைக்கூட குக்கர்ல வைப்பாங்க, ஆனா நான் வைக்க மாட்டேன். 

கீரை நல்லா வெந்ததும் தேவையான அளவுக்கு புளி, உப்பு சேர்த்து அடுப்பை ஆஃப் பண்ணிடனும்.

வெந்த கீரையை மசிச்சுக்கனும். சிலர் மிக்சில லேசா ஒரு சுத்து சுத்திப்பாங்க.  ஆனா, நான் கல்சட்டிலதான் கடைஞ்சுப்பேன்.  கீரை நல்லா மசிஞ்சப்பின் வடகம் போட்டு தாளிச்சு, கீரையில் போட்டு மீண்டும் ஒரு சுத்து கடைஞ்சுக்கனும். வடகம் இல்லாதவங்க, எண்ணெயில் கடுகு போட்டு பொரிஞ்சதும் பூண்டை நசுக்கி, வெங்காயம் சேர்த்து நல்லா வதக்கியும் சேர்க்கலாம், காய்ந்த மிளகாயை தாளிப்பில் சேர்த்துக்கிட்டா வாசமா இருக்கும். இந்த கீரை கொஞ்சம் உஷ்ணத்தன்மை கொண்டதால, சாப்பிடும்போது கொஞ்சம் நெய் சேர்த்துக்கலாம். 


அம்மனுக்கு கூழ் வார்க்கும்போது இக்கீரை கடைசல் அவசியம் இருக்கும்.  சிலர் வெங்காயம், தக்காளி, கீரையை வதக்காமயே வெங்காயம், பூண்டு, தக்காளி, மிளகாய், கீரைலாம் தண்ணி சேர்த்து வேக விட்டும் செய்வாங்க. இப்படி வதக்கி செய்வதால் கீரையின் உஷ்ணத்தன்மை போகும். எண்ணெயைவிட நெய் சேர்த்துக்கிட்டா உடலுக்கு ரொம்ப நல்லது. தக்காளியை தாராளமா சேர்த்துக்கிட்டா ருசி தூக்கலா இருக்கும்.

நன்றியுடன்,
ராஜி

Monday, July 23, 2018

பெண் சம்பந்தமானது.. ஆண்களும் தெரிஞ்சுக்கலாம் - ஐஞ்சுவை அவியல்

நான் வந்ததுகூட தெரியாம அம்புட்டு இண்ட்ரஸ்ட்டா எப்.பில என்ன  பார்த்துக்கிட்டு இருக்கே?!

அது ஒன்னுமில்ல மாமா!  மாதவிடாய் பத்தி ஒரு டிவி நிகழ்ச்சில நெறியாளர் ஒருத்தங்க பேசப்போயி அது பெரிய பஞ்சாயத்தாகிட்டுது. அதான் அதுலாம் படிச்சுக்கிட்டிருக்கேன்.

தீட்டு, பீரியட், த்ரீ டேஸ், வீட்டு விலக்கு மாதவிலக்குன்னு பலபேரால் சொல்லப்படும்  மாதவிடாய்ன்னா என்னன்னு முதல்ல தெரிஞ்சுக்க.  இது பொண்ணுங்க பிரச்சனைதான். ஆனா, இதுப்பத்தி பொண்ணுங்களுக்கே தெரியாது. என்னமோ கெட்ட ரத்தம் வழியும், இடுப்பு, வயிறு வலிக்கும், உடல் சோர்வு, பூஜை அறைக்கு போகக்கூடாது. வெளில போனா பேய் பிடிச்சுக்கும். யாரையும் தீண்டக்கூடாதுன்னு இதுமட்டும்தான் பொண்ணுங்களுக்கு தெரியும்.

உனக்குதான் எல்லாம் தெரியும்ன்னு நினைக்காத மாமா. எனக்கு கொஞ்சம் கொஞ்சம் தெரியும். மாதவிடாய் சுழற்சின்னா உடல் ரீதியான இயற்கையான வளர்ச்சி முறை. இச்சுழற்சி பெண்கள் வயதுக்கு வந்தவுடன் தொடங்குது.  முன்னலாம் 14 வயதிலிருந்து இந்த சுழற்சி ஆரம்பிச்சது. ஆனா, உணவில் ரசாயணம் கலந்ததால் இப்பத்திய பிள்ளைகள் 10 வயசுலயே வந்திடுதுங்க. இது முறையாகவும், குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ச்சியாக வருவதனால் இதனை மாதவிடாய் சுழற்சின்னு சொல்றோம்.  மாதவிடாய் வருவதற்கு 2 வாரங்களுக்கு முன்னர் ஒரு பக்க கருமுட்டைப்பையில் ஒரு முட்டை உருவாகி முதிர்ச்சி அடைகிறது. அது சினைக்குழாயின் வழியாக வரும்போது கருப்பையை அடைகின்றது. முட்டை கருப்பையை அடைஞ்சதும் கருப்பை விரிவடையுது.  அந்த கருமுட்டை உயிரணுவோடு சேரலைனா, ஹார்மோனின் காரணமாக கருப்பை சுருங்க ஆரம்பிக்குது. அப்படி சுருங்கும்போது அதன் உட்சுவரில் உள்தோல் பகுதியாகிய என்டோமெடரியம் சிறு சிறு துண்டுகளாக பிரிக்கப்பட்டு உதிரும். அப்போது அதோடு தொடர்புடைய ரத்த நாளங்களும் துண்டிக்கப்படுவதால் இரத்தமும், கருவுறாத முட்டையும், உட்சுவராகிய சளிச்சவ்வும் வெளியே தள்ளப்படுது.இதுதான் மாதவிடாயின் நிகழ்வு.

மாதவிடாய் அவரவர் உடல்நிலையை பொறுத்து 3 முதல் 6 நாட்கள் வரை தொடரும்.  இந்த நாட்களில் பெண்கள் சோர்வாகவும், சோம்பலாகவும், கலகலப்பின்றியும் இருப்பது இயற்கை. இதற்கு காரணம் உடலில் நிகழும் இரசாயன மற்றும் ஹார்மோன்களின் மாற்றங்களே. இளம் பெண்களுக்கு மாதவிடாய் ஆரம்பித்த தொடக்கக்காலத்தில் ஹார்மோன்களின் சுரக்கும் தன்மை மாறுபடும். அதனால் இரத்தப் போக்கும் மாறுபடும். சில சமயங்களில் மாதவிடாய் தள்ளி போகவோ அல்லது அடிக்கடி வரவோ செய்யலாம். ஆனால் இது 16-18 வயதிற்குள் சரியாகிவிடும். அதே பிரச்சனை மாதவிடாய் நிற்கும் பருவத்திலும் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த மாதவிடாய் சுழற்சி சிலருக்கு 27-28 நாட்களுக்கு ஒரு முறையும் சிலருக்கு 35 நாட்களுக்கு ஒரு முறையும் ஏற்படும். தினத்துக்கு இரண்டு ஸ்பூன் அளவு ரத்தம் வெளியேறுவது இயற்கை. அதுக்கு அதிகமா போனாலோ இல்ல குறைவா போனாலோ கவனம் கொள்வது அவசியம். மாதைவிலக்குக்கு முந்தைய நாட்களில் கருப்பை விரிவடைஞ்சிருப்பதால்  கிட்னி, கல்லீரல்லாம் அழுத்தம் கொடுப்பதால் வயிறு வலி, இடுப்பு வலி என்பது சாதாரணம். தாங்கிக்கொள்ளும் வலியென்பது சாதாரணம். வலி அதிகமானால் கவனிக்கனும். மன அழுத்தம், திடீரென எடை குறைப்பது, அளவுக்கதிக உடற்பயிற்சி  போன்றவற்றின் காரணமாக மாதவிலக்கு வராமல் இருக்கலாம். கர்ப்பத் தடை மாத்திரைகளின் விளைவாலும் அப்படி நிகழலாம். எப்போதும் சுழற்சி முறையாக இருந்துவிட்டு, திடீரென தடைப்பட்டால்  டாக்டரை பார்க்கனும். மாதவிலக்கில் மிளகு அளவிலான கட்டிகள் வருவது இயல்பு, அதை தவிர்த்து ரத்தக்கட்டிகள் அதிகமா இருந்தா டாக்டர்க்கிட்ட போகனும். இல்லன்னா நாளடைவில் கருப்பை கோளாறுகள் வரும்.

முன்னலாம் பெண்களை தனியா இருக்க வச்சதுக்கான காரணம் பெண்கள் சுலபத்தில் தொற்றுக்களால் பாதிக்கப்படுவாங்க. அதுமாதிரி நோய்தொற்றுக்களால் பாதிக்கப்படாமல் இருக்கவும், அந்நேரத்தில் பெண்களின் உடல் மிகவும் பலவீனமாக இருக்கும். அதனால் அவர்களுக்கு போதிய அளவிலான ஓய்வு அவசியம். அவர்கள் ஓய்வா இருக்கனும்ன்னுதான் தனியா விட்டாங்க. அதேமாதிரி, இந்த மாதிரியான நேரங்களில் பெண்கள் உடம்பிலிருந்து நேர்மறையான அதாவது நெகட்டிவ் அலைகள் உருவாகும். அது மத்தவங்களை பாதிக்காம இருக்கனும்ன்னுதான் தனியா இருக்க வச்சாங்க. ஆனா, இந்த காலத்தில் பெண்கள் பெண்ணியம், மூட நம்பிக்கைன்னு பேசி தனக்கு சாதகமான விசயத்தைக்கூட அவாய்ட் பண்ணி அவஸ்தைப்படுறாங்க.

இந்நாளில் சத்தான உணவுகளை சாப்பிடுவது அவசியம். தோல் நீக்காத உளுந்தை உடைச்சு களி செஞ்சு சாப்பிடலாம். முதல் நாள் இரவு எள் ஊற வச்சு அதிகாலையில் அந்த தண்ணிய குடிச்சு வந்தால் மாதவிலக்கு பிரச்சனை தீரும். கடுக்காய், ஆவாரம்பூ, மருதம்பட்டையை சம அளவு எடுத்து காய வச்சு பொடி செஞ்சு 5கிராம் எடுத்து கசாயமாக்கி குடிச்சு வந்தால் தடைப்பட்ட மாதவிலக்கு சீராகும், ரத்தப்போக்கு அதிகமா இருந்தால் குணமாகும். கருஞ்சீரகத்துடன், பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தடைப்பட்ட மாதவிலக்கு சரியாகும். கீழாநெல்லிவேரை இடிச்சு பாலோடு கொதிக்க வச்சு வடிகட்டி சாப்பிட்டாலும் மாதவிலக்கு ஒழுங்காகும். பப்பாளி, பேரீச்சை, பாதாம்லாம் சேர்த்துக்கலாம்.. இம்புட்டுதான் இந்த “அந்த”மேட்டர். அதைவிட்டு பேய், பூதம், தீட்டுன்னுலாம் ஒதுக்க தேவையில்ல.

 பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்ன்னு சொல்ற மாதிரி என்னோடு சேர்ந்து உனக்கும் புத்தி வந்திட்டுது. இதோ இந்த படத்திலிருப்பது என்னன்னு சொல்லு...

ஏதோ பாக்டீரியா, வைரஸ் மாதிரியானதுன்னு மட்டும் புரியுது, ஆனா அது எதுல இருக்குறதுன்னுதான் தெரில.

நீ சொன்னது சரிதான், நாம குடிக்கும் குடிநீரின் ஒரு சொட்டு தண்ணில இருக்கும் நல்ல, கெட்ட நுண்ணுயிரிகள்தான் இது.

இந்த மாதிரி ஆளுங்களால தமிழ் மட்டுமில்ல எல்லா மொழியுமே மெல்ல சாகும்.. இது வாட்ஸ் அப்ல வந்துச்சு மாமா.
உன் அறிவாளித்தனத்தை டெஸ்ட் பண்ண ஒரு விடுகதை கேக்குறேன்.
கடலைக் கலக்குது ஒரு குருவி..,
கடலோரம் போகுது ஒரு குருவி..,
செடியைத் தின்பது ஒரு குருவி..,
செடி ஓரம் போகுது அடுத்த குருவி..,
இதுக்கு விடை சொல்லு பார்க்கலாம்...
நான் யோசிச்சு வைக்குறதுக்குள்ள ஒரு கப் காபி போட்டுட்டு வாங்களேன்.. ப்ளீச்.

நன்றியுடன்,
ராஜி

Sunday, July 22, 2018

நான் பூவெடுத்து வைக்கனும் பின்னால... - பாட்டு கேக்குறோமாம்.

படம் வெளிவர்றதுக்குள் பாட்டு வெளிவந்துடும். சில படப்பாட்டுங்க கேசட்டில் ஒரு மாதிரியான வரிகளும், படத்தில் வேறு மாதிரியான வரிகளும் இருக்கும்.  சில படத்துல, குறிப்பிட்ட வார்த்தை மட்டும் கட்டாகிடும் இல்லன்னா பீப் சவுண்ட் ஒலிக்க விடுவாங்க. ஒருமுறை  கமல் மதனுக்கு கொடுத்த Interviewல் நானும் ஒரு தொழிலாளி படத்தில் இடம்பெற்ற 'நான் பூவெடுத்து வைக்கனும் பின்னால...  ன்னு ஆரம்பிக்கும் பாடலில் ஒரு வார்த்தை தப்பான அர்த்தம் வருவதா சொல்லி சென்சாரில் ஏத்துக்கலைன்னு சொல்லி கஷ்டப்பட்டார். சாதாரணமாக எழுதிய பாடலைக்கூட  பிரித்து,பிரித்து அர்த்தம் பார்த்தால் என்ன செய்வது?! என்று கேள்வி கேட்டார். 

நம்மவர் படத்துல சொர்க்கம் என்பது நமக்கு பாடலில் ஒரு வரி வரும்... நல்ல வார்த்தைக்கூட இப்ப கெட்ட வார்த்தை ஆனதே...ன்னு.... ஆத்தான்னா அத்தனை மரியாதை தென் மாவட்டங்களில்.. எங்க ஊரில் ஆத்தான்னு சொன்னா மேலும் கீழுமா பார்ப்பாங்க.  சித்தி, அத்தை, மாமிகளை கூப்பிடும் புனிதமான ஆங்கில வார்த்தையான ஆன்டி, இப்ப கிண்டலா, நக்கலா கூப்பிடப்படுது. நல்ல வார்த்தைகள் கெட்ட வார்த்தை ஆனதுக்கு காரணம் சமூகமா இல்ல சினிமாவான்னு தெரில.

படம் பார்த்ததே கனவு கண்ட மாதிரி மங்கலா நினைவில்  இருக்கு.  அதுல பாடல் வரிகளை எப்படி நினைவு வச்சிக்குறது.  சரியோ தப்போ சில பாட்டுகள் கேக்கும்போது மனசு உற்சாகமாகும். அதில் இந்த பாட்டும் ஒண்ணு... பயணங்களில் இந்த பாட்டு அவசியம் இடம்பெறும். அதுலயும் வண்டில போகும்போது... கேட்டுக்கிட்டே வண்டி ஓட்டுவதில் அலாதி பிரியம் எனக்கு... 


நான் பூவெடுத்து வைக்கணும் பின்னாலே
அதில் வஞ்சி இப்ப சொக்கணும் தன்னாலே
என் மச்சான் மச்சான்... மல்லிய வைச்சான்
என் மச்சான் மச்சான்... தேன் மல்லிய வைச்சான்
உள்ளத்திலே என்னடி உண்டாச்சு?!

நான் பூவெடுத்து
நான் பூவெடுத்து வைக்கணும் பின்னாலே..
அதில் வஞ்சி இப்ப சொக்கணும் தன்னாலே..


அத்தமவன் சொன்னத ஒத்துக்கனும்
சரிதான் சரிதான்..
அத்தனையும் நித்தமும் கத்துக்கனும்
சுகம்தான் சுகம்தான்......அத்தமவன் சொன்னத ஒத்துகனும்
சரிதான் சரிதான்அத்தனையும் நித்தமும் கத்துக்கனும்
சுகம்தான் சுகம்தான்தென்பழநி சந்தனம்தான் இங்கு ஒரு பெண்ணாச்சோ?!
என்னென்னவோ எண்ணம்தான் என்னக் கண்டு உண்டாச்சா?!உன் முந்தானைய இழுக்கட்டுமா?!
 சும்மா இருஒரு முத்தாரத்த பதிக்கட்டுமா?!
 கொஞ்சம் பொறுஅடி பூவே! பொன்னே! கண்ணே இங்கே வா ஹோய்..

நீ பூவெடுத்து வைக்கனும் பின்னாலே ஓ...ஓ
அதில் வஞ்சி இப்ப சொக்கணும் தன்னாலே ஹா......
ஆ.....ஆஹாஹா...ஆ.........ஆஹாஹா......
லாலல்லா...லாலல்லா...லாலல்லா...லாலல்லா...லாலல்லா...
ஆ.....ஆ....ஆ..
.......
பத்து விரல் பட்டதும் தொட்டதும்தான்சுடுதா சுடுதா?!
ஆசையோடு அச்சமும் வெட்கமும்தான்வருதா வருதா?!
பத்து விரல் பட்டதும் தொட்டதும் தான்சுடுதா சுடுதா
ஆசையோடு அச்சமும் வெட்கமும் தான்வருதா வருதா வருதா?!
தென்னங்கிளை தென்றலைத் தான்பின்னுவது அங்கேதான்
செவ்விளநி சேலக்கட்டிமின்னுறது இங்கேதான்
ரெண்டு கண்ணால நீ அளக்கிறதுஉன் மேனிதான்
என்ன கண்டையில நீ கொதிக்கிறது
உன் மேனிதான்
அட மச்சான் வெச்ச கண்ணு இங்கேதான்

நீ பூவேடுத்து வைக்க்கணும் பின்னாலே
அதில் வஞ்சி இப்ப சொக்கணும் தண்ணாலே
ஏ மச்சான் மச்சான் ஹா மல்லிய வைச்சான் ம்..
ஏ மச்சான் மச்சான் மல்லிய வைச்சான்
உள்ளத்திலே என்னவே உண்டாச்சு

நான் பூவெடுத்து
நான் பூவெடுத்து வைக்கணும் பின்னாலே
அதில் வஞ்சி இப்ப சொக்கணும் தண்


படம்: நானும் ஒரு தொழிலாளி
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பி, ஜானகி
நடிகர்கள்: கமல், அம்பிகா

நன்றியுடன்,
ராஜி.