Tuesday, October 16, 2018

நமக்கு சோறுதான் முக்கியம் - உலக உணவு தினம்


பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது 
தான் பெற்ற உணவை பலரோடும் பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவனை பசி எனப்படும் நோய் தீண்டுவதில்லை 


அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி
வறியவரின் கடும்பசியைத் தீர்க்கவேண்டும். அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப்பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேமிக்கும் இடமாகும். 
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை 
கிடைத்ததைப் பகிர்ந்து கொடுத்துத் தானும் உண்டு, பல உயிர்களையும் காப்பாற்றி வாழும் வாழ்வு, அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.


தவ வலிமை உடையவரின் வலிமை பசியை பொறுத்துக் கொள்ளலாகும், அந்த ஆற்றலும்கூட அப்பசியை உணவு கொடுத்து மாற்றுகின்றவரின் ஆற்றலுக்குப் பிற்பட்டதாகும். இதுலாம் பகிர்ந்துண்ணுதல் பத்தியும், பசி பத்தியும் திருவள்ளுவர் சொன்னது...

ஏதேன் தோட்டத்தில்
ஏவாள் இல்லாமல்கூட
ஆதாமால் வாழ்ந்திருக்க முடியும்!!
ஆனா, ஆப்பிள் இல்லாமல்
ஒரு நாள்கூட
உயிரோடிருந்திருக்க முடியாது.....
ஏன்னா நமக்கு சோறு முக்கியம்.  உணவின் மகத்துவத்தை எல்லா மறைநூல்களும் எடுத்து சொல்லுது. எம்மதமானாலும் பசியாற்றுவதை முதன்மைப்படுத்துது. சாமி இல்லன்னு சொல்லும் ஆசாமிகூட அன்னதானத்தை குறை சொல்வதில்லை. ஏன்னா, உயிரோட்டமுள்ள அனைத்து ஜீவராசிகளும் உயிர்வாழ 'உணவு'அவசியம்ன்னு எல்லாருமே உணர்ந்திருப்பதால்.
ஒவ்வொரு அரிசியிலும் ஒவ்வொரு பேர் இருக்கும்ன்னு சொல்வாங்க. அதுமாதிரி நாம வீணாக்கும் ஒவ்வொரு உணவுத்துகளிலும் இன்னொருத்தர் பேர் இருக்கும்.  அடுத்தவங்களுக்கானதை வீணாக்குதல் பெரும்பாவமாச்சுதே! பசி எல்லா உயிரினத்துக்கும் பொதுவான உணர்ச்சி. அந்த பசியை போக்க இயற்கையே காயாய், கனியாய், இலையாய் வாரி வழங்குது. இயற்கை கொடுப்பதை விலையாக்கி அதை பதுக்கி, வீணாக்கி அடுத்தவரை பசியோடு இருக்க விடுறோம். 
உணவை வீணாக்குவதால் ஒருத்தரை பட்டினி போடுவதோடு,  உணவுப் பொருளை விளைவிப்பதிலிருந்து நம்ம தட்டுக்கு சாப்பாடா வருவதுவரை  செய்வதில் தொடங்கி அவை ஒருவரது வயிற்றுக்குள் செல்வது வரை பலரது உழைப்பு அடங்கி கிடக்கு. ஒரு தானியத்தின் பயணம் மிக நீண்டவை... நெடியவை.... பல போராட்டங்களை கொண்டது. மண்ணை பக்குவப்படுத்தி, தகுந்த நேரத்துல நீர் பாய்ச்சி, விதைச்சு, களையெடுத்து, உரமிட்டு, அறுவடை செய்து, காய வச்சு, தோல் நீக்கி, விற்பனையாகி, வீட்டில் சமைக்கப்பட்டு, நம் தட்டுக்கு வந்து, அதை நாம் சாப்பிட்டு செமிக்கும்வரை ஒரு தானியத்தின் உருவாக்கம் முழுமையடைவது எங்க வேணும்னாலும் தடைபடலாம்.  விதை முளைக்காம போகலாம். இல்ல கதிராகி இருக்கும்போது ஆடு மாடு மேயலாம், அறுவடையின்போது வயலில் சிந்தி பாழாகலாம், வீட்டில் சமைக்க கழுவும்போது தவறி கீழ போகலாம். பூக்கள் பூக்கும்போது தெரியாது கடவுளுக்கு நேர்ந்ததா?! மங்கையை அழகுப்படுத்தவா?! இல்ல இழவு வீட்டுக்கா?! இல்ல பறிக்காமயே வீணாகுதான்னு... அதுமாதிரிதான் தானியமும்...
வளரும் நாடுகள் எதிர்நோக்கியுள்ள மிகப்பெரிய பிரச்சனை மக்கள் தொகைப்பெருக்கமாகும். இதனால், விளைநிலங்கள் குறைஞ்சு, உணவுப்பொருட்களின் விலை உச்சத்துக்கு செல்லும்.   ஒரே ஒரு காஃபிக்கு லட்சக்கணக்கில் பில் கொடுக்கும் இதே நாட்டில்தான் ஒரு பருக்கை உணவாவது கிடைக்காதான்னு கோவில் வாசலிலும், தெருமுனைகளிலும் பலர் கையேந்திக்கிட்டு இருக்காங்க. தின்னது செரிக்காம தூக்கம் வராம புரண்டிருக்கும் ராத்திரியில் பலர் சாப்பிடாமயே தூங்க போறாங்க.  உலகம் முழுமையும் சத்தமில்லாம  பல பட்டினிச்சாவு நடந்துக்கிட்டுதான். அதை நாம கண்டுக்காம கடந்து போய்க்கிட்டுதான் இருக்கோம்.
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு 1945 ஆம் ஆண்டு அக்டோபர் மாசம் 16ந்தேதி ஆரம்பிக்கப்பட்டது. இந்த நாளை நினைவுகூறும் விதமாவும், அனைத்து உயிர்களுக்கும் உணவு கிடைக்க வேண்டும், பசியால் யாரும் வாடக்கூடாது/ உணவு குறித்த விழிப்புணர்வு மக்களிடம் சரியா போய் சேரனும்ன்ற மாதிரியான காரணங்களுக்காக 1979-ம் ஆண்டு ஐநா சபையின் 20-வது பொது மாநாட்டில் அக்டோபர் 16-ம் நாளை உலக உணவு தினமாக அறிவிக்கப்பட்டது. இந்த அமைப்பு 37 ஆண்டுகளை கடந்திருந்தாலும் உலகின் அனைத்து மக்களுக்கும் பொதுவாக, சரிவிகிதமான உணவு கிடைப்பது இன்னும் உறுதி செய்யப்படலை. உற்பத்தி, பகிர்வு, நுகர்வு இவை அனைத்தும் சரிவிகித அளவில் இல்லாமல் இருப்பதே உணவு சார்ந்த பல பிரச்னைகளுக்குக் காரணமாமா இருக்கு.

தனியொரு மனிதனுக்கு  உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்'ன்னு பாரதி பாடி ரொம்ப நாளாச்சுது. ஆனாலும், தினமும் 30 கோடி இந்திய மக்கள் இரவு உணவு இல்லாமலேயே தூங்குறாங்க. 18 கோடி மக்கள் காலை அல்லது மதிய உணவின்றி இருக்காங்க. உலகிலேயே அதிகப்படியான அளவாக இந்தியாவில் 19 கோடி பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதோடு தினமும் ஆயிரக்கணக்கானோர் இப்பிரச்சனையால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் சொல்லுது.  இதில் பெருகிவரும் மக்கள்தொகைக்கேற்ப எல்லாருக்கும் தேவையான உணவு கிடைக்கவும், உணவு உற்பத்தியை அதிகரிக்கவும் தேவையான நடவடிக்கைகளை அரசு சரியாக செய்வதில்லை என்பது முதன்மையான காரணம். எந்த அரசாங்கமும் விவசாயத்தை கவனிப்பதில்லை. விவசாயத்துக்கு முக்கியத்துவம் தரும் எந்த திட்டமும் தீட்டப்படாததால் விவசாயம் பொய்த்து போனதால் உணவு உற்பத்தி குறைந்துள்ளது.

அடுத்த காரணம் வசதி படைத்த பெரும் பணக்காரர்களினால் உயர்த்தப்படும் விலைவாசி உயர்வு, கச்சா எண்ணெய் விலையேற்றத்தால் நடுத்தர, ஏழை மக்கள் மட்டுமே கடுமையான சிக்கல்களை சந்திப்பதுடன் வறுமை நிலைக்கு தள்ளப்படுறாங்க.  இடைத்தரகர்களின் பேராசையால்   பலர் உணவு சாப்பிட வியர்வை சிந்தும் விவசாயிக்கு சாப்பிட உணவில்லை.  இந்த போராட்டம் நம்மூர்ல மட்டுமில்ல, உலகம்  முழுக்கவே இதே நிலைதான்.தென்னாப்பிரிக்காவில் மண்ணால் சுடப்பட்ட ரொட்டிகளை சாப்பிடும் அவலநிலை. இப்படி பல நாடுகளில் பல உணவுப் போராட்டங்கள் தினமும் நடக்குது.  விளைச்சல் குறைவு, கால மாற்றத்தால் தண்ணீர் பற்றாக்குறை, விவசாய வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை, உற்பத்தி பொருட்களுக்கு போதிய விலை இல்லாதது என பல பிரச்சனைகளை விவசாயம் சந்திக்குது.  விவசாயம் பொய்த்ததால், தன் வயித்துப்பாட்டுக்காக விவசாய நிலங்கள்  கட்டடங்களாக மாற்றங்கொள்ளுது. 
உணவு விளைவிக்கவே படாத பாடு பட்டுக்கொண்டிருக்கும் வேளையில், இந்திய நடுத்தர குடும்பத்தினர் , ஒவ்வொருவாரும், ஆண்டுக்கு 100 கிலோ உணவை வீண் செய்றாங்களாம். இதில்லாம, ஒவ்வொரு திருமண மண்டபங்களிலும்  10 - 100 நபர்கக்களான உணவுப்பொருள் வீணாகுதாம்.  இதில்லாம, வேலைக்கு போறவங்க, பள்ளிக் கல்லூரி மாணவ மாணவிகளாலும் பல டன் உணவுப்பொருள் வீணாக்கப்படுதாம்.  இது அத்தனைக்கும் காரணம் உணவுப்பொருள் குறித்த விழிப்புணர்வு இல்லாம இருப்பதே.  இப்படி வீண் செய்யும் உணவுப் பொருட்களாலாயே பசியால் வாடும் மக்களின் உணவுத் தேவையை ஓரளவுக்கு பூர்த்தி செய்ய முடியும். ஆனா, நம்மிடம் மிச்சமாகும் உணவுப்பொருட்களைகூட தேவைப்படுவோருக்கு கொடுக்க நம்மிடம் மனமில்லைன்றதுதான் வேதனையான விசயம்.
ஃப்ரிட்ஜ் வந்ததிலிருந்து பெண்களுக்கு சோம்பேறித்தனமும், குடும்பத்தாருக்கு ஆரோக்கியம் கெடுவதோடு, அடுத்தவருக்கு கொடுக்கும் மனமும் இல்லாம போயிட்டுது. நாளைக்கு காலைல சாப்பிட்டுக்கலாம், மதியத்துக்கு சூடு பண்ணிக்கலாம்ன்னு ஃப்ரிட்ஜை நிரப்பி வைக்குறது. அட, மறுநாளாவது சூடு பண்ணி சாப்பிடுறாங்களான்னா அதுமில்ல. ஃப்ரிட்ஜுக்குள் வைக்கும் பாதி உணவு மறுநாளில் கீழ கொட்டப்படுது. நாலு பேர் கொண்ட குடும்பத்துக்கு மூணு வேளைக்கு உணவாகும் அரிசியை 60ரூபா கொடுத்து வாங்க சலிச்சுக்கும் நாமதான் ஒருத்தர் வயிறுகூட நிரம்பாதா பீட்சா, பர்கருக்கு 100, 200ன்னு செலவழிக்கிறோம்.   பல சத்துகள் நிறைஞ்ச கீரைய பத்து ரூபா கொடுத்து வாங்க யோசிச்சு, வயித்தை கெடுக்கும் பரோட்டாவை இருபது ரூபா கொடுத்து வாங்குறோம். இதுல படிச்சவங்க, படிக்காதவங்கன்னு பாகுபாடே கிடையாது.      
போன கதைலாம் போகட்டும். நாம் அடுத்தவங்களுக்காக யோசிக்க வேணாம். எதிர்காலத்தில்     நம் சந்ததிகளுக்காகவாவது உணவினை     வீணாக்காம இருப்போம். இனி வரும் காலங்களில் உணவுப்பொருட்களை வீணாக்காம சில நடவடிக்கைகளை செய்ய ஆரம்பிக்கலாம். எத்தனை பேருக்கு என்னென்ன சமைக்கபோறோம்ன்னு முன்கூட்டியே திட்டமிட்டு அதுக்கேத்தமாதிரி அளவா சமைக்கனும். தேவையான உணவுப்பொருட்களை மட்டுமே வாங்கனும். டிவி விளம்பரத்துல புதுசா வந்துச்சு, பக்கத்து வீட்டில் செஞ்சாங்கன்னு வாங்கி குமிக்க கூடாது. அதேமாதிரி ஆஃபர் கிடைக்குதுன்னும் வாங்கி அடுக்கி புழுத்து போக விடக்கூடாது.  ஃபர்ஸ்ட் இன், ஃபர்ஸ்ட் அவுட் பார்முலாவை கடைப்பிடிக்கனும். அதாவது, முதலில் வாங்கிய உணவுப்பொருட்களை பயன்படுத்தி தீர்ந்த பிறகே அடுத்த பொருட்களை வாங்குறதுன்னு முடிவெடுக்கனும். இப்படி செய்யுறதால் வாங்கிட்டோமேவென பயன்படுத்துதல், பயன்படுத்தாம உணவுப்பொருட்கள் கெடுதல், வீணாகுதல்ன்னு தடுக்கப்படும்.

வீட்டில் ஃப்ரிட்ஜ் இருக்குன்னு காய்கறிகளை வாங்கிட்டு வந்து அடுக்கி, அழுக வைக்காம, ஓரிரு நாளுக்கு தேவையான அளவுக்கு வாங்கிக்கலாம்.  அதையும் உள்ளூரில் கிடைக்கும் காய்கள், கீரைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாங்குங்க.  பரிமாறும்போது அதிகமா பரிமாறிட்டா, எச்சில்படுத்தாம உடனிருப்பவங்கக்கிட்ட கொடுத்துடனும். தனியாதான் இருக்கோம்ன்னா, கவனமா தேவையான அளவுக்கு வாங்கிக்கலாம். கல்யாணம், காதுக்குத்து நிகழ்ச்சிகளில், ஆட்கள் வருமுன்னமயே பரிமாறாம, வந்தபின் பரிமாறலாம். இதனால், விருந்தினர்களுக்கு பிடிக்காத உணவு வீணாவது தடுக்கப்படும்.  அன்றாடம், வீட்டில் மிச்சமாகும் உணவினை, உடனுக்குடன் அருகிலிருக்கும் தேவைப்படுபவருக்கு கொடுத்துடனும். அதேமாதிரி விசேச வீடுகளிலும் மீதமானதை எதாவது இல்லத்துக்கு கொடுத்துடலாம். வெட்டி பந்தாவுக்காக நாலு ஸ்வீட், எட்டு சாதம்ன்னு இல்லாம பத்தே பத்து தினுசுன்னாலும் நல்லா சுவையா, ஆரோக்கியமா சமைச்சு விருந்தினர்களுக்கு பரிமாறினால் உணவுப்பொருட்கள் வீணாக இருப்பதோடு, அவங்க வயிறும், ஆரோக்கியமும் சீர்கெடாது.

வசதியும், வாய்ப்பும் கிடைக்கப்பெற்றவங்க ஒருநாளைக்கு ஒருவருக்கேனும் ஒருவேளை உணவாவது கொடுப்போம்ன்னு குறிக்கோளாய் வச்சுக்கலாம். இதுக்காக ரொம்ப மெனக்கெட வேணாம். காலைல சமைக்கும்போதே நாலு இட்லி, இல்ல ரெண்டு தோசைன்னும், மதியத்துக்கான சமையலில் கைப்பிடி அரிசியை சேர்த்தாலே ஒரு ஆளுக்கான இருவேளை உணவு கிடைச்சுடும். இதை அழகா பொட்டலமா கட்டி வேலைக்கு இல்ல பள்ளி, கல்லூரிக்கு போறவங்கக்கிட்ட கொடுத்துவிட்டா எங்காவது ஒரு ஜீவன் பசியாறும். ஏன்னா, பசிக்கு சோறு போடுறவங்க கடவுளுக்கு சமம்ன்னு என் அம்மா சொல்லும்.  இப்பலாம் வீடுகளில் மீதமாகும் உணவுப்பொருட்களை வாங்கிட்டு போய், பசியால் வாடும் மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் சமூகசேவகர்கள் ஆட்கள் நிறைய பேர் உருவாகி இருக்காங்க. நாம அப்படிலாம்கூட மெனக்கெட வேணாம். வெளில போறவங்கக்கிட்ட ஒரு பொட்டலம் கொடுத்தனுப்பினாலே போதும். அதேமாதிரி,  திருமணங்களில் பரிமாறப்படும் சின்ன சைஸ் தண்ணி பாட்டிலை கூச்சப்படாம, கொஞ்சம் எடுத்து வந்து நல்லா கழுவி தண்ணி நிரப்பியும் கொடுத்தனுப்பலாம். 

கை இல்லாத, கால் இல்லாத மனுசனை பார்த்திருக்கோம். ஆனா வயிறில்லாத மனுசனை இதுவரை பார்த்திருக்கோமா?! எறும்பு, தேனி மாதிரியான ஒருசில உயிரனம் தவிர வேறெந்த உயிரினமும் உணவுப்பொருட்களை பதுக்கி வைப்பதில்லை. மனிதனை தவிர! உலகளவில், ஆண்டுதோறும் உற்பத்தியாகும் உணவில், மூன்றில் ஒரு பங்கு வீணாக்கப்படுகிறது என்றும், இவ்வாறு வீணாக்கப்படும் அனைத்துவகை உணவைக் கொண்டும் பசியில் வாடிக் கொண்டிருக்கும் ஐம்பது கோடி பேருக்கு உணவு அளிக்கலாம் என்ற கருத்தை ஐ.நா வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு [  F.A.O ] தெரிவித்துள்ளது. அதனால், ஒரு பருக்கைகூட தட்டில் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவதோடு, தேவையான அளவில் சமைக்கவும், ஒருவேளை மீதமானால் உடனுக்குடன் தேவைப்படுவோருக்கு கொடுப்பதோடு,  தினத்துக்கு ஒருவேளையாவது பசியோடு இருப்பவர் ஒருவருக்கு உணவினை வழங்குவோமெனவும், விவசாயத்தை ஊக்குவிப்பதெனவும் முடிவெடுப்பதோடு, அடுத்தவங்களுக்கும் இதை சொல்வோம். புத்தி சொல்வதில் தப்பே இல்ல.  உணவுப் பொருட்களை சேமிப்பதோடு மற்றவருக்கும் உணவு சேமிப்பின்  அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வூட்டுவது நமது கடமைகளில் ஒன்றாகும். செய்வீர்கள்தானே?!

நன்றியுடன்,
ராஜி

14 comments:

 1. என்ன சொல்லி என்ன ப்யன் பசித்தவன் மு கடவுள் கூட உணவு ரூபத்தில்தான் வர முடியும் ஒரு நாளுணவை ஒழியென்றால் ஒழியாய் , இரு நாளுக்கேலென்றால் ஏலாய் இடும்பை கூர் என்வயிறே உன்னோடு வாழ்தல் அரிது

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்ப்பா . பாடாய் படுத்துது இந்த வயிறு.

   Delete
 2. நமது அடுத்த சந்ததியினரை நினைத்தால் பாவமாக இருக்கிறது...

  ReplyDelete
  Replies
  1. நம்ம பிள்ளைகள்கூட சமாளிச்சுடுவாங்க. ஆனா, நம் பேரப்பசங்க.. அதுங்க பிள்ளைகள்லாம் என்ன சாப்பிடுவாங்க?! மனிசனை மாதிரியான சுயநலமி ஏதுமில்ல

   Delete
 3. //ஃபர்ஸ்ட் இன், ஃபர்ஸ்ட் அவுட் பார்முலாவை கடைப்பிடிக்கனும். அதாவது, முதலில் வாங்கிய உணவுப்பொருட்களை பயன்படுத்தி தீர்ந்த பிறகே அடுத்த பொருட்களை வாங்குறதுன்னு முடிவெடுக்கனும். இப்படி செய்யுறதால் வாங்கிட்டோமேவென பயன்படுத்துதல், பயன்படுத்தாம உணவுப்பொருட்கள் கெடுதல், வீணாகுதல்ன்னு தடுக்கப்படும்.//

  அருமையாக சொன்னீர்கள் ராஜி. நான் ஒவ்வொரு முறையும் கடைக்கும் போகும் போது நினைத்து செயல்படுத்த நினைப்பது. முன்பு லிஸ்ட் கொடுத்து விட்டால் வீட்டுக்கு வரும் . பிரச்சனையே இல்லை. அளவாய் வாங்கினோம். நாமே பார்த்து எடுத்து கொள்ளும் கடை வந்ததும் கண்டதை பரீட்சை செய்து பார்க்க என்று வாங்கி வரும் பழக்கம் வந்து விட்டது. கொஞ்ச கொஞ்சமாய் குறைத்து வருகிறேன்.

  அருமையான விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி.

  பனி பொழியும் நாட்டில் விலங்குகள் குளிர்காலம் வரும் முன் சேர்த்து வைக்கும். குளிர் காலத்தில் அதற்கு உணவு கிடைக்காது.

  ReplyDelete
  Replies
  1. நான் கடைக்கு போனால் குதிரைக்கு லாடம் கட்டிய மாதிரி தேவையானதை மட்டுமே வாங்குவேன். மளிகைப்பொருட்கள் வாங்கி வந்தபின் புதுசுலாம் கீழ அடுக்கிட்டு, பழசை மேல அடுக்கி வைப்பேன். அதுவரைக்கும் நல்ல பிள்ளைதான்.

   ஆனா, ரெண்டு மூணு மாசத்திய பாக்கெட் இருக்கும். சிலது ஆறுமாசம் வரைகூட இருக்கும். சமைக்கும்போது மட்டும் தேவைக்கானது மட்டும் சரியா சமைப்பேன். அப்படியும் பசங்க எதாவது சாப்பாடு வேணாம்ன்னு சொதப்பினாலும் நோ பிராப்ளம். பழசை சாப்பிட என் பிள்ளைகளுக்கு கத்து கொடுத்திருக்கேன்ம்ம்மா.

   பனிபொழியும் நாட்டு விலங்குகள் உணவுப்பழக்கம் எனக்கு புதுசும்மா

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா.

   Delete
 4. உலகளவில், ஆண்டுதோறும் உற்பத்தியாகும் உணவில், மூன்றில் ஒரு பங்கு வீணாக்கப்படுகிறது

  வேதனையாகத்தான் இருக்கிறது

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்ண்ணே. ஆளுக்காள் உணவினை வீணாக்கிட்டு இருக்கோம்.

   Delete
 5. ருசியான தகவல்கள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோ

   Delete
 6. உலக உணவு தினத்தன்று ஏற்ற, தேவையான பதிவு.

  ReplyDelete
  Replies
  1. உணவு தினம்ன்னு தெரிஞ்சுதான் போட்டேன்பா. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா

   Delete
 7. வணக்கம் அன்னபூரணி தாயே..,

  ReplyDelete