Friday, May 31, 2019

நீலக்கடலின் ஓரத்தில் வீற்றிருக்கும் பகவதி அம்மை - புண்ணியம் தேடி..

கடந்த சிலவரங்களுக்கு முன் கன்னியாகுமரியில் உள்ள குகநாதீஸ்வரர் கோவில் பற்றி பார்த்தோம். கோடை விடுமுறையில் ஊர் சுற்ற போயிட்டதால் சரிவர வரமுடியல.  அதன் தொடர்ச்சியாய் இந்தவாரம் பதிவில் கன்னியாகுமரி பகவதி அம்மையை தரிசனம் செய்யப்போறோம். இந்தக்கோவிலின் வரலாற்று காலம் என்பது நாம் நினைப்பது மாதிரி 2000 வருசமோ இல்ல 3000  வருசமோ இல்லை. இது பல யுகங்கள் தாண்டியது. இதில் பலவாறானவை திரிபு கதைகளாகவே இருக்கு. ஆதிசக்தி அசுரனை வதம் செய்ய கன்னியாக நின்ற இடம் என்பதுவரை உண்மை. அதேசமயம் ஆதிபரம்பொருள் அன்னையை மானிடப்பிறவியாக பிறக்க வைத்து தர்மத்தை அழிக்கவைத்ததாக சில வரலாறுகளில் சொல்லப்பட்டாலும்,  செவிவழிக்கதைகளில் வேறுவிதமாக சொல்லப்படுகின்றது, அதனால் உண்மையான வரலாறு அந்த அம்மைக்குத்தான் தெரியும். எந்த அசுரர்களாலானும் அவர்களை நினைத்த மாத்திரத்திலேயே அழிக்கும் வல்லமை அந்த ஆதிசக்திக்கு உண்டு. யாரோ சொல்லிய கதைகளை சொல்வதைவிட அன்னையின் கோவிலுக்கு செல்லுவது எப்படி என்று மட்டும் நாமப் பார்க்கலாம்
இதுபற்றிய விரிவான உண்மையான கதைகள் திருவிளையாடல் புராணத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதியில் குமரி முனைக்கு அப்பால் பனியால் உறைந்த பெரு நிலமொன்று இருந்தது என்றும், வேட்டையாடுதலே அங்கு வாழ்ந்தவர்களின் தொழிலாக இருந்தது என்றும், அந்த பனிநிலமே அவர்களது வாழ்வாதாராமாக இருந்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்பு மக்கள் பெருவாரியாக அந்த பனி நிலத்தில் குடியேற தொடங்கினர்.  பல நூறாண்டுகள் இப்படியே குடியேற்றம் தொடர்ந்தன. ஒருக்காலத்தில் கதிரவனின் வெப்பம் அதிகரித்தது பனி உருக ஆரம்பித்தது. புதுப்புது நதிகள் உருவாயின. நதிக்கரைகளில் மக்கள் ஆங்காங்கே நிரந்தமாய் குடியமர்ந்தனர். வெப்பத்தினால் பனி பெருநிலம் மெல்லமெல்ல உருகி கடலில் கரைந்தது. பல காலமாய் தாங்கள் கண்டு வந்ததும், தங்கள் மூதாதையர் வாழ்ந்த தென் பெருநிலம் கடலாய் கரைவதை கண்டு திகைத்து நின்றனர் இளைய தலைமுறையினர்.
A hypothetical map (believed to originate with Ernst Haeckel) depicting Lemuria as the cradle of humankind, from the lost continent. Circa 1876.

பனிபெருநிலம் அழிந்தபின் எஞ்சிய நிலத்தின் முனையில் எருது என்ற ஒரு மலை மட்டும் மிஞ்சியது. அந்த  மலையின் அடிவாரத்தில் இருந்த மக்கள்,  மீன் பிடித்து தங்கள் வாழ்வாதாரத்தை தொடங்கினர். அவ்வூர் மூன்று புறமும் கடலால் சூழ்ந்து, வடக்கில் கடம்பவனம் எல்லையாக நின்றது. கடம்பவனத்தில் வாழ்ந்தது நாகர் இனம். கடம்பவனத்திற்கப்பால் இருந்தது மகேந்திரமலை, நாகராஜா கோவில் ஸ்தலவரலாற்றிலேகூட இந்த மகேந்திரகிரிமலையில் சுமார் 20000 வருடங்களுக்கு முன்னமே நாகர்கள் வசித்து வந்தனர் என்றும் அவர்கள் நகராஜாவை வழிபட்டுவந்தனர் என்றும் சொல்லப்பட்டிருக்கு.   அம்மலையில் வாழ்ந்தது மிகவும் மூத்தக்குடியான சூரர் இனம், அம்மலையின் கிழேக்கே இருந்தது மிக உயர்ந்த மலை பெருமலை என்றும் மேருமலை என்றும் அழைக்கப்படும் மலை, தெய்வங்கள் வாழ்வதாய் நம்பபடும் மலை. மகேந்திரமலையில் உருவாகி ஓடியது பஃறுளி ஆறு, கடம்பவனத்தில் உருவாகி மீனவர் நிலம் வழியாக கடலில் கலந்தது குமரியாறு. இப்படித்தான் குமாரியின் வரலாறு ஆரம்பிக்கிறது.
A hypothetical rendering of Lemuria from 1893.Edouard Riou/New York Public Library

எருது மலை அடிவாரத்திலிருந்த மீனவபழங்குடியின் ஊர் முழுதும் மணல் பரவி இருந்ததால் அவ்வூர் மணலூர் என்று அழைக்கப்பட்டது. மழை என்பதை அவ்வூர்மக்கள் கண்டு ஆண்டு நான்காகியது. கடலே ஆவியாவிடும் என்ற நிலை ஏற்பட்டது. மரங்கள் மெல்ல தன் அடையாளங்களை இழந்தது. இலைகளில்லாமல் வெறும் தண்டு மட்டுமே நின்றது. மீனவர்கள் ,தங்கள் தெய்வத்திற்கு மீன்களையும், முத்துக்களையும் காணிக்கையாய் தந்து மழைக்கு வேண்டிக்கொண்டனர். இதிலிருந்தே வழிபாடுகள் தொடங்குகிறது. லெமூரிய கண்டம் கடல் கோளால் அழிந்தபோது கன்னியாகுமரி கடற்கரையின் எல்லையானது என்பது மட்டும் சங்க இலக்கியங்களின்மூலம் அறியமுடிகிறது. இப்ப இருக்கிற இந்த கோவில் பரசுராமரால் நிர்மாணிக்கப்பட்டது என்பது மட்டும் தெளிவான வரலாறாக இருக்கிறது .
நாம கன்னியாகுமரி போகும்போது இந்த அம்மையை மட்டும் தரிசிக்காம அங்குள்ள தியாக சௌந்தரி, பால சௌந்தரி, காலபைரவர் போன்ற சந்நிதிகளிலும்,பரசுராமர் பிரதிஷ்டை செய்த விநாயகர் கோவில்லயும் வழிபட்டு, பின் இந்த அம்மையை தரிசித்தல் உத்தமம். கன்னியாகுமரியிலே பாலசௌந்தரி, தியாக சௌந்தரி என இரு தோழியர் சூழ வாலைகுமாரி அன்னை மட்டுமே கோவில் கொண்டுள்ளாள். இதுவே கன்னியாகுமரியின் சிறப்பு. காமாட்சியும் மீனாட்சியும் விசாலாட்சியும் அபிராமியும் கன்னியாகுமரியும் காந்திமதியும், கற்பகாம்பாளும் ஒன்றுதான்!! கன்னியாகவே, குழந்தையாகவே கோவில் கொண்டிருக்கிறாள் கன்னியாகுமரியிலே.  மற்ற எங்கும் சிவமும் சக்தியுமாகதானே காட்சி தருவது வழக்கம். கன்னியாகுமரியிலோ முழுக்க சக்திமயம். ஆதி சக்தியே! அகிலலோக அன்னை மட்டுமே கோவில் கொண்டுள்ளாள். அதுதான் இந்த கோவிலின் தனித்தன்மை.
       கன்னியாகுமரி கடல் 1915ம் வருடத்திய புகைப்படம்

இந்தக்கோவிலை பற்றி நிறைய பார்த்துவிட்டோம். இருந்தாலும், இந்த கோவிலின் வரலாறு செவிவழிக்கதைகள்மூலம் நிறைய இடங்களில் இந்த அம்மனை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. வேதகாலம் துவங்கியது முதல் இந்த ஸ்தலத்து பகவதி அம்மனை வழிபட்டதாக வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. மகாபாரதம், சங்க நூலான மணிமேகலை, புறநானூறு, நாராயண உபநிடதம், கிருஷ்ண யஜூர் வேதம், சம்ஹித வைஷ்ணவ வேதங்களிலும் இந்த அம்மனை பற்றியம் வழிபாடுபற்றியும்  கூறப்பட்டுள்ளது
                               The Kanyakumari's View with Kumari Amman Temple in 1925.

1892ல் சுவாமி விவேகானந்தரின் குரு இராமகிருஷ்ண பரஹம்சருக்கு பகவதி அம்மைதேவி ஆசி வழங்கியுள்ளார். இதனால் அவர்கள் ஒரு குழு அமைத்து இந்த ஸ்தலத்து தேவியை வழிபாடு செய்ய ஏற்பாடு செய்தார்கள். இதில் சுவாமி பிரமானந்தா (1863-1922) (Brahmananda), நிர்மலானந்தா (1963-1938) (Nirmalananda) ஆகியோர் இக்காலகட்டங்களில் இங்கு வந்து தேவிக்கு பணிவிடை செய்துள்ளனர். பின்னர் 1935-35ம் ஆண்டுகளில் கேரள மாநிலத்திலிருந்து பல பெண்களை வரவழைத்து தேவிக்கு பூசை செய்துவந்தனர்.
The Kanyakumari Temple and the twin Vivekananda Rock situated to its south-east, at the confluence of three seas.
அப்படி வந்த பெண்களில் ஏழுபெண்கள் குழு மூலம் 1948ல் இங்கு 
சாரதா மடம் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் கேரளாவில் பாலக்காடு, ஒட்டப்பாளையம் போன்ற  இடங்களிலும் ஆரம்பிக்கப்பட்டது. பெரிபிளசு இவரது காலம்  (கி.பி. 60-80) (Periplus) இவர் தனது பயண குறிப்புகளில் தேவி கன்னியாகுமரி அம்மன் பற்றியும், பிரம்மச்சர்யம் பற்றியும், அன்னையின் வழிபாடு பற்றியும் எழுதி இருக்கிறார். இந்த இடம்  பாண்டியர்களின் வீழ்ச்சிக்குப் பின் பரவ வம்ச அரசர்களின் ஆட்சியில், திருவிதாங்கூர் அரசரின் கட்டுப்பாட்டில் இருந்தது. 1947 இந்தியாவின் சுதந்திரத்திற்குப்பின் இந்திய சமஸ்தானத்துடன் இணைந்தது.
இதுதான் வடக்குபக்க வாயில். இந்த வாசலே இப்பொழுது பிரதான நுழைவாயிலாக பயன்படுத்தப்படுகிறது. இந்த திருக்கோவிலுக்கு மூன்று பக்க வழிகளிலிருந்தும் செல்லலாம். ஆனால் எல்லாவழிகளும் இந்த வடக்கு  வாசலில் வந்துதான் சேருகின்றன. இதுதான் பிரதான நுழைவாயில். இதன் பக்கத்திலதான் செருப்பு பாதுகாப்பு இடமும், சில கடைகளும் இருக்கு.  ஊசி, மணி, பாசி வியாபாரிகள் நம்மை விடமாட்டார்கள். இதைவிட பெரிய கொடுமை என்னன்னா நரிக்குறவர்கள் ஒரு புலிநகம்ன்னும், நரிப்பல்லுன்னும் ஒன்னை வச்சுக்கிட்டு வச்சி அதுக்கு யானைவிலை சொல்லுவாங்க. வன அதிகாரிகளுக்கு தெரியாம வச்சிருக்கிறம்பாங்க. வெளியே தெரிஞ்ச பிரச்சனைன்னு நம்ம அவசரப்படுத்துவாங்க. நம்ம மூஞ்சியில்தான் ஏமாளினு நெத்தியிலையே எழுதி ஒட்டிருக்கே! ஆனா நாம அறிவாளிப்பிள்ளைன்னு அவங்களுக்கு தெரியல! அது பிளாஸ்டிக்கானல் ஆனது. விரல்,ரோமங்கள் கூட பைபர் மூலம் தத்ரூபமாக இணைச்சு இருக்கிறாங்க ,யாரும் இவங்ககிட்ட ஏமாறவேண்டாம் .
எங்க ஊர்லையே நரிக்கொம்புன்னு ஒண்ணை காட்டி இதை பர்ஸ்ல வச்சா பணம் வருன்னு தலையில கட்டிட்டாங்க. நாமளும் பர்ஸில் பணம் சேர்ந்தா சரின்னு வாங்கிவச்சுட்டேன். .அதன் பிறகுதான் ஒருநாள் யோசிச்சேன் நரிக்கு ஏது கொம்புன்னு இதை ஏன் சொல்லுறேன்னா இது ஒரு ஏமாத்து வேலை. எந்த மிருகத்தின் உடல்பாகங்களையும் பர்சில் வைக்கக்கூடாது. அந்த மிருகத்தை வேட்டையடித்தான் அதை எடுத்திருப்பாங். அப்ப அது கொல்லப்படும்போது அதன் வலியும், வேதனையும் அந்த உறுப்புகளின் பதிவுகள் இருக்கும். நாம் அதை உபயோக படுத்தினா எதிர்மறையான எண்ணங்களை நமக்குள்ளே நாமே ஏற்படுத்திக்கொள்ள வழிவகுத்துவிடும் . அதுமட்டுமில்லாம கிருமித்தொற்று ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு.
இது கோவிலின் வடக்கு வாசல். இதுவழியாகத்தான் நாம அம்மையை தரிசிக்க செல்லவேண்டும். இங்க சாதாரணநாட்களில் கூட்டமில்லாமல் தரிசனம் செய்யலாம் . மத்தபடி கட்டண தரிசனமாக 20 ரூபாய் வசூலிக்கிறாங்க. நம்மளுடைய ஈரத்துணிகள், உடைமைகள் போன்றவைகளை ,கோவிலினுள்ளே 5 ரூபாய் கட்டணத்தில் பாதுகாத்துவைப்பார்கள். மொபைல் கேமரா கட்டாயம் உபயோகப்படுத்தக்கூடாது .
இந்த கோவிலில் நம்மூர்காரர்களை விட, வடஇந்திய மக்களும், மலையாள தேசத்து மக்களும்தான் நிறைய தரிசனம் பண்றாங்க. கோவில் முழுக்க முழுக்க மலையாள தேசத்துமுறையிலையே ஆகம விதிகள் கடைபிடிக்கப்படுகின்றன. ஆண்கள் மேல்ச்சட்டை அணியத்தடை. ஏன்னா திருவிதாங்கூர் மகாராஜாக்கள் வந்து இந்த அம்மையை வணங்கும்போது இடுப்பில் மட்டும்  முண்டு உடுத்து எளிமையாக வழிபடுவார்களாம்.  அதையே மக்களும் பின்பற்றி இந்த மேல்ச்சட்டை அனுமதியின்மை பழக்கம் கேரளா கோவில்களில் வந்தது என்று சொல்லப்படுகிறது.
கோவிலினுள் கூட்டம் அதிகமா இருந்தா சுற்றி போகும் வழியாக செல்ல விடுவார்கள். இல்லையெனில் நேரடியாக சென்றுவிடலாம். 20  ரூபாய் டிக்கெட்டும் தர்மதரிசன வரிசையும் கொடிமரத்திற்கு முன்னர் வந்து இணைகிறது. எப்படி இருந்தாலும் தள்ளுமுள்ளு தரிசனம்தான் பக்தர்கள் செய்கின்றனர். இதில் ஐயப்ப மலை சீசனில் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும்.
சரி,  கோவிலை நன்றாக சுற்றிப்பார்க்கலாம் என தரிசன கூட்டத்தில் சென்றோம். நேரடியாக அம்மையை போய் பார்ப்பதற்கு பதிலாக,கால்கடுக்க நின்று கோவிலின் அழகை ரசித்து செல்வதே நல்லது. குறுக்கு வழியில் செல்வோருக்கு அம்மன் உடனியாக அருள்புரிவான் என்பதெல்லாம் இல்லை. பக்தரின் மனக்குறைகள் அம்மனுக்கு தெரிந்தே அருள் புரிபவள் இந்த பகவதி அம்மை. இந்த வழியானது கட்டண தரிசனம் செல்லும் வழி. நாங்கள் சென்ற நேரம் கட்டண தரிசனத்தில் கூட்டம் குறைவாகவே இருந்தது,
ஒருவழியாக சுற்றிவந்து கொடிமரத்திற்கருகே வந்துவிட்டோம். அதுவரை நேராக வந்துகொண்டிருந்த கும்பல் சில வடஇந்தியர்களால் தள்ளுமுள்ளு வரிசையாகிவிட்டது. அவர்களை சொல்லியும் குற்றமில்லை ஏன்னா பல ஊர்களுக்கும் போகவேண்டியது இருக்கும். குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்தில தரிசனத்தை முடித்துவிடவேண்டும் என்ற அவசரம். இங்க கோவிலில் பணிபுரியும் அனைவரும் பல மொழிகளை சரளமாக பேசி கூட்டத்தை ஒழுங்கு படித்திக்கொண்டிருப்பதை பார்க்கமுடிந்தது.
கொடிமரத்தை தாண்டி பிரகாரத்தினுள் நுழையும்போது அங்கே அணையா விளக்கு இருக்கிறது. அதற்கு நல்ல எண்ணெய் வாங்கிவிடுவதற்கு பக்தர்கள் ஆர்வம் காட்டினர். அர்ச்சனை சீட்டுகள் , குங்கும பிரசாதங்கள் எல்லாம் இங்க விற்பனை செய்கின்றனர். அதையும் தாண்டி ஒரு நிலை வாசலை கடந்து அம்மையை தரிசனம் செய்யவேண்டும். இதோ அம்மையை கண்டுவிட்டோம். ஒரு குமரிப்பெண் எப்படி தாவணி அணிந்து இருப்பாளோ!(இப்பத்திய குமரிகள்லாம் லெக்கிங்க்ஸ், ஜீன்ஸ் மிடி போடுதுங்க) அதேப்போல் சந்தன காப்பு அலங்காரத்தில் மூக்குத்தி மின்ன அழகு சொரூபிணியாக காட்சி கொடுக்கிறாள். அங்கே நம்பூதிரிகள் பிரசாதத்தை நம் கையில் படாமல் கொடுக்கின்றனர் .தட்டில் காசு போட்டவருக்கும் போடாதவருக்கும் இலைபிரசாதம் கொடுக்கப்படுகிறது. ஒருவழியாக பிரசாதத்தை வாங்கிக்கொண்டு பிரகாரம் சுற்ற ஆரம்பித்தோம். மூலையில் கன்னிமூல கணபதி அருள்புரிகிறார்
உள்பிரகாரத்தை விட்டு வெளியே வரும்போது பாலசௌந்தரி சந்நிதி இருக்கிறது. அங்கு பக்தர்கள் நெய்விளக்கு போடுகின்றனர். முன்பெல்லாம் கோவிலை சுற்றி உள்பிரகாரத்திலையே வலம் வரலாம் இப்பொழுது அப்படியே வெளியே செல்லும் வழி வரைதான் செல்லமுடிகிறது. ஒருவழியாக பகவதி அம்மையை தரிசனம் செய்துவிட்டு வெளிப்பிரகாரத்தில் வந்தோம். அங்கதான் நவகிரக சன்னதியும் இருக்கிறது. இங்கே பிரசாத ஸ்டால் மற்றும் பகவதி அம்மனின் படங்கள் விற்பனைக்கு வைத்துள்ளனர். இங்கே விற்கப்படும் தாழம்பூ குங்குமம் நல்லவாசனையாக இருக்கிறது.எல்லாவற்றையும் வாங்கிக்கொண்டு கோவிலின் வெளிவாசலுக்கு வந்தோம்.
கோவிலின் வெளியே  மாடன் சுவாமி சிலை இருக்கிறது. அங்கு தினமும் பூஜைகள் நடைபெறுகின்றன.மேலும் இங்கே ஒரே இடத்தில சூரிய உதயமும், அஸ்தமனமும் பார்க்கலாம்.இதற்காகவே தினம் காலை மாலை பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். 
மேலும்  முக்கடல் சங்கமிக்கும்  இடம் என்பதும் நம் நாட்டின் தெற்கு எல்லையாக இந்த கன்னியாகுமரி பகவதி அம்மை கோவில் இருக்கிறது என்பதும் ,சுனாமி நேரத்தில்கூட கோவிலை சுற்றி உள்ள இடங்களில் எல்லாம் ஆழிப்பேரலைகள் நாசமாக்கி சென்றுவிட்டபோதும் ,கோவிலை சுற்றி ஒரு பாதிப்புகூட இல்லாமல் இந்த பகவதி அம்மை காத்து அருளினாள். எது வந்தாலும் நான் இருக்கிறேன் என்று பக்தர்களை பார்த்து மெல்லிய சிரிப்புடன் கன்னியாகுமரி கடற்கரை ஓரம் கொலுவீற்றிருக்கும் இந்த பகவதி அம்மையை வணங்கி நாமும் விடைப்பெற்று மீண்டும் வேறு ஒரு கோவிலில் இருந்து உங்களை சந்திக்கும்வரை உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன்.

நன்றியுடன்
ராஜி 

12 comments:

  1. Replies
    1. நன்றி,நன்றி..உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும்...

      Delete
  2. கோவில் பற்றிய தகவல்களை விட மற்ற அனுபவ தகவல்கள் அருமை...

    ReplyDelete
    Replies
    1. ஏதாவது ஒருகாலத்தில் ஏற்பட்ட திரிபு கதைகள் ஏராளம்,அவரவர்களின் வசதிக்கேற்ப நிறைய இடைச்சொருகல்களை புகுத்திவிட்டனர்.ஆகையால் சரியான தகவல்கள் கிடைக்காததாதால்,எப்படி செல்லவேண்டும் என்று தெரியாமல் ஆன்மீக பயண கட்டுரையாக எழுதிவிட்டேன்ங்கண்ணே

      Delete
  3. நாமும் பல வருடங்களுக்கு முன் தரிசித்திருக்கிறோம் என்பதில் மகிழ்சி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ,பலவருடங்கள் ஆகிவிட்டதால் நீங்களும் புதியதாக போய் தரிக்கவேண்டும் என்றுதான் உங்களை இந்தவாரம் அந்த பகவதி அம்மையை தரிசிக்க நானே அழைத்து சென்றுவிட்டேன்,மாதேவி.

      Delete
  4. எப்போதோ போனது... ஒரு திருமணத்துக்காக சென்றபோது இங்கு சென்று தரிசிக்கும் வாய்ப்பு கிட்டியது.

    ReplyDelete
    Replies
    1. எப்பொழுதோ சென்றது,அதுவும் திருமணத்திற்க்காக சென்றபோது சென்றேன் என்றால் அது செல்லாது செல்லாது ,திரும்பவும் முதலில் இருந்தே ஆரம்பிங்க ,,பக்தியுடன் இப்பொழுது ஒரு ரவுண்டு போய்ட்டுவாங்கண்ணே

      Delete
  5. அட! எங்கூர் கன்னியாகுமரி அம்மை. !! இப்ப கட்டண வரிசையும் உண்டா...அடேங்கப்பா...பார்த்து ரொம்ப வருடங்கள் ஆகிடுச்சு.

    உள்ள படங்கள் எல்லாம் எடுக்க அனுமதி உண்டா ராஜி?

    விவரணங்கள் உங்க அனுபவங்கள் எல்லாம் சிறப்பு...இன்னும் எங்கூரை விட்டு வெளிய வரலை போல!!!!!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நன்றி கீதாக்கா,கட்டண வரிசை வந்து பலவருடங்கள் ஆகிவிட்டது.படங்கள் எதுவும் எடுக்க அனுமதி இல்லை ,மொபைல்க்கு தனி டோக்கன் போட்டுவிடுகிறார்கள்.இது முன்பு எடுத்த பலரது தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டவை.இனியும் சில கோவில்கள் அதோடு நானே உங்க ஊரைவிட்டு கிளம்பிடுறேன்னுங்கக்கா ....

      Delete
  6. அடுத்த பதிவுக்கு நாளை வரேன்...இப்ப அட்டெண்டென்ஸ் போட்டாச்ஹ்கு...ஹா ஹாஅ

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க உங்கள் மேலான கருத்துக்களை சொல்லுங்க .அது இன்னமும் நல்லா எழுதவதற்கு உறுதுணையா இருக்கும்..நன்றிக்கா

      Delete