Monday, October 01, 2018

அம்மிக்கு குழவியும், வீட்டுக்கு கிழவியும் தேவை - ஐஞ்சுவை அவியல்

ஆனாலும் ஒரு மனுசனுக்கு இம்புட்டு ஈகோ ஆகாது மாமா. 

யாரை சொல்றே!? நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லல. பொதுவாதான் சொன்னேன் ஆனா, மனுசனுக்கு ஈகோ மட்டும் கூடாது. இதை அருகிலேயே சேர்க்க விடாம துரத்தனும்ன்னு சொல்லாம சொல்லத்தான் பேருலயே ’கோ’வை வச்சிக்கிட்டு இருக்குப்போல! . 
EGOன்ற வார்த்தைக்கு தனித்தன்மையின் வெளிப்பாடுன்னு பொருள். இதையே நம்மூர்ல நான் என்னும் ஆணவம், நான் என்னும் அகம்பாவம், நான் சொல்வதே சரி, என் நிலைப்பாடு மட்டுமே சரி,..இப்படிசொல்லிக்கிட்டே போகலாம். “நான் பெரியவன் என்ற பேராவல்தான் ஈகோ’’ இந்த வார்த்தைகளை  சொன்னவர், இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய உளவியல் அறிஞரான ‘சிக்மண்ட் ஃபிராய்டு’.  பாராட்டப்பட வேண்டும் என்ற நிலைப்பாடுதான், மனித மனதின் உள் அடுக்குகளில் பிரதானமாக இருக்கிறது’’ இதுவே ஈகோவா வெளிப்படுது என்கிறார் வில்லியம் ஜேம்ஸ்.  . இதுக்கு வயசு வித்தியாசம், ஆண் பெண் பேதமெல்லாம் ஏதுமில்ல. இந்த ஈகோவை சரிவர நிர்வகிக்க தெரிஞ்சுக்கிட்டா எல்லாத்துலயும் ஜெயிக்கலாம். முக்கியமா, மன நிம்மதியா இருக்கலாம். 

வெயில், குளிர், மலை, மடு மாதிரியான வெளிப்புற காரணிக்காக தனது வாழ்வியல் முறையை மாத்திக்குற மாதிரி  ஈகோவிற்கு தகுந்த மாதிரி நம்மையும் மாத்திக்கனும். அந்தமாதிரி மாற்றத்துக்கு ஆளாகதவங்கலாம் கஷ்டப்படனும். இதுவே நிதர்சனம். ஈகோவால் ஏற்படும் உத்தேசமான பாதிப்புகள் ஒரு நாளும் மனதை உரசத் தவறியதே கிடையாது. பொதுவா ஈகோ பத்தி புரிஞ்சிருந்தாலும் அதன் உரசல்களால்தான் பாதிப்பு என்பது புரிஞ்சிருந்தும், அதைப்பத்தி கொஞ்சம்கூட அக்கறைக்கொள்ளாமல்  உதாசீனப்படுத்தியபடிதான் பலரும் இருக்கோம். அதுக்காக, ஈகோ கூடாதுன்னு சொல்லல. அந்த ஈகோவை எங்க எப்படி யார்கிட்ட காட்டுவதுன்றதுலதான் வாழ்வின் வெற்றி அடங்கி இருக்கு. ஏன்னா, இந்த மாதிரி ஈகோவை தூண்டி விட்டதால்தான் பலரும் இன்னிக்கு வெற்றியாளனா வரலாற்றில் இடம்பெற்றிருக்காங்க. ஈகோன்றது யானை போல! அதை பழக்கிட்டா நல்லவித பலன்களை அடையலாம். இல்லன்னா, யானைக்கு மதம் பிடிச்சா என்ன விளைவுகள் நடக்குமோ அதான் ஈகோவாலும் நடக்கும். அதனால், ஈகோவை கையாள தெரியனுமே தவிர, ஒதுக்கி  விடக்கூடாது. ‘
போ மாமா! கண்டமேனிக்கு ஏதேதோ சொல்லி தலைய வலிக்குது.

இரு காஃபி போட்டு தரேன். தலைவலி சரியா போகும். 

அது என்ன தலைவலிக்கும் காஃபிக்கும் என்ன மாமா சம்பந்தம்?!

காஃபிக்கும் தலைவலிக்குமான சம்பந்தத்தை அப்பாலிக்கா சொல்றேன். ஆனா, காஃபிக்கும் அக்டோபர் மாசம் 1ந்தேதிக்கும் சம்பந்தம் இருக்கு. அது என்னன்னா, இன்னிக்கு அதாவது அக்.1ந்தேதி சர்வதேச காஃபி தினத்தை சர்வதேச காஃபி அமைப்பு (International Coffee Organization (ICO) மற்றும் உலக நாடுகளில் உள்ள காஃபி சங்கங்கள் (Coffee Associations)லாம் சேர்ந்து  சர்வதேச காஃபி தினத்தை இன்னிக்கு கொண்டாடுறாங்க. குடிச்சதும் உற்சாகத்தை கொடுக்கக்கூடிய நமக்கு பிடித்தமான     காஃபியை  கொண்டாடவும் ஊக்குவிக்கவும் ஒரு வாய்ப்பு. சர்வதேச காஃபி அமைப்பு முதன் முறையாக 2015ம்வருசம் அக்டோபர் 1, தேதியை மிலான் நகரில் அதிகாரபூர்வமா அறிவிச்சுது. இந்த நாள் நியாயமான காஃபி வர்த்தகத்தை ஊக்குவிக்கவும் காஃபி விவசாயிகளின் துயரங்கள் பற்றி விழிப்புணர்வினை ஏற்படுத்தவும் பயன்படுத்தவும் உண்டாக்குனது. சர்வதேச காஃபி அமைப்பு   ஐக்கிய நாடுகள் சபை United Nations (UN) ஆதரவுடன் லண்டனில் 1963 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது என்பதுலாம்  எக்ஸ்ட்ரா தகவல்.
நாகரீகமடைந்த நாகரீமடைந்த மனிதர்களுக்கு மிகவும் பிடித்தமான பானம் காஃபி என  தாமஸ் ஜெஃபர்சன் சொல்கிறார். காஃபிக்கொட்டை, காஃபிச் செடியின் பெர்ரி பழத்திலிருந்து கிடைக்குது. காஃபியா (Coffea)ன்ற தாவர இனத்தைச் (genus) சேர்ந்தது. காஃபியா கேனெபொரா (Coffea canephora) (நம்ம ரோபஸ்ட்டா காஃபி கொட்டைதான்) மற்றும் காஃபியா அராபிகா (Coffea arabica)ன்ற இரண்டு காஃபி சிற்றினங்கள் (species) வணிகரீதியாகப் புகழ் பெற்றதுகாஃபி ஒரு உற்சாகபானம் மட்டுமல்ல! இது உலகின் இன்றியமையாத விற்பனைப்பொருள்களில் ஒன்று. பெட்ரோலுக்கு அடுத்தபடியாக கருதப்படும் முக்கிய விற்பனைப்பொருள். வளர்ந்துவரும் நாடுகளில் காஃபி வர்த்தகம் அந்த நாடுகளின் பொருளாதார ஸ்திரத் தன்மையை அளவிட உதவுது. 
காஃபி எப்படி போடுறதுன்னு தெரியுமா?!

ம்க்கும் அது பெரிய கம்பசூத்திரம் பாரு. கிண்டல் பண்ணாதீக மாமா. பாலை காய வச்சு, அளவா சர்க்கரை, காஃபி தூள் கலந்து ஆத்துனா காஃபி ரெடி. 

காஃபி தயாரிக்குறது ஒருவித கலை. காஃபிக்கு பால் ரொம்ப கொதிக்கக்கூடாது. பால் பொங்கிவரும்போதே அந்த நுரையோடு பவுடர் இல்லன்னா டிக்காஷனில் சேர்க்கனும். முதலில் சர்க்கரை, காஃபி பவுடர் இல்லன்னா டிகாஷனை ஆத்திட்டு பாலை சேர்த்து ஒரே ஒரு ஆத்து ஆத்தி காஃபி குடிக்கனும். அதைவிட்டு புருசனை ஆத்துற மாதிரி காஃபியை ஆத்துனா காஃபி சுவைக்காது. காஃபில அந்த நறுமணமே ஸ்பெஷல். அதனால், லைட்டா இல்லாம காஃபியை ஸ்ட்ராங்கா குடிக்கனும். எஸ்ப்ரசோ (Espresso), எஸ்ப்ரசோ மாச்சியாடோ (Espresso Macchiato), காப்பசீனோ (Cappuccino), காபி லட்டே (Cafe Latte), மோக்கசினோ (Mocha chino), அமெரிக்கானோ (America-no), ஐரிஷ் காபி (Irish coffee), டர்கிஷ் காபி (Turkish coffee), வெள்ளை காபி (White coffee). இதுலாம் உலகின் சிறந்த காஃபி. உலகத்துலயே காஸ்ட்லியான லூவா காபி (Kopi Luwak) இந்தோனேசியாவில் தயாரிக்கப்படுது.  அது எப்படி தயாரிக்கப்படுதுன்னு  இங்கே பார்க்கலாம்.
காலையில் ஃபில்ட்டர் காஃபி குடிக்கலைன்னா பைத்தியமே பிடிச்சுடும் அளவுக்கு காஃபிக்கு அடிமைகளான ஆட்கள் நம்மூர்ல உண்டு. ‘கும்பகோணம் டிகிரி (ஃபில்டர்) காஃபி’ன்னு  ஹைவேக்களில் பார்க்கிறோம். பெரிய பித்தளை காஃபி ஃபில்டரில் டிகாக்க்ஷன் மற்றும் வாயகன்ற பாத்திரத்தில் கொதிக்கும் பால். பித்தளை டபாரா டம்ளரில் நுரை பொங்க கொடுப்பாங்க. அடடா! பேஷ் பேஷ்ன்னு அதை குடிச்சுட்டு வயித்தை கெடுத்துக்கிட்ட ஆட்கள் நம்மிடையே இருக்கோம்?! கும்பகோணம் டிகிரி ஃபில்டர் காஃபி வரலாறு சுவையானது.

‘கும்பகோணம் டிகிரி ஃபில்டர் காஃபியின்’ வரலாறு 1960களில் கும்பகோணத்தில் ஆதிகும்பேஸ்வரர் கோவிலுக்குப் பக்கத்தில் மொட்டைக்கோபுர வாசலில் இருந்த ‘லெட்சுமி விலாஸ் காபி கிளப்பிலிருந்து’ தொடங்குது. கடையின் உரிமையாளர் காஃபி தயாரிப்பவர் எல்லாம் ஒருவரே. அவர்தான் பஞ்சாமி அய்யர். சொட்டு தண்ணீர் கூட சேர்க்கமால் காய்ச்சிய பாலில் அப்போதைக்கப்போது வறுத்து அரைத்த காஃபி பவுடரில் ஒரேயொரு முறை மட்டுமே டிகாக்ஷன் எடுத்து மணக்க மணக்க காஃபி கலந்து தருவது பஞ்சாமி அய்யரின் ட்ரேட் சீக்ரெட் . கும்பகோணத்தில் இவரின் விசிறிகள் பெரிய மிராசுதாரர்களாம். சங்கீத வித்வான்கள் கும்பகோணம் வந்தால் இங்கு காஃபி குடிக்காமல் போனதில்லையாம். வேறு இடங்களில் கச்சேரிக்கு போனபோது ‘கும்பகோணம் காஃபி மாதிரி வராது’ என்று சிலாகிக்க அதுவே சிறந்த ஃபில்டர் காஃபியின் அடையாளமாகப் போய்ட்டுது.

காஃபிச் செடியின் பூர்வீகம் ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள எத்தியோப்பியா. தென் எத்தியோப்பியாவில் காஃவா (Kaffa, கா’வ்’வா)ன்ற இடத்தில்தான் காஃபிக்கொட்டை  முதலில் கண்டுப்பிடிக்கப்பட்டதாம். அரபு மொழியில் கஹ்வா (qahwa)ன்னா காஃபி செடி ன்னு அர்த்தம். காஃபி பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் 1000 A.D. ஆண்டலிருந்தே கிடைக்குது. 12 ஆம் நூற்றாண்டுகளில் எத்தியோப்பியாவிருந்து எகிப்து மற்றும் ஏமன் நாடுகளுக்குப் பரவி இந்தியாவில்  17ஆம் நூற்றாண்டில் காஃபி வந்தது. பாபா புதான்ன்ற சிக்மங்களூர்க்காரர் புனித மெக்காவிற்குப் புனித யாத்திரை போயிட்டு திரும்பும்போதுதான் சில காஃபி விதைகளையும் கொண்டுவந்து தன் தோட்டத்தில் பயிரிட்டார். காஃபி இந்தியாவிற்குள் புகுந்தது இப்படித்தான்.

காஃபியை போலவே காஃபியோட கதையும் செம டேஸ்டிதான்.

காஃபி செம டேஸ்ட்ங்குறதுக்காக அடிக்கடி குடிக்கக்கூடாது.காஃபியில் காப்ஃபைன்ன்ற வேதிப்பொருள் இருக்குறதால,  அது ரத்தத்துல கலந்து மூளைக்கு வேகமா பாய்ஞ்சு உடனடியா உற்சாகத்தை கொடுக்கும். காப்ஃபைன்ன்ற வேதிப்பொருளை எடுத்துக்குறது ஆபத்தை விளைவிக்கும்.

ஓ. இப்ப மாதிரியே வயசான காலத்துலயும் இதேமாதிரி காஃபி போட்டு கொடுப்பியா மாமா?!

ஆரோக்கியமா, இருக்கும் இப்பவே உன் இம்சை தாங்கலியாம். இதுல வயசாகிட்ட தோல் சுருங்கி, பொக்கை வாயோடு நடக்கவே நாடியில்லாம,நோயோடு அவதிப்படும் உன்னை எப்படி பார்த்துக்குறதாம்!!

ம்க்கும், அப்ப எனக்கு முதியோர் இல்லம்தான் கதியா?!

சின்ன வயசில்தான்  எதிர்பார்ப்புகள் இருக்கும் என்றில்லை. அவங்களைவிட வயசான மூத்த குடிமக்களுக்குதான்  எதிர்பார்ப்புகள் அதிகம். மூப்பின் காரணமா பாதுகாப்பு குறித்த பயம் மனசில் அதிகமிருக்கும். பயத்தின் காரணமா பாதுகாப்பில்லாத தன்மையை உணர்வாங்க. அதனால், வயதானவர்களுக்கு உரிய முக்கியத்துவத்தை கொடுக்கனும். அவர்களுக்குரிய உரிமைகளை, சுதந்திரத்தை முக்கியமா வேண்டியதை செஞ்சுக்க பொருளாதார ரீதியான சுதந்திரத்தையும், மனரீதியான ஆறுதலையும் கொடுக்கனும். இதுலாம் நம்ம கடமைன்னு உணரனும்ன்னுதான் ஒவ்வொரு வருசமும்  அக்டோபார் 1ம் தேதி சர்வதேச முதியோர் தினம் கொண்டாடப்படுது. 
கடந்த சில ஆண்டுகளா உலக அளவில் பிறப்பு மற்றும் இறப்பு விகிதம் குறைஞ்சதால நாட்டில் வயதானவர்களின் எண்ணிக்கை  உயர்ந்துள்ளது. உலக அளவில் 2008ம் ஆண்டு நிலவரப்படி 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையோர் எண்ணிக்கை 60 கோடியைத் தாண்டியிருப்பதா கணக்கெடுப்பு சொல்லுது. இந்த எண்ணிக்கை,  வரும் 2025ம் ஆண்டில் இரு மடங்காக உயரும்ன்னு சொல்றாங்க.  இந்தியா போன்ற வளரும் நாடுகளில்தான்  வயதானவர்களின் எண்ணிக்கை அதிகம்.  முதியோரை மேன்மைப்படுத்தும் வகையில் கடந்த 1990ஆம் ஆண்டில் அக்டோபர் முதல் தேதியை உலக முதியோர் தினமாக ஐ.நா. அறிவித்தது. கடந்த 2002ஆம் ஆண்டிலிருந்து, சர்வதேச அளவில் முதியோருக்கான செயல்பாட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுது. முதியோர் சுதந்திரம், பங்களிப்பு, வயதானவர்களை மதித்தல் ஆகியவைலாம் உலக முதியோர் தினத்தின் முக்கிய நோக்கமாகும். மனிதர்களுக்கு வயதாக ஆக அவர்களின் தேவை முழுமையடைதல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மட்டுமில்லாம, சமூக, கலாச்சார, அரசியல்ரீதியிலும் அவர்கள் பங்களிப்பு இருக்கனும்.  21ஆம் நூற்றாண்டில் வயது முதிர்ந்தோர் எதிர்கொள்ளக்கூடிய சவால் மற்றும் வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு அனைத்து வயதினரையும் முன்னிலைப்படுத்தும் நோக்கிலும் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. 

‘அம்மிக் கல்லுக்கு குழவி எம்புட்டு முக்கியமோ அம்புட்டு முக்கியம்  வீட்டுக்கு ஒரு கிழவி முக்கியம்ன்னு சொல்வாங்க. ஏன்னா வயதானவர்களின் அனுபவங்கள் இளைய தலைமுறையினருக்கு அவசியமானவை. ஆனா நம்மில்  எத்தனை பேர் இதனை உணர்ந்திருக்கோம்ன்னு தெரில.  நாய்க்குட்டிக்கு தனியா இடம் ஒதுக்கும் நவீன வீட்டில் வயதான ஆட்களுக்கு இடமில்லை. அவங்களை பாரம்ன்னு நினைச்சு முதியோர் இல்லங்களுக்குக் கொண்டுபோய் விட்டுடுறோம். இதனால வயதானவர்களுக்கு தனிமையும், வெறுமையுமே மிஞ்சுது. பாதுகாப்பின்மை காரணமாக வயதானவர்களுக்கு மனஅழுத்தமும், விரக்தியும் அதிகரிக்குது. அதனால,  வயதானவர்களையும் கைக்குழந்தைகளைப் போல கவனிச்சுக்கனும். அவர்களுக்குன்னு காரமில்லாத, கொழுப்பு சத்தில்லாத,  எளிதா ஜீரணிக்கக்கூடிய மெல்லிய உணவுகளை தயாரிச்சு கொடுக்கனும்.
வயதானவர்களுக்கு எளிதா  நோய் தாக்குதல் ஏற்படும் அதனால் வயதாக வயதாக உடலில் உள்ள சக்தி குறையும்.  சத்தான தானியங்கள், சோயா போன்றா ஊட்டச்சத்துள்ள உணவுகளை சமைத்துக்கொடுக்கனும். முக்கியமாக வயதானவர்களுக்கு உணவில் ஆர்வம் குறைஞ்சிடும். ஜீரண உறுப்புகள் செயலிழந்துடும். ருசி உணர்வும் குறைஞ்சிடும். அதுக்கேத்த மாதிரியான சத்தான உணவுகளை சமைத்துத் தரனும். வயதானவர்களுக்கு எலும்புத் தேய்மானம், நீரிழிவு, இதயநோய், மாதிரியான நோய்களுக்கு சட்டுன்னு ஆட்பட்டுடுறதால  அவர்களுக்கு அதிக அளவில் ஊட்டச்சத்துள்ள உணவுகளை செய்து கொடுக்கனும். கால்சியம், வைட்டமின் மாத்திரைகளாக வாங்கிக் கொடுக்காம நார்ச்சத்து, வைட்டமின்சத்துள்ள காய்கறிகள், பழங்களை வாங்கிக் கொடுக்கனும். மறதிநோய் தாக்க ஆரம்பிச்ச பிறகு சிறப்பு கவனத்துடன் கையாளனும். தயிர் மாதிரியான குளிர்ச்சியான பொருட்களை இரவில் கொடுக்கக்கூடாது. சிரமம் பார்க்காம இட்லி, இடியாப்பம், புட்டு மாதிரியான லேசில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை கொடுக்கனும். பேரன் பேத்திகளோடு பழக விடனும். வேலைப்பளுவை பொருட்படுத்தாம தினமும் கொஞ்ச நேரம் அவங்கக்கிட்ட பேசிக்கிட்டு இருக்கனும். நம்மோட தினசரி வேலைகளை, குடும்ப விசயங்களை அவங்கக்கிட்ட சொல்லி ஆலோசனை கேட்கனும். அதுவே அவங்களை சுறுசுறுப்பா வைக்கும். வயசாகிடுச்சுன்னு ஒதுக்காம பெண்களை பூண்டு உரிக்க, காய்கறி நறுக்க மாதிரியான வேலைகளை அவங்க உடல் ஒத்துழைச்சா செய்ய சொல்லலாம். ஆண்களை, வீட்டுக்கணக்கு எழுத, பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க இப்படி சின்ன சின்ன வேலைகளை செய்ய சொல்லலாம்.  அவங்களை நாம நல்லபடியா பார்த்துக்குறோம்ன்ற நினைப்பே அவங்களை ஆரோக்கியமா வச்சுக்கும்.   என்று தெரிந்தாலே அவர்களிடம் இருந்து மன அழுத்தம் வெளியேறி மகிழ்ச்சி குடியேறும்.
வயசாகிட்டாலே கஷ்டம்தானே மாமா.

ம்ஹூம் சரியான திட்டமிடல் இருந்தால் யார் பார்த்துக்கிட்டாலும், இல்லன்னாலும் வயசான காலத்திலும் சந்தோசமா இருக்கலாம். அதை நம்மோட நாற்பதாவது வயதிலிருந்து தொடங்கனும்.

உன்னைலாம் நம்பி பிரயோசனமில்ல. இப்ப எனக்கு 42 வயசாகுது.  இனி நானும் திட்டமிட்டுக்குறேன் மாமா. 

நன்றியுடன்,
ராஜி4 comments: