அன்புள்ளன்னு ஆரம்பிக்கலாமா?! இல்ல அன்புடையீர்ன்னு ஆரம்பிக்கலாமான்னு ஒரு குழப்பம். அன்பே இல்லாத உங்களைலாம் எப்படி அப்படி அழைக்குறதாம்?!
ஆனா, இதுலாம் இல்லாம கடிதம் எழுத ஆரம்பிக்கக்கூடாதுன்னு ஒரு விதி இருக்கு. அதனால், மரியாதைக்குரியன்னு ஆரம்பிக்குறேன். ஏன்னா, நீங்கதான் இப்ப பெரிய ஆள் ஆகிட்டீங்கல்ல!
மரியாதைக்குரிய மனுசங்களே!
நான் கடுதாசி என்கிற கடிதம் எழுதுறேன். இக்கடிதம் சுமந்துக்கொண்டிருப்பது வெறும் வார்த்தை இல்லை. கொண்டாடி தீர்த்ததது குப்பையாகிப்போனதின் வலி.
அடுத்து ஒரு குழப்பம், நலம் நலமறிய ஆவல்... நலம் நாடுவதும் அதுவே..ன்னு எழுதலாமா?!ன்னு.. இங்க நானே நலமா இல்ல. அப்புறம் எப்படி நலம்ன்னு சொல்ல முடியும்?! அதுமில்லாம, உங்களை பத்தி எங்கிட்ட பகிர்ந்துக்கும் ஆர்வம் உங்களுக்கு இல்லாதபோது நலமா?!ன்னு எப்படி கேக்க முடியும்?! எத்தனையோ பேரின் நலனை சொல்லிப்போன என்னோட நலனை கேக்கக்கூட ஆளில்லாம இருக்கேன். அதுபத்தி உங்க யாருக்காவது கவலை இருக்கா?! எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் என்ற வடிவேலு காமெடிக்கு நாந்தான் சரியான பொருத்தமா இருப்பேன்.
உறவுக்கடிதம், நட்புக்கடிதம், அழைப்பிதழ் கடிதம், பாராட்டுக்கடிதம், வாழ்த்துகடிதம், அலுவல் கடிதம், வணிக கடிதம், விடுமுறை கடிதம், செய்திக்காட் கடிதம், விண்ணப்ப கடிதம், முறையீட்டு கடிதம், பரிந்துரை கடிதம்ன்னு எத்தனை விதமான பரிமாணம் என்னுள். இதில்லாம, துக்க காரியத்தை சொல்ல தந்தியும் உண்டு. இன்றைய அதிகாலை அலைப்பேசி அழைப்பு ஒருநிமிசம் எப்படி தடுமாற வைக்குதோ! அதுமாதிரி அன்னிக்கு தந்தி. தந்தி வந்திருக்குன்னாலே கைகால் வெலவெலத்து போகும். கடிதம் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு போய் சேர 3 நாள் ஆகும். தூரத்தினை பொறுத்து கால அளவு மாறுபடும். அதனால், யாருக்காவது அவசர செய்தி அனுப்பனும்ன்னா தந்திதான். இன்னிக்கு வாட்ஸ் அப், ஐ.எம்.ஓ, ஹைக்ன்னு விதவிதமா உடனுக்குடன் தொடர்புக்கொள்ளும் வசதி இருந்தாலும் எதிர்பார்த்த இடத்திலிருந்து கடிதங்கள் வருமா?! என ஏங்கிய நினைவுகளுக்கும், அந்த கடிதங்களை திரும்ப, திரும்ப படித்து, பாதுகாத்த அனுபவங்களுக்கு சற்றும் ஈடாகாது இன்றைய தொடர்பு சாதனங்களின் வசதிகள். எங்களின் சேவையை பாராட்டி ஒவ்வொரு வருசமும் அக்டோபர் 9னை உலக அஞ்சல் தினமா கொண்டாடப்படுது.
முன்னலாம் எல்லா வீடுகளிலும் அழைப்பிதழ் முதற்கொண்டு கரண்ட் பில் வரை எல்லாமே ஒரு கம்பில நுழைச்சு வீட்டு கூரையில் சொருகி வைப்பாங்க. அவசர யுகத்தில் மனுசனுக்கே மதிப்பில்லாதபோது சாதாரண தாளுக்கு எங்கிருந்து மதிப்பு கிடைக்கும்?! வாட்ஸ் அப்ல மெசேஜ் டெலிவரின்னு காட்டும் ரெண்டு டிக் வந்த ரெண்டாவது நிமிசம் என் மெசேஜுக்கு ஏன் பதில் அனுப்பலைன்னு பிரேக் அப் ஆகும் காதல் இன்றைய காதல். அந்த காலத்தில், காதல் கடிதம் எழுதி போஸ்ட் பண்ணி, கடிதம் அந்த பொண்ணு(பையனுக்கு) போய் சேர்ந்ததா?! இல்ல அப்பன் ஆத்தா கையில் கிடைச்சுதா, அவளு(னு)க்கு ஓகேவான்னு பதில் வரும்வரை இதயம் துடிதுடிக்க காத்திருந்ததுலாம்?! இந்த காலத்து பசங்களுக்கு கிட்டா ஒரு பரவச உணர்வு.
அவள்(ன்) எழுதிய கடிதத்தை
சுமந்ததால் போஸ்ட் பாக்ஸ்
இன்றிலிருந்து ஸ்வீட் பாக்ஸ்ன்னு -
சிலாகிச்ச ஆட்கள்கூட இன்னிக்கு என்னை வேஸ்ட் பாக்சாக்கிட்டாங்களே என்பதுதான் என் வருத்தம். என்ன ஒரே ஆறுதல், எல்.ஐ.சி காரங்களும், அரசு அலுவலகங்களும், இருக்குறதால ஏதோ எனை சார்ந்த துறை ஓடிக்கிட்டிருக்கு!!.
ஏன்ப்பா! பிள்ளைய அடிக்குறே?!
கடிதத்தை போஸ்ட் பண்ணிட்டு வான்னு சொன்னா
பூட்டி இருக்குன்னு வரான்னு-
என்னை வச்சு ஜோக்கடிக்குமளவுக்கு ஆகிடுச்சு என் நிலை
மனைவியை பிரசவத்துக்கு அனுப்பிட்டு தினத்துக்கு துடிக்கும் புருசனையும், மகளை கட்டிக்கொடுத்து எப்படி இருக்காளோன்னு தவிக்கும் அப்பாக்களையும், பிள்ளையை தூரமா வேலைக்கு அனுப்பிட்டு மேலுக்கு எப்படி இருக்குன்னு ஏங்கும் அம்மாவையும், அப்பா எப்ப வருவார்ன்னு கேட்கும் பிள்ளைக்கும், இப்படி எல்லா உறவுக்கும் மன ஆறுதலை கொடுத்தது நானே! தான் எதிர்பார்த்த கடிதம் வந்துச்சுன்னா என்னை எப்படி கொண்டாடுவாங்க தெரியுமா?! எனக்கு முத்தம் கொடுப்பதென்ன?! என்னை சுமந்து வந்த தபால்காரருக்கு மோர், வேர்கடலை, கம்புன்னு கொடுப்பதென்ன?! அதேமாதிரி எழவு செய்தி வந்தாலும் தபால்காரருக்கு திட்டு விழும். நீ எப்ப வந்தாலும் எங்க வீட்டில் எழவு விழுதுன்னு அடிக்காத குறையாய் அந்த வீட்டின் பெருசு விரட்டும். அந்த காலத்தில் ஆசிரியர், தபால்காரர் இவங்க ரெண்டு பேருக்கிட்டதான் தங்கள் சொந்த பிரச்சனைகளை சொல்லி ஆலோசனை கேப்பாங்க. ஏன்னா, அதிகம் படிக்காத ஆட்கள் இருந்த அந்த காலத்தில் போஸ்ட்மேன் தான் கடிதத்தை படிச்சு சொல்வார். பங்காளி சண்டை முதல், புருசன் பொண்டாட்டி கொஞ்சல் வரை போஸ்ட்மேனுக்கு அத்துபடி. அட இம்புட்டு ஏனுங்க, சிறையிலிருந்து எழுதப்பட்ட உலக தலைவர்களின் கடிதங்கள் மிகப்பெரிய புரட்சியை உண்டாக்கி இருக்கு. இந்திரா காந்தி அரசியல்வாதியாய் உருவாக நேரு சிறையிலிருந்து எழுதிய கடிதங்களே! அறிஞர் அண்ணா, தம்பிகளுக்கு எழுதிய கடிதங்கள் தமிழக அரசியலை புரட்டி போட்டிருக்கு.
என் பூர்வீகம், என் வரலாறு தெரியுமா உங்களுக்கு?! நான் சார்ந்த துறைக்கு இந்திய அஞ்சல்துறைன்னு பேரு. மொத்தம் 154,000 அஞ்சல் அலுவலகங்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய துறை. இதன்மூலம் இந்தியா மட்டுமில்லாம உலகம் மொத்தமைக்கும் இணைக்க முடியும். எங்க துறையில் 593,878 (2001ம் வருடத்தின் படி) வேலை செய்றாங்க. வெறும் கடித போக்குவரத்துல மட்டுமில்லாம சின்ன பேங்க் மாதிரியும் செயல்படுது. இதனால பேங்க் வசதி இல்லாத குக்கிராமங்கள் பயனடையுது. . தமிழ்நாட்டில் மட்டும் 10,263 அஞ்சலகங்கங்கள் இருக்கு.
1764-1766களில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியால் பம்பாய்(மும்பை), சென்னை மற்றும் கல்கத்தா(கொல்கத்தா) மாகாணங்களில் அஞ்சல் சேவை துவக்கப்பட்டது. ஆங்கிலேயர்களுக்காக மட்டுமே செயல்பட்டு வந்த அஞ்சல் சேவை, வாரன் காஸ்டிங் கவர்னராக இருந்தப்போ பொதுமக்களுக்காகவும் செயல்படத் துவங்கியது. அப்பலாம் 100 மைல் தூரத்துக்குட்பட்ட கடிதங்களுக்கு 2 அணா வசூலிக்கப்பட்டது. அஞ்சல் சேவையின் அவசியத்தை உணர்ந்தவுடன் பிறகு அனைத்து மாகாணங்களிலும் அஞ்சல்துறை செயல்படத் தொடங்கியது. 1839ல் வடமேற்கு, 1860ல் பஞ்சாப், 1861ல் பர்மா, 1866ல் மத்திய மாகாணம், 1869ல் சிந்து, 1871ல் ராஜபுதனா, 1873ல் அஸ்ஸாம், 1877ல் பீகார், 1878ல் கிழக்கு வங்காளம் ஆகிய அஞ்சல் வட்டங்கள் துவங்கப்பட்டு அஞ்சல்துறை செயல்படத் தொடங்கியது. பின் 1914ம் ஆண்டுவாக்கில் இந்த அஞ்சல் வட்டங்கள் இணைக்கப்பட்டு 7 அஞ்சல் வட்டங்களாகக் குறைக்கப்பட்டன. வங்காளம்&அஸ்ஸாம், பிகார்&ஒரிசா, பம்பாய்(சிந்து உள்ளடக்கியது), பர்மா, மத்திய, சென்னை, பஞ்சாப்&வடமேற்கு மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகியனவாக இணைக்கப்பட்டது.
தபால்தலைகளின் உபயோகம் 1 ஜூலை 1852ல் சிந்து மாவட்டதில் அறிமுகப்படுத்தப்பட்டது. தபால்தலைகள் உருவம் ஏதுமில்லாமல் வட்டவடிவில் இருந்தது. பின்னர் 1854ல் பேரரசி விக்டோரியாவின் உருவம் பொரிக்கப்பட்ட தபால் தலைகள் கல்கத்தாவில் அச்சிடப்பட்டு EAST INDIA POSTAGEன்ற பெயருடன் இந்தியா முழுவதும் உபயோகத்துக்கு வந்தது. இந்திய அஞ்சல் துறை இந்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டது. அஞ்சலகங்கள் மொத்தம் நால்வகைப்படும். அவை, தலைமை அஞ்சல் அலுவலகங்கள், துணை அஞ்சல் அலுவலகங்கள், துணை அஞ்சல் அலுவலகங்கள், கிளை அஞ்சல் அலுவலகங்கள் ஆகியவையே.
அஞ்சல் சேவைகளை ஆறு வகையாகப் பிரிக்கலாம். ராஜதானிப் பிரிவு - தேசியத் தலைநகரத்திலிருந்து மாநிலங்களின் தலைநகரங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் அஞ்சல்கள். இவற்றைப் போடுவதற்கான அஞ்சல் பெட்டி மஞ்சள் நிறத்தில் இருக்கும். 2. பச்சைப் பிரிவு - தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாவட்டத் அஞ்சல் நிலையங்களில் இருந்து பெரும் நகரங்களுக்கு எடுத்துச் செல்லும் தபால்கள். இதுக்கு அஞ்சல் பெட்டி பச்சை நிறத்தில் இருக்கும். 3.பெருநகரப் பிரிவு - பெங்களூர் , ஐதராபாத் , கொல்கத்தா , சென்னை , டெல்லி , மும்பை ஆகிய பெருநகரங்களுக்கிடையே செல்லும் அஞ்சல்கள் இவ்வகை. இதுக்கு அஞ்சல் பெட்டி நீல நிறத்தில் இருக்கும். 4. வணிகப் பிரிவு - அதிக அளவு அஞ்சல்களை அனுப்புகிற வணிகர்களுக்கானது. பதிவு அஞ்சல் முதலான பல பிரிவுகளில் இந்த அஞ்சல்கள் மொத்தமாக ஒரு சில தபால் நிலையங்களில் பெறப்படும். 5. பருவ இதழ்கள் பிரிவு - அஞ்சல் வழியில் வார, மாத அச்சிதழ்களைப் பெறும் வாடிக்கையாளர்களுக்கு பத்திரிகை அலுவலகங்கள் அனுப்பும் அஞ்சல்கள் இவ்வகையைச் சார்ந்தது. ஒவ்வொரு இதழுக்கும் குறிப்பிட்ட நாட்கள் ஒதுக்கப்பட்டு அந்த நாட்களில் மட்டும் பத்திரிகை அஞ்சல்கள் பெறப்படுகின்றன. மொத்தத் அஞ்சல் பிரிவு - பெரும் வணிகர்களிடமிருந்து பெறப்படும் அதிகமான அஞ்சல்கள் அஞ்சல் பெட்டிக்கோ அல்லது அஞ்சலகத்திற்கோ போகாம அஞ்சல் பையில் இடப்பட்டு அஞ்சல் பிரிப்பகத்திற்கு நேரடியாக எடுத்துச் செல்லப்படும்.
சரி ஒருநாளைக்கு பல்லாயிரக்கணக்கான கடிதங்கள், ஒரே பேரில் பல ஊர்கள் இருக்கும்போது சரியாய் எப்படி அவ்விடத்துக்கு போகுதுன்னு நினைச்சு பார்த்திருக்கீங்களா?! சென்னையிலிருக்கும் காந்தி நகருக்கு போக வேண்டிய கடிதத்தை டெல்லியிலிருக்கும் காந்தி நகரில் கொடுத்தா என்னாகும்?! இந்த குழப்பம் ஏற்படாம இருக்கத்தான் பின்கோட் எனப்படும் அஞ்சல் குறியீட்டு எண் பயன்படுது. .1972 -ல் கொண்டு வரப்பட்ட இந்தக் குறியீட்டு எண் திட்டத்தில் 6 இலக்க எண் இருக்கும். முதல் இலக்கம் அதன் மண்டலத்தைக் குறிக்கும். இரண்டாவது இலக்கம் துணை மண்டலத்தைக் குறிக்கும். மூன்றாவது இலக்கம் அந்த அஞ்சல் பிரிப்பக மாவட்டத்தைக் குறிக்கும். கடைசி மூன்று இலக்கங்கள் அந்த அஞ்சல் வட்டத்தின் அஞ்சல் நிலையத்தைக் குறிக்கும். உதாரணத்துக்கு, புதுடெல்லி, சம்மு காஷ்மீர், பஞ்சாப், இமாசலப் பிரதேசம், ஹரியானா, சண்டிகர்கலாம் 1ல் தொடங்கும். உத்தரப் பிரதேசம், உத்தர்காண்ட் மாநிலத்திற்கு 2, ராஜஸ்தான், குஜராத், டையூ -டாமன், நாகர்ஹவேலிகளுக்கு 3, மத்தியப் பிரதேசம் , கோவா, மகாராஷ்டிரத்திற்கு 4 , ஆந்திரப் பிரதேசம், கர்நாடகத்துக்குலாம் 5, தமிழ்நாடு, கேரளா, இலட்சத்தீவுகள், மினிக்காய்களுக்கு 7, ஒரிசா, அந்தமான் நிக்கோபார் தீவுகள், மேற்கு வங்காளம், மிசோரம், மேகாலயா, மணிப்பூர், நாகலாந்து, அசாம், அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா 7, பீகார், ஜார்கண்ட் மாநிலங்களுக்குலாம் 8 என பின்கோட் தொடங்கும்.
ஒவ்வொரு அஞ்சல் நிலையமும் அஞ்சல்தலைகள் விற்பனை, அஞ்சல் அட்டை மற்றும் கடிதஉறைகள் விற்பனை, பதிவுத் அஞ்சல்கள் (Registered post) அனுப்புதல், அஞ்சல் மூலம் பணம் அனுப்புதல் (Money order), அஞ்சல் மூலம் பொருட்கள் அனுப்புதல் (Booking parcels), உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அஞ்சல் சேவை, இதுமட்டுமில்லாம பார்சல் சேவை, தந்தி சேவை என பலதரப்பட்ட சேவைகளை மக்களுக்கு வழங்குது. ஸ்பீட் போஸ்ட் எனப்படும் விரைவு அஞ்சல் உலக அளவில் 99 நாடுகளில் இருக்கு. இன்னிக்கும் தினத்துக்கு 600 முதல் 1000 வரையிலான பாஸ்போர்ட் சேவை எங்க மூலமாதான் நடக்குது. ட்ராக் மற்றும் ட்ரேஸ்’ மூலம் பதிவு செய்யப்பட்ட கடிதம், பொருட்கள் பட்டுவடா விவரத்தை அறியலாம் இப்படி பலவசதி இருக்கு ஆனாலும், அஞ்சலக சேவை எதுக்காக ஆரம்பிக்கப்பட்டதோ அந்த சேவைக்கு வழியில்லை என்பதே என் பெரும் சோகம்.
கடிதம் எழுதுறதுலாம் ஒரு கலை. ஒவ்வொரு கடிதத்தையும் இப்படிதான் எழுதனும்ன்னு வரைமுறை இருக்கு. ஆனா, உறவுகளுக்குள் எழுதும் கடிதத்துக்கு எந்த வரைமுறையும் இருக்காது. 25(அப்ப)பைசா போஸ்ட் கார்டில் பெறுநர் அட்ரஸ் எழுதி மிச்சம்மீதி இருக்கும் இடத்துலயும் நுணுக்கி நுணிக்கி எழுதும் ஆட்கள் உண்டு. கடிதம் கிடைக்கப்பெற்றவர்கள் கடிதத்தில் இருக்கும் அடித்தல் திருத்தல்களில் என்ன எழுதி இருப்பாங்கன்னு மண்டைய உடைச்சுக்கிட்ட ஆட்கள்லாம் உண்டு. ஒரு வெள்ளை பேப்பர்ல எழுத வேண்டியதைலாம் எழுதி, அதை அப்படியே கார்ட்ல எழுத சொல்றவங்கலாம் உண்டு. ஒரே போஸ்ட் கார்ட்ல முதல் பக்கம் அப்பா அம்மாவும், இன்னொரு பக்கம் மனைவியும் எழுதி அனுப்பிய கதைலாம்கூட உண்டு. ராஜி வீட்டுலலாம், அவங்கப்பா பக்கத்துல உக்காந்து கடிதம் எழுதச்சொல்வாங்க. அப்பா இருக்குற பயத்துல அடித்தல் திருத்தலோடு எழுதி அடிவாங்கிதான் தமிழை ஓரளவுக்கு தப்பில்லாம கத்துக்கிட்டா. இன்லேண்ட் லெட்டரை இங்கிலாந்து லெட்டர்ன்னு நினைச்சுட்டிருந்த அறிவாளிதான் நம்ம ராஜி.
குழந்தை பிறப்பு, வேலை கிடைச்ச கடிதம், கல்யாணத்துக்கு ஓகே சொன்ன கடிதங்கள், பிடிச்ச நடிகர் எழுதிய பதில் கடிதம் இப்படி பொக்கிஷமா பழைய கடிதங்களை பாதுகாக்கும் ஆட்களும் இருக்கத்தான் செய்றாங்க. ஏன்னா, ஒவ்வொரு கடிதமும் வெறும் எழுத்தை மட்டும் தாங்கி வரலை. பல உணர்ச்சிகளின் குவியல் அது. ஈமெயில், மெசேஞ்சர் காலத்தில் இருக்கும் இன்றைய தலைமுறைக்கு தெரியாது. இப்ப எல்லாமே ஜஸ்ட் லைக் தட்தான். நலம் நலமறிய ஆவல்ன்னு படிச்சதும் அதிலிருந்த உண்மைத்தன்மை மனசுல ஒரு மத்தாப்பூவை கொளுத்தி போடும். இன்னிக்கு மணிக்கணக்காய் பேசும் உரையாடல்களில் உண்மைத்தன்மை இல்லை. இப்பத்திய உரையாடல்கள் வெறும் டைம் பாஸ் மட்டுமே! தன் பேரை லெட்டர்ல குறிப்பிடாததால் உறவுக்குள் வெட்டுக்குத்து ஆன கதைலாம் இருக்கு.
முதுகில் குத்துவதற்காக ஒருநாளும் என் பணியை நான் செய்யாமல் விட்டதில்லை. அதுமாதிரி மனிதர்களும் விருப்பு வெறுப்பு இல்லாம இருந்தால் நல்லது. கடிதத்தை எழுதி, முகவரியை எழுத மறந்ததால் குப்பையாகிபோன கடிதங்கள் பல. கடிதம் எழுதுவதையே மறந்ததால் குப்பையாகிப்போனேன் நான். கடிதம் அன்பைச் சொல்லும் அழகிய வடிவம். அதை அழித்துவிடாதீர்கள். அந்தப் பழக்கத்தை மீண்டும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் அன்பு மனிதர்களுக்கு இன்றே ஒரு கடிதம் எழுதுங்களேன். காத்திருக்கின்றேன். தெருவோரங்களில் சிவப்புத் தபால் பெட்டிகள் காத்திருக்கின்றன உங்கள் அன்பினை சுமந்து வரும் கடிதங்களுக்காக.... ஒரு கடிதம் எழுதுங்களேன்! உங்கள் உறவையும், என்னையும் புத்தாக்கம் கொள்ள.....
தபால் பெட்டி
ஒரு கடுதாசிப்பெட்டியின் மனஓலம் போலவே இருந்தது இந்த மடல்.
ReplyDeleteதரையில் சாய்ந்து கடந்த சிவப்பு பெட்டி மனதை உறுத்தியது.
'அந்த' வசந்த(தாவின்) காலம் மீண்டும் வருமா ?
அண்ணே! யாரந்த வசந்தா?! உங்க லவ்சா?! இதென்ன 86 கதையா?!
Deleteசாரி துணையெழுத்து தவறுதலாக விழுந்து விட்டது வசந்தகாலம் என்று படிக்கவும்...
Deleteஹை ஹை இந்த டக்கால்டி வேலைலாம் வேணாம்ண்ணே. துணை எழுத்து பிரச்சனை எல்லாருக்குமே உண்டு. ஆனா அடைப்புக்குறிலாம் எப்படி வந்துச்சாம்?!
Delete"நான் அனுப்புவது கடிதம் அல்ல" பாடலை ஷேர் செய்ய விட்டு விட்டீர்கள்! கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே பாடல்... இன்னும் சில பாடல்களும் நினைவுக்கு வருகின்றன.. ஆனால் எவ்வளவு பாடல்கள்தான் ஷேர் செய்யமுடியும்?!!!
ReplyDeleteபழைய இன்லெண்ட் லெட்டரின் வடிவம் நினைவிருக்கிறதா?
இருக்கு சகோ. என்னை பொறுத்த வரையில் பழசை எதும் மறப்பதில்லை. என் பலமும் பலவீனமும் அதே.
Deleteஓரளவுக்கு எழுத்து கூட்டி படிக்க ஆரம்பிச்சபின் எங்க வீட்டில் லெட்டர் எழுதுறது, படிக்குறதுலாம் என் வேலைதான். தப்பும் தவறுமாய் படிச்சா குட்டு விழும். தப்பா எழுதினால் தரையில் குட்டிக்கனும்ன்னு அப்பா சொல்வார்.
நான் எழுதி அனுப்புவது கடிதமில்லை பாட்டை மறக்கமுடியாது சகோ பேசும் தெய்வம் படத்துல சிவாஜி, பத்மினி நடிச்சது. என் அப்பாக்கு பிடிச்ச பாட்டு. அதை வேற காரணத்துக்காக பகிராம வச்சிருக்கேன்
Deleteபல இனிய நினைவுகள் ஞாபகம் வந்தன...
ReplyDeleteபதிவு நம்ம பாணியில் இருந்ததில் ரொம்பவே ரசித்தேன்...
அப்ப மத்ததுலாம்?!
Deleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே
அருமையான தபால் கதை.....மூன்றாம் உலக நாடுகளில் தபால் போக்குவரத்து அருகி வந்தாலும்,இன்றும் தபால் சேவையை ஆரம்பித்த பிரிட்டனில்/தலை நகர் லண்டனில்/புற நகர்ப் பகுதிகளில் தபால்காரர் நடந்து சென்று கடிதங்கள் வினியோகிப்பதைக் காணலாம்.ஃப்ரான்சிலும் வழமை போன்று தபால் சேவை நடைபெற்றுக் கொண்டு தானிருக்கிறது......
ReplyDelete