Friday, September 17, 2010

காதல் நெருப்பின் நடனம்

ஆபத்து நடந்திருக்குமோ என்றுகூட
அறிய முடியாத அச்சத்தில்
என்னை ஆழ்த்திவிட்டு
அனைத்துவிடுகிறாய்
உன் அலைப் பேசியைத்
திடீரென....,


கண்களில் கோபம் தேக்கி
வழக்கமான புன்னகையை
 வழங்காமல்
தெருமுனை வளைவில்
என்னைத் திரும்பிக்கூடப்
பார்க்காமால் போய்விடுகிறாய்
என் பொழுதுகளைச் சுக்கு நூறாய்ச்
சிதைத்துவிட்டு ....,

"தயவுசெய்து  என்னை
மறந்துவிடு" என்ற
செய்தி  கொண்டுவருகிறாய்
நீ அவ்வப்போது
கண்ணீரில் கலக்கி...,

சில சமயம்
"நீ இல்லாத உலகம்
கற்பனையில்கூடப்
பயமுறுத்துகிறது" என
அழுகிறாய் ஆரத்தழுவி...,

"உனக்காகத்தான்
இந்த ஜென்மம் எடுத்துருக்கிறேன்"
என்றும் உன்னால் கூறமுடிகிறது
உணர்ச்சிப் பொங்க...,

என்னை
ஒரு கொலை முயற்சியோடு
நீ துரத்திக் கொண்டிருப்பதாகப்
படுகிறது எனக்கு.
ஆனால்,
நீ காதல் என்கிறாய்!

நன்றி, 
ஆனந்தவிகடன்

No comments:

Post a Comment