Monday, October 15, 2018

சூரியன் மறைஞ்சபின் நட்சத்திரத்தை ரசிக்க முடியுமா?! - ஐஞ்சுவை அவியல்

என்ன மாமா பண்ணிட்டிருக்கே!

உன் ஃபிரண்ட் ராஜி தன்னோட பிளாக்ல தாகூர் பொன்மொழிகள்ன்னு சொல்லி சூரியனின் மறைவிற்காக வருந்திக் கொண்டிருந்தால் நட்சத்திரங்களை ரசிக்க முடியாதுன்னு போட்டிருந்தா வாட் எ லைன்?! இப்படி எல்லாத்தையும் ஈசியா எடுத்துக்கிட்டா பிபி வராது, மன உளைச்சல் இருக்காது,  வாழ்க்கையை ஜாலியா வாழ்ந்துட்டு போயிடலாம். 

ஐயோடா!  நீங்கதான் மெச்சிக்கனும் அவளை. அது தத்துவம். போற போக்குல ஜஸ்ட் லைக் தட்ன்னு சொல்லிட்டு போறது. தனக்குன்னு வச்சி பார்க்கும்போதுதான் வலியும், சுகமும் தெரியும்.  பழமொழியும், தத்துவமும் கேட்க நல்லா இருக்கும். ஆனா, நடைமுறைக்கு ஒத்துவராது. அதனால் தத்துவத்தையும், பழமொழியையும், கேட்டமா சிலாகிச்சமான்னு விட்டுட்டு அடுத்த வேலை பார்க்கனும். சொந்த வாழ்க்கைல இதுலாம் இணைச்சு பார்த்துக்கிட்டு இருக்கக்கூடாது.

அப்ப ஒரு உறவோட பிரிவில் இல்லன்னா ஒரு பொருளோட இழப்பில் அப்படியே உக்காந்துட்டிருக்கனும்ன்னு சொல்றியா?!

அப்படி சொல்லலியே! எல்லாமே அவங்கவங்க வளர்ந்த விதம், மனதிடத்தை பொறுத்துதான் அமையும். சிலர் திரிசா இல்லன்னா நயந்தாரான்னு சொல்லிட்டு போய்க்கிட்டே இருப்பாங்க. சிலருக்கு ஒரு மாசம், சிலருக்கு ஒரு வருசம், சிலருக்கு ஆயுசு முழுக்க, சிலர் ஆசிட் அடிக்குமளவு, சிலர் உயிரை கொடுப்பாங்க...  இப்படி அவங்கங்க மனசை பொறுத்து, கால நேரத்துக்கு ஏத்தமாதிரி அமையும். இதுல ஆறுதல், அட்வைஸ்ன்றதுலாம் தேவை இல்லாதது. இழப்புக்காக வருந்தக்கூடாதுன்னு சொல்றமாதிரி எந்த இழப்பும் என்னைய ஒன்னும் பண்ணாதுன்னு சொல்ற மனநிலையும் தப்பு.  இருக்குறதுலயே விளங்கிக்க முடியாதது எதுன்னா மனித மனம்தான். அதனால் சூரியன் இல்லாட்டி நட்சத்திரத்தை ரசிச்சுட்டு போகலாமான்னு அவங்கவங்க மனசுதான் முடிவு பண்ணும். ஒருத்தர் மனசை பத்தி நமக்கு தெரியாது, ஆனா, உலகம் இயங்க கடவுளைவிட சூரியன் தான் முக்கியம். இயற்கைதான் கடவுள் சொல்ற ஆட்கள் சூரியனைதான் முதல் கடவுளா சொல்றாங்க.
எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இந்த இரவு அப்படியே இருக்கக்கூடாதுன்னும், பொழுதே விடியக்கூடாதுன்னும் வேண்டிப்போம். அப்படி பொழுதே விடியாம, சூரியனே வராம இருந்தா என்னாகும்ன்னு சயிண்டிஸ்டுகள் சொல்லி இருக்காங்க. சூரியன் வராத முதல்நாள், நாளின் ஒரு பாதியில் நிலா இருக்கும். இரண்டாவது பாதியில் நிலா இருக்காது. 9நாளில் உலகம் முழுமையும் ஒரே வெப்பநிலையில்தான் இருக்கும். 20வது நாள் அத்தனை நீர்நிலைகளும் பனிக்கட்டியாகிடும். 65வது நாளில் உலகத்தின் வெப்பநிலை 50டிகிரி செல்சியசை எட்டும். 
ஆறாவது ஆண்டின்போது பூமி தன்னோட புவி ஈர்ப்பு விசையை(Center of gravity) இழந்து தன்னோட வட்டப்பாதைல இருந்து விலகி ப்ளூட்டோவோட வட்டப்பாதைய கடந்து சூரியக்குடும்பத்திலிருந்தே (Solar system)இருந்தே வெளிய பறந்து போய்டும்.   பத்தாவது ஆண்டின்போது, பூமியோட வெப்பநிலை
-125°C ஆயிரும். So......., சூரியன் இல்லைன்னா உலகமே இல்ல. பூமி சுத்துறது நின்னிடும்.

பூமி சுத்துறது நின்னுட்டா யாருக்குமே தலை சுத்தல், மயக்கம், வாந்திலாம் வராதுல்ல புள்ள?!

இப்படியே நொள்ளை நாட்டியம் பேசிட்டிரு மாமா. பல்லை பேத்து கைல கொடுத்துர போறேன் பாரு. இப்ப பூமி சுத்துறது நின்னுடுச்சுன்னா என்னாகும்ன்னு பார்ப்போம். இப்ப பூமி, 1,670KM/H வேகத்துல சுத்திக்கிட்டிருக்கு. பூமி சுத்துறது நின்னுடுச்சுன்னா பூமியோட இணைப்பிலில்லாத எல்லாமே வேறுதிசை நோக்கி இழுக்கப்படும். கடல்கள்லாம் ஒரே இடத்தில் நிலையா இல்லாம நகர்ந்துகிட்டே இருக்கும். இதன் காரணமா இதுவரை காணாத பெரிய அளவு சுனாமியால் உலகம் தாக்கப்படும். பூமியின் இயக்கம் நின்ன ஒருவருடம் கழிச்சு பூமியின் ஒருபகுதி சூரியனால் பாதி வருடம் சுட்டெரிக்கும். மற்றொரு பாதி பூமி பாதி வருடத்திற்கு முழு இருட்டாகிடும். கடுங்குளிர், கடும்பனி, சுனாமிகளில் உயிர் பிழைத்த மக்கள் யாராவது இருந்தா அவர்கள் Earth surface க்கு அடியிலதான் இருக்கனும் . இல்ல பூமிக்கு மேல வரனும்னா பிரத்யேகமான உடை தயார் செஞ்சு போட்டுக்கிட்டுதான் பூமியோட நிலப்பரப்புக்கே வரமுடியும்.

ஆத்தாடியோவ்.

அவசரப்படாத மாமா. இன்னமும் இருக்கு. நிலாவே சூரியனோட வெளிச்சத்ததான பிரதிபலிக்குது! அப்பறம் எப்டி நிலா வெளிச்சமா இருக்கும்? நட்சத்திரம்லாம் கண்சிமிட்டும். சோ, சூரியன் இல்லைனா நிலாவும் தெரியாது, நட்சத்திரமும் கண்சிமிட்டாது. உலகமே இருண்டுடும். அப்புறம் எப்படி நிலாவை வச்சிக்கிட்டு உசுர் வாழுறதாம், நட்சத்திரத்தை ரசிக்குறதாம்?! அதனால் பழமொழி, தத்துவம்லாம் கேட்டா, அப்படியா?! நைஸ்ன்னு லைக் பட்டனை தட்டிட்டு போய்க்கிட்டே இருக்கனும். புரியுதா மாமா!? .

சரி, சாப்பாடு எடுத்து வைக்குறேன். போய் கை கழுவிட்டு மாமா. சாப்பிடலாம்.

என்னைய சொல்றதுக்கு முன் நீ கைய கழுவிடி, நீதான் சுத்தமா இருக்க மாட்டே.

அதுலாம் அப்ப. இப்பலாம் அப்படி இல்ல. .

எப்பத்திலிருந்து?!
இன்னியலிருந்து. இன்னிக்கு உலக கை கழுவும் நாள்.

இது முன்னமே தெரிஞ்சிருந்தா உன்னைய கைகழுவி இருப்பேனே! அதுக்குதான் நீ நாள் பார்த்துக்கிட்டு எப்ப எப்பன்னு காத்துக்கிட்டிருக்குறது எனக்கு தெரியும். அதுலாம் என்கிட்ட நடக்காது மாப்ள. இடுப்பை உடைச்சு மூளைல உக்கார வச்சிடுவேன். ஜாக்கிரதை!

சரி, சரி போதும், நீ சொல்ல வந்ததை சொல்லு தாயி...
2008லிருந்து, ஒவ்வொரு அக்டோபர் 15வது நாளை உலக கைகழுவும் தினமா யுனெஸ்கோவினால் அங்கீகரிக்கப்பட்டிருக்கு. குளிக்குறது, பல்துலக்குதல் மாதிரி சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும், கழிப்பறைக்கு சென்று வந்த பின், வெளியிலிருந்து வீட்டுக்குள் வரும்போது, என,.. கைகழுவனும். இதனால் சளி, இருமல், வாந்தி பேதிலாம் வராம தடுக்கலாம். படுக்கையிலிருந்து எழுந்து முதலில் கைகளை நல்லா கழுவினப்பின்னே பல் துலக்க, முகம் கழுவன்னு செய்யனும். ரூபாய் தாள், வளர்ப்பு பிராணிகளை, தொட்டபின்னும் கைகழுவலாம். கருவாடு வித்த காசு மணக்காது. ஆனா, நோய்க்கிருமியை கொடுக்கும்.
கைக்குழந்தைகளை தொடுவதற்கு முன் கைகழுவனும். வயதானவர்களை கவனிச்சுக்குறது நல்லதுதான். அதுக்காக, அவங்களுக்கு பணிவிடை செஞ்சப்பின் கைகளை நல்லா கழுவ மறக்கக்கூடாது. கைகளை அவசர அவசரமா 2-3 நொடியில் கைகழுவாம குறைந்தது 30 நொடிகள் கைகழுவனும்.  குழாய் தண்ணியிலேயே கழுவினாலே போதும். துணி, உடல் சோப்பை கொண்டு கைகழுவாம ஆன்டி செப்டிக் லிக்வைட் சோப் கொண்டு கைகழுவனும். அப்படிப்  பயன்படுத்தும் பட்சத்தில் அதில் 60% ஆல்ஹகால் இருக்குதான்னு பார்க்கனும். கைகளில் ஹாண்ட் வாஷ் லிக்விட்டை தடவி இரு உள்ளங்கைகளையும் நல்லா தேய்க்கனும். பின்னர் ஒரு கையின் கைவிரல் இடுக்குகளிலு இன்னொரு கையால் தேய்ச்சு கழுவனும். பிறகு கைகளை மாத்தி கழுவனும்.  நக இடுக்குகளில் தண்ணீர் விட்டுக்  கழுவனும். இப்படி கழுவினாலே பாதி வியாதி வராம தடுக்கலாம். முக்கியமா, அலுவலகத்திலும், கல்யாண, காது குத்து நிகழ்ச்சிகளில் கைகழுவ சோம்பேறித்தனம் பட்டுக்கிட்டு கைகழுவாம சாப்பிடுவாங்க. சாப்பாடு செமிக்காம வயித்துவலி, வாயுதொல்லைன்னு அவதிப்படுவாங்க. அதுக்கு இதும் ஒரு காரணம்.

ஓ! அட ஆமாம்ல்ல! பலப்பேர் விருந்து சாப்பிட்டு வந்தால்  செரிக்கலை, அது இதுன்னு சொல்வாங்க. நான் எப்பயுமே ஒழுங்கா சுத்தமா இருப்பேன். நீதான் சுத்தம்ன்னா என்ன விலைன்னு கேப்பே. ஜாக்கிரதையா இருந்துக்கோ. நீ நேத்து டிவி, ஆண்டனான்னு பதிவு போட்டிருந்தே, யூட்யூப்ல ஒரு விடியோ பார்த்தேன். அதை உனக்காக கொண்டாந்திருக்கேன். இந்த பாட்டு நினைவிருக்கா?!
ம்ம்ம் நினைப்பிருக்கு. ஞாயிறுகளில் மதியத்தில் இந்த பாட்டை போடுவாங்க. கபில், கமல், கே.ஆர்.விஜயா, பிரதாப் போத்தன், அமிதாப்லாம் வருவாங்க. எனக்கு  இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும். இந்திய ஒருமைப்பாட்டை விளக்கும் விதமா இந்த பாட்டு வரும். 

ம் ரொம்ப சரிதான். இப்ப நான் காட்டப்போகும் படம் திருநெல்வேலியில் ஒரு பகுதியில் இப்படி ஒரு காட்சி.  குப்பையை கொண்டு போய் கரெக்டா குப்பைத்தொட்டிக்கு முன்னாடி போடும் ஆட்களாச்சே! அதை தடுக்க, குப்பைத்தொட்டி முன்னாடி பெருக்கி, கோலம் போட்டு போறாங்க. மனசாட்சி இருக்கவுங்க. அந்த இடத்தை குப்பையாக்காம குப்பைதொட்டில போடட்டும்ன்னு. நல்ல ஐடியால்ல!!

ஆமாம் மாமா! கேள்வி கேட்டு ரொம்ப நாள் ஆச்சுது... 5, ஒன்பதை பயன்படுத்தி 10 விடை கொண்டுவரனும். கூட்டலாம், கழிக்கலாம் என்ன வேணும்ன்னாலும் செய்யலாம். ஆனா 5 ஒன்பதுகளை பயன்படுத்தி, விடை 10ன்னு வரனும். யோசிச்சு வை நான் சாப்பாடு எடுத்து வைக்குறேன்.

நன்றியுடன்,
ராஜி

13 comments:

 1. ​சூரிய, பூமித் தகவல்கள் பயமுறுத்துகின்றன. எல்லாமே சுவாரஸ்யமான தகவல்கள்.​

  ReplyDelete
  Replies
  1. ஜோசியக்காரன் சொன்னா நம்புவோம். அறிவியல்படி சொன்னா நம்பமாட்டோம்.

   Delete
 2. தகவல்கள் அருமை
  நன்றி சகோதரியாரே

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே.
   உங்களுக்கும், உங்க அம்மாவுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்ண்ணே.

   ஒரே கேக்கில் அம்மா, மகன் இருவரும் பர்த்டே கொண்டாடியாச்சுது.

   Delete
 3. அடியாத்தி கை கழுவுறதுக்கு ஒரு தினமா ???

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்ண்ணே. நோய் தொற்றுகளால் பாதிக்காம இருக்க விழிப்புணர்வு உண்டாக்க ஏற்படுத்தப்பட்ட நாள் .

   Delete
 4. ராஜி, சூரியன் இல்லாவிட்டால் நிலா தெரியாது என்பது சரி, ஆனால் நட்சத்திரம் தெரியாது என்பது பிழையான தகவல். நட்சத்திரங்கள் சுய ஒளி உடையவை, பால்வீதியில் அதாவது அண்டவெளியில் நமது சூரியனும் ஒரு நட்சத்திரமே.

  ReplyDelete
  Replies
  1. நட்சத்திரங்கள் சுயசார்பு ஒளியுடையவைன்றதை இன்னிக்குதான் கேள்விப்படுறேன். சூரியன் மாதிரி பல சூரியன் உண்டுங்க சகோ. ஆனா, அத்தனை சூரியனும் ஒளிவீசுவதில்லைன்னு படிச்சதா நினைவு. எல்லா கோள்களும் சூரியனில்லை.

   Delete
 5. //நட்சத்திரம்லாம் கண்சிமிட்டும்//
  சூரியனே ஒரு நச்சத்திரம்ன்னு படிச்ச ஞாவகம் இருக்கே.

  ReplyDelete
  Replies
  1. நட்சத்திரம்லாம் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப தூரத்தில் இருக்குறதால் புள்ளியா தெரியுது. சூரியன் கொஞ்சம் கிட்டக்க இருக்குறதால புட்பால் சைசுக்கு தெரியுது. அம்புட்டுதான். ஆனா, எல்லா நட்சத்திரமும் சூரியனல்ல.

   Delete
 6. அருமையான பதிவு.....மிரட்டவும் செய்கிறது.... ஐஞ்சுவை அவியல் செம........... நன்றி தங்கச்சி,பதிவுக்கு...

  ReplyDelete
  Replies
  1. இயற்கை விளங்கமுடியாததுண்ணே. ஆனா, அழிவு விரைவில் அது மட்டும் சொல்ல முடியும்

   Delete
 7. 5, ஒன்பதை பயன்படுத்தி 10 விடை கொண்டுவரனும். கூட்டலாம், கழிக்கலாம் என்ன வேணும்ன்னாலும் செய்யலாம். ஆனா 5 ஒன்பதுகளை பயன்படுத்தி, விடை 11ன்னு வரனும்...

  யோசிச்சு வை, அப்பாலக்க வர்றேன்...

  ReplyDelete