Saturday, August 11, 2018

பித்ருக்கள் ஆசியை தரும் ஆடி அமாவாசை விரதம்


அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம், ஆலயம் தொழுவது சாலவும் நன்று..... மாதா, பிதா, குரு, தெய்வம்ன்னு  முதுமொழி இருக்கு. வழிபாடுகளில் பலது நம் வழக்கத்தில் இருக்கு. கடவுள் வழிபாடு... குலதெய்வ வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாடு.... இவ்வளவு ஏன் நாம் பயன்படுத்தும் பொருளையும் வணங்க ஆயுத பூஜைன்னு வணங்குறோம். எத்தனை வழிபாடு இருந்தாலும், பித்ரு வழிபாட்டுக்கு ஈடாகாது. இந்துவா பொறந்த அத்தனை பேருக்கும் பித்ரு கடன் செய்வது தலையாய கடமை. தாய் தந்தை இழந்த பிள்ளைகள், கணவனை இழந்த மனைவி, மனைவியை இழந்த கணவன், மாமியார் மாமனாரை இழந்த மருமகப்பெண்கள்  இந்த விரதத்தை கடைப்பிடிக்கனும்.

முன்புலாம் அமாவாசை தினத்தில் தந்தைக்கும், பௌர்ணமியில் தாய்க்கும் அவர்கள் நற்கதியடைய அவர்களின் பிள்ளைகளால் பித்ருக்கடன் செய்விக்கப்படும். காலமாற்றத்தில் தாய்க்கும், தந்தைக்கும் அமாவாசை தினத்திலேயே இவ்விரதம் அனுஷ்டிக்கப்படுது.  சூரியனை பிதுர்காரன் என்றும், சந்திரனை மாதூர்காரகன்ன்னும் சொல்றாங்க.  இவர்களை சிவசக்தியின் சொரூபமாகத்தான் சாஸ்திரங்கள் சொல்லுது. பூமியும், சூரியனும், சந்திரனும்  நேர்க்கோட்டில் பிரவேசிக்கும் நாளே அமாவாசை தினம்.  சந்திரன் என்றால் தாய் மற்றும் தாய்வழி உறவினர்கள். சூரியன் என்றால் தந்தை மற்றும் தந்தைவழி உறவினர்கள். இருவரும் சந்தித்துக்கொள்வதாலேயே இத்தினம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுது. ’அமா’ன்னா ஓரிடத்தில் பொருந்தியது அல்லது சேர்ந்ததுன்னு பொருள். ‘வாசி’ன்னா சாதகமான அல்லது பொருத்தமானதுன்னு பொருள். ஒரே ராசியில் சூரியனும் சந்திரனும் சேர்வதால் அமாவாசை என்று பெயருண்டாச்சு.  மூதாதையர்கள் மட்டுமில்லாம தேவர்களும் அமாவாசை தினத்தின் அதிபதிகள். 

சூரிய மண்டலத்திற்கு அப்பால் தென்மண்டலத்தில் பிதுர்க்கள் லோகம் உள்ளது.   இறப்புக்குப்பின் நமது ஆன்மா அங்குதான் சென்றடைகிறது. உலகில் இருந்து பிரிந்த ஒவ்வொரு ஆன்மாவும் வலிவு உள்ளது.  அவ்வலிமை கடவுளுக்கு ஈடானது. அதனால், நமது அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, தாத்தான்னு நம் முன்னோர்களை முறையாக வழிபாடு செய்தால் அவர்களின் அத்தனை சக்தியும் நமது முன்னேற்றத்திற்கு அவர்களின் முழு ஆசீர்வாதம் செய்வார்கள். நமக்கு துன்பம் வரும்போது நம்மை காக்கவும் செய்வார்கள். நம் ஒவ்வொரு அசைவையும் அவர்கள் கண்காணித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்..  அவர்களை இன்னாரென அடையாளம் கண்டுக்கொள்ள இயலாது. அதுமட்டுமில்லாம ஒவ்வொருவரையும் தனித்தனியாகவும் வணங்கவும் முடியாது. அதனால்தான் ஹோமம் வளர்த்து யாகம் அனுசரித்து பஞ்சபூதங்களை முன்னிறுத்தி உரிய மந்திரங்களோடு நம் முன்னோர்கள் அனைவரையும் வணங்குவதே பித்ரு ஹோமம் ஆகும்.  

உலக சிருஷ்டியின்போது இறைவன் ஜீவன்களது ஜீவசக்தி நிறைந்த கும்பத்தை வைத்தே தொடங்குகிறார்.  இதுமாதிரியே பித்ருக்களின் ஜீவசக்தி அமுதக்கலசமே தோன்றும் இடமே சோமாதித்ய மண்டலமாகக் கருதப்படுது.  அமாவாசையன்று சர்வக்கோடி லோகங்களிலுள்ள மகரிஷிகள் உள்பட அனைத்து தேவதைகளும், ஜீவன்களும் பூலோகத்திற்கு வந்து காசி, ராமேஸ்வரம், கயா மாதிரியான புண்ணிய நதிக்கரைகளிலும், கடலோரங்களிலும் தர்ப்பண பூஜையை மேற்கொள்கின்றனர் என்பது நம் சாஸ்த்திரம்.  நமது மூதாதையர்களுக்கு உரித்தான இந்த தர்ப்பண பூஜை பித்ருக்களுக்கு மட்டுமில்லாம நமது வம்சாவளியிலுள்ள நமக்கும்தா பெரிதும் பயன் தருவதாய் இருக்கும்.  இதனாலாயே அமாவாசையில் கொடுக்கப்படும் தர்ப்பணம் மிகச்சிறப்புடையதாகும்.  பொதுவாக வலது ஆள் காட்டி (குரு விரல்) விரலுக்கும், கட்டை விரலுக்கும் (சுக்கிரவிரல்) இடையிலுள்ள பித்ரு பூம்ய ரேகைகள் வழியாக தர்ப்பணங்கள் அளிக்கப்படுகின்றன. இந்த தர்ப்பண நீரின் சக்தியானது, பூமியின் ஆகர்ஷன சக்தியை மீறி மேல்நோக்கி எழும்பிச் சென்று, எத்தனையோ கோடி மைல்களுக்கு தொலைவில் உள்ள பித்ரு லோகத்தை அடைகின்றது

இயற்கையான முறையில் இறக்காமல் துர்மரணம்  மூலமாக  இறந்து ஆன்மா சாந்தியடையாமல் இருக்கும் ஆன்மாக்களை முறையான பித்ருபூஜைகளை செய்து சாந்தப்படுத்தினால் அவர்களின் வம்சத்திற்கு ஆசிகள் வழங்குவர்.  பித்ருபூஜை செய்வது ரொம்ப கஷ்டமான காரியமல்ல. நீர்நிலைகளுக்கு சென்று தர்ப்பணம் செய்வது நல்லது, இன்றைய காலகட்டத்தில் இது கொஞ்சம் சிரமமானது. அதனால், நமது வீட்டிலயும் தர்ப்பணம் செய்யலாம். மனது சுத்தமாயிருந்தாலே போதும்.  வீட்டையும், தம்மையும் சுத்தப்படுத்திகொண்டு காலைவேளையில் தர்ப்பணம் செய்ய வேண்டும். தர்ப்பணம் செய்பவர். அமாவாசை தர்ப்பணம் கொடுத்த பிறகே வீட்டில் விளக்கேற்றவும், மற்ற தெய்வ வழிப்பாட்டையும் செய்ய வேண்டும். அன்று காலை உபவாசம் இருக்க வேண்டும். முன்னோர் படங்களுக்கு துளசி மாலை அணிவிக்க வேண்டும். மதியம் முன்னோர்களுக்கு பிடித்த உணவு வகைகளை சமைத்து நைவேத்தியம் காட்ட வேண்டும். நைவேத்தியம் செய்த உணவை காக்கைகளுக்கு வைத்து காக்கைகள் உண்டப்பின் மதிய உணவு சாப்பிடலாம். கத்தரிக்காய், வாழைக்காய் கண்டிப்பாய் சேர்க்க வேண்டும். பூண்டு, வெங்காயம், முள்ளங்கி, மாமிசம் சேர்த்தல் கூடாது. மிளகும், பச்சரிசியும் சேர்த்தல் நலம். இரவு உணவு கூடாது. பால் பழம் சாப்பிடலாம்.  பூசணிக்காய்., எலுமிச்சை பலி கொடுப்பது நல்லது. பூசணிக்காயில் அசுரன் இருப்பதாக பண்டைய நூல்கள் கூறுகின்றது. எலுமிச்சை கண் திருஷ்டி போக்கும்.  இன்றைய தினம் தானங்கள் செய்வது மிக நல்லது. கூடுதல் பலன்களை தரும். 

சாதாரணமாக இறந்த ஆவிகள் சந்திரனின் ஒளிக்கற்றையில் உள்ள அமிர்தத்தைப் புசிக்கும். அதுதான் அதற்கு உணவு. அமாவாசையன்று சந்திரனின் ஒளிக்கற்றை ஆவிகளுக்குக் கிடைக்காது. அதனால் ஆவிகள் உணவுக்குத் திண்டாடும். பசி தாங்க முடியாமல் இரத்த சம்பந்தமுடைய வீடுகளுக்கு வரும். அதனால்தான் அமாவாசையன்று அவர்களுக்கு பிடித்த உணவை வைத்து வழிபாடு செய்கின்றோம்.  முன்னோர்களை கஷ்டப்படுத்தினால் இறைவன்கூட நம்மை கண்டுக்கொள்ள மாட்டார். அமாவாசைதோறும்   முன்னோர்களுக்கு நம்மால் முடிந்த மாதிரி எளிய தர்ப்பணம் செய்வோம். அப்படி முடியாத பட்சத்தில் ஆடி, புரட்டாசி, தை மாத அமாவாசை தினங்களிலாவது பித்ரு வழிபாடு செய்வோம். இதனால் தடைப்பட்ட பல காரியங்கள் நிறைவேறும். காசி, ராமேஸ்வரம், பவானி, கன்னியாக்குமரி மாதிரியான இடங்கலுக்கு சென்றுதான் இந்த கடனை செய்ய வேண்டிய அவசியமில்லை. அருகிலிருக்கும் கோவிலுக்கு சென்று இறைவனை வழிப்பட்டு, ஆதரவற்றோருக்கும், முதியோருக்கு உணவிட்டு அவர்கள் வாழ்த்தினாலே போதும். நமக்கு எல்லா வளமும் வந்து சேரும்.

நமக்கு அன்னம் இடுபவள் அன்னபூரணி! ஆவிகளுக்கு அன்னம் இடுபவள் ஸ்வதா தேவி! நாம் ஆவிகளை நினைத்துக் கொடுக்கும் அன்னத்தை மற்றும் யாகத்தில் போடும் ஆவுதிகளை ஸ்வதா தேவிதான் சம்பந்தப்பட்ட ஆவிகளிடம் சோ்ப்பிக்கிறாள்.உற்றார், உறவினா் தொடா்பு இல்லாத ஆவிகள் மரம், செடி கொடிகளில் அமாவாசையன்று மட்டும் தங்கி, அவற்றின் சாரத்தைச் சாப்பிடும். அதனால் அமாவாசையன்று மட்டும் மரம், செடி, கொடிகளையோ காய்கறிகளையோ புல் பூண்டுகளையோ தொடக்கூடாது. பறிக்கக் கூடாது. ஒவ்வொரு மாதம் அமாவாசை அன்னதானம் செய்ய முடியாதவா்கள் தை, ஆடி, புரட்டாசி அமாவாசையில் அன்னதானம் செய்ய வேண்டும். புரட்டாசி அமாவாசையில் செய்தால் 12 ஆண்டுகளாக அன்னதானம் தா்ப்பணம் செய்யாத தோஷம் நீங்கும். நகரங்களில் வசிப்பவா்கள் அமாவாசையன்று ஏழைக் குழந்தைகளுக்கு அல்லது ஆதரவற்றவா்களுக்கு முன்னோர்களை நினைத்து அன்னதானம் செய்ய வேண்டும். இதர தானங்கள் தருவது அவரவா் வசதியைப் பொறுத்தது.

பெற்றோரை இழந்த பிள்ளைகள் தர்ப்பணம் செய்யலாம்.  பெற்றோர் இருக்கும் பிள்ளைகள், தம்மோடு  இருக்கும் பெற்றோரை வணங்கி அவருக்கு மரியாதை செய்து அவர்களை மனம் மகிழும்படி நடப்போம். இருக்கும்போது அல்லல்பட வைத்து இல்லாதபோது பிண்டம் வைத்து வழிப்பட்டு என்ன பலன்?! 

நன்றியுடன்,
ராஜி.

16 comments:

  1. அருமையான புத்திமதி. கூறியவிதம் அருமை.

    ReplyDelete
    Replies
    1. அப்பா அம்மாவை சரியா கவனிக்காததால்தான் இன்னைக்கு ஊருக்கு ஊர் முதியோர் இல்லம் முளைக்குது.

      Delete
  2. நல்லபடியாக முடிந்தது.

    ReplyDelete
  3. இருக்கும்போது பெற்றோரைக்கவனிக்காமல் இறந்தபின் சடங்கு செய்வது போலித்தனம்

    ReplyDelete
  4. பெற்றோர் இருக்கும் பிள்ளைகள், தம்மோடு இருக்கும் பெற்றோரை வணங்கி அவருக்கு மரியாதை செய்து அவர்களை மனம் மகிழும்படி நடப்போம். இருக்கும்போது அல்லல்பட வைத்து இல்லாதபோது பிண்டம் வைத்து வழிப்பட்டு என்ன பலன்?!/ பித்ரு கடன் தான் என்ன இறந்தபின் பிண்டம் போடுவதா

    ReplyDelete
    Replies
    1. இருக்கும்போது பார்த்துக்கோங்க அதைவிட்டு செத்துப்போனபின் பிண்டம் வச்சு என்ன பயன்னு கேட்டால் பதிலில்லை. பிண்டம் வைக்குறது மட்டும்தான் அன்பின் வெளிப்பாடு, கடமைன்னு நினைச்சுக்கிட்டு இருக்குதுங்க சில பக்கிக.

      Delete
  5. முடிவில் சொன்னீர்களே இதுதான் எனது கொள்கை சகோ.

    ReplyDelete
  6. பெற்றோர் இருக்கும் பிள்ளைகள், தம்மோடு இருக்கும் பெற்றோரை வணங்கி அவருக்கு மரியாதை செய்து அவர்களை மனம் மகிழும்படி நடப்போம். இருக்கும்போது அல்லல்பட வைத்து இல்லாதபோது பிண்டம் வைத்து வழிப்பட்டு என்ன பலன்?!

    உண்மை சகோதரியாரே

    ReplyDelete
  7. சிறப்பான பகிர்வு. பாராட்டுகள்.

    ReplyDelete