Thursday, July 25, 2013

வாட பிறந்தவள்!!

 
என்னை பற்ற வைப்பது எளிது
தீக்குச்சி தேவையில்லலை
உன்னுடைய முடியாது..., என்ற
ஒரு வார்த்தைப் போதும்!!

 இப்போதும்..,
எரிந்துக் கொண்டுதான் இருக்கிறேன்..,
நீ முடியாது என்று சொன்னதால்!!

உன்னிடம் மன்றாடி கெஞ்சினேன், நீ
மறுத்ததை மறக்க முடியவில்லை.
கனவிலும் என் கன்னத்தில் தைத்தன,
முட்களாய் உன் முத்தங்கள்??!!!

நாம் ஒன்று சேரவில்லை..,
நம் காதலும் ஒன்று சேரவில்லை..,
சேரும் என்ற நம்பிக்கை போனதால்!!
பிரிவோம் என்று நம்புகிறேன்.

அதாவது, சரியாக நிறைவேறட்டும்
பிரிவிலும் ஒரு இன்பம் உண்டாம்..,
அதையாவது.,
 அனுபவிக்க ஆசையாய் இருக்கிறது,

பிறந்த குழந்தைக்கு தெரியாது
தான் பிறந்திருப்பது! இறந்த
மனிதனுக்கு தெரியாது
தான் இறந்திருப்பது! அப்படித்தான்
எனக்கும்தெரியாது!?
"உன்னை பிரிந்திருப்பது"

என் நினைவுகளை, உன் தோட்டத்தில்
செடிகளோடு சேர்த்தே புதைத்துவிடு,
பூக்களில் என் வாசமும் இருக்கும்!
இரவுகளில் வரும் உன் கனவுகளில்
நான் உன்னோடு பேசலாம்,

வீசும் காற்றில் என் சுவாசமும்
கலந்து இருக்கலாம்!
கேட்கும் பாடலில் என் நினைவும் வரலாம்...,

இப்படி நாம் பிரிந்தே இருந்தாலும்
சின்ன சின்ன நிகழ்வுகள் நடந்து
கொண்டுதான் இருக்கும்..,
உன்னையும் என்னையும் இணைத்து......!!!

இன்றும் நான் உன்னை தேடுகிறேன்!?
நீ இங்கே இல்லை.
நாம் பகிர்ந்து கொண்ட காதலும்,
இனிய முத்தங்களும் மட்டுமே இருக்கின்றது

”வாழ பிறந்த என்னை...,
வாட பிறந்தவாளாக்கி விட்டாய்..,

Wednesday, July 24, 2013

இது பொம்பளைங்க சமாச்சாரம். ஆனா, ஆண்களுக்கு!!

  
 நம்ம ஊரு ஆண்களை மன்மோகன் சிங்க் குர்தாவுல எத்தனை  பட்டன் இருக்குனு கேட்டு பாருங்க, படக்கென வந்து விழும் பதில்!! கணக்கு புதிரா?! சட்டென விடை வரும்.., உலக நடப்பு அத்தனையும் விரல் நுனில இருக்கும். ஆனா,    என்ன செய்தா வூட்டுக்காரம்மாவை  நம்ம வழிக்கு கொண்டுவரலாம் ன்ற விஷயத்துல தான் ஆண்களுக்கு பயங்கர குழப்பம்.

சில பொண்ணுங்களுக்கு சாக்லேட் பிடிக்கும், சிலருக்கு ஐஸ்கிரீம் ன்னா கொள்ளை பிரியம்.  சிலருக்கு அம்மா வீடு, சிலருக்கு புடவை.., சிலருக்கு டெட்டி பேர் பொம்மை பிடிக்கும். ஆனா சில பொண்ணுங்க இருக்காங்க பாருங்க. அவங்களை, என்ன வாங்கி குடுத்தாலும் என்ன செய்தாலும் வழிக்கு வரமாட்டாங்க.

செலவே இல்லாத அன்பான கவனிப்பு, அக்கறையான பேச்சு, அப்பப்போ ஆறுதலாய் சில முத்தம் என கொடுத்தால் சொக்கிப்போகும் பெண்களும் இருக்கத்தான் செய்றாங்க. உள்ளன்போடு புரிதலும் இருக்கும் துணைதான் என்றைக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு உணர்வை தருதாம். இதை நான் சொல்லலீங்கோ!! ஒரு ஆய்வோட முடிவு இதெல்லாம்...., உங்க (நல்லா நோட் பண்ணிக்கோங்க சகோ’ஸ் ”உங்க”) காதலியையோ, மனைவியையோ எப்பவும் மகிழ்ச்சியா வச்சுக்கிட்டு, நீங்களும் மகிழ்ச்சியா வாழ, அந்த ஆய்வுல வந்த டிப்ஸ்கள உங்களுக்கு சொல்றேன். கேட்டுக்கோங்க சகோ’ஸ...,

                                         
 பூ கொடுங்கள்:
மல்லியோ, முல்லையோ, கனகாம்பரமோ இல்ல ரோஜாவோ எதாவது ஒரு பூவுக்கு மயங்காத பொண்ணுங்க  யாரும் இருக்கமாட்டாங்க. அதனால,  பிறந்தநாள், திருமணநாள், முதல் முதலில் பார்த்த நாள், காதலை உணர்த்திய நாள், லொட்டு, லொசுக்குன்னு எதாவது காரணம் சொல்லி அடிக்கடி பூக்கள் கொடுங்கள். மிகவும் எளிதான, மலிவான பரிசுதான். ஆனா மனதைத் தொடும் பரிசு இது (மனசை இல்லை, கூந்தலை தொடும் பரிசுன்னும், உன் அண்ணிக்கு காலிஃப்ளவர் வாங்கி கொடுத்தேன். பூரிக்கட்டையால மொத்துனா”ன்னு அமெரிக்காவுல இருந்து யாரும் வந்து கமெண்ட் போடக்கூடாது. )

கண் பேசும் வார்த்தைகள்:
கணவனோ, காதலனோ தன்னை மட்டும்தான் பார்க்கனும், கவனிக்கனும்ன்னு 90 வயசு பாட்டி கூட ஆசைப்படும்.  பக்கத்தில் இருக்கும் போது தப்பித்தவறி கூட அந்தப்பக்கம் இந்தப்பக்கம் பார்த்துடாதீங்க .  பக்கத்துல இருக்கும்போது வார்த்தைகளால பேசுறதை விட கண்களால் பேசுறதைதான் பொண்ணுங்க ரொம்ப விரும்புறாங்களாம்(90 வயசு பாட்டிக்கு காதலன் இருப்பானா?! அப்படியே இருந்தாலும் அதுங்களுக்கு கண்ணு தெரியுமான்னும் கமெண்ட கூடாது).

 மனம் கவரும் மாலைப்பொழுது:
 எப்பவும் தன்னோட ஆண், தன் பக்கத்துலயே இருக்கனும்ன்னு ஆசைப்பட்டாலும்!! அது அவ்வளவா சாத்தியமில்லியே! அதனால, முடிந்தவரை மாலை நேரத்துல தன் ஆண் தன்னோட இருக்கனும்ன்னு ஆசைப்படுவாங்க பெண்கள். கூடவே, மழைக்காலமும், சூடான டீயும், கூடவே நீங்களும் இருந்தாதுட்டா அந்த பொண்ணுக்கு ரொம்ப சந்தோசமாம்!! (ம்க்கும், லேசா தூறல் போட்டாலே, நாங்க பாட்டில் ஓப்பன் பண்ணிடுவோமே!ன்னு சொல்லுற ஆண்களும் இனி தொடர வேணாம்னுங்க)
                            

ஒரு நாள் சமைக்கலாம்:
 தினமும் பொண்டாட்டி கையல் சாப்பிட்டு பழகிய ஆண்கள் ஞாயிறு ஒருநாளாவது தன்னோட  கையால சமைச்சு மனைவிக்கு பரிமாறலாம். நீங்க நல்லா சமைச்சிருந்தா அதோட ரிசல்ட் அன்னிக்கு நைட்டே தெரியும் :-). (டெய்லி நாங்கதான் சமைக்குறோம். இதுல ஞாயிறு வேறயா?!ன்னு பொய் சொல்லி யாராவது கமெண்ட் போட்டா!! அந்த கமெண்ட் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அவங்க ஹவுஸ் பாசுக்கு அனுப்ப படும்!!)

 பரிசு கொடுப்பது:
என்னதான் கிரடிட் கார்டை தேச்சு ஸ்டார் ஹோட்டல்களுக்கு கூட்டி போனாலும், கண்ணை  பறிக்குற நெக்லஸை வாங்கித் தந்தாலும் அங்கலாம் நீங்க எப்படி அவங்களை கவனிச்சுக்கிறீங்கன்றதை பொறுத்துதான்  அவங்க திருப்தி அமையும். (இல்லாட்டி வீட்டுக்கு வந்ததும், அது நல்லா இல்ல, அந்த டிசைன் வாங்கித் தந்திருக்கலாம், உங்க அம்மாக்கு மட்டும் கேட்டு கேடு செய்வீங்களே!!ன்னு பாட்டுதான் கிடைக்கும்.)

பாதுகாப்பு உணர்வு:
எல்லா பெண்களும்  எப்பவுமே ஆண்களிடம்  எதிர்பார்ப்பது பாதுகாப்பு உணர்வைதானாம். பொது இடத்திலோ, தனிமையிலோ, அல்லது சோகத்துலோ இருக்கும்போது யாரை பற்றியும் கவலைப்படாமல் லேசாய் அணைத்து ஆறுதலாய் தோள் கொடுங்க(அதுக்காக, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்துல கம்ல் பண்ணுற மாதிரி கட்டிப்ப்ப்ப்ப்ப்ப்ப்பிடி வைத்தியம்லாம் வேணாம். மிக லேசான அணைப்புன்னுதான் சொல்லி இருக்கேன்.)

சின்னதாய் ஒரு கவிதை:
எப்ப பார்த்தாலும் உர்ர்ருன்னு இல்லாம அப்பப்போ  கவிதையா பேசனுமாம். ஒரே வீட்டில் இருந்தாலும்  மெயில் இல்லாட்டி செல்போன்ல மெசேஜ் பண்ணுங்க. சொந்தமா கவிதை எழுத வரலைன்னாலும்  காப்பியடிச்சாவது கவிதை அனுப்பலாம் தப்பில்லையாம். அதுலயும்  ஊடல் கொண்டாடும் நேரத்துல இந்த மாதிரியான கவிதை விடும் தூது நல்ல பலன் கொடுக்குமாம்( அதுக்காக, கண்மணி, மானே! தேனே!ன்னு ஓவரா வழியவும் வேணாம். அப்புறம் உண்மை என்னன்னு கண்டுபிடிச்சு பூரிக்கட்டையால வாங்க வாய்ப்புண்டு.)

அடிக்கடி பேசுங்க:
மனைவியை விட்டு வெளியூர் போய் இருக்கும்போது  செல்போனில் அடிக்கடி பேசுங்க.  அப்படி முடியாத நேரத்துல  ஐ லவ் யூ , ஐ மிஸ் யூ”  ஐ ம் பிசி.  கால் யூ லேட்டர்”ன்னு மெசேஜ் அனுப்புங்க. வேலை நேரத்துல கூட நம்ம நினைப்பு அவருக்கு வருது!!னு சந்தோசப்பட்டுக்குவாங்க. (மெனக்கெட்டு டெமேஜர்கிட்ட ஃபீல்டு வொர்க் வாங்கி வெளியூர் போறதே அவங்க நினைப்பு இல்லாம இருக்கத்தான். இது பொறுக்காம பேசனும், மெசேஜ் அனுப்பனும்”ன்னு மெசேஜ் சொல்றீங்களே ராஜி அக்கா! இது நியாயமா?!ன்னு  பிரகாஷ் முணு முணுக்குறது இங்க கேக்குது!!)

கை பிடித்துச் செல்லுங்களேன்:
  எங்காவது வெளியூர்களுக்கு போகும்போதுலாம் , கல்யாணம் ஆன புதுசுல எப்படி அவஙக் கையை பிடிச்சுட்டு ஊரை சுத்துனீங்களோ?! அதுப்போல உங்க வூட்டம்மா  கையை பிடித்துச் போங்க. அது மாதிரி கூட்டி போகும் போது  பாதுகாப்பு உணர்வை உணர்வதோடு, எத்தனை பெண்கள் இந்த உலகத்துல இருந்தாலும் அவர் என்னை மட்டுமே விரும்புறார்ன்னு பெண்களுக்கு தோணுமாம் (வெளியூருக்கு கூட்டி போறதே கூட்டத்துல தொலைச்சுட்டு வரத் தான். இதுல கையை வேற பிடிச்சுக்கனுமா?!ன்னு ரூபக் குமார் சண்டைக்கு வரப்போறார்.)

கட்டிப்பிடி வைத்தியம்:
காலையில  எழுந்ததும் காஃபி எங்கே?! என் சாக்ஸ் துவைச்சியா?! லேப்டாப் சார்ஜ் போட்டியா?! செல்போன்ல பேலன்ஸ் பார்க்க கூடாதா?! என் பிரஷை காணோம்ன்னு ஆம்புலன்ஸ் சைரன் மாதிரி கத்திக்கிட்டே படுக்கையை விட்டு எழுந்துக்காம, மனைவியை அன்பான அணைப்பு, சின்னதாய் ஒரு முத்தம், லைட்டா ஒரு புன்னகையோட குட் மார்னிங் சொல்லி பாருங்க. அப்புறம் அந்த நாள் முழுக்க இனிய நாள்தான்(அதுக்காக, ராஜி அக்கா! சொல்லிட்டாங்கன்னு காலைல அரிபுரின்னு வேலையா இருக்கும்போதோ இல்ல குட்டீஸ் இருக்கும்போதோ கட்டிப்பிடிச்சு உங்க மேல விழ வேண்டிய பூரிக்கட்டை என்மேல ரீடைரக்ட் பண்ணி விட்டுடுடாதீங்க சகோ’ஸ்.)

டிஸ்கி: முன்னலாம், மனசுக்கு தோணுறதை டைப் பண்ணி பதிவா போட்டுட்டு போய்க்கிட்டே இருப்பேன். ஆனா, இப்போ பாருங்க, எனக்கு, சகோன்ற பேருல எதிரிங்கலாம் அதிகமாயிட்டதால அவங்க என்ன கமெண்ட் போடுவாங்கன்னும் ஒரு மாதிரி ஜிந்திச்சு பதிவு போட வேண்டியதா இருக்கு :-(

Tuesday, July 23, 2013

மதுரை மாணவர்கள் இப்படியா?! ஐஞ்சுவை அவியல்

ஏய்  புள்ள! 


இங்க  வா,  கொஞ்சம் மஞ்சள் பொடி கொண்டு வா. காலில் அடிப்பட்டுச்சு. வலிக்குது...., ஆ, அம்மா! உயிர் போகுதே!

ஐயோ ! என்னங்க ஆச்சு?!   

கதவுல கால் மாட்டிக்கிச்சு. நகம் பேர்ந்து வந்துடும் போல இருக்கு, ரத்தம் வருகுது பாரு.

ம்க்கும். நானும் என்னமோ! ஏதோன்னு நினைச்சு ஓடி வந்தேன். இந்த சின்ன காயத்துக்கு இப்படி அலறுறீங்களே! நீங்கலாம் பொண்ணா பொறந்திருக்கணும்!!

நானே வலில துடிச்சிக்கிட்டு இருக்குறேன். நீ என்னடான்னா, இப்போ போய் பொம்பளைங்க பெருமை பத்தி பேசுறியே!!

அதுக்கில்ல மாமா! நம்ம மனுசங்க உடம்பு  45 யூனிட் வரை உள்ள வலியை மட்டுமே உணருமாம். ஆனா, பிரசவத்தின் போது ஒரு பெண் 57 யூனிட் வலியை உணருகிறாளாம். இது, ஒரே நேரத்தில், 20 எலும்புகள் உடையும் போது வர்ற வலிக்கு சமமாம்!!

ஓ அப்படியா! சரி உன் ப்ரெண்ட் ராஜி தன் பொண்ணை பார்க்க சென்னை போனாளே என்ன சொன்னா?! தூயா நல்லா இருக்காளா?!

ம்ம் நல்லா இருக்காளாம். ஜூலை 19 அவளுக்கு பொறந்த நாள் அதனால ராஜி தூயாக்கு ஒரு ஆண்ட்ராய்டு மொபைல் போன் வாங்கி தந்திருக்கா. KFCல போய் கிரில் சிக்கன் சாப்பிட்டு வந்திருக்கா. அப்படி இருக்கு, இப்படி இருக்குன்னு ஒரே பெருமைதான். நாமளும் ஒரு தரம் நம்ம சின்ன மண்டையனை கூட்டி போய்சாப்பிட்டு வரணும் மாமா!

உன் ஃப்ரெண்ட் தான் லூசு போல கண்டதையும் சாப்பிட்டு உடம்பை பாழ் பண்ணிக்கிட்டா நாமளும் பண்ணிக்கனுமா?!  வெளிநாட்டுல இருந்த இந்தக்கடைங்க இப்போ நம்ம இந்தியாவுல பெரிய பெரிய டவுன்ல லாம் வந்துடுச்சு. பெரு நகரங்கள்ல இப்போ இருக்குற இளசுகள்ல முக்காவாசி பேர்  KFCல சிக்கன் சாப்பிட்டலைன்னா தன்னை யாரும் மதிக்க மாட்டாங்கன்னு நினைச்சுக்கிட்டு ஃப்ரெண்ட்ஸ், பார்ட்டி, லவ்வர்ஸ்ன்னு அங்கதான் போய் குமியறாங்க. இப்போ, ஓரளவுக்கு நடுத்தர வர்க்கத்து ஆளுங்க கூட போக ஆரம்பிச்சுட்டாங்க. 

ஹாம்ப்சயர்ன்ற யூனிவர்சிட்டில ஒரு ஆய்வு நடத்தி இருக்காங்க. அதுல
KFC பத்தி அதிர்ச்சியான பல விசயங்கள் வெளி வந்திருக்கு.  

KFCகாரங்க, நாம சாப்புடுற பிராய்லர் கோழியை யூஸ் பண்ணுறதில்லை!!   மரபணு மாற்றம் செய்யப்பட்ட கோழியைதான் யூஸ் பண்றாங்க. ஆனா, அதை கோழின்னு சொல்ல முடியாதாம். ஏன்னா, இவங்க ஸ்பெஷலா வளர்க்குற கோழிகளுக்க்கு அலகு, இறக்கை, கால்கள் கொஞ்சமதான் இருக்குமாம். கறி அதிகமா வேணும்ங்குறதுக்காக எலும்பு மெல்லிசா இருக்குற மாதிரி இந்த கோழிலாம் மாற்றம் செஞ்சிருக்காங்க.  




அந்த கோழியோட உடம்புல ஃபிக்ஸ் பண்ணி இருக்குற டியூப் வழியாதான் கோழிக்கு தேவையான சத்துலாம் போகுதாம். இந்த மாதிரி வளர்க்க செலவும் கம்மியாதான் ஆகுதாம். 

இந்த கோழிகள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்காது. இறகுகள் இல்லாததால சூரிய வெளிச்சம்லாம் இதுக்கு ஆகாதாம்!! சீக்கிரம் தொத்து நோய்களுக்கு ஆளாகிடுமாம்!!. அதனால, இதை  அமெரிக்க உணவு கட்டுப்பாட்டுக்கழகம்  ”கோழி” ன்னு சொல்லக்கூடாதுன்னு எச்சரிக்கை விட்டிருக்காங்களாம். இப்படி ஆபத்தான KFC சிக்கனை சாப்பிடதான் வேணுமா புள்ள?!

வேணவே வேணாம் மாமா!  நம்ம வீட்டுல வளர்க்குற கோழியைவே அடிச்சு சாப்பிட்டுக்கலாம். சரி மாமா!  ஏனுங்க மாமா! உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா?! பக்கத்து வீட்டு பையன் 6வது தான் படிக்குறான். அவன் அப்பாவோட லேப்டாப்புல ஏதோ பார்க்க கூடாத படத்தை பார்த்துட்டானாம். அதுக்கு அவன் அப்பா, பெல்ட் எடுத்து வாங்கி எடுத்துட்டாரு,

ஐயோ பாவம்! அந்த குழந்தை மேல தப்பில்ல புள்ள! இப்போ பெரும்பாலும் எல்லார் வீட்டுலயும் கம்ப்யூட்டர் இல்லாட்டி லேப்டாப் இருக்கு. அவங்கலாம்  பல தகவல்களை Google ல  தேடும் போது யதேச்சைவோ இல்லாட்டி  ஸ்பெல்லிங் மிஸ்டேக்குனாலயோ இதுப்போல  ஆபாசமான தகவல்கள், மற்றும் படங்கள்  வந்து தர்ம சங்கடத்தை குடுத்துடுது. பெரியவங்க இது தப்புன்னு ஒதுங்கி வந்துடுறோம். ஆனா, குழந்தைகள் ஏதோ ஒரு ஆர்வத்துல அதை பார்க்குறாங்க. அதனால நாம் வூட்டுல  இல்லாத போது குழந்தைகள் இதெல்லாம்  பார்க்காம இருக்க 

 முதல்ல  கூகிள்க்குள்ள போய்  நம்ம  User name, password கொடுத்து Login செஞ்சுக்கனும். அப்புறம்,  settings ல போய் search settings click பண்ணனும் இல்லாட்டி   http://www.google.com/preferences ஓபன் பண்ணி, Safe serrch Filtering போய் நமக்கு  தேவையானதை  நிறுவிக்கனும்.

அடுத்து Safe SearchFiltering கீழே உள்ள Lock safe search கிளிக் செஞ்சுக்கனும். Locking Process நடக்கும். அப்புறமா  Safe search Locked ன்னு அரும்.  சரியா Lock ஆகலைன்னா மறுபடியும்  ஒரு முறை சென்று Lock safe search கொடுங்க. அவ்வளவுதான் இனி ஆபாசம் சம்மந்தமான எந்த தகவலும் நமக்கு வராது. இதுக்கு பிறகு google search பக்கத்துல நீங்க Lock செய்த அடையாளமா வண்ண பந்துகள் அடையாளமா இருக்கும் . நீங்க இதனை Unlock செய்ய மீண்டும் Search setting போய் unlock ன்னு மாத்திட்டா போதும் புள்ள.
       
இவ்வளவு வசதி இருக்கா. நான் கூட அந்த பையனை தப்பா நினைச்சுட்டேன் மாமா!
                         

இந்த காலத்து பிள்ளைங்கலாம் சூட்டிகை. அவங்களை நல்ல வழிக்கு கூட்டி போறதும், கெட்ட வழிக்கு கூட்டி போறதும் நம்ம கைலதான் இருக்கு. கிழிஞ்ச ஜீன்ஸ், செல்போன், சூயிங்கம்ன்னு அரட்டை அடிக்குற நம்ம ஊரு பிள்ளைகளுக்கு மத்தியில் மதிரை மாவட்டத்துல இருக்குற  டி.கல்லுப்பட்டின்ற ஊருல  காந்தி நிகேதன் மேல்நிலைப் பள்ளில படிக்குற பசங்களோட யூனிஃபார்ம். வேட்டி சட்டை தான் ! இந்த இஸ்கோலு இந்தியா சுதந்திரம் வாங்குறதுக்கு 4 நாள் முன்னாடி ஆரம்பிச்சிருக்காங்க. இந்த இஸ்கோலு பசங்கலாம் போறதும் வர்றதையும் பார்க்குறதுக்கு எதோ அரசியல் கட்சி ஊர்வலம் போல இருக்கு. 

அந்த வேட்டி சட்டைகூட ஏதோ  சாரதி வேட்டியோ, பாலியெஸ்டர் வேட்டியோ இல்ல!! கதர் வேட்டிதான்.  வேட்டிகளைத் துவைக்க கதர் சோப் செய்யுற  முறையையும் பள்ளியிலேயே கத்துக்குடுக்குறாங்க, பள்ளியில் ஆசிரியைகளை 'அக்கா’ன்னும்,ஆசிரியர்களை 'ஐயா’ - ன்னு உறவு சொல்லிதான் பசங்க கூப்பிடுறாங்க. பசங்க வேட்டி சட்டை போல பொண்ணுங்களுக்கு தாவணிதான் யூனிஃபார்ம். சின்ன குழந்தைகள் கூட வாரத்துல மூணு நாளைக்கு கதர் துணிதான் போட்டுக்குறாங்க.

திங்கள் கிழமைல நடக்கும் கொடி வணக்கத்தின்போது, பல்வேறு தேச பக்திப் பாடல்களை பசங்க பாடுறாங்க .புதன்கிழமைல நடக்கும் சர்வ சமயப் பிரார்த்தனைக் கூட்டத்துல பைபிள், பகவத் கீதை, குர்ஆன், திருக்குறளையும் போன்ற நூல்களை வாசிச்சு அர்த்தம் சொல்லுறாங்களாம்!! ஒழுக்கத்துக்குப் பேர் போன பள்ளியாம் இது காலாண்டு, அரையாண்டுப பரிட்சையின் போது பசங்களை கண்காணிக்கவே தேவை இல்லியாம். காப்பி அடிக்காமல் சுய ஒழுங்கைக் கடைப்பிடிப்பாங்களாம்.

ஓ இப்படி கூட ஒரு இஸ்கோலு இருக்காமா!? நம்ம சின்ன மண்டையனை அங்க போய் சேர்த்துடலாமா மாமா?!


ஏன் புள்ள!? அவன் இங்கயே இருக்கட்டுமே! அவனோட வீட்டு பாடத்தையெல்லாம் நான் சொல்லி குடுக்குறேனே. மதுரைல கொண்டு போய் விட்டுட்டா எப்படி?!

ம்க்கும் உங்க லட்சணம் என்னன்னு தெரியாதா எனக்கு?!   நாலும் எட்டும் எத்தனைன்னு கேட்டா  கூட்டி சொல்ல ஒரு வாரமாகுமே!

ஏய்! என்னை பத்தி என்னடி நினச்சுக்கிட்டு இருக்கே?! அன்னிக்கு எதோ யோசனையில இருந்துட்டேன். அதனால பதில் சொல்ல முடியலை. சரி, இப்போ எதாவது கேளு டான்ன்னு பதில் சொல்றேனா பாரு?! இல்லாட்டி ஒரு பக்கத்து மீசையை எடுத்துடுறேன்.

ஓ சவாலா?! ஒரு ராஜாவின் அரண்மனையில் ஒரே மாதிரியான 24 செம்பு காசுகள்ல ஒரு தங்க காசு கலந்துட்டது.  அதை எப்படி  பிரிச்சு எடுக்குறது?! ன்னு  ராஜாவுக்கு குழப்பம்.  ராஜாகிட்ட  ஒரு தராசு மட்டும் தான் இருக்கு . அமைச்சர் உடனே விடை சொல்லிட்டார் அந்த விடை என்னன்னு நீங்க சொல்லுங்க பார்க்கலாம்!! 

ஹா! ஹா! ப்ப்ப்ப்ப்ப்பூ இவ்வளவுதானே! இரு இந்த ஃபோன் காலை அட்டெண்ட் பண்ணிட்டு வந்து சொல்லுறேன்.

பதில் சொல்லாட்டி ஒரு பக்கத்து மீசையை எடுக்கலைன்னா என் பேரை மாத்திக்குறேனுங்க மாமோய்!!

Monday, July 22, 2013

திறக்காத காட்டுக்குள்ளே...,

           
 உன்னோடு கை கோர்த்து நடக்க பழக
ஆசை பட்டதிலிருந்து தெரிந்திருக்க வேண்டும் ,
உனக்கான என் கோபங்களை விட்டு கொடுத்ததிலிருந்து
தெரிந்திருக்க வேண்டும் ,

உன்னோடு உரையாடுவதற்காக என் நொடிகளை
எண்ணி கொண்டு இருக்கும் போதாவது
தெரிந்திருக்க வேண்டும்,
இன்னொரு பெண்ணை பற்றி என்னிடம்
பேசும் போது எனக்கு வந்த கோபத்தில்லாவது
தெரிந்திருக்க வேண்டும்,

உனக்கு பிடித்த பாடல் என்பதால் அதே பாடலை
ஒன்றுக்கு பத்து முறை
நான் கேட்ட போதாவது தெரிந்திருக்க வேண்டும் ,


அப்பொழுதெல்லாம் தெரியாத
உன் மீதான என் காதல்
இதோ இப்பொழுதாவது
உனக்கு தெரிகிறதா ?

இல்லை ...,
அவை எல்லாம்
ஆள்நடமாட்டமில்லாத காட்டில்
கொட்டும் அருவியை போல்
பயனற்றதாய் போய்விட்டதா?

Saturday, July 20, 2013

என் காதல் - திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி





என்னை மொத்தமாய் களவாடிய ஆறடி ராட்சசனே!

என்னை நீ களவாடிய தருணம் எப்போன்னு சிந்திச்சு பார்க்குறேன்!! பல்வேறுப்பட்ட உணர்ச்சிகள் முட்டி மோதும்போது வார்த்தைகளை தேடி தேடி எடுக்க வேண்டி இருக்கு!! முதல் காதல் கடிதம் எழுதும் எல்லாருக்கும் இப்படியா?! இல்லை எனக்கு மட்டும் இப்படியா?! புதிதாய் பிறந்த கன்னுக்குட்டி  நடைப் பயில ஆரம்பிப்பதை போல இப்படி தத்தி தடுமாறுதே என் பேனா!!

எங்கு தொடங்கி, எங்கு முடிப்பது?! கேசத்தில் ஆரம்பித்து..., கண், உதடு, கழுத்து என பயணப்பட்டு பாதத்தில் முடிக்க வேண்டுமே!! அதனால, என் கடிதம் கண்டிப்பா ரொம்ப நீளமாதான் இருக்கும். படிக்க சோம்பேறித்தனம் படாதே!!

ஆசை மொழியானாலும், சண்டையானாலும் நான் சொல்ல வரும் கருத்துக்களை, என்னை முந்திக் கொண்டு அழகான வார்த்தைகளால் கூறிவிடுகிறாய்...., "அந்த புரிதல்"

கண்களும், நினைவுகளும் திறந்திருக்கும் வேளையில் மட்டுமல்ல, அவை மூடியிருக்கும் வேளையில்கூட விலகாமல் இருக்கும் ”உன் நினைவு”


என் உணர்வுகள் அனைத்தும் உன் தோளில் மட்டுமே இளைப்பாறவேண்டும்என்று எண்ணும்  “உன் கோரிக்கை. ”

ஆனால் நீ மட்டும் உன் உணர்வுகளை என்னிடம் பகிராமல் இருக்கும் ”உன் அகங்காரம்”


என் வாழ்க்கைத் துணைக்கான அத்துனை தேடல்களின் இடத்தையும்ஆக்கிரமித்த  “ உரிமை.”
உன்னோடு நானும், என்னோடு நீயும் இருக்கும்போது நாமாகிப் போனோமேஅந்த  “பன்மை”


எல்லாரையும் போலதான் நமக்குள் சண்டை வருகிறது. எல்லாரையும்போலதான் சமாதானமும் ஆகிறோம், ஆனால், சமாதானமாக யார் விட்டுக்கொடுப்பதென நீளும் ” சண்டை ”  

நாமிருவரும் சந்திக்கையில் நாம் பேச இயலா சூழலில் இருந்தால், நமக்குமுன்நம் கண்கள் பேசிவிடும் அந்த கண்களின் ”மொழி”.

கண்ணுக்கெட்டாத தூரத்தில் நீ இருந்தாலும், என் கைவிரல்களில் இருக்கும் உன் வாசம்


பொறாமைக்கோ , கர்வத்திற்கோ துளிகூட நம்மிடம் இடமில்லை. வேறென்னவேண்டும் வாழ்வில்?! 


என் உயிரோட்டம் எதனால் நிகழ்கிறது என்று எனக்கு தெரியாது. ஆனால்அத்துணைக்கும் நீயே காரணம் 

இனி உன்னிடம் பேசவே மாட்டேன் என முடிவெடுத்து தொலைப்பேசியைவைத்த சிறிது நேரத்தில், மீண்டும் தொலைப்பேசியில் அழைத்து மாத்திப்பண்ணிட்டேன் என வழிகையில் , புரிந்துக் கொண்டு அமைதியாய் சிரிக்கும் உன் குறுஞ்சிரிப்பு 
 
என்னடா? இது சம்பந்தம், சம்பந்தமில்லாமல் எழுதி இருக்கான்னு குழப்பமா இருக்கா?! உறவில் குழப்பம் வந்தால் பிரிவு வரும். என் எழுத்தில் குழப்பம் வந்தால் மீண்டும் படி என்மீது காதல் வரும்.., இதில் நிறைய மெய்யும், கொஞ்சூண்டு பொய்யும் கலந்திருக்கும். காதல் மனசுக்குள் வந்துட்டாலே பொய்யும் சேர்ந்து வருமா?! இலவச இணைப்பு போல?! இனிப்பில் கொஞ்சூண்டு உப்பு சேர்த்தால்தன் அந்த பலகாரம் சுவைக்கூடும் அதுப்போல மெய்யோடு கொஞ்சம் பொய் கலந்தால்தான் காதலில் சுவை கூடுமாம்.

சிறு வயதிலேயே ஆரவாரமாய் பிறந்துவிட்டது உன் மீதான் என் காதல்!! கொட்டும் மழையில் நம்மோடு நனைந்தது என் காதல்!! இதமான தென்றல் காற்றோடு, சூடான காஃபியுடன் வந்து நம்மோடு கைக்குலுக்கியது என் காதல்!!

ஆர்ப்பரித்து கொட்டும் அருவியின் இரைச்சலோடு தன் குரலை சேர்த்துக் கொண்டது என் காதல்!! ஐஸ்கிரீம் ஜில்லிப்பில்..,, கால்களை தவழும் அலையில்.., புத்தக வாசனையில்.., மயிலிறகு மென்மையில்..., என எல்லாவற்றிலும் கலந்து.., என் உயிரிலும் கலந்து விட்டது என் காதல்!!


 உன் மீதான என் காதலால் வில்லொடித்த ராமன் மனநிலையை ஒத்திருந்தது என் நிலை.  வார்த்தை கற்களை வீசி உன்னை காயப்படுத்தினாலும் சிறு புன்னகையால் அதை கடந்து போகும் உன் அமைதியை நினைத்து பார்க்கிறது என் மனம்...,

கரம் கோர்த்து என் மடி சாய்ந்து கதை பேசிய  நினைவுகளில் முகிழ்கிறதென்
தாவணி பருவ நாட்கள்.  தடதடத்து ஓடிய எக்ஸ்பிஷன் ”டோரா டோரா”வில் சுத்தும்போது பயந்து உன் தோள் சாய்ந்து கட்டிக்கொண்டது இன்னும் மனதில் நிழலாடுது. அப்ப, ஆதரவாய் நீ பற்றிய கரங்களுக்குள் தாயின் பாதுகாப்பில் இருப்பதை உணர்ந்தேன்.  நமக்கு மட்டுமே தெரிந்த அந்த மூணெழுத்து வார்த்தை நீ உச்சரித்த போதெல்லாம் என் சோர்வெல்லாம் நீங்கி மான்குட்டி, முயல்குட்டி  போல துள்ளிய மர்மமென்ன?

சொர்க்கத்தையே காண நேர்ந்தாலும் அது பற்றி அக்கறை படாமல் ஒதுங்கி  இருந்த உம்மனாமூஞ்சியான நான்,  எந்த நிமிடம் நீ என்னுள் நுழைந்தாயோ, அந்நொடியிலிருந்து பட்டாம்பூச்சியிலிருந்து பராக் ஒபாமா வரை  ரசிச்சு பகிர்ந்துக்கொள்ள ஓடோடி வருவேன் உன்னிடம்..,

கைக்கு பேனா கிடைக்கும் போதெல்லாம் நம் பெயரை FLAMES போட்டு பார்த்து L இல்லாட்டி M வந்த பேப்பரெல்லாம் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். ஏதோ இதிகாசம் படைத்த இறுமாப்பில்!! தலைக்கோதிய உன் ஸ்பரிசத்திலும், வஞ்சையான உன் பேச்சிலும் உன் கால்சுற்றும் உன் வீட்டு நாய்க்குட்டியானது என் பெண்மை. இதுப்போன்ற கனவுகள் எல்லாமே அழகாய்த்தானிருந்தது!!!

எல்லாவற்றிலும் கலந்து உலகையே ரசிக்க வைத்த என் காதல்.., திருவிழா கூட்டத்தில் தொலைந்த குழந்தையாகிவிட்டது போலும்?!உரிமையில்  நீ கொட்டிய சந்தேக மொழியில் சவமாய் போனதா?! இல்லை பணிச்சுமையினால் நேரமின்மையால் நொண்டியாகிவிட்டதா?!வாழ்க்கை ஓட்டத்தில் வழுக்கி விட்டதா?!அல்லது பழக பழக பாலும் புளிக்கும் என அலுத்துவிட்டதா என் காதல்?! எங்கே போயிற்று?! என்னவாற்று என் காதல்?!


புல்வெளியில், ஆகாயத்தில், அழகில், அருவெறுப்பில், வலியில், மகிழ்ச்சியில், இணையத்தில், தமிழில், புத்தகத்தில், வண்ணப்பொடிகளில்........,என அகிலமெங்கும் தேடி தேடி பார்க்கிறேன்! ஆனால், கிடைக்கவே இல்லை என் காதல்!!


காற்று உன் பக்கம் வீசியது போலும்!! அவ்வளவு சீக்கிரம் என் காதல் காற்றோடு காற்றாய் கரைந்து காணாமலே போனது!!  காடு, மலை, நாடு, நகரமெங்கும் தேடி அலைகிறேன். என் காதலை போல பல காதல்கள் கைக்கு சிக்குகிறதே தவிர, என் காதல் மட்டும் சிக்கவே இல்லை.

சலிக்காமல் நானும் தேடுவேன்..., என் இறுதி  மூச்சு வரை மழலை சிரிப்பில், ஒலிக்கும் மெல்லிசை பாடலில்,  ரசிக்கும் கவிதை வரியில், யாரோ!! யாரையோ விளிக்கும் ஒற்றை வார்த்தையில், சிவக்கும் கைவிரல்  மருதாணியில்,  மொறு மொறு தோசையில்...., என என்றாவது ஒரு நாள்  சிக்காமலா போகும் என் காதல்?!

அதுவரை.....,

வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் சேர்த்தும் தாய் உண்பதை போல.., உனக்கும் சேர்த்து நான் காதலித்து விட்டு போகிறேன் ”என் காதலை”!! 


என் காய்ச்சலின் சூட்டை உன் உடம்பிலும், உன் காயத்தின் வலியை என் மனதிலும் உணர்ந்து அழுத தருணங்களும்....,  தோல்வியின் போது சாயும் தோளையும், வெற்றிக்காக குலுக்கிய கைகளும்...., பரிமாறிய கணங்கள் என் வாழ்வின் வசந்த காலங்கள் என் இருவரும் சொல்லிக் கொண்டது உண்மையென்றால்......,

என் மரணத்திற்குள் கிடைத்து விடும் ”என் காதல்”



 அதுவரை..............,


காத்திருப்போடு...........,


”உன்” ஜில்லு.



டிஸ்கி:  ஐயா சீனு! உனக்கும், எனக்கும் எந்த ஜென்மத்திலோ ஏதோ பகை இருக்கும் போல. அது இந்த ஜென்மம் வரை தொடர்ந்திருக்கும் போல!! இல்லாட்டி   உன்னோட இந்த போட்டி  ஏன் என் கண்ணுல பட்டு தொலையனும்?! படிச்ச மூணாப்பு படிப்பு பரிட்சைக்கு கூட இப்படி கண்விழிச்சு மண்டையை உடைச்சுக்கிட்டு ஜிந்திக்கலை. அதனால, மத்த கடிதத்தையெல்லாம் படிக்காம சட்டு புட்டுன்னு எனக்கே பரிசை குடுத்துடுங்க. தலைவலிக்கு காஃபி பொடி, பால், தைலம் வாங்கவாது உதவும்!!

நீங்க குடுத்த 3 தலைப்புல நான் எடுத்துக்கிட்டது உங்கள் காதலன் அல்லது காதலிக்கு   நீங்கள் எழுதிய காதல் கடிதம்.  தான்.