Thursday, October 03, 2013

என் நிலை!?



என் நிம்மதியின் விலாசம்
அவள்!
நிம்மதி தர சொத்து சுகம் 
ஏதும் தர தேவையில்லை
அவளுக்கு!!


கொஞ்சம் அன்பு, கொஞ்சம் சண்டை..,
கொஞ்சம் கெஞ்சல், கொஞ்சம் மிரட்டல்
என தந்தாலே போதும்!!
என் கைகளுக்குள் அடைக்கலமாகிவிடும்
இந்த தாவணி குழந்தை!!

பல்முகம் காட்டி 
வீடு முழுக்க ஓடி
கண்ணாமூச்சி ஆடுகின்றாள்
கைக்கெட்டாமல் நிழலாய்!!

நிஜம் எங்கோ என்னை பிரிந்திருக்க,
இந்த நிழலும்..,
இல்லை என்றால்,
என் கதி?? அதோ கதிதான்!!

Wednesday, October 02, 2013

வேலுத்தம்பி தளவாய் - மௌனசாட்சிகள்

சுற்றுலா போறதுன்னா எல்லோருக்கும் மகிழ்ச்சி கூடவே மறக்க முடியாத அனுபவங்களை கொடுக்கும்.  அதிலும் நூற்றாண்டுகளை கடந்து நிற்கும் இடங்களுக்கு போகும்போது நாமே அந்த காலகட்டத்துக்குள்ளே இருக்குற  மாதிரி ஒரு அனுபவத்தை கொடுக்கும். அப்படிப்பட்ட இடங்களைதான் மௌனசாட்சிகள் பகுதில பார்த்துட்டு வரோம். 

அந்த வரிசையில இன்னிக்கு நாம பார்க்க போறது, 17 ம் நூற்றாண்டு காலத்திய இடம். அதன் வரலாற்று பின்னணிகளும், பெருமைகளும் நமக்கு மட்டும் இல்லாது வருங்கால சந்ததியினருக்கும் இதுப்போன்ற இடங்கள் பற்றி தெரியனும்.  மாயாஜால், கிஷ்கிந்தா, ஸ்பென்சர், வொண்டர்லான்னு பிள்ளைகளை கூட்டி போகும் அதே நேரத்தில் இது போன்ற இடங்களுக்கும் வருடம் ஒரு முறையேனும் கூட்டி போகனும். அப்பதான், நம்ம முன்னோர்களின் காதல், வீரம், ராஜதந்திரம், வியாபாரம், கட்டிடகலை, கலை, கலாச்சாரமும், பண்பாடும் பிள்ளைகளுக்கு தெரிய வந்து இனியாவது அவைகள் கட்டி காக்கப்படும். 

இன்னிக்கு நாம பார்க்க போறது, கன்னியாக்குமரி மாவட்டத்தில் ”திருவநந்தபுரம் ” சாயலை கொண்ட ”திங்கள்சந்தை” பக்கம் உள்ள ”தலக்குளம்”ன்ற ஊருல இருக்குற ”வேலுத்தம்பி தளவாய் கோட்டை ” நாகர்கோயில்ல இருந்து நேரடியாகவும் போகலாம் ..இல்லாட்டி ”திங்கள்சந்தை” ன்ற இடத்துக்கு போய் அங்கிருந்தும் போகலாம்.  ஒருவழியா கிழக்கிந்திய கம்பெனிக்காரர்களை எதிர்த்து போரிட்ட வீரன் ”வேலுத்தம்பி தளவாயின் நினைவிடத்”திற்கு வந்தாச்சு. 

பதிவர்கள்லாம் வர்றாங்களே! நம்மளை ஃபோட்டோ எடுத்து பதிவுல போட்டு உலகம் முழுக்க காட்டுவாங்கன்னு அழகா, கம்பீரமா ஜம்முன்னு நின்னு ஃபோஸ் கொடுத்து நம்மை வரவேற்பது “வேலுத்தம்பி தளவாய் நினைவு இல்லம் தோரண நுழைவாயில்”.
அதை தாண்டி போனா, (அக்கோவ், அம்மாம்பெரிய நுழைவாயில தாண்டலாம் முடியாதுன்னு கிண்டலடிக்குற ஆசாமிகள்லாம் நுழைஞ்சு வாங்கப்பா!!) கேரளா பாரம்பரிய பாணியில் கட்டப்பட்ட நுழைவாயில் .  உள்ளூர் நகராட்சி அங்குள்ள தரை பகுதியை சீரமைத்து கொடுத்திருக்கு. அது, திறந்த நிலையில் காணப்படுது. அதனுள்ளே சென்றால் கம்பீரமா காட்சி தருகிறார் ”திவான் வேலுத்தம்பி தளவாய்”.
(அவருடைய சிலை மற்றும் பக்கத்தில் ஒரு சிறிய கோவில் )

அந்த வீட்டில் ஆயுதங்கள் வைத்திருந்த அறையில்,  அக்கால டச்சு ஓவியர் ஒருவரால் வரையப்பட்ட படத்தின் மாதிரிதான் இப்பவும் அவருடைய படமா அங்கு வைக்கப்பட்டிருக்கு.


வேலாயுதன் செண்பகராமன் தம்பி (1765 - 1809) 

தளவாய் என்பது திருவிதாங்கூர் திவானுக்குரிய பட்டம்.  அந்த காலத்துல,  பேரு.  திருவிதாங்கூரில் தலைமைத்தளபதி, அமைச்சர் இந்த ரெண்டு பதவியையும் ஒருத்தரேதான் பார்த்துக்குவாங்க. வேலுத்தம்பி தளவாயினுடைய முழுப்பெயர் ”இடபபிரபு குலோத்துங்க கதிர்குலத்து முளப்படை அரசரான இறையாண்ட தளாக்குளத்து வலிய வீட்டில் தம்பி செண்பகராமன் வேலாயுதன்” ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் சோடா ப்ளீஸ்.


 (வீட்டின் முன் பகுதி பக்கவாட்டு தோற்றம்)

இவர் 1765 ம் ஆண்டு வாயிலயும், மனசுலயும் நுழையாத ஒரு மலையாள மாசத்துல 16 ம் தேதில, அன்றைய திருவனந்தபுரம் நாட்டிலுள்ள (இப்ப  அந்த இடம் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டிருக்கு) நாகர்கோயிலுக்கு அருகே உள்ள ”தாழைகுளம்”ன்ற ஊரில் இப்ப மருவி ”தலைக்குளம்” ன்னு அழைக்கப்படுற ஊருல பிறந்தவர். இவரது பெற்றோர்கள் திரு.குஞ்சு மயிற்றி, திருமதி.வள்ளியம்மை தங்கச்சி.


(வீட்டின் முன்பக்க தோற்றம்)
சின்ன வயசிலேயே அவரும், அவரது தம்பியும் பெரிய வீரர்களா புகழ்பெற்று, நாயர் படைகளுக்கு தலைமை தாங்க ஆரம்பிச்சாங்க. படைத்தலைவர்களில் ஒருத்தரா இருந்த வேலுத்தம்பி தொடர்ச்சியான ஒரு மக்கள்புரட்சி மூலம் தளவாயா ஆனவர்.

”பாலராமவர்ம குலசேகரன்”ன்ற மன்னர் 1798ல் தன் பதினாறு வயசுல மன்னரானபோது வளமிக்க நாடா இருந்த திருவிதாங்கூர் பலவகையான சீரழிவுகளை சந்திக்க நேர்ந்தது. கோழிக்கோட்டு ”சாமூதிரி மன்னரின்” ஆளான ”ஜெயந்தன் நம்பூதிரி”ன்ற வைதீகர் மன்னரை தன் பிடியில் வைத்திருந்தார். இவர் வைத்ததே சட்டம்ன்ற நிலை. இதற்கு எதிரா உள்ளூர் நிலக்கிழார்கள் கோபம் கொண்டிருந்தாங்க. அக்கோபத்தை வேலுத்தம்பி பிரதிநிதித்துவம் செஞ்சு வந்திருக்கார்.


(வீட்டின் முன்பக்க வாசல் அதில் வேலைபாடுகளுடன் கூடிய கட்டில்  )

அப்ப திருவிதாங்கூர் திவானா இருந்தவர் “ராஜா கேசவதாசன்”. நாகர்கோவில் அருகே ஓர் எளிய குடும்பத்தில் பிறந்த இவர் தன் தனித்திறமையால் திவானாகி கேரள வரலாற்றில் அழியாத இடம் பெற்ற மாமனிதர். திருவிதாங்கூர் மீது பெரும்படையெடுத்து வந்த திப்புசுல்தானை பாலக்காட்டுக் கோட்டையில் தோற்கடித்த வெற்றி வீரர் அவர். 


இன்றைய கேரளத்தின் பல முக்கிய நிர்வாக , தொழில் அமைப்புகளை உருவாக்கியவர் இவரே! சதுப்பு நிலத்தில் ”ஆலப்புழா”ன்ற ஊரை அமைத்து அதை துறைமுகமா வளர்த்தார். கயிறுத்தொழிலை அங்கே வளரச் செய்தார். திருவனந்தபுரம் துறைமுகம், பல முக்கிய சாலைகள் , அணைகள் போன்றவை இவரால் அமைக்கப்பட்டவைதான். கடல்நீரை அணைகட்டி நிறுத்தி அச்சதுப்பில் நெல் விவசாயம் செய்யும் குட்டநாட்டு விவசாய முறையை உருவாக்கியவரும் இவரே!
”ஜெயந்தன் நம்பூதிரி” என்பவர், திவான் ”ராஜா கேசவதாசனை ” மன்னரிடமிருந்து அன்னியப்படுத்தினார். ஜெயந்தன் நம்பூதிரி மன்னரின் பல்லக்கில் ஏறி ஊர்வலம் வந்தது, தன் உறவினரான சங்கரன் நம்பூதிரி என்பவருக்கு காயம்குளம்பகுதியை அளித்தது போன்றவற்றை கேசவதாசன் கண்டித்தார். எனவே மன்னரை கரைத்து திவானை கைது செய்வித்த ஜெயந்தன் நம்பூதிரி பின் அவரை விஷம்வைத்துக் கொன்றுவிட்டார். அதன் பிறகு ஜெயந்தன் நம்பூதிரி திவான் ஆனார். அவரது அடிப்பொடிகள் பல்வேறு பதவிகளில் அமர்த்தப்பட்டனர். திருவிதாங்கூர் அவர்களால் சூறையாடப்பட்டது.


(21 கைகள் ஒன்று சேரும் நுழைவாயில் உத்திரம் அமைப்பு )

அக்காலக்கட்டத்தில் திருவிதாங்கூர் வெள்ளை அரசுக்கு பெருந்தொகை கப்பமா கட்டவேண்டியிருதுச்சு. அத்தொகை மூலம் செல்வ வளம் மிகுந்த இந்நாடு நிதிப்பற்றாக்குறையால் அவதிப்பட்டது. அதைப்போக்க கடும் வரிவிதிப்பும், கட்டாய உழைப்பும் சாதாரணமா இருந்துச்சு. ஜெயந்தன் நம்பூதிரி நிதிவசூலில் தன் பங்கையும் எடுத்துக் கொண்டார். ஆகவே நிலக்கிழார்களை வரவழைத்து ஒவ்வொருவருக்கும் ஒரு பெருந்தொகை கட்டணமாக விதித்து அதை அளிக்காதவர்களை கொடூரமாக தண்டித்திருக்கிறார்.

(வீட்டின் உள்பக்கம் முதல் நிலை )

அப்படி அழைக்கப்பட்டவர்தான் வேலுத்தம்பி. அவருக்கு கட்டணம் ரூ 3000 விதிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுது. அப்பணத்தை திரட்டி வருவதாக சொல்லி மீண்ட வேலுத்தம்பி பல்வேறு நிலக்கிழார்களை திரட்டி ஒரு சேனையை உருவாக்கி, அதை நடத்திக் கொண்டு திருவனந்தபுரம் வந்தார்.

(உள்பக்க மரத்தாலான சுவர் மற்றும் கதவு வேலைப்பாடுடன் கூடிய உத்திரம் )


அதேப்போல வடக்கே சிறையின் கீழில் இருந்து ”அய்யப்பன் செம்பகராமன் பிள்ளை” என்பவரது தலைமையில் ஒரு கலகப்படை திருவனந்தபுரம் வந்தது. அவர்கள் அரண்மனையை சுற்றிவளைத்தாலும் ராஜபக்தி காரணமாக எல்லைமீறி உள்ளே நுழையவில்லை. வேறுவழி இல்லாத மன்னர் சரணடைந்தார். கலகக்காரர்களிடம் ஜெயந்தன் நம்பூதிரியும் பிறரும் ஒப்படைக்கப்பட்டனர். பிராமணர்களை கொல்வது இல்லை என்பதனால் அதிகபட்சத் தண்டனையாக அவரை நாடு கடத்தினார்கள்(ஆனால் ஒரு தமிழ் பிராமணனை கூடவே அனுப்பி நம்பூதிரி திருவிதாங்கூர் எல்லையைத் தாண்டியதுமே அவரை வெட்டி வீழ்த்த வேலுத்தம்பி ஏற்பாடு செய்திருந்தார்). மற்றவர்கள் கடுமையா தண்டிக்கப்பட்டனர். தொடர்ந்து அய்யப்பன் செம்பகராமன் திவான் ஆனார். ஆனா, முதியவரான அவர் ஒரு வருடத்திலேயே மரணமடைய வேலுத்தம்பி திவானாக ஆனார்.

(பூஜை அறை )

வேலுத்தம்பியை மிக குரூரமான அதே நேரத்துல மிக மிக நேர்மையான ஒருவராக சரித்திரம் காட்டுது. குட்டிகுட்டித் தலைவர்களை அவர் குரூரமாக ஒடுக்கினார். திருவிதாங்கூரின் வரிவருமானம் குறைய முக்கியக்காரணம் ஊழலே என்று கண்டு அவர் கடுமையான நடவடிக்கைகள் மூலம் ஊழலை கிட்டத்தட்ட முற்றாக ஒழித்தார். அதுவே நாட்டின் வருமானத்தை பலமடங்கு அதிகரிக்கச் செய்ததாக .ஒரு கதை சொல்லப்படுது.

வேலுத்தம்பியின் அன்னைக்கு சொந்தமான தென்னந்தோப்புகள் ”கீழ்க்குளம் ”ன்ற ஊரில் இருந்தன. அவற்றுக்கு வரி நிர்ணயித்த அதிகாரி அவை தளவாயின் அன்னைக்கு உரியவை என்பதனால் மிக குறைவாக அதை நிர்ணயித்தார். அதை அறிந்த தளவாய் கோபம் கொண்டு அவ்வதிகாரியின் கட்டைவிரலை வெட்டினார். தன் தாயையும் தண்டித்தார்(ம்ம்ம்ம்ம்ம் இந்த காலத்துல இப்படி ஒருத்தர் பொறந்து வந்தா நல்லாதான் இருக்கும்).


இந்நடவடிக்கைகள் மக்களிடையே ஆதரவு பெற்றாலும், அதிகாரிகளிடையே அதிருப்தியை உருவாக்கின. ஆரம்பத்தில் வெள்ளையர் வேலுத்தம்பியை ஆதரித்தார்கள், காரணம் கப்பம் முறையாக கிடைத்தது. ஆனால் அப்போது ரெசிடண்ட் ஜெனரலாக இருந்த ”கர்னல் மெக்காலே ” என்பவர் மன்னரை உதாசீனம் செய்து தானே ஆட்சியாளர் என்ற முறையில் சில நடவடிக்கைகளை எடுத்தது வேலுத்தம்பிக்கு பிடிக்கவில்லை. 

சில கிறித்தவ பாதிரியார்கள் தளவாயை அவமானப்படுத்தியதாகவும் அதற்கு கேனலின் ஆதரவு இருந்ததாகவும் சொல்லப்படுது. மேலும் கப்பமாக போகும் பெரும் செல்வம் வேறு தளவாயை கோபம் கொள்ளச் செய்தது. மெல்ல ஆங்கில மேலாதிக்கத்துக்கு எதிராக வேலுத்தம்பி செயல்பட ஆரம்பித்தார்

கப்பம் தொடர்ந்து உயர்த்தப்பட்டத்தை வேலுத்தம்பி எதிர்க்க பூசல்கள் வெடித்தன. ஒரு கட்டத்தில் நாட்டின் வருடாந்தர வரிவசூலில் எண்பது சதவீதம் கப்பமாக வசூலிக்கப்பட்டது.



”கர்னல் மெக்காலே” வரிவசூல் தொகையின் கணிசமான பகுதியை தனக்காக எடுத்துக் கொண்டது பிரச்சினையாயிற்று. தொடர்ந்து வரியை உயர்த்திய மெக்காலே வரியை உயர்த்தும்படி திவானை வறுபுறுத்தினார். அதற்கு திவான் ஒப்பவில்லை. ஒருகட்டத்தில் மன்னரின் நகைகளைக்கூட விற்று கப்பம்கட்ட நேர்ந்தது. அது மன்னருக்கும் அதிருப்தியை உருவாக்கியது. ஆரம்பத்தில் வேலுத்தம்பிக்கு உதவுவது போல் வந்த ”கர்னல் மெக்காலே” வின் நாடகம்தான் இவ்வளவும்.

கப்பம் கட்டாவிட்டால் மன்னரையும் தளவாய் வேலுத்தம்பியையும் சிறைபிடிக்கப் போவதாக அச்சுறுத்தினான். தானே மன்னராக மெக்காலே நடக்க ஆரம்பித்துவிட்டான் மெக்காலே திவானை பதவி நீக்கம் செய்யவைத்தார். அவரை சிறைப்பிடிக்க உத்தரவு வந்தது. ஊருக்கு தன் தம்பியுடன் தப்பி ஓடிய வேலுத்தம்பி இங்கு வந்து1809 ல் குண்டறை என்ற ஊரில் வைத்து ஒரு அறிக்கையை விடுத்தார். ஆங்கில சுரண்டல் அரசுக்கு எதிராக ஒன்றுபடும்படி மக்களை அறைக்கூவினார். இது குண்டறை விளம்பரம் என்று அழைக்கப்படுது.
 கப்பம் கட்டச் சொன்ன ஆங்கிலேயனை ‘‘முடியாது’’ என்று எதிர்த்தான் தளவாய் வேலுத்தம்பி. அவனை அழிக்க படையெடுத்து வந்தனர் பரங்கியர். எதிர்த்தான். போரிட்டான். எதிரிகளை ஓட ஓட விரட்டினான். அந்த வீரம் கண்டு அஞ்சினர் வெள்ளையர்...

அதை எதிர்த்து, கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக ஆயுதப் புரட்சிக்குத் தயாரானார் வேலுத்தம்பி. அவரது புரட்சியைக் கண்டு அண்டை நாட்டு மன்னர்களும் ஜமீன்தார்களும்கூட அஞ்சினர்.

வெள்ளையர் படை திருவிதாங்கூர் மீது படையெடுத்து வந்தது.அவர்கள் நோக்கம் வேலுத்தம்பியைக் கொல்வது. இதை அறிந்த தளவாய் கொச்சியில் உள்ள பிரிட்டிஷ் கட்டடத்தை ஆக்கிரமித்துக் கைப்பற்றினார்.

அரண்மனையில் மெக்காலேயைக் கொல்ல நெருங்கினார். அங்குள்ள அரண்மனை கழிவறைக்குள் ஒளிந்து, தப்பினான் மெக்காலே. இதனால் மெக்காலேவுக்கு வேலுத்தம்பி மேல் கோபம் அதிகமானது.அவரை உடனே கொல்ல உத்தரவிட்டான்.வேலுத்தம்பியைப் பிடித்துத் தருபவர்களுக்குப் பரிசும்,பதவியும் தருவதாக தண்டோரா போட்டான்.

கலகம் ஏறத்தாழ் ஒருவருடம் நடந்துச்சு. மைசூரில் இருந்தும் சென்னையில் இருந்தும் உபரி படைகளை வரவழைத்து பீரங்கிகளும் துப்பாக்கிகளும் இதுவரை இல்லாத அளவு உபயோகப்படுத்தப்பட்டன. கர்னல் லோகர் உதயகிரி கோட்டையைக் கைப்பற்றி போரில் வெற்றி பெற்றதாக அறிவித்தான். ஆங்கில கம்பெனி போரிட்டதனால் கலகம் சீக்கிரமே அடங்கியது.தலைமறைவாக இருந்த வேலுத்தம்பி மண்ணடி என்ற ஊரில் சுற்றிவளைக்கப்பட்டார்.எதிர்த்துப் போரிட துணிவின்றி,சதிவலை விரித்தனர்.

காட்டிக் கொடுப்பவர்களுக்கு பரிசுகளை அறிவித்தார்கள். மண்ணடி என்ற ஊரிலுள்ள பகவதி அம்மன் கோயிலில் பதுங்கியிருந்த வேலுத்தம்பியை எதிரிகள் நெருங்கிவிட்டனர். கருங்காலிகள் காட்டிக் கொடுத்தனர்.ஆங்கிலேயரிடம் பிடிபட அவர் மனம் இடம் கொடுக்கவில்லை. எதிரியின் கையில் சாவதைவிட,தன் சகோதரனின் கையில் சாவதை வீரமாக நினைத்தார்.தன் தம்பியிடம் தன் வாளைக் கொடுத்து தன் கழுத்தை வெட்டச் சொன்னார். சகோதரன் மறுத்துவிட்டான். 

வேறு வழி இல்லாமல் தன் கழுத்தைத்தானே வாளால் வெட்டி வீர மரணம் எய்தினார்.அப்போது அவருக்கு வயது 44.வீரமரணமடைந்த வேலுத்தம்பியின் உடலைத் தூக்கிப்போய் கழுவில் ஏற்றி, தங்கள் வெறியை தணித்துக்கொண்டனர் வெள்ளையர்.அதனால் ஒரு மாவீரனின் சரித்திரம்,துன்பியல் சரித்திரமாகிப்போனது. பத்மநாபன் தம்பி கைதுசெய்யப்பட்டு தூக்கிலேற்றப்பட்டார்.
வேலுத்தம்பியின் அரண்மனை இடிக்கப்பட்டு அங்கே ஆமணக்கு விதைக்கப்பட்டதா சொல்லப்படுது. அவரது குடும்பத்தினர் வேட்டையாடப்பட்டனர். பலர் அந்தமானுக்கு நாடுகடத்தப்பட்டனர். அரசசேவையிலிருந்து நாயர்கள் முற்றாக விலக்கப்பட்டார்கள். நாயர்படை இருநூறுபேருக்குமேல் போகக் கூடாது என்று பிரிட்டிஷ் அரசு வரையறைசெய்தது. கிராமங்களில் நடந்துவந்த ஆயுதப்பயிற்சிசாலைகள் நிறுத்தப்பட்டன
வேலைபாடுகளுடன் கூடிய உள்பக்கதில் காணப்படும் மரக்கட்டில்
ஒரு தலைமுறைக்குப் பிறகு திருவிதாங்கூர் மகாராஜா ஊர் மக்களின் கோரிக்கையை ஏற்று வேலுத்தம்பியின் வம்சத்தில் எஞ்சிய ஒரு பெண்ணுக்கு மணம் செய்வித்து அவளுக்கு கட்டித்தந்த சிறுஅரண்மனை தான் இது. 

 மரத்தாலான கட்டுமானம். பூமுகம், பத்தாயப்புரை , அங்கணம் உள்ளடுக்கு எல்லாம் கொண்ட நாலுகட்டு வீடு அது. அதில் முப்பது வருடம் முன்புவரை தளவாயின் வாரிசுகள் வாழ்ந்திருக்கிறார்கள். இப்போது அவர்கள் பெரும்பாலும் கேரளத்துக்கு சென்றுவிட, இப்போ தளவாயின் வாரிசுகளில் ஒருவர் கைவசம் இக்கோட்டை இருக்கு.
கட்டிலின் பல்வேறு வேலை பாடுகள்
 ஆனால் பெரிய கட்டிடம் பழுதுபார்க்கப்படாம அழிஞ்சிக்கிட்டே வருது. ஓடுகள் பல இடங்களில் உடைந்து, ஒழுகி மரம் அழிய ஆரம்பித்துவிட்டது. பழுது பார்க்க லட்சகணக்கா ரூபாய் செலவாகும் . அதற்கு இன்றைய வாரிசுகளிடம் பணவசதி இல்லை. வாரிசுகள் பலர் அரசிடம் அரண்மனையை எடுத்துக் கொள்ளச் சொல்லி பலவருடங்களா கேட்டும். தமிழக அரசு ஆர்வம் காட்டவில்லையாம்,என்று அங்குள்ள வயதான ஒருவர். குறைப்பட்டுக்கொண்டார் 
வேலுத்தம்பி வழிபட்ட கோவில், அவர் பயன்படுத்திய ஆயுதங்கள்,கலைப் பொருட்கள் இன்றைக்கும் அவரது வீரத்தை சொல்லிக்கிட்டு இருக்கு.ஆனா, அதை தமிழகஅரசு கண்டுகொள்ளாததால அந்தவீடு பொலிவிழந்து கொண்டே வருது.

(உள்பக்கம் இருக்கும் கோவில் )
வீரமரணமெய்திய வேலுத்தம்பியின் நாட்டுப் பற்றைப் பறைசாற்ற உள்ள ஒரே சாட்சி இந்த வீடுதான்.அதை தற்போது வேலுப்பிள்ளை தளவாய் குடும்பதினர் சிதரகலாமண்டலம் என்னும் அமைப்பிடம் கொடுத்து உள்ளனர்.  அவர்கள் அதை மியூசியமாககும் வேலையில் ஈடுபட்டிருக்குறதால இப்போ நீங்க போனாலும் பார்ப்பது கடினம். 

இரண்டு பதிவா போட்டா வேலுத்தம்பியின் கதை புரிப்படாம போக வாய்ப்பிருக்குறதால, இந்த பதிவு கொஞ்சம் நீண்டுடுச்சு! அதனால, சிரமத்துக்கு மன்னிச்சு.

அடுத்த வாரம் மௌனசாட்சியா நின்னு பல கதைகளை எடுத்து சொல்லும் வேற ஒரு இடத்துக்கு போகலாம். இப்போ பை! பை!

Tuesday, October 01, 2013

வடைகறி - கிச்சன் கார்னர்

இட்லிக்கு சட்னி, தோசைக்கு சாம்பார், பூரிக்கு உருளை கிழங்கு மசால், சப்பாத்திக்கு குருமா இப்படி ஜோடி போட்டு கலக்குனாலும் இந்த “வடைகறி” மட்டும் சீட்டாட்டத்துல ஜோக்கர் போல! எல்லாத்துக்கும் ஜோடி போட்டு ருசி கொடுக்கும். 

வடைகறிக்கான ரெசிபி இதோ!!

தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு - 1 கப்
பெரிய வெங்காயம் - 4
தக்காளி - 2
பச்சை மிளாகாய் - 4
இஞ்சி - ஒரு துண்டு,
கறிவேப்பிலை - கொஞ்சம்
கொத்தமல்லி - கொஞ்சம்
சோம்பு- கொஞ்சம்
பட்டை - 1
கிராம்பு -3
அன்னாசி பூ - 1
மிளகாய் தூள்- தேவைக்கேற்ப
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு

கடலை பருப்பை 1 மணிநேரம் ஊற வச்சு , உப்பு, பச்சை மிளகாய் 3, இஞ்சி, பூண்டு போட்டு கரகரப்பா அரைச்சு இட்லி சட்டியில வச்சு வேக வச்சு எடுத்து மசிச்சு வச்சுக்கோங்க . சிலர் வடையா தட்டி எண்ணெயில போட்டும் செய்வாங்க. அதிக எண்ணெய் சேர்க்க வேணாமேன்னு நான் ஆவில(நான் சொல்றது நீராவி, கோவை ஆவி இல்ல, எகனை மொகனாயா கமெண்ட் போடக்கூடாதேன்னுதான் நானே சொல்லிட்டேன்) வேக வச்சுதான் செய்வேன். 

அரைச்ச மாவை இட்லி பானைல வச்சு வேக வச்சுக்கோங்க. அஞ்சு நிமிசம் வெந்தா போதும்.

வேக வச்ச இட்லிகளை உதிர்த்துவச்சுக்கோங்க.


வாணலில எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும் கடுகு போட்டு பொரிய விடுங்க.

அடுத்து பட்டை, லவங்கம், சோம்புலாம் போட்டு பொரிய விடுங்க..,

அடுத்து, பச்சை மிளகாயை கீறி எண்ணெயில போட்டு வதக்குங்க.

வெங்காயம் சேர்த்து பொன்னிறமா வதக்குங்க.

கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்துக்கோங்க. புதினா இருந்தா சேர்த்துக்கோங்க. இல்லாட்டி பரவாயில்ல(நம்மளை யாரு கேள்வி கேக்க போறது!?) 

அடுத்து பொடியா நறுக்கி வச்ச தக்காளி சேர்த்து நல்லா வதக்கிக்கோங்க.


மஞ்சப்பொடி சேர்த்துக்கோங்க..,

மிளகாய்த்தூள் சேர்த்து வதக்குங்க.


தேவையான அளவு உப்பும், தண்ணியும் சேர்த்து கொதிக்க விடுங்க.


நல்லா கொதிச்சு மிளகாய் தூள் வாசனை போனதும் உதிர்த்து வச்ச இட்லியை கொட்டி கொதிக்க விடுங்க.


கொஞ்சம் கரம் மசாலா தூள் சேர்த்து கொதிக்க விட்டு, அடுப்பை ஆஃப் பண்ணிட்டு இறக்கிடுங்க.



சூடான, சுவையான வடைகறி ரெடி.

அடுத்த வாரம் வேற ஒரு சிம்பிளான ரெசிபியோட பார்க்கலாம்!

Monday, September 30, 2013

பயனில்லாத ஏழு!! - ஐஞ்சுவை அவியல்



என்ன புள்ள! சோகமா உக்காந்திருக்கே!?

மாமா, நம்ம ஊருக்கு பக்கத்து புலவன்பாடி கிராமத்துல ஒரு அசம்பாவிதம் நடந்து போச்சு, டிவி பொட்டிலலாம் காட்டினாங்க. பார்த்தீங்களா!?

ம்ம்ம்ம்ம்ம். அங்கதான் போய் வரேன் புள்ள, குஜராத், ஒரிசான்னு எங்கெங்கோ தோண்டி வச்ச போர்வெல்ல குழந்தை விழுந்து மீட்கப்பட்டபோது ஒரு செய்தியாகவே இது வரை பார்த்திருக்கிறேன். ஆனா, இங்கயே நம்ம பக்கத்துல இதுப்போல ஒரு நிகழ்ச்சி நடந்ததா கேள்விப்பட்டப்போ நம்ம வீட்டு புள்ளைக்கு இதுப்போல நடந்த மாதிரி மனசுக்குள் ஒரு சோகம்.

ஏனுங்க மாமா! காப்பாத்த யாருமே வரலியா?!

8 மணிக்கு பாப்பா குழாய்க்குள்ள விழுந்துட்டுது. 8.30மணிக்கு தீயணைப்பு வண்டி ஆரணில இருந்து வந்துட்டுது. 9  மணிக்குலாம் போலீஸ், ஆம்புலன்ஸ் வந்துட்டுது. மதுரைல இருந்து கூட மீட்பு குழு ஹெலிகாப்டர் மூலம் வந்துட்டுது. சுமார் பத்து மணி நேரம் போராடி ராத்திரி 8 மணிக்கு புள்ளையை மீட்டிருக்காங்க. உடனே, ரெடியா இருந்த ஆம்புலன்ஸ்ல போட்டு முதலுதவி செஞ்சுக்கிட்டே ஆரணி கவர்ன்மெண்ட் ஆஸ்பிட்டலுக்கு கொண்டு போய்ட்டாங்க. அங்க கொஞ்சம் முதலுதவி செஞ்சுட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு போனாங்க. அங்க கொஞ்ச நேரம் போராடி பார்த்தும் டாக்டர்களால பாப்பாவை காப்பாத்த முடியலை.

ஏன்? என்னாச்சு!? ஒரு நாள் ஃபுல்லா குழாய்ல இருந்த குழந்தைகள் கூட உயிரோட மீட்டிருக்காங்க. இந்த பாப்பா ஏன் இப்படி ஆச்சு!?

அதிக்கப்படியான பயம், அதுமில்லாம பாப்பாவோட உடம்பு சூடு ரொம்ப குறைவா போய் இதயத்தை செயலிழக்க வச்சிருக்கு. பாப்பாவுக்கு பொறப்புலயே மூச்சு பிரச்சனை இருந்திருக்கு. அதும் முக்கிய காரணம்ன்னு குழந்தையோட மாமா சொன்னார்.

போர்வெல்லுக்கு சொந்தக்காரரான அந்த ஆளை பிடிச்சுட்டாங்களா?!

ம்ம் அவரே பக்கத்துல இருக்குற போலீஸ் ஸ்டேஷன்ல போய் சரண்டர் ஆகிட்டார். இதுக்குலாம் அதிகப்படியான தண்டனை கிடைக்கது புள்ள. மிஞ்சி போனா 3 மாசம், இல்ல எதாவது அபராதம் இதுப்போலதான் தண்டனை கிடைக்கும். நம்ம மக்கள் தங்களோட பொறுப்பை உணர்ந்து நடந்துக்கிட்டா இதுப்போன்ற மரணங்களை தவிர்க்கலாம். ரெண்டு நாளுக்கு உச்ச் கொட்டிட்டு நம்ம வீட்டுல போர் போதும்போது ஒரு கோணிப்பை மட்டும் போட்டு மூடி வச்சுடுவோம். அந்த பை நாள்ப்பட நாள்பட இத்து போய் இதுப்போன்ற அசம்பாவிதம் நடக்க காரணமாகுது!!


நீங்க சொல்றது யோசிக்க வேண்டிய நிஜம்தான் மாமா!! மனுசனுக்கு பயன்படாத ஏழு விசயங்கள் சொல்ல்ட்டா!?

ம்ம் சொல்லு, கேட்டுக்குறேன்...,

ஆபத்து காலங்களில் உதவாத ”பிள்ளை”. ஒருவன் பசித்த்திருக்கும்போது பசி ஆற்ற உதவாத ”உணவு”, அடுத்தவன் தாகத்தை தணிக்க உதவாத ”தண்ணீர்”, வீட்டு கஷ்டத்தை உணராமல் தாந்தோன்றித்தனமா செலவு செய்யும் ”பெண்கள்”, தனக்குள் ஏற்படும் கோவத்தை மறைத்து அரசாள தெரியாத ”அரசன்”, குரு சொல் பேச்சு கேளாத ”மாணவன்”, தன் தவறை உணர்ந்து பாவம் போக்கி கொள்ள வருபவனின் பாவத்தை தீர்க்காத ”புண்ணியநதி”

நிஜமாவே பயனில்லாத ஏழுதான். ஆனா, இதுப்போல பயனில்லதவை நிறைய இருக்கு. போன வாரம் ராஜி வீட்டுக்கு போய் இருந்த போது தன் புருசனை லெஃப்ட், ரைட் வாங்கிட்டு இருந்தா. உன் ஃப்ரெண்ட் ராஜி உன்கிட்ட சொன்னாளா!? 

இல்லியே! என்னவாம்?

அவ வீட்டுக்காரரும், அவர் கூட வேலை பார்க்குறவங்களும் போன வாரம் சென்னைக்கு ஆஃபீஸ் ஜீப்புல போய் இருக்காங்க. பெங்களூர் டூ சென்னை ரோட்டுல காஞ்சிபுரம் தாண்டி காலை எட்டு மணிக்கு ஒருத்தன் அடிப்பட்டு கொட்டும் மழையில வெறும் உள்ளாடையோடு கைல ரத்தம் சொட்ட, சொட்ட விழுந்து கெடந்திருக்கான், ஜீப்பை விட்டு இறங்கி பார்த்தும் எந்த ஹெல்பும் செய்யாம வந்திட்டு இருக்காங்க.

ஐயையோ! அப்புறம் அந்தாளுக்கு என்னாச்சு மாமா!?  

அது ஆக்சிடெண்டா?! இல்ல அடிச்சு போட்டதான்னு தெரியலயாம். பக்கத்துல அவன் வந்த வண்டியோ இல்ல அவன் ட்ரெஸ்சோ எதுமில்லியாம். அதனால பயந்து ராஜி வீட்டுக்காரர் கிட்ட கூட போகாம இருந்திருக்கார், அவர் மட்டுமில்லாம ஹைவேஸ்ல போற எந்த வண்டியும், நிக்காம போய்க்கிட்டே இருந்துச்சாம். 

ஐயையோ! அட்லீஸ்ட் 108க்காவது போன் பண்ணி சொல்லி இருக்கலாமே மாமா!? 

அதான் ராஜி கூட கேட்டா. அதுக்கு, அவர் வீட்டுக்காரர் சொல்றார், நாங்க 108க்கு ஃபோன் போட்டோம் அது திருச்சிக்கு போச்சு, எங்களுக்கு மீட்டிங்க்கு டைம் ஆகிட்டதால அடிப்பட்டவனை அப்படியே விட்டுட்டு வந்துட்டோம்ன்னு சொல்றார். திருச்சிக்கு போனா என்ன!? அவங்ககிட்டயாவது இதுப்போல இந்த இடத்துல ஒருத்தர் அடிப்பட்டிருக்கார்ன்னு சொல்லி இருக்க வேணாமா?! படிச்சு கவர்ன்மெண்ட் வேலையில் இருக்கும் நீங்களே இப்படி பயந்து வந்தா எப்படி?!ன்னு வீட்டுக்காரரை டோஸ் விட்டா.

நல்லாதான் கேட்டிருக்கா, அவ சண்டை போட்டதுல தப்பே இல்ல மாமா. படிச்சவங்களே,  போலீஸ் விசாரணை, வேலைன்னு சுயநலமா சிந்திச்சா எப்படி?!

ம்ம் படிச்சவங்கலாம் இப்படிதான் சிந்திப்பாங்க. இதுவே அந்த இடத்துல படிக்க்காதவன் இருந்திருந்தா எதை பத்தியும் கவலைப்படாம தூக்கி தோள்மேல போட்டு ஹாஸ்பிட்டல் போய் இருப்பான். ரொம்ப சீரியசான விசயமாவே பேசிட்டோம். ஒரு ஜோக் சொல்லவா?! என் செல்போனுக்கு வந்தது.

ம்ம்ம் என்ன பொண்டாட்டியை மட்டம் தட்டி மெசேஜ் வந்திருக்கும் உங்களுக்கு. அதைத்தானே சொல்ல் வர்றீங்க. 

அட, கரெக்டா கண்டுப்பிடிச்சுட்டியே!! ஒரு விடுகதை கேக்குறேன் பதில் சொல்லு புள்ள!!

கணவன்: உன் மாமனாருக்கு அனுமார் மேல ரொம்ப பக்தியாமே?அனுமாருக்கு தன் சொத்தை எல்லாம் எழுதி வச்சுட்டாராமே?"

மனைவி:"இது என்ன பெரிய விஷயம்? உன் மாமனார் கூடத்தான் அனுமாருக்கு தன் பொண்ணையே கல்யாணம் பண்ணிக் கொடுத்திருக்கார்,அவர்தான் பெரிய பக்திமான்"

நான் சொன்னது கரெக்டா போச்சு பார்த்தீங்களா மாமா?! பொண்டாட்டிங்களை மட்டம் தட்டி வர்ற ஜோக்குங்களைதான் நீங்க சொல்லுவீங்கன்னு நினைச்சேன் கரெக்டா போச்சு.

ம்ம்ம்ம் இப்படியாவது சந்தோசப்பட்டுக்குறோமே!! நேர்ல சொன்னா அடி வாங்க தெம்பு ஏதும்மா! ஜோக் சரியா சொன்ன மாதிரி இந்த விடுகதைக்கு விடை கரெக்டா சொல்லு பார்க்கலாம்!?

கடலைக் கலக்குது ஒரு குருவி..,
கடலோரம் போகுது ஒரு குருவி..,
செடியைத் தின்பது ஒரு குருவி..,
செடி ஓரம் போகுது அடுத்த குருவி..,

குருவிகளின் பேர் சொல்லு புள்ள பார்க்கலாம்!!

இருங்க கொஞ்சம் யோசிச்சு சொல்றேன். 

ம்ம்ம் எம்புட்டு நேரம் யோசிப்பே!! நீ யோசிச்சு வை. நான் அதுக்குள்ள நான் வயக்காட்டுக்கு போய் வரேன்.

Saturday, September 28, 2013

சினிமாவை பிடிக்காம போக காரணங்கள்

1.புருஷனுக்கே இன்னிக்கு மரியாதை கொடுக்காத இந்த காலத்து படத்துலயும், ஒரு பொண்ணுக்கு தாலிதாம்மா முக்கியம்ன்னு, ஒரு அம்மா  அட்வைஸ் பண்ணும்.

2. கருப்பா, அசிங்கமா இருக்கும் பொண்ணுங்களுக்கு ”அருக்காணி”ன்னு பேரு வைக்குறது.

3. ராத்திரி 12 மணிக்கு பப்பரப்பான்னு போய் வரும் மாடர்ன் பொண்ணு கரப்பான் பூச்சியை பார்த்து பயந்து போய் ஹீரோவை மட்டுமே கட்டிப்பிடிக்கும்.

4. யூரின் டெஸ்ட், ஸ்கேன்ன்னு ஆயிரமாயிரமா கொட்டி பார்த்தாலும் ரிசல்ட் தப்பா சொல்லும்போது கையை பிடிச்சு பார்த்தே கர்ப்பமா இருக்கும்ன்னு சொல்லுற வைத்தியர்.

5. பாப் கட்டிங்க் வெட்டி, டைட் ஜீன்ஸ் மிடி போட்டு சுத்துற ஹீரோயின், லவ் வந்ததும்,  அல்ட்ரா மாடர்ன் பொண்ணா ரூமுக்குள்ள போய் அடக்கம் ஒடுக்கமா புடவை கட்டி வெளி வருவாங்க. மேட்சிங் ப்ளவுசாவது ரெடிமேட்ல வாங்கிக்கலாம்.  ஐந்தடி கூந்தல்?!

6.தறிக்கெட்டு ஓடுற குதிரை, மாடு, ஜீப், காரையெல்லாம் ஒரு கயிறுல கட்டி, ஒத்த கையால இல்லன்னா ஒத்த காலால நிறுத்துற ஹீரோவின் வலிமை!!

7.சூப்பர் ஃபிகரோட கல்யாணம் நின்னுட்டா மட்டும்,  உடனே தியாகியா மாறி தாலி கட்ட ஒத்துக்கும் ஹீரோ, அட்டு ஃபிகர் கல்யாணம் நின்னுட்டா 16 பக்கம் வசனம் பேசி மாப்பிள்ளையை ஒத்துக்க வைக்குற சாமர்த்தியம்.

8. குக்கிராமத்துல கூட பார்மசி வந்துட்ட இந்த காலத்துல கூட, வில்லேஜ் சப்ஜெக்ட் படத்துல அம்மாக்களோ இல்ல அக்காக்களோ இல்ல ஹீரோயின்களோ தற்கொலைக்கு அரளி விதை அரைக்குறது.

9. வயசுக்கு மீறின முதிர்ச்சியோடு இருக்கும் குழந்தை நட்சத்திரத்தை பார்க்கும்போது.

10. கிராமத்து ஹீரோயின், டூயட் பாட லண்டன், ஆஸ்திரேலியா, சுவிஸ்ன்னு ஃபோட்டோவுல கூட பார்த்தே இராத இடங்களுக்கு கனவுல போறது...,


11. காலண்டர், செல்போன், டயரின்னு ஆயிரத்தெட்டு ரிமைண்ட் பண்ணும் விசயங்கள் இருந்தாலும் வாந்தி எடுக்கும்போதுதான் நாள் தள்ளி போனதை உணரும் அப்பாவி பெண்கள்.

12. அண்ணன்,தங்கச்சி கதைன்னா சொத்து,பத்து,ஆசை, மானம், உயிர்லாம் விட்டுக்கொடுக்கும் பாசக்கார அண்ணன்கள். 

13. அண்ணி, நாத்தனார் கதைன்னா கருவை கலைக்குறது, பில்லி சூனியம் வைக்குறதுன்னு இருக்கும் கொடுமைக்காரியா காட்டுறது.

14. மரு, தாடி, தலைப்பாக்கட்டு இந்த மூனையும் வச்சே மாறுவேசத்துல அலையும் ஹீரோ.

15. பொறுப்பான மருமகள்ன்னா, புகுந்த வீட்டில் கஷ்டமான நேரத்துல, சிரிச்ச முகத்தோட தன் நகைகள் கழட்டி மாமனார் இல்ல புருசன் கிட்ட கொடுக்கனும்.


(தொடரும்...,)