Thursday, August 23, 2018

பாமரனின் உள்ளத்திலும் பரமனை விதைத்தவர் - திருமுருக கிருபானந்த வாரியார்


புரியாத மந்திரங்களை சொல்லி, கடவுள் அப்படிப்பட்டவர், இப்படிப்பட்டவர்ன்னு சொல்லி, மாற்று மதத்து கடவுளை தாழ்த்தி பொது வெளியில் விமர்சனத்துக்கு உள்ளாகும் ஆன்மீக சொற்பாழிவாளர்களுக்கு மத்தியில்,  திருக்குறள், திருவாசகம், வினாயகர் அகவல் மாதிரியான தமிழ் புத்தகங்களிலிருந்து  மேற்கோள் காட்டி எளிய தமிழில் அனைவரும் ரசிக்கும்படி ஆன்மீக சொற்பொழிவாற்றி எம்பெருமான் பாரெங்கும் பரமகுருவின் புகழை பாடியவர் திருமுருக. கிருபானந்த வாரியார். அறுபத்து நாலாவது நாயன்மாராய் இவரின் பேரை சேர்க்கனும்ன்னு சொல்லி பெரும்பாலும் வேண்டி விரும்பி கேட்டுக்கொண்டதன்படி, சில கோவில்களில் இவரை நாயன்மார்கள் வரிசையில் சேர்த்து இருக்காங்க.

கிருபானந்த வாரியார் சுவாமிகள்  வேலூர் மாவட்டம், காட்பாடிக்கு அருகில் பாலாற்றங்கரையில் அமைந்த காங்கேயநல்லூர் எனும் கிராமத்தில் செங்குந்த வீர சைவ மரபில் வந்த இசையாலும், புராணச் சொற்பொழிவாலும் இறைவன் புகழ்பாடி வந்த மல்லையதாசர் - கனகவல்லி தம்பதியருக்கு நான்காவது பிள்ளையாக  1906ம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம்  தேதியில் பிறந்தார். இவருக்கு,  முருகப்பெருமானின் பெயர்களில் ஒன்றான "கிருபானந்த வாரி" எனும் பெயரைச் சூட்டினார்.

’கிருபை’ன்னா கருணை என்றும், "ஆனந்தம்"ன்னா இன்பம், "வாரி"ன்னா பெருங்கடல்ன்னு அர்த்தம். தன் பேருக்கேற்ப கருணையே உருவாக, பிறரை தன் சொற்பொழிவால் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் பெருங்கடலாகத் திகழ்ந்தார். தமிழ் இலக்கியத்திலும், ஆன்மிகத்திலும் தனித்திறன் பெற்றிருந்த இவருக்கு இவர் தந்தைதான் ஆசான். இவருடைய தந்தையார் இவரின் மூன்று வயதிலிருந்தே தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றுக் கொடுக்கத் தொடங்கினார். எட்டு வயதிலேயே கவிபாடும் ஆற்றல் பெற்ற இவர் தேவாரம், திருப்புகழ், திருவருட்பா, கந்தபுராணம், கம்பராமாயணம், வில்லிபாரதம் முதலான நூல்களில் பத்தாயிரம் பாடல்களுக்கு மேல் அவர் மனப்பாடம் செய்துவிட்டார். கற்றறிந்த புலவருக்கே கடினமான அஷ்டநாக பந்தம், மயில், வேல், சிவலிங்கம், ரதம் முதலான பந்தங்கள், சித்திரக்கவிகள் முதலியவைகளை இயற்றினார்.


சொற்பொழிவாற்றி வந்த கிருபானந்த வாரியாரின் தந்தையாருக்கு வழக்கமாய் செல்லும் இடத்துக்கு சொற்பொழிவுக்கு போக முடியாத நிலை. தந்தைக்குப் பதிலாக அந்தச் சொற்பொழிவிற்கு வாரியாரை அனுப்பி வைத்தார். சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள், "மல்லையதாசர்  தான் வராமல் சின்ன வயசான தன் மகனை அனுப்பி வைத்திருக்கிறாரே"ன்னு வருத்தம். ஆனாலும் வெளிக்காட்டாமல் வாரியாரை கூட்டி போனாங்க. வாரியாரின்  சொற்பொழிவைக் கேட்டவர்கள் அசந்து போயினர். இந்த இளம் வயதில் இவ்வளவு அனுபவமா? என்று அவருடைய சொற்பொழிவைக் கேட்டவர்கள் மகிழ்ந்து போய், இனி தங்கள் ஊருக்கு கிருபானந்த வாரியாரையே அனுப்பனும்ன்னு கேட்டுக்கொண்டனர். 

தன் வாழ்நாள் முழுக்க உலகின் எந்த மூலையிலிருந்தாலும் அந்த கிராமத்துக்கு தைப்பூசம் அன்னிக்கு சொற்பொழிவாற்ற வந்திடுவார். அந்த ஊர் வேலூர் மாவட்டம் வளைகுளம் என்கிற வளர்புரம். இது அரக்கோணம் டூ திருத்தணிக்கு இடையில் இருக்கு. நாங்க கொஞ்ச நாள் அங்க இருந்தோம். என் பத்து வயசு வரைக்கும் வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவை கேட்டிருக்கேன். தன் சொற்பொழிவின் ஊடாக சிறுவர்கள்கிட்ட கேள்விகள் கேட்பார். சரியாய் சொன்னால், கந்த சஷ்டி, ஸ்கந்தகுரு கவசம் புத்தகம் கொடுத்து விபூதி கொடுப்பார். அவர் தன்னோடு ஒரு பெட்டியை எப்பவும் வச்சிக்கிட்டிருப்பார். அதுக்குள் வெள்ளியிலான வள்ளி, தெய்வானை சமேத முருகன், மயில், வேல்,  பூஜைப்பொருட்கள்லாம் இருக்கும். காலை மாலையில் தான் இருக்க்கும் இடத்திலேயே பூஜை செய்வது அவர் வழக்கம்.  

பதினெட்டு வயதில் சொற்பொழிவைத் தொடங்கிய வாரியாரின் பேச்சு, எளிமையான உரைநடையில் இருந்ததால்,  படிப்பறிவே இல்லாதவர்கங்ககூட  புரிஞ்சிக்கிட்டாங்க.  சிரிக்கவும், சிந்திக்கவும் செய்யும்  சிறுசிறு கதைகளை சொல்வதால் சிறுபிள்ளைகள்கூட இவருடைய சொற்பொழிவை கேட்க விரும்புவார்கள். அவ்வளவு எளிமையாக இருக்கும்.  இவரின் புகழ் மெல்ல மெல்ல பாரெங்கும் பரவ ஆரம்பித்தது. தமிழகம், இந்தியா மட்டுமில்லாம, சிங்கப்பூர், அமெரிக்கா, மலேசியா மாதிரியான நாடுகளுக்கும்  சுவாமிகளின் ஆன்மீக பயணம் தொடர்ந்தது. 
வாரியார் சுவாமிகள் உரையின்போது கூட்டம் கலைவது அபூர்வம். அப்படி கூட்டம் கலையும்போது தன் பேச்சு சாமர்த்தியத்தால் கூட்டத்தை  தக்க வைக்கும் கலையையும் அவர் கற்றிருந்தார். வாரியார் ஒருசமயம் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தபோது,  கூட்டம் கலைய ஆரம்பிக்க ஆரம்பித்தது.  அவர்களைப் பார்த்து வாரியார் சொன்னார், ''ராமாயணத்தில் அனுமனுக்கு "சொல்லின் செல்வர்"ன்னு பேரு. இந்த ஊரிலும் சொல்லின் செல்வர்கள் பலர் இருப்பதைப் பார்க்கிறேன்.''என்று நிறுத்தினார், கலைந்த கூட்டம் என்னவென பார்த்தனர்.  ''நான் நல்ல பல விஷயங்களைச் சொல்லின் அதைக் கேட்காமல் செல்பவரைத் தான் சொல்கிறேன் .'' என்றார். இடையில் எழுந்து சென்ற அவர்கள் மீண்டும் அவர்கள் இடத்திற்கு வந்தமர்ந்தனர்.

தனது பத்தொன்பதாம் வயதில் தாய்மாமன் மகளான அமிர்தலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். தமிழ்நாட்டைப் பொறுத்த வரை கணவன் மனைவியை மதிப்பதே இல்லை. இவற்றையெல்லாம் மனதில் கொண்டு வாரியார் பல சொற்பொழிவுகளில் மனைவியை மதிப்புடன் நடத்த வேண்டும் என்று வலியுறுத்துவார். பெண்களை மதிக்காத ஆண்களை எச்சரிக்கும் விதமா "மனைவியைக் கோபிக்கும் ஆண்கள் இருக்கக்கூடாது. மனைவி கண்ணீர் சிந்தினால் அந்தக் குடும்பம் தழைக்காது" என தனது உரையில் அடிக்கடி சொல்வார். குழந்தைகளுக்கு தாயின் பெயரை இன்சியலா போடனும்ன்னு முதன்முதலாக சொன்னது வாரியார்தான். அதனால், இவர் பேச்சை கேட்க பெண்கள் அதிகளவில் வருவாங்க. 

முழுக்க, முழுக்க ஆண்கள் மட்டுமே நிறைந்திருந்த சபையில் ஒருமுறை, நாமெல்லாம் பெண்பிள்ளைகள். ஆண்பிள்ளைகள் அல்ல என சொல்லி பேச்சை நிறுத்தினார். கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தவர்கள் நிலையோ சங்கடமானது.  ஆண்களால் கருத்தறித்து, குழந்தை பெறலாகாது. ஆனால், சிவனின் கண்களிலிருந்து தோன்றியதால் ஆணால் பிரசவிக்கப்பட்டவன். அதனால், முருகன் மட்டுமே ’ஆண்’பிள்ளை.  பெண்ணால்  வந்த நாமெல்லாம் ’பெண்’ பிள்ளைகள்தானே?!ன்னு கேட்க, கூட்டத்தினர் ஆமாமென ஒப்புக்கொண்டனர். 
ஆதியும் நடுவும் ஈறும் அருவமும் உருவும் ஒப்பும்
ஏதுவும் வரவும் போக்கும் இன்பமும் துன்பும் இன்றி
வேதமும் கடந்து நின்ற விமலஓர் குமரன் தன்னை
நீதரல் வேண்டும் நின்பால் நின்னையே நிகர்க்க...

என்று உருகி வேண்டிய வாரியார் தம்பதிகளுக்கு குழந்தைகள் ஏதுமில்லை.  குழந்தைகள்மீது வாரியார் சுவாமிகள் அளவற்ற அன்பு கொண்டிருந்தார். தன் கூட்டங்களில் குழந்தைகளுக்கு முன்வரிசையில் இடமளிப்பது அவரின் வழக்கம்.  "ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது' என்பதை உணர்ந்து "தாத்தா சொன்ன குட்டிக்கதைகள்' என்ற நூலை குழந்தைகளுக்காக சுவாமிகள் எழுதினார். இதில் குழந்தைகளுக்குத் தேவையான நல்ல கருத்துக்களையும், எதிர்காலத்திற்கேற்ற சிந்தனைகளையும் அதில் சொல்லி இருக்கிறார்.

சுவாமிகளின் 21 வது வயதில்  மைசூரில் நடைபெறும் நவராத்திரி திருவிழாவிற்கு அழைத்துச் சென்ற இவரது தந்தை வீணை சேஷண்ணாவிடமிருந்து  வீணை ஒன்றை வாங்கிக் கொடுத்தார். பின்னர் சென்னையில் நாட்டுப் பிள்ளையார் கோயில் தெருவில் வசிக்கும் ஓர் இசை ஆசிரியரிடம் வீணை கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்தார். சுவாமிகளின் 23 வயதில், சென்னையில் உள்ள யானைக்கவுனி தென்மடம் பிரம்மஸ்ரீ வரதாசாரியாரிடம் ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் வீணைப் பயிற்சி பெற்றார்.
வீணை வாசிப்பதில் நல்ல தேர்ச்சி அடைஞ்சதும் சொற்பொழிவின்போது திருப்புகழ், தேவாரம், திருவாசகம் முதலான தோத்திரப்பாக்களை இன்னிசையுடன் பாடினார். இசையில் ஈடுபாடுடைய இவர் இசை குறித்தும் பல்வேறு தகவல்களைத் தெரிவித்திருக்கிறார். 
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி"
சிவப்பெருமான் வீணை வாசிப்பதில் வல்லவராம். அதேப்போல், முருகனுக்குரிய இசை வாத்தியமாய் யாழினை சொல்வதுண்டு. முருகன் மலையும் மலையும் சேர்ந்த  குறிஞ்சி நிலத்துக்கு சொந்தக்காரன்.  யாழ் செயற்கை கருவி. மலையிலே வாழ்ந்த ஒருவன் எப்படி செயற்கை கருவியை இசைக்க முடியும்?! ஆனா புல்லாங்குழல் இயற்கை கருவி.  மலையிலே கிடைத்த  குழல்தான் முருகனுக்குரிய இசைக்கருவியாய் இருக்க வேண்டும் என சொல்வதோடு, தன் கருத்துக்கு ஆதாரமாய், "குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன்" என திருமுருகாற்றுப்படையையும், குழல் இனிது, யாழ் இனிது என்ற குறளையும் சொல்கிறார்.  எது முக்கியமோ முதன்மையோ அதையே முதன்மையாய் சொல்லிவிட்டு யாழினை இரண்டாவதாய் சொல்றதாய் சொல்கிறார்.

வாரியார் சுவாமிகளின் இசை ஞானத்தைப் பாராட்டி, சென்னைத் தமிழிசை மன்றத்தினர் வெள்ளி விழாவின் போது அவருக்கு, "இசைப் பேரறிஞர்" பட்டம் வழங்கிச் சிறப்பித்தனர். "வாரியார் வாக்கு கங்கை நதியின் பிரவாகம் போலப் பெருக்கெடுத்தோடுகிறது; மிக உயர்ந்த முத்துக்கள் அவர் வாக்கிலிருந்து உதிர்கின்றன'' என அறிஞர்கள் புகழ்ந்தார்கள். சுவாமிகள் திருமுருகாற்றுப்படை, திருவாசகம், தேவாரம், திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், திருவகுப்பு, திருவருட்பா முதலான தோத்திர நூல்களில் இருந்து பாடல்களை  தனது உரையில், ஏற்ற இடங்களில் தட்டுத் தடங்கல் இல்லாமல் இசையோடு பாடுவது இவர் வழக்கம். 
ஒருமுறை திருப்பரங்குன்றத்தில் சொற்பொழிவுக்கு சென்றபோது, திருப்பரங்குன்றத்துக்கு சிக்கந்தர் மலைன்னு பேர் வைக்கனும்ன்னு இஸ்லாமியர்கள் சொல்றாங்கன்னு வாரியாரிடம் சொல்லி வருத்தப்பட்டனர்.  முருகனுக்கு கந்தன் என பேருண்டு. இறைவனை ன் போட்டு  அழைப்பது மரியாதையா இருக்காது அதனால் கந்தர். முருகனின் தந்தை பெயர், சிவப்பெருமான். அப்படி பார்த்தால் முருகனின் இன்சியல் சி. சி+கந்தர்.  சிக்கந்தர். சிக்கந்தர் வாழும் மலைன்னு பொருள் வருமாறு சிக்கந்தர் மலைன்னு பேர் வைப்பதில் தவறில்லைன்னு வாரியார் அந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 

ஒருமுறை கவியரசு கண்ணதாசன், வாரியார் சுவாமிகளை சந்தித்தார். அப்போது "தாமரைக் கண்ணால் பெண்கள் நோக்கினர்" என்று கம்பர் கூறுகிறார். "தாமரையோ செவ்வண்ணம் உடையது. மது அருந்தியவருக்கும், அளவுக்கதிக சினம் கொண்டவருக்கும் அல்லவா சிவந்த கண்கள் இருக்கும். அது எவ்வாறு பெண்களுக்குப் பொருந்தும்?" என கண்ணதாசன் கேட்டார், அதை "தாம் அரைக் கண்ணால்"' என்று பிரித்துப் பொருள் கொள்ளலாம் அல்லவா?" என வாரியார் சுவாமிகள் விளக்க கவியரசர், சுவாமிகளின் தமிழ் ஞானத்தை எண்ணி வியந்தார். 

வாரியார்  சுவாமிகள் இலக்கியம் மற்றும் ஆன்மிகச் சொற்பொழிவுகள் நிகழ்த்துவதில் மட்டுமில்லாமல் எழுதுவதிலும் சிறப்பு பெற்று விளங்கினார். 1936-ஆம் ஆண்டு தைப்பூசத் திருவிழாவுக்காக வடலூர் சென்றிருந்தார். அங்கு சத்திய ஞான சபையில் அமர்ந்து "திருப்புகழ் அமிர்தம்' என்ற மாதப் பத்திரிகையை வெளியிடக் கருதினார். அதற்காக "கைத்தல நிறைகனி" என்று தொடங்கும் திருப்புகழ் பாவுக்கு உரை எழுதினார். அது முதல் "திருப்புகழ் அமிர்தம்" எனும் மாத இதழைத் தொடங்கினார். இந்த இதழை சுமார் முப்பத்தேழு ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினார்.

பாமர மக்களும்    புரிந்து கொள்ளும்படியாக 500-க்கும் அதிகமான ஆன்மிகக் கருத்துக்களைக் கொண்ட கட்டுரைகளையும், 150க்கும் அதிகமான நூல்களையும் எழுதியுள்ளார். இவற்றுள் சிவனருட்செல்வர், கந்தவேள் கருணை, இராமகாவியம், மகாபாரதம் போன்றவை சிறப்பு வாய்ந்தவை. இவரது சொற்பொழிவுகளில் 83 குறுந்தகடுகளாகவும் வெளி வந்திருக்கு.  தியாகராஜ பாகவதர் நடித்த "சிவகவி" ன்ற படத்துக்கு வசனங்கள் எழுதியதுடன், முருக பக்தரான தேவர் பிலிம்ஸ் சின்னப்பா தேவர் வேண்டுகோளுக்கேற்ப "துணைவன்", "திருவருள்", "தெய்வம்", போன்ற சில தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்தார். எம்.ஜி.ஆருக்கு பொன்மனச்செம்மல்ன்ற பட்டத்தை அளித்தது வாரியார் சுவாமிகள்தான்.

ஒருநாள் கூட முருகனுக்குப் பூசை செய்யாமல் இருந்ததில்லை. இவரின் மூச்சுகூட முருகா! முருகா!! என்றுதான் இருந்தது. தன் உபதேசங்களின்படியே  வாழ்ந்தும் காட்டினார். கார்த்திகை மாதம் சோமவாரம் (திங்கட்கிழமை) தொடங்கி ஐந்து சோமவாரம் உபவாசம் (உண்ணா நோன்பு) இருந்ததுடன் இவ்விரதத்தை தனக்குத் தெரிந்தவர்கள் அனைவரையும் இருக்கச் செய்தார்.  

எங்கெங்கு முருகன் கோவில் இருக்கிறதோ, அங்கெல்லாம் சென்று முருகனை வழிபட்டவர் வாரியார். ஆனாலும் வயலூர் முருகன் மீது அவருக்கு தனி ஈடுபாடு உண்டு. வாரியார் தனது சொற்பொழிவை தொடங்கும் போதெல்லாம் "வயலூர் எம்பெருமான்…" என கூறிதான் சொற்பொழிவை தொடங்குவது வழக்கம். , "இரை தேடுவதோடு இறையையும் தேடு" என்ற வாக்கியத்தையே ஆட்டோகிராபில் எழுதுவதை வழக்கமாய் கொண்டிருந்தார். 
லியோ   டால்ஸ்டாய் எழுதிய "நாம் என்ன செய்யவேண்டும்?"ன்ற நூலை படித்த வாரியாருக்கு பொன், பொருள் உலகம்ன்ற பற்று பறந்து போயிற்று. தான் அணிந்திருந்த தங்க நகைகளை காங்கேயநல்லூர் முருகனுக்குக் காணிக்கை ஆக்கினார். திருச்சியிலிருந்து கரூர் செல்லும் வழியில் திருப்பராய்த்துறையில் பிரம்மச்சாரி ராமசாமி என்பவர் தொடங்கிய இராமகிருஷ்ண குடில் எனும் அமைப்புக்கு இவர் பல ஆண்டுகள் நன்கொடை வசூல் செய்து கொடுத்து வந்தார். ஏழை எளிய குடும்பத்து மாணவர்களின் கல்விச் செலவுக்காக இவர் பல நன்கொடைகளைக் கொடுத்திருக்கிறார். இவர் பிறந்த காங்கேயநல்லூரில் பல கல்வி நிறுவனங்களைத் தொடங்கியிருக்கிறார். இன்றும் இவருடைய பெயரால் ஆண்கள், பெண்களுக்கான மேல்நிலைப் பள்ளிகள்  இருப்பதை காணலாம். 
வயலூர் முருகன் கோயில், மோகனூர் அருணகிரி அறச்சாலை, வடலூர், காஞ்சி ஏகாரம்பரநாதர் ஆலயச் சுற்றுச்சுவர், சமயபுரம் கோயில், வள்ளிமலை சரவணப் பொய்கை ராஜகோபுரம் போன்ற பல கோயில்கள் இவரது திருப்பணிகளைப் பெற்றிருக்கின்றன. சுவாமிகள் சண்முகநாதனை மும்முறை நேரில் தரிசித்த மகான் என்று போற்றப்படுபவரான பாம்பன் சுவாமிகளை சென்னையில் ஒரு கீற்றுக்கொட்டைகையில் தரிசித்து ஆசிப்பெற்றார். சொற்பொழிவுக்காக திருநாரையூர் சென்றிருந்தபோது, விடியற்காலை பாம்பன் சுவாமிகள் தம்முடைய கனவில் தோன்றி சடக்கரமந்திரம் உபதேசம் செய்ததாக இவரின் சுயசரிதையில் எழுதி உள்ளார்.

இவரின் தமிழ்தொன்றிற்கும், ஆன்மீக சேவைக்குமாய் பல பட்டங்களையும், விருதுகளையும் பெற்றிருக்கிறார். இவற்றில் கலைமாமணி, திருப்புகழ்ஜோதி, பிரவசன சாம்ராட், இசைப்பேரரசர், அருள்மொழி அரசு போன்றவை குறிப்பிடத்தக்கவை. இப்படி பல பட்டங்களையும் விருதுகளையும் வாங்கிச் சேர்த்த வாரியார் சுவாமிகள் 1993 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம் லண்டன் நகருக்குச் சொற்பொழிவாற்றச் சென்றார். அங்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்றுக் கொண்டு நவம்பர் மாதம் 6 ஆம் தேதி லண்டனிலிருந்து திரும்பினார். 7 ஆம் தேதி அதிகாலை மும்பை வந்து சேர்ந்தார். அங்கிருந்து காலை 6 மணிக்கு சென்னைக்கு விமானத்தில் கிளம்பினார். சென்னை வருவதற்கு முன்பாகவே விமானத்திலேயே அவர் உயிர் இறைவனிடம் சென்று சேர்ந்துவிட்டிருந்தது. முருகனின் நாமத்தை உச்சரித்துக்கொண்டிருந்தவரின் உயிர், முருகன் வாகனமான மயில்மாதிரியான விமானத்திலேயே முருகன் காலடி நிழலில் இளைப்பாறியது.  நவம்பர்  8 ஆம் தேதியில் அவர் சமாதி நிலையடைந்தார்.
இணையத்திலிருந்து எடுத்தது
"ஆன்மீக தமிழ்ப்பழம் அனைத்து நாட்டு தமிழர்களையும் கவலைக்குள்ளாக்கி இதோ தருவில் இருந்து உதிர்ந்து விட்டது. அந்த சிவந்த மேனியில் சினம் அரும்பி பார்த்ததில்லை. எதனையும் சிரித்த முகத்துடன் எதிர்கொள்ளும் இனிய இயல்புக்குச் சொந்தக்காரரான வாரியார், ஆன்மீகத் தமிழ்ப் பழமாக விளங்கி, என்றும் அழியாத புகழை நிலைநாட்டி விட்டு, இயற்கை தாயின் மடியில் விழுந்துவிட்டார்" என  வாரியார் இறந்தபோது,  நாத்திகரான கலைஞர் கருணாநிதியே போற்றினார்.
இணையத்திலிருந்து எடுத்தது..
"முருகப்பெருமானின் பெருமைகளைப் பரப்புவதையே தனது வாழ்நாள் லட்சியமாகக் கொண்டு நம்மிடையே வாழ்ந்து வந்த வாரியார் சுவாமிகள் அவர்களின் மறைவு ஆன்மீகத் துறைக்கு மட்டுமின்றி தமிழ் மொழிக்கும், தமிழ் இசைக்கும் ஏற்பட்டுள்ள ஈடு செய்ய முடியாத பேரிழப்பு ஆகும் என ஜெயலலிதா இரங்கல் தெரிவித்திருந்தார். 

கிருபானந்த வாரியாரின் சொந்த ஊரான வேலூரை அடுத்துள்ள காங்கேயநல்லூருக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டது. காங்கேய நல்லூரில் உள்ள முருகன் கோவில் எதிரே "சரவண பொய்கை குளம்" என்ற மண்டபம் ஒன்றை கிருபானந்த வாரியார் ஏற்கனவே உருவாக்கி இருந்தார். அந்த மண்டபத்தில் உயரமான மேடை அமைத்து அதில் உட்கார்ந்த நிலையில் வாரியார் உடல் வைக்கப்பட்டது. தற்போது இது "திருமுருக கிருபானந்த வாரியார் திருக்கோயில்" ஆகியிருக்கிறது.  காங்கேயநல்லூரில் அவர் வாழ்ந்த வீடு இன்று நினைவில்லமாக்கப்பட்டு இருக்கிறது. இந்திய அரசு இவருடைய உருவம் பொறித்த தபால்தலையை 2006 ஆம் ஆண்டில் வெளியிட்டு சிறப்பு செய்திருக்கிறது. 

காங்கேயநல்லூர் முருகன் திருக்கோயிலுக்கு எதிரில்  சுவாமிகள் திருக்கோயில் அமைந்துள்ளது.  மண்டபத்தின் முகப்புக் கோபுரத்தில்(அந்நாளில் சுவாமிகள் எழுப்பியது) தமது தாய் தந்தையரின் மார்பளவுச் சிலைகளை பதித்திருக்கிறார்.  பெற்றோர்மீது அவர் கொண்டிருந்த பக்தியை  காட்டுகிறது. அந்தக் கோபுர வாயில் வழியாக நுழைந்ததும் எதிரில் தெரிவது, சுவாமிகள் எழுப்பிய சரவணப் பொய்கை, இடப்பக்கமாக முகத்தைத் திருப்பினால் தெரிவது வாரியார் சுவாமிகள் கையில் கமண்டலத்துடன் நின்ற கோலத்தில் இருக்கும் ஒரு மண்டபம்.(இது சுவாமிகளின் முத்து விழாவில் எழுப்பப்பட்டதாகும்). வலப்பக்கமாக முகத்தைத் திருப்பினால் குழந்தை அறுமுகன் எழுந்தருளியிருக்கும் ஒரு மண்டபம். 
இணையத்திலிருந்து எடுத்தது

பிரம்மாண்டமான மண்டபத்தை கடந்தால்   அறுமுகனை உணர்த்தும் அறுகோணம் ஆறுபட்டைகள் கொண்ட அமைப்பில் கருவறை அமைந்திருக்கு.  சுவாமிகளின் சமாதியை 6'x3' என்ற நீள அகலத்தில் அமைந்த சலவைக்கல் அடையாளம் காட்டுகிறது. எந்நேரமும் மலரில் சிவலிங்க அலங்காரத்துடன் விளங்குகிறது. சிரசுப் பகுதியில் வடக்கு நோக்கிய வண்ணம் அணையா விளக்கொன்று ஒளிர்ந்து கொண்டே இருக்கிறது.   சமாதியை ஒட்டிச் சுவாமிகளின் திருவுருவம் பீடத்துடன், சுவாமிகள் ஆஜானுபாகுவாக அமர்ந்த கோலத்தில், ஆசீர்வாதம் செய்கின்ற பாவனையில், புன்னகை சிந்தும் பூமுகத்துடன் எழுந்தருளி இருக்கின்றார். பார்த்த கண்கள் அப்புறம் இப்புறம் அகல மறுக்கின்றன. 

ஏறத்தாழ 36 அடி உயரங்கொண்ட விமானம் 5 அடி அளவுள்ள தங்கக் கலசம், வலம் வர ­தூய நடைபாதை சுற்றிலும் பசும்புல் தரைகள், அலங்கார மின் விளக்குகள், செயற்கை நீரூற்றுகள் இவை அனைத்தும் சென்னை சரவண பவன் ஹோட்டல் உரிமையாளரான ராஜகோபாலன் அவர்கள் ஏற்பாட்டின்படி   கட்டியதோடு சுத்தமாக பராமரித்து வருகின்றனர் . 

திருக்கோயிலுக்குப் பின்புறம் சகல வசதிகளுடன் கூடிய விருந்தினர் மாளிகை சேவார்த்திகள் தங்குவதற்கு என்று உருவாக்கப்பட்டுள்ளது. திருக்கோயிலின் தென் பகுதியில் பிரம்மாண்டமான "அறுபடை வீடு முருகன் கலையரங்கம்" அமைக்கப்பட்டுள்ளது.  தினமும் காலை 6.00 டூ 12.00 வரையும், மாலை 4 டூ 9வரையும் கோவில் திறந்திருக்கும். காலை 7.30,  பகல் 11.30, இரவு 7.00  என மூன்றுவேளை   வழிபாடு தப்பாது நடந்து வருகிறது. தினமும் இரவு 8 மணிக்கு அன்னதானம் நடக்கின்றது. சரவண பவன் ஹோட்டல் முதலாளி ராஜகோபாலன்  கிருபானந்த வாரியார் பக்தர்.  அவரே இந்த கிருபானந்த வாரியாரின் ஜீவசமாதியை கவனித்து வருகிறார்கள். 
இணையத்திலிருந்து எடுத்தது..
பேருந்து, ரயில் மார்க்கமா வேலூர் வரை வந்து, வேலூரிலிருந்து 6கிமீ தூரத்திலிருக்கும் காங்கேயநல்லூருக்கென செல்லும் பேருந்தில் வரலாம். இல்லன்னா ஷேர் ஆட்டோக்களிலும் வரலாம். திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் திருக்கோவில், அதன் எதிரே இருக்கும் முருகன் திருக்கோவில் மட்டுமில்லாம ஊரே சுத்தமா இருக்கு. 

மாத சஷ்டி, கார்த்திகை விரதம்,  ராஜகோபாலன், வாரியார் சுவாமிகளின் மாதாந்திர நட்சத்திரத்தன்று சிறப்பு யாகம்,  ஆடிக்கிருத்திகை, தைப்பூசம், கார்த்திகை தீபம், கிருபானந்தவாரியாரின் பிறந்த நாள், ஜீவ சமாதி ஆன தினம்ன்னு இந்த கோவிலில் விழக்களுக்கு பஞ்சமில்லை.  கிருபானந்த வாரியார் சுவாமிகள் ஜெயந்தி நாளைய தினம் வேலூர் காங்கேயநல்லூரில் விமர்சையாக கொண்டாடப்படும். வாய்ப்பு கிடைத்தால் போய் வாங்க. 


youtubeல என் முதல் பதிவு...  லிங்க் இதோ 

மங்குல் மதிபோல் மாதரோடு மாமயிலேறி..
எங்கும் எய்தும் காங்கேய நல்லூர் சேவற் கொடியான்
செங்கை வேல்ஒன்றே கலங்கும் அடியோர்க்கு ஓர்
பங்கம் வாராது காக்கும் அரணாகுமே.
- அடியார்க்கும் அடியேன்..

25/8/1906ஆம் ஆண்டு சுவாமிகள் பிறந்தார். அதனால் நாளைக்கு அவரது ஜென்ம ஜெயந்தி. நாளைக்குதான் பதிவு போடலாம்ன்னு இருந்தேன் நாளைக்கு ஓணம் பண்டிகை. ரெண்டு பதிவா போட்டா உங்களுக்கு கஷ்டம்தானே?! அதான். 
நன்றியுடன்,
ராஜி. 

11 comments:

 1. குறும்புத்தனமான எடுத்துக்காட்டுகளுக்கு அவருக்கு நிகர் அவரே...

  அவரின் பல நிகழ்வுகளை மீண்டும் இன்று ரசித்தேன்...

  ReplyDelete
  Replies
  1. அவரை பார்த்தது, அவர் பேச்சை கேட்டதுலாம் கனவு கண்ட மாதிரி இருக்குண்ணே.

   Delete
 2. கண்டவன் சொன்ன பேச்சையெல்லாம் கேட்கக்கூடாது கண்டவங்க சொன்ன பேச்சை கேட்கணும் .என்ற அவர் கூறியது எனக்கு மிகவும் பிடிக்கும்.

  ReplyDelete
  Replies
  1. அட! இது நல்லா இருக்கே!!

   Delete
 3. நேரில் பார்த்த நினைவுகள் மனதில் வலம் வருகின்றன

  ReplyDelete
  Replies
  1. காங்கேயநல்லூர் வந்திருக்கீங்களா?! நல்லதுண்ணா

   Delete
 4. / வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவை கேட்டிருக்கேன். தன் சொற்பொழிவின் ஊடாக சிறுவர்கள்கிட்ட கேள்விகள் கேட்பார். சரியாய் சொன்னால், கந்த சஷ்டி, ஸ்கந்தகுரு கவசம் புத்தகம் கொடுத்து விபூதி போன்றவற்றைத் தூக்கிப் போடுவார் அதைப் புகைபடமாக்க “போட்டா பிடிச்சுக்கணும் “ என்று சொல்லி சிரிப்பார்

  ReplyDelete
  Replies
  1. இந்த சிலேடை பேச்சுதான் அவரின் பலம்

   Delete
 5. வாரியாரின் சொற்பொழிவுகள் பல கேட்டிருக்கிறேன் ஒரு சமயம் இவர் கருத்துக்கு எதிராக இருந்தவர்களால் அடிக்கப்பட்டிருக்கிறார் என்றும் படித்த நினைவு

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம் நானும் கேள்விப்பட்டிருக்கேன்ப்பா.

   Delete
 6. நெய்வேலியில் ஒரு முறை அவரின் சொற்பொழிவு கேட்டதுண்டு.

  சிறப்பான தகவல்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  ReplyDelete