கடந்த சில வாரங்களா நாகர்கோவில் சுத்தியுள்ள திருவிதாங்கூர்
அரசுகளையும், அதன் பெருமை, வீழ்ச்சி, அவர்கள் விட்டு சென்ற தடயங்களை மௌனசாட்சிகள்ல பார்த்து வந்தோம். அங்கயே இருந்தா போரடிச்சுடும். அதுமில்லாம, வீட்டை பூட்டிக்கிட்டு எத்தனை நாள்தான் அங்கயே டேரா அடிக்குறது. ஸ்கூல், ஆஃபீஸ்ன்னு ஆயிரம் வேலைகள் இருந்ததால, வேண்டா வெறுப்பா (வீட்டுக்கு வந்தா, சமைக்கனும், கூட்டனும், துவைக்கனுமே!!) வீட்டுக்கு வரும்போது சென்னைல இருக்குற மச்சினர் குடும்பத்தை ட்ராப் பண்ண வேண்டியதால கடைசியா வண்டி சென்னைக்கு பறந்துச்சு!
வண்டி ஈசிஆர் ரோட்டுல போய்க்கிட்டு இருந்தப்போ, போற வழிதானே!? மகாபலிபுரம் போலாம்ன்னு எங்கிருந்தோ ஒரு சவுண்ட் வந்துச்சு. ம்க்கும், வெறும் மணலும், கற்சிலையையும் பார்த்து என்ன ஆகப்போகுது!? ஒரு கோவில் இல்ல, பார்க் இல்ல பசங்க என்சாய் பண்ண எதுமில்லன்னு முணுமுணுப்புகள் எழுந்தால, போகலாமா!? வேணாமா!?ன்னு ஓட்டெடுப்பு நடந்துச்சு. சிவகாமியின் சபதம் படிச்சதால அங்க போகனும்ன்னு நான் ஓட்டளிக்க, மெஜாரிட்டி ஓட்டு போகலாம்ன்னு வரவே வண்டியை அந்த பக்கம் திருப்பியாச்சு!!

பறந்து விரிந்த பல்லவ சாம்ராஜ்யத்தின் பெருமை பேசும் கட்டிடங்கள், துறைமுக நகரமான மாமல்லபுரத்தில்
கடல்வழி வாணிகம், மக்களின் ஆடல்
பாடல் கொண்டாட்டம், அவர்தம் செல்வசெழிப்பு, பல்லவ மன்னனின் வாழ்நாள் லட்சியத்தை பூர்த்தி செய்ய அயராது பாடுபடும் ஆயனார் சிற்பி, பரஞ்சோதி, நாகநந்தி அடிகள், காஞ்சி முற்றுகை, ஆயிரம் கனவுகளையும், இளவரசனையும் மனசில் சுமந்து பட்டாம்பூச்சியாய் சிறகடிக்கும் சிவகாமி, அவளின் காதல் ததும்பும் பார்வையை பார்த்து கொண்டு
வரும்போது தீடீரென போர் முழக்கங்கள், மக்களின் ஓலம், அழிவு, சிவகாமியின் சபதம், இளவரசனின் திருமணம், அரசனின் மரணம்.., சிவகாமி நடராஜரை கணவானாய் வரித்து கொண்டு ஆலயத்தில் நடனம் ஆடுவது, அவள் மனதை புரிந்துக் கொண்ட மன்னனி கண்ணீர், ஆட்சி மாற்றம், போர், சூறையாடல், கடல் கொந்தளிப்பு மாமல்லபுரத்தின் அழிவு என் கண் முன்னே!!
ஆனா, நான் மட்டும் எந்த
பாதிப்பும் இல்லாமல் அப்படியே இருக்கிறேன். பல சரித்திர கதைகள் கொண்ட பூமியில் நிற்கும் போது கனவுகள் போல பூர்வ ஜென்ம வாசனை போல, அதே
நினைவுகள் வந்து என் மனசில் நிழலாட, குழந்தைகள், குடும்பம், வயதை மறந்து சிறு பிள்ளையாய் ஆர்வத்தோடு மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க ஆரம்பித்தேன்.
எல்லோருக்கும் தெரிந்த இடம்தான் இருந்தாலும், இப்படித்தான் சுற்றுலா பதிவு போடனும்ன்னு இருக்குற விதிமுறைகளுக்கேற்ப..., சென்னைல இருந்து
ECR வழியா பாண்டிச்சேரி போற வழியில இருக்கு இந்த மாமல்லபுரம் . இது, காஞ்சிபுரம் மாவட்டத்துல இருக்கு. இது, ஏழாம் நூற்றாண்டில் பல்லவ நாட்டோட முக்கியமான துறைமுகமா இருந்ததுன்னு ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க. மாமல்லபுரம் பல்லவர் கால துறைமுக நகரமாக இருந்ததாம் இந்த துறைமுகநகரத்தை மேம்படுத்த மகேந்திரவர்மனின் மகன் நரசிம்மவர்மபல்லவன் சிறப்பு கவனம் செலுத்தினானாம். இவனது சிறப்பு பெயர்களில் ஒன்று மாமல்லன்.இவர் சிறந்த போர் வீரர் என்பது மாத்திரம் இல்லாம சிறந்த மல்யுத்த வீரனாவும் இருந்திருக்கிறார். அதனால இந்த நகரத்திற்கு மாமல்லபுரம் என்று பெயர் வந்ததுன்னு சொல்றாங்க. அது காலபோக்குல மகாபலிபுரம்ன்னு அழைக்கபடுவதாகவும் சொல்றாங்க .
உங்க கிட்ட பேசிக்கிட்டே வந்ததுல கவனிக்கலை. இங்க, புலிக்குகைன்னு போர்டு இருக்கு. இங்க ஜூ எதாவது இருக்கா!? புலி இருக்குமோ!? இல்ல 23 ம் புலிகேசி படத்தை இங்க எடுத்ததால இந்த பேரா!? சரி, அங்க போயி என்ன!? ஏதுன்னு தெரிஞ்சுக்கிட்டு வரலாம். வாங்க!!
இங்க குகையையும் காணோம்!! புலியையும் காணோம்!! யாரை கேக்கலாம்!! சூர்யா எங்கன்னு கேட்டேன். ஏன்? இப்ப எதுக்கு நடிகர் சூர்யாவை கேட்குறேன்னு என் வூட்டுக்காரர் கேட்க.., அவர்தானே மாமல்லபுரத்துல கைடா இருக்கார்ன்னு நான் சொல்ல, குழப்பமும், கோவமுமா வூட்டுக்காரர் என்னை பார்க்க.., மாயாவி படத்தை டிவில பார்த்துட்டு அம்மா இப்படி குழப்புதுன்னு பையன் நம்மை போட்டு கொடுக்க.., அதுக்குள்ள அந்த இடத்தை பத்தி கூட வந்தவங்க சொல்ல ஆரம்பிச்சாங்க.
இந்த இடத்தோட பேரு சாளுவன்குப்பம். முதலாம் நூற்றாண்டுகளிலேயே இந்த சாளுவன்குப்பத்தை சுத்தி மக்கள் வாழ்ந்திருக்காங்கன்னு ஆராய்ஞ்சு சொல்லி இருக்காங்க. ஆரம்பகாலத்துல இந்த இடம் திருவிழிச்சில் னு சொல்லி இருக்காங்க. அதுக்கப்புறம், விசயநகரப் பேரரசு காலத்துல, சாளுவ மன்னன் சாளுவ நரசிம்ம தேவராயன் பெயரால் சாளுவன்குப்பம்ன்னு பேர் வந்துச்சாம். இது 8 ம் நூற்றாண்டுல வடிவைவமைக்கபட்டிருக்கலாம் ன்னு நம்பப்படுது. இப்ப இந்த இடம் தொல்பொருள் இலாக்காவின் பாதுகாப்பில் இருக்கிறதுனால சுத்தமா பராமறிக்குறாங்க.
பெரிய பாறையின் முன்ன 11 புலி முகங்களும், அதன் தலைபாகத்தில் யானை வடிவமும், நிற்கிற நிலையில் நாலு புலிகளும் இருக்கு. நடுவுல சதுர வடிவில் ஒரு இடம் இருக்கு. இது கலையரங்கமா இருந்திருக்கலாம். மன்னர் உட்கார்ந்து பார்க்கவும், கலைநிகழ்சிகள் நடத்தவும் அழகா வடிவமைச்சிருக்காங்க. புளிதலைகளுக்கு பக்கத்திலேயே இரண்டு யானை தலைகளும், அதன் நடுவே ஒரு சிவலிங்கமும், உள்ள தெரியுற சதுரவடிவ மாடங்கள்ல சிவன் பார்வதி உருவங்கள் இருக்கு. ஓரமா ஒரு குதிரை நிற்கிற மாதிரி செதுக்கி இருக்காங்க.
இயற்கையிலே செதுக்கபட்டமாதிரி ஒரு பெரிய பாறை சாய்தளமா இருக்கு. அதுல நிறைய கலைநுணுக்கங்கள் சிற்பமா வடிவமைக்க பட்டு இருக்கு. அதுல ஏறிச் சென்று உச்சியில் எப்படித்தான் செதுக்கினாங்களோ!? இதுல ராக் கிளைம்பிங்ன்னு சொல்ற விளையாட்டுக்கு ஏற்ப பிடிச்சு ஏறுவதற்கு நிறைய ஓட்டைகள் அந்த கல்லிலே செதுக்கபட்டிருக்குன்னு சொல்லவும்,கூட வந்த இளவட்டங்கள் அதில் ஏறலாமான்னு கேட்டதுக்கு, அதெல்லாம் தகுந்த பயிற்சி உள்ளவர்களால் மட்டுமே முடியும். மத்தவங்கலாம் வேடிக்கைப் பார்த்தால் போதும்ன்னு சொல்லிட்டார்.
இந்த பெரியக் கல்லைத் தாண்டி போகும்போது, அங்கங்க நிறைய கற்பாறைகள் சிதறி கிடக்குற மாதிரி இருக்கு. கூடவே காதலர்களும் சிதறி கிடக்குற மாதிரி ஒவ்வொரு கல்லிற்கு பக்கத்திலையும் லவ்விட்டு இருக்காங்க..இதையெல்லாம் தாண்டி போன சில அடி தூரத்துல அழகான சிவன் கோவில் ஒண்ணு இருக்கு. இந்த கோவிலோட பேரு அதிரண சண்டகோவில். இது ஒரு குடவரை கோவில். மிகவும் சக்தி வாய்ந்த சிவன் கோவிலாம்.
சிவனை கும்பிடும் முன் நந்தியை கும்பிடனுமில்ல!! அதானே முறை!? நந்தியை ரெண்டு துண்டா செதுக்கி பின் ஒட்டி வச்சமாதிரி இருக்கு. பக்கத்தில் ஒருபாறையில் மஹிசாசுரமர்தினி கதை செதுக்கப்பட்டிருக்கு. அங்க நம்மாளுங்க கற்பூரம் ஏத்தி வச்சு சாமி கும்பிடுறாங்க.
அங்க இருந்த ஒரு நடுத்தர வயது அம்மா ரொம்பவும் பயபக்தியோடு சாமி கும்பிட்டுக்கிட்டு இருந்தாங்க. அவங்க கிட்ட இந்த கோவிலை பத்தி கேட்டபோது..., அவங்களோட சின்ன வயசுலலாம் இங்க காலை, மாலை பூஜை நடக்குமாம். வேண்டிய வரத்தை உடனே நிறைவேத்தி கொடுத்திடுவாராம். ஆனா, இப்ப இந்த இடம் தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டுல இருகிறதால ஒரு தேங்காகூட உடைக்க விடமாட்டேங்குறாங்கன்னு ஆதங்கபட்டாங்க. அவ்வளவு சிறப்பு வாய்ந்த சிவன் கோவிலுக்குள் சிலர் செருப்பு காலோட நடந்து போறதை பார்க்கும் போது மனசு வேதனைப்படுது.
பட்டைதீட்டிய சிவலிங்கமும், அவருக்குப் பின்னே பார்வதி சமேத பரமேஸ்வரரும், பக்கத்தில் இருபுறமும் துவாரபாலகர்கள் வீற்றிருக்க பிரம்மா, விஷ்ணு இருவரும் இரண்டு பக்கத்துலயும் இருந்து அருள் புரியுறாங்க. பக்கவாட்டு சுவர்களில் ஏதோ குறிப்புகள் அடங்கிய கல்வெட்டுகள் காணப்படுது.
சாமி கும்பிட்டு முடிச்சதும் தூரத்துல ஓட்டு வீடு ஒண்ணு கண்ணுல பட்டுச்சு. சரி அங்க போய் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கலாம்ன்னு கிட்ட போய் பார்த்தா அது வீடில்ல கோவில்ன்னு தெரிஞ்சது. இங்க இதுப்போல ஒரு கோவிலான்னு ஆச்சர்யம் வரவே கோவிலுக்கு போனோம்.
இங்க இருக்குற கிராம தேவதை ஸ்ரீ தனியமர்ந்தஅம்மன்ஆலயம். அங்க பய பக்தியோடு சாமி கும்பிட்டுக்கிட்டு இருந்துச்சு ஒரு குடும்பம், இந்த கோவில் பத்தி கேட்டதும் இந்த அம்மனின் வரலாறை சொன்னாங்க. அதிலயும் ஒரு சின்ன பொண்ணு ரொம்ப ஆர்வமா கோவில் பத்தி சொன்னது அந்த அம்மனே நேரில் வந்து சொன்ன மாதிரி இருந்துச்சு!!

வாலாஜாபாத் ஆற்றங்கரையில் வீற்றிருந்து தண்ணீரின் வழியே கரைந்து சமுத்திரத்தில் தானே உருவாகியதாம். இந்த அம்மன் கடலில் மீன்பிடிக்குறவங்க துடுப்பு போடும் போது ஏதோ துடுப்பில் தட்டியதாம். துடுப்பு தட்டிய இடத்துல இரத்தம் வந்ததாம். உடனே அவங்க இறங்கி பார்த்த போது அங்கே 6 வடிவில் அம்மன் சிலைகள் இருந்ததாம். அதை எடுத்து வந்து இங்க பிரதிஷ்டை பண்ணினாங்களாம்.
2004 ல் சுனாமி வந்த போது அதன் பாதிப்பு இந்த கிராமத்து மக்களை தாக்காதவாறு இந்த அம்மன் பாதுகாத்து காபாற்றியதாம். அந்த சிலைகள் எப்போதும் மழை, வெயில், பனி, காத்து படும்படியா திறந்தே இருந்ததாம் . இங்கு கோவில் கட்ட நினைத்த மக்கள் கோவில் கட்டி வரும்போது மேற்கூரை மட்டும் நிக்காம விழுந்துக்கிட்டே இருந்ததால, மேற்கூரை இல்லாமயே இந்த கோவில் கர்ப்பக்கிரகம் இருக்கு. இதான் இந்த சளுவன் குப்பத்தோட காவல் தெய்வமாம்.

இது கோவிலை ஒட்டி காணப்படுற சப்தகன்னியர் சிலை. இதோடு புலிகுகையின் எல்லை முடிந்ததுன்றதுக்கு அடையாளமா ஒரு கேட் போட்டுவச்சு இருக்காங்க. அந்த பக்கம் கடற்கரை. தூரத்துல சிந்துசமவெளி நாகரீக கட்டிட அமைப்பு போல் ஒரு கட்டிடம் தெரிஞ்சுது. அங்க போய் பார்க்கலாம்ன்னு அங்க போனோம்...,
இங்க தெரியுற இந்த யானை வடிவ பாறை 2004 வந்த சுனாமி பேரலையால மேல்பாகம் மட்டும் மணல் மூடி தெரிந்ததாம். தொல்பொருள் துறையினர் அதை அகழ்வாராய்ச்சி செய்து பார்த்தபோது அது ஒரு பழங்கால முருகன் கோவில் என கண்டறியபட்டதாம். இந்த பாறையின் பின்பகுதியில் நிறைய சிற்பங்கள் செதுக்கபட்டிருக்குறதால அதை ஆராய்ச்சி செய்ய தோண்டும்போது இந்த கோவில் வெளிப்பட்டதாம்.
இது ஒரு மிகப்பழமையான கோயில். இது சங்ககாலத்திற்கு முன் கட்டப்பட்டதா சொல்லபடுது. அடித்தளத்தில் இருக்கும் செங்கல் கட்டுமானம் சங்க கால கட்டிட கலைவகையை சேர்ந்ததாம். இந்த செங்கற்களை இப்ப இருக்கும் கற்களோடு ஒப்பிடும்போது கொஞ்சம் பெரியதா இருக்கு. இந்த வகை செங்கற்கள் சங்க கால தொடர்புடைய பூம்புகார், உறையூர், மாங்குடி, அரிக்கமேடு இங்க கிடைத்த கற்கள் மாதிரி இருந்ததாம்.
இங்க பெரிய வெங்கலத்தினால் ஆன முருகன் சிலையும், வெண்கல விளக்குகள், சிவலிங்கம், சோழர்களின் காலத்தில் உள்ள செப்பு காசு லாம் கூட கிடைச்சுதாம். சிலப்பதிகாரத்தில் சொல்லபட்டுள்ள குறவன் கூத்து பற்றிய மண் சிற்பங்களும் இங்கு கிடைத்தனவாம். மேலும் .சுடுமண்ணால் ஆன ஒரு நந்தி, ஒரு பெண்ணின் சிலையும் இங்கு இருந்ததாம். இந்த கோவிலின் முன் புறத்தில் கல்லிலேயே செய்யப்பட்ட முருகனின் வேல் ஒன்று உள்ளது,
இங்கு கிடைக்கப்பட்ட பொருட்கள் எல்லாம் மாமல்லபுரம் மியூஸியத்தில் வச்சு இருகிறாங்களாம். கோவிலின் நடுவே சிறிய குழி போன்ற பகுதி இருக்கு. அங்க இருந்து தான் சிலைகள் எல்லாம் கிடைத்ததாம். இந்த இடம் சுற்றிலும் கயிறு கட்டி பாதுகாத்து வச்சிருக்காங்க.
மாமல்லபுரம்ன்னு சொன்னாலே எல்லோருக்கும் ஐராவதம், பிடாரி ரதம், அர்ஜுனன் தவம், சூரியன் கோவில் இதுப்போல சில இடங்கள் மட்டுமே போய் பார்த்து, பதிவாக்கி இருக்காங்க. ஆனா, இதையெல்லாம் தாண்டி இங்கு பார்த்து ரசிக்க வேண்டிய இடங்கள் பல இருக்கு. அந்த இடங்களைலாம் உங்கள் பார்வைக்கு காட்டக்கூடிய சிறிய முயற்சியே இது!!
அடுத்த வாரமும் மாமல்ல புரத்துலயே மௌன்சாட்சிகள் பகுதிக்காக சந்திக்கலாம்....,
