Wednesday, May 23, 2018

வரலாற்றின் மிச்சமான எச்சங்கள் - டெல்லி கேட் - மௌன சாட்சிகள்

இன்னிக்கு ஒரு பர்த்டே பங்க்‌ஷன், கல்யாணம், காட்சின்னா உடனே படமெடுத்து ஆல்பமாக்கிக்கிறோம். சமூக வலைத்தளத்தில் படங்களை ஷேர் செஞ்சு சந்தோசப்பட்டுக்கிறோம்.. ஆனா, அந்த காலத்தில்?! போரில் வெற்றின்னா கோவில் கட்டுவாங்க. கர்ப்பிணி பெண் பிரசவிக்க முடியாம இறந்தால் ஊர்க்கோடியில் சுமைதாங்கி கல், போரில் இறந்தால் நடுகல் நட்டு தங்களது நினைவை சேமிச்சு வச்சாங்க. அந்த சேமிப்பின்மூலம் அவங்க சுகதுக்கங்கள் மட்டுமல்லாம பண்பாடு, கலாச்சாரம், கலைகள், பழக்க வழக்கங்களையும் சேமிச்சு தலைமுறைகள் தாண்டி வரும் எதிர்கால சந்ததியினர் தெரிஞ்சுக்க ஒரு கடத்தியாவும் இவைகளை பயன்படுத்தினாங்க. ஆனா, நாம?!  பழங்கால நினைவுசின்னங்களை பாதுக்காக்குறதில்லை. பாதுகாக்கலைன்னாலும் பரவாயில்ல.  அந்த இடங்களுக்கு போய் குடிக்குறது, சிலை இருந்தால் அதை உடைக்குறது, பெயிண்ட்ல பேர், போன் நம்பர் எழுதுறதுன்னு கண்ட கருமத்தையும் செஞ்சு பாழ்படுத்துறோம். அதனால, நினைவு சின்னங்களாய் இருக்க வேண்டிய இடங்கள் வெறும் எச்சங்களா இருக்கு.
ஆற்காடு, செய்யாறு பைபாஸ் சாலையில் இருக்கு டெல்லி கேட்.  ஆற்காடு பாலத்தின் வலப்பக்கத்தில் சுமார் இரண்டு கி.மீ தூரத்திலிருக்கு இந்த டெல்லி கேட்.  சென்னைல இருந்து 90கிமீ தூரத்திலும், வேலூரிலிருந்து 22 கிமீ தூரத்திலும் ஆரணில இருந்து 25கிமீ தூரத்திலும் ஆற்காடு இருக்கு. இந்த ஊரில் மக்கன்பேடாவும் அரிசியும்கூட பிரசித்தம்.   ஆற்காட்டில் டெல்லிகேட்டா?!  இந்த பெயருக்குப்பின் பல வரலாற்று உண்மைகள் மறைஞ்சிருக்கு.  ராபர்ட்கிளைவ் இந்த பேரை நினைவிருக்கா?! எட்டாவது, ஒன்பதாவது பாடப்புத்தகத்தில் சில பத்திகளில் இவரை பத்தி படிச்சிருக்கோம். அவருக்கும், இந்த இடத்துக்கும்  இருக்கும் சம்பந்தமே டெல்லி கேட் என பேர் உருவாக காரணமா இருந்துச்சு. அவர் கட்டிய கோட்டையின் மிச்சம் மீதியைதான் இன்னிக்கு மௌனச்சாட்களில் பார்க்க போறோம்.
ராபர்ட் கிளைவின் வாழ்க்கை அத்தனை சுவாரசியமானது. 1725ம் ஆண்டு பிறந்த ராபர்ட் கிளைவ்  இங்கிலாந்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்து, அத்தை வீட்டில் வளர்ந்தவர்.  க்ளைவ் இளைஞனானதும் வீட்டுக்கு அடங்காமல் பொறுக்கியாக  திரிந்தார்.   தன் நண்பர்களோடு சேர்த்துகொண்டு டிரைட்டன் சந்தையில் உள்ள கடைகளில் மிரட்டி மாமுல் வசூலித்து பொழுதை கழித்து வந்தார்.  இரண்டு முறை ஜெயிலுக்கு போய் வந்த இவரை, இம்சை தாளாமல் அவர் அப்பா ரிச்சர்ட் க்ளைவ், இந்தியாவிலுள்ள கிழக்கிந்திய கம்பெனிக்கு கிளார்க் வேலைக்கு அனுப்பினார். 
தனது 18 வயதில் இந்தியாவிற்கு வந்த ராபர்ட் க்ளைவுக்கு சம்பளம் இந்திய மதிப்பில் 50ரூ. கிளார்க் வேலை பிடிக்காம ஒருமுறை துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால், மேலதிகரிகளால் கடுமையாய் எச்சரிக்கப்பட்டு சென்னை கிளைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சென்னைக்கு வந்தும் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார் ராபர்ட் க்ளைவ்.
ராபர்ட் க்ளைவுக்கு இந்திய வெப்பநிலை செட் ஆகாம கடுமையா மன உளைச்சலுக்கு ஆளானார். அந்த நேரத்தில் இரவு கடலூர் தேவனாம்பட்டினம் அருகே போர் ஆரம்பமானது.  பிரெஞ்சு படையை எதிர்க்க தயார் நிலையில் பிரிட்டிஷார் இருந்தாலும் பிரெஞ்சு படையின் எண்ணிக்கையை ஒற்றர் மூலம் தெரிந்துகொண்ட பிரிட்டிஷார் கொஞ்சம் தயங்கினர். அந்தநேரத்தில், எந்த போர் பயிற்சியும் இல்லாத ராபர்ட் கிளைவ் இருளான சூழலைப் பயன்படுத்தி  சாதுரியமாக செயல்பட்டு பிரெஞ்சுகாரர்களின் பின்புறம் வந்து, சில வெடிகுண்டுகளை திடீரென வெடிக்க செய்ததில் பிரெஞ்சு வீரர்கள் குழப்பத்தில் சிதறுண்டு ஓடினர். அந்த சமயத்தை பயன்படுத்திக்கொண்ட பிரிட்டிஷ் படை வீரர்கள் பிரெஞ்சு சிப்பாய்களை வேட்டையாட ஆரம்பித்தனர். பிரெஞ்சுகாரர்கள் பின்வாங்கி உயிர் பிழைத்து ஓடியதே பெரிய காரியமானது. இந்த செய்தி இங்கிலாந்து அரசர் வரை சென்றது. இந்த நிகழ்வுக்கு பின் ராபர்ட் க்ளைவ் படிப்படியாய் உயர்ந்து சென்னை கிளையின் மேஜர் ஜெனரலானார். 
அப்போது,  ஆற்காட்டை தலைநகராக கொண்டே மொகலாய சாம்ராஜ்யத்தின் கர்நாடக பகுதிகளின் பிரதிநிதியாக ஆற்காடு நவாபுகள் இப்பகுதியை ஆட்சி செய்து வந்தனர். அப்போது, மைசூரை உடையார் அரச வம்சமும், ஐதராபாத் பகுதியை நிஜாம்களும், திருவிதாங்கூரை கேரள வர்மாக்களும் ஆட்சி செய்து வந்தனர். அப்போது சென்னையில் வர்த்தகம் செய்து வந்த பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி மெல்ல மெல்ல இந்திய சமஸ்தானங்களில் நடந்து வந்த குழப்பத்தை பயன்படுத்தி ஆட்சி அதிகாரத்தை பிடிப்பதில் இறங்கினர். 

அதேபோல் கிழக்கிந்திய கம்பெனிக்கு  போட்டியா பிரெஞ்சு, போர்ச்சுகீசிய, டச்சு கிழக்கிந்திய கம்பெனிகளும் இந்தியாவை அரசாள களமிறங்கின. கி.பி.1749ல் ஆம்பூரில் நடந்த போரில் ஆற்காடு நவாப் அன்வருதீன்கான் மரணமடைந்தார். இதையடுத்து ஆற்காடு நவாப் சிம்மாசனத்தை பிடிப்பதில் முகமதுஅலி, சந்தாசாகிப் இடையே பங்காளி சண்டை உருவானது. இந்த போட்டியில் அன்வருதீனின் இளைய மகன் முகமதுஅலி திருச்சியில் நவாப்பாக முடிசூட்டிக் கொண்டார். 

திருச்சியை தவிர மற்ற கர்நாடக பகுதிகள் சந்தாசாகிப், முசாபர்ஜங் வசமாகியது. சந்தாசாகிப்புக்கு பிரஞ்சுகாரர்களும், முகமது அலிக்கு ஆங்கிலேயர்களும் துணை நின்றனர். கி.பி 1750ல் திருவதிகையில் நடந்த போரில் பிரெஞ்சு படை முகமதுஅலியையும், ஆங்கிலேயர்களையும் தோற்கடித்தது. அதே ஆண்டில் யுத்தநேந்தல் என்ற இடத்தில் நடைபெற்ற போரில் முகமதுஅலி, ஆங்கிலேயர் மற்றும் ஐதராபாத் நிஜாம் நசீர்ஜங் ஆகியோரின் படைகளை பிரெஞ்சு படைகள் தாக்கி வெற்றி கண்டன. இந்த போரில் திருச்சி கோட்டைக்கு தப்பியோடிய முகமதுஅலி அங்கு ஒளிந்து கொண்டார். இதனால் பிரஞ்சு படைகள் உதவியுடன் திருச்சியை முற்றுகையிட சந்தாசாகிப் அங்கு விரைந்தார். இந்த சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி முடிவு செய்தது. இதையடுத்து ராபர்ட் கிளைவ் தலைமையிலான ஆங்கிலேய படை 500 ஆங்கில படைவீரர்கள், 300 உள்ளூர் சிப்பாய்களுடன் ஆற்காட்டை 53 நாட்கள் முற்றுகையிட்டு அதை கைப்பற்றியது. 

இதற்காக கி.பி 1751ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி ராபர்ட் க்ளைவின் படைகள் காஞ்சி நகரை விட்டு கிளம்பிய போது, காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அதை பொருட்படுத்தாத ராபர்ட் க்ளைவின் படைகள் சந்தாசாகிப்பின் ஆற்காடு கோட்டையை நோக்கி ஆவேசத்துடன் முன்னேறின. ஆங்கிலேயர்களின் கடும் தாக்குதலால் நவாப்பின் வீரர்கள் சிதறி ஓடினார்கள். ஆங்கிலேயர்கள் சந்தாசாகிப்பின் வீரர்களை ஆற்காடு தெருக்களில் விரட்டியடித்தார்கள். 

முகமதுஅலிக்கும், சந்தாசாகிப்பிற்கும் நடந்த உரிமைப்போரின் இறுதியில், கி.பி 1751ம் ஆண்டு ராபர்ட்கிளைவ் ஆற்காடு ஆலம்பானா கோட்டையை கைப்பற்றினார். இதனால், திருப்பதி ஏழுமலையான் கோயில் உட்பட வடக்கே நெல்லூர் வரை பிரிட்டிஷாரின் வசம் வந்தது. இரவில் கிடைத்த இந்த வெற்றி ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் அமைவதற்கு வித்திட்டது.  பாலாற்றங்கரையில் அமைந்துள்ள டெல்லி கேட் என்னும் உயர்ந்த இந்த நுழைவாயிலே, ஆற்காடு கோட்டையின் பிரதான நுழைவாயிலாக விளங்கியது.
கட்டடத்திற்குப் பின்புறம் திப்பு சுல்தான் 1783ல் போர்வெறியில் உடைத்த கட்டட உறுப்புகள் மண்ணில் பாதி புதைந்து கிடக்குது.   இந்த டெல்லிகேட் இரண்டு தளங்களை கொண்டிருக்கு. கீழ்தளத்தில் இருக்கும் நுழைவாயில் இஸ்லாமிய  பாணியில் கட்டப்பட்டிருக்கு. இந்த வாயிலின் இருபுறமும் காவலர்கள் தங்குவதற்கான அறைகள் இருக்கு. நுழைவு வாயிலின் வெளிப்புறம் பாலாற்றை ஒட்டியுள்ள பகுதியிலும் சிறு சிறு அறைகள் இருந்ததற்கான அடையாளங்கள் இருக்கு. 
வாயிலின் மேல்தளத்தில் ஓர் அறை இருக்கு.  இது எதிரி படைகள் வருவதை வேவுபார்க்கும் வகையில் இருக்காம்.  நான் போனபோது பூட்டி இருந்ததால் மேல போகமுடில டெல்லி கேட் இந்திய தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் இருக்குன்னு போர்ட் சொல்லுது. ஆனா, அங்க எந்த பணியாளர்களும் இல்ல. நான் போனபோது ரெண்டு தமிழக ‘குடி’மகன்கள்தான் நல்ல போதையில் உறங்கிட்டிருந்தாங்க. நானும் என் சின்ன பொண்ணும் போனதும் தலையை தூக்கி பார்த்துட்டு உறக்கத்தை கண்டினியூ......
முகாநூலில் சுட்ட படமிது. டெல்லி கேட்டின் மேல் தளத்தில் இருக்கும் அலங்கம். அலங்கம்ன்னா,  எதிரிப் படைகள் வருவதை மறைந்திருந்து  வேவுபார்க்கும் வகையில்  அமைக்கப்பட்ட அமைப்பு. இதுக்கு கிளிக்கூண்டு அலங்காயம்ன்னும் சொல்வாங்க. கிளிக்கூண்டு அமைப்பிலிருக்கும் இதில் ஓராள் மறைஞ்சிருந்து வேவு பார்க்கலாம். உள்ள இருக்கவுங்களுக்கு வெளில இருப்பதை பார்க்க சிறு சிறு ஓட்டைகள் இருக்காம். இதுமாதிரியான அமைப்பு விழுப்புரம் செஞ்சிக்கோட்டையில் இருக்கு. 
நாங்க போன நேரம் குருதையோ, குதிரையோ இங்க  மேய்ஞ்சிக்கிட்டிருந்துச்சு.  ராபர்ட் க்ளைவ் நவாப் படையை எப்படி தூள் தூளாக்கினான் என்பதை இங்கிருக்கும் சுவர்கள், விரிசல்களின்மூலம் சாட்சியம் சொல்கின்றன. 
கட்டிடத்தின் உச்சியில் மேல்தளத்தில் ராபர்ட் க்ளைவ் தங்கி இருந்ததாய் சொல்லப்படும் அறை ஒன்று இருக்கு. எங்கிருந்தோ வந்து இங்கு தங்கியிருந்த   வெள்ளைத் தோல் மனிதன்,  பாரதநாட்டினர் பேசும் மொழி புரியாவிட்டாலும்  நவாபின் பதவி ஆசை, நம் மக்களின் இனம் மத, சாதி,மொழி வெறியுடன்கூடிய  ஒற்றுமையின்மையை இங்கிருந்துதானே புரிந்துக்கொண்டான் என நினைக்கும்போது இனம்புரியா வலி மனசில் ஏற்படுவதை தடுக்க முடியலை. இன்னிய வரைக்கும் ஒற்றுமையின்மைதான் நமது பிரச்சனைன்னு நம் மக்களுக்கு புரியவே இல்லைன்ற ஆதங்கமும் எழாமலில்லை. 

ஆட்சியாளர்கள் அன்றும் இன்றும் என்றுமே ஒன்றுதான் போல! தங்களது பதவி நிலைக்க யாருக்கு, என்ன கொடுக்கனும், எப்படி கொடுக்கனும்ன்னு நல்லாவே தெரிஞ்சிருந்து என்ன சொன்னா முடிய பிடிச்சிக்கிட்டு சண்டை போடுவாங்கன்னு தெரிஞ்சு வச்சுக்கிட்டு ஆட்சி பிடிக்குறாங்க. அதுக்கு முன்னோடி இந்த ராபர்ட் க்ளைவ்தான் போல!
நெட்டில் சுட்ட படமிது. வேலூர் கோட்டையிலிருந்து தொடங்கும் சுரங்கம் இங்க முடியுதாம். இந்த சுரங்கத்தின் வழியாகத்தான் திப்பு சுல்தானின் மகன்கள் தப்பி வந்ததா சொல்லப்படுது. பதிவு முடியும் நேரம் வந்திட்டுது. இன்னமும் டெல்லி கேட்டுக்கு அர்த்தம் சொல்லலைதானே!?  கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவிற்குள் அடியெடுத்து வைக்க காரணமான முதல் வெற்றி இங்கு கிடைத்ததால்ன்னும்,  இங்கிருந்து டெல்லி செங்கோட்டை வரை சுரங்கபாதை இருப்பதாலும் இதுக்கு டெல்லி கேட்ன்னு பேர் வந்ததாக சொல்றாங்க. ஆனா, ராபர்ட் க்ளைவ், தனது முதல் வெற்றிக்கு பின், ’இந்தியா முழுமையையும் கிழக்கிந்திய கம்பெனிவசம் கொண்டு வருவேன்’ என இங்கிருந்து சபதமெடுத்ததால் இந்த இடத்துக்கு டெல்லி கேட் என பேர் உண்டானது. 
பரந்து விரிந்த பாலாற்றங்கரையில், கருங்கல்லின்மீது எழுப்பப்பட்ட செங்கல்லால் ஆன கட்டடமிது. அன்று, குதிரைப்படையும் போர் வீரர்களும் வேலியாய் இருந்த இவ்விடம் இன்று வேலிக்காத்தான் செடிகள் நிறைஞ்சிருக்கு. இது ஒரு காலத்தில் ரத்தபூமியாக்கும்ன்னு சொல்லாமல் சொல்லுது இங்கிருக்கும் பெயர் தெரியாத ரத்தநிற காட்டுப்பூக்கள்.  ஆள் நடமாட்டமில்லைன்னாலும், ஊருக்கு ஒதுக்குபுறமா இருந்தாலும் சுத்தமா இருக்கு இந்த இடம். களைப்பு தீர கொஞ்சநேரம்  மதில் சுவத்து மேல உக்காந்திருக்கையில்,  சிறிது நேரத்தில் பீரங்கி அலறலும், மனிதர்களின் போர்வெறிக்குரல்களும், ரத்தவாடையையும் உணரும்போதில், மதிய வெயிலில் பிராய்லர் கோழியின் வெண்ணிற இறகும், கெட்ட வாடையும் காற்றில் பறந்து வந்து என்னை நிழல் உலகத்துக்கு கொண்டு வந்தது. ஒரு மனிதனின் மண்ணாசைக்கு, மக்களுக்குள் ஒற்றுமை இல்லன்னா என்ன கதிக்கு ஆளாக வேண்டி வரும்ன்னு அந்த பக்கம் போவோருக்கும், வருவோருக்கும் சாட்சியம் சொல்லியபடி மௌனமாய் புத்தம்புது சுண்ணாம்பு பூச்சோடு நின்னுக்கிட்டிருக்கு டெல்லி கேட். 
நன்றியுடன்,
ராஜி

25 comments:

  1. தகவல்கள் சிறப்பு சகோ பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  2. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  3. சுயநலப்பேய்கள் நிரந்தரமாக வாசம் செய்யும் நாடு நம் நாடு..தன்னலமற்ற தியாக சீலர்களின் உழைப்பினால் கிடைத்த பலன்களை சூறையாடிக்கொண்டிருக்கும் அந்த கூட்டம் என்றும் திருந்தவும் வருந்தவும் செய்யாது. .

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்ப்பா. நமக்கு வரலாறும் புரில, நம் மண்ணோட அருமையும் புரில. எடுப்பார் கைப்பிள்ளையாய் காசு பணம் சேர்த்துக்கிட்டு இன்றைக்கு மட்டுமே வாழ்ந்தால் போதும்ன்னு நினைக்கும் அபாயகரமான காலக்கட்டத்தில் இருக்கோம்.

      Delete
    2. இந்த நொடி மட்டும்தான் நம் கையில் உள்ளது அதை நல்லபடியாக பயன்படுத்திக்கொண்டு தானும் வாழ்ந்து பிறரும் இன்புற வாழ உதவி செய்யும் மனம் வரவேண்டும். அந்த பண்பு வெளிச்சத்திற்கு வராத ஒரு சிலரிடம் மட்டுமே உள்ளது. மற்ற மனிதர்கள் எல்லாம் பிறர் உழைப்பை சுரண்டி வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

      Delete
  4. ஆட்சியாளர்கள் அன்றும் இன்றும் என்றுமே ஒன்றுதான் போல! தங்களது பதவி நிலைக்க யாருக்கு, என்ன கொடுக்கனும், எப்படி கொடுக்கனும்ன்னு நல்லாவே தெரிஞ்சிருந்து என்ன சொன்னா முடிய பிடிச்சிக்கிட்டு சண்டை போடுவாங்கன்னு தெரிஞ்சு வச்சுக்கிட்டு ஆட்சி பிடிக்குறாங்க. அதுக்கு முன்னோடி இந்த ராபர்ட் க்ளைவ்தான் போல!....


    இன்றைய நிதர்சனம்...மனம் கனக்கவும் ..வலிக்க வும் ஒத்துக்கொள்ள வேண்டிய உண்மை...



    நிறைய தகவல்களுடன் சிறப்பான பதிவு..ராஜி க்கா

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா

      Delete
  5. யாருக்கோ வரலாறு பாடம் சொல்லிக் குடுத்துட்டு அதையே போஸ்ட் ஆ போட்டாச்சு.

    ReplyDelete
    Replies
    1. ஐயோ சேக்ஸ் அண்ணா! பெரிய பொண்ணு வேலைக்கு போயாச்சுது. சின்னதுங்க ரெண்டும் மெடிக்கல் லைன்ல படிக்குதுங்க. இதுல நான் யாருக்கு வரலாறு பாடம் எடுக்க?! மிச்சம் இருக்குறது உன் மாப்ளைதான். அந்தாளுக்கு இதுலாம் புரியும் அளவுக்கு அறிவு இல்ல.

      Delete
  6. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  7. படங்களுடன் எளிமையான மிகத்தெளிவான பதிவு சகோதரியாரே.. எங்களுக்கு செலவு மிச்சப்படுத்தியதற்கு நன்றி..

    ReplyDelete
    Replies
    1. ஹலோ! அப்படிலாம் சொல்லப்படாது. கைடுக்குண்டான காசு கொடுக்காட்டியும் பரவாயில்ல. பதிவுக்கு தவறாம வந்து நல்லது கெட்டதை சொல்லுங்க அது போதும்.

      Delete
  8. ராபர்ட் க்ளைவை வச்சு சாண்டில்யன் ஒரு கதையே எழுதி இருக்கார் தெரியுமோ?

    இங்கிருந்து டெல்லி செங்கோட்டை வரை சுரங்கப்பாதையா? அட...

    சுவாரஸ்யமான பதிவு.

    ReplyDelete
    Replies
    1. அப்படியா! தெரியாதே! கதை பேரு சொல்லி இருக்கலாமே சகோ

      Delete
  9. அட வேலூர்கோட்டைலருந்து தில்லி கோட்டை வரை சுரங்கபாதையா!! இன்னமும் ஓபனா இருக்குமா என்ன? மூடிய்ருக்கும். பராமரிப்பு இல்லைனா செடி எல்லாம் முளைச்சு மூடிருக்கும். திறந்திருந்தா நம்ம அரசியல்வியாதிகள் இந்தச் சுரங்கப்பாதையை விட்டு வைச்சுருக்க மாட்டாங்களே! கோட்டைய பிடிக்க இப்படியே போயிருப்பாங்களோ!!!

    திறந்திருந்தா இதையும் ரோடாக்கிருப்பாங்களோ...அட! வேலூர் டு செங்கோட்டை எக்ஸ்ப்ரஸ்னு ட்ராஃபிக் ஃப்ரீ வண்டி கூட விட்டிருக்கலாம் போலருக்கே...ஹா ஹா ஹா இந்த ஐடியா கூட நல்லாத்தான்கீது...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ராஜி படம் எல்லாம் வேலூர்கோட்டைய நினைவு படுத்தினதுல தில்லி கேட் நு படிச்சும் கோட்டைனு போட்டுட்டேன்....

      முதல்ல குழப்பம் வந்துச்சுதான் தில்லி கேட் நா தில்லில நு நினைச்சது. அப்புறம் தெரிஞ்சுச்சு....

      கீதா

      Delete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. தில்லி கேட் பற்றி பல தகவல்கள் சுரங்கப்பாதை ஆச்சரியம் தான். தென்னகத்திலிருந்து வடக்கிற்கு அட!

    துளசிதரன்.

    (கீதா; எனது தவறு ராஜி....துளசி அனுப்பிய தங்கிலிஷ் கமென்டைப் பார்த்துட்டும் கோட்டைனு அடிச்சுட்டேன்...ஏன்னா என் கமெண்டிலும் தில்லி கேட்னு படிச்சும் ஏனோ வேலூர் கோட்டை நினைவே வந்துச்சா...அதை எழுதிட்டேன்...மாத்திடணும். )

    ReplyDelete
  12. டெல்லி கேட் நேரடி விசிட் மற்றும் வரலாற்றுத் தகவல் நிறைவாக உள்ளது. தொல்லியல் அளவீட்டுத் துறையின் பராமரிப்பில் உள்ள இந்த நினைவுச் சின்னம் நன்றாகவே உள்ளது. பொதுமக்கள் தவறாக பயன்படுத்துவது என்பது எல்லா இடங்களிலும் நடப்பதுதானே. நல்ல ரிப்போர்ட்

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. ஆற்காடு டெல்லி கேட் மேல் தளத்தில் உட்கார்ந்துகொண்டு இந்த நிகழ்வுகளை கற்பனை ஓட்டத்தோடு உணர்வுப்பூர்வமாய் படித்து கட்டுரை முடிந்ததும் இங்கிருந்த ராபர்ட் க்ளைவ் எங்கடா என்பதுபோல் உணர்கிறேன்.... நன்றி!!!!!!

    ReplyDelete