Friday, May 04, 2018

பிள்ளை வரம் அருளும் புத்திரகாமேட்டீஸ்வரர் ஆலயம், ஆரணி - அறிவோம் ஆலயம்


ஒரு மனிதனுக்கு எத்தனை செல்வம் இருந்தாலும் பிள்ளைச்செல்வம் இல்லன்னா  கேலி, கிண்டலுக்கு ஆளாகி, கடுமையான வலியையும், வேதனையையும், அவமானத்தையும் சந்திக்கனும். தங்கள்மீதே குறை இருந்தாலும் ஆண்கள் பெண்கள் அளவுக்கு அவமானங்களை சந்திப்பதில்லை. ஆனா, பெண்கள்?! சொந்த வீடு தொடங்கி, கல்யாண, கருமாதி வீடு வரை கேலிப்பார்வைக்கு ஆளாகனும். அதனால, அரசமரம் சுத்துறது முதல் ஆஸ்பத்திரிக்கு அலையுறது வரை பிள்ளைவரத்துக்காக பெண்கள் எந்த எல்லை வரைக்கும் போவாங்க. பிள்ளைவரத்தை கொடுக்கும் கோவில்களில் ஆரணில இருக்கும் புத்திரகாமேட்டீஸ்வரர் ஆலயத்துக்கு முக்கிய இடமுண்டு

ஆர் (அத்தி) மரங்கள் அணி, அணியாய் சேர்ந்து காடாகி இருந்த இடமா இருந்ததால, இந்த ஊருக்கு ஆரணின்னு சொல்றாங்க. ஆரண்யம்ன்ற சமஸ்கிருத பேருக்கு ஆரண்யம்(காடு)ன்னு அர்த்தம். ஆரண்யம் சூழ்ந்த பகுதிங்குறதாலும் ஆரணி ன்னு பேரு வந்தது. ஆரணிக்கு புகழ்சேர்க்கும் கமண்டல நாகநதிக்கரையில் இருக்கு இந்த கோவில். சிவ அம்சமான ஜமதக்னி முனிவரின் கமண்டலம் சாய்க்கப்பட்டதால் இந்த நதி உருவானது.  வடக்கு நோக்கி பாயும் இந்நதி, இங்கு கிழக்கு நோக்கி திசைமாறி ஓடும். மழைக்காலங்களில் நதி நிறைந்து காணப்படும். கோடைக்காலங்களில்?! குப்பை நிறைந்து காணப்படும்ன்னு சொல்லி எங்க ஊர் மானத்தை வாங்க விரும்பலை.  ஆரணியின்  நுழைவாயிலில் அமைந்திருக்கும் ஆற்றுப்பாலத்துக்கு இடப்பக்கத்திலிருக்கு இக்கோவில். திருவண்ணாமலையிலிருந்து 90கிமீ தூரத்திலும் வேலூரிலிருந்து 40கிமீ, சென்னையிலிருந்து 140கிமீ தூரத்திலிருக்கு ஆரணி.  வேலூர், சென்னைலிருந்து வர்றவங்க ஊருக்குள் நுழையாமயே வந்திரலாம். ஆனா, சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம், வந்தவாசி, திருச்சி.... வழித்தடத்தில் வர்றவங்க பஸ் ஸ்டாண்டில் இறங்கி ஆட்டோவில்தான் வரனும். பஸ் ஸ்டாண்டிலிருந்து கோவில் ஒரு கிமீ தூரத்துக்கு மேல் இருக்கும். 
14ம் நூற்றாண்டில் பல்லவ மன்னரால் கட்டப்பட்டது இக்கோவில்.  கோவிலுக்குள் செல்ல சில படிகளை ஏறினால் இடப்புறத்திலிருந்து  வினாயகர் வரவேற்கிறார். இங்கிருக்கும் வினாயகருக்கு படித்துறை வினாயர்ன்னு பேரு. அவருக்கு எதிர்புறம், கோவிலின் வலப்புறத்தில்   ஆஞ்சினேயர்  தனிச்சன்னிதி கொண்டிருக்கார் . 


கோவிலை வலம் வர ஆரம்பிக்கும்போது வினாயகரில் ஆரம்பித்து இறைவனை தரிசித்து கடைசியில் ஆஞ்சினேயரை வணங்கி நமது கோவில் தரிசனத்தை முடிக்கும் விதமா அமைச்சிருக்காங்க.  ஒரு செயலைத் துவங்கும்போது, இந்த விநாயகரை வணங்கி துவங்குவதும், அச்செயல் சிறப்பா முடிஞ்சதும் ஆஞ்சநேயருக்கு நன்றி சொல்வதும் நமது வழிப்பாட்டு முறையில் உள்ளது.  இங்கிருக்கும் ஆஞ்சனேயர் கையில் சங்கு, சக்கரம் உள்ளது.

அடுத்து, வேப்பமரமும், அரசமரமும் இணைந்து உருவான இடத்தில்  எப்பவும்போல நாகர் சன்னிதி. அமாவாசை தினங்களில் இங்கிருக்கும் நாகர் சிலைகளுக்கு அபிஷேகம் செய்து, மஞ்சள், குங்குமம் இட்டு விளக்கேத்தி வழிப்பட்டால் திருமணம் நடக்குமென்பது இங்கிருப்போரின் நம்பிக்கை. அதும், அமாவாசையும், திங்கட்கிழமையும் சேர்ந்து வரும் நாளில் நூத்துக்கணக்கில் திருமண வரம் வேண்டி ஆணும் பெண்ணுமாய் அதிகாலை முதலே வலம் வருவர். 


அடுத்து, தசரத மகாராஜா சன்னிதி. தசரத மகராஜாக்கும் இக்கோவிலுக்கும் என்ன சம்பந்தம்ன்னு பார்க்கலாமா?!  ஒரே சமயத்தில்  பத்து  ரதங்களை  செலுத்தக்கூடிய திறமைசாலி தசரத மகாராஜா. தாசரதீன்னு அழைக்கப்பட்டு தசரதன் என நின்றது. 60,000 மனைவிகள் கட்டியும் பிள்ளை வரமில்லாமல் தவித்து வந்தார். அப்படி பிள்ளை இல்லாமல் தசரதன் தவித்திருந்த வேளையில்,  ஒருமுறை  வேட்டைக்கு சென்றிருந்த நேரம், புதருக்கு அப்பாலிருந்த நதியில் ஏற்பட்ட சலசலப்பை, விலங்குகள்தான் நீர் பருகுவதாய் தவறாய் எண்ணி, அம்பெய்தார்.  

அப்படி எய்யப்பட்ட  அம்பு பட்டு இளைஞன் ஒருவன் வீழ்ந்தான். அவனின் அலறல் கேட்டபின்பே தனது தவறினை தசரதன் உணர்ந்தான். தண்ணீருக்கு காத்திருக்கும் தன் தாய் தந்தையின் தாகம் தீர்க்க வேண்டிக்கொண்டு உயிர்நீத்த இளைஞனின் கடைசி ஆசையை நிறைவேற்றும் பொருட்டு நீரினை கொண்டு சென்று கண் தெரியாத இளைஞனின் பெற்றோருக்கு கொடுத்தார். மகனின் பரிசமில்லாததை உணர்ந்த அந்த தம்பதியர் யாரென வினவ, நடந்ததை சொல்லி மன்னிப்பு வேண்டி நின்றார். மகன் இறந்து தாங்கள் தவிப்பதை போன்று நீயும் தவித்து  உயிரை விடுவாய் என  சாபமிட்டு இறந்தனர்.  
இத்திருத்தலத்தில் பிள்ளை வரம் கேட்டு தவமிருந்ததால், கமண்டலமும், தண்டத்துடனும், ஜடா முடி, துளசி மணி தரித்து தவக்கோலத்தில் கோவிலுக்கு வெளியில் தனிச்சன்னிதியில் காட்சியளிக்கிறார் தசரத மகாராஜா. சாபத்தினை கேட்டு முதலில் வருத்தமுற்றாலும், பின்னர் மகிழ்ச்சியுற்றார் தசரதன். தான் தவித்து இறந்தாலும் தனக்கு பிள்ளை வரம் கிடைக்குமென மனதை சமாதானப்படுத்திக்கொண்டான். இதுநடந்து பலகாலமாகினும் குழந்தை பாக்கியம் இல்லாததால்,  தன்னுடைய குலகுருவான வசிஷ்ட மகரிஷியைச் சந்தித்து  தனது மனக்குறையை எடுத்துச்சொல்லி ஆலோசனை கேட்டார் தசரதர்.   வசிஷ்டர் தசரதரிடம், ‘‘கிழக்கில் இருந்து வடக்காகத் திரும்பும் நதியின் கரையில் சிவாலயம் அமைத்து, அந்தத் திருத்தலத்தில் புத்திரகாமேஷ்டி யாகம் செய்தால், சிவனருளால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்’’ என்று ஆலோசனை கூறினார்.

 குருநாதர் சொன்னபடியே, வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி பாயும் நதியினை தேடி அலைந்தார். முடிவில்,  பரத கண்டத்தின் தெற்கு பாகத்தில், கமண்டல நதியானது கிழக்கில் இருந்து வடக்காகப் பாய்வதை அறிந்த தசரத சக்கரவர்த்தி, இங்கு வந்து இவ்விடத்தில், சிவாலயம் ஒன்றைக் கட்டி, ஈசனை வணங்கினார். பின்னர் கலைக்கோட்டு முனிவரின் வழிகாட்டலுடன் மிக பிரமாண்டமாக  புத்திரகாமேஷ்டி யாகத்தை நடத்தினார். அதன் பலனாக, தசரத மகாராஜாவுக்கு ஒன்றுக்கு நான்கு பிள்ளைகள் பிறந்தனர் . இதான் இந்த கோவிலின் தலவரலாறு.

இந்த கோவில் பல்லவர் கட்டிடப்பாணியில் கட்டப்பட்டது. மூன்று நிலைக்கொண்ட ராஜகோபுரத்துடன் செங்கல்லினால் கட்டப்பட்ட கோவில் இந்த பெரியநாயகி உடனுறை புத்திரக்காமேட்டீஸ்வரர் ஆலயம்.  


காம,குரோதம், போட்டி பொறாமை உள்ளிட்ட எட்டுவித கெட்ட குணங்களை பலியிட்டு இறைவனை சரணாகதி அடையும் இடமான  பலிபீடமும் கொடிமரமும்...  
பலிபீடத்துக்கு அருகில், சிவப்பெருமானின் வாகனமான நந்திதேவர். கருங்கல் மேடையில், செங்கல்லால் ஆன கோபுரத்தின் கீழ் இறைவனின் ஆணைக்காக இறைவனை  நோக்கி காத்திருக்கிறார். பிரதோஷ தினங்களில் வெகு விமர்சையாக இவருக்கு வழிபாடு நடக்கும்.
நீண்ட விசாலமான பிரகாரம், ஆட்கள் வரத்து குறைவுங்குறதால் சுத்தமா இருக்கும்.  கோவில் உள்ளயே வில்வ மரம் இருக்கு. இந்த தலத்தில் ஆனி பெளர்ணமியில் 11 சிவாச்சார்யர்களைக் கொண்டு நிகழும் புத்திர காமேஷ்டி யாகத்தில் கலந்துக்கொண்டு வழிபடுவது கூடுதல் விசேஷம். அன்றைய தினம்  108 குழந்தையில்லா தம்பதியர்கள் கலந்துக்கொள்ளும் மகா யாகம் நடைப்பெறும்.  ஆனி மாதம்ன்னு இல்லாம எல்லா பௌர்ணமி நாளிலும் புத்திரகாஷ்டி யாகம் நடைப்பெறும்.  ஆனா தம்பதியர் எண்ணிக்கை குறைச்சலா இருக்கும். 

இறைவனின் பராக்கிரமத்தை எடுத்து சொல்லும் பெரிய சைஸ் துவாரபாலகர்கள்.

9 தலை நாகக்குடையின்கீழ் தசரதனுக்கு புத்திர பாக்கியம் அருளிய   புத்திரக்காமேட்டீஸ்வரர்.. தசரதனுக்கு மட்டுமல்ல இன்றைக்கும் பல தம்பதியினருக்கு பிள்ளை செல்வம் அருள்பவர்.  குழந்தைப்பேறு வேண்டுவோர், இங்கு வந்து சுவாமி, அம்பாளை வேண்டிக்கொண்டு,  6 திங்கட்கிழமைகள் விரதம் இருக்கனும். முதல் திங்களன்று சிவ வழிபாடு முடித்து  மதியம் ஒருவேளைக்கு மட்டும் உண்ண வேண்டும். அதும், முதல் திங்களன்று ஒரு குழந்தைக்கு அன்னதானம்  செய்துப்பின்னரே தான் உண்ணவேண்டும்.  2வது திங்களன்று இரண்டு குழந்தைகள், 3வது திங்களன்று மூன்று குழந்தைகள் என்ற கணக்கில் இப்படியே 6வது வாரம் 6 குழந்தைகளுக்கு அன்னதானம் என்று வேண்டுதலை பூர்த்தி செய்யனும். ஆறாவது திங்களன்று கோயிலுக்கு வந்து சுவாமிக்கு தயிர் அபிஷேகம் செய்து, வெண்பொங்கல் சமர்ப்பித்து வழிபட வேண்டும். 7வது திங்களில் செவ்வரளி, பவளமல்லி மலர் சமர்பித்து வெண்பொங்கல், தயிர்சாதம் படைத்து அன்னதானம் செய்யவேண்டும்.  இதன் பலனாக, சிவனருள் கைகூடி விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். 


இறைவனை வணங்கி பிரகாரத்தை வலம் வர ஆரம்பிக்கையில் முதலில் இருப்பவர் நர்த்தன வினாயர். 


வினாயகருக்கு அடுத்து அறிவுக்கடலாம் தட்சிணாமூர்த்தி...
விசாலமான, நீண்ட நாயன்மார்களின் தனிச்சன்னிதி..

தம்பதி சமேதராய் வீற்றிருக்கும் பஞ்சலிங்கங்களின் சன்னிதி....


சிவனுக்கு நேர் பின்னால் விஷ்ணு பகவான். சங்கு சக்கரத்துடன்....
கருவறை விமானத்தின் பின்புற தோற்றம்... கருங்கல்லும், செங்கல்லும் சேர்த்து கட்டிய கோவில் இது. செங்கல் ஆங்காங்கு பல்லிளிக்க ஆரம்பிச்சிருக்கு.  இந்து அறநிலைத்துறை அமைச்சர் எங்க ஊர்க்காரர்தான். இருந்தாலும், எந்த நடவடிக்கையும் எடுக்கல. 
தன்னை அழைக்காமல், தனக்குரிய அவிர்பாகத்தை தராமல் யாகம் நடத்தும் தட்சணிடம் நியாயம் கேட்க சென்ற தட்சனின் மகளும், சிவனின் மனைவியுமான தாட்சாயணி யாகத்தில் குதிக்க, அதைக்கேட்டு சிவன் ருத்திர தாண்டவமாட, அவர் உடம்பிலிருந்து சிந்திய வியர்வையிலிருந்து ஆயிரம் உருவங்கள் தோன்றி, பின் ஒன்றாகி வீரபத்திரன் என அழைக்கப்பட்டது. வீரபத்திரன் என்ற சொல்லுக்கு எத்தகைய தீதாகினிலும் வீரத்தோடு போரிட்டு நம்மை பத்திரமாய் காப்பவன் என்று பெயர். அப்பேற்பட்ட வீரபத்திரனுக்கு இங்கு கோவில் உண்டு. 
வள்ளி, தெய்வானை சமேத ஆறுமுக சாமி சன்னிதி....
ஐயப்பனுக்கும் தனிச்சன்னிதி...
தலவிருட்சமான பவளமல்லி மரம்.. குழந்தைவரம் வேண்டி இங்கு ஊஞ்சல் கட்டி வேண்டிப்பாங்க. 
மாரி அல்லாது உலகில்லை. அதும் இந்த காலத்தில் மழை ரொம்ப அவசியம். அதனால, மாரியம்மனுக்கும் இங்கு தனிச்சன்னிதி.

தனிக்கொடிமரத்துடன் கூடிய பெரியநாயகி அம்மனுக்கு தனிச்சன்னிதி. செவ்வாய், வெள்ளிகளில் அம்மனுக்கு விசேச அபிஷேக ஆராதனை உண்டு.  

அபய வரத முத்திரையோடு நின்ற கோலத்தில் அம்பிகை அருள்புரிகிறாள்.
சிவனின் காவல் தெய்வமான காலபைரவர்...  சண்டிகேஸ்வரர், கிருஷ்ணர், துர்க்கை, நவக்கிரங்களுக்குன்னும் தனிச்சன்னிதி இங்குண்டு. 

கோவிலுக்கு வெளியே சப்த கன்னியர் ஆலயம்... 




ஜாதகரீதியா 5ம் இடத்தில் கேது இருப்பதால்  உண்டாகும் புத்திர தோஷமும்,  நாகதோஷமும் நீங்க, இங்கு நாக பிரதிஷ்டை செய்தும், புத்திரகாமேஷ்டி யாகத்தினை செய்தும் பலன் பெறுவர். இவ்விரு பரிகாரத்துக்கும் கட்டணம் உண்டு.
பரிகார தலம் என்பதால் திருமணம் செய்ய  உகந்த இடம். மேலும் சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் மாதிரியான விசேசங்களும் இங்கு நடக்கும். ஆடி மாத சுவாதி நட்சத்திரத்தன்று லட்சதீபம் ஏற்றப்படும். நவராத்திரி, சிவராத்திரி, கார்த்திகை மாதத்து சோமவாரம், ஐப்பசி மாசத்து அன்னாபிசேகம்ன்னு இங்கு சிவனுக்குரிய அனைத்து விசேசங்களும் வெகு விமர்சையா நடக்கும். 

தமிழகத்தின் எல்லா முக்கிய நகரங்களிலிருந்தும் ஆரணிக்கு பேருந்து உண்டு. பேருந்து நிறுத்தத்திலிருந்து ஆட்டோவில் போகலாம். இல்லன்னா, நம்ம வீட்டுக்கு வந்து ஒரு வாய் காப்பி தண்ணி குடிச்சுட்டு , நீங்க வாங்கி வரும் பண்டத்தையெல்லாம் எடுத்துக்கிட்டு, சாப்பிட்டுக்கிட்டே குறுக்கால நடந்தா..... பத்தே நிமிசத்துல கோவில்ல இருக்கலாம்...

தென்னாடுடைய சிவனே போற்றி! 
எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி!

நன்றியுடன்,
ராஜி

8 comments:

  1. இதுவரை சென்றதில்லை. செல்லும் நாளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. எங்க ஊருப்பா. அவசியம் வாங்க. அப்படியே நம்ம வீட்டுக்கும்... ரொம்ப சுத்தமா, அமைதியா இருக்கும் இக்கோவில். இங்கு போனாலே மனசு லேசாகும்.

      Delete
  2. அருமையான பயனுள்ள தகவல்கள் பாராட்டுக்குரியது

    ReplyDelete
  3. பிள்ளை வரம் அருளும் புத்திரகாமேட்டீஸ்வரர்....அருமை........பத்தோட பதினொண்ணா உங்க ஊர் கோவில் சிறப்பையும் சொல்லிட்டீங்க.....அழகான படங்களுடன்,விளக்கங்களுடன் ......... நன்று.குழந்தையற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லலாம்......பதிவுக்கு நன்றி,தங்கச்சி.....

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நாள் ஆசைண்ணே. இந்த கோவில் பத்தி எழுதனும்ன்னு... எல்லாத்துக்கும் நேரம் காலம்ன்னு வரனும்ல்ல!!

      Delete
  4. நேற்றே வாசித்து கமென்டும் போட்டிருந்தோமே என்னாச்சு ம்ம்ம்..

    அருமையான தகவல்கள் சகோதரி/ராஜி

    கீதா: உங்க ஊருனு தெரியுமே!!! அது சரி /ஆரணிக்கு புகழ்சேர்க்கும் கமண்டல நாகநதிக்கரையில் இருக்கு இந்த கோவில். // ஆறு? தண்ணிக்குப் பதிலா குப்பைதான் தெரியுது!!! ஆறுகள் இப்படி இருப்பது வருத்தமாக இருக்கிறது...தண்ணீர் ஓடினால்தான் ஆற்றிற்கு அழகு!

    ReplyDelete
    Replies
    1. உங்க கமெண்ட்டை நான் எதும் பண்ணலை. ஸ்பேம்ல இருக்கான்னு பார்க்கேன்,

      இப்ப எல்லா ஆறுகளிலும் இதான் கதி கீதாக்கா. கோவிலுக்கு எதிரில் கொஞ்சம் பெரிய சைஸ் குட்டை போல தண்ணி தேங்கி இருக்கு. பக்கத்துல டாஸ்மாக் இருக்குறதால குடிமகன்களுக்கு வசதியா போயிட்டுது இந்த கோவில்

      Delete