Friday, May 22, 2020

சிவன்மலையில் வீற்றிருப்பது யார்?! - புண்ணியம் தேடி..


சின்ன மகளின் கல்லூரி மேற்படிப்புக்காக  கோவை பயணத்தின்போது  சிவன்மலைக்கு போகலாம்ன்னு அப்பா சொன்னதும் அங்க சிவன்தான் இருப்பார்ன்னு நினைச்சேன்.  மலையடிவார நுழைவு வாயிலிலேயே தெரிஞ்சுது மலைக்குமேல் குடிக்கொண்டிருப்பது சிவன் இல்லை. அவரோட சன் முருகன்தான்னு.. அப்பா கட்டிய வீட்டில் பிள்ளைங்க இருக்குற மாதிரி சிவன்மலையில் முருகன் இருக்கார்ன்னு நினைச்சுக்கிட்டேன்.  இந்த தலத்தை வாழ்நாளில் மறக்கமுடியாத இன்னொரு நிகழ்வு, என் பையன் முதன்முதலா கார் ஓட்டிக்கிட்டு மலைமீது ஏறினது இங்கதான்.  கொஞ்சம் பயத்தோடுதான் காரை ஓட்டினான். தைரியம் சொல்லி கூட்டிப்போனோம். நல்லாவே ஓட்டி பத்திரமா கீழிறங்கி வந்துட்டோம். அவன் பதட்டம் ரசிக்க வைத்தது.அசுரர்களை அழிக்க சிவப்பெருமான் மேரு மலையை வில்லா வளைக்கும்போது, அப்ப தெறிச்சு விழுந்த ஒரு துண்டுதான் இந்த சிவன்மலைன்னு தலவரலாறு சொல்லுது. கூடவே, இங்க, பார்வதியும், அகத்தியரும் சிவனை நோக்கித் தவம் செஞ்சிருக்காங்க. வள்ளிமலைக்குச் சென்று வள்ளியை மணம்முடித்த முருகன் வள்ளியுடன் இங்கு கொஞ்சநாள் குடிகொண்டதாகவும் தல வரலாறு சொல்லுது.
இணையத்தில் சுட்டது...
ரொம்ப காலத்துக்கு முந்தி இந்த சிவன்மலை அடிவாரத்தில் சில சித்தர்கள் தங்கி இருந்தாங்களாம். அப்படி தங்கி இருந்தவர்களில் சிவவாக்கிய சித்தர்ன்னு ஒருத்தரும் இருந்தாராம்.  இவர் அதிகாலை சூரியன் உதிக்கும் முன்பே,  சித்தர்கள் ஆசிரமத்தில் இருந்து வெளியே சென்றுவிடுவார். சூரியன் மறைந்த பின்புதான் ஆசிரமத்திற்கு திரும்புவாராம். உடன் இருக்கும் சித்தர்கள் உட்பட யாரிடமும் பேசாமல் மௌனவிரதம் இருந்து வந்தாராம். எங்கே செல்கிறீர்?! என்ன செய்கிறீர்கள்?! சாப்பிட்டீர்களா என  யார் என்ன கேட்டாலும் அமைதியாவே இருப்பாராம். இப்படியே ஆறுமாத காலம் கழிந்தது. ஆறு மாதத்திற்கு பிறகு, மௌனம் கலைத்து, எல்லாரையும் கூட்டிக்கிட்டு சிவன்மலையின் உச்சிக்கு போனாராம். அங்கு, கள்ளி மரத்தடியில், தான் வடிவமைத்திருந்த சிவன்மலை ஆண்டவர் சிலையை  அனைவருக்கும் சிவவாக்கிய சித்தர் காட்டினாராம். ஆண்டவரின் சிலையின் தெய்வாம்சம் அனைவரையும் கவர்ந்தது. பின்னர் நல்லதொரு நாளில் சிவன்மலை ஆண்டவர் சிலைய அவரே பிரதிஷ்டையும் செய்து வைத்தாராம்.  அதனால் சித்தரின் பேரினால் சிவமலை என அழைக்கப்பட்டு இப்ப சிவன்மலை ஆகிட்டுதாம். மத்தபடி சிவனுக்கும் இந்த கோவிலுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. இதற்கு ஆதாரமாக குறவஞ்சி, பிள்ளைத்தமிழ், கல்வெட்டுக்கள் போன்றவற்றில் சிவமலை என்றே குறிப்பிடப்பட்டுள்ளதை சொல்றாங்க. ஸ்ரீசிவவாக்கிய சித்தர் சிவன்மலையிலேயே ஜீவசமாதி அடைந்துவிட்டதாகவும், இப்பவும் சிவன்மலை ஆண்டவர் பள்ளி அறையின் வலது பாகத்தில் கிழக்கு முகமாக உள்ள அறையின் உள்ளே நீங்கள் இவரை தரிசிக்க முடியும்  இந்த மலையில் இப்பவும் சித்தர்கள்  அரூபமாக வலம் வருவதாகவும், புண்ணியம் செய்த சிலரோட கண்ணுக்கு மட்டும் தென்படுறதாகவும் சொல்றாங்க. 
முகநூலில் சுட்டது...
ஆஞ்சிநேயர் இந்த கோவிலுக்கு வந்து முருகனை வழிபட்டதாகவும் சொல்றாங்க.  இந்த முருகனுக்கு பக்தையான ஒரு பெண் காசிக்கு போய்  கங்கையில் நீராடனும்ன்னு ஆசைப்பட்டாங்களாம். ஆனா, அப்படி போக  வசதியில்லாததால் மனம் வருந்த, தன்னோட பக்தைக்காக முருகப்பெருமான் காசித் தீர்த்தத்தை இத்தலத்திற்கே வரவழைத்தா சொல்றாங்க. 
முகநூலில் சுட்டது......
இக்கோவிலின் இன்னொரு சிறப்பு என்னன்னா, எல்லா கோவில்களிலும் விநாயகருக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்தபின்னே முருகனுக்கு செய்வாங்க. ஆனா, இங்கு முருகனுக்குதான் முதல் அபிஷேகம்.  நவக்கிரகங்கள் அனைத்தும் வெவ்வேறு திசையை பார்த்து ஆளுக்கொரு திக்கில் இல்லாம எல்லாரும் சூரிய பகவானை பார்த்து நிற்பது சிறப்பாகும்.
முகநூலில் சுட்டது..
முசுகுந்தன் என்ற அரசன் தீராத நோயால் அவதிப்பட்டாராம். . என்ன வைத்தியம் செய்தும் அவரது நோய் தீரலியாம்.  அதனால் கௌதமகரிஷின்ற  முனிவரிடம்போய் தன் நோயினை தீர்க்கசொல்லி வேண்ட, “சிவன்மலை முருகனை வணங்கினால் உன் வியாதி நீங்கும்.” என முனிவர் தீர்வு சொன்னாராம். முனிவர் கூறியது மாதிரியே முசுகுந்தன் சிவன்மலை முருகனை தரிசனம் செய்து மனமுருகி வேண்டியபின் அவனோட தீராத வியாதி தீர்ந்ததாம். 
இக்கோவிலை பற்றி  கேள்விப்பட்ட காங்கேய நாட்டு அரசர், காடையூர் காங்கேய மன்றாடியார், காங்கேயம் பல்லவநாயர் போன்ற பெரிய செல்வந்தர்கள்லாம்  சிவன்மலை முருகனின் பக்தர்களாக இருந்ததால் இத்திருக்கோயிலுக்கு பல நன்கொடைகளை கொடுத்து திருப்பணிகளை நடத்தினார்கள்.  வள்ளியாத்தாள்ன்ற பெண்ணின் மகன் விசுவநாதனின் வெண்குஷ்ட நோய் இங்கு வந்துதான் தீர்ந்ததாம்.. இப்படி இம்முருகனால் பலன் பெற்றோர் நிறைய உண்டுன்னு சொல்றாங்க.


தீராத வியாதி, தமிழகத்தில் மட்டும்!! உலவும் மர்ம காய்ச்சல் மாதிரியான நாட்பட்ட காய்ச்சலுக்கு  தீர்வு கிடைக்க இக்கோவிலில் இருக்கும் ஜுரஹரேஸ்வரரை வேண்டிக்கொண்டால் நோய் தீரும். நேர்த்திக்கடனாய் மிளகு ரசம் வைத்து சுவாமிக்கு படைத்து பக்தர்களுக்கும் கொடுக்குறது இங்கு வழக்கம்.  அதேமாதிரி, தமிழகத்தில் எந்த கோவிலிலும் இல்லாத வழக்கமாய்  சபரிமலையில் உள்ளதுபோல் நேர்த்திக்கடனாய் வேட்டு வெடித்து வழிபடுகின்றனர்.  வேட்டு வைப்பதற்கு  ‘பொட்லி’ன்னு பேரு. இதற்காகவே மலையில் தனி இடம் இருக்கு.  . மலையை சுற்றிலும், அட்ட துர்க்கை இருப்பதாக கூறப்படுகிறது. ஆலாம்பாடிவனசாட்சி (காட்டம்மை), பாப்பினி அங்காளபரமேஸ்வரி, காங்கேயம் ஆயி அம்மன், வலுப்பூரம்மன், தங்கம்மன், அந்தனூரம்மன், கரியகாளியம்மன், செல்வநாயகி அம்மன் என எட்டு கிராம தேவதைகள் இம்மலையின் எட்டு திக்கிலும் காவல் காக்குறதா சொல்றாங்க. இத்தனை விவரமெல்லாம் சொன்னாலும் இந்த கோவிலை பத்தி  நிறைய பேருக்கு தெரியாது. ஆனா, இக்கோவிலின் இன்னொரு தகவலை சொன்னால் எல்லாருக்கும் தெரிய வரும்.


சிவன்மலை என்று சொல்வதைவிட ஆண்டவர் பெட்டி இருக்கும் கோவில்ன்னு சொன்னாலே போதும். இறை நம்பிக்கை இல்லாதவங்களுக்குக்கூட தெரியும். ஏன்னா இக்கோவில் ஆண்டவர் பெட்டியை பத்தி அடிக்கடி  செய்திகள் வரும்.  இக்கோவில் வளாகத்தினுள் ஒரு மரத்திலான பெட்டி இருக்கு. அதற்குதான் ஆண்டவர் பெட்டின்னு பேரு. எதாவதொரு பக்தர்களின் கனவில் முருகர் வந்து, ஒரு பொருளை சொல்லி ஆண்டவர் பெட்டியில் வைக்க சொல்வாராம். அந்த பக்தரும்  அப்பொருளுடன் கோவிலுக்கு சென்று கோவில் நிர்வாகத்திடம் கனவின் விவரத்தை தெரிவிப்பாராம்.  பக்தர்கள் சொல்லும் தகவலின் உண்மையை அறியவேண்டி  சிவன்மலை ஆண்டவரிடம்  பூக்கட்டி போட்டு உத்தரவு கேட்பார்களாம். உத்தரவு கிடைத்ததும் பக்தர்களின் கனவில் வந்த பொருளை அந்த பெட்டியில் வைத்து பூஜை செய்வது வழக்கம்.  இப்படி பூஜை செய்வதால் அந்த பொருளால் ஏற்படும் ஆபத்துக்களையோ அல்லது அந்த பொருளுக்கு ஏற்படும் ஆபத்துக்களையோ பெருமளவில் குறைத்து முருகன் காத்தருள்வார் என்பது பரவலான நம்பிக்கை.  

சுனாமி வருவதற்குமுன் கடல் நீரும், ஈரோடில் மஞ்சள் விலை ஏறும்முன் மஞ்சளும், சட்டமன்ற தேர்தலுக்குமுன் செங்கோலும் வைக்க சொல்லி முருகன் உத்தரவாம். ஏர் கலப்பை, தங்கம், ரூபாய் நோட்டு, துப்பாக்கி, மண், ஆற்று மணல், தண்ணீர், உப்பு, பூமாலை, துளசி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பொருட்கள்  இதுவரை ஆண்டவர் பெட்டியில் வைத்தவற்றின் பட்டியல் நீளும்.  தற்பொழுது அந்த உத்தரவு பெட்டியில் மஞ்சள் கிழங்கு கட்டிய  தாலிக்கயிறு வைக்கப்பட்டுள்ளது.  இதனால் கல்யாணமாகாத 90ஸ் கிட்ஸ்க்கு கல்யாணம் ஆகிடும்ன்னு இத்தனை நாள் சொல்லிக்கிட்டிருந்தாங்க. கொரோனா வைரஸ் வந்ததிலிருந்து, மஞ்சள் கிருமி நாசினி, அதை தெளிச்சா உயிரிழப்பை தடுக்கலாம்ன்னு ஆண்டவர் உத்தரவுன்னு சொல்றாங்க. எது உண்மைன்னு அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். 


 சிறிய குன்றின்மேல் அமைந்துள்ள இக்கோயில். 10,12ம் நூற்றாண்டுக்கு முந்தையதுன்னு சொல்றாங்க.  சுமார்  496 படிகள் ஏறனும்.  நடைப்பாதை வழியில் ஆங்காங்கு இளைப்பாற கல்லினால் ஆன மண்டபங்கள் கட்டப்பட்டிருக்கு. மலையேறும்போது வரும்  18ம் படிக்கு, சத்தியபடி என பெயராம். இந்த சத்தியபடிகளில்தான் அந்த காலத்துல பஞ்சாயத்து நடந்ததாம்.  இங்கு சடைச்சியம்மன் குடியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.   நடக்க முடியாதவர்களுக்கு வாகன போக்குவரத்துக்கென சாலை வசதியும் இருக்கு.  நுழைவுக்கட்டணமாய் பத்து ரூபாய் வசூலிக்கப்படுகிறது. கோவில் நிர்வாகத்தினரால் இயக்கப்படும் பேருந்தும் இங்கு இருக்கு.  ராஜகோபுரம், தீபஸ்தம்பம், கொடிமரம், முன் மண்டபம், சுற்று பிரகாரம், மூலவர் என ஆகமவிதிப்படி கட்டப்பட்ட இக்கோவில் முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்டது. தற்பொழுது இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கு. 


நடைப்பாதை ராஜகோபுர மண்டபம், தீபஸ்தம்பத்திற்கு செல்வதற்கு முன்பு, அரசு, வேம்பு மரங்களுக்கு மத்தியில் விநாயகர் இருக்கார். . வினாயகரை வணங்கி,  ஞானாம்பிகை உடனமர்ந்த கைலாசநாதர் இருப்பார். அவருக்கொரு வணக்கத்தை செலுத்திட்டு, ஆலயத்தினுள் நுழைந்தால்   தீபஸ்தம்பம், கன்னி மூல கணபதியும், தண்டபாணி சன்னதி,கொடிமரம், பலி பீடத்தை கடந்தால்  சுமூகர், சுதேகர் என்ற துவார பாலகர்கள்  காவல் காக்க   மூலவரான வள்ளையம்மையுடன் சுப்ரமணியர்  வள்ளி மணாளனாய் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.   முருகனை நினைத்து வள்ளி இங்கு தவமிருந்து, அறச்சாலை அமைத்து பணி புரிந்ததாகவும், வள்ளியறச்சாலை, மருவி வள்ளியறச்சல் என அழைக்கப்படும்  காங்கேயம் வட்டத்திலிருக்கும் வெள்ளக்கோவில்   ஊராட்சியில் இருக்கு.


சிவமலை குறவஞ்சியில்  வள்ளியை முருகன் கவர்ந்து வந்தபோது, வேடுவர்களுடன் ஏற்பட்ட போரில் இறந்த வேடர்கள், முருகன்- வள்ளி திருமணத்திற்கு பிறகு உயிர் பெற்று எழுந்து , மகிழ்ச்சி கூத்தாடி, பேரொலி எழுப்பியதால் பட்டாலி என பெயர் பெற்றதாகவும் பாடல் பெற்றுள்ளது. 10-13ம் நூற்றாண்டில் இப்பகுதி மிகப்பெரிய வணிக நகரமா இருந்ததை கோவில் கல்வெட்டுகள் சொல்கிறது. முன்பு காங்கேய நாடு எனச்சொல்லப்பட்ட நாட்டிற்கு பாத்தியப்பட்ட இன்றைய  நாமக்கல் , சேலம், . ஈரோடு, திருப்பூர்.. பகுதிகள் தமிழகத்திற்கு பொருளீட்டி தரும் பகுதிகளில் மிக முக்கியமான நகரங்கள்ன்னு நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியனுமா?! கொங்கு நாட்டின் 24 நாடுகளின் தலைமையானதாக காங்கேய நாடும், அதன் தலைநகராக பட்டாலியூர் சிவன்மலை இருந்ததாம்.  வீதிகள்தோறும் தேர்கள், அன்னதானத்தில் சிறந்த நாடு; கலை வளரும் நாடு; சிவன் மலையில் சீருடன் தேரோட்டும் நாடு, செல்வம் சிறக்கும் நாடு முத்துரத்தினம் விளையவுள்ள நாடு என பழங்கால பாடல்களில் சிவன்மலையைப்பற்றி  குறிப்பு உள்ளது. அதற்கு தகுந்தமாதிரி இப்பகுதியில், அரிய வகை கற்கள், நவரத்தின கற்கள் எடுக்கப்பட்டு, பட்டை தீட்டப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. பழங்காலத்தில், இங்கிருந்து நவமணிகள் பெரு வழியில் சென்று, கப்பல்கள் மூலம் ரோம் நாட்டிற்கு ஏற்றுமதி செய்தது, கொடுமணல் ஆய்வு மூலம் தெரிந்துள்ளது.

பார்வதியின் பாதங்களில் உள்ள அணிகலன்களிலிருந்து தெறிந்து விழுந்த நவரத்தினங்கள் நவகன்னியராகி, அவர்கள் வயிற்றிலிருந்து முருகனின் போர்ப்படை தளபதிகளாக திகழ்ந்த நவ வீரர்கள் தோன்றியதால்  வீரமாபுரம் என பெயர் பெற்றதாகவும்  சொல்றாங்க. திருப்புகழில் அருணகிரிநாதரால் பாடப்பட்ட இத்தலத்தில் தலவிருட்சமாக தொரட்டி மரம் இருக்கு. திருமணத்தடை, குழந்தைப்பேறு, நோய் தொல்லையிலிருந்து நிவாரணம் பெற இக்கோவிலில் உள்ள ஆண்டவரை வணங்கலாம்.  காங்கயத்திலிருந்து 5 கிமீ தூரத்தில் இருக்கு.  சிவன்மலையிலிருந்து சென்னிமலை பக்கம்தான்,. 

மீண்டும் வேறொரு சிறப்பான தலத்திலிருந்து சந்திப்போம்..

நன்றியுடன்,
ராஜி

12 comments:

 1. நல்ல தகவல் மா நன்றிமா

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிக்கா

   Delete
 2. இன்றைய தீநுண்மியும் விரைவாக அழியட்டும்...

  பையனுக்கு பாராட்டுகள்...

  ReplyDelete
  Replies
  1. கொரோனா கிருமி அழியாது. இனி நம்மோடு அதுவும் பயணிக்கும்.. அதுதான் உண்மைண்ணா.

   Delete
 3. சிவ மலை சிவனாரின் மைந்தர் மலையானது அறிந்து கொண்டேன்.

  ReplyDelete
  Replies
  1. சொல்லியது பாதி. சொல்லாமல் விட்டதே அதிகம்

   Delete
 4. சிவன்மலை பற்றிய சிறப்பான தகவல்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

   Delete
 5. அருமையான இடம்.  அழகிய படங்கள்.  புதிய விவரங்கள்.

  சென்னையில் சில திங்களில் ஸ்ரீ சிவன்மலை ஆண்டவர் என்று ஒரு ஜவுளிக்கடை  பார்த்திருக்கிறேன்.  அதில் ஜவுளியும் வாங்கி இருக்கிறேன்.  விவரம் இப்போது அறிந்தேன்.

  ReplyDelete
  Replies
  1. புலம்பெயர்ந்தவர்கள் யாராவது கடைக்கு பேர் வச்சிருக்கலாம். நானும் மினி லாரி, ஆட்டோக்களில் சிவன்மலை ஆண்டவர் துணைன்னு பார்த்திருக்கேன்.

   Delete
 6. அழகிய படங்கள்
  நன்றி சகோதரி

  ReplyDelete
  Replies
  1. சிலது மொபைல் க்ளிக், சிலது முகநூலில் சுட்டதுங்கண்ணா

   Delete