எல்லா கடவுளும் பல்வேறு அவதாரங்களை எடுத்தன. அவ்வாறு எடுக்கும்போது தனக்கென அடையாளமா இருக்கும் பொருட்களையோ அல்லது தனது வாகனத்தையோ கொண்டிருக்க மாட்டாங்க. ஆனா, விஷ்ணுவின் எல்லா அவதாரத்திலும் கருடன் இருப்பார்ன்னு சொல்லுது கருட புராணம். சதா சர்வக்காலமும் இறைவனுடனே இருக்குற கருடனை வணங்கினால் அவரின் அருளாசி கிட்டும். முக்கியமா பார்வைக்குறைபாடு, கண் கோளாறுகள் கருடனை வேண்டிகொண்டால் குறைகள் நீங்கும் என்பது நம்பிக்கை. கோயிலில் நடைபெறும் பிரம்மோற்சவம், கும்பாபிஷேகம் போன்ற கால நேரங்களில் வானில் கருடன் தெரிவதும், வட்டமடிப்பதும் மங்களகரமானதுன்னு நம்ம எல்லோருக்கும் தெரியும். மேலே பறக்கும் கருடனின் நிழல் பயிர் பச்சைகளின் மேல் படுவது நல்லது என்று விவசாயிகள் நம்புகிறார்கள். கருட மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்று. எதிரிகளை வெல்வதற்கும், விஷங்களை முறிக்கவும், மந்திர, தந்திரங்களுக்கும், தீய சக்திகளை ஒடுக்கவும் கருட மந்திரம் நல்ல பலன் தரும். கார்க்கோடகன் என்னும் நாகத்தை அடக்கி பிடித்து, நாகங்களை ஆபரணமாக தரித்துள்ளதால் ராகு-கேது தோஷமுள்ளவர்கள் கருட தரிசனம் செய்வது நலம் தரும். கருடனின் குரு குருபகவான்.. அதனால் குருபகவானை வணங்க அறிவு கூடும்.
ஆடி மாதம் முழுக்க நிறைய பண்டிகை இருக்கு. அதுல முக்கியமானது கருட பஞ்சமி. பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் கருடன் பகவான்தான் இருக்கார். ஆடிமாதம் வளர்பிறையில் வரும் பஞ்சமி திதியில் இப்பண்டிகை அனுஷ்டிக்கப்படுது. இவரைப்போல பலசாலியாகவும் புத்திமானாகவும், வீரனாகவும், விவேகியாகவும் குழந்தைகள் உருவாக கருட பஞ்சமியன்று விரதம் இருக்கின்றனர். பெருமாள் வீதியுலா வர எத்தனையோ வாகனமிருக்க கருடன்மீது வரும் உலாவை கருட சேவைன்னு சொல்லி ஆர்ப்பரிக்கும்போதே கருடனின் மகிமையை உணர்ந்து கொள்ளலாம். கருடனுக்கு விஹாகேஸ்வரன், வைநதேயின், சுபர்ணன், புள்ளரசன், பட்சிராஜன், பெரிய திருவடின்னு பல பேர் இருக்கு.
பிரம்மனின் மகனான காஷ்யப்பருக்கு நாலு மனைவி. அவர்களில் கத்ரு என்பவளின் பிள்ளைகள்தான் நாகர்கள். தாயின் சொல்லை கேட்காமல் சாபத்துக்குள்ளாகி ஜனமேஜயன் என்பவனின் யாகத்தீயில் விழுந்து மாண்டன. அஸ்தீகர் ஜனமேஜயனது யாகத்தை நிறுத்தி கத்ரு பிள்ளைகளின் சாபத்தை நீக்கிய நாளே நாக சதுர்த்தி. நாக சதுர்த்தியன்று விரதமிருந்தால் புத்திர பாக்கியம் கிட்டும்.
வினதைக்கு அருணனும் கருடனும், கத்ருவுக்கு நாகர்களும் வாரிசு. ஒருமுறை வினதையும், கத்ருவும் தோட்டத்தில் உலா வந்துக்கொண்டிருந்தபோது இந்திரனின் வாகனமான உச்சைச்சிரவ் அந்தப்பக்கம் சென்றது. வினதையிடம் அந்தக்குதிரை வாலின் நிறம் என்னன்னு கத்ரு கேட்டாள். வாலின் நிறம் வெண்மைன்னு வினதை சொன்னாள். இல்லை, அதன் நிறம் கருப்பு என கத்ரு வாதிட்டாள். வாதம் சூடுப்பிடித்து வாக்குவாதமானது. போட்டியில் தோற்பவர் வெற்றி பெற்றவருக்கு அடிமை எனவும், அவர்களுக்கு ஊழியம் செய்ய வேண்டுமென முடிவானது. கத்ரு தன் பிள்ளைகளிடம் சென்று கருமை நிறம் கொண்டவர்களில் உச்சைச்சிரவ் வாலில் சுற்றிக்கொண்டு வாலை கறுப்பாக்குங்கள் என உத்தரவிட, அவளின் பிள்ளைகளும் அப்படியே அவ்வாறு செய்ய குதிரையின் வால் கருப்பானது. பின்பு, ஏதுமறியாதவள் போல வினதையை அழைத்துக்கொண்டு கத்ரு குதிரையை காண சென்றாள். அங்கு குதிரையின் வால் கருமையா இருப்பதை காட்டி நீ எனக்கு அடிமை என சொன்னாள். வினதையும் ஒத்துக்கொண்டு கத்ருவின் அடிமையானாள். எங்கு சென்றாலும் கத்ருவை சுமந்து செல்வது அவளின் வேலையானது. இதுமட்டுமின்றி அருணன் மற்றும் கருடனும் அவளின் தாயாரோடு சேர்த்து கத்ருவுக்கும், அவளின் பிள்ளைக்கு அடிமையாயினர்.
அடிமைத்தனம் பிடிக்காத கருடன் தன் மாற்றாந்தாயான கத்ருவிடம் சென்று தங்களை விடுவிக்குமாறு வேண்டி நின்றார். அதற்கு கத்ரு, தேவ லோகத்திலிருந்து அமிர்தம் கொண்டு வந்து தரவேண்டும் என நிபந்தனையிட்டாள் தேவலோகம் சென்றான் கருடன். இந்திரனைச் சந்தித்து தன் விருப்பத்தைக் கூறி, தேவலோக அமிர்தத்தைத் தருமாறு கேட்டான். நாகங்கள் மரணமில்லா வாழ்வு பெற்றால் உலகம் என்னாவது என்று யோசித்த இந்திரன். அமிர்தத்தைத் தர மறுத்தான். தன் பலத்தில் நம்பிக்கை கொண்டிருந்த கருடன், இந்திரனுடன் யுத்தம் செய்து, அவனை வென்று அமிர்த கலசத்தை அடைய விரும்பினான். அதையடுத்து, இருவரும் கடுமையாக மோதிக் கொண்டார்கள். கருடனுக்கும் இந்திரனுக்கும் நடந்த யுத்தத்தில் கருடனே வென்றான். தேவலோகத்தில் இருந்து அமிர்த கலசத்தை எடுத்துக்கொண்டு நாகங்களுக்குக் கொடுக்கப் புறப்பட்டான்.
இத்தனை சம்பவங்களையும் பார்த்துக்கொண்டிருந்த மகாவிஷ்ணு, அதன்பின்னரும் சும்மா இருக்க விரும்பவில்லை. அமிர்த கலசத்துடன் விண்வெளியில் பறந்து கொண்டிருந்த கருடனை வழிமறித்தார். விஷ நாகங்களுக்கு அமிர்தம் தந்தால், அவை மரணமில்லாமல் வாழ்ந்து, மனித இனத்தையும் தேவர்களையும் அழித்துவிடும். இது வேண்டாம் என அறிவுரை கூறினார். ஆனால், கருடனோ எதற்கும் செவி சாய்க்கவில்லை. அடிமைத் தளையிலிருந்து விடுபடவேண்டும் என்ற வெறியில் அவன் விஷ்ணுவையே துச்சமாகக் கருதினான். இந்திரனை வென்ற ஆணவத்தில், துணிவிருந்தால் என்னோடு போர் புரிந்து ஜெயித்து, அதன்பின்பு அமிர்த கலசத்தை நீங்களே தேவலோகத்தில் கொடுத்துவிடுங்கள் என்று விஷ்ணுவுக்கே சவால் விட்டான்.
சற்று நேரம் விஷ்ணு யோசித்தார். தன் தாயின்மீது கொண்ட பக்தியால் தேவேந்திரனையே எதிர்க்கத் துணிந்த கருடனின் வீரத்தை எண்ணி வியந்தார். அதோடு, அமிர்த கலசம் கையில் இருந்தும், அந்த அமிர்தத்தை தான் அருந்தி அழியாநிலை பெற விரும்பாமல் சென்றுகொண்டிருக்கும் அவனின் தன்னலமற்ற தன்மையை மனத்தால் பாராட்டினார். கருடனுக்குள் ஆணவமும் அகங்காரமும் இருந்தாலும் அவனுக்குள் இருந்த உயர்ந்த பண்புகளையும், அவனது விடுதலை வேட்கையையும் கண்டு வியந்த விஷ்ணு அவனோடு போரிடுவதைப் பெருமையாகக் கருதினார்.
தொடர்ந்து, தான் கொண்டு சென்ற அமிர்த கலசத்தை தர்ப்பைகள் பரப்பி அதன்மீது வைத்தான் கருடன். வினதையோடு கருடன் மற்றும் அருணனுக்கு நாகர்களின் தாய் கத்ருவிடமிருந்து விடுதலை கிடைத்தது. நாகர்கள் கடலில் குளித்துவிட்டுக் கலசத்திலிருந்த அமிர்தத்தை உண்ண வருகையில், இந்திரன் அமிர்த கலசத்தைத் தூக்கிக் கொண்டுச் சென்று விட்டார். ஏமாந்த நாகர்கள் அமிர்த கலசம் வைத்திருந்த தர்ப்பைப்புல்லைத் தங்கள் நாக்கினால் நக்கியதால், பாம்பினங்களுக்கு நாக்குகள் பிளவுண்டன. ஸ்ரீமகாவிஷ்ணு கருணைகூர்ந்து விஷமில்லா நாகங்கள் பல காலம் வாழும். விஷமுள்ள நாகங்கள் சில காலம் வாழும். நல்ல நாங்களை மனிதர்கள் பூஜித்து வழிபடுவார்கள் என்று அருளினார். தொடர்ந்து.... வினதையும் கருடனும், அவனது சகோதரனும் கத்ரு மற்றும் நாகங்களின் அடிமைத்தளையில் இருந்து விடுபட்டனர். கருடன் தன் தாய் வினதை மற்றும் கத்ரு ஆகியோரை வணங்கி ஆசிபெற்று விஷ்ணு சேவையில் தொடர்ந்து ஈடுபட்டான்.
எல்லா விஷ்ணு ஆலயங்களிலும் சந்நிதியை நோக்கி வணங்கியபடி நிற்கும் கருடனை நாம் கருடாழ்வார் என்றே அழைத்து பூஜிக்கிறோம். நாகங்களுக்கும் கருடனுக்கும் பகை என்றாலும், விஷ்ணுவின் சந்நிதியில் ஆதிசேஷன் எனும் நாகமும், கருடாழ்வாரும் நட்பு கொண்டே விஷ்ணு சேவை செய்கின்றனர். கருடனின் திருஉருவம் காணப்படும். ஒருவர் உடலில் ஏறிய பாம்பின் விஷத்தை கருட வித்தியா மந்திரங்கள் செபிப்பதன் மூலம் நீக்கப்படுகிறது. கருடன் பெயரில் கருட புராணம் உள்ளது. அமிர்தத்தை, தேவ லோகத்திலிருந்து பூமிக்கு எடுத்து வந்தவர். விஷ்ணுவின் வாகனமாக கருடன் இருப்பதால், வைணவர்கள் இவரைப் பெரிய திருவடி என்பர். திருமாலையே கருடன் எதிர்த்திருந்தாலும், திருமாலுக்கே வரம் தந்த பெருமை, திருமாலுக்கே வாகனமான பெருமை என இரு பெரும் பேறுகள், பெற்ற தாயைப் போற்றி வணங்கியதன் காரணமாக கருடனுக்குக் கிடைத்தன.
வாலகில்யை முனிவர்கள்..
கட்டை விரலைவிட சிறிய உருவம் கொண்ட முனிவர்கள் 60.000 பேர் இருந்தனர். வானுலகில் சுற்றித்திரியும் ஆற்றல் கொண்ட இவர்கள் சூரிய பகவானின் நண்பர்கள். காசிபர் முனிவர் வேள்வி செய்யும்போது இந்திரன், வேள்விக்குண்டான மரக்கட்டைகளுக்காக , மலைக்காட்டையே பெயர்த்தெடுத்து வந்து தந்தார். ஆனால், வாலகில்யை முனிவர்கள் அத்தனை பேரும் சேர்ந்தும் சிறு மரக்கட்டையை தூக்க சிரமப்பட்டு கொண்டு வந்ததை கண்டு இந்திரன் கேலி செய்து சிரித்தான். தேவாதிதேவனான உன்னை வெல்லும் ஆற்றலோடு காசிபருக்கு மகனாய் பிறப்பான் என சாபமிட்டனர். இந்திரன் தான் செய்த தவறுக்கு மனம் வருந்தி மன்னிப்பு கேட்டான். பிரம்மன் தலையிட்டு சமரசம் செய்யப்போக ஆரம்பத்தில் இந்திரனுக்கு எதிரியாகவும், பின் நண்பனாகவும் விளங்குவான் என அருளினர்.
முதலையின் வாயில் அகப்பட்டுக்கொண்ட யானையை காப்பாற்ற வாய்வுவேகம், மனோவேகமாய் பெருமானை சுமந்து வந்த கருடன் நம் துயரினை போக்கவும் விஷ்ணுவை அழைத்துவருவார். பலசாலியும் புத்திக்கூர்மையுடனும் பிள்ளைவரம் வேண்டியும், சகோதரர்களுக்குள் ஒற்றுமை உண்டாகவும், கண் குறைபாடுகள் நீங்கவும், உத்தியோகத்தில் சிறக்க கருட வழிபாடு சிறந்தது.
பிறக்கும் குழந்தை துறுதுறுப்பா இருக்க இந்த விரதம் உதவும். ஆனா, பாருங்க இந்த விரதத்தை என் அம்மா கடைப்பிடிக்கலைப்போல!!!!! நான் சோம்பேறியா பொறந்துட்டேன். அதனாலதான் நேத்தைய கருட பஞ்சமி விழாவுக்கு இன்னிக்கு பதிவு போட்டிருக்கேன். டைப்ப லேட்டாகிட்டுது.... :-(
நன்றியுடன்,
ராஜி.
சிறப்பான தகவல்கள்.
ReplyDeleteஇன்றைய தினம் சகோதரிகள் தங்கள் சகோதரர்களுக்கு புற்று மண் அவர்கள் காதில் தடவி, கொழுக்கட்டை வாயனம் கொடுத்து சகோதரர்களுக்கு பணமும் கொடுப்பார்கள்.
அப்படியா! இந்த விசயம் தெரியாதே! அடுத்த வருசம் இதையும் பதிவில் சேர்த்துக்கலாம்
Deleteசுவாரஸ்யம்...!
ReplyDeleteதுறுதுறுப்பா...?
நீங்க சுறுசுறுப்பா இருக்கீங்களே, அது போதாதா...?
சுறுசுறுப்பு படிக்க, எழுத...
Deleteதுறுதுறுப்பு எங்க ஊரு வட்டார வழக்கு சொல்...
நான் சுறுசுறுப்புன்னு நீங்கதான் மெச்சிக்கனும்
ஸ்வாரஸ்யம்.
ReplyDeleteஒரே நாளில் இரண்டு பதிவுகளுக்கு மேல் வெளியிட வேண்டும் என ஏதாவது கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறீர்களா? :) ஒரு நாளுக்கு ஒரு பதிவு - கொஞ்சம் வசதி! - உங்களுக்கும், படிப்பவர்களுக்கும்!
ஒரே நாளில் இரு விசேசம் வந்தால் மட்டுமே ரெண்டு பதிவு. மத்தபடி ஒரு பதிவுதான். அதான் எனக்கும் வசதியா இருக்கும்.
Deleteநீங்க தேனீக்கு அக்கா மாதிரி.
ReplyDeleteஆமா, ஆமா, கவுந்தடிச்சு தூங்க ஆரம்பிச்சா பொழுது போறதே தெரியாது...
Deleteபெரிய திருவடி சேவை சிறப்பாக கிடைத்தது ராஜி க்கா...
ReplyDeleteஉங்களை யே இப்படி சொல்லிகிட்டா நாங்க என்ன பண்ண..
இன்னுமா இந்த ஊரு என்னைய நம்புது மொமண்ட்...
Delete