Wednesday, May 16, 2018

சுவாமி விவேகானந்தரின் ஜீவன் முக்தி சமயத்தில் நடந்தது என்ன ஒரு நேரடி ரிப்போர்ட் பாகம் 2 -மௌன சாட்சிகள்

சுவாமி விவேகானந்தர் தன்னுடைய இறுதிக்காலம்  நெருங்கி வருவதை உணர்ந்தார். தன்னுடைய  சீடர்கள் அனைவரையும் ஒருமுறை பார்க்கவேண்டுமென ஆசைப்பட்டார். உடனே, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் அவரது சீடர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. கடிதம் கிடைத்தவுடன் சிலர் என்னமோ ஏதோ என்று ஓடோடி வந்தனர். ஆனா  பல்வேறு சூழ்நிலை காரணமாக  வரமுடியாத சூழ்நிலை பலருக்கு.  இது  விவேகானந்தரை பார்ப்பதற்கு தங்களுக்கான கடைசி வாய்ப்பு என்று அவர்கள் உணரவில்லை. அப்படி உணர்ந்திருந்தால் எப்பாடுப்பட்டாவது ஓடோடி வந்திருப்பர். விவேகானந்தரின் விரைவான இறுதிக்காலத்தை விரும்பாத காலதேவனும் தனது பயணத்தை மெதுவாக தொடர்ந்தான் போலும்!!

 நாட்களும் மெதுவாக சென்றது. மடத்தின் வேலைகளில் இருந்து தன்னை விடுவித்து கொண்டார் சுவாமிஜி.  தன்னுடைய சீடர்களுக்கு பயிற்சி அளிப்பதைக்கூட குறைத்துக்கொண்டார். மெல்ல மெல்ல தியானத்தில் மூழ்கி பலமணிநேரம் அப்படியே இருந்தார்.  இராமகிருஷ்னரிடம் விவேகானந்தரைபோல் உபதேசம் பெற்ற விவேகானந்தரின் சக துறவிகள் இதைக் கவனித்து,  நரேந்திரா! உனக்கு என்னவாயிற்று எனக் கேட்டனர். சகோதர்களே! நான் பூமிக்கு வந்த வேலை இந்த பூவுலகில் முடிந்துவிட்டது இனி, இந்த மடத்து பொறுப்புகளையெல்லாம் நீங்களே கவனித்து கொள்ளுங்கள் என கூறினார் .

மரணம் என் முன்னால் நிற்கிறது. நான் வேண்டிய அளவுக்கு வேலை செய்துவிட்டேன். நான் இந்த உலகுக்கு கொடுத்ததை முதலில் இந்த உலகம் புரிந்துக் கொள்ளட்டும். அதை, மக்கள் புரிந்து கொள்வதற்கே மிக நீண்ட காலம் தேவைப்படும். ஒரு விளையாட்டு என்றால் வெற்றி தோல்வி இருக்கவேண்டும். முடிவே இல்லாமல் விளையாடிக்கொண்டு இருப்பதால் எந்த பலனும் இல்லை. போதும்! இந்த விளையாட்டு என்று தன் சக துறவிகளிடம் சுவாமி விவேகானந்தர் கூறினார். எப்பொழுதும் தியானத்திலையே இருந்தார். அவரது உதடுகள் இறைவனை அழைத்துக்கொண்டே இருந்தன. ஸ்ரீராமக்கிருஷ்ணரிடம் சீடர்களாய் இருந்த விவேகானந்தரின் சக துறவிகள் இப்பொழுது மிகவும் கவலையில் ஆழ்ந்தனர் ஒருமுறை விவேகானந்தர் இல்லாத சமயம்,  ஸ்ரீராமக்கிருஷ்ணர் தன்னுடைய சீடர்களிடம் உரையாற்றும்பொழுது, தான் யார் என்று நரேந்திரன் உணர்ந்துவிட்டால் அதன்பின்னர் நிர்விகல்ப சமாதியில் ஆழ்ந்துவிடுவான். பின்னர், அவனை ஒன்றும் செய்ய முடியாது என்று கூறி இருந்தார். அந்த நாள் வந்துவிட்டதோ என விவேகானந்தரின் சக துறவிகள் கவலையடைந்தனர் .
அப்பொழுது ஒரு சகோதர துறவி மெதுவாக, நரேந்திரா! நீ யார் என்பதை உணர்ந்துவிட்டாயா எனக் கேட்டார். அதற்கு விவேகானந்தர் ஆம் என மெதுவாக தலையசைத்து கூறினார். அப்பொழுது அங்கே ஒரு நிசப்தமான சூழ்நிலை உருவானது. அனைவரும் அமைதியடைந்தனர் சுவாமிஜி நம்மை விட்டு விரைவில் சென்றுவிடுவார் என அனைவரும் உணரத் தொடங்கினர். பலரால் இதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவர்களது கண்களில் இருந்து கண்ணீர் தாரைதாரையாய் வழிந்தது. 1092 ம் ஆண்டு ஜூன் இறுதியில் ஒருநாள்  சுவாமி விவேகானந்தர் தன்னுடைய சக துறவியும் ராமகிருஷ்ணரின் நேரடி சீடருமான சுவாமி சுத்தானந்தரை ( பிறப்பு 08 /10/1872 இறப்பு 23 10/1938) அழைத்து ஒரு பஞ்சாங்கம் கொண்டுவர சொன்னார். சரி ஏதோ ஒரு விசேஷத்திற்காக நாள்குறிக்க பஞ்சாங்கத்தை கேட்கிறார் என சுவாமி சுத்தானந்தர் நினைத்துக்கொண்டார். ஆனால் தன்னுடைய கடைசி நாளை குறிக்கவே பஞ்சாங்கத்தை அவர் கேட்டார் என்று அப்பொழுது அவருக்கு புரியவில்லை . இதை கவனித்துக்கொண்டிருந்த எனக்கும் தெரியவில்லை.
விவேகானந்தரும், ராமகிருஷ்ணரிடம் சீடராக இருந்த அவரது சக துறவியான சுவாமி பிரேமானந்தரும்  1/7/1902  அன்று மாலை வேளையில் கங்கைக்கரையில் நடந்து கொண்டிருந்தனர். அப்பொழுது விவேகானந்தர் சுவாமி பிரேமானந்தரை அழைத்து கங்கைக்கரையில் ஓரிடத்தை சுட்டிக்காட்டினார்.  நான் உடலை விட்டபிறகு, எனது உயிர் தங்கி இருந்த இந்த உடலை இங்கு வைத்து எரியுங்கள் எனக்கூறி சிறிது நேரம் அமைதியாக இருந்தார். ஜூலை 2 ஏகாதசி அன்று சுவாமிஜி விரதம் இருந்தார். ஆனால் அன்று காலை சுவாமிஜியை பார்க்கச் சென்ற சிஸ்டர் நிவேதிதாவிற்கு எல்லா உணவுவகைகளையும் சாப்பிடக் கொடுத்து அவர் சாப்பிடுவதை பார்த்து சந்தோஷப்பட்டார். சாப்பிட்டு முடித்ததும் அவருக்கு கைக்கழுவ தண்ணீர் எடுத்து கொடுத்தார். பின்னர் சிஸ்டர் நிவேதிதாவின் கைகைகளை சுவாமிஜியே துடைத்துவிட்டார். நிவேதிதா, சுவாமிஜியை ஆச்சர்யமாக பார்த்து,  சுவாமிஜி இதையெல்லாம் நானல்லவா உங்களுக்கு செய்யவேண்டும்?! நீங்கள் எனக்கு செய்வதா?! என ஆச்சர்யமாகக் கேட்டார். அதற்கு சுவாமிஜி, நிவேதிதா! ஜீசஸ் தன்னுடைய சீடர்களுக்கு கால்களையே கழுவி விட்டார்  எனக்  கூறியபோது,   அது அவருடைய கடைசிநாளில்தானே அப்படி செய்தார் என நிவேதிதா குழம்பி நின்றார். ஆனால் அதுப்பற்றி சுவாமிஜியிடமோ அல்லது வேறு யாரிடமோ கேட்கவில்லை. ஆனால் சுவாமிஜி வெகுநாட்கள் இருக்கமாட்டார் என்று மட்டும் அவருக்கு தோன்றியது .
சிஸ்டர்  நிவேதிதா ,அன்னை சாரதாதேவியுடன் 
ஏதோ உள்ளுணர்வு உணர்த்த காலண்டரில் நாள் பார்த்தேன். 04/07/1902 வெள்ளிக்கிழமை எனக்காட்டியது.  சுவாமிஜி குறித்து வைத்திருந்த கடைசி நாளும் வந்தது. அன்று காலை 3 மணிக்கே எழுந்துவிட்டார். காலை தேனீர்வேளை வந்தது. அதில் அவர் ஒரு துறவியாக பேசாமல் இராமக்கிருஷ்ணரிடம் அவர்கள் அனைவரும் சீடராக இருந்த இளமைக்காலங்களில் நடந்த சம்பவங்களை பற்றி பேசி சந்தோஷமடைந்தார் . அன்று காலை 8:30 மணிக்கு மடத்திலுள்ள இராமக்கிருஷ்ணரின் கோவிலின் பூஜை அறைக்கு சென்றார். அங்கு தியானத்தில் ஆழ்ந்தார். 9:30 மணிக்கு பிரேமானந்தர் அங்கு வந்தார். அவரிடம் பூஜையறையின் அனைத்து கதவுகளையும் ஜன்னல்களையும் மூடச்சொன்னார். காலை 11 மணிவரை தியானத்தில் ஆழ்ந்திருந்தார். சுவாமிஜி தனிமையை விரும்பும்போது நான் மட்டும் அங்கு ஏன் இருக்க வேண்டுமென எண்ணி நானும் அவ்விடம் அகன்றேன்.  அங்கே என்ன நடந்தது என்று யாருக்கு தெரியும்?!  குருதேவருக்கும் சுவாமிஜிக்கும் மட்டுமே தெரியும். ஒருவேளை,  நீங்கள் எனக்கு கொடுத்த வேலைகளை நான் சிறப்பாக முடித்துவிட்டேன்.  எனக்கு விடைக்கொடுங்கள் என்றுக் கூட சொல்லி இருக்கலாம் .
கதவுகளை திறந்து வெளியே வந்த சுவாமிஜி மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தார். படிக்கட்டுகள் வழியே கீழே இறங்கிவந்த சுவாமிஜி காளிதேவியின்மீது ஒரு அழகிய பாடலை பாடியவாறு உற்சாகமாக காணப்பட்டார். அப்பொழுது அவருக்கு இந்த உலக நினைவே இல்லை. சுவாமிஜியை பார்ப்பதற்கு கீழே நின்று கொண்டிருந்தவர்களை அவர் கவனிக்கவில்லை. அதன்பிறகு சகதுறவியான சுவாமி சித்தானந்தரிடம் நூல்நிலையத்திலிருந்து ஸுக்ல யஜுர் வேத சம்கிதையை கொண்டுவந்து அதிலிருந்து ஸுஸுமினா சூர்ய ராக்ஷ்மி என்று தொடங்குகின்ற பகுதியை படிக்கச்சொன்னார். பின்னர் மதிய உணவை அனைவருடன் சேர்ந்து உண்டார் . என்றுமே இல்லாத அளவு சாப்பிடும்போது வேடிக்கையாக பேசினார். அனைவரையும் சிரிக்க வைத்தார். அதன்பிறகு சிறிதுநேரம் ஓய்வெடுத்துக்கொண்டார். மடத்திலுள்ள பிரம்மச்சாரிகளை அழைத்து தொடர்ந்து 3 மணி நேரம் சம்ஸ்கிருத இலக்கண பாடம் நடத்தினார்.  என்றுமே இல்லாத அளவு  கதைகள் ,வேடிக்கைகள் சிரிப்பு சம்பவங்களை நினைவுகூர்ந்து பாடத்தை நடத்தினார் .
கடிகாரத்தில் மணி 4 என காட்டியது. அப்பொழுது சுவாமிஜி இளஞ்சூடான பாலும், தண்ணீரும் அருந்தினார். பின்னர் பிரமானந்தருடன் சுமார் 1 கிமீ தொலைவிலிருக்கும் பெலூர் கடைத்தெருவுக்கு நடந்து சென்றார். வேதக்கல்லூரி ஒன்றை நிறுவவேண்டும் என சுவாமிஜி அப்பொழுது கூறினார்.  வேதங்களை படிப்பதனால் என்ன பயன் என்று பிரம்மானந்தர் சுவாமி விவேகானந்தர் பார்த்து கேட்டார். மூடநம்பிக்கை ஒழியும் என்று சட்டென பதில் கூறினார். அவர்கள் இருவரும் இராமக்கிருஷ்ணரின் நேரடி சீடர்கள், நெடுநேரம் பேசிக்கொண்டே நடந்தனர். மாலை 5:30 க்கு மடத்திற்கு இருவரும் திரும்பினர். அப்பொழுது கோவிலில் ஆரத்திக்காக மணி அடிக்கப்பட்டது. பிரமானந்தர் பூஜை செய்வதற்காக பூஜை அறைக்கு சென்றார் .
Swami Premananda (1861–1918)
அப்பொழுது கிழக்கு வங்காளத்திலிருந்து வந்த விரஜேந்திரர் என்னும் இளைஞர் சுவாமிஜிக்கு பணிவிடைகள் செய்துவந்தார். அவரிடம்,  இன்று என் உடல் லேசாகவும் நன்றாகவும் இருக்கிறது. மகிழ்ச்சியாகவும்  இருக்கிறேன் எனக்கூறி, அறையின் வெளியே விரஜேந்திரரை அமர்ந்திருக்குமாறு சொல்லிவிட்டு தனது அறையில் வடமேற்கு மூலையை நோக்கி ஜெபமாலையுடன் தியானம் செய்ய ஆரம்பித்தார். சுமார் 6:30 மணியளவில் சீடரை கூப்பிட்டு ரொம்ப உஷ்ணமாக இருக்கிறது. அதனால் அறையின் ஜன்னல் கதவுகளை திறந்து வைக்குமாறு கூறினார். ஆனாலும் உஷ்ணம் தாங்கமுடியாமல் விரஜேந்திரரிடம் தனது தலையில் விசிறியால் சிறிது வீசிவிடுமாறு கூறினார். சிறிது நேரம் கழித்த பிறகு,  போதும்..கொஞ்சம் என் கால்களை பிடித்துவிடு என்றார். அப்பொழுது அவர் கையில் ஜெபமாலையுடன் மந்திரம் சொல்லிக்கொண்டு இருந்தார். அந்த சீடருக்கு ஏதோ உபதேசம் செய்வதுபோல் இருந்தது. அதன்பிறகு இடதுபக்கமாக படுத்து இருந்தவர், சிறிது நேரத்தில் வலதுபக்கமாக  லேசாக திரும்பி படுத்தார் தீடிரென அவரது கைகள் நடுங்கின. கனவுக்கண்ட குழந்தை அழுவதுப்போல் சுவாமிஜியிடமிருந்து ஒரு சப்தம் வந்தது. சிறிதுநேரத்தில் ஆழ்ந்த மூச்சை உள்ளிழுத்தார். அவரது தலை தலையணையில் சாய்ந்தது. மீண்டும் ஒருமுறை ஆழ்ந்த மூச்சை இழுத்தார். பிறகு எல்லாம் நிசப்தம் மட்டுமே! அப்பொழுது மணி இரவு 9. சுவாமிஜி சமாதியில் ஆழ்ந்திருப்பதாக விரஜேந்திரர் நினைத்தார் .
Swami Vivekananda shillong-1901-april 

இருப்பினும் சற்று கவலையுடன் கீழே ஓடிச்சென்று சுவாமி அத்வைதானந்தரை அழைத்தார். அப்பொழுது இரவு உணவுக்காக மணியடித்தது. எல்லோரும் அங்குதான் இருந்தனர். எல்லோரும் உடனே மாடிப்படி ஏறிச்சென்றனர். அத்வைதானந்தர் சுவாமிஜியின்  நாடிதுடிப்பை சோதித்தார். அவருக்கு எதுவும் புரியவில்லை. பின்னர் பிரேமானந்தர் வந்து நாடித்துடிப்பை பார்த்தார். நாடி துடிப்பு நின்றிருந்தது. அவர் சமாதியில் இருப்பதாக எல்லோரும் நினைத்து,ர  அதை  உணர்த்தும் விதமாக ஜெய் ஸ்ரீராமக்கிருஷ்ணா என உரக்க சப்தமிட்டனர். சுவாமி விவேகானந்தரிடம் இருந்து எந்த அசைவும் இல்லை. உடனே ஓடிச்சென்று மருத்துவரை அழைத்துவரும்படி கூறினார்கள். சுவாமி பிரேமானந்தருக்கு உண்மை புரிந்துவிட்டது. அவர் ஓ நரேந்திரா! என்று சொல்லி அழ ஆரம்பித்தார். மருத்துவர் இரவு 10:30க்கு வந்தார். 
மருத்துவருக்கு உண்மை புரிந்துவிட்டது.  இருந்தாலும் செயற்கை முறையில் மூச்சை செயல்படுத்துவதற்கு முயற்சித்தார். எந்த பயனுமில்லை. அப்பொழுது நள்ளிரவு 12 மணி. அந்த சமயத்தில் சுவாமி விவேகானந்தருக்கு வயது 39. ஆனால் உயிர் உடலை விட்டு சென்றாலும் சுவாமிஜியின் உடல் நோய் காரணமாக இறந்தவர் உடல் போலில்லாமல் மலர்ச்சியாகவே இருந்தது. உயிர் பிரியும் நேரத்தில் அவர் ஒரு கௌபீணம் மட்டுமே உடுத்தியிருந்தார். கண்கள் மேல்நோக்கியே இருந்தன. எல்லாம் முடிந்துவிட்டது. அடுத்தநாள் பத்திரிகையில் செய்தி வெளியாகிவிட்டது மேலைநாடுகளுக்கு தந்தி கொடுக்கப்பட்டது. மக்கள் கூட்டம் கூட்டமாக பேலூர் மடத்திற்கு வர தொடங்கினர். சுவாமிஜி மகாசமாதி அடைந்த நேரத்தில்  ராமக்கிருஷ்ணரிடம் சீடர்களாக இருந்தவர்களில் சுவாமிஜிக்கு மிக பிடித்தமான சக துறவியான சென்னையில் இருந்த சசிக்கு, சுவாமிஜி ஆத்மரூபமாக தரிசனம் கொடுத்து அவருக்கு காதில் படும்படியாக, சசி நான் உடலை உதறிவிட்டேன் என்றார் .
பிற்பகலில் சுவாமிஜியின் திருமேனியை கங்கை நீரில் குளிப்பாட்டினார். புதிய காவி உடையை உடுத்தினர். மலர்மாலைகளால் அலங்கரித்தனர் வேதமந்திரங்கள் முழங்கின.  சங்கொலிகள் எழுப்பப்பட்டன.  எல்லா இடமும் சாம்பிராணி புகை போடப்பட்டது. சுவாமிஜி தம்மை எங்கு எரிக்கவேண்டுமென கங்கைக்கரையில் ஒரு இடத்தை சுட்டிக்காட்டினாரோ அந்த இடத்தில் உள்ள மரத்தடிக்கு அவரது திருமேனி கொண்டுவரப்பட்டது. அனைத்தையும் புனிதமாக்கும் அக்கினி அவரது உடலை புனிதமாக்குவதாக மற்றவர் நினைத்திருக்க, அக்னி தன்னை புனிதமாக்கிக்கொண்டதை நான் உணர்ந்தேன். அப்பொழுது அவரது சக துறவியிடம் ஒருமுறை சொல்லி இருந்தார்.  கிழிந்த ஆடையை வீசி எறிவதுபோல், ஒருநாள் இந்த உடலை நான் விட்டுவிடுவது நல்லதென்று எனக்கு தோன்றலாம். அப்பொழுதுகூட நான் வேலை செய்வதை நிறுத்தமாட்டேன். உலகம் முழுவதுமுள்ள மனிதர்களை தூண்டிக்கொண்டே இருப்பேன். அவர்கள் அனைவரும் இறைவனுடன் ஒன்றுபட்டு இருக்கிறோம் என்பதை உணரும்வரை நான் உழைத்துக்கொண்டே இருப்பேன் என்றார் .
சுவாமிஜி சமாதி நிலையில் உடலை விட்டுவிட்டாலும் அவர் அரூபமாக அவரது சீடர்களுக்கு எல்லாம் கற்றுக்கொடுத்துதான் வந்தார். சமாதி நிலை என்பது பற்றி சுவாமிஜி கூறும்போது, சமாதி நிலையில் ஒரு உடலை விட்டுவிடுவது என்றால் உடலில் இயங்கி கொண்டிருக்கும் சக்திகளை சமப்படுத்தி ஆதிநிலையான இயக்கமற்ற நிலையை கொண்டுவந்தால் அதுவே சமாதி நிலை. உடலில் இயங்கிக்கொண்டிருக்கும் பிராணனை உள்மூச்சு நிலையில் உள்ளேயே நிறுத்தவேண்டும். அவ்வாறு நிறுத்தும்போது இதயம் இயங்குவது நின்றுவிடும். அதனால் இரத்த ஓட்டம் நின்றுவிடும் .படிப்படியாக உடலின் இயக்கங்கள் நின்றுவிடும். மனதை ஒருநிலை படுத்தினால் மட்டுமே இதுசத்தியம். மனதில் எண்ணங்கள் எழுந்தால் மூச்சு இயங்க ஆரம்பித்துவிடும். எனவே, சமாதி நிலையில் மனம் ஒரே எண்ணத்தில் ஒருநிலைப்படும். இவ்வாறு மனம் ஒருநிலைப்பட்டு, மூச்சு நின்று உடலின் இயக்கங்கள் நிற்கும்போது உடலைவிட்டு சூட்சும சரீரம் வெளியேறுகிறது. இவ்வாறு வெளியேறும் சூட்சும சரீரம் பூலோகத்தை கடந்து அனைத்து உலகங்களையும் கடந்து பிரம்மதரிசனம் பெறுகிறது. இந்த பிரம்மத்தில் ஒன்று கலந்தால் மீண்டும் உடலுக்குள் அந்த சூட்சும சரீரம் வராது. உடல் அழிந்துவிடும். ஒருவேளை மீண்டும் உடலுக்குள் வந்தால் மறுபடியும் பிராணன் இயங்க ஆரம்பிக்கும்.  மூச்சு இயங்கும். இதயம் இயங்க ஆரம்பிக்கும். உடல் இயங்க ஆரம்பிக்கும். சில சித்தர்கள், ஞானிகள் தங்கள் உடலைவிட்டுவிட்டு பிரம்மதரிசனம் பெற்று வாழ்வார்கள். ஆனால் பிரம்மத்துடன் ஒன்றுகலக்க மாட்டார்கள். அதேசமயம் மீண்டும் இந்த உடலுக்குள் வரமாட்டார்கள். அவ்வாறு பல ஆண்டுகள், யுகங்கள் சூட்சும நிலையில் வாழ்பவர்கள் ரிஷிகள் ஒருவர் தகுந்த பயிற்சி மூலம் சூட்சும நிலையில் உடலை வெளியேற்றினால் இப்படிப்பட்ட சூட்சும நிலையில் வாழும் ரிஷிகளை காணலாம் என்றார் .
உடலைவிட்டு உயிரை தானாகவே இதே சமாதி நிலை மூலம் சூட்சும உடலை வெளியேறியவர் சுவாமிஜி. அதனால் உடலைவிட்டு சூட்சும நிலையில் வாழ்ந்துவருகிறார். இது அரவிந்தர் வாழ்க்கை வரலாற்றில் இருந்து தெரிந்து கொள்ளலாம். அரவிந்தர் போன்ற ஞானிகளுக்கு சுவாமிஜி விவேகானந்தர் சூட்சும உடலில் காட்சி கொடுத்து அவருக்கு யோகத்தை பற்றியும் பயிற்சி கொடுத்ததையும் அரவிந்தர் தனது புத்தகங்களில் குறிப்பிட்டுள்ளார். சுதந்திர போராட்டகாலங்களில் தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக அரசியல் களத்தில் இருந்த அரவிந்தருக்கு ஓராண்டு சிறைவாசம் கிடைத்தது. சிறையை தன் யோக நிலையமாக அமைத்துக்கொண்டார் அரவிந்தர். அப்பொழுது அவருக்கு கிருஷ்ணனின் தரிசனம் கிடைத்தது. வாசுதேவன் மைந்தன் சிறையெங்கும் நிறைந்தான். போர்த்திக்கொள்ளும் போர்வையிலும், சிறைக்கம்பிகளிலும் சிறை அதிகாரிகளாகவும், மரங்களிலும், எங்கெங்கு காணினும்  கிருஷ்ணன் நிறைந்தான். காணும் பொருள் யாவும் கண்ணனாக தெரிந்தது அரவிந்தருக்கு. இத்தனைக்கும் சிறையில் தனியறையில் அவர் அடைக்கப்பட்டுருந்தார் .
Sri Aurobindo (Sri Ôrobindo) (15 August 1872 – 5 December 1950),
சதாகாலமும் யோகத்தில் அமர்ந்து மனிதக்குலம் தெய்வீகமாவது எப்போது என யோசித்த அவருக்கு சிறையில் சுவாமி விவேகானந்தர் காட்சியளித்தார் . அதிமானஸம் என்னும் நூலைப்பற்றி சுவாமிஜி தனக்கு விளக்கி கட்டியதாக அரவிந்தர் கூறினார். ஆனால் விவேகானந்தர் அதிமானஸம் என்ற சொல்லை உபயோகிக்கவில்லை. அதிமானஸம் என்பது எனது சொல்லாகும். சுவாமிஜி என்னிடம் இதுதான் அது... அதுதான் இது என்றெல்லாம் விளக்கி கூறினார் கையால் சுட்டிக்காட்டியபடி அவர் போதித்தார். அலிப்பூர் சிறையில் இருக்கும் போது 15 நாட்கள் அவர் என்னிடம் வந்தார். அவர் கூறுவதை நான் நன்கு புந்துகொள்ளும்வரை அவர் எனக்கு போதித்தார். மனம் கடந்த சைதன்யத்தை எனக்கு புரியவைத்தார். அதுவே அதிமானஸ சைதன்யத்திற்கு இட்டு செல்லும் சத்திய சைதன்யம். என் மூளையில் அனைத்தும் பதியும் வரை சுவாமிஜி என்னைவிடவில்லை.  சூட்சும உடலில் வந்து எனக்கு நிறைய போதித்தார் என அரவிந்தர் தன்னுடைய குறிப்புகளில் தெரிவிக்கின்றார் .
மீண்டும் இந்த உலகில் பிறக்கவேண்டும், விடுபட்டவேலைகளை முடிக்கவேண்டும் என்று பலமுறை சுவாமிஜி கூறி இருந்தார். அது எப்பொழுது நடக்கும் என்று புரிந்துக்கொள்ள சில தடயங்களையும் விட்டு சென்றுள்ளார். மீண்டும் பிறக்கும்போது விட்டு சென்ற பணிகளை தொடர்ந்து செய்யவேண்டும். நான் ஏற்கனவே போதித்தவற்றை காலத்திற்கு தகுந்தமாதிரி எளிமையாக ஆக்கி விரிவுபடுத்தவேண்டும் என்று கூறினார் அவருடைய பணி மீண்டும் பெரிய அளவில் நடைபெறும்போது அவர் பூமிக்கு வந்துவிட்டார் என அறிந்துகொள்ளலாம் இரண்டாவது இந்த மடம் போன்றவற்றை மீண்டும் நிறுவ நானே பிறப்பெடுத்து வருவேன் என்று சீடரிடம் கூறி இருக்கிறார். ஆகவே அவர் நிறுவிய மடம் ஒரு அழிவை சந்திக்கும். அதை மீண்டும் நிலைநிறுத்த அவரே வருவார் என்று அவர் சீடருக்கு உபதேசித்தவைகளிலிருந்து புரிந்து கொள்ளலாம். அப்படி நாம்  இருக்கும் காலங்களிலோ, இல்லை எதிர்காலங்களிலோ நடக்குமேயானால் சுவாமி விவேகானந்தர் மீண்டும் பிறவி எடுத்துவிட்டார் என தெரிந்து கொள்ளலாம். நம்முடைய வாழ்நாட்களில் அது நடந்தால் அவர் வரும் காலத்தை நாம் எதிர்பார்த்து காத்திருப்போம்!!

சுவாமி விவேகானந்தரின் ஜீவன் முக்தி சமயத்தில் நடந்தது என்ன ஒரு நேரடி ரிப்போர்ட் பாகம்1

நன்றியுடன் 
ராஜி 
(காந்திமதி)

15 comments:

  1. சூட்சும நிலையைப் பற்றி முன்னர் படித்துள்ளேன். விவேகானந்தரின் வாழ்க்கையின் இறுதி நிலையினைப் படித்தபோது மனம் கலங்கியது. இவ்வாறாக நம் மண்ணில் ஒரு மகான் வாழ்ந்து, நம்மோடு சூட்சும நிலையில் இருந்துகொண்டிருக்கிறார் என்பது நமக்குப் பெருமையே. அவர் இறந்துவிட்டார் என்று கூற மனம் ஒப்பவில்லை. இவ்வாறான பதிவுகளை எழுதவும் ஓர் அசாத்திய அறிவும், துணிவும் தேவை. எழுத்துப்பணியில் இறைவன் துணை நிற்பான். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. குண்டலினி பற்றியும் ,பரம்பொருளும் பிரபஞ்சமும் பற்றியும் விவேகானந்தர் ஆற்றிய சொற்பொழிவுகள் சமீபத்தில் ஆடியோ பதிவுகள் கேட்க நேர்ந்தது .மதம் என்பதே இல்லை ,எல்லாம் ஓரிறைவன் என்பதை சொல்லும் அவரது தத்துவங்கள் கேட்க கேட்க ,யாம் பெற்ற இன்பம் பெறுக இவையகம் என்று ,இந்த கருத்துக்களை எழுத துணிந்தேன் ,உங்களின் கருத்துகளும் வாழ்த்துக்களும் என்னை மேலும் ,மேலும் இதே போன்று எழுத தூண்டுகிறது நன்றிப்பா ...

      Delete
  2. பலரது எண்ணங்களில் வாழ்பவர் விவேகாநந்தர் இது யாருடைய நேரடி ரிபோர்ட் என்று அறிய ஆவல்

    ReplyDelete
    Replies
    1. சமீபத்தில் இராமகிருஷ்ண மடத்திற்கு சென்றிருந்தேன் .விவேகானந்தரின் நூல்கள் ,சொற்பொழிவுகள் என பல புத்தகங்கள் வாங்கி படித்தேன்.ஓய்வு நேரங்களில் அவற்றை பார்க்க தொடங்கிய எனக்கு ,விவேகானந்தரின் பேச்சுக்கள் ,வாழ்க்கை நெறி ,பரமஹம்சரின் தத்துவங்கள் ,அன்னை சாரதா தேவியின் கருத்துக்கள் என படிக்கத்தொடங்கினேன் . படித்து அதில் முழ்கினேன் .அதில் இருந்துதான் ,ஸ்வாமி வித்யானந்தா என்பாரின் சொற்பொழிவில் ,விவேகந்நாதரின் இறுதிக்காலம் பற்றிய ஒலிவடிவத்தை கேட்கநேர்ந்தது அதன் எழுத்துவடிவம் தான் ,இந்த பதிவு .அதேசமயம் ஒருபதிவு மக்களை சென்று அடையவேண்டுமானால் அதில் ஸ்வாராஷ்யம் இருக்கவேண்டும் என்பதற்காக ,ஏற்கனவே இதைப்படித்தபோது நானே என்னை மறந்து அந்த நிகழ்வுகளில் முழ்கினேன்.அதையே கருவாக வைத்து எழுதினேன்.
      சுவாமி விவேகானந்தரின் மேலும் பல சொற்பொழிவுகளை எழுதலாம் என்று நினைக்கிறன் .

      Delete
  3. வியக்க வைத்த விடயங்கள் பகிர்வுக்கு நன்றி சகோ.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்களுக்கும் வருகைக்கும் நன்றி...

      Delete
  4. Replies
    1. நன்றிண்ணே ....எல்லோரும் அறிந்த விவேகானந்தருக்கு என்னால் இயன்ற மலர் சமர்பணம் ..

      Delete
  5. மனத்தைக் கடந்தால் மரணத்தை கடக்கலாம். மனத்தைக் கடக்க நம்முள் இருந்துகொண்டு மனதை இயக்குபவனை கவனிக்க வேண்டும். ஆனால் நாம் அவனை விட்டுவிட்டு மனதை நம்புகிறோம். அது இறுதி வரை நம்மை அவனிடம் அழைத்து செல்வதாக நம்பவைத்து பிறவி கடலில் மீண்டும் தள்ளி விட்டு விடுகிறது.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி .பொதுவாகவே நாம் செய்யும் வினைகள் ஸஞ்சிதம் (சேர்த்து வைக்கப்பட்டவை). ஆகாமி (வருங்காலத்தில் சேமிப்பவை) என்று இரு வகைப்படும். அவற்றில் பக்குவத்தை அடைந்து தற்போதுள்ள ஸரீரத்தை கொடுத்துள்ள ஸஞ்சித வினையின் ஒரு பாகமே ப்ராரப்தம் எனப்படும். இந்த சரீரத்தில் நல் பண்புகளை அடையப்பெற்று உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்வோமேயானால் ஏதோ ஒரு பிறவியில் ஆத்மஞானத்தை அடைவது நிச்சயம். அப்போது முற்பிறவியின் மூட்டைகளாக உள்ள ஸஞ்சித வினைகள் வேரோடு அகன்றுவிடும். இதையே பகவான் கீதையில் ஞானாக்னி: ஸர்வகர்மாணி பஸ்மஸாத் குருதே ததா என்று குறிப்பிடுகிறார்.
      இந்த பஞ்சகோசங்களாலான உடல்தான் நான்’ என்ற பிணைப்பை ஏற்படுத்தியது. துக்கமயமானதும், அசுத்தமானதும், அழிவுறக்கூடியதும் அஜ்ஞானமயமானதுமான இந்த கோசங்கள் நான் அல்லேன்; ‘எங்கும் நிறைந்ததும் அழிவற்றதும், ஸத், சித், ஆனந்த ஸ்வரூபமுமான ப்ரஹ்மமே நான்’ என்ற பாவனை மூலம் இந்த அஜ்ஞானத்தைக் கடக்க முயன்று அகற்ற வேண்டும்.அதுநம்மை பிறவா நிலைக்கு கொண்டுசெல்லும் ..

      Delete
  6. அருமை வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ....

      Delete
  7. Replies
    1. பார்க்கிறேன் சகோ

      Delete