Tuesday, October 24, 2017

அழகென்ற சொல்லுக்கு முருகா!!! உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா??!!


 யாமிருக்க பயமேன் என நமக்கு தைரியத்தையும், ஆறுதலையும் அளிக்கும் ஆறுமுகம் அருளும் தலங்களில் வெளி உலகத்துக்கு அதிகம் தெரியவராத கோவில்களில் எட்டுக்குடி முருகன் கோவிலும் ஒன்று.  இக்கோவில் நாகப்பட்டினத்துக்கு அருகில் இருக்கு. 


நாகப்பட்டினம் பொருள்வைத்தசேரி(பொரவச்சேரி)ன்ற ஊரில் சிற்பி ஒருத்தர் இருந்தாராம். அவர் சிறந்த முருக பக்தரும்கூட.. ஒரு கர்ப்பிணி தன் வயிற்றில் இருக்கும் குழந்தையை எத்தனை கற்பனை செய்திருப்பாளோ அதுப்போல, முருகனை சிலையாய் வடிக்க தன் மனசுக்குள் பார்த்து பார்த்து அழகன் முருகனை  கற்பனை செய்துக்கொண்டிருந்தார். அவரின் ஆசையை நிறைவேறும் நாள் வந்தது. பரந்தச்சோழன், அவ்வூரில் முருகன் கோவில் கட்ட முன்வந்து, முருகன் சிலையையும் வடிக்க சிற்பிக்கு ஆணையிட்டார்.  


சிற்பியும் கண்ணும் கருத்துமாய் ஊன், உறக்கமின்றி சிலை வடித்தார். சிலையை கண்ட பரந்த சோழன், சிலையின் அழகில் மயங்கி, இனி நீர் இதுமாதிரி ஒரு சிலையை வடிக்கக்கூடாதுன்னு என கட்டளையிட்டதோடு, சிற்பியை நம்பாமல் அவரது கட்டைவிரலை துண்டித்தும் விட்டான்.எல்லாம் அவன் செயல் என  நினைத்து அவ்வூரிலிருந்து வேறு ஊருக்கு குடிபெயர்ந்தார். ஆனாலும், முருகனுக்கு சிலை வடிக்கும் ஆவல் அவரை விட்டு போகவில்லை... முருகன் சிலை வடிக்க  உகந்த கல்லை தேடி அலைந்தார்.

முருகன் அருள் சிற்பிக்கு கிடைக்க, சிலை வடிக்க தகுந்த கல் கிடைத்தது.   அவர் ஆசைப்படியே,  ஓர் இடத்தில் இரத்தம் போன்ற சிவப்பு ரேகை கொடிகளை கொண்டதும், நீலமும், கருமையும் கலந்ததுமான உயிரோட்டம் உள்ள ஒரு சிறந்த கல்லை கண்டுபிடித்து அந்த கல்லிலேயே முருகனின் சிலையையும் மயிலையும் செதுக்கி வடித்து கொண்டு இருந்தார் சிற்பி.  

சிற்பி வாழ்ந்த ஊரை ஒரு முத்தரசன் என்ற குறுநில மன்னன் ஆண்டு வந்தான். பெருவிரல் இல்லா சிற்பி ஒருவர் சிலை வடிக்கின்ற அதிசயம்  அவன் காதுக்கு சென்றது. அந்த அதிசயத்தை காண, அரசன், சிற்பி வீட்டுக்கு சென்றார். அங்கு அவரின் கதையை கேட்டு முடித்து, சிலையை கண்டபோது... . முருகனே நிற்பதுப்போல இருக்கும் முருகன் சிலையை கண்டு அதிசயத்து நின்றான்.  உடனே, அவனுக்கு முருகனுக்கு ஒரு கோவில் கட்டும் ஆவல் உண்டானது. உடனே, கோவிலும் எழுப்பி அச்சிலையை பிரதிஷ்டையும் செய்தான். அந்த சிலைதான் இன்றைய எட்டுக்குடி சவுந்தேஸ்வரர் கோவிலில் இருக்கு. 
சிலை வடித்து முடித்த உடன்,  மயில் பறக்க முயன்றதாம்.  இதைக்கண்ட சிற்பி,  எட்டிப்பிடி... எட்டிப்பிடி.. எனக்கூவிக்கொண்டே சென்று மயிலை பிடித்துகொண்டாராம். அதனால், இத்தலத்துக்கு எட்டிப்பிடி என பேர் உண்டாகி, பின் காலப்போக்கில் எட்டுக்குடி என்றானது. மயில்,  முருகனுடன் பறக்காமல் இருக்க,  மயிலின் கால்களை சேர்த்துக் கட்டிய நிலையில் சிலை வடித்தாராம். மயிலின் கால் நகத்தையும் பெயர்த்தும் விட்டாராம்.  அதனால்,  முருகன் சிலையில் கால் மட்டுமே தெரியும்ன்னு சொல்றாங்க.   இத்தனை உயிரோட்டமான சிலை வேறெங்கும் இருக்கக்கூடாதென சோழ மன்னனைப்போல,  சிற்பியின் கண்ணை எடுத்துவிட்டானாம் முத்தரசன். 

 ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்குமா?! அதுப்போல, முருகனை வேண்டிக்கொண்டு, கண்பார்வையும், கட்டைவிரலும் இல்லாமல் இதே சிற்பி இன்னொரு சிலையை வடித்தார். அதை எண்கண் என்ற தலத்தில் வைத்தார். சிற்பி மொத்தம் மூணு சிலைகளை வடித்தார். முதல் சிலை சிக்கலிலும், இரண்டாவது சிலை எட்டுக்குடியிலும், மூன்றாவது சிலை எண்கண்ணிலும் வைத்து வழிபட்டனர். மூன்று சிலைகளும் அச்சில் வார்த்த மாதிரி ஒரே உருவ அமைப்பில் இருக்க்கும். இம்மூன்று கோவில்களையும் ஒரே நாளில் தரிசித்தால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை. 

சிற்பியின் மனசுக்குள் எத்தனை விதமா முருகன் காட்சியளித்தானோ தெரியாது. ஆனா, நமக்கு  மூன்று விதமா இக்கோவிலில் காட்சியளிக்கிறார்.  இவரை குழைந்தையாய் நினைத்து வணங்கினால் குழந்தையாகவும், இளைஞனாய் நினைத்தால் இளைஞனாகவும், முதியவராய் நினைத்து வணங்கினால் முதியவராகவும் காட்சியளிப்பார். 

இந்த முருகனுக்கு  வாசனை மலர்களை கொண்டு பூஜிப்பவர்களுக்கு வறுமை நீங்கும்.  சந்தனத்தால் பூஜித்தால் உடல் உபாதை நீங்கும். விபூதியால் வணங்கினால் விரோதிகளால் வரும் துன்பம் நீங்கும்.  முருகனுக்கு வஸ்திரம் சார்த்தி வழிப்பட்டால் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனை நீங்கும்.  முருகனுக்கு அபிஷேகம் செய்வித்தால் துன்பமில்லா வாழ்வு கிட்டும். வான்மீகர் என்ற சித்தர் இங்குதான் சமாதியானார்.  

குழந்தைகளின் பயந்தசுபாவம் நீங்கவும், திருமணத்தடை நீங்கவும், குழந்தைப்பேறு கிட்டவும் , எதிரிகளின் தொந்தரவு அகலவும் இத்தலத்து முருகனை வணங்குவர். இங்கிருக்கும் சரவண பொய்கையில் நீராடினால் தீராத வியாதி தீரும். 

நாளைக்கு வேளிமலை முருகன் கோவிலில் சந்திப்போம்.....

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை....
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1475715
நன்றியுடன்,
ராஜி.

8 comments:

  1. எம்பெருமான் முருகன் குறித்து எட்டுக்குடி, சிக்கல், எண்கண் பற்றி விவரம் அறிந்தேன் அக்கா....

    ReplyDelete
    Replies
    1. சின்ன வயசுல போனது சகோ. ஒரே நாள்ல மூணு கோவிலும் ஒரே நேரத்துல பார்க்கனும்ன்னு சொன்னது மட்டும் நினைவிருக்கு... தல வரலாற்றை கூகுள்ல தெரிஞ்சுக்கிட்டேன்

      Delete
  2. சுவாரஸ்யமான தகவல்கள், அழகான படங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  3. நல்தகவல்கள் ..ராஜிக்கா..
    .
    /// எட்டிப்பிடி... எட்டிப்பிடி.. எனக்கூவிக்கொண்டே சென்று மயிலை பிடித்துகொண்டாராம். ////

    ---சுவாரஸ்சியம்....

    ஆனாலும் கண்பார்வையும், கட்டைவிரலும் இல்லாமல் வாழ்ந்த சிறப்பிக்கு பக்தி மட்டும் குறையல....

    என்னா பக்தி...

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் அவன் செயல்

      Delete
  4. எட்டுக்குடி பற்றி தெரியாது தெரிந்து கொண்டேன் வரலாறுடன் நன்றி

    ReplyDelete