Friday, October 13, 2017

புருசனும், பொண்டாட்டியும் அண்ணன் தங்கையான கதை- புண்ணியம் தேடி..


ஒரு மனுசனுக்கு  உடை, உணவு, உறைவிடம் மாதிரி கல்வி, செல்வம், வீரம்ன்னு  மூணும் அவசியம். வீரம்ங்குறது பிறப்பாலும், வளர்ப்பாலும் வர்றது(என்னைய மாதிரி ஊர்வம்பை இழுத்துட்டு வர்றதை சொல்லல. அநியாயத்துக்கு எதிரா பொங்குறதை சொல்றேன்).  செல்வம் இருந்தா பேருக்கு பின்னாடி டிகிரி போட்டுக்கலாமே தவிர, அந்த படிப்புக்குண்டான அறிவை வாங்க முடியாது. யாருப்பா அது ட்யூஷன் வச்சுப்போம்ன்னு சொல்லுறது?! ட்யூஷன் வச்சாலும் சிலது ப்ளஸ் டூ பாஸ் பண்ணாது. பார்ரா! என்னைய ஏன்ப்பா பார்க்குறீங்க?! அது நானில்லப்பா...  இப்படிலாம் இம்சிச்சா எப்படி பதிவை எழுதுறது?! ஆங்க்க்.. என்ன சொல்ல வந்தேன்?! ம்ம் கல்வியை காசு கொடுத்து பெற முடியாது. ஆனா, கல்வியால காசை பெற முடியும். அவ்வளவ் முக்கியம் வாய்ந்த கல்விக்கு அதிபதி கலைமகள், கலைவாணி, கலைச்செல்வி, கலையரசி, பிராம்ஹின்னு பலவாறாய் சொல்லப்படும் சரஸ்வதிதேவி.

மூப்பெருந்தேவிகளில் ஒருவரான சரஸ்வதிதேவிக்கென தனிக்கோவில் இந்தியாவில் அதிகமில்லை. தமிழகத்தில்கூட எனக்கு தெரிஞ்சு வேலூருக்கு அருகாமையிலுள்ள  வாணியம்பாடியிலும்,  திருவாரூர் மாவட்டத்தில் உள்ள  நன்னிலம் வட்டம்,  கூத்தனூர் ஆலயமும்தான். வாணியம்பாடி கோவிலுக்கு நான் போனதில்லை. கூத்தனூர் சரஸ்வதி தேவி கோவிலுக்கு செல்லும் பாக்கியம் போன மாசம்தான் வாய்த்தது. சரஸ்வதி தேவி கோவில்ன்னதும் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு சென்றேன். சகலவிதமான ஞானத்தை அளிப்பவள். அவள் அருள் இருந்தால் உலகையே கைவரப்பெறலாம்.. குழந்தைகளுக்கு அவள் அருள் மிக முக்கியமாச்சே! மிகப்பெரிய ஆலயம், அது இதுன்னு நினைச்சுக்கிட்டே போனேன்.

சாதாரண கிராமம்.. அதுக்குள் இருக்கும் ஒரு கோவில் எப்படி இருக்குமோ! அப்படிதான் இருக்கு இக்கோவில். ஒற்றை பிரகாரத்தில் கவனிப்பு அதிகமின்றி, ’சுத்தம்’ சுத்தமா இல்லாம இருக்கு கல்விக்கடவுளின் இருப்பிடம். காசு கொடுத்து டிகிரி வாங்கிக்கலாம்ன்னு நினைக்குது போல இவ்வுலகம். பத்து இருபது கடைகள் இருக்கு. கடைகளில் நோட்டு, புத்தகம், பேனா, பென்சில், வெள்ளை தாமரை உட்பட பூஜைப்பொருட்கள் விற்கும் கடைகள் இருக்கு. பூஜை பொருட்களோடு பேனா, பென்சிலை கொடுத்தா அன்னையின் பாதத்தில் வச்சு அர்ச்சனை செஞ்சு கொடுக்குறாங்க.  கோவில் ராஜகோபுரம் மூன்று நிலைகளுடனும், ஐந்து கலசத்துடன் காட்சி அளிக்கிறது.
கோவிலுக்குள் நுழைந்ததும் பலிப்பீடத்துக்கு இடப்புறம் உள்ள தூணில் சரஸ்வதிதேவி சுதை சிற்பம் இருக்கு,.இப்ப அங்க  வெண்கலத்தாலான தகடு வேய்ஞ்சிருக்காங்க. அதற்கு எதிரில் குழந்தைகளின் கல்வி நலனுக்காக அவரவர் வசதிக்கேற்ப 5, 9ன்னு தீபம் ஏத்துறாங்க.  

இத்திருக்கோயிலில் சரஸ்வதிதேவி வெண் தாமரைப் பூவில் அமர்ந்திருக்கிறார். வெண்பட்டு உடுத்தியிருக்கிறார். வலது கரத்தில் சின்முத்திரையுடனும், இடது கரத்தில் புத்தகத்துடனும், வலது மேல் கையில் அட்சர மாலையுடனும், இடது மேல் கையில் அமுத கலசத்துடனும், ஜடாமுடியுடனும் காட்சி தருகிறார் சரஸ்வதி தேவி. கையில் வீணையுடன் கிழக்கு திசையில் காட்சி தருகிறார். இக்கோயிலில் துர்க்கையும், மகாலட்சுமியும், பெருமாளும்கூட வீற்றிருக்கின்றனர். ஆனாலும் சரஸ்வதிக்கென்று உள்ள தனிக் கோயிலாகவே இக்கோயில் அழைக்கப்படுகிறது. கோயில் பிரஹாரத்தில் பிரம்மா, ஒட்டக்கூத்தர், நர்த்தன விநாயகர் சிலைகள் இருக்கு. அன்னைக்கு எதிரே பலிபீடத்தின் முன்னே அன்னையின் வாகனமான அன்னம் அன்னையைப் பார்த்த வண்ணம் அமைந்துள்ளது.

அடுத்து அன்னையின் சன்னிதிக்கு போறதுக்கு முன்ன தல வரலாற்றை தெரிஞ்சுக்கலாம்.  பிரம்மாவுக்கும், அவர் மனைவியான சரஸ்வதிக்கும் ஒருமுறை சண்டை வந்துச்சு. புருசன் பொண்டாட்டின்னா சண்டை வரத்தான் செய்யும்போல! என்ன நாம சண்டை போட்டுக்கிட்டா அடிதடி ஆகி போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்டுன்னு போவோம். அவங்கலாம் ‘காட்’ ஆச்சே! அதனால ஒருத்தருக்கு ஒருத்தர் சாபம் விட்டுக்கிட்டாங்க. அதன்படி சோழ நாட்டில் வசித்த புண்ணியகீர்த்தி, சோபனை என்ற தம்பதிக்கு `பகுகாந்தன்' என்ற மகனாக பிரம்மாவும்  சிரத்தை ன்ற மகளாக சரஸ்வதியும் பிறந்தனர். இருவரும் ஒரே தம்பதிக்கு பிறந்ததால, அண்ணன், தங்கையாக வளர்ந்து வந்தனர்.  இவர்களுக்கு திருமணம் செய்ய புண்ணியகீர்த்தி ஏற்பாடு செய்தபோது, பூர்வஜென்ம நினைவு பிரம்மாவுக்கும், சரஸ்வதிக்கும் ஏற்பட்டது. அண்ணன், தங்கை திருமணம் செய்யலாமா?! என குழம்பி உடனடியாக அவர்கள் இருவரும் சிவபெருமானை வழிபாடு செய்தனர்.  

இருவரின் வழிபாட்டுக்கும் மனமிரங்கிய ஈசன் அவர்கள் முன்தோன்றி, தம்பதியர்கள் ஒற்றுமையா இல்லைன்னா எத்தகைய அசம்பாவிதங்களை சந்திக்க  நேரிடும் என்பதை உலகுக்கு உணர்த்தவே இத்திருவிளையாடலை நிகழ்த்தினோம். ஆதலால், இப்பிறவியில் நீர் இருவரும் திருமணம் செய்ய இயலாது. எனவே, நீ மட்டும் இங்கே தனியாக கோயில் கொண்டிரு.  இங்கு வரும் பக்தர்களுக்கு  கல்விச்  செல்வத்தை வழங்கு" என சரஸ்வதிதேவிக்கு அருள்பாலித்தார். அதன்படி கன்னி சரஸ்வதியாக அவள் கூத்தனூர் ஆலயத்தில் அருள்பாலிக்கிறாள்.   அதன்படி, சிவனின் அருள்பெற்ற சரஸ்வதி, கங்கையுடன் இணைந்தாள். சரஸ்வதி கங்காதேவியின் ஒரு அம்சமாக மாறினாள். சரஸ்வதி தேவியும், பிரம்மனும் ஒன்று சேர்ந்தனர். சரஸ்வதிதேவி இங்கு கோவில் கொண்டுள்ளதை கேள்விப்பட்டு சரஸ்வதி நதி இங்கு வந்து சேர்ந்தது. இருவரும் இணைந்து குப்த கங்கையாய் மாறினர். கூத்தனூர் ஆபத்சகாயேஸ்வரர், பரிமளநாயகியின் அபிஷேக நீராக மாறினாள் சரஸ்வதி. கூத்தனூரில் மஹாசரஸ்வதி அம்மனாகக் குடிகொண்டாள். இந்த திருக்கோயில் கூத்தனூர் ஹரிச்சொல் நதிக்கரையில் அமைந்துள்ளது. அரிச்சொல் நதி இன்று அரிசிலாறு என மருவி இப்ப அரசலாறுன்னு சொல்லப்படுது.
நர்த்தன வினாயகர் இவருக்கு சங்கடஹர சதுர்த்தி, வினாயகர் சதுர்த்திக்குலாம் விசேஷ அபிஷேக ஆராதனைலாம் நடக்கும். பிரம்மனுக்கும் இங்கு இடம் ஒதுக்கி இருக்காங்க.  மதுரைன்னா சங்கம் இருக்கனும். சங்கம்ன்னா எங்க அங்கம் இருக்கனும்ன்னு வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்து சூரி டயலாக் மாதிரி  கோவில்ன்னா நாங்களும் இருப்போம்ன்னு சொல்லி நாகராஜனும் இங்க இருக்கார். 
கோவிலில் ஒட்டக்கூத்தர் சிலை இருக்கு. அதுக்கு என்ன காரணம்ன்னா இரண்டாவது ராஜராஜ சோழனால் தனது அவைப்புலவரான  ஒட்டக்கூத்தருக்கு தானமாக இந்த ஊர் வழங்கப்பட்டதால் இவ்வூர் கூத்தனூர் ன்னு மாறிட்டுது. ஆக்சுவலி இந்த ஊருக்கு பேரு பூந்தோட்டம்.  கவிபாடும் திறன் வேண்டி கலைமகளை பூஜிக்க நினைத்தார் ஒட்டக்கூத்தர். கூத்தனூரில் பூந்தோட்டம் ஒன்றை அமைத்து தட்சிணாவாகினியாய் ஓடும் அரிசொல் மாநதியின் நீரால் அபிஷேகம் செய்து நாள்தோறும் அம்பிகையை வழிபட்டு வந்தார். ஒட்டக்கூத்தரின் தொண்டில் மகிழ்ந்த சரஸ்வதிதேவி தன் வாயிலிருந்த தாம்பூலத்தை அவருக்கு கொடுத்து வரகவி ஆக்கினாள் என்பது வரலாறு. தனக்கு பேரருள் புரிந்த கூத்தனூர் சரஸ்வதியை ஆற்றுக்கரை சொற்கிழத்தி வாழிய என்று பரணி பாடியுள்ளார் ஒட்டக்கூத்தர்.
ஏடு தொடங்குதல்ன்னு சொல்லப்படுகிற வித்யாரம்பம் இங்க செய்றாங்க. ஒரு தட்டில் நெல் நிரப்பி வச்சு அங்க குழந்தையின் கைகளை பிடித்து எழுத சொல்லிக்கொடுத்தலுக்கு பேரே வித்யாரம்பம். நாங்க போனபோது அங்க ஒரு பாப்பாக்கு ஏடுதொடங்குதல் நிகழ்ச்சி நடந்துக்கிட்டு இருந்துச்சு. குழந்தையோட அப்பாக்கிட்ட இதுமாதிரி பிளாக் எழுதுறேன்னு சொல்லி பாப்பாவை படமெடுத்துக்க அனுமதி கேட்டேன். அவரும் ஓக்கே சொன்னார். நம்ப பதிவுக்கு படமுமாச்சு. பிளாக்குக்கு ஒரு விளம்பரமுமாச்சு. ஏடு தொடங்குதலுக்கு மட்டுமல்ல நீத்தார் கடன் செய்யவும் ஏற்ற இடம் இது. காரணம் கங்கை யமுனை சரஸ்வதி ஆகிய மூன்று புண்ணிய நதிகளும் அரிசலாற்றில் சங்கமிப்பதாக ஐதீகம். எனவே கூத்தனூர் அரிசிலாறு தக்ஷிண  திரிவேணி சங்கமம்.  சமீபக்காலத்தில் கும்பகோணம்  சாரங்கபாணி தீட்சிதர் என்பவரின் புதல்வன் வாய் பேசாதிருந்து கூத்தனூர் அம்பிகை அருளால்  விஜயதசமி நன்னாளில் பேச்சுத்திறன் பெற்றதும் இத்தலத்தை திருப்பணி செய்து புருஷேத்தம்பாரதி  எனப் போற்றப்படுகிறார்.  
இந்த மஹா சரஸ்வதி அம்மன் ஆலயம் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் பூந்தோட்டம் என்னும் ஊருக்கு அருகில் உள்ள கூத்தனூர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. மயிலாடுதுறையில் இருந்து சுமார் 22 km தொலைவில் அமைந்துள்ளது. திருவாரூரில் இருந்து சுமார் 20 km தொலைவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இத்தலத்தில் நவராத்திரி விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நவராத்திரி ஒன்பது நாட்களிலும் விதவிதமான அலங்காரத்துடன் சரஸ்வதி அருள்பாலிக்கிறாள்.  நாடானாலும், வீடானாலும் கல்வி மிக முக்கியம். அதனால, கல்விக்கடவுளுக்குன்னு இருக்கும் இக்கோவிலை கொஞ்சம் சுத்தம் பத்தமா வச்சா நல்லா இருக்கும்.  ரொம்ப சிறிய ஊர் . சிறிய ஓட்டல்களும், சிறிய தங்கும் விடுதிகளும் இருக்கு. சாப்பாடுலாம் வெகு சுமார்தான்.


கல்விச்செல்வம், சகல கலைகளிலும் தேர்ச்சி பெற சரஸ்வதிதேவியை வணங்குவோம்.

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1474633
நன்றியுடன்,
ராஜி.

15 comments:

  1. அருமை.......////சரஸ்வதி தேவிக்கு கோவில்கள் இல்லை தான்.ஆனாலும்,இங்கு ஒரு வினாயகர் கோவிலில் சரஸ்வதி தேவி விக்கிரகம் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. சில கோவில்களில் சரஸ்வதிதேவிக்கென தனி சன்னிதி இருக்குண்ணே. ஆனா, தனிக்கோவில் கொண்டிருப்பது இந்த இடம் மட்டும்தான்

      Delete
  2. சரஸ்வதிதேவி வாயிலிருந்து தாம்பூலம் எடுத்த கதையெல்லாம் அன்றைக்கே நடந்துருக்கு.

    இதை பார்த்துதான் பிரேமாநந்தா வாயில் லிங்கம் எடுத்தாரோ....

    எம்பூட்டு கதை ஆத்தாடியோவ்...

    ReplyDelete
    Replies
    1. ம்க்கும் பிரேமானந்தா மாதிரியான இப்பத்திய சாமியார்கள் செய்வது சித்து வேலை...

      Delete
  3. அருமை! இன்னும் போகலை...... மாயூரத்தில் இருந்து பக்கமா? அடடா..தெரியாமப்போச்சே....

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்மா. அங்க சுத்தி சுத்தி நிறைய கோவில் இருக்கு. நமக்கு தெரிஞ்சதுலாம் நவக்கிரகம் கோவிலும் திருமணஞ்சேரியும்தான்.

      Delete
  4. இந்த இடம் சென்றதில்லை.

    ReplyDelete
    Replies
    1. எல்லாத்துக்கும் நேரம் காலம் அமையனும்

      Delete
  5. நன்றி சகோதரியாரே
    தம +1

    ReplyDelete
  6. கதையெலாம் சொல்லி சிலிர்க்க வச்சிட்டீங்க போயி ஆகணும் அரிசிலாறு படம் போடாம விட்டுட்டீங்க

    ReplyDelete
    Replies
    1. ஆத்துக்கு வர லேட்டாகும்ன்னு ஆத்துக்கு கூட்டிக்கிட்டு போகலப்பா

      Delete
  7. மகளே!போதும்மா புராண வரலாறு!

    ReplyDelete
    Replies
    1. இன்னமும் இருக்கே! என்ன செய்யலாம்ப்பா?!

      Delete
  8. புது தகவல்...இந்த இடம் சென்றதுமில்லை...

    ReplyDelete