Sunday, May 10, 2020

கள்ளழகர் அருள் புரிவாரா?!

90களில் வந்த சினிமாக்களின்  வந்த தாக்கமா?! இல்ல, அப்பா கொஞ்ச நாள் கமுதியில் வேலை செஞ்சதால் வந்த விட்டக்குறை, தொட்டக்குறையான்னு தெரியாது. மதுரை, சோலைமலை, அருப்புக்கோட்டை, கன்னியாகுமரி, குற்றாலம் , தென்காசி, தேனின்னு தென் தமிழகத்தின்மீது எனக்கு மோகம் அதிகம். .  சாக்லேட்டை காட்டி குழந்தையை கடத்துறமாதிரி உன்னைய தென் தமிழகம் கூட்டிப்போறேன்னு யாராவது கடத்தப்போறாங்கன்னு பசங்க கிண்டல் செய்யுமளவுக்கு தென் தமிழகத்தின்மீது மோகம். ஆனா, என் தொடக்கம் ஆரம்பிச்ச அதே தென் தமிழகத்தில்தான் முடிவும் அமையனும்ன்னுதான் என் ஆசை.. பார்க்காமலே நட்பு கொண்ட பிசிராந்தையார், கோப்பெருஞ்சோழனைப்போல, கேள்விப்பட்டதை வைத்து பார்க்காமலே சிலருக்கு சில ஆசைகள் இருக்கும். இன்ன இடத்துக்கு போகனும், இதை பார்க்கனும்ன்னு...  அப்படி கேள்விப்பட்டதை வைத்து பார்க்க நினைச்சது அருப்புக்கோட்டையில் நடக்கும் கத்தி போடும் திருவிழாவும், கள்ளழகர் திருவிழாவும்..

எங்க ஊர்பக்க திருவிழாக்களில் பெருசா சுவாரசியம் இருக்காது. இரவு காப்பு  கட்டி, செவ்வாய் அல்லது வெள்ளியில் கூழ் ஊற்றி, மாலையில் ஊரணி பொங்கல் வைத்து, இரவு சுவாமி ஊர்வலம் மற்றும் தெருக்கூத்தோடு முடிஞ்சுடும். இதான் எங்க ஊரு திருவிழாக்கள். பெருசா அன்னதானம், பின்னனி கதைகள்ன்னு ஏதும் இந்த திருவிழா இருக்காது. தென் தமிழகத்தில் நாங்க இருந்த கமுதியை ஒட்டிய கிராமத்தில் நடக்கும் திருவிழாவை பற்றி அம்மாவும், அப்பாவும் கதைகள் பல சொல்வாங்க.. அதை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது.  முப்பது வருசம் கழிச்சு கத்தி போடும் திருவிழா 2014ல் நடக்க,  அழைப்பு வந்ததும் கிளம்பி திருவிழாவை ரசித்தோம். 


படம்: பெரிய வீட்டு பண்ணக்காரன்  (1990)

கள்ளழகர்(1995)
தேவராட்டம் (2019)

அடுத்த ஆவலை தூண்டியது கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா. ரெண்டு வருசத்துக்கு முந்தி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாவை டிவியில் பார்த்ததிலிருந்து திருவிழாவுக்கு போகனும்ன்னு ஆசை. ரெண்டு நாளுக்குமுன் நடந்த கள்ளழகர் திருவிழா நேரலை மறந்திருந்த ஆசையை  விசிறிவிட்டுடுச்சு.  ரெண்டு நாளா தேடித்தேடி யூட்யூபில் கள்ளழகர் பாட்டும்,  கதைகளைதான் கேட்குறதே!   இந்த வருசம் அழகரே ஆற்றுக்கு வரல. அடுத்த வருசம் அழகர் ஆற்றுக்கு வரவும், அதை காண மதுரைக்கு நான் வரவும் கள்ளழகர்தான் அருள் புரியனும்.

நன்றியுடன்,
ராஜி


 

8 comments:

 1. நான் மதுரையில் இருந்து இந்தத் திருவிழாக்களை ரசித்தவன். இப்போது முப்பது வருடங்களுக்கும் மேலாய் சென்னை வாசம்!

  ReplyDelete
 2. இயற்கை தான் பதில் தர வேண்டும்...

  ReplyDelete
 3. சித்திரைத் திருவிழா பார்க்கும் ஆசை எனக்கும் உண்டு. எப்போது வாய்க்குமோ?

  காணொளிகள் பிறகு தான் பார்க்க வேண்டும்.

  ReplyDelete
 4. விழாக்களை ரசித்தல் என்பது சிறப்பு. அதுவும் நமக்குப் பிடித்த விழாக்கள் என்றால் அதனினும் சிறப்பு. கும்பகோணத்தில் நடக்கும் எந்தவொரு கோயில் விழாவும் எங்கள் ஊர் திருவிழாவாக நினைப்பதில்லை. எங்கள் வீட்டுத் திருவிழாவாகவே நினைப்போம். பள்ளிக்காலத்தில் எங்கள் வீட்டிற்கு அருகேயுள்ள கும்பேஸ்வரர் கோயிலில் வெளிப்பிரகாரத்தில் சென்று விளையாடுவோம். அப்போது மேல வீதி வாசல் வழியாகச் சென்று வடக்கு வீதி வாசல் வழியாக வருவதும், தெற்கு வீதி வாசல் வழியாகச் சென்று மேல வீதி வாசல் வருவதும் ஆற்றில் ஒரு கரையிலிருந்து மற்றொரு கரைக்குச் செல்வதைப் போல. தவிரவும் அவ்வாறு விளையாடும்போது எங்களுக்கு எங்கள் வீட்டில், மாடியில், கொல்லைப்புறத்தில் விளையாடுவதுபோலவே இருக்கும். அந்த இன்பத்திற்கு எல்லையேது?

  ReplyDelete
 5. கமுதி என்றால் முதுகுளத்தூர், திருச்சுழி ஏரியாவா ?

  அவரை சொல்லும்போதே கள்ளர் என்று சொல்லலாமா ? பிறகு ஏமாற்றி விடுவார் கள்ளழகர்.

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம் திருச்சுழி தெரியாது. ஆனா, முதுகுளத்தூர் பக்கம்ன்னு தெரியும்.. அங்க வேப்பங்குளம், கரிசல் குளம், நீராவின்னு ஊர் இருக்கு. நீராவிலதான் என் அப்பா முதன்முதலா வேலைக்கு போய் சேர்ந்தாருண்ணே. எனக்கு பிடிச்ச ஊர். மொத்தமே நாலு தெருதான் இருக்கு. ஆனா, பாசமான ஆட்கள். அப்பா அந்த ஊரிலிருந்து வந்து 40 வருசமாச்சு. இன்னமும் நட்பு தொடருது.

   Delete
 6. எனக்கும் கோவில் திருவிழாக்கள் பார்க்க ஆசை. எங்கள் ஊரில் தெப்பத் திருவிழா விசேஷம்... அது ஒரு காலம். பிறகு நாட்டுப் பிரச்சினையோடு எல்லாம் மாறிப் போயிற்று. நல்லூர்த் திருவிழா ஒரேயொரு வருடம் பார்க்க்கக் கிடைத்தது. வெசாக், பிரச்சினை இல்லாத காலத்தில் ஒவ்வொரு வருடமும் போவோம். ஒரு வருஷம்... யாரோ ஒரு நல்லவர் விலாசம் விசாரிப்பது போல் அருகே வந்தார். சட்டென்று என் கழுத்திலிருந்ததை உருவிக் கொண்டு ஓட, என் குட்டீஸ் திருதிருவென்று பார்க்க, நான்... இந்தச் சமயத்தில் சினிமாவிலெல்லாம் கத்துவார்கள் என்பது நினைவில் வந்து சங்கடமாக மெதுவே கத்த, சின்னவர்கள் அழ, க்றிஸ் & சிலபலர் கள்ள அழகரை விட்டுத் துரத்த... அது பெரிய சோகக் கதை. போலிஸ் ஸ்டேஷன் ஏறி இறங்கினேன். பிறகு ஒரு ஆறு மாசம், என் பின்னால் யார் வந்து கூப்பிட்டாலும் திக்கென்று விறைத்துப் போவேன்.

  ReplyDelete
 7. அடுத்த வருடம் காண நல்லருள் கிடைக்கட்டும்.

  ReplyDelete