Wednesday, August 29, 2018

ராஜாராணி குளம் (ஆர்க்காடு) - மௌனச்சாட்சிகள்

ஆற்காடு அருகே ஆற்காடு நவாப் மன்னர்கள் வாழ்ந்து வந்த இடத்துல கோட்டையின் மிச்சம் மீதியான ராஜாராணி குளம் இருக்குன்னு கேள்விப்பட்டிருக்கேன். ஆற்காடுக்கு போக வேண்டிய வாய்ப்பு வந்ததும் ராஜாராணி குளத்துக்கு போய் வரனும்ன்னு முடிவு செஞ்சு, இயர்போன்ல இளையராஜாவை ஒலிக்க விட்டு வண்டிய 60ல விட்டேன். 60ல போகலாமான்னு திட்டாதீக. ரொம்ப நாள் ஆசை.. ஹைவேஸ்ல வண்டில இயர்போன்ல பாட்டு கேட்டுக்கிட்டு ஸ்பீடா போகனும்ன்னு..  அங்கங்க விசாரிச்சு பல எதிர்பார்ப்போடு கோட்டைக்கு சாரி கோட்டை இருந்த இடத்துக்கு போய் சேர்ந்தேன். நான் போனதும்,   ‘ராஜாதி ராஜ, ராஜ கம்பீர, ராஜ மார்த்தாண்ட, ராஜகுல திலக, ராஜ குலோத்துங்க, ராஜ பராக்கிரம...’’ என  கட்டியம் ஒலிக்க என்னை வரவேற்க ஆற்காடு நவாப் வம்சாவளியினர் யாராவது வருவாங்கன்னு பார்த்தேன். ப்ப்ப்ப்ப்ப்ச்ச்ச்ச்ச்ச் யாரும் வரல :-(



ஆல் மரங்கள் நிறைந்த காடுகளை கொண்ட ஊர்ங்குறதால ஆல்+காடு=ஆல்காடுன்னு அழைக்கப்பட்டு இப்ப ஆற்காடு ஆனதாகவும், சோழ மன்னனுக்குரிய ஆத்தி என்கிற ஆர் மரங்கள் நிறைந்த காடுகள் இருந்ததால் இப்பகுதிக்கு ஆர்+காடு=ஆர்காடு என அழைக்கப்பட்டு இப்ப ஆற்காடு என அழைக்கப்படுது. இந்த ஆற்காடு சென்னை டூ பெங்களூர் நெடுஞ்சாலையில் இருக்கு. இந்த ஊரில் மக்கன் பேடா என்னும் இனிப்பு வெகு பிரசித்தம், கூடவே பிரியாணியும்....

குடியிருப்புகளின் மத்தியில் தனியே தன்னந்தனியாய் நான் காத்து காத்து கிடந்தேன்னு சோலோவா நின்னிட்டு இருக்கு ராஜாராணி குளம். சாக்கடை நாத்தத்தை பொறுத்திக்கிட்டு சின்ன வாய்க்காலை கடந்து அந்த பக்கம் போனால்.....  என் மண்டைக்குள் காலியா கிடக்குற மாதிரி அத்துவான காடா இருக்குறதால தனியா போக பயமா இருக்கு. யாராவது என் கைய பிடிச்சுக்கிட்டு என் கூடவே வாங்கப்பா ப்ளீஸ்...


இந்த இடம் இப்ப தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்குதாம். அப்படின்னு யார் சொன்னதாம்?! ம்ம் அங்க இருக்க போர்ட் சொல்லுதுப்பா. வாழ்ந்து கெட்ட குடும்பம்ன்ற வார்த்தைக்கு இலக்கணமா இந்த ராஜா ராணி குளம் இருக்கு. கிட்டத்தட்ட 2 ஏக்கரா நிலத்தில் இருக்கும் இந்த இடத்தை நம்மாளுங்களை நம்பி விடமுடியாதுன்னு வேலி போட்டு பாதுகாக்குறாங்க. சமீபத்துலதான் மழை பெய்திருந்ததால் புல், பூண்டுலாம் செழிச்சு வளர்ந்திருந்தது. அதனால், அங்க மாடுகளை கொண்டு வந்து மேய விட்டிருக்காங்க.  அந்த காலத்தில் குதிரை, யானைகள்லாம் இருந்திருக்கும்ல! இப்ப மாடுகள்தான் இருக்கு. அந்த மாடுகளை பார்க்க ஒரு எருமைமாடு போய் இருக்குன்னுலாம் கிண்டலடிக்கக்கூடாது.
இந்த இடத்தின் வரலாற்றினை சொல்ல ஆளுமில்ல. எந்த குறிப்புமில்லை. வெறும் படத்தை வச்சு பதிவு தேத்தலாம்ன்னு பார்த்திட்டிருந்த வேளையில் ஆற்காடு நவாப்களை பத்தின புத்தகம் கைக்கு கிடைச்சது. அதிலிருந்து கிடைச்ச தகவல்களை கொண்டுதான் இந்த பதிவு. 

கலிபா உமர் இப்னு அல் கத்தாப் அவர்களின் வழிவந்தவர்கள்தான் ஆற்காடு நவாப்கள். இவர்கள் 1692 ஆம் ஆண்டு மொகலாய சக்கரவர்த்தி ஔரங்கசீப்பால் கன்னட தென்னிந்திய பகுதிகளில் வரிவசூல் செய்ய இவர்கள் நியமிக்கப்பட்டனர். இவ்வாறு நியமிக்கப்பட்ட முதல் நவாப் சுல்பிக்கார் அலி . இவர் மராத்திய, விஜயநகரப் பேரரசுகளை முறியடித்தார். மேலும் தனது ஆட்சிப்பகுதியை கிருஷ்ணா ஆறு வரை பரப்பினார். பின்பு வந்த நவாப் தோஸ்த் அலி (1732–1740) என்பவர் தனது அரசை 1736 இல் மதுரை வரையில் விரிவுபடுத்தினார்.
முகம்மது அலி வாலாஜா
அதன்பின்னர் முகம்மது அலி வாலாஜா என்பவர் ஆட்சிக்கு வந்தார். நவாப் அரசர்களில் மிக முக்கியமானவர் இவர்.  இவரது காலமே நவாப்களின் பொற்காலம்ன்னு சொல்றாங்க. இவரது ஆட்சி மிகவும் அமைதியாகவும், சமய சகிப்புதன்மை உள்ளதாகவும் இருந்ததாம். இவர், அரண்மனையிலேயே உண்டு களிக்கும் ராஜாக்கள் போலில்லாமல், தனது நாட்டின் அனேகமான பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டதோடு, தன் கட்டுப்பாட்டிலிருந்த அனைத்து கோவில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்களுக்குலாம் மதம், இனம்  பாரபட்சமில்லாம நன்கொடைகளை அளித்தார். இன்றைய திருச்சிராப்பள்ளி ஸ்ரீரங்கம் நகரில் உள்ள ஸ்ரீரங்கநாதர் ஆலயமும், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயமும் அவற்றில் முக்கியமானதாகும். இவர் 1765 இல் முகலாயப் பேரரசிற்கு கப்பம் கட்டுவதை மறுத்து, நவாப் ஆட்சியை சுதந்திர அரசாக அறிவித்தார்.




இதன்பிறகு இவர் தன்னை காத்துக்கொள்ளும் பொருட்டு பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியுடன் நட்புறவை மேற்கொண்டார். தனக்கு கீழ் உள்ள சமஸ்தானங்களை கட்டுப்படுத்த இவர்  ஆங்கிலேய கம்பனி படைகளை உபயோகப்படுத்தினார். மேலும் இவர் பிரெஞ்சு – ஹைதர் அலி கூட்டு படையை எதிர்க்க ஆங்கிலேயற்கு ஆதரவாக போரிட்டார். இதன் காரணமாக இந்திய சுதந்திர உணர்விற்கு எதிரானவர் என்ற தோற்றத்தைப் பெற்றதோடு தனது அரசாட்சியின் பெரும்பகுதியை கிழக்கிந்தியக் கம்பனியிடம் இழந்தார்.


பதின்மூன்றாவது நவாபாக ஆட்சிக்கு வந்த குலாம் முகம்மது கவுஸ் காண் ( 1825–1855 ) தனக்கு பிறகு வாரிசு இல்லாமல் இறந்தார். இதனால் அவரது ஆட்சி ஆங்கிலேய அரசின் கீழ் சென்றது. இதன் பிறகு 1867 இல் குலாம் முகம்மது கவுஸ் கானின் சிறிய தந்தை ஆஸிம் ஜா, பிரித்தானிய மகாராணி விக்டோரியாவிடம் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டார். அதன்படி நவாப் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரி வசூல் செய்யும் உரிமையை ஆங்கிலேயர் பெற்றனர். அதற்கு பதிலாக வரிவசூலில் ஒரு பகுதியை ஓய்வுதியமாக ஆஸிம் ஜா பெற்றார். மேலும் ஆர்காடு இளவரசர் என்றும் அங்கீகரிக்கப்பட்டார்.



முதலாம் கர்நாடகப் போர் 1746–1748 காலகட்டத்தில் நடைபெற்றது. ஆற்காடு நவாப், ஐதராபாத் நிசாம் போன்ற இந்திய ஆட்சியாளர்களிடையே ஏற்பட்ட மோதல்களில் பிரித்தானிய மற்றும் பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனங்கள் தலையிட்டு வந்தன. முகலாயப் பேரரசு வலுவிழந்த பின்னர் கர்நாடகப் பகுதி டெல்லி ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி சுதந்திரமாகச் செயல்படத் தொடங்கியது. பெயரளவில் ஐதராபாத் நிசாம் இப்பகுதியை ஆண்டு வந்தார். ஆனால் உண்மையில் நவாப் தோஸ்த் அலியின் கட்டுப்பாட்டில் கர்நாடகப் பகுதிகள் இருந்தன. அவரது மரணத்துக்குப்பின் யார் இப்பகுதியை ஆள்வது என்பது குறித்த பலப்பரீட்சை உருவானது. 


நிசாமின் மருமகன் சந்தா சாகிபும் ஆற்காடு நவாப் அன்வாருதீன் முகமது கானும் கருநாடக நவாப் ஆக முயன்றனர். இருவருக்குமிடையே மூண்ட போரில் சந்தா சாகிப்புக்கு ஆதரவாக பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பனியும், ஆற்காடு நவாப்புக்கு ஆதரவாக பிரித்தானிய கிழக்கிந்திய கம்பனியும் களமிறங்கின. 1748 இல் ஐரோப்பாவில் மூண்ட ஆஸ்திரிய வாரிசுரிமைப் போரின் பகுதியாக தென்னிந்தியாவிலும் இரு ஐரோப்பிய நிறுவனங்களும் மோதின. ஆளுனர் டூப்ளேயின் பிரெஞ்சுப் படைகள் 1746 இல் சென்னையை பிரித்தானியரிடமிருந்து கைப்பற்றின. அடுத்து நடைபெற்ற அடையார் சண்டையில் ஆற்காடு நவாபின் படைகளைத் தோற்கடித்தன. 1748இல் ஐக்ஸ் லா ஷப்பேல் ஒப்பந்த்தின் மூலம் ஐரோப்பாவில் போர் முடிவுக்கு வந்ததை அடுத்து, தென்னிந்தியாவிலும் அமைதி திரும்பியது.

இரண்டாம் கர்நாடகப் போர் 1749-54 காலகட்டத்தில் நடைபெற்றது. இரு வாரிசுரிமைச் சச்சரவுகள் இதற்குக் காரணமாக அமைந்தன. 1748 இல் ஐதராபாத் நிசாம் நிசாம்-உல்-முல்க் இறந்தார். அவரது மகன் நசீர் ஜங்கும் பேரன் முசாஃபர் ஜங்கும் அடுத்த நிசாமாகப் போட்டியிட்டனர். அதே வேளை சந்தா சாகிப் ஆற்காடு நவாபாக முயன்றார். முசாஃபர் ஜங்கும் சந்தா சாகிப்பும் பிரெஞ்சு ஆதரவைப் பெற்றிருந்தனர். நசீர் ஜங்கும் ஆற்காடு நவாப் அன்வாருதீனும் பிரித்தானிய ஆதரவைப் பெற்றிருந்தனர். போரின் தொடக்கத்தில் பிரெஞ்சு தரப்புக்குத் தொடர் வெற்றிகள் கிட்டின. அன்வாருதீன் 1749 இல் கொல்லப்பட்டார். சந்தா சாகிபும் முசாஃபர் ஜங்கும் முறையே கர்நாடக நவாபாகவும் ஆற்காடு நவாபாகவும் பதவியேற்றனர். ஆனால் 1751 இல் ராபர்ட் கிளைவ் தலைமையிலான பிரித்தானியப் படைகள் ஆற்காட்டைக் கைப்பற்றின. 1754 இல் கையெழுத்தான பாண்டிச்சேரி ஒப்பந்தத்தின் மூலம் அமைதி திரும்பியது. முகமது அலி கான் வாலாஜா ஆற்காடு நவாபானார். இப்போரின் பலனாக பிரெஞ்சு தரப்பு பலவீனமடைந்து பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் நிலை பலப்பட்டது.
ஆனா  இந்த அமைதி நிலைக்கலை. 1758 இல் மூன்றாம் கர்நாடகப் போர் மூண்டது. இது ஐரோப்பாவில் நடைபெற்ற ஏழாண்டுப் போரின் ஒரு பகுதியாக இரு தரப்பினராலும் கருதப்பட்டது. தென்னிந்தியாவில் பிரித்தானிய ஆதிக்கத்தை முறியடிக்க பிரெஞ்சுப் பிரபு லால்லி இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார். புனித டேவிட் கோட்டையை பிரித்தானியரிடமிருந்து கைப்பற்றிய பின்னர் சென்னையை முற்றுகையிட்டார். ஆனால் அதனைக் கைப்பற்றத் தவறிவிட்டார்.



 1760 இல் பிரித்தானியப் படைகள் வந்தவாசிச் சண்டையில் வெற்றி பெற்றன. காரைக்காலைக் கைப்பற்றின. 1761 இல் பாண்டிச்சேரியும், செஞ்சிக் கோட்டையும் பிரித்தானியரிடம் வீழ்ந்தன. 1763 இல் கையெழுத்தான பாரிசு ஒப்பந்தம், ஏழாண்டுப் போரையும் மூன்றாம் கர்நாடகப் போரையும் முடிவுக்குக் கொண்டு வந்தது. பிரெஞ்சு நிறுவனம் தனது ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் பெரும்பாலானவற்றை இழந்தது.


இவரது பரம்பரையில் வந்தவர்கள் இன்றும் சென்னை நகரில் ஆற்காடு இளவரசர் என்ற பட்டத்துடன் வாழ்ந்து வருகின்றனர். சுதந்திர இந்தியாவும் இவர்களது பட்டத்தை அங்கீகரித்து, அரச குடும்பத்தினருக்கான ஓய்வுதியத்தை அளித்து வருகின்றது. இவர்களில் நடப்பு கடைசி ஆற்காடு இளவரசரான முகம்மது அப்துல் அலி ஆஸிம் ஜா ஜுலை 1994 இல் பட்டத்துக்கு வந்தார். எந்த அரசக்குடும்பத்துக்குமில்லாத மதிப்பு ஆற்காடு நவாப் குடும்பத்துக்குண்டு. அரசக்குடும்பமென்று சைரன் வச்ச கார் உண்டு. மயிலாப்பூர் கோவில் விசேசத்தின்போது இவர்களுக்கு முதல் மரியாதை உண்டு.
இங்கிருந்த கோட்டையின் பழைய படம்
இந்த கோட்டைக்கு ஆலம்பனா கோட்டைன்னு  இங்கிருக்கவுங்க சொல்றாங்க. ஆனா அது எந்தளவுக்கு உண்மைன்னு தெரில.  சிப்பாய் கலகத்துக்கு பின் இந்த கோட்டை ஆங்கிலேயர்களால் தகர்க்கப்பட்டதா சொல்றாங்க.

சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் வீரசம்பன் என்ற சம்புவராய மன்னன், ஆற்காடு உள்ளிட்ட பகுதியை ஆட்சி செய்து வந்தான். இவரது ஆட்சிக்காலத்தில் (கி.பி.1306–1317) ஆற்காடு பாலாற்றில் தொடங்கி, செய்யாறு தாலுகா வரையிலான பகுதியை வளமாக்கும் வகையில் சுமார் 15 அடி அகலமுள்ள வாய்க்கால் ஒன்றினை வெட்டினார். இதனை செங்கல்லும் சுண்ணாம்பும் கொண்டு கட்டி, பாலாற்று நீரை பாசன வசதிக்காக கொண்டு சென்றுள்ளார். அவ்வாறு கட்டப்பட்ட இந்த வாய்க்கால் வீர சம்மன் வாய்க்கால் என அழைக்கப்பட்டது.

வீர சம்மன் கால்வாயின் நீர் ஆதாரத்தை கொண்டுதான் 300 ஆண்டுகளுக்கு முன் இந்த கோட்டை கட்டப்பட்டதா சொல்றாங்க. ஆற்காட்டில் கஸ்பா பகுதியில் அக்காலத்தில் நவாபுகளால் கட்டப்பட்ட கோட்டைக்கு தனியே அகழி அமைத்திருந்தாலும், வீர சம்பமன் வாய்க்கால் இரண்டாவது அகழியாகவே இருந்துள்ளது. பிற்காலத்தில் நவாபுகளின் கோட்டையானது போர்களால் முற்றிலும் அழிந்து போனது. தற்போது ராஜா குளம், ராணிகுளம், ஒரு மசூதி, கிழக்கு திசையில் கோட்டை வாயிலின் ஒரு பக்க கற்சுவர் ஆகியன மட்டுமே மிச்சமுள்ளது.


குளத்துக்கு மேலே இருக்கும் ராணிகள் உடை மாற்றும் அறை. 


இக்கோட்டை பகுதியின் தெற்கில், தோப்புக்கானா பகுதியில் உள்ள மக்கான் என்ற இடத்தின் அருகே சம்புவராயர் கட்டிய வாய்க்காலின் ஒரு பகுதி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதோடு இவ்வாய்க்காலின் மீது செல்லும் கோட்டையின் தெற்கு புறவாயில் ஒன்றும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த இடம் அக்காலத்தில் திருச்சிக்கு செல்லும் சாலையின் தொடக்கமாக இருந்துள்ளது. இதன்வழியாக பல படையெடுப்புகளும் நடந்ததா சொல்றாங்க.

இந்த இடம் ரொம்ப பாழ்ப்பட்டு கிடந்ததைக்கண்ட வரலாற்று ஆய்வாளர்களின் சீரிய முயற்சியால் செப்பனிடப்பட்டது. நான் போனதுக்கு சில நாள் முன்னதான் திரிசா நடிக்கும் பரமபத விளையாட்டு படத்தின் பாடல் ஒன்று இங்க எடுத்தாங்களாம். அப்ப சரி, இனி திரிசா வந்து போன இடம்ன்னு சொல்லி ஆட்கள் வருவாங்க. அப்படியாவது ஆட்கள் வருவாங்களான்னு மௌனமா மிஞ்சியிருக்கும் சாட்சியங்களோடு காத்துக்கிட்டிருக்கு.

சென்னைல இருந்து 90கிமீ தூரத்தில் இருக்கு, நேரடி பேருந்து உண்டு. இல்லன்னா, திருவண்ணாமலை, ஆரணி, வேலூர், பெங்களூரு, குடியாத்தம் வாணியம்பாடி செல்லும் பேருந்துகள் இந்த வழியாதான் போகும். ரயில் மார்க்கமா வரனும்ன்னா வாலாஜாப்பேட்டை வரை ரயிலில் வந்து அங்கிருந்து பேருந்தில் வரலாம். ஆற்காடு பேருந்து நிலையத்திலிருந்து  ஆட்டோக்களில் வரலாம்.

நன்றியுடன்,
ராஜி

12 comments:

  1. அழகிய படங்களுடன் விளக்கிய வரலாறு அருமை சகோ

    ReplyDelete
    Replies
    1. நம்மை சுத்தி நிறைய வரலாற்று விசயங்கள் நிறைய இருக்குண்ணே. நமக்குதான் எதை பாதுகாக்கனும்.. எதை ஆவனப்படுத்தனும்ன்னு தெரில

      Delete
  2. அழகான படங்கள். வரலாற்று செய்திகள் அருமை

    ReplyDelete
    Replies
    1. அந்த பக்கம்தான் அடிக்கடி போவோம். ஆனா, இப்படி ஒரு இடம் இருக்குறதே தெரியாது. தெரிஞ்சுக்கிட்ட பின் போகனும்ன்னு ரொம்ப நாள் ஆசைம்மா. இப்பதான் நிறைவேறிச்சு.

      Delete
  3. சுவாரஸ்யமான குறிப்புகள், சுவாரஸ்யமான படங்கள்...

    ReplyDelete
    Replies
    1. இது சும்மா மேம்போக்காக படிச்ச விசயங்கள் மட்டுமே சகோ. ஆற்காடு நவாப் பத்தின விசயங்கள் இன்னும் முழுசா கிடைக்கல. கிடைச்சதும் பதிவிடுறேன்

      Delete
  4. வரலாற்றுச் செய்திகளும் படங்களும் அருமை சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. ஆற்காடு நவாப் பத்தியும், அங்க இருக்கும் வரலாற்று மிச்சங்களை பத்தியும் இன்னமும் விரிவா எழுதனும்ண்ணே.

      Delete
  5. அருமையான தகவல்கள். நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  6. படங்களும் தகவல்களும் சிறப்பு. பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete