Saturday, May 30, 2020

அரிசி குத்தும் அக்கா மகளே! - கிராமத்து வாழ்க்கை

சிறு வயதில் வாழ்ந்த வாழ்க்கையின் சிறு நினைவுமீட்டலே இந்த கிராமத்து வாழ்க்கை தொடர்.. 80,90களில் வளர்ந்தவர்களின் பால்யம் அழகானது. பழமையின் முடிவும், அறிவியல்  வளர்ச்சியின் ஆரம்பத்தையும் ஒருசேர அனுபவிச்சவர்கள்.. 30டூ 50 வயதுகளில் இருப்பவர்கள் எல்லாத்தையும் அனுபவித்துக்கொண்டே எதோ இழந்தமாதிரி  சில நேரத்தில் உணர்வார்கள்...  வயதானவர்களைப்போல பழமையில் இருக்கவும், இப்பத்திய பிள்ளைகள்போல புதுமையில் திளைச்சிருக்கவும் முடியாம திரிசங்கு சொர்க்கத்தில் வாழ்வதுபோல வாழ்கிறோம்!!

புளியம்பூ, புளியந்துளிர், புளியம்பிஞ்சு, புளியங்காய், புளியம்பழம்ன்னு ஒன்னுத்தையும் விடுறதில்லை. எது கிடைச்சாலும் கல் உப்பு, மிளகாய் பொடி சேர்த்து நசுக்கி சாப்பிட்டுடுறது.. இப்பவும் எங்காவது இதுலாம் கிடைச்சா சாப்பிடுவேன். 



ஆண்/ பெண் என எந்த குழந்தை வீட்டிலிருந்தாலும் இந்த குட்டியூண்டு குடத்தை வாங்கிடுவாங்க. அம்மா, பாட்டிலாம் தண்ணி பிடிக்கப்போகும்போது இந்த குட்டியூண்டு குடத்தை எடுத்துக்கிட்டு தண்ணி பிடிச்சு தூக்கமுடியாம தூக்கிக்கிட்டு வீடெல்லாம் சிந்திக்கிட்டு குட்டிங்க செய்யும் அளப்பறையை ரசிக்காதவக யாரு?!  இப்பத்திய குழந்தைகளை தண்ணில கை வைக்கவே விடுவதில்லை. ஜல்ப் பிடிச்சுக்கும்ன்னு.... 

டிக் டிக்.. யாரது?!... திருடன்... என்ன வேண்டும்?! நகை வேண்டும்.. என்ன நகை?! கலர் நகை... என்ன கலர்?!ன்னு கேக்கும்போது ஆரஞ்ச், பச்சை, வெள்ளைன்னு எதாவது ஒரு கலர் சொல்வாங்க. நாம அந்த கலரை தேடிப்பிடிச்சு அதுல நம் கை இருக்கனும். அப்படி இல்லைன்னா நாம அவுட். இப்படித்தான் ஒருமுறை விளையாடப்போயி  ஏதோ கலர் துணியை பிடிக்கபோயி நாலாவது வீட்டு துணி கயிற்றை அறுத்து வீடு வரைக்கும் பஞ்சாயத்து வந்தது.
சவ ஊர்வலத்தின்போது வீசப்படும் பூமாலைகளை மிதிச்சா செத்தவங்க ஆவி நம்மை பிடிச்சுக்கும்ன்னு நம்பி, ராத்திரி முழுக்க கெட்ட கனவு வந்து அலறி  எழுந்ததுலாம் சரித்திரத்தில் இடம்பெறும்.
முன்னலாம் வீட்டிலேயே அரிசி, கம்பு, சோளம்லாம் குத்தி தவிடு, பதர்லாம்  நீக்குவாங்க. வீட்டில் மிக்சி இருக்கும்போதும் இப்பலாம் மாவு அரைக்க மெஷினுக்கு போற காலமிது... ஆனா, அப்பலாம் எல்லாருக்கும் மாவு இடிக்க தெரியும்.  எங்க வீட்டு ஓனர் பாட்டிக்கு கண் தெரியாது. அவங்கதான் அவங்க வீட்டுக்கு இட்லி மாவு அரைச்சும், மாவு இடிச்சு கொடுக்கும். கண்ணு தெரிலைன்னாலும் ஸ்ருதி சுத்தமா இடிக்கும். பாட்டிக்கிட்ட சொல்லாம  மாவில் கை வச்சு உலக்கையால் விரல்ல ரத்தம் வந்து மாவு வீணாகி வீட்டில் திட்டு வாங்கியதும் உண்டு,...

இந்த வாரத்தோடு கிராமத்து வாழ்க்கை தொடர் முடிஞ்சு போச்சு.. நினைவில் இருந்தவற்றையெல்லாம் தொடர் பதிவாக்கியாச்சுது. இனி எப்பவாவது எதாவது நினைவு வந்தால் பார்க்கலாம்...  இத்தனை வாரம் ஆதரவு கொடுத்தமைக்கு நன்றி!

நன்றியுடன்,
ராஜி

7 comments:

  1. கிராமத்து நினைவுகள்... நன்று.

    உரலில் இடிக்கும் வழக்கம் - எங்கள் வீட்டில் நிறையவே உண்டு. நான் கூட உலக்கையால் இடித்துத் தந்ததுண்டு அம்மாவுக்கு. அதே போல் கடுகு இடித்ததுண்டு - ஆவக்காய் ஊறுகாய்க்கு!

    ReplyDelete
  2. அருமையான காணொளிகளோடு நிறைவான இனிமையான நினைவுகள்...

    ReplyDelete
  3. கிராமத்து நினைவுகள் இனியவை

    ReplyDelete
  4. இனிமையான நினைவுகள்.  

    என்ன ரிதமிக்கா அரிசி இடிக்கறாங்க...   ஒரு தடவை கூட தவறி உலக்கையும் உலக்கையும் இடிச்சுக்கறதில்லை!

    ReplyDelete
  5. கிராமத்து நினைவுகள் ரசிக்கும்படி இருந்தன.

    ReplyDelete
  6. நல்ல இனிமையான நினைவுகள் ராஜி. எனக்கும் நிறைய உண்டு. எங்கள் வீடில் தொக்கு எல்லாமே உரலில் தான் இடிப்போம். இரும்பு உலக்கையால். அல்லது மர உலக்கை அடியில் இரும்பு பூண் இருக்கும் அதால. தொக்கு எல்லாம் உரலில் தான் செய்வது. குறிப்பா கொத்தமல்லி தொக்கு, புதினா தொக்கு எல்லாம்.

    காணொளி நல்லாருக்கு.

    கீதா

    ReplyDelete
  7. வாவ் ராஜி, உங்களுக்கு நல்ல ஞாபக சக்தி. உங்கள் முந்தய நினைவுகளையும் படித்தேன். ஒவ்வொன்றையும் படிக்கும் போது எனக்கும் சிறுவயது ஞாபகம் வந்தது. இதில் ஒரு சிலதை தவிர, அநேகமானவை தமிழக ஊர்களுக்கும் இலங்கையில் எங்கள் ஊர்களுக்கும் எப்படி இத்தனை ஒற்றுமை என்று ஆச்சரியமாக இருந்தது. ஒரே வித்தியாசம் இங்கே தொண்ணூறுகளின் தொடக்கத்திலேயே தொழில்நுட்ப வளர்ச்சி தொடங்கி விட்டது.

    ReplyDelete