Tuesday, August 07, 2018

ஆடி மாதம் அம்மனுக்கு படைக்கவேண்டிய முருங்கைக்கீரை -கிச்சன் கார்னர்

கீரைகளில் அளப்பறிய சத்துகள் இருக்குன்னு நமக்கு தெரியும். வீட்டை சுத்தி நம் கைக்கு அருகில் கிடைக்கும் முடக்கத்தான், தூதுவளை, முருங்கைக்கீரை, தண்டுக்கீரை, நஞ்சு முறிச்சான் மாதிரியான கீரைகளின் மகத்துவம் நமக்கு புரில. நமக்குதான் ஈசியா கிடைச்சுட்டா அதை இளக்காரமா பார்ப்போமே! கீரைகளில் இரும்பு சத்து நிறைய இருக்கு. தினசரி நம்ம உணவில் கீரைகளை சேர்த்து வந்தாலே போதுமான அளவு இரும்பு சத்து கிடைச்சுடும். அதைவிட்டு இரும்பு சத்து மாத்திரை சாப்பிடுறோம். நாலு வயசு பிள்ளைகூட இன்னிக்கு கண்ணாடி போட்டுக்கிட்டிருக்கு. காரணம் இரும்பு சத்து இல்லாததுதான். நம்ம  வீட்டில் இருக்கும் முருங்கக்கீரையை பறிச்சு செய்ய சோம்பேறித்தனம். நம்ம வீட்டில் முருங்கை மரம் இல்லாட்டி தெருவுக்கு ஒரு முருங்கை மரமாவது இருக்கும். பைசா செலவில்லாமல் கிடைக்கும் இந்த கீரையை சூப், பொறியல், சாம்பார், கூட்டு, அடைலாம் செஞ்சு சாப்பிடலாம்..
முருங்கைக்கீரையில் கால்சியம், இரும்புச்சத்து, விட்டமின் A, B, B2, C, பீட்டா கரோட்டீன், மாங்கனீசு, புரதம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் போன்ற சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. எனவே வாரம் ஒருமுறை முருங்கைக் கீரை மட்டுமில்லாம  முருங்கைப்பூ, முருங்கைகாயையும் சாப்பிடனும். இந்த மூன்றிலும் ஏராளமான மருத்துவ குணமிருக்கு.  முருங்கக்கீரையை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், ரத்தசோகை, சருமப்பிரச்சனை, சுவாசப்பாதை, செரிமான மண்டலம் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்குது. முருங்கைக் கீரை சாப்பிடுவதால்,  மாதவிடாய் சுழற்சியை சீராக்கி, பெண்கள் வயிற்றில் வளரும் குழந்தையின் உடலில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாட்டை தடுக்குது. முருங்கைக்கீரையில் விட்டமின் A அதிகம் இருப்பதால், அது கண் பார்வை தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதை தடுத்து, கூர்மையான கண் பார்வையை ஏற்படுத்தி, கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துது. முருங்கைக்கீரையை வாரந்தோறும் உணவில் சேர்த்து வந்தால், அது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, எளிதில் உடலைத் தொற்றும் சளி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

முருங்கைக்கீரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இதயத்தை ஆரோக்கியமாக பாதுகாப்பதுடன், மாரடைப்பு போன்ற இதர இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தைத் தடுக்குது. முருங்கைக்கீரையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் இருக்கு. இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோய் வராமல் தடுக்குது. முருங்கைக்கீரையில் உள்ள கால்சியம், எலும்புகள் மற்றும் பற்களின் வலிமையை அதிகரித்து, தாய்ப்பாலின் சுரப்பை அதிகரிக்க செய்கிறது. முருங்கைப் பூவை நன்கு வெயிலில் உலர்த்தி, பொடி செய்து, அதை பாலில் சேர்த்து கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால், சிறுநீரக மண்டலத்தை சீராக்குவதுடன், ஞாபக சத்தியை அதிகரிக்கச் செய்கிறது. இதில்லாம முருங்கைப்பட்டை, முருங்கைப்பிசின்ன்னு முருங்கையில் அனைத்து பாகங்களும் நமக்கு உதவுது. எங்க ஊர் பக்கம்லாம் அம்மனுக்கு படையல் போடும்போது முருங்கைக்கீரை பொரியல் கண்டிப்பா இருக்கும்.

தேவையான பொருட்கள்..
முருங்கைக்கீரை
வெங்காயம் 
பூண்டு
எண்ணெய்
கடுகு
கடலைப்பருப்பு
உளுத்தம்பருப்பு
காய்ந்த மிளகாய்
வறுத்த வேர்கடலை 
உப்பு

வாணலி  எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும் கடுகு போட்டு வெடிக்க விட்டு கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு போட்டு சிவக்க விடனும்.பூண்டு நசுக்கியும், மிளகாயை கிள்ளி போட்டு சிவக்க விடனும்.
அடுத்து வெங்காயம் போட்டு வதக்கிக்கனும்..
முருங்கைக்கீரையை போட்டு லேசா வதக்கி கொஞ்சமா தண்ணி சேர்த்து கொதிக்க விடனும். கீரை பாதி வெந்ததும் தேவையான அளவு உப்பு சேர்த்துக்கனும். 

வேர்க்கடலையை நறநறன்னு பொடி பண்ணி சேர்த்துக்கனும்.. வேர்க்கடலையோடு வறுத்த மிளகாய் சேர்த்து அரைச்சு சேர்த்துக்கிட்டால் ருசி கூடும். வேர்க்கடலை பொடிக்கு பதிலா வேக வச்ச துவரம்பருப்பு தேங்காய் துருவலும் சேர்க்கலாம். 
அம்மனுக்கு பிடிச்சதும் உடலுக்கு ஆரோக்கியத்தினை தரும் முருங்கைக்கீரை பொரியல் தயார்.

நன்றியுடன்,
ராஜி

9 comments:

 1. ஆரம்ப ஆதங்கமே அசத்தல்... மற்ற விளக்கத்தை சொல்லவே வேண்டும்... அருமை சகோதரி...

  ReplyDelete
  Replies
  1. என் சின்ன பொண்ணு கீரையே சாப்பிடாதுண்ணே. அந்த ஆதங்கம்தான்

   Delete
 2. பூண்டு சேர்த்து செய்தது இல்லை,
  செய்து பார்க்கிறேன். அம்மனுக்கு படைப்பதும் புது செய்தி.

  ReplyDelete
  Replies
  1. அம்மில வச்சு மிளகாய் வேர்க்கடலை பொடிசெய்து அதிலேயே பூண்டை தோளோடு நசுக்கி கீரையில் சேர்த்து கிளறி இறக்கினால் இன்னமும் வாசமா இருக்கும். எங்க ஊர் பக்கம் அம்மனுக்கு படைக்கும்போது, கூழ், கருவாட்டு குழம்பு, கொழுக்கட்டை, முருங்கைக்கீரைலாம் வச்சு படைப்போம்ம்மா.

   Delete
 3. எனக்கு கீரை மிகவும் பிடிக்கும்.

  ReplyDelete
  Replies
  1. தினமும் ஒரு கீரை சேர்த்துக்குறது நல்லதுண்ணே

   Delete
 4. ரொம்பப் பிடிக்கும். பிரச்னை என்னன்னா எனக்கு மட்டும்தான் பிடிக்கும். வீட்டில் யாருக்கும் பிடிக்காது என்பதால் எப்போதாவதுதான் கிடைக்கும்!

  ReplyDelete