Monday, May 11, 2020

இப்படியா சோறு திம்பாங்க?! - ஐஞ்சுவை அவியல்

மாமா ! என் ஃப்ரெண்ட் ராஜி தன்னோட பையன்கூட வாக்குவாதம் பண்ணிக்கிட்டிருந்தா.

என்னவாம்?! உன் ஃப்ரெண்ட் ஒரண்டை இழுக்காத ஆள் யாராவது இருக்காங்களா?! எல்லார்க்கிட்டயும் சண்டை இழுக்குறதே அவளுக்கு வேலை. சரி, பெத்த புள்ளைக்கிட்ட எதுக்கு சண்டை போட்டாளாம்?! 


அப்பு புதுசா வாங்குன தன்  வண்டியின் முன்பக்கத்தில் தன்னோட  பேரும், சிறகு இருக்கும் ஒரு கொம்பை, இரு பாம்புகள் பின்னி இருக்குற மாதிரி ஒரு குறியீட்டை வரைஞ்சு வந்திருக்கான். இதை ஏன்டா வரைஞ்சேன்னு ராஜி கேட்டதுக்கு, இது மருத்துவத்துக்கான குறியீடு, இதை டாக்டர்கள், நர்ஸ், ஹாஸ்பிட்டல், ஆம்புலன்ஸ், மருத்துவம் சார்ந்த தொழிலாளர்கள், வண்டிகள், இடங்களில் பயன்படுத்தலாம், நான் பிசியோதெரபி படிக்குறதால், நான் என் வண்டியில் வரைஞ்சுக்கிட்டேன்ன்னு சொல்லி இருக்கான்.

சரியாதானே சொல்லி இருக்கான்?! அப்புறம் எதுக்கு புள்ளைய திட்டினா?!

யார்கிட்ட கதை விடுறே! ஆம்புலன்ஸ்சில் சிகப்பு கலர்ல ப்ளஸ் குறிதான் இருக்கும். நிறைய டாக்டர்கள் தங்களோட வண்டிகளில் அதைதான் போட்டிருக்காங்க. நான் நிறைய அதுமாதிரி பார்த்திருக்கேன்னு சொல்லி இருக்கா.

ராஜி சொல்றதும் சரிதானே?!

மாமா! யாராவது ஒருத்தங்க பக்கமா பேசுங்க! ரெண்டு பேரில் யார் சொல்றது சரி?!


ரெண்டு பேரும் சொல்வதுமே சரி. பரவலா சிவப்பு கலர் ப்ளஸ்தான் மருத்துவமனை, ஆம்புலன்ஸ்சில், ஹாஸ்பிட்டலில் இருக்கு.  ஜெனிவா ஒப்பந்தப்படி போர்க் காலங்களில் மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்பவர்களும், மருத்துவ உதவி செய்பவர்களும் வெள்ளை நிறத்து பிண்ணனியில் சிவப்பு நிறத்து பிளஸ் குறியீட்டை பயன்படுத்துவாங்க. இதுக்கு ரெட்கிராஸ்ன்னு பேரு. நம்ம ஊரு ஸ்வஸ்திக்ல இருந்து இந்த குறியீடு வந்ததுன்னு நம்மாளுங்களும், இல்லை எங்க சிலுவை சின்னத்திலிருந்து வந்ததா கிறிஸ்துவர்களும் சொந்தம் கொண்டாட, உங்க ரெண்டு பேரு சகவாசமே வேணாம்ன்னு  அரபு நாட்டினரும், இன்னும் சில நாட்டினரும் இந்த குறியீட்டுக்கு பதிலா பிறை, சிங்கம், செம்படிகம்ன்னு வேறு சில குறியீட்டையும் பயன்படுத்திக்கிட்டாங்க. 1864ல் போர்ப்படையில் மருத்துவப்பிரிவினர் தங்களை தனித்து அடையாளப்படுத்திக்க இந்த ரெட்கிராஸ் சின்னத்தை பயன்படுத்திக்க ஆரம்பிச்சாங்க.  தூரத்திலிருந்தும் பளிச்சுன்னு இந்த குறியீடு தெரியும் காரணத்தினாலும், உதவி தேவைப்படுறவங்க சுலபமா அடையாளம் காணவும், சுலபமா வரையக்கூடியதாலும் இந்த குறியீடு உலகம் முழுக்க பரவிச்சு.  ஹாஸ்பிட்டல், ஆம்புலன்ஸ்,  மருந்துக்கடைன்னு எல்லாரும் இந்த குறியீட்டை பயன்படுத்தி வர்றாங்க. ஆனா, மருத்துவத்துக்கான குறியீடுன்னு பார்த்தா அப்பு வரைஞ்ச கொம்பை சுத்தி இரு பாம்புகள் இருக்கும் படம்தான் சரியானது.


சரி, இந்த குறியீட்டின் அர்த்தம் என்ன மாமா?!

நமக்கு எதுவுமே சாமிக்கிட்ட ஆரம்பிச்சாதான் புரியும், கடைப்பிடிப்போம். அதனால், ஆன்மீக காரணத்தை சொல்றேன். சிவன் கோவில்கள், ஆல/அரச/வேப்ப மரத்தடியில் இரு பாம்புகள் பின்னி இருக்கும் சர்ப்ப பிரதிஷ்டைகளை பார்த்திருப்போம். இந்த பிரதிஷ்டையை தினமும் தரிசனம் செய்தால் நாம் செய்த கர்மவினைகள் நீங்கும், தீராத வியாதிகள் எல்லாம் தீரும்ன்றது நம் நம்பிக்கை. இதை பார்த்துதான் இந்த குறியீடு உண்டாக்கினதா சொல்றாங்க.

ஜோதிட ரீதியா செவ்வாய்கிரகம் நோய்க்கு காரணமான ரோகக்காரன்னும், பகைக்கு காரணமான சத்ருகாரகன்னும், கடன் தொல்லைக்கு காரணமான ருணக்காரன்னும் சொல்வாங்க. இந்த செவ்வாய் கிரகம் ஆயில்யம் நட்சத்திரத்தன்னிக்கு  செயலற்று போகும்ன்னு ஜோதிடம் சொல்லுது. ஆயில்யம்ன்னா பிண்ணிக்கொள்வதுன்னு ஒரு அர்த்தமாம். ஆயில்யம் நட்சத்திரத்தின் குறியீடா பிண்ணிக்கொண்டிருக்கும் பாம்பைதான் சொல்றாங்க. அதனால்தான் மருத்துவம் பார்க்க ஆயில்யம் நட்சத்திரம் சிறந்ததுன்னு சொல்றாங்க. அதனாலும் இந்த குறியீடு வந்ததா சொல்றாங்க.

இனி இன்னொரு காரணத்தை பார்க்கலாம்!! கிரேக்கர்களை பொறுத்தவரை மருத்துவம்ன்றது கடவுள் தந்த பரிசுன்னு இன்னமும் நம்புறாங்க.  ஒலிம்பஸ் மலையில் உள்ள கடவுளின் தூதரான ஹெர்ம்ஸ் என்பவர் காடூசியஸ்ன்ற மந்திரக்கோலைகோலை கையில் வச்சிருப்பார். இந்த மந்திரக்கோலை அவருக்கு கிரேக்க கடவுளான அப்பல்லோ, ஹெர்ம்ஸ் உடனான தனது நட்புக்கு அடையாளமாக இந்த காடூசியஸ்ன்ற மந்திரக்கோலை பரிசாக தந்தார். இரண்டு பாம்புகள் பிண்ணி பிணைந்தபடி இருக்கும் ஒரு தடி. அந்த தடியோட மேற்பகுதியில் இறக்கைகள் இருக்கும். காடூசியஸ் மந்திரக்கோலில் நடுவில் இருக்கும் தடி நமது தண்டுவடத்தை குறிக்கும்.   இரண்டு பாம்பில் ஒன்று விசம்(நோய்) இன்னொரு பாம்பு அந்த விசத்தினை முறிக்கும் மருந்து(குணப்படுத்துதல்) ன்னு அர்த்தம். இப்படி பின்னி பிணைந்த பாம்புகள் ஆண், பெண்ணின் சேர்க்கை எனவும் சொல்றது உண்டு. சித்த மருத்துவப்படி இரும்பை தங்கமாக்கும் ரசவாதத்தில் இந்த தடியில் இருக்கும் ஆண் பாம்பு கந்தகம் எனவும், பெண் பாம்பு பாதரசம்ன்னும் சொல்றாங்க.   இரண்டு கொள்கைகளின் தொடர்புகளின் அடையாளமாகும். இரண்டு பின்னிப் பிணைந்த மற்றும் பாம்புகளை ஒன்றிணைக்க ஆர்வமாக இருப்பது ஞானத்தை வெளிப்படுத்துதுன்னும் சொல்றாங்க.  காடூசியஸ்சில் இருக்கும் சிறகுகள் இரண்டும் காற்றை  அடையாளமா கொண்டது. எந்த தடை இருந்தாலும் காற்றைப்போல எல்லா இடத்திலும் நுழையும் தன்மைக்கொண்டது மருத்துவம்ன்னு இந்த குறியீடு சொல்லாம சொல்லுது. 16ம் நூற்றாண்டிலிருந்துதான் இந்த காடூசியஸ் குறியீட்டை பரவலா பயன்படுத்த ஆரம்பிச்சாங்க.  

அதென்ன மாமா கொடிய விசம் கொண்டதும், உயிரை எடுக்கும் பாம்பை போயி உயிர் காக்கும் மருத்துவத்துக்கு குறியீடா வச்சிருக்காங்க. 


மனிதன் உருவான காலத்தில் தன் உயிருக்கு ஆபத்து தரும்  மிருகங்களையும் இடி, மின்னல், மழை மாதிரியான இயற்கை சீற்றங்களை கண்டு பயந்தான். தன்னால் கட்டுப்படுத்த முடியாததையும், தான் பயப்படுவதையும் கடவுளாய் பாவிக்கும் வழக்கம் மனிதனின் ரத்தத்தில் ஊறிப்போன ஒன்று.  அதுமாதிரிதான் பாம்பு, சிங்கம், புலி, காற்று, நெருப்புலாம் வணங்கினான். எழுத, வரையும் கலை வந்தபின் இயற்கை சீற்றங்கள் கடவுளின் அம்சமானது. மிருகங்கள் அந்த கடவுளுக்கு வாகனமாகின. பாம்பினை வாழ்க்கை மற்றும் மனிதனை மீளுருவாக்கம் செய்யும் சக்தியாக ஆதிமனிதர்கள் வணங்கினர்.   உயிரை பறிக்கும் பாம்பின்கொடிய விசத்திலிருந்து ஏகப்பட்ட உயிர்காக்கும் மருந்துகள் தயாரிக்கப்படுது. அதனால்தான்  பாம்பு  மருத்துவ குறியீட்டில் இடம்பெற்றது.  அதனால்தான் எல்லா கடவுளும் பாம்பினை வச்சிருக்காங்க. 

அதேமாதிரிதான், மருந்து கடைகளிலும், டாக்டர் கொடுக்கும் மருந்து சீட்டிலும் Rxன்னு இருக்கும் Reciepeன்ற லத்தீன் மொழில இருந்துஅ வந்தது.  இதுக்கு என்ன அர்த்தம்ன்னா  எடுத்துக்கொள்ளவும்ன்னு  அர்த்தம். 

சரி மாமா! ராஜி பொண்ணூ கல்யாண பத்திரிக்கையில் சீமந்த புண்ணிய புத்திரின்னு இருந்துச்சே அதுக்கு என்ன அர்த்தம்?!
முதல் குழந்தையை சீமந்த புண்ணிய புத்திரன்/புத்திரின்னு சொல்வாங்க. ஒரு பெண் முதல் குழந்தையை கருவில் சுமக்கும்போது சீமந்தம் என்னும் வளைகாப்பு சடங்கு நடத்துவாங்க.  ரெண்டாவது. மூணாவது குழந்தையை சுமக்கும்போது வளைகாப்பு சடங்கு நடத்தமாட்டாங்க. ஏன்னா, முதல் குழந்தையை சுமக்கும்போது பிரசவத்தை எண்ணி பயம் இருக்கும். அதை போக்கும்விதமா இப்படி விழா நடத்துவது உண்டு. அதனால்தான் முதல் குழந்தையை அப்படி சிலர் சொல்வதுண்டு. இன்னும் சில பத்திரிக்கைகளில்  மாப்பிள்ளை/ பொண்ணு பேருக்கு முன் திருவளர்ச்செல்வன்/செல்வின்னும், திருநிறைச்செல்வன்/செல்வின்னும் போடுறதை பார்த்திருக்கோம்.  திருவளர்ச்செல்வன்?செல்வின்னா அந்த குடும்பத்தின் மூத்த மகன்/ள்ன்னும்,  இதுதான் முதல் கல்யாணம், இன்னும் பசங்க எங்களுக்கு இருக்காங்கன்னு உங்க வீட்டுக்கு பொருந்துமான்னு பாருங்கன்னு சொல்லாம சொல்லுறதுக்காக இப்படியொரு குறிப்பு. அதேப்போல, திருநிறைச்செல்வன்/செல்வின்னா இது எங்க குடும்பத்தின் கடைசி மகன்/மகளின் திருமணம்.  இனி எங்க வீட்டில் கல்யாணத்துக்கு ஆள் இல்லன்னு மறைமுக சொல்றதுக்காக இந்தமாதிரி பத்திரிக்கையில் போடுறாங்க.

இது எதுவுமே இல்லாம, இங்கிலீஷ்ல அடிக்கும்போது, பொண்ணோட பேருக்கு முன்னாடி SOWன்னு போடுறாங்க. இதுக்கு என்ன அர்த்தம்ன்னு கேட்டால் சௌபாக்கியவதியை சுருக்கி சௌன்னு போடுறதா சொல்றாங்க. அட! கூறு கெட்ட குக்கருகளா! SOWன்ற இங்கிலீஷ் வார்த்தைக்கு பெண்பன்றின்னு ஒரு அர்த்தமிருக்குன்னு பத்திரிக்கை வைக்க வர்றவங்கக்கிட்ட சொல்லத்தோணும். ஆனா, என்ன நினைச்சுப்பாங்களோன்னு அமைதியா விட்டுடுறது. கல்யாண பத்திரிக்கை அடிக்கும்போது இதுலாம் கவனத்தில் வச்சுக்கனும். 

போதும் மாமா! இப்பவே நம்ம பதிவுலாம் ரொம்ப நீளம்ன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. இந்த பதிவையாவது இத்தோடு நிறுத்திக்கலாம்.
சரி புள்ள ! போறதுக்கு முன்னாடி பதிவு படிச்ச களைப்பு நீங்க ஒரு குட்டிப்பாப்பா சோறு திங்கும் அழகை பார்த்திட்டு போகட்டும்..
ஒரு பருக்கை இலையிலும் இல்லை. கையிலும் இல்ல. அதோட அம்மா ஊட்டும் சோறும் வாய்க்குள் போகல. வீடு க்ளீன் பண்ணும் வேலை இருந்தாலும் பரவாயில்லைன்னு குழந்தையை தானே சாப்பிட விட்டிருக்காங்க பாருங்க. அதுக்கே வாழ்த்தலாம் மாமா!

நன்றியுடன்,
ராஜி


Up pointing backhand index

6 comments:

 1. மருத்துவ துறை சிம்பல் பற்றி நல்லதொரு விளக்கம்..... ஆமாம் இவ்வளவு பெரிய பதிவை வீட்டு வேலைகளை பார்த்துக் கொண்டும் கூட பிண்ணிக் கொண்டும் டிவி சீரியல் பார்த்துக் கொண்டும் மாமாவிடம் வம்பு இழுத்துக் கொண்டும் எப்படி எழுதுறீங்க? அதை பற்றி ஒரு பதிவு போடுங்களேன்

  ReplyDelete
 2. நல்ல சுவையான விளக்கங்கள்.

  ReplyDelete
 3. பயனுள்ள தகவல்கள் சகோ.
  ரசிக்க வைத்த நடை.
  காணொளி ஸூப்பர்.

  ReplyDelete
 4. விளக்கங்கள் அனைத்தும் அருமை...

  குழந்தை செய்யும் சேட்டையை மிகவும் ரசித்தேன்...

  ReplyDelete
 5. தகவல்கள் அனைத்தும் சிறப்பு.

  குழந்தையின் குறும்பு - ரசித்தேன்.

  ReplyDelete
 6. குழந்தையின் செயல்கள் ரசனை.

  ReplyDelete